Posted in Tamil Articles | Leave a comment

புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்கண்

← கானல் தேசம் – வாசிப்பு அனுபவம்

புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்கண்

Posted on 30/11/2021 by noelnadesan

இராஜேஸ்வரி  பாலசுப்பிரமணியம் !

கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து இங்கிலாந்து வரையில் அயராது இயங்கும்  பெண்ணிய ஆளுமை !!

                                                                முருகபூபதி

இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும்  அயராது பங்காற்றியவர்     அவரது வாழ்வும் பணிகளும் குறிப்பிடத்தகுந்தன. விதந்து போற்றுதலுக்குரியன.

அத்துடன் எதிர்வினைகளை எதிர்கொண்டு, அவதூறுகளை துச்சமாக்கிய புகலிட இலக்கிய முன்னோடி.

பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து குடும்பக் கடமைகளைப் பார்த்தால் போதும் என்றும் – அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றும் சொல்லப்பட்டு, அவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு காலம் முன்பிருந்தது.


சமையல்கட்டு வேலை , பிள்ளைப் பராமரிப்புடன் கணவனின் தேவைகளை பூர்த்திசெய்யும் இயந்திரமாகவும் பெண்ணின் வாழ்வு முடக்கப்பட்டிருந்த காலம் மலையேறிவிட்டது என்று இன்னமும் சொல்ல முடியாதிருக்கிறது.


இத்தகைய பின்புலத்தில் எமது இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இயற்கை எழில் கொஞ்சிய அழகிய கிராமத்திலிருந்து – அதேவேளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்தாலும், கூத்துக்கலைகளில் முன்னிலை வகித்த தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் மக்களாக வாழ்ந்த அக்கரைப்பற்று கோளாவில் கிராமத்திலிருந்து – பல நாடுகளை தனது ஆளுகைக்குள் கட்டிவைத்திருந்த முடிக்குரிய அரசாட்சி நீடித்த வல்லரசுக்கு புலம்பெயர்ந்து சென்ற சகோதரி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களைப்பற்றி நினைக்கும்தோறும் எனக்கு வியப்பு மேலிடுகிறது.


புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடியான அவரது எழுத்துக்களை இலங்கையில் 1980 களில் படிக்கநேர்ந்தபொழுது, அவர் பற்றிய எந்த அறிமுகமும் எனக்கு இருக்கவில்லை. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இராஜேஸ்வரி எழுதி, அலை வெளியீடாக வந்திருந்த ஒரு கோடை விடுமுறை நாவல் வெளியீட்டு விமர்சன அரங்கிற்கு சென்றிருந்தேன்.


பெண்ணியவாதி நிர்மலா, மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் உட்பட சிலர் அங்கு உரையாற்றினார்கள். ஆனால், அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்புரை சொல்ல அந்த மண்டபத்தில் இராஜேஸ்வரி இருக்கவில்லை.
எனினும் அந்நாவல் வெளியீட்டிற்கு பக்கபலமாக இருந்து பதிப்பித்தவரும் தற்பொழுது லண்டனில் வதிபவருமான இலக்கிய ஆர்வலர் பத்மநாப அய்யர் கலந்துகொண்டதாக நினைவிருக்கிறது.


அன்று அந்த நாவலை வாங்கிச்சென்று உடனடியாகவே படித்து முடித்து நண்பர்களுக்கும் கொடுத்திருந்தேன். தற்பொழுது என்வசம் அந்த நாவல் இல்லை. அதுவும் என்னைப்போன்று எங்கெங்கோ இடம்பெயர்ந்திருக்கலாம். ஆனால், இன்றும் கோடை விடுமுறை லண்டன், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கும் வருடாந்தம் வந்துகொண்டிருக்கிறது.


ஓர் ஈழத்தமிழனின் புகலிட வாழ்வுக்கோலத்தை முதன் முதலில் இலக்கியத்தில் பதிவுசெய்த முன்னோடி நாவல் ஒரு கோடை விடுமுறை. இறுதியில் அந்நாவலின் நாயகன் தனது காரில் சென்று விபத்துக்குள்ளாகி மடிகின்றான். அது தற்கொலையா… விபத்தா …. என்பது மறைபொருளாகியிருந்தது.
வாழ்வில் மன அழுத்தம் என்பது என்ன..?  என்பதையும் அந்த நாவல் பூடகமாக சித்திரித்திருந்தது. அந்நிலைக்கு இன்று இலங்கையிலும் புகலிட நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் இலக்காகியிருக்கின்றனர்.


இராஜேஸ்வரியின் வாழ்வையும் பணிகளையும் கவனித்தால் அவர் நான்கு தளங்களில் ஒரேசமயத்தில் இயங்கியிருப்பதை அவதானிக்கலாம்.


படைப்பிலக்கியம், பெண்ணிய மனித உரிமைச்செயற்பாடு, ஆவணத்திரைப்படம், இவற்றுக்கு மத்தியில் தொழில்முறையில் தேர்ச்சிபெற்ற மருத்துவதாதி. ஒரு பெண் இவ்வாறு நான்கு தளங்களில் இயங்கியவாறு தனது பிள்ளைகளின் பெறுமதியான தாயாகவும் பேரக்குழந்தைகளின் பாசமுள்ள பாட்டியாகவும் தமது வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.

இவைகள் மட்டுமல்ல இன்னும் பல விடயங்களும் அவர்குறித்த வியப்பினை என்னுள் வளர்த்திருக்கிறது.
கோளவில் கிராமத்து தமிழ்ப்பாடசாலையில் எட்டாம் வகுப்புவரையும்தான் தொடக்க காலத்திலிருந்திருக்கிறது. இவரைப்போன்ற பெண்களும், ஊர் மக்களில் 90 சதவீதமானவர்களும் அருகிலிருந்த மீன்பாடும் தோனாட்டை அக்காலப்பகுதியில் சுமார் 18 வருடகாலமாக தரிசிக்காமலே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது அதிசயம்தான்.


இவருடைய தந்தையார் குழந்தைவேல்தான் இவரது ஆதர்சம். அவர் வைத்தியராகவும் கூத்துக்கட்டும் கலைஞராகவும் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தவராகவும் விளங்கியவர். அத்துடன் வேளாண்மை வயல்களை பராமரிக்கும் வட்டைவிதானையாராகவும் வாழ்ந்தவர்.
அவரிடமிருந்த கலை ஆர்வம், ஆளுமைப்பண்பு, வாசிப்பு அனுபவம் என்பன சிறுமி இராஜேஸ்வரிக்கு அன்றே இடப்பட்ட பலமான அத்திவாரமாக இருந்திருக்கவேண்டும்.


