‘தமிழ்க்கடவுள் முருகன் வழிபாட்டுச் சடங்குகளில் உளவியல்.’

          இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 9.2.2023
         '

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளீர்; உயர்கல்வி நிறுவனம் நடத்தும்,’தமிழ் இலக்கியத்தில் உளவியல் சிந்தனைகள் (‘(Psychological thoughts in Tamil literature)’ என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் என்னையும் ஒரு பேச்சாளாராக அழைத்த திரு. சிதம்பரம் அய்யா அவர்களுக்கும்,முனைவர் ஞானாம்பிகை அவர்களுக்கும், வந்திருக்கும் தமிழ்த் தகமைகள்,பேராசரியர்கள்,மாணவர்கள் அத்தனைபேருக்கும் எனது தாழ்மையான சிரம் தாழ்ந்த வணக்கக்கங்கள்.

எனது கல்வித்தகமை,லண்டனில் ‘மருத்துவ மானுடவியலில் முதுகலைப’; பட்டமாகும்.அதனால் இந்தத் தலையங்கம் பற்றிய எனது கருத்துக்கள், சமயம் சார்ந்த சடங்குகள் பற்றிய,உலகம் பரந்த சில ஆய்வாளர்களின் மேற்கோள்களுடன் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஏனென்றால், இன்று உலகம் பரந்திருக்கும் தமிழர்கள் முன்னெடுக்கும் முருக வழிப் பாட்டுச் சடங்குகளின் பல மரிமாணங்களை,ஆய்வு செய்வதன் மூலம் தமிழ் இளம் தலைமுறையுடன்,சடங்குகள் பற்றிய பன்முகக் கருத்துக்களைப் பரிந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

‘கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்
நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்
அற்புதமாகிய அருப்பெரும் சுடரேஅருள்மறை தேடிடும் கருணையென்; கடலே’

இந்தவரிகள்தான் கந்தனை வணங்கும் ஒவ்வொரு தமிழனின் இருதயத்திலிருந்து வரும் பக்தி நாதமாகும்.
சமயச் சடங்குகள் என்பவை,குறிப்பிட்ட கடவுளை வணங்கும் தனிப்பட்ட மனிதரின் நம்பிக்கை,மட்டு;மல்லாது,அவன் வாழும் சமூகத்தினரின் பன்முகத் தன்மையான நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதாகும்.இந்தச் சடங்குளை விஞஞான ரீதியாகவும் ஆத்மீக ரீதியாகவும்,கலாச்சார நீட்சியின் ஒரு அங்கமாகவும் வேறுபடுத்திஆராயலாம்.இவை மனித உணர்வின் வெளிப்பாடுகளைப் பல விதத்தில் பிரதிபலிக்கின்றன. உலகில பல்லினங்களும் பல் வேறு சடங்குகளைத் தொடர்கிறார்கள் அந்தக் கண்ணொட்டத்தில் தமிழ்க் கடவுள் முருக வழிபாட்டுச் சடங்குகளையும் உளவியல் பார்வையில் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எமெய்ல் டேர்க்காய்ம் (15.4.1858—15.11.1917) என்ற பிரான்சிய,யூத சமூகவியலாளர். ஆய்வாளர்,தத்துவம் சார்ந்த கல்வி பேராசிரியராக வாழ்ந்தவர். சமூக அறிவியற் துறைக்கு வித்திட்டவர்களில் ஒருத்தர்,
எம்பிரிக்கல் ஆய்வு முறை, அதாவது மக்களின் செயலறிவால், சமூக அறிவியலைத் தெரிந்து கொள்ளும் பல ஆய்வுகளைச் செய்தவர்.பல்லின மக்களும்,தமது மதம் சார்ந்த நம்பிக்கையுடன் தொடரும் மதச்சடங்குகள் பற்றிச் சொல்லும்போது,மதச்சடங்குகள் என்பன,’மதத்தின் சமூகவியலின் முக்கிய கருத்தாக்கங்களில் ஒன்று’ என்று குறிப்பிடுகிறார்.சடங்கு நடத்தைக்கும் சமூக ஒழுங்கைக் கடைப்பிடிப்பதற்கும் இடையிலான உறவை முன்வைத்தார்.புனிதமானவை என்று கருதப்படுகின்ற கூட்டு வணக்கமுறையை சமூக ஒற்றுமைக் கோட்பாட்டில் வைத்தார்.

இதற்கு,தமிழர்கள் முன்னெடுக்கும் அத்தனை சடங்குகளையும் உதாரணங்களாக எடுக்கலாம். அண்மையில் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்ட பொங்கல்விழா,ஆதிகாலத்திலிருந்தே இயற்கையைடி வணங்கிய தமிழரின் பன்முகத் தன்மையை உலகத்திற்கு விளக்குகிறது.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று திருமூலர் சொன்ன வாக்கின்படி,பொங்கலைக் கொண்டாடுவதன் அடிப்படையில், மனித குலத்தின் இருத்தியலுக்கு ஆதாரமான சூரியன், உணவுக்கு அடிப்படையான விவசாய உழவுக்கு இன்றியமையாத மாடுகள் என்பவற்றிற்கு நன்றி சொல்ல,உலகம் பரந்த தமிழ்ச் சமுதாயம் ஒன்று சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

கார்ல் யுங் (1875-1961) என்ற சுவிஸ்ஸர்லாண்ட்,மானுடவியலாளர், மனநல நிபுணர்,தொல் ஆய்வாளர்,தத்துவவாதி,சமய ஆய்வாளர் என்ற பல துறைகளில் ஈடுபட்டவர்.அவர் மக்களின் நம்பிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் பற்றிக் குறிப்பிடும்போது,’இன்று ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் கிறிஸ்தவ ஆராதனைகளைப்போல் ஆதிகாலமனிதர்களின் நம்பிக்கையை வெளிப் படுத்தும் செயற்பாடுகள் இருக்கவில்லை,அவர்கள் ஒட்டுமொத்தமாக இயற்கையின் மகிமையை நம்பினார்கள்.’ என்கிறார்.

