‘ஒரு மனிதனின் சுகாதாரமான வாழ்வுக்கு,அவனின்,உடல், உள, சமுதாயத் தொடர்புகளின் நல்நிலைகள் மிக முக்கியமானது’ இந்தக் கருத்து, உலகத்தின் இரண்டாவது கொடிய போருக்குப் பின் அகில உலக சுகாதார சபையால் 1946ம் ஆண்டு வெளியிடப் பட்டதாகும். அந்தப் போர் 1939ம் ஆண்டிலிருந்து 1945ம் ஆண்டுவரை நடந்து பல துன்ப துயர்,அழிவுகை ஏற்படுத்தியது. பல நாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளை மனதிற் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை சுகாதாரப் பகுதியை ஆரம்பித்துப் பன்முகமான விதத்தில் உலக மக்களின் சுகாதார மேம்பாட்டைக் கவனிக்கிறது.
எங்களின் உடல் நலமென்பது,சத்தான உணவுகள், சுகாதாரமான சூழ்நிi போன்ற விடயங்களில் தங்கியுள்ளது. மன நலம் என்பது முக்கியமான சில காரணிகளால் ஏற்படுகின்றன. உலகத்திலுள்ள அத்தனை மக்களும் ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி ஏதோ ஒரு கால கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் இதற்குக் காரணிகளாக:
-எங்கள் மூளையின்; இரசாயன ஏற்றத்தாழ்வு ( கெமிகல் இம்பலன்ஸ்).
மூளையில் பல அல்லது மிகக்குறைவான நரம்பிற்கடத்திகள்,(நியூட்ரோ ட்ரான்ஸ்மிட்டர்ஸ்)இருக்கும்போது,இந்த நரம்பியற் கடத்திகள்,நரம்பு கலங்கள் (நேர்வ் செல்ஸ்) ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள உதவும் இயற்கை இரசாயனங்கள். இந்த இரசாயனங்களின் எடுத்துக்காட்டுகளில் டோபமைன்,செரிடோனின் மற்றும் நோர்பைன்ப்ரைன் ஆகியவை அடங்கும்.
-எங்கள் மருத்துவ நிலைமைகள்.(மெடிகல் காரணிகள்)
-அதிர்ச்சிகரமான வாழ்க்கை நிகழ்வுகள்.(ட்;ராமட்டிக் லைவ் இவண்ட்ஸ். அன்புள்ளவர்களின் இழப்பு,போர்ச்சூழல்,இடம்மாற்றம்,இயற்கை அனர்த்தங்கள்)
-பாரம்பரிய காரணிகள்.
மனநலம் பற்றிய மேற்கத்திய வைத்தியக் குறிப்புகள இவையாகும்.
இவைகளை விட முக்கியமான விடயம், நாங்கள் பின்பற்றவேண்டும் என்று சொல்லப் படும்,எங்களின் பகுத்தறிவற்ற,பெண்மையை வதைக்கும்,பெரும்பான்மையான மக்களை அரைகுறை அடிமைகளாக நடத்தும் சமய, கலாச்சாரப் பண்பாடுகளாகும். ஒரு மனிதனின் அடையாங்கள் பலவாக இருந்தாலும் அவனை அவனின் மொழிதான் மற்றவர்களுக்கு முதற்கண்ணாக அறிமுகப் படுத்துகிறது.
தமிழர் கலாச்சாரம் என்பது முற்று முழுதாகப் பார்ப்பன வக்கிரத்தின் அடிப்படையில்; தொடர்வதாகும்.பார்ப்பனக் கலாச்சாரத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.கி.மு.இரண்டாம் நூற்றாண்டு காலத்தில்,’சுமதி பார்க்கா’ என்பரால் மனுதர்ம சாஸ்திரம் எழுதப்பட்டதாக அம்பேத்கார் தனது ஆய்வில் குறிபிட்டிருக்கிறார். அந்த நூல் பார்ப்பனர்களின் சட்ட நூல் அதைப் பல மன்னர்கள் பின்பற்றினார்கள். அதில் பெண்கள் ஆண்களின் தேவைகளுக்காகப் படைக்கப் பட்டவள்.அவளுக்கு எட்டு வயதுக்கு முதல் திருமணம் செய்து வைக்கப் படவேண்டும், என்று பல விடயங்கள் பெண்களை ஒரு மிருகமாகப் படைத்தருருக்கிறது.எட்டு வயதில் ஒரு பெண்ணுடம்பு குடும்ப வாழ்க்கைகள்ந் செல்லும் முதிர்ச்சியை அடையாது என்பதை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை.
வால்மீகி எழுதிய கம்பராமாயணத்தில,இராம சீதை திருமணம் நடக்கும்போது சீதைக்கு எட்டு வயது,இராமனுக்குப் பன்னிரண்டு வயது. கம்பராமாயணத்தில் கம்பர்,சீதா ராமனை; ‘அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’என்று அவர்களின் காதலைப் புகழ்ந்து தள்ளுகிறார்.இந்த வயதில்,உலகம் பரந்த வித்தில் பச்சிளம் மனத்துடன் எட்டு வயது இளம் பெண்கள் வெளியில்,விளையாடுவதுபோல் கோளாவில் கிராமத்துப் பெண்களான நாங்களும் மாங்கொட்டை அடித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
தமிழர்களால் புகழப்படும் இதிசாகங்கமான இராமாயண இதிகாசத்தில்,சூர்ப்பன நகை இராம லஷ்மணனுக்குக் காமவலை விதித்தாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவளின் மூக்கும் முலைகளும் வெட்டப்படுகின்றன.சீதை அவளின் கற்பின் புனித நிலையை உலகத்துக் காட்ட தீPயில் இறக்கப் படுகிறாள். ஐந்தாவது வேதம் எனப்படும் மகாபாரதத்தில் ஐவரைத் திருமணம் செய்த திரவுபதி அன்னியர் முன்னால் துகிலிரிய அவளைப் புணர்ந்த ஐந்து ஆண்மைகளும் ஆவென்று பார்த்துக்கொண்டிருக்கின்றன.