அவரது கிராம வாழ்க்கை, யாழ்ப்பாணத்தில் பெற்ற தாதியர் பயிற்சி, எழுதத் தொடங்கிய பருவம் – முதல் கவிதை வெளியான வீரகேசரி பத்திரிகையில் தாயார் யாருக்கோ வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்த கீரையை பறித்து சுற்றிக்கொடுத்ததினால் அந்தக்கன்னிப்படைப்பை தொலைத்துவிட்ட சோகம், யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பு முறையையும் அதன்கொடுமையையும் நேரில் பார்த்து கொதித்தெழுந்த தர்மாவேசம், இடதுசாரி சிந்தனையுள்ள கணவருடன் அவரது நண்பர்கள் மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் பற்றி உரையாடும்பொழுது , அவர்கள் கொழும்பில் வசிக்கும் கணவரின் நல்ல நண்பர்கள் போலும் என்று நம்பிக்கொண்டிருந்த அப்பாவித்தனம் – இலண்டனுக்கு புலம்பெயர்ந்த பின்னர் ஈடுபட்ட பெண்ணிய மற்றும் மனித உரிமைச்செயற்பாடுகள், திரைப்படத்துறையில் முன்னேற எடுத்துக்கொண்ட முயற்சிகள், அரசியல் செயற்பாட்டாளராக மாறியதும் பலரதும் அவதூறுகளை எதிர்கொண்டு அவற்றை வெற்றிகொண்ட ஆளுமை முதலான பல்வேறு விடயங்களையும் அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட விரிவான நேர்காணலை நண்பர் ஷோபா சக்தி தமது தோழர்களுடன் இணைந்து பதிப்பித்த கனதியான இலக்கியத்தொகுப்பு குவர்னிகாவில் படித்திருக்கின்றேன்.


யாழ்ப்பாணத்தில் நடந்த 41 ஆவது இலக்கியச்சந்திப்பில் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது பலரும் அறிந்த செய்தியே. ஆனால், இதில் இடம்பெற்றுள்ள ஷோபா சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு இராஜேஸ்வரி வழங்கியிருக்கும் பதில்களில் பல தகவல்கள் எனக்கும் மாற்றவர்களுக்கும் புதியனவே.


நான் அவரது தீவிர வாசகனாகியதும் கடிதத் தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். என்னையும் ஒரு வாசகனாக மதித்து தொடர்ந்து என்னுடன் கடிதத்தொடர்புகளை அவர் மேற்கொண்டார். அவரது நாவல்களை விரும்பிப்படித்தேன். தினக்குரலிலும் அவர் பற்றிய கட்டுரையை எழுதினேன்.
வடபுலத்தில் நிலவிய சாதிக்கொடுமைகள் பற்றிய இலக்கியப்படைப்புகளை ஏற்கனவே டானியல், தெணியான், கணேசலிங்கன், டொமினிக் ஜீவா  முதலானோரின் படைப்புகளில் படித்து தெரிந்துகொண்டிருந்தேன்.


ஆனால் – இராஜேஸ்வரி அந்தக்கொடுமைகளை யாழ்ப்பாணத்தில் தாதியாக பணியாற்றிய காலத்திலே நேரிலே கண்டு கொதித்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பெண்ணொருத்தி உயர் ஆதிக்க சாதி இளைஞனை காதலித்து திருமணம் செய்து அவனாலும் அவனது குடும்பத்தினாலும் வஞ்சிக்கப்பட்டு தீக்குளித்து இறந்தபொழுது அவளுக்கு சிகிச்சையளித்தவர் இராஜேஸ்வரி. ஆனால், அவளைக்காப்பாற்ற முடியாமல் போன அவலத்தை சொல்கிறார்:


நான் அறிந்தவரையில் எமது சமூகம் மட்டுமல்ல, கீழைத்தேய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சமூகங்களும் பெண்களை அடக்கியாள்வதில்தான் பெருமை பெற்றன. பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவும் சமையல்கட்டுக்குரியவளாகவும் ஆண்களின் தேவைக்கு ஏற்ப போகப்பொருளாகவும் இருந்தால் மாத்திரம் அதுவே பெண்மைக்கு இலக்கணம் என்று கருதிய ஆணாதிக்க சமுதாயத்தில் – ஒரு பெண் துணிந்து கற்று ஆசிரியராக, மருத்துவ தாதியாக, மருத்துவராக வந்துவிட்டால் ஓரளவு பொறுத்துக்கொள்கிறது. தப்பித்தவறி நாட்டியத்தாரகையாக மிளிர்ந்தாலும் ஏற்றுக்கொள்கிறது.


ஆனால் – அறிவுஜீவியாக பெண்ணியவாதியாக அதற்கும் மேல் ஆளுமையுள்ள படைப்பாளியாகவோ ஊடாகவியலாளராகவோ மாறிவிட்டால் அவளது பெண்மைக்கே களங்கம் விளைவிக்கும் அளவுக்கு தயங்காமல் அவதூறுகளை அள்ளிச்சொரியும். உயிருக்கும் உலை வைத்துவிடும். நானறிந்த பல பெண் படைப்பாளிகள் எதிர்கொண்ட இன்னல்கள் அறிவேன்.


ஸர்மிலா ஸய்யத், தஸ்லீமா நஸ்ரின், அருந்ததி ராய், கமலா தாஸ், வாசந்தி, திலகவதி,  சிவகாமி, தாமரை, மாலதி மைத்ரி, கருக்கு பாமா, லீனா மணிமேகலை…. இவர்களின் வரிசையில் இராஜேஸ்வரி.


அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அவர்கள் படைப்பு இலக்கியத்துறையில் தாக்குப்பிடித்தார்கள்.
பெண் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டார்கள். செல்வி (செல்வநிதி) , ரஜினி திரணகம, இசைப்பிரியா ஆகியோர் கொல்லப்பட்டார்கள்.


இராஜேஸ்வரி தமது கதைகளில் பெண்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கிய பெண்ணியவாதி. அத்துடன் எழுத்துப்போராளி. எழுதுவதுடன் தமது பணி ஓய்ந்துவிட்டதாக கருதாமல் ஒரு செயற்பாட்டாளராகவே (Activist) மாறியவர்.
இந்த Activist களினால் இவர்களுக்கும் கஷ்டம், மற்றவர்களுக்கும் கஷ்டம்தான் என்று ஒரு தடவை எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டிருந்தார்.