உலகெங்கும் பரந்துவாழ்ந்த ஆதிகால மனிதர்கள் இயற்கையை மதித்த,இயற்கைக்குப் பயந்த,இயற்கைக்குப் பணிந்த மக்களாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்களின் வழிபாட்டுச் சடங்குகளும் அந்த நம்பிக்கையிற்தான் ஆரம்பித்தது. குன்றுக் கடவுள் முருகனுக்கு ஆதித் தமிழர்கள்; ஒன்று சேர்ந்து நடத்திய வழிபாடுகளின் நீட்சியே இன்று நடக்கும் பல சடங்குகள் என்று எடுத்துக் கொள்ளலாம். அதன் பிரதி பலிப்புத்தான்,வேல் வழிபாடு,ஆடல்கள், பாடல்கள்,காவடி எடுத்தல்,போன்ற முருகக் கடவுள் சார்ந்த சடங்குகளாகும்.

மானுடவியல் ஆய்வில் மிக முக்கியமாகக் கருதப்படும், ப்றோனிஸ்லோவ் மலினினோஸ்கி (1884-1942) ‘சமயச் சடங்குகள்,சமூகத்தை ஒன்றிணைக்க உதவுகிறது. சடங்குகளைச் செய்யும் குழுவைப் புனிதமாக்கி அவர்கள் எதிர் கொள்ளும் வாழ்வியல் போராட்டங்கள்,அரசியல் அத்துடன் சமூகப் போராட்டங்கள்,சட்டென்று வரும் இயற்கை அனர்த்தங்கள், எதிர் கொள்ள உதவுகிறது’ என்று குறிப்பிட்டார். இதற்கு உதாரணமாக, அண்மைக்காலத்தில் பல கொடுமைகளை அனுபவித்து,இன்று உலகம் பரந்திருக்கும் பல்லாயிரம் இலங்கைத் தமிழர்கள் முருக வழிபாட்டையும் சடங்குகளையும் மிகவும் பக்தியுடனான சடங்குகளுடன் முன்னெடுப்பதையும் அவதானிக்கலாம்.

இக்காலத்தில் பெரிதாக அணுகப்படும்,உளவியல் அதாவது சைக்கோலஜி என்பதன் தந்தையாகக் கருதப்படும் சிக்மண்ட் ப்றொயிட் என்பவர், ‘சமயச் சடங்குகள் என்பவை மனிதனின் அடிப்படை உளவியல் நரம்பியல் மற்றும் மன உளைச்சலின் வெளிப்பாடாகும்’ என்றார். அத்துடன் சமயச் சடங்குகள், சமுகக் குழுக்களின் கட்டமைப்பை வழங்குவதற்கான ஒரு வழிமுறை என்றும்,வேண்டுதலை அல்லது முன்னெடுக்கும் சடங்கு நிறைவேறுதல்,ஒரு குழந்தைத்தனமான மாயை மற்றும் வெளி உலகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி என்றும் குறிப்பிட்டார். சிக்மண்ட ப்றோயிட் ஆய்வுகளைப் பல விதத்தில் ஆய்வு செய்பவர்களும், ஏற்றுக் கொள்பவர்களும்,எதிர்ப்பவர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள்.

இந்திய இலங்கை மக்களில்’ இந்துக்கள் எனபவர்கள் பல பிரிவுகளாக இருக்கிறார்கள்.அதாவது:.

-முருக வழிபாடு- கொளமாரம்.
-கணபதி வழிபாடு-கணாபதியம்,
-பெண்தெய்வழிபாடு-சக்திவழிபாடு
-சிவ வழிபாடு-
-சூரிய வழிபாடு என்ற முக்கிய பிரிவுகளைக் கொண்டு தங்கள் வழிபாடுகளைச் செய்கிறார்கள்.

ஒரு தமிழ் மனிதனின்; அல்லது அவன் வாழும் குடும்பத்தின், அவனிணைந்த சமுதாயத்தின் இணைப்பு உளவியல் இந்தச் செயற்பாடுகளிலிருந்து வெளிப் படுகின்றன.இந்தச் சடங்குகள்தான ஒரு தனி மனிதனின் இருத்தலின் அடையாளத்தை உறுதிப் படுத்துகிறது. அதன் மூலம் அவனும் அவனது குடும்பமும் அவன் சேர்ந்த சமுதாயமும் மகிழ்ச்சியடைகிறது.

தமிழக் கடவுள் முருகவழிபாடு உலகம் பரந்து வாழும் தமிழர்களின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒரு சமயச் சடங்குகளின நீட்சியாகும்.
முருக வழிபாடும் தமிழர் உளவியலையும் பற்றி நோக்கும் போது,வழிபாட்டின்; இயல்பு என்பது .தமிழர்களின் மன உணர்வின்.இனிமை,அவர்களின் வாழ்வை,வரலாற்றை.மெய்யிலயைப் பிரதி பலிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனாலும: இப்பரிமாணங்கள், தமிழரின் தொல்லியல்,வரலாறு,மாந்தரியல்,நாட்டுப் புறவியல்,தமிழியல் என்பற்றுடன் ஆய்வு செய்யப்படவேண்டியது.

இன்று,உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களால்,தமிழ்க்கடவுள் முருகனுக்குச் செய்யப் படும் பூஜை என்பது அதைச் செய்பவர்களின்; வாழ்வையுயர்த்தும் தயவை.அருளை எதிர்பார்த்துச் செய்யப் படுவதாகும். இந்தச் சடங்குகள் பற்றிய ஆய்வில், பன்முக நீட்சியை அவதானிக்கலாம்.

அந்தச் சடங்குகள் அவர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.’முருகன் எங்கள் கடவுள்’; என்பதின் குறிக்கோள் வரையறையான சடங்குகள் ஆகும். இப்படியான மத சடங்குகள் பற்றிய குறிப்பை எழுதிய விக்டர் டேர்னர் (1960) என்னும் கலாச்சார மானுடவியலாளர்,’ இந்தச் சடங்குகள் காலம் காலமாகப் பரிந்துரைக்கப்பட்ட முறையான நடத்தை.’.அது அவர்கள் நம்பும் சக்தியின் மீதான பக்தியைப் பிரதிபலிக்கிறது என்கிறார்.