புராணக் கதைகளில்,கடவுள் வந்து மனைவியைப் புணரக் கேட்டால் அவள் கணவன் அவளைத் தானம் செய்கிறான். தேவர்களுக்கெல்லாம் தேவனான தேவலோகத்துத் தலைவனான இந்திரன் எத்தனையோ பெண்களைப் படாத பாடு படுத்தி வைத்திருக்கிறான். புராணக் கதை ஒன்றில் பெண்ணொருத்தி கணவனைத் தலையிற் சுமக்கிறாள்
இக்கதைகளின் எதிரொலி இன்றும் எங்கள் சமுதயத்தில் தொடர்ந்து நடக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில், பலபேர் சேர்ந்து வித்தியா என்ற பெண்ணைக் கூட்டு வன்முறை செய்தது எங்கள் நாட்டிற்தான் நடந்தது. யோகேஸ்வரி என்ற இளம் பெண்ணை ஒரு பெயர் பெற்ற விரிவுரையாளர் பாலியற் கொடுமை செய்து விட்டு அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல்,யாழ் பல்கலைக்கழகத்தில் பெரிய பதவியைத் தொடர எங்கள் சமூகம் ஆமோதிக்கிறது.அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடந்து போய்க் கொண்டிருக்கிறது.
எங்கள் இலங்கைப் பெண்கள் சாதி மத இன,வர்க்க,வயது பேதமின்றிப் பல கொடுமைகளைப் பல விதங்களில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று வறுமை காரணமாக மத்திய தரைக்கடல் நாடுகளுக்குச் செல்லும் இலங்கை இளம் பெண்கள்,விபச்சாரத்திற்காகப் பகிரங்கமாக ஏலம் போட்டு விற்பதாகப் பத்திரிகைச் செய்திகள் வருகின்றன.
இன்று எடுத்துக் கொண்டிருக்கும் ‘புலம் பெயர் பெண்களின் மன அழுத்தங்கள்’ என்ற விடயத்தில் நாங்கள் பேசப்போவது, கிட்டத்தட்ட 27 வருடங்கள் இலங்கைத் தமிழர்கள் முகம் கொண்ட இலங்கை அரசின் இன ஒழிப்புக் கொடுமைக்குத் தப்பி உலகம் பரந்தோடி வந்த இலங்கைத் தமிப் பெண்களைப் பற்றியதாகும்.அவர்களின் மன அழுத்தப்பிரச்சினைகளுக்கு,மேற்சொன்ன காரணிகளில் அவர்கள் முகம் கொடுத்த ‘அதிர்ச்சியான நிகழ்வுகள்’; என்பன முக்கியமானவை.
இலங்கையிற் தொடர்ந்த போரால் எண்ணிக்கையற்ற மக்கள் வயது வித்தியாசமின்றிப் பல மனநோய்களுக்கு ஆளானார்கள். ஆனால் அவர்களின் மனநலத்தை முன்னெடுத்து வேலைசெய்யம் திட்டங்கள் மிகக்குறைவே.
முக்கியமாக, அன்னிய நாடுகளில் பல்வேறு விதமான பிரச்சினைகளால் மன அழுத்தம் வந்து அல்லல் படும் தமிழ் மக்களுக்கு,சுகாதார நலத்தை மேம்படுத்தும் தமிழ் அமைப்பும் ஒன்றிரண்டே. மனநலம் சார்ந்து செயற்படும் பல அரச நிறுவனங்களுக்குத் தமிழர்களின் கலாச்சாரத்தில் பெண்களின் நிலை,இலங்கை அரசின் மனிதமற்ற கொடுமைகள்,குழுக்களுக்கிடையே நடந்த பயங்கரக் கொலைகள், என்பனபற்றிய தெளிவான விளக்கங்கள் அரிது. ஒரு தமிழத் தாய்க்கு முன்னால் ஒரு மகனை இன்னொரு மகன் கொலை செய்ய வேண்டும் என்ற உத்தரவைக் கொடுத்த தமிழ் இயக்கம் தமிழரைக் காப்பாற்ற வந்த புனித அமைப்பாகத் தமிழாரல்க் கொண்டாடப்படுகிறது.
இன்று உலகில் கிட்டத்தட்ட 80 கோடி மக்கள் புலம் பெயர்ந்து அகதிகளாகப் பல நாடுகளில் வாழும் நிலையிருக்கிறார்கள். ஐரோப்பாவில் மட்டும் 6.6 கோடி மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள்.
2012ம் ஆண்டுக்கணக்கின்படி, 46 நாடுகளில் பெரிய.சிறு தொகைகளில்.830.000 தமிழர்கள் அகதிகளாகப் பரந்த விதத்தில் வாழ்வதாகச் சொல்லப் படுகிறது.
2012ம் ஆண்டுக்கணக்கின்படி:
கனடா——– 300.000
இங்கிலாந்து 120 000.
இந்தியா 100.000.
ஜேர்மனி 60.000
பிரான்ஸ் 50.000
சுவிட்சர்லாந்து 35..000
சிங்கபூர் 30..000
அவுஸ்திரேலியா 30.000
அமெரிக்கா 25.000
.இத்தாலி 25 000
மலேசியா 24.000
நெதர்லாண்ட் 20.000
நோர்வேய் 10.000
டென்மார்க் 9.000.
இந்த எண்ணிக்கையில் இன்று மிகவும் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கலாம்.அகதிகளாக வந்தவர்களுக்குகு; குழந்தைகள் பிறந்ததால் சனத்தொகை கூடியிருக்கலாம்.அல்லது வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கலாம். உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இங்கிலாந்து இருந்தபோது கணிசமான தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு வந்தார்கள்.