ஏற்கனவே நிம்மதியாகவிருந்த அக்கரைப்பற்று இனமோதல்களினால் உருக்குலைந்த அவலம் நன்கறிந்தவர் இராஜேஸ்வரி. தமது ஒரு உடன்பிறப்பை ஆயுதப்படைகளிடம் பறிகொடுத்தவர். அந்தத்துயரத்தால் சடுதியாக மரணித்த தாயாரின் இழப்பை சந்தித்தவர். மற்றும் ஒரு தம்பியான விமல் குழந்தைவேலை ஆயுதப் படை கைதுசெய்து பின்னர் விட்டது.
(விமலும் படைப்பிலக்கியாவதி. நான்கு சிறுகதைத்தொகுதிகளையும் வெள்ளாவி, கசகறணம் முதலான நாவல்களும் எழுதியிருப்பவர்.)


இராஜேஸ்வரி, இலண்டன் வாழ்க்கையில் சுகபோகம் அனுபவிக்காமல் எமது மக்களின் குரலாக இயங்கினார். இலங்கையில் நிகழ்ந்த இனவாத வன்செயல்களை அம்பலப்படுத்தி – மூவின மக்களின் ஒற்றுமையையும் வலியுறுத்தி இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் முதல் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வரையில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகித்தவர். இலங்கையின் மனித அவலங்களை சித்திரிக்கும் ஆவணப்படங்கள் இயக்கினார். தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்து அகதிகளின் முகாம்களுக்குச்சென்று படங்களுடன் திரும்பி லண்டனில் கண்காட்சி வைத்தார். கருத்தரங்குகள், கண்டன ஊர்வலங்களில் பங்கேற்றார்.


இலங்கையில் நீடித்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இவர் இயக்கிய ஆவணப்படத்தை, இன்று முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தப்பேரழிவை அம்பலப்படுத்திய செனல் 4 தொலைக்காட்சி அன்று இவரது அந்த ஆவணப்படத்தை நிராகரித்திருக்கிறது.


இலங்கையில் நீடித்த போர் எமது தமிழ் மக்களையும் தாயகத்தையும் இறுதியில் எங்குகொண்டுசென்று நிறுத்தும் என்பதை அறிந்துவைத்திருந்த தீர்க்கதரிசி அவர். அதனால் அன்டன் பாலசிங்கம் முதல் இலங்கை அரசுத்தலைவர்கள் வரையில் அவர் தனித்தும் பலருடனும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தார்.


யார் எக்கேடு கெட்டால் என்ன…. தனக்கென்ன வந்தது. தானும் குடும்பமும் லண்டனில் நன்றாக வாழ்ந்தால் போதும் என்றிருந்தவர் அல்ல அவர். காற்றோடு பேசிய பேச்சாளர் அல்ல. கவிதை பாடித்திரிந்தோ பட்டிமன்றம் நடத்தியோ  புகழ்தேடியவர் அல்ல. வீதிக்கு இறங்கி இயங்கினார்.
ஆனால், இவர் போன்றவர்களின் ஆலோசனைகளை ஆட்சித்தலைவர்களும் அதிகாரத்திலிருந்தவர்களும் கேட்கவில்லை. ஆயுதம் ஏந்தியவர்களின் ஆலோசகர்களும் கேட்கவில்லை. ஒரு தரப்பு ஆருடத்தையும் ஆயுதத்தையும் மற்றத்தரப்பு ஆயுதத்தையும் மக்களின் கேடயத்தையுமே நம்பியது.


பேச்சுவார்த்தை நடத்தச்சென்ற இவருக்கு அவதூறு சுமத்துவதற்கு மட்டும் பலர் பின்னிற்கவில்லை. அவர் ஆயுதம் கேட்டுச் செல்லவில்லை. பணம் கேட்டுச்செல்லவில்லை.
இவை இரண்டையும் ஆட்சி அதிகாரங்களிடம் கேட்டுப்பெற்றவர்கள் தமிழ் இனத்தை குத்தகை எடுத்து குடிமுழுகிப்போனார்கள்.


இராஜேஸ்வரி அப்பொழுதும் சோர்ந்து போய்விடவில்லை.
தமது நண்பர்கள் சிலருடன் இணைந்து முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் பெண்போராளிகளினதும் கணவரை இழந்து தவித்த விதவைத்தாய்மாரினதும் கண்ணீரைத் துடைக்கச்சென்றார்.
முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண்பிள்ளைகளின் தனிப்பட்ட தேவைகளுக்கானவற்றை எடுத்துச்சென்று வழங்கியபொழுது அவர்களுக்கு உதட்டுச்சாயமும் நகப்பூச்சும் வாசனைத் திரவியங்களும் எடுத்துச்சென்று கொடுத்ததாக அவுஸ்திரேலியாவில் தமிழ்த்தேசியம் பேசிய ஒரு தமிழ் வானொலியில் எள்ளிநகையாடினார் அந்த வானொலியை நடத்தியவர். அவருக்கு ஒத்து ஊதினார்கள் சில பரதேசிகள்.


காலம் அதற்கெல்லாம் சரியாகப்பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது.
இராஜேஸ்வரி, தமது இலக்கியப்படைப்புகள் திரைப்படத்துறை முதலானவற்றில் மாத்திரம் முழுமையாக கவனம் செலுத்தியிருந்தால் எமது தமிழ் சமுதாயத்திற்கு ஒரு அபர்ணா சென்னோ, ஒரு மீரா நாயரோ, ஒரு தீபா மேத்தாவோ கிடைத்திருப்பார்.

ஆனால் , அவர் தமது பணிகளை எமது தேசத்து பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம், குறிப்பாக பெண்கள் பக்கம் தொடர்ந்தார். உண்மையான படைப்பாளி – பத்திரிகையாளர் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்பார். அதற்கு சிறந்த முன்னுதாரணம் இராஜேஸ்வரி.


தமிழ்நாட்டில் மூத்த இலக்கிய விமர்சகர் கோவை ஞானி, ராஜம்கிருஷ்ணன், பாலுமகேந்திரா, சுஜாதா உட்பட பலருடன் ஆரோக்கியமான நட்புறவைப்பேணியவர். ஜெயகாந்தனுடன் கருத்து ரீதியாக மோதியிருப்பவர்.