தமிழரின் உளவியலில் சார்ந்த முருக வழிபாட்டில்,ஆறுமுகனாக வணங்குகிறார்கள் ஆறுமுகம் என்பது. தமிழரின் அறிவு,வீரம்,ஆளுமை,.செல்வம்,அன்பு,கௌரவம்,ஆறு கூறுகளைப் முருகன் வெளிப்படுத்துகிறான்.
முருக வழிபாடு, தமிழரின் பண்பாட்டோடு.மொழியோடு,தத்துவத்தோடு,பழக்கவழக்கங்களோடு,நம்பிக்கையோடு,உளவியலுனடன்
ஒன்று பட்டிருக்கிறது.

இதை,கி.மு 2ம் நூற்றாண்டு எழுதப்பட்ட திருமுருகாற்றுப் படையில்:
‘ அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்,
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்,-நெஞ்சில்,
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாவென்றோதுவோர் முன்’ என்று சொல்லப் பட்டிருக்கிறது.

முருக வழிபாட்டின் தொல்வரலாறு மிகவும் பழமையானது. கி.மு. 6000. வருடங்களுக்கு முன்வாழ்ந்த கிரேக்க வனக் கடவுள் டையனோஸின் வரலாறு;றுடன் இணைந்தது. கிரேக்கக் கடவுள் பார்ஸன்ட்ஸ் என்பவர்,தமிழர்கள் வழிபாட்டில் சிவன் புலித்தோலுடன் ஆடுவதுபோல் தோலால் ஆன ஆடையுடன் ஆடுகிறார்.
மனிதவியலில் மலைவாழ்,குகைவாழ் ஆதிமக்கள். நாகர்pக வளர்ச்சியின் ஆரம்ப நிலை. தோலுடையணிபவர்கள,வேட்டையாடத்தெரிந்த காட்டுவாசிகள். மனித நாகரீக வளர்ச்சியின் இரண்டாம் நிலை.

ஆனால். கிரேக்க வரலாற்று முன்னதான, எஜிப்திய,சுமேரிய, மொசப்பட்டெமிய, பாபிலோனிய கலாச்சாரத்துடன் பல ஒற்றுமைகளைக் கொண்ட தமிழர் கலாச்சாரம் அதைவிடப் பழமையானது என்பது அறிஞர் கருத்து. இவ்விடங்களி;ல் ஆரம்பத்தில் இயற்கை வழிபாடும் அதைத் தொடர்ந்து தாய்வழி மரபு.நாக வழிபாடு, பெண்தெய்வ வழிபாடுகள் இருந்திருக்கின்றன.

முருக வழிபாட்டில் தொடரும் ஆடல், பாடல்,காவடி எடுத்தல் என்பன பக்தர்களுக்குக் கடவுளிடமிருந்து பய பக்தியைக் காட்டிய உளவியற் செயற்பாடுகள் என்கிறார்கள்.

அதாவது, ஆதிகால மக்கள் குன்றில் வாழ்ந்த சரித்திரம் மனித வளர்ச்சியில் முக்கியமான வரலாறு.. நீலகிரியில் கிடைத்த பழமையான வெண்கலங்கள் மாதிரி சிரியாவிலும் கிடைத்திருக்கிறது. ஆதித்த நல்லூர் வெண்கல இரும்பாலான பொருட்களைப் போல் பாலஸ்தீனத்திலும் கிடைத்திருக்கிறது. எனவே ஆதிகால மக்களின் வாழ்வு முறையும் வணக்க முறையும் அதுசார்ந்த உளவியலும் பெரும்பாலும் ஒரேமாதிரியாக இருந்திருக்கலாம். ஆய்வாளர். பு;ரட் குளொத்தி 1978) அவர்களின் கூற்றுப் படி திருப்பரங்குன்ற முருக வழிபாடு மிகவும் தொன்மையானதாகும்.

தமிழரின் அரிய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் முருகன் ‘சேயோன’; என்று குறிப்பிடப் பட்டிருக்கிறான். இலங்கையின் முக்கிய ஆயவாளரான கலாநிதி கைலாசபதி அவர்கள் தொல்காப்பியம், கி.மு 8ம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறார்.அதாவது முருக வழிபாட்டுச் சடங்குகள் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் மேலான பழமைவாய்ந்தது. அது தொல் தமிழர் உளவியலை இன்றும் தொடர்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

எந்த விதமான சமயச் சடங்குக்கும்,அதை முன்னெடுக்கும் மக்களின்.சமய நம்பிக்கை,அவர்களின் இலக்கியம், சமுதாய,வரலாற்று,வாய்மொழி, தொல்லியல், கல் வெட்டு போன்ற ஏதோ ஒரு இடத்தில் இந்தச் சடங்கின் ஓரளவான விளக்கம் இருக்கும். அத்துடன் வானிலை தொடர்ந்த உளவிற் தொடர்பும் இருந்திருக்கலாம் என்பதை,

ச.வே.சுப்பிரமணியம்,ஜி.இராஜேந்திரன்(1985)என்பவர்களின் கூற்றில் ஆயலாம். அவர்கள்,’ தொல்காலத்தில், தமிழர்கள் வானிலை ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். அதன் பிரதிபலிப்பே முருகனைச் ‘சேயோன’; என்று வழிபடுவதாகம். செவ்வாய்க் கிரகம் சிவப்பானது,. செவ்வாய்க்கிழமையை முருகனின் நாளாகத் தமிழர்கள் வழிபடுவதன் மூலம் அவர்களின் வானறிவை மதிக்கும் உளவியல் தெரிகிறது.

அத்துடன் தமிழ் நாட்டுடன்,இலங்கைக்கான கி;மு.6ம் நூற்றாண்டிலிருந்து தொடக்கம் இருந்திருக்கிறது.அக்காலத்தில் முருக வழிபாடு தொல் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.இலங்கை தொல்லாய்வுகள் பற்றி எழுதிய திரு..பி.புஸ்பரத்தினம் அவர்களின் தகவல்களின்படி முருகன் அகநாநூறு 22:11,புறனாநூறு 56:11, நாரணை 47:10. செவ்வேல் என்று மதுரைக்காஞ்சி 1:611லும், மணியன் என்று திருமுருகாற்றுப் படை 1:201,பரிபாடல் 18.25,;,குறுந்தொகை 53:3 என்பவற்றில் பாடப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில்,
சீர்கெழு செந்திலும்,செங்கோடும் வெண்குன்றும்,
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலேன்றே,
பாரிரும் பௌத்தின் உள்புக்கும் பண்டொரு நாள்
சூர்மா தடித்த சுடரிலைய வெள்வேலே’ என்று சொல்கிறது.