அதே மாதிரி கணிசமான தமிழர்கள் ஆங்கிலம் பேசும் கனடா, அவஸ்திரேலியா,நியுசிலண்ட், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் குடிபெயாந்து கொண்டிருக்கிறார்கள்.இந்தியாவிலிருந்த தமிழ் அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட இந்தக் கணக்கில் இல்லாத எண்ணிக்கையில் தமிழர்கள், கம்போடியா,வியட்நாம்,ஆபிரிக்க நாடுகளிலும் வாழ்கிறார்கள்.
பிரித்தானியரிடமிருந்து இலங்கை 1948ல் சுதந்திரம் பெற்றுப் பத்து வருடங்களில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் வெடிக்கத் தொடங்கின.1958 அக்கால கட்டத்திலும் ஆங்கிலம் படித்த தமிழர்கள் கணிசமான தொகையில் பிரித்தானியாவுக்கு வந்தார்கள். அதைத் தொடர்ந்து, கனடா,அமெரிக்காவுக்கும் சென்றார்கள்.இவர்கள் பெரும்பாலும் ஆங்கிலக் கல்வி, தகுதி காரணமாக அழைக்கப் பட்டு வந்தவர்கள். அல்லது அறிவு தேடி வந்து புலம் பெயர் குடிமக்களானவர்களாகும்.
எப்படி வந்தாலும் புலம் பெயர்ந்த வாழ்வது என்பது வாழ்க்கையின் மிகப் பிரமாண்டமான திருப்பு முனையாகும். குடும்பத்தில் ஒருத்தர் இறந்த இழப்பின் துன்பத்திற்கு அடுத்த நிலைத்துன்பம் தான் வாழ்ந்த இடத்தை விட்டு இன்னொரு இடம் செல்வது என்று சொல்லப் படுகிறது. ஓரு மனிதன் வாழ்ந்த அவனின் உணர்வுடனும் உளத்துடனும் இணைந்த இடத்தை விட்டுப் பிரிவது,ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவியெடுத்த நிலை எடுத்ததற்குச் சமம் என்று சொல்லப் படுகிறது. அதிலும் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான சூழலில் வாழ்ந்த தமிழ்ப் பெண்கள்,முன்பின் தெரியாத அன்னிய நாட்டில் அகதியாக வந்து, வாழ்க்கையை ஆரம்பிக்கும் போராட்டம் மிகவும் கடினமானது.
முக்கியமாகப் போர்ச் சூழல் காரணமாக இலங்கையை விட்டுப் பிரிந்த பெண்கள் அவர்களின் பல விதமான அடையாளங்களை இழப்பதே பெரிய துன்பம். ஒரு அன்பான குடும்பத்தில் தனது வாழ்வை உற்றார் உறவினருடன் வாழ்ந்து பழகிய ஒரு இளம் பெண் சந்தர்ப்பம் காரணமாகச் சட்டென்று முறிக்கப் பட்ட கிளையாக இன்னொரு நாட்டில் வந்து விழும் துன்பத்தின் கொடுமை சொல்லில் எழுதி விபரிக்கமுடியாதது.அன்னிய நாட்டில் அவள் யாரோ ஒருத்தரின் மகளில்லை, சகோதரர்களின் சகோதரியில்லை.தாத்தா பாட்டியின் பேத்தியில்லை, அண்ணா தம்பி குழந்தைகளின் மாமியில்லை.
அவர்கள் வாழ்ந்த வெளிச்சமான சூழ்நிலை,மலர்களின் மணங்கள்,தெரிந்த மக்களின் கலகலப்பான உரையாடல்கள்,பயமின்றிச் செல்லும் பழகிய பாதைகள்,உணவையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட உறவினர்களோ சினேகிதர்களோ இல்லை. அறிவைத் தேட சுயமொழித்தடயங்கள் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த சமுதாயக் கட்டுமானங்கள் கிடையாது. புலம் பெயர்ந்த பெரும்பாலான தமிழ்ப் பெண்கள்,புதிய உலகம், புதிய வாழ்க்கை, எதிர்பாராத பொறுப்புக்கள் என்பனவற்றை ஒரு குறுகிய காலகட்டத்தில் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானவர்கள்
அகதியாய் வந்த அன்னிய நாட்டில் பெண்கள் முகம் கொடுக்கும் பன்முகச் சாவால்கள் பற்றி எத்தனையோ கதைகள் எழதியிருக்கிறேன் முக்கியமான கதை,1991ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ஜேர்மனியிலுள்ள பேர்ளின் வந்த ஒரு அகதித் தமிழ்ப் பெண்ணின் கதை. ‘ லோரா லக்ஷம்போர் ஸ்ரா’ என்ற கதையாகும். அவளைக் காப்பாற்ற வேண்டிய கணவனையே காப்பாற்றும் வீட்டுத் தலைவியாக,நடுஇரவில்,கொடிய குளிரில்,முன்பின் தெரியாத சூழ்நிலையில்,பல படிகள் ஏறி இறங்கி வீடுகளுக்குப் போய்ப் பேப்பர் போடும் வேலை செய்கிறாள். வீட்டில் குடிகாரக் கணவன். குற்றம் சொல்லும் மாமியார். போகுமிடத்தில் பாலியல் சேட்டைப் பேச்சுக்கள்,இப்படிப் பல துன்பங்களுக்க முகம் கொடுத்தவர்கள்,கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் இலங்கைத் தமிழ்ப் பெண்கள்.அவள் எப்படியாக மன அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்திருப்பாள் என்று விபரிக்க முடியாது.
‘பெண்களும் மன அழுத்தங்களும் பற்றிய இந்திய ஆய்வு ஒன்றில் பெண்களின் மன அழுத்தம் அவள் திருமணம் செய்தவுடன் பெரிதாக ஆரம்பிக்கிறது என்று சொல்லப் படுகிறது.அதிகம் பழகித் தெரிந்து கொள்ளாத கணவன், திருமணப் பேச்சு வார்த்தைகளிலும் சடங்குகளிலும் கண்டு பேசிய அவனின் குடும்ப அங்கத்தவர்கள், பிறந்த இடத்தை விட்டு வந்த புதிய நகர், அல்லது கிராமம் என்பன போன்ற பல விடயங்கள் திருமணமான மணப் பெண்ணின் உள்ளத்தில் பல அழுத்தங்களையுண்டாக்குகின்றன என்று சொல்லப் படுகிறது.