திரைப்படத்துறையில் இவருக்கிருந்த ஆர்வத்தை அறிந்து இயக்குநர் ராஜீவ் மேனனிடம் இவரை அனுப்பினார் சுஜாதா. ராஜீவ் மேனன், சங்கர் முதலான பல இயக்குநர்களின் படங்களுக்கு வசனம் எழுதியவர் சுஜாதா.
ஆயினும் இராஜேஸ்வரியின் வாழ்வில் திரைப்படத்துறையைவிட பாதிக்கப்பட்ட மக்களின் துயரமே அதிகம் தாக்கத்தை செலுத்தியது. அதனால் தமது எழுத்தையும் குரலையும் செயற்பாடுகளையும் இம்மக்கள் பக்கமே திசை திருப்பினார்.


அமைதியாக இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்துடன் துலங்கிய ஒரு கிராமத்தின் சராசரிப் பெண்ணின் கனவுகள், பனியில் மூழ்கும் தேசம்சென்ற பின்னரும் தொடர்ந்தன. அவற்றுள் எத்தனை நனவாகின…? எத்தனை நிராசையாகின…? என்பதை அவரது மனச்சாட்சியிடம்தான் கேட்க முடியும்.
அவரை நான் அவுஸ்திரேலியா வந்தபின்னர்தான் நேருக்கு நேர் சந்தித்தேன். அதுவரையில் அவரது படைப்புகளும் கடிதங்களும்தான் என்னுடன் பேசிக்கொண்டிருந்தன.
அவர் அவுஸ்திரேலியா வந்திருந்த ஒரு சமயம் அவரை சிட்னியில் நடந்த எமது எழுத்தாளர் விழாவில் உரைநிகழ்த்த சந்தர்ப்பம் வழங்குமாறு அங்கிருந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கேட்டபொழுது தயக்கம்தான் மௌனப்பாஷையாக வந்தது.


ஒரு பெண் மீது அந்த ஆண்களுக்கு வந்த பயம் ஆச்சரியமானது. எனினும் அவரை அன்று ஒரு கருத்தரங்கிற்கு தலைமை ஏற்கச்செய்தேன். இங்குள்ள SBS வானொலியும் அவரைப்பேட்டி கண்டது.
ஆயினும் அவரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக்கேட்ட கேள்விகளாகவே இருந்தன.


பொதுவாகவே Activist களுடன் நேர்காணல் செய்பவர்கள், அவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியே கேள்வி கேட்பது வழக்கமாகிவிட்டது. இது கேள்வி கேட்பவர்களுக்கான திருப்தியா…? அல்லது அவதூறு பரப்புபவர்களை திருப்திப்படுத்தும் முயற்சியா…?


இராஜேஸ்வரி ஒரு கலகக்குரல். துணிவுடன் எதனையும் எதிர்கொள்ளும் திராணியுள்ள ஆளுமை. ஆனால், அவருடன் பழகினால் இந்தக்குழந்தையிடமா இவ்வளவு தர்மாவேசம் என்பது ஆச்சரியமாக இருக்கும். அவரது எளிமை, தன்னம்பிக்கை, தளராத முயற்சி என்பன முன்மாதிரியானவை.


ஜெயகாந்தன் மறைந்தபொழுது, அவர் நீண்ட காலம் எழுதாமல் இருந்தமையினால் – அவர் என்றோ மறைந்துவிட்டார் என்ற தொனியில் சிலர் பேசினார்கள். எழுதினார்கள். அவ்வாறு கருதி திருப்திப்பட்டுக்கொண்டனர்.

அதுபோன்று இராஜேஸ்வரியும் எழுதாமல், இயங்காமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களின் திருப்திக்காக ஓய்ந்துவிடவில்லை. அதுவும் அவரது முன்மாதிரி என்பேன்.
இராஜேஸ்வரி தொடர்ந்தும்  தன் பணி தொடருகின்றார். சமகால மெய்நிகர் அரங்குகளில் இணைந்துகொள்கிறார்.

அவுஸ்திரேலியா கன்பரா தமிழ்க்களஞ்சியம் ( Tamil Trove ) ஏற்பாட்டில்  எதிர்வரும் 04 ஆம் திகதி ( 04-12-2021 ) சனிக்கிழமை மெய்நிகரில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைகளில் பெண்ணிய வெளிப்பாடு என்ற தலைப்பில் புது டில்லியிலிருந்து எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாசந்தி, தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியை பிரேமா, இங்கிலாந்திருந்து எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான நவஜோதி யோகரட்ணம் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

மெய்நிகர் இணைப்பு விபரம்:  

          04-12-2021 சனிக்கிழமை

           அவுஸ்திரேலியா  இரவு 8-00 மணி

       இலங்கை – இந்தியா  மதியம் 2-30 மணி

    இங்கிலாந்து – அய்ரோப்பா  முற்பகல் 9-00 மணி

Join Zoom Meeting


https://us02web.zoom.us/j/87065831890?pwd=MGlHNnpPYmhVNEk1RW9JU1MvTEVGQT09

Meeting ID: 870 6583 1890    Passcode: 332130

Share this:

Posted in Tamil Articles | Leave a comment

நேற்றைய மனிதர்கள்:Posted on 08/11/2021 by noelnadesanஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதிமதிப்பீடு :நடேசன்