தமிழ் நாட்டில் முருக வழிபாடு, ஒரு குறிப்பிட்ட காலம் பெரிதாக இருக்கவில்லை என்றும், ஆனால் கி.பி 10ம் நூற்றாண்டின் பின் தமிழரின் பக்தி வழிபாட்டில் தமிழுணர்வு முருகனுடனிணைந்து வளர்ந்ததாகக் கருதுகிறார்கள். அக்கால கட்டம்தான் சோழனின் புலிக் கொடி தமிழ்நாடு கலந்து பல நாடுகளிற் பறந்த கால கட்டமாகும். இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் கோயில் கட்டப் பட்டது. ஆனால் இலங்கையில் முருக வழிபாட்டின் சரித்திரம் பல்லாயிரம் வருட சரித்திரத்தைக் கொண்டது. சிங்கள மக்கள்,தங்களின் வனப் பெண்ணை மணக்க வந்த,முருகனைத் தங்களின் மைத்துனராக வணங்குகிறார்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து,விஜயன். இலங்கைக்கு வரும்போது இலங்கையில் முருக வழிபாடு இருந்திருக்கிறது என்பதை விஜயன் பற்றிய தகவல்களைத் தேடும்போது தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் இலங்கை பனாகொடே என்ற இடத்தில் கண்டெடுக்கப் பட்ட மனித எலும்புக் கூடு இலங்கையில் மக்கள் 38.000-40.000 ஆயிரம் வருடங்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெரியப் படுத்துகிறதுஅந்தத் தடயத்தில் ஆதிகால மனிதர் கற்கால ஆயதம் கிடைத்திருக்கிறுது. ஆதிகால ஆயதம் கூரான வேல் அமைப்பானது என்பது பலருக்கும் தெரியும். அண்மைக்கால டி.என் ஏ.ஆய்வுகளின்படி சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் வங்காளிகளுக்கும் தொடர்பிருக்கிறது. ஆனால் மிகவும் நெருக்கமான தொடர்பு சிங்களவர், தமிழர்களுக்கிடையிலானது.

இலங்கை பௌத்தர்களின் மகாவம்சம் என்ற நூலின் குறிப்புப் படி இந்திய இளவரசன் விஜயன்,கி மு 543ல்; தனது எழுநூறு நண்பர்களுடன் இலங்கைக்கு வந்திருக்கிறான். அவனுடைய பாரம்பரிய இந்திய வங்காள-கலிங்க நாடுகளுடன் தொடர்புடையது. ( இன்றைய பெங்கால் அன்ட் ஒடிஸா).

அஜந்தா சித்திரங்களின் ஆய்வுகளின்படி,இந்தியாவிலிருந்த வணிகன் சின்ஹா என்பவனின் மகனான விஜயன் வணிக ரீதியாக இலங்கைக்கு வந்தபோது கப்பல் உடைந்ததால் இலங்கையின் ஆதிவாசிகளால் காப்பாற்றப் பட்டான்.

விஜயன் இன்னொரு தகவலின்படி அவனுடைய தாய்; தெனனாட்டைச் சேர்ந்தவள். மற்றுமொரு தகவலின்படி வணிகனாக இலங்கை வந்த தமிழ்நாட்டு இளைஞன் என்றும் சொல்லப் படுகிறது.முதல் மனைவி குவேனி இலங்கையின் ஆதிகுடிப் பெண்ணென்றும்,அவனின் இரண்டாவது திருமணம் தென்னாட்டு பாண்டிய இளவரசியுடன் நடந்ததாகவும் வரலாறுகள் உள்ளன..எப்படியிருந்தாலும், அவன் வந்த காலத்தில் முருக வழிபாடு இலங்கையிலிருந்ததாகத் தகவல்கள் உள்ளன.

தென்னாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு மிகவும் நீண்டது.அது போலவே இலங்கையில் முருக வழிபாடு மிகவும் தொன்மைவாய்ந்தது என்பதைப் பதிவு செய்வது மிகவும் முக்கியமானது.
ஆதித்த நல்லூரில் கிடைத்த முருக வழிபாட்டுத்தடயங்கள் மாதிரி. இலங்கையில் வடக்கிலுள்ள,
ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்ததாகக் கருதப் படும் ஒரு ஆண்தெய்வ சிலை வேலுடன் ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்டது.

அதே போலவே இலங்கையின் வடக்கில்,நல்லூர், கந்தரோடை(கி.மு 2ம் நூற்றாண்டு) பூகரியிலும் வடமத்திய பிரதேசத்திலுள்ள, அனராதபுர,பினவேவ,),தென்னிலங்கையிலுள்ள அக்குறகொட, (கி;பி 13,17 நூற்றாண்டு) போன்ற இடங்களிலும் கிடைத்திருப்பதாகத் தொல்லியல் ஆய்வுகளின் தரவுகளுடன் திரு,பி.புஸ்பரத்தினம் அவர்கள் பதிவிட்டிருக்கிறார்.

இந்தியாவில் தமிழ் நாட்டில் தமிழ்க் கடவுள் முருகனுக்காக எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில்,முருக தலங்களான ஆறு படை வீடுகள் மிகவும் பிரசித்தமானவை.

1.திருப்பரங்குன்றம்- மார வர்ணன் சுந்தரபாண்டிய மன்னனால் கிபி.8ம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாகச் சொல்லப் படுகிறது.