இதை என்னுடைய கதை ஒன்றில்,’மத்தளங்கள் கொட்டுங்கள்,மேடையொன்று போடுங்கள்,பெட்டை மாட்டைக் கூட்டிவந்து தாலி ஒன்று கட்டுங்கள்’ என்று எழுதியிருக்கிறேன்.
கணவனின் பாலியல் வக்கிரத்தை வெளியில் சொல்ல முடியாது எதிர்கொள்ளும் ஒரு மனைவியின் மனநிலையை விளக்க,’டார்ளிங்’ என்றொரு கதை எழுதியிருக்கிறேன்.
பிடிக்காத கணவனைப் பிரிந்து சென்ற ஒரு தமிழ்ப் பெண்ணை,தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் ஒரு மேற்கத்திய அன்னிய நாட்டுச் சந்தியில் வைத்து எப்படி அவமானம் செய்கிறார்கள் என்பதைப் பற்றி,’நாடகங்கள் தொடரும்’ என்ற கதையில் விபரித்திருக்கிறேன். சொந்த பந்தம் இல்லாத அன்னிய நாட்டில் தனியாக வந்து முதற் பிரசவ வேதனையின் காரணமாக மனநலம் பாதித்த பெண்ணைப் பற்றி, ‘அந்தப் பச்சை வீடு’ என் கதையில் விபரித்திருக்கிறேன்.
1980ம் ஆண்டுக்குப் பின் இலங்கையை விட்டு இடம் பெயர்ந்த தமிழ்ப் பெண்கள் அவர்கள் அகதிகளாயிருக்கலாம் அல்லது வெளி நாட்டில் வாழும் தமிழனைத்; திருமணம் செய்து கொண்டு கொழும்பு, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லது மட்டக்கழப்பு,திருகோணமலை,வவுனியா வந்தவராக இருக்கலாம்,அதனால் கணிசமானவர்கள் புதிய சூழ்நிலையில் மன அழுத்தத்திறகு ஆளாவது தவிர்க்க முடியாது.
லண்டனில் தமிழ் அகதிகள் அமைப்புத் தலைவியாகவிருந்தபோது நூற்றுக் கணக்கான தமிழ்ப் பெண்களின் பரிதாபமான கதைகளைக் கேட்டிருக்கிறேன். சொந்த குடும்பங்களுக்குள் பெண்கள் படும் வேதனைகள், வேலையிடத்தில் அனுபவிக்கும் பல்முகச் சவால்கள்,நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கும் பொய்ச் சினேகிதங்கள், நிறபேத இனவாத வக்கிரங்கள் என்பன பற்றிப் பல விடயங்களை ஆய்வு செய்திருக்கிறேன்.
இந்தக்கட்டுரை பல பரிமாணங்களில் புலம் பெயர் பெண்களின் மன அழுத்தங்களக்கான காரணங்களையும் அதனால் வரும் பிரச்சினைகளையும்.அதிலிருந்த விடுபட அவர்களுக்கு உதவியாக இருக்கும் சில வழிகளையும் ஆய்வு செய்திருக்கிறேன்.
பெண்களின் மன அழுத்தங்கள் பற்றி இந்தியா தொடக்கம் உலகத்தில் பல நாடுகளில் பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
‘ஆண்களும்தான் பல பிரச்சனைகளைத் தாண்டி புலம் பெயர்ந்திருக்கிறார்கள் அவர்களுக்கு மன அழுத்தம் இல்லையா?’ என்றும் கேட்கலாம். அவர்களின மன அழுத்தம் பற்றிய ஆய்வையும் பல ஆண்டுகளுக்கு முன் செய்திருக்கிறேன்.
நாங்கள் ஏன் பெண்களின் மன அழுத்தம் பற்றிக் கூடிய கவனம் எடுக்கிறோம் என்றால்,
- அவர்களின்,உடல் உள உறுப்புக்களின் மாற்றங்களினால் வரும் இரசாயன மாற்றங்கள் வித்தியாசமானது.
-குடும்பப் பணி மிகவும் பன்முகத் தன்மையானது.மனைவி,தாய்,வேலைக்குச் செலு;லும் உழைப்பாளி.முதியோரைப் பார்க்கும் பொறுப்பு,குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றும் பணி, தமிழச் சமூகத்தடன் தங்கள் மதிப்பைத் தக்க வைக்கும் முயற்சி,இலங்கையிலுள்ள உறவினருக்கு உதவுவது என்பன போன்ற பல சுமைகள் ஒரு தமிழ் அகதிப் பெண்ணின் தலையில் சுமக்கப் பட்டிருக்கிறது.
-சமுதாயத்தில் அவர்களின் நிலை இரண்டாம் நிலையானது. எதையும் சகித்துப் பொறுமையாக வாழ்வது கலாச்சாரக் கட்டுமானமாக எதிர்பார்க்கப் படுகிறது.
-பொருளாதாரத்தில் ஆண்களுடன் போட்டி போடமுடியாது.பெரும்பாலான அகதிப் பெண்கள்,குடும்பப் பொறுப்பு காரணமாகப் பகுதி நேரவேலையைச் செய்ய வேண்டியிருப்பதால் அவள் கணவனை விடக் குறையச் சம்பளம் எடுக்கிறாள். இதனால் ஆண்களின் பொருளாதாரத்தில் தங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தால் அவளின் நிலை,அவளின் குடும்பத்திலும் சமூகத்திலும் இரண்டாம் நிலையாகக் கணிக்கப் படுகிறது. - புலம் பெயர்ந்து வந்து வாழும் அன்னிய நாட்டுச் சவால்கள், அன்னிய நாட்டில் வாழும் பல தரப் பட்ட மக்களின் கலாச்சாரக் கட்டுமானங்கள் அவர்களால் உடனடியாகச் சமாளிக்க முடியாதவை.மொழிப்பிரச்சினை,அன்னிய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளக் காலம் எடுத்தல்.வெளிநாட்டாருடன் எந்தத் தொடர்புமின்றி வாழ்தல் என்பன இதில் அடங்கும்.