நேற்றைய மனிதர்கள்:Posted on 08/11/2021 by noelnadesanஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதிமதிப்பீடு :நடேசன்புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும் தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர். புலம்பெயர்ந்த தனது புற, அக அனுபவங்களையும், மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள தமிழர்கள் , தமிழர்கள் அல்லாதவர்களது, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனது கதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளார். மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் செல்லும் திசையை அறிய அவரது எழுத்துகள், திசைக்கருவியாக எமக்கு உதவும்.அ. முத்துலிங்கம், வெளிநாட்டு வாழ்க்கையை எழுதிய போதிலும், அவர் அந்த சமூகங்களிற்கு வெளியே நின்று ஒரு பார்வையாளனாகவே எழுதியுள்ளார்.ஓவியனின் உதாரணத்தில் சொல்வதென்றால் அ. முத்துலிங்கம் லாண்ஸ்கேப் சித்திரத்தைச் செதுக்கி பல வர்ணமாக அவரது வார்த்தைகளால் நமக்களித்துள்ளார். ஆனால், இராஜேஸ்வரி தருவது அப்ஸ்றாக்ட்டான ஓவியம். முதற் பார்வையில் ஒழுங்கற்றதாகத் தெரியும். வான்கோவின் வயல் அறுவடை- அ முத்துலிங்கம், பிக்காசோவின் திராட்சை அறுவடை- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இரண்டு சித்திரத்தையும் நீங்கள் பார்க்கவேண்டும். எழுத்துமுறையில் முத்துலிங்கம் யதார்த்த (Realistic) எழுத்தில் நிற்கிறார். ஆனால் இராஜேஸ்வரியின் எழுத்து நவீன பாணி(Modern)பிக்காசோவின் திராட்சை அறுவடைவான்கோவின் அறுவடைஇதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சொல்ல வேண்டுமானால், தமிழர்களது ஐந்து திணைகளும் நிலத்தைக் குறிப்பதாகத் தவறாகக் கட்டுமானம் செய்து பேசப்பட்டபோதும், அவை தமிழர்களது மனதின் நிலைகளைப் பேசுகின்றன. அதாவது அக உணர்வு அல்லது ஒழுக்கம் என்பனவற்றைக் குறிக்கின்றன. அந்தவகையில் இந்தக் கதைகள் புலம் பெயர்ந்த தமிழரின் அகத்திணையை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. நேற்றைய மனிதர்கள் என்ற இராஜேஸ்வரியின் இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் நான்கு கதைகள் இலங்கையை பின்னணியாகவும், ஏனைய எட்டும் இங்கிலாந்தைக் கதைக்களமாகவும் கொண்டவை.பெரும்பாலான இங்கிலாந்துக் கதைகள்- புலம் பெயர்ந்தவர்கள்- தங்களை, தங்கள் குடும்பத்தினரை, மனைவிமாரை, கணவன்மாரை அகத்திரையில் பார்க்கும் தரிசனங்களின் தொகுப்பு. பொதுவாக உபகண்டத்தில் ஆண்- பெண் உறவுகள் காதலுக்காக அமைவதில்லை. ஆனால், அதற்காக இளம் மனங்களில் காதல் ஏற்படாது போவதில்லை. அவை முளை விட்டு வெளிவந்த சில காலத்தில், பெற்றோர் மற்றும் சமூகத்தால், சாதி , அந்தஸ்து அல்லது உறவு என்ற பெயர்களில் தீ வைத்துக் கருக்கப்படும். ஆனால், அதன் வேர்கள் தொடர்ந்து வாழும். அந்த வேர்களே இங்கு இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் இலக்கிய கூறுகளாகும் (Literary Themes) எங்கோ பார்த்தேன், ஞாபகமில்லை: இந்தியாவில் ஐந்து வீதக் காதல்கள் மட்டுமே திருமணத்தில் முடிகிறது . இலங்கையில் சிங்களவர் மத்தியில் அதிகமாகவும், பாகிஸ்தான்- வங்கதேசத்தில் குறைவாகவும் இருக்கலாம் என்பது எனது ஊகம்.தென்னாசிய சமூகத்தில் கல்யாணத்தின் நோக்கம் இனவிருத்தியே. உடலுறவில் ஈடுபட்டு குழந்தைகள் பிறந்து, வளர்ந்த பின்பு, மத்தியகாலத்தில் குழந்தைகளது வாழ்வையும், தங்கள் வாழ்க்கையையும் திரும்பிப்பார்க்கிறார்கள். அந்த வாழ்க்கையின் நினைவுகள், சுமை வண்டியை இழுத்தபடி சந்தைக்கு வந்த இரட்டை மாடுகள், இறுதியில் களைத்த பின்பு நிழலில் படுத்து அசைமீட்கும் நினைவுகளாக அவர்களுக்கு இருக்கும். அப்படியான மனிதர்களே நேற்றைய மனிதர்களாக இந்த சிறுகதைத் தொகுப்பின் பக்கங்களில் உலா வருகிறார்கள். அவர்களின் மனங்களில், நாம் இதுவரை ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தாலும் பரஸ்பர நேசம், பாசம், காதல் உணர்வுகள் இருந்தனவா? உண்மையான உணர்வுகள் எங்கள் வாழ்வில் மிஞ்சியதா?பல கேள்விகள் நிற்கும்.சிலர் உடலுறவை ஒரு சமையல் வேலைபோல் முடித்து, நன்றாகச் சோப்பு போட்டுக் குளித்துவிட்டு, வேறு அறையில் போய் படுப்பார்கள்.