  1. திருச்செந்தூர் தமிழ்நாட்டின் தெற்கு மூலையில் உள்ளது. வள்ளி குகையும் இருக்கிறது. இந்தக் கோயில் மட்டும்தான் குன்றுக் கடவுள் முருகனைக் கடற்கரையில் வழிபடவைக்கிறது.
    3.பழனி முருகன் கோயில்.திண்டுக்கல் நகரை அண்டியுள்ளது. சேரமன்னன் சேரமான் பெருமாளால் கட்டப்பட்டது.
  2. சுவாமி மலை முருகன் கோயில். கும்பகோணம் அருகில் உள்ளது. கி.பி.சோழமன்னரால் இரண்டாம் நூற்றாண்டு கட்டப்பட்டது. இங்கு செல்ல தமிழர்களின் வருடங்களைக் குறிக்கும் அறுபது படிகள் இருக்கின்றன.
  3. திருத்தணி முருகன் கோயில். ஓரு வருடத்திலுள்ள முன்னூற்றி அறுபத்தை நாட்களைப் பிரதிபலிக்கம் படிகளைக் கொண்டன.
    6.பழமுதிர் சோலை. முருகன் கோயில்.இங்கு முருகன்.குறிஞ்சிக் கிழவன் என்று வணங்கப்படுகிறான்.

தமிழ்க் கடவுள் முருகனுக்காகத் தமிழர்கள் ஆறு விகிதத்திற்கு மேல் வாழும் மலேசியாவில் ; -பாட்டக்குகை கோலாம்பூh நகரில்,(மலேசியா நாட்டில் 42.7 மீடடர் உயரத்தில்,உலகத்திலேயெ உயரமான முரகன் கோயிலாக உயர்ந்து நிற்கிறது..இதை விட,இலங்கையில் முருக தலங்களில் மிகப் பெயர் பெற்றவைகளில் ஒன்றானதும மிகவும் புராதனமுமான கதிர்காமத் தலம் இருக்கிறது.அத்துடன் வடக்கு,கிழக்கு.மேற்கு,மத்திய மலையகம், என்று பல இடங்களில் முருகன் கோயில்கள் உள்ளன.-இலங்கை.நல்லூர் கந்தசாமி கோயில். மாவிட்டபுரம்,செல்லச் சன்னிதி,
சித்திரவேலாயுத முருகன் கோயில் வெருகல், திருகோணமலை.மண்டுூர் கந்தசாமி கோயில் திருக்கோயில் என்பன மிகவும் பிரசித்தமானவை.

புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களால்,இங்கிலாந்தில் பல இடங்களிலும் ஜேர்மனி,பிரான்ஸ்,கனடா, அவுஸ்திரேலியா,சுவிட்சர்லாந்து,நெதர்லாந்துஈஜெர்மனி போன்ற பல நாடுகளில் முருகனுக்குச்; சிறப்பான கோயில்களை அமைத்துப் பல சடங்குகளை நடத்தி,தமிழர்களின், பக்தி அத்துடனிணைந்த கலாச்சாரப் பண்பாடுகளை வெளிப்படுத்தி, அவர்கள் வாழும் நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.

அத்துடன்,பல நாடுகளில் புலம் பெயர்ந்த நாடுகளில் தென்னாட்டுத் தமிழர்களும் தங்களின் துயர் நீக்கும் கலிகாலக் கந்தனாக அவர்கள் தொடரும் முருக வழிபாட்டையும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்துடனும் பார்க்கலாம்.

இந்தியாவிலிருந்து கூலி வேலைகளுக்காகப் பிரித்தானியாரால் 1886ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் உலகின் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டார்கள்.
ஆரம்பத்தில் இந்தியக் கூலிகளின் பிரயாணம் கல்கத்தாவிலிருந்து ஆரம்பித்தது. அதன்பின் தென்னிந்திய மக்கள் பெருவாரியாகக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
இவர்களில் பெரும்பாலோர் தென்னிந்தியாவைதாவைச் சேர்ந்த ஒடுக்கப் பட்ட மக்கள். அதிலும் கணிசமானவர்கள் தமிழ் மக்கள்.அவர்களின் கடின துயரான பிரயாணத்தின்போது, டைபொயிட்,கொலரா போன்ற தொற்று நோய்களால் ஐந்தில் ஒருத்தர் இறந்தார்கள். கூலிவேலைக்குப் பிரித்தானியரால் மாதக்கணக்கான பிரயாணத்துடன் கொண்டு செல்லப் பட்டவர்கள் அவர்கள் சென்ற இடங்களில் பிரித்தானிய முதலாளிகளால் படுமோசமாக நடத்தப்பட்டார்கள். கரும்பு,தேயிலை,கறுவா,பருத்தி தோட்டங்களில் கடின உழைப்பைத் தொடர்ந்தார்கள். இலங்கையில் முருகனின் வேலை மரத்தடியில் நட்டுத் தங்கள் உளத்துயர் திர்த்தார்கள்.

‘அமரர் இடர் தீர்த்தே அவர்க்கருளும் வென்றிக் குமரனடி சிந்திப்பாய் கூர்ந்து, என்கிறது சைவ நெறி.
‘என்னிருளை நீக்கும், இமையோர்க் கிடர்கடியும்,பன்னிரு தோட்பாலன் பாதம்’ என்கிறது சங்கற்ப நிராகரணம்.
எந்தக் கோணத்திலிருந்து முருக வழிபாட்டுடன் தமிழனைப் பார்த்தால்,அவனின் வாழ்வாக்கான போராட்டத்தை வெற்றி கொள்ளச் செய்யும் வீரனாகத் தமிழர்களின் உளவியலில் உறுதியாக நிற்க உதவுகிறது முருக வழிபாடுகளும் சடங்குகளும்.

இன்று உலகெங்கும் சென்ற தொழிலாளர்களின் வாரிசுகளின் தொகை உலகெங்கும் 3.2 கோடிகள் என்ற தகவல்கள் உள்ளன. இவர்கள், தென் ஆபிரிகாவிலுள்ள பிரிட்டிஷ் கயானா,மேற்கிந்தியத்தீவுகளான ட்ரினார்ட்,தென் ஆபிரிக்கா,இலங்கை,மலேசியா,மொரிசியஸ்,போன்ற நாடுகளில் வாழ்கையை அமைத்தார்கள். அத்துடன் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் தமிழர்கள் வணிகம், தொழில் வாய்ப்பு காரணங்களுக்காக வேறு நாடுகளில் குடியேறியதை சரித்திர வாயிலாகப் பார்க்கலாம்.