- தாய்தகப்பனுக்கும் வளரும் குழந்தைகளுக்குமான பிரச்சினைகள்( இன்ட ஜேனரேஷனல் கொன்பிலிக்ட்),முதியோரைக் கவனிக்கும் பொறுப்பு என்று பல காரணிகளால் புலம் பெயர் தமிழ்ப் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
மனநலம் பற்றிப் பேசும்போது. பின்வரும் ஒரு சில விடயங்களை,ஆண்,பெண்; என்ற வித்தியாசங்களுக்கப்பால் உணர்ந்து கொள்ள வேண்டும்.
-‘டிப்ரஷன’;- மனச்சோர்வு,மன அழுத்தம்,
-‘டென்ஷன’;-(அன்சயட்டி)தவிப்பு,அங்கலாய்ப்பு,(இவை சாதாரணமாக எல்லோரின்; வாழ்க்கையில் பல தடவைகளில் நடக்கும்ஆனால் அந்த உணர்வு அளவுக்கு மீறிப் போனால் அவர்களின் மன நலம் பாதிக்கப்படும்).
-‘மனிக் டிப்ரஷன்’-இந்தப் பிரச்சினையால் பாதிக்கப் படுபவர்கள், ஒரு நேரம் மிகவும் அளவுக்கு மீறி சிரித்துப் பேசுவார்கள்,இன்னொரு தடவை,அளவுக்கு மீறிய மன ஆழத்தத்தால் சோர்ந்து போயிருப்பார்கள்)
-பெண்களின் மாதவிடாய்க்குச்சில நாட்களுக்கு முன்வரும் ‘மனப்பாங்கு (மூட்)’; மாற்றம்.இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பெண்களின் சுரப்பிகளின் ஏற்படும் மாற்றங்களால் நடைபெறும்.
-‘ஸ்கிஸோப்ரனியா’இந்தப் பிரச்சினையுள்ளவர்கள்,யதார்தத் உலகத்தை மறந்து விட்டலைவார்கள்
-‘பனிக் அட்டாக்’-ஒரு விடயத்தை எதிர்கொள்ளும்போது பீதியால் அவதிப்படுதல்
-‘ஒப்ஷஸன்’-பிரச்சினையுள் ஆழ்ந்துபோய் அதையே ஒரேயடியாக நினைத்து அழுந்துவது.
-‘ஈட்டிங் டிஸோடர்ஸ்’-சாப்பிடுவதை மனநலப் பிரச்சினையாக்குவது,சொந்தப் பிரச்சினைக்குச் சாப்பாட்டை ஒரு ஆயுதமாகப் பாவிப்பது. உதாரணமாக,கணவனுடன் கோபம் கொண்ட மனைவி சாப்பிடாமலிருப்பது.அதைப்போல் வாழ்க்கைப் பிரச்சனையை எதிர் கொள்ளத் தெரியாமல் அதிகமாகச் சாப்பிடுவது,அல்லது பட்டினி கிடந்து தன்னையும் வருத்தி மற்றவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துவது.
-போஸ்ட்நேட்டல் டிப்ரஷன்’-குழந்தை பிறந்தபின் பெண்கள் அனுபவிக்கும் மனநலப்பிரச்சினை.இது,500 பெண்களில் ஒருத்தரைத்தாக்கும் மனநலப் பிரச்சினை. இதற்குப் பலகாரணிகளுள்ளன. பிரசவ வேளை அனுபவங்கள்,குழந்தை வளர்ப்பு பற்றிய பயம்,சட்டென்று மாறிய வாழ்க்கையமைப்பு,புலம் பெயர் நாடுகளில் அல்லது,பிரசவவேளையில் உதவுவதற்கு உற்றார் உறவினர் இல்லாத வாழ்க்கை நிலை.
இப்படி எண்ணற்ற பிரச்சினைகளை வரிசைப் படுத்தலாம். (இவற்றை ஆழமாக அறிய விரும்புவர்கள்,என்னுடைய புத்தகமான,’ உங்கள் உடல் உள பாலியல் நலம் பற்றி’ என்ற நூலை வாசிக்கலாம் நூலகம்.கொம் என்று தேடலாம்).
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தபோது அவர்களின் மனதில் சொல்ல முடியாத துன்ப துயர் வலிகளைத் தாங்கிக் கொண்டு வந்தவர்கள். வெளியிற சொல்ல முடியாத பல விடயங்களை மனதின் ஆழத்தில் அழுத்தி வைத்ததால் மன அழுத்தங்களுக்கு ஆளானவர்கள்.
இதன் எதிnhரலி அவர்களின் சொந்த உடல் நலம், குழந்தைகளின் நலம், ஒட்டு மொத்தக் குடும்பத்தினரின் மனநலத்தையே பாதிக்கும்.
உடல் ரீதியாகப் பார்த்தால்,ஆண் பெண் இருபாலாரின் உடல் ளர்ச்சி மூளை வளர்ச்சி ஒரே மாதிரித்தானிருக்கிறது.
அவர்களின் மூளை அவர்களின் எடையில் 2 விகிதம்தான்.ஒரேயளவான மூளைக் கலங்கள்,ஒரே மாதிரியான இரத்தோட்டம், போன்ற இயற்கைக் கொடைகள் அவர்களை வாழ வைக்கிறது.