சொந்த நாட்டில் தொடர்ந்து வாழ்பவர்களுக்குப் பாரம்பரியமாக பிள்ளைகளுடன் ஒன்றாக வாழ்வது, பேரக்குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற விடயங்களால், அவர்களது பிற்கால வாழ்வுகளின் வெற்றிடங்கள் நிறைக்கப்படுகிறது. ஆனால், புலம் பெயர்ந்து இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளில் வாழும்போது, அவர்களது குழந்தைகள் பிரிந்து, சுதந்திரமாக தாங்கள் வாழும் நாட்டிற்கேற்ப காதல், திருமணம், பொருளாதார விடயங்களில் முடிவெடுத்து, தன்னிச்சையாக ஈடுபடுகிறார்கள் .மேற்கு நாடுகளில் நிலஉடமை மனப்பான்மையில், பெற்றோர்கள் மின்சாரமற்ற உயர்மாடிக் கட்டிடத்தின் லிஃப்ட்டில் அடைபட்டு, வெளிவராது இருக்கும்போது, பிள்ளைகள் முதலாளித்துவ நிலைக்கு இலகுவாக வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் சில பெற்றோர், தங்களது பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும் சொந்த நாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் அல்லது இடம் பெயர்ந்து விடுவார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசியல் நிலை காரணமாக, அகதிகள்போல் ரிட்டேன் ரிக்கட்டை கிழித்தெறிந்தவர்கள் திரும்பிப்போக முடியாது.ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 500 வருடங்கள் படிப்படியாக நடந்த சமூக பொருளாதார, தனிமனித உறவுகளில் மாற்றங்கள், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் ஒரு தலைமுறையிலே நடந்துவிடுகிறது.இதில் விசேடமென்னவென்றால், பெண்கள் அவர்களுக்குக் இயற்கையின் கொடையான தன்மையால் மாற்றங்களைச் சமாளிப்பார்கள். ஆண்கள் இதுவரையும் வீட்டில் கோலோச்சி, கோனாக இருந்தவர்கள், அடிமையின் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதுவரையும் பெற்றோரால் – பாலூட்டி, சீராட்டி, பாராட்டி, வளர்க்கப்பட்ட குழந்தைகள், இந்த இரு அவுஸ்திரேலிய கங்காருகள் (மாசூப்பியல்கள்) ஏன் பாலூட்டிகளாக பரிணாமம் அடையவில்லை! இவ்வளவு காலம் இந்த நாடுகளில் வாழ்ந்து வருகிறார்களே! வியப்போடு பார்க்கிறார்கள்.இந்தத் தொகுப்பில் பல கதைகள் இரண்டு தலைமுறைகளின் பார்வையின் முரண்பாடாகும். பெண்களின் பார்வையில் எழுதப்பட்ட சில கதைகளின் ஆழம், மற்றும் துண்டுகளாக வருவது, சில நேரத்தில் புரிவது கடினமாகக் கூட இருக்கலாம். மனித நினைவோட்டங்கள் சங்கிலித் தொடராக வருவதில்லை.முதலாவது கதையான கங்கிறீட்– மத்திய வயதான பெண் தனது நினைவலைகளை மீட்கும் நவீனத்துவமான கதை (Modern genre) . இளம் வயதில் பெண்களின் மார்பகத்தை இளனி, மாங்காய், குரும்பை, காட்போட் எனப் பல பெயர்களில் ஒரு காலத்தில் அழைப்போம். அதனால் அந்தப்பெண்ணின் மனம் எவ்வளவு பாதிப்படைந்திருக்குமென்று நினைப்பதில்லை. அப்படி பெண்ணை எள்ளி நகையாடி காங்கிறீட் என அழைத்தவனால் மனவைராக்கியம் ஏற்பட்டு, இங்கிலாந்து சென்று படித்த பெண் பிற்காலத்தில் அவனுக்குப் பண உதவி செய்வதாகக் கதை செல்கிறது. அதைப் புரிந்து கொள்ளமுடியாத பாத்திரமாக அவளது கணவன். கதையில் முக்கியமான விடயங்கள் நினைவோடையில் சிறிய துண்டுகளாக வந்து விழுகின்றன. (உதாரணம் Mrs. Dalloway in bond street by Virginia Woolf)உடலொன்றே உடைமையாக– என்ற கதை நண்பன் ஒருவனுக்கு வீட்டில் இருப்பதற்கு அறையொன்றைக் கொடுத்துவிட்டு, அவனுக்கும் தனது மனைவிக்குமிடையே ஏதும் தொடர்பு உள்ளதா என ஆய்வு செய்து அங்கலாய்க்கும் ஆணின் பார்வையில் மனவோட்டங்களாக வருகிறதுஇந்தத் தொகுதியில் மிகவும் ரசித்துப் படித்தது: காதலுக்கு ஒரு போர் என்ற சிறுகதையே . இதன் களம் இலங்கையில் கிழக்கு மாகாணம். இந்தக் கதையில் உள்ள நகைச்சுவை நம்மைக் கொரோனாவாகத் தொற்றும். கதையைப் படித்து முடிந்தவுடன் கிழக்கு மாகாணத்தின் நிலக் காட்சி, பண்பாடு, அங்கிருக்கும் சில மூடநம்பிக்கைகள் என்பவற்றுடன் அக்காலத்து அரசியலும் உங்களில் அழுத்தமாகப் படியும் . கதையைப் பற்றி நான் இங்கு கோடு காட்டப்போவதில்லை. நிச்சயமாக மறக்க முடியாத கதையாகும்.ஹிட்லரின் காதலி – ஹிட்லரின் கடைசி நாட்களை, அவனது செல்ல நாயான ப்லோண்டி (Blondi) என்ற நாயின் பார்வையிலும், ஆசிரியரின் பார்வையிலும் கலந்து எழுதப்பட்ட வரலாற்றுக் கதை . ப்லோண்டிக்குத் தரப்பட்ட சயனைட் தரமான விஷமா எனக் கொடுத்துப் பரீட்சித்தபோது அது இறக்கிறது. அதேபோல் ஹிட்லரின் காதலியும் இறக்கிறாள். அதன்பின்பு ஹிட்லரின் தற்கொலைஎனக் கதை வளர்கிறது . வரலாற்றைப் புனைவாகவும், நாய் ப்லோண்டியை முக்கிய கதை சொல்லும் பாத்திரமாகவும் வரும்போது கதை சுவைக்கிறது.