இன்று உலகெங்கும் முருகனுக்காக எடுக்கப் படும் சடங்குகள், தமிழர்கள் தங்கள் ‘தமிழ்க்’ கடவுளின் பன்முகத் தன்மையின் சிறப்பை உலகுக்கு அறிவிக்கும் ஒரு கூட்டு உளவியல் செயற்பாடு என்று எடுத்துக் கொண்டால் அது மிகையாகாது. ஏனென்றால் மிகப் பெரும் காலமாக அவர்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள் என்பனவற்றைத் திரிவு படுத்தவும் திருடி எடுக்கவும் பல முயற்சிகள் நடப்பதை அவர்கள் கண்டு கொண்ட வெறுப்பின் ஒரு வெளிப்பாடாக இந்தச் சடங்குகளை நோக்கலாம்.

இது பற்றிய கலந்தரையாடலின்போது,இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு சைவ ஆளுமை தனது கருத்தைச் சொல்லும்போது, ‘முருக வழிபாடு இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தொன்மையான வேல் வழிபாடாகத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதிகளில் முருக வழிபாட்டின் அத்தனை முறைகளும் தமிழில் நடத்தப் பட்டன. 1983ம் ஆண்டுக்குப் பின் மிகப் பிரமாண்டமான மாற்றங்கள் நடக்கின்றன.

இனப் பிரச்சினை காரணமாகப் பலர் வெளியில் சென்று விட்டார்கள். அவர்கள் சென்றவிடமெல்லாம் பல கோயில்களை முக்கியமாக முருகன் கோயில்களைக் கட்டுகிறார்கள்.அக் கோயில்களுக்கு வடமொழியில் பூசை செய்யப் படுகிறது.அதன் எதிnhரலியாக இலங்கையிலும் பல மாற்றங்கள் நடக்கின்றன.வடமொழியில் பூசை செய்வதை விரும்பாத அத்துடன்,தமிழ்க் கடவுளுக்கு அன்னிய மொழியில் வழிபடும் தங்கள் குடும்பத்துப்; பெரியவர்களைப் புரிந்து கொள்ளாத இளம் தலைமுறை கோயிலுக்கு வருவது குறைகிறது. திருவிழாக்காலத்தில் வரும் கொண்டாட்டக் கூட்டங்கள் வேறு. தமிழ்க் கடவுள் முருகனின் வழிபாட்டுமுறையே வடமொழிச் சம்பிரதாயமாக மாறுகிறது’என்றார்.

லண்டனிலும் இதே நிலைமையால் இளம் தலைமுறையினர் கோயில்களுக்கு அதிகம் வருவதில்லை.இது பற்றி ஒரு இலங்கைத் தமிழ்த்தாய் என்னுடன் உரையாடும்போது,

‘எனது மகன் என்னுடன் இப்போதெல்லாம் கோயிலுக்கு வருவது கிடையாது. அவனுக்குப் பதின் மூன்று வயதாகிறது. கோயிலுக்கு வராததற்கு அவனிடம் காரணம் கேட்டால். அவன் சொல்கிறான், ‘லண்டனில் என்னுடைய நண்பர்கள் அவர்களின் வணக்க இடங்களுக்குச் செல்கிறார்கள்.அங்கு அவர்களின் தாய்மொழியில் பூசையும் பிரசங்கங்களும் நடக்கின்றன. ஆனால் தமிழ்க் கோயிலில் எனக்குத் தெரியாத மொழியில் அங்கிருக்கும் பூசகர் ஏதோ சொல்கிறார்.இங்கிலாந்தில் பிறந்த எனக்குத் தாய் மொழி தமிழாகவும் அறிவு மொழி ஆங்கிலமாகவும் இருக்கிறது. ஆலய மொழி அன்னியமாக இருப்பபது புரியவில்லை.என் மொழி தெரியாத கடவுளிடம் தரகர் மூலம் பேசிக் கொள்ளத் தயாரில்லை’ என்று சொன்னான்’ என்றார். ஒட்டு மொத்தப் பிரித்தானிய இளம் தலைமுறையினரில் 50 விகிதமானோர் கடவுளை நம்பாதவர்கள் என்று அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் சொல்கின்றன.

ஆனாலும்,இங்கிலாந்தில்,தமிழக்கோயில்களின் எண்ணிக்கை ஒவ்வொர வருடமும் கூடிக்கொண்டு வருகின்றன. தொன்மையை ஏதோ ஒரு விதத்தில் நீடிக்கும் அவர்களின் உள ஆவல் தமிழ் மக்களை விட்டு அகலாது. அதிலும் முக்கியமாகத் தமிழ்க்கடவுள் முருகன் ‘தமிழரின்’ அடையாளமாகும். இதைக் கடந்த பல நூறுவருடங்களாக இ.ந்தியாவிலிருந்தும் ,இலங்கையிலிருந்தும்; புலம் பெயர்நத தமிழ் மக்கள் அவர்களின் வழிபாட்டுச் சடங்குகள் மூலம் பிரதிபலித்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்தத் தத்துவங்களின் பிரதிபலிப்பாக முருக வழிபாட்டின் சடங்குகளும் அமைகின்றன.மிகவும் அழகான சோடனைகளுடன:.அன்பான உற்றார் உறவினர் புடைசூழ,கம்பீpரமான தோற்றத்துடன,ஆளுமையாகப் பால்காவடி, பன்னீர்க்காவடீ. புஷ்பக் காவடி. தொங்கு காவடி, தூக்குக் காவடி போன்றவற்றைத் தோளில் தாங்கி,கண்ணைக் கவரும் வண்ணங்களால் அந்தக் காவடியை அலங்கரித்து, மத்தளம் கொட்ட சல்லரி ஒலிக்க அரோகரா முழங்க முருக சடங்குகள் நடப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந்தச் சடங்குகளில் வாயில் வேல் செருகி, காவடியாடுபவர்கள், வாயில் அலகு, முதுகில் பலதாரப் பட்ட இரும்புக் கொழுக்கிகள்,போன்றவற்றைத் தங்கள் தோலை ஊடுருவித் துளைத்துப் போட்டிருப்பது முருகனுக்கு அவர்கள் செய்யும் சடங்குகளை எவ்வளவு பக்தியுடன் செய்கிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்;காட்டும்.