ஆனால் சில மாற்றங்கள் பருவமடையும் வயதிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு பெண்ணின் பருவமாற்றம் 8-14 வயதுகளில் நடைபெறுகிறது.அப்போது அவளின் சுரப்பிகளின் மாற்றம் உடல் உள வலிகளைத் தருபவை. கர்ப்பப்பை பெண் ஹோர்மோனைச் சுரக்க ஆரம்பிக்கும்போதே அவளின் இடுப்பில், அடிவயிற்றில் சாடையான வலியுடன்தான் ஆரம்பிக்கிறது. அவளின் வாழ்நாளில் 350; தடவைகளில் மாதவிடாய்க்கு முகம் கொடுக்கிறாள். பிரசவ காலங்களில்,உறவினர் உதவியின்றி தனியாக மாரடிக்கிறாள். இக்கால கட்டங்களில் அவளது நித்திரை, உணவு முறைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் உடற் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளன.
மாதவிடாய் நிற்கும் காலத்தில் மன அழுத்தம் வருவது சிலவேளை நடக்கும்.பெண்களின் ஈஸ்ட்ரஜன் சுரப்பி அவர்களின் இனவிருத்தி,பாலுறவு மகிழ்ச்சி,மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் மிகவும் உதவுகிறது.
ஒரு மனிதனுக்குச் சராசரியாக 7-8 மணித்தியால நித்திரை தேவை. இதில் பிரச்சினை வந்தால் மன அழுத்தம் வர வழியுண்டு. மனித உடல் நாள் முழுக்க வேலை செய்யும்போத வரும் வலி,நோ என்பன நல்லதொரு நித்திரையில் கணமாகிறது.
இது இயற்கையின் நியதி.. விழிப்பும் உறக்கமும். மகிழ்ச்சியும் கவலையும் உடம்பின் இரசாயன வேலைகளின் துணையுடன் தொடர்பவை.தூக்கத்திக்கு மெலட்டோன் சுரம்பியின் உதவி, மகிழ்ச்சிக்கு செரட்டோனின் தடைபட்டால் சாதாரணவாழ்க்கை அசாதாரணமாகிவிடும்.மூளை, உடலின் அத்தனை பாகத்திலுமுள்ள பல (கெமிகல்) வேதியலுக்குரிய-இயைபியலுக்குரியதும் மின்சார (எலக்ட்ரிக்கல்) சைகளை(சிக்னல்ஸ்) தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டும் பெற்றுக்கொண்டுமிருக்கிறது.அவற்றிலிருந்து உடலின் சுக நிலையை அறிகிறது.உதாரணமாக எங்களின் களைப்பு நிலை,மனக்கலக்க நிலை போன்றவை.
உலகத்திலுள்ள அத்தனை மக்களும் ஏதோ ஒரு கால கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆழாகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதைக்குறைக்கும் அல்லது தவிர்க்கும் வேலையைச் செய்கிறார்கள்.
புலம் பெயர் பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சினைகளால் துன்பப்; படுபவர்கள்.முக்கியமாப் பெண்கள், தாய்நாட்டில் குடும்பத்தாரின்;,அறிவுரைகளுடன், உதவியுடன் பல மாற்றங்களை முகம் கொடுத்தவர்கள் வெளிநாடுகளின் தனிமையான வாழ்க்கையில் தங்கள் பிரச்சினைகளை மனதில் அமர்த்தி மறைத்து மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு ஊரில் இருந்த அடையாளம், மதிப்பு, என்பன புலம் பெயர்ந்ததும் மறைந்து விடுகிறது. அவர்களின் அடையாளம் வெளி நாட்டு அகதிகள், அல்லது தமிழ் அகதிகள் என்று பொறிக்கப் படுகிறது. மனத்தை வருத்துகிறது. மன அழுத்தம் வர வழியமைக்கிறது.
அதை உணர்ந்து கொண்டாலும் உதவி தேட. புதிய நாட்டின் கட்டுமானங்களை, வைத்திய உதவிகளைப் பற்றிய அறிவும் தெளிவும் ஆரம்பத்திலிருக்காது.
மன அழுத்தம் என்பது 45-49 வயது கால கட்டத்தில் இனபேதமின்றி ஆண் பெண் இருபாலாருக்கும் அதிகமாகவிருக்கிறது என்று இங்கிலாந்து அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.இக்கால கட்டம் அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வரும் கால கட்டமாகும்.
பிள்ளைகளை வளர்க்கும் தாய்களின் பிரச்சினைகள், குழந்தைகளின் இரட்டைக் கலாச்சார அணுகுமுறையால் குழம்பித் தவிக்கிறது. புதிய விஞ்ஞான வளர்ச்சியால் இந்தத் தலைமுறை எங்கள் கால வாழ்க்கையை விட அதிக அறிவு பெற்ற வாழ்க்கையைத் தழுவுகிறார்கள். மேற்கத்திய படிப்பு முறை அவர்களின் ‘தனித்துவத்தைப்’பலப் படுத்துகிறது.
இலங்கையில் தாய் பேச்சுக் கேட்டு வளர்ந்த பாரம்பரியத்தின் அடுத்த தலைமுறை மேற்கத்திய சுதந்திர தனித்துவத்தை முன்னெடுக்கும்போது இறுக்கமான வெளிநாட்டுக் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்த பெற்றோருக்கு அதிர்;ச்சி வருகிறது. அதைத் தொடர்ந்து மன அழுத்தம் வருகிறது.’நீ சரியாகப் பிள்ளை வளர்க்கவில்லை’தகப்பன் தாயைச் குற்றம் சாட்டுவது எங்கள் கலாச்சாரத்தில் சாதாரணம்.