நேற்றைய மனிதர்கள்- என்ற புத்தகத் தலைப்புக்குரிய கதை. காதலற்று பெற்றோரால் திருமணம் செய்விக்கப்பட்டு, லண்டனில் வாழும் இலங்கைத் தம்பதிகள், தங்கள் பிள்ளைகள் சுயமாக வேறு இனத்தவரை அந்தஸ்துகள் பார்க்காது காதலிப்பதையும், திருமணம் செய்யவிருப்பதையும் அரைகுறை மனதோடு சம்மதிக்கும் கதை.மேதகு வேலுப்போடி என்ற 2006 இல் வீரகேசரியில் வெளிவந்த கதையில், அந்த ஊரையே தனது மந்திரத்தால் கட்டுப்படுத்தி, பயமுறுத்தி, பல கொடுமைகள் செய்த பூசாரி வேலுப்போடி, இரத்தம் கசிய மணலில் வீழ்ந்து கிடக்கிறார் என இரண்டாம் பந்தியில் தொடங்குவது, முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கிடந்ததாக இராணுவத் தளபதி கமல் குணரத்தின ரோட் ரு நந்திக்கடலில் (Road to Nandikadal) எழுதியதை நினைவூட்டியது. இந்தக் கதை கிழக்கு மாகாணத்து மந்திரவாதியினது கதை. பேய்களில் எத்தனை வகை , எப்படி வசிய எண்ணை எடுப்பது எனப் பல விடயங்கள் உள்ளன. கதையின் வெளிவந்த காலம்- விடுதலைப்புலிகளின் உள்வீட்டுப்பிளவு நடந்த காலம்டார்லிங்– என்ற கதை காதலற்ற திருமணத்தின் விளைவுகள். வாழ்நாள் முழுவதும் கடமைக்காக வாழும் புலம் பெயர்ந்த தம்பதிகளது கதை. 60 வயதான தனது மனைவியை ஆங்கிலேயன் டார்லிங் என்பதற்காகப் புகார் எழுதிய கணவனாக விரிந்து, இலங்கையில் நடந்த அரசியல் காட்டிக் கொடுப்புகள் என மீண்டும் லண்டனில் வந்து கதை நிற்கிறது.தொலைந்துவிட்ட உறவுசாதியால் பிரிக்கப்பட்ட காதலைப் பிரிந்த ஆண், தாய் சொன்ன பெண்ணைத் திருமணம் செய்து முப்பது வருடங்கள் அன்னியமாக வாழ்ந்து வந்த கதை. இருவரது வாழ்வில் மீண்டும் காதல் வருகிறது. காதல் என்பது தென் ஆசியச் சமூகத்திற்கு ஆயுத முனையில் நடத்தும் வழிப்பறி கடத்தல் போன்ற வன்செயலாகப் பார்க்கப்படுகிறது – இது ஒரு அசல் புலம் பெயர்ந்த வாழ்வை சித்திரிக்கும் கதை .அப்பாவின் இந்துமதி – மகனது நினைவுகளில் சொல்லப்படும் வித்தியாசமான காதல் கதை. நீண்ட கதையை கவனமாக வாசிக்கும் போது புதிர், கொடிக்கம்பத்தில் சுற்றப்பட்ட சீலையாக அவிழ்கிறது. இறுதிப்பக்கங்கள் வரையும் இந்துமதிக்கு என்ன நடந்தது என்பது மறைபொருளாக வைக்கப்படிருகிறதுமக்டொனல்டின் மகன் என்ற கதையும் இதே போன்றது. தமிழ், சைவ ஆசாரங்களுடன் வளர்ந்தது மட்டுமல்ல , லண்டனில் அவற்றை வளர்க்க உதவியவரது மகள், பிணத்தை எரிக்கும் மக்டொனால்டின் (Funeral Director) மகனைத் திருமணம் செய்வதை ஏற்கமுடியவில்லை. அவரது அங்கலாய்ப்பே இந்தக் கதை.முகநூலும் அகவாழ்வும் – இலங்கையில் நடக்கும் கதை . ஆனால் இங்கும் காதலைக் கருக்கியபின் வேறு கல்யாணம் செய்து வாழ்ந்தவர் , தனது மகள் காதலித்து திருமணம் செய்ததைத் தாங்காது தனது மன உழற்சியைத் தவிர்க்க முகநூலில் மூழ்கி இருப்பது கதையாகிறது. விரக்திகள், விட்டவைகள், மற்றும் கைதவறியவைகளை நினைத்து உழல – அல்ககோல், சிகரெட், சூதாட்டம், போதை வஸ்து என்பவைபோல் முகநூலும் உள்ளது என்ற நுண்ணிய உணர்வை வெளித்தரும் கதையிது.பேயும் இரங்கும் என்ற இறுதிக் கதை இலங்கையின் கிழக்கு மாகாணக் கதை. பேய் மனிதர்களிலும் நேர்மையாக நடந்துகொள்ளும் என்பதைப் புரியவைக்கும் சிறிய, ஆனால் எனக்குப் பிடித்த கதை.இறுதியாக, இந்தச் சிறுகதைத்தொகுதிக்கு ஒரு சிறு குறிப்பு எனப் பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு எழுதியது, இராஜேஸ்வரியை பற்றியதாகவே இருக்கிறது . இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியதிற்கு அறிமுகம் தேவையில்லை. அவரது சிறுகதைகளே இங்கு பார்க்கப்பட்டிருக்கவேண்டும். நாவல் சிறுகதைகளுக்கு முன்னுரை எழுதும்போது அந்தப் படைப்பே முக்கியம். அதனாலே பலர் புனை பெயரில் எழுதுகிறார்கள். ஜோர்ஜ் எலியட் என்ற ஆங்கில பெண் எழுத்தாளரை (மேரி ஆன் எவன்ஸ் ) பலகாலமாக ஆண் என்றே எழுத்துலகம் நம்பியிருந்தது. இந்நூலின் பதிப்பாசிரியர் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை அறிமுகப்படுத்துகிறார் . அதுவே போதுமானது . சிறுகதைகளின் பெரும்பகுதி பெண்களின் மனநிலையில் பெண்குரலாகச் சொல்லப்படுகிறது . அதைப் பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு எழுதியிருந்தால் இவை பெண்ணிய இலக்கியத்தின் கூறுகளாகப் பார்க்கப்பட்டிருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.இலங்கையில் இலக்கிய நூல்களைத் தரமாக பதிப்பிக்க முடியும் என்பதற்கு மகுடம் பதிப்பாக வந்த நேற்றைய மனிதர்கள் உதாரணமாகிறது.நன்றி – திண்ணை- இணையம்—0—