இந்த வேதனையான அலகுகளால் குருதி போவதோh அல்லது அளவுக்கு மீறிய வேதனையுடன் பக்தர்கள் அவதிப் படுவதையோ காணமுடியாது. அவர்கள் உளரீதியாகத் தங்களைத் தயார் படுத்தியிருப்பது அவர்களின் செயற்பாட்டில் விளங்கும். இப்படியான சடங்குகளை ஆய்வு செய்வோர் உண்டு;, முருகனுக்குக் காவடி எடுப்பது என்ற சாதாரண வார்த்தைகளுக்குள் எத்தனையோ வேறுபாடுகள் இருப்பதைக் காவடித் திருவிழாவை நுணுக்கமாகப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

திருமதி கதரின் பெல் என்பவா,;(றிச்சுவல் தியரி-1992 பக்கம் 90).குறிப்பிடும்போது,’ ஒரு அடிப்படை மட்டத்தில்,சடங்கு மயமாக்குதல், என்பது, பல வேறுபாடுகளின் உற்பத்தியாகும்.;.’ ஒருத்தர் மேற்கொள்ளும் சமயச் சடங்குகள்,மிகவும் சிக்கலான மட்டத்தில் பார்க்கும்போது,சடங்கு மயமாக்கல் என்பது, ஒரு சிறப்புரிமை பெற்ற முரண்பாட்டை நிறுவும், ஒரு செயல்பாட்டு வழியாகும். வேறுபாடுகள் என்பதை, கலாச்சார. உளவியல், காரணிகள் சேர்ந்தவை என்றம் எடுத்துக் கொள்ளலாம்.’ என்கிறார்.

மிகவும் கடினமான முருகக் கடவுள் சடங்குகளான, முதுகில் கொழுவப்பட்டிருக்கும் இரும்புக் கொழுவிகளால் ஒரு பாரமான முள்ளுத் தேர் அல்லது சடங்குத் தேவையான சாமான்கள் நிறைந்த வண்டியையோ இpழுத்துக்கொண்டு கோயிலைச் சுற்றிப் பவனி வருவது, கொழுத்தும் வெயிலில் கோயிலைச் சுற்றி அங்க பிரதட்சணம் செய்வது.மிகுந்து உயரமான மலை வழியை முழங்காலால் நடந்து செல்வது போன்றவற்றின் விளக்கத்தை கதரின் பெல் அவர்களின் இன்னுமொரு கூற்று மூலம் விளக்கலாம் என்று இங்கு பதிவிடுகிறேன்..’..இப்படியான சடங்குகள் தன்னை மிகவும் முக்கியமான அல்லது சக்திவாய்ந்ததாகக் காட்டுகிறது.’என்கிறார்.அதாவது ஒரு பக்தனுக்கு முருகனுக்குமுள்ள ஆழமான பக்திநிலையைப் பிரதிபலிக்கிறது.

தெய்வ வழிபாட்டில் தனிப்பட்ட சடங்குகளைப்; பெண்களும் ஆண்களும் பாற்குடல் காவுதல், வாயில் அலகு போடுதல் அங்கப் பிதட்சணம் செய்தல்,தேங்காய் உடைத்தல் போன்றவற்றையும் செய்வார்கள் ஆனால் அதுவும் குடும்பம் அல்லது அவர்களின் உற்றார் உறவினர் சார்ந்ததாக இருக்கும். கடவுளுக்கு வைத்த நேர்த்திகடன் காரணமாகத் தீ சட்டி எடுத்தல் போன்ற விடயங்களையும் திருவிழாக் காலங்களில் பெண்கள் செய்வார்கள்.இதில் எனது உளவியல் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் எனது சிறு வயதில் ஏதோ நோய்வாய்ப்படடது; தேறியதும் கடவுளுக்கு நன்றி சொல்ல அம்மா வைத்த நேர்த்திக் கடன் படி தீச்சட்டி எடுக்கும் நிலை எனக்கு வந்தது. அப்போது எனது வயது பத்தாக இருக்கலாம். திருவிழாக் காலத்தில்பல தடவைகள் பெண்கள் தலையில் தீ சட்டி எடுப்பதைக் கண்ட அனுபவம் இருந்ததால் எனது பயத்தை அப்பா உணர்ந்திருந்;தார். அம்மா என்னுடைய தீச் சட்டிப் பவனியை ஆரம்பிக்க முதல் அப்பா அம்மாவைக் கண்டித்தார்.’இளம் பெண்ணின் மனதைக் குழப்பவேண்டாம’; என்று சொன்னார். கடவுள் இப்படியெல்லாம் தனது பக்தர்களை வருந்தச் சொல்லிக் கேட்கமாட்டார்.’என்று அம்மாவிடம் எனக்காக வாதாடினார்..

அம்மா சொன்னார் ‘அவள் பக்தியானவள’;. அந்த வார்த்தை என்னைத் தீச்சட்டி எடுக்கப் பண்ணியது. நான் பக்தியான பெண்ணா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அம்மாவுக்கு என்னில் உள்ள நம்பிக்கையைக் குழப்பத் தயாரில்லை. அந்தச்சடங்கு ஆரம்பித்த நேரம் பெற்றோர், உற்றார்கள், ஊரிலுள்ள சினேகிதர்கள்,தெரிந்தவர்கள் என்ற பட்டாளமே வந்திருந்து பக்திப் பாடல்பாடி என்னை அழைத்துச் சென்றார்கள். அந்தச் சூழ்நிலை மெய்சிலிர்க்கப் பண்ணியது.நான் பயப்படமல் அந்தச் சடங்கை முடிக்க அத்தனைபேரும் ஒன்றாகத் திருப்புகழைப் பாடிக்கொண்டு வந்த ஊர்வலம் மிகவும் உருக்கமானது. உறவுகளின் நெருக்கத்தைப் பிரதிபலித்தது.அன்று நடனந்த சடங்கில்,ஒரு பிரமாண்டமான கூட்டத்தின் உளவியலை இன்று நான் நினைவு கூர்ந்து வியக்கிறேன்.

அதே போலவே முருக வழிபாட்டின்; பெரும்பாலன சடங்குகள்,மற்ற சமயச் சடங்குகள் மாதிரியே ஒரு குழு அல்லது சமூகச் செயற்பாடாக நடைபெறுகிறது.