சமுதாய ரீதியாகப் பார்த்தால் பெண்கள்,அவர்கள் வாழும் கலாச்சாரத்தின்; பிரசார,
‘பிம்பங்களாக வாழ வேண்டும’; என்று அவர்களின் முதியோர்களும் அவர்களை வழிநடத்தும் ஆணாதிக்கக் கட்டுமானங்களும் எதிர் பார்க்கின்றன. ‘தனித்துவ’ அறிவு. சிந்தனை என்பதைப் பெண்கள் வெளிப் படுத்தமுடியாத நிலை பல பெண்களுக்கு ஏற்படுகிறது. எதையும் பொறுத்துக் கொண்டு நல்ல தாயாக நல்ல மனைவியாக வாழ எதிர்பார்க்கிறது. பொறுமை என்பது நல்ல பெண்ணின் அடையாளமாகக் காலம் காலமாகச் சொல்லப் பட்டு வருகிறது.
அதனால் தங்கள் உடல் நல உள நலத்திற் பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்கள் பெரும்பாலும் வாய் விட்டுச் சொல்வதில்லை. அதுவும் புலம் பெயர் நாட்டில் பல்விதத் துன்பங்களை எதிர்நோக்கும் பல குடும்பங்கள் தங்கள் சுகநலத்தில் பெரிதாகக் கவனம் எடுக்க நேரமில்லை.அத்துடன் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லி உதவி கேட்பதும் அரிது. மனநலப் பிரச்சினையை கவுரவப் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள்.இதை இரகசிய மன அழுத்தம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
‘ நான் மிகவும் ஆளுமையான தாய், மனைவி, குடும்பத் தலைவி’ என்ற பாத்திரத்தைக் காப்பாற்றப் பல போலி முக மூடிகளுடன் பவனி வருவோருமுள்ளனர். இவர்களின் மனஅழுத்தம் இரகசியமாகவிருக்கும் வெளியில் சிரிப்பார்கள் தனிமையில் பெருமூச்சு விட்டழுவார்கள்.
சில மனைவிமார் தங்கள் கணவருக்குச் சொல்லத் தயங்குவதுமுண்டு. தற்போதைய கால கட்டத்தில்,பொருளாதார நெருக்கடியால்,சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் வௌ;;வேறு நேரத்தில் வேலைக்குப் போவதால் ஒருத்தருடன் ஒருத்தர் மனம் விட்டுப் பேசவும் நேரமிருக்காது.
சாதாரண மன அழுத்தம், அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி வந்து போவது,அதாவது சட்டென்று கோபப்படுதல்,யோசிக்காமல் திட்டித் தொலைத்தல். அதை விடக் கூடிய அழுத்தம் ‘மூட்’ மாற்றம் நடக்கும். உடல் சார்ந்த வருத்தங்கள் வரும். நித்திரையில்லாவிட்டால் தலைவலி, சரியாகச் சாப்பிடாவிட்டால் வயிற்றுப் பிரச்சினைகள், நோய் எதிர்ப்புத் தன்மை குறையும்.
சரியான உணவுப் பழக்க முறைகள், அத்துடன் மனஅழுத்தங்களின் பாதிப்பால் மாறுபடுவதால், காலப் போக்கில் இருதய வருத்தங்கள் நீரழிவு நோய்கள் வருவதற்கு பாதையமைக்கிறார்கள். சிலகாலங்களுக்கு முன் இங்கிலாந்தில் சிறுபான்மை மக்களின் சுகாதார ஆய்வில்,இங்கிலாந்தில் 36 விகித ஆண்களும் 46 விகிதப் பெண்களும் ஏதோ ஒரு இருதய வருத்தத்தால் பாதிக்கப் படுகிறார்கள என்று சொல்லப் பட்டது.
அத்துடன் ஆழ்ந்த மன அழுத்தத்தால் ‘தனித்த’ வாழ்க்கை நிலைகளும் உருவாகும். யாரையும் பார்க்கப் பிடிக்காமல் வீட்;டில் அடைபட்டுக் கிடப்பதும்,வெளியுலகத்தைக் கடந்த ஒரு இருட்டுப் பாதைக்குள் வாழ்வதுபோல் தோன்றும்.இந்த நிலை நீடித்தால், அவர்களின் புத்தி தடுமாறித் தற்கொலை செய்து கொள்வதும் அத்துடன் தங்களின் குழந்தைகளுடன் தற்கொலைகள் செய்வதும் நடந்திருக்கின்றன.
மன அழுத்தங்கள் புலம் பெயர்நாட்டுக்கு வந்து,புதிய சூழ்நிலை, மொழி,படிப்பு வேலை, வீடு. புதிய மனிதர்களுடன் பழக வேண்டியபோன்ற பல பிரச்சனைகள் மட்டுமல்லாது புலம் பெயர் பெண்கள் அவர்களது வீட்டில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
கனடாவுக்கு ஒரு வருடத்திறகுப் பலநாடுகளிலுமிருந்து 2500.00 மக்கள் அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள பெரும்பாலானவர்கள் மத்திய தரைக் கடல் நாடுகள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். முன்பின் தெரியாத நாட்டில் அவர்களின் கணவர் அல்லது உறவினரில் தயவில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் வரும்போது அவர்கள் பல இன்னலகளை அனுபவித்து மனநல அழுத்தத்திறகு ஆளாகிறார்கள்.
அங்கு அகதியாக வந்த 60 பெண்களின் மனத் துயர் பற்றி ஆய்வு செயயப் பட்ட கட்டுரையில் அவர்களின் மனத்துயர் பின்வருமாற பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இவர்கள் இலங்கைத் தமிழ், அத்துடன் ஈரானியப் பெண்களுமாகும்.
இவர்கள் தங்கள் வீடுகளில் தங்களுக்குச் செய்யப்படும் துஷ்பிரயோகங்களால் எவ்வளவு மன உளைவுக்கு ஆளாகிறார்கள் என்பதைச் சொன்னார்கள்.
- அவமானப் படுத்துவது,அச்சுறுத்துவது,அடித்தல்,அறைதல்,மற்றும் தள்ளி விழுத்துதல்,பாலியல் கொடுமைகள்,கட்டாய பாலியல் உறவு,பாலியல் இழிவு படுத்தல். பெண்குழந்iயென்றால் கருக்கலைப்புச் செய்யச் சொல்லி வற்புறத்தல். குடும்ப அங்கத்தவர்களால் வன்புணர்வு, தெரிந்தவர்களாற் பாலியல் தொல்லை. வயதுபோன பெண்களின் பரிதாபமான ஒதுக்கிவைத்தல்.