2M S Rajagopal and Rajasingam Piramila

Posted in Tamil Articles | Leave a comment

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் byMr.Kandasamy

Thank you Mr.Kandasamy R10 hrs · கிழக்கிலங்கை கோளாவில் கிரமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தொடர்ந்தும் தீவிரமாக எழுதிவரும் முக்கியமான எழுத்தாளராக அவதானித்து வருகின்றேன். எட்டு நாவல்களையும் ஆறு சிறுகதைத் தொகுதிகளையும். மருத்துவத் துறை சார்ந்த இரண்டு மருத்துவ நூல்களையும், முருகன் வழிபாடு பற்றிய மானிடவியல் ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர். லண்டன் SOAS ஆய்வு நிறுவனத்தில் மருத்துவ மானிடவியலில் எம்.ஏ. பட்டமும், திரைப்படம், வீடியோ பயிற்சியில் பி.ஏ. சிறப்புப் பட்டம் பெற்ற இவர் ‘விபவி’ இலக்கிய விருது. சிறந்த சிறுகதைக்கான ‘சுபமங்களா’ இதழின் பரிசு, அக்கரைப்பற்று எழுத்தாளர்களால் வழங்கப்பட்ட கலைவாணி விருது, லில்லி தேவசிகாமணி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது போன்ற இலக்கிய விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.மட்டக்களப்பில் கோளாவில் என்ற அழகிய கிராமத்திலிருந்து முதன் முதலாக படிப்பதற்கு வெளியில் சென்ற பெண் இவர்தான் எனக்கூறும் ராஜேஸ் பாலா யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தாதிப்பாடசாலையில் பயின்றுகொண்டிருந்த வேளை எழுத்தாளர் நந்தி விரிவுரையாளராக அமைந்தமை தனக்கு இலக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்ததாகக் கூறுகின்றார். யாழ்ப்பாணத்த்தில் அவரது கணவர் பாலசுப்ரமணியம் அவர்களின் தொடர்பால் முற்போக்கு இலக்கியங்கள் அவருக்கு அறிமுகமாகின. சாதியக் கொடுமையால் எரிகாயங்களுக்கு இலக்காகிப் பரிதாபமாய் இறந்துபோன ஒரு கொடுமையை மையமாக வைத்து ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற சிறுகதை செ.யோகநாதன் நடாத்திய ‘வசந்தம்’ என்ற பத்திரிகையில் பிரசுரமாகிருந்தது. டொமினிக் ஜீவா நடாத்திய மல்லிகையிலும் ‘எழில்நந்தி’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்திருக்கின்றார்.‘கோடை விடுமுறை’ என்ற அவரது முதல் நாவல் ‘அலை’ வெளியீட்டினரால் பிரசுரம் பெற்று தனக்கு எழுத்துலகில் ஒரு அந்தஸ்த்தைத் தேடித் தந்தது என்று கூறும் ராஜேஸ்வரி லண்டன் முரசு என்ற என்ற சஞ்சிகையில் தனது சிறுகதைகளையும், தொடர் நாவல்களையும் பிரசுரித்து சதானந்தன் தனது இலக்கிய வளர்ச்சியை ஊக்கப்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களையும் தன்னை ஊக்கப்படுத்திய முக்கிய ஆளுமைகளில் ஒருவர் என்று ராஜேஸ்வரி கூறுகின்றார்.இலங்கையின் இன ஒடுக்குதலிலிருந்து தப்பிää இங்கிலாந்தில் வாழ நேர்ந்த தமிழ் இளைஞர்களின் கருத்து நிலைப்பாட்டிலிருந்து ஒரு அரசியல் நாவலாக ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவலை எழுதினார். 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து லண்டனிற்கு வந்து குவிந்த தமிழ் அகதிகளின் மூலம் அவர் அறிய நேர்ந்த பிரச்சினைகளை முன்வைத்து அவர் எழுதிய அரைகுறை அடிமைகள்ää சுற்றி வளைப்பு போன்ற அவரது படைப்புக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. லண்டனில் வாழும் தமிழ் அகதிகளின் யதார்த்தமான பிரச்சினைகளை மையப்படுத்தி ‘வளர்மதியும் வோஷிங்மெஷினும், ‘ரோசா லக்சம் பேர்க்வீதி;’ போன்ற கதைகள் பெரிதும் சிலாகிக்கப்பட்டன. இலங்கையில் தமிழ் இயக்கங்களிடையே நடைபெற்ற சகோதரப் படுகொலைகளையும், இயக்கங்களின் வன்முறைகளையும் பின்னணியாகக் கொண்டு ‘ஒரு சரித்திரம் சரிகிறது’, ‘நேற்றைய சிநேகிதி’, ‘இரவில் வந்தவர்’, ‘ஆனா ஆவன்னா’, ‘அட்டைப்பட முகங்கள்’ போன்ற சிறுகதைகளை எழுதியிருந்தார்.‘இந்தியா டுடே’ என்ற சஞ்சிகையில் தொடர்ச்சியாக ‘விருந்தினர் பக்கம்’ என்ற பிரிவில் எழுதி வந்திருக்கிறார். கோவை ஞானி ராஜேஸ்வரியின் இலக்கிய முயற்சிகளுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார். தமிழகத்தில் அவரது நூல்களை வெளிக்கொணர்வதில் செ.கணேசலிங்கன் அவர்கள் பல உதவிகள் செய்துள்ளார்.இவரது இலக்கியப்படைப்புகளில் மனிதநேயம், ஜனநாயகப் பண்புகள் ஆகியவற்றையே முன்னெடுத்துவரும் ராஜேஸ்வரி குறுகிய இனவாதத்தையும், பிராந்திய வாதத்தையும் மேவி இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தை மேலும், மேலும் தமிழ் மக்கள் அழிவுப்பாதையில் செலுத்தி விடாமல் அவர்கள் வலிமையான கௌரவம் மிகுந்த சமூகத்தினராக வளர்த்து எடுக்கவேண்டும் என்ற நோக்கிலுமே எழுத்துக்கள் உருவாக் வேண்டும் என்பதில் உறதியாக இருந்திருக்கிறார். இலக்கியத்திலும் வாழ்விலும் நேர்மையாகச் செயற்படுவதை தத்துவமாக்கிக் கொண்டவர் ராஜேஸ்வரி;. புகலிடத்தில் தாங்கள் சொகுசுடன் வாழ்ந்துகொண்டு, நடைமுறைக்கு ஒத்துவராத ஈழத்தமிழர்களுக்கு மேலும் துயரங்களை ஏற்படுத்துகின்ற வெற்றுக் கோஷங்களை முன்வைப்பவர்கள் வியாபித்துக்கிடக்கும் இன்றைய சூழலில், சரியான கருத்துக்களையும் நடைமுறை வேலைத் திட்டங்களையும் செயற்படுத்துவது நம்முன் உள்ள பெரும் சவாலாகும். இதனை எழுத்தாளர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், அறிவு ஜீவிகளும் எதிர்கொண்டாகவேண்டும் என்பது அவரது தீர்க்கமான கருத்தாகும்.பெண்ணிய எழுத்துக்கள் குறித்து ராஜேஸ்வரி அவர்களின் கருத்துக்கள் சற்று வித்தியாசமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ‘திருவள்ளுவரிலிருந்து வைரமுத்துவரை எல்லோரும் பெண்களைத் தங்கள் பாதிப்புரியவர்கள் என்றுதான் படைக்கிறார்கள். கம்பரும், கண்ணதாசனும் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பெண்களின் கொங்கைகளையும், கொவ்வை இதழ்களையுமே கண்டார்கள். குழந்தைப்பேற்றின் வேதனையையும், மாதவிடாயின் நோவும் மறைக்கப்பட்ட விஷயங்களாகவே இருந்தன. மேலைநாட்டு ஆண் எழுத்தாளர்களும் இதைத்தான் செய்கிறார்கள். தமிழின் சிறந்த நாவல்கள் எனப்படும் ‘அம்மா வந்தாள்’ ‘பள்ளி கொண்ட புரம்’ போன்ற கதைகளில் வரும் சோரம் போன பெண்களைத்தான் ஆண் எழுத்தாளர்கள் படைக்க முடிந்தது. இம்மாதிரியான படைப்புக்கள் ஒரு விதத்தில் ஆண்களின் இச்சையைத்தான் காட்டுகின்றது. பெண்மையின் ஒரு பகுதியை பற்றிய அதாவது உடம்பைப் பற்றிய கதைகளை மட்டுமே விவரித்துக் காட்டுகிறது. பெண்களின் உடம்பு, சமயம், சமுதாயம் என்ற அமைப்புகளைப் பிரதிபலிப்பதற்காக ஆண்களால் ஆசிக்கப்படுகின்றது. பெண்களின் உடம்பு உயிரியல் ரீதியாகவும் (Sex) சமூகவியல் ரீதியாகவும் (Gender) பகுக்கப்படுகின்றது’ என்று கூறுகின