இதனால் அதில் ஈடுபடுவோர் மனவியல் சடங்கு ரீதியாக ஒன்றாகச்; சங்கமிக்கிறது. அந்த நிகழ்வு பக்தியுடன், கோட்பாடுகளை உள்ளடக்கிய, மரபை விட்டகலாத சடங்காக நடந்து முடிவதை அத்தனைபேரும் ஒட்டுமொத்தமாகச் செயற் படுததுகிறார்கள்.

முருக வழிபாட்டில் பல சடங்குகளில் ஒன்றாக யாத்திரைச் சடங்கும் இருக்கிறது. இஸ்லாமியர் தங்கள் புனித பூமியான மக்காவுக்கும், யுதர்கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் புனித புமியான ஜெருசலத்திற்கும், யாத்திரை செய்வார்கள். முருகனை வழிபடும் தமிழர்கள், இந்தியாவில் ஆறுபடை வீடுகளுக்கும் இலங்கைத் தமிழர்கள் கதிர்காமத்திற்கும் செல்வார்கள்.

இலங்கைத் தமிழரின் கதிர்காம யாத்திரை ஒருகாலத்தில்,இலங்கையின் வடக்கில் உள்ள செல்வச் சன்னிதி முருகன் திருக்கோயிலிலிருந்து ஆரம்பமாகி தெற்கிலுள்ள கதிர்காமத்தை நடந்து சென்று தரிசிப்பார்கள் இதன் தூரம் 1396 கிலோ மீட்டர்ஸ் என்று சொல்லப் படுகிறது. இந்த யாத்திரை பல்வித மக்களை இணைப்பது. பல பிரதேசங்கள், பல வர்க்க,இன வேறுபாடுகள் அத்தனையும் கடந்து முருகனின் பக்தியின் செயற்பாட்டால் இரவு பகலாக அவன் பெயரைப் பாடிக் கொண்டு காடு மலை,ஆறு குளங்கள். கிராமங்கள், நகரங்கள், தாண்டி கதிர்காமம் செல்வார்கள்..அவர்கள் ஒன்றிருவரைத் தவிர மற்றவர்கள் தனித்தனியாக வருபவர்கள். சிலர் தங்கள் சகோதரர் அல்லது. மனைவியோ அல்லது சினேகிதர்களுடன் யாத்திரை செய்வார்கள்.

இந்த பிரமாண்டமான நடை பயண முருக யாத்திரையில் ஓரளவு வயதுபோன பெண்களும் கலந்து கொள்வார்கள்.இந்தச் சடங்கு பெரும்பாலும் பக்திப் பாடல்கள்;, சல்லரிச் சத்தம் நிறைந்திருக்கும். பெருந்தூரம் ஒன்றிணைந்த இந்த ஒன்று பட்ட உந்துதல் தரும் உளவியலை வேறு எந்தக் கடவுள் யாத்திரையிலும் இலங்கையிற் காண முடியாது. இந்த பாரம்பரியம் மிக நீண்டகாலமாகவே மக்களால் கடைப் பிடிக்கப் படுவதாக முதியோர்கள் சொன்னார்கள்.

முருக சடங்குகளில் திருப்புகழ் பாடுவதை முக்கியமாகக் கேட்கலாம். துயர் நோய் தீர்க்கும் பெருமை திருப்புகழுக்கு உண்டு என்பது தெரிந்த விடயம். பக்திப் பாடல்களினால் உண்டாகும் நன்மைகளை ஆய்வாளர்கள் சொல்லும்போது, சமய பாடல்கள் வல்லமை தருகிறது. வலியைக் குறைக்கிறது.மனநிலையை உற்சாகப் படுத்துகிறது என்கிறார்கள்.இதன் எதிரொலி இன்று மேற்கு ஐரோப்பிய மக்களையும் திருவிழாக்களில் இணைக்கப் பண்ணுகிறது.

‘மனக்கவலையேதுமின்றி உனக்கடிமையேபுரிந்து’ என்று ஆரம்பித்து முருகனைப் பக்தியால் நனைப்பதை அந்நியர்கள் ஆச்சரியத்துடன் கவனிப்பார்கள்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் அவன் கலியுகக் கந்தன்.காக்கும் கடவுள். தமிழர்கள் கல்வி நிலையில் உயரடைய உதபுவன். இங்கிலாந்தில் மேற்படிப்பை நாடும் மாணவர்களில் இலங்கைத் தமிழர் அறிவு நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள்,அதனால் முருகன் எங்களுக்கு அறிவு தருபவன். எத்துயர் வந்தாலும் நின்று பிடிக்கும் வல்லமை தந்த வீரவேலன். அந்நிய நாட்டில் முகம் கொடுக்கும் அத்தனை துன்பத்தையும் நீக்குகிறான் அதனால் அவன் ஒரு மாபெரும் உயர் சக்தி.
இயற்கையின் கடவுளாக உருவான முருகன், தமிழரின் காதற்கடவுள், போர்க்கடவுள்,திராவிடக் கடவுள். தமிழ் உணர்வுகளுடன் ஒன்றெனக் கலந்தவன். அவனுக்க உடல் வலி பாராமல் சடங்குகளைச் செய்கிறார்கள்

தமிழரின் உளம் சார்ந்த முருகவழிபாட்டுச் சடங்குகளை விளக்க திருமூலர் வாக்கை முன்னுதாரணம் காட்டலாம்.,’உள்ளமு; பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’; என்று சொன்னார்.
இப்படியான உளவியல் காரணிகளால் முருகன் உலகெங்கும் தமிழரின் வாழ்வில் இன்றியமையாத அற்புத சக்தியாக இடம் பிடித்திருக்கிறான்.

அவனுக்கான சடங்குகளை,உணர்வு நிலையுடன், அதாவது கொன்சியஸ் உடன் மீண்டும் மீண்டும் தங்கள் பக்தியின் குறியீடாயமைந்ததாக, தங்கள் உடலை மையமாய் அர்ப்பணித்து,இந்த பிரபஞ்ச அமைப்பில் இறைபக்தியில் திளைக்கிறான்.

.தமிழர்களின் முருகன் பற்றிய உளவியலை,

‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய்ப் பணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’

என்ற கந்தரனுபூத வாசகங்கள் அற்புதமாக விளக்குகின்றன.

நன்றி

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a comment