முஸ்லீம் பெண்களின் துன்பத்தைப் பார்த்தால், பெண்உறுப்புச் சிதைவு போன்ற கொடுமைகள் புலம் பெயர் நாடுகளிலும் தொடர்கின்றன.
(இந்தப் பகுதி நேர்ஸிங் றிசேர்ச் அன்ட் பரக்டிஸ் ஜேர்னலிருந்து(2012) எடுத்த குறிப்புhகளாகும் 2012.)
வெளிநாடு வாழும் தமிழ் மக்களுக்கு அவர்களின் மனப் பாரத்தை நீக்கும் பொது பொழுது போக்கு விடயங்கள் மிகக் குறைவு. இந்திய சினிமாப் படங்கள், நாடகங்கள் என்பன பெண்களை உற்சாகப்படுத்தும் கருத்துடையவகைகளாக இருப்பது குறைவு. தமிழ்க் கலாச்சாரப் படைப்புக்கள் பெரும்பாலும் ஆண்சிந்தனையின் பிரதிபலிப்பாக வருபவை. குடும்பத்தில், சமுதாயத்தில் பெண்களை இரண்டாம் தரத்தில் வைத்திருப்பதை மாற்றியமைக்க முயலாதவை. இலங்கையில் வாழ்ந்த சமுதாய அமைப்பு பெரும்பாலும் இன்னும் தொடர்கிறது.
மன நலம், பொது நலம்,அறிவு விருத்திக்கு மற்றவர்களுடன் சேர்ந்தணைந்து வேலை செய்வது விரிவாக்கப் படவேண்டும்.அதாவது, புலம் பெயர் நாட்டில் ஒருபகுதியில் அத்தனை தமிழ் மக்களையும் இணைக்காமல்,தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் மட்டும் சேர்ந்து ஏதோ ஒரு அமைப்பையுண்டாக்கி அதைச் சுற்றி வருவது தொடர்கிறது. ஒன்று படாத சமுதாயம் உருக்குலைந்து போகும் என்ற பழமொழியைப் புரியாத புலம் பெயர் தமிழர் ஏராளமாக இருக்கிறார்கள். சில பெண்கள் குழுக்களும் அப்படியே தொடர்கின்றன். மன நலத்தை மேம்படுத்தும்,பெண்கள் சுகாதாரம், கல்வி நிலை பற்றிய கருத்தாடல்கள் மிகக் குறைவாகும். அது மட்டுமல்லாமல் அவர்கள் வாழும் நாட்டு அரசியல், பெண்கள் அமைப்புக்கள், பொது அமைப்புக்ளான, சுற்றாடல் சூழ்நிலை,பன்னாட்டுப் பெண்கள் கலை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபடுவது குறைவாக இருக்கிறது;.
ஆனாலும் கடந்த நாற்பது வருடங்களில் புலம் பெயர்ந்த பெண்களின் சுயசிந்தனையின் தெளிவாலும்,பிறநாடுகளில் வாழும் சுதந்திரத்திலாலும் பல நல்ல மாற்றங்களும் நடக்கின்றன.
தமிழ் அகதிகள் தலைவியாக 1980ம் ஆண்டு நடுப் பகுதியிலிருந்து மேற்கு ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறென். ஆரம்பத்தில் புலம் பெயர் பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுதுக் கஷ்டப் பட்டிருந்தர்லும் காலக்கிரமத்தில்,சிறிய அளவில் என்றாலும் பல திறமைகள் வெளிப் படத் தொடங்கின.
1983ம் ஆண்டு தொடக்கம் அகதிகளாகவும் திருமணத்தின் பின் வெளிநாடு வந்தவர்களாகவும் பல்லாயிரம் தமிழ்ப் பெண்கள் மேற்குலகம் எங்கும் பரந்திருந்திருக்கிறார்கள். ஒரு சிலர் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டாலும் பெண்களின் இயற்கைக் குணமான எதையும் சகித்து ஆக்க பூர்வமான எதிர்காலத்தைக் காண்பது என்ற கோட்பாடு புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்களிடைய மிகவும் நல்ல மாற்றங்களையும் உண்டாக்கியிருக்கிறது;.
உதாரணம் இன்று இப்போது நடந்து கொண்டிருக்கும்.’ பெண்கள் சந்திப்பாகும்’ 1988ல் ஆண்களின் நிகழ்ச்;சி நிரலுக்குள் தங்களின் குரலை அடக்கி வாசிக்க மறுத்து, பெண்கள் பிரச்சினையைப் பெண்களே பேச வேண்டும் என்று உத்வேகம் வந்தது. அதன் நீட்சியாகப் பெண்கள் சந்திப்பு நிகழ்வு தொடக்கப் பட்டது. புலம் பெயர் தமிழ்ப் பெண்களின் தனித்துவத் திறமையின் வெளிப்பாடு இந்து அமைப்பாகும். அத்துடன் பல பெண்கள் அவர்கள் வந்திறங்கிய நாட்டின் மொழி படித்து ஒரளவு நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
வெளிநாட்டு வாழ்க்கை தனிமையுடன், குழப்பத்துடன், பெரிய புரிதலில்லாமல் ஆரம்பித்தாலும், கிட்டத்தட்ட நாற்பது வருடங்களின் பின் பல புலம் பெயர்ந்த பெண்கள்,புதிய மொழி, புதிய கலாச்சாரம், தங்களின் பொருளாதார சுதந்திரம்,சுயமனித்துவத்தின் மகிமை போன்றவற்றை உணர்ந்து தலை நிமிர்ந்து வாழ்ந்து எதிர்கால இளம் தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பல நாடுகளில் நேரடியாகப் பார்க்கிறோம். நன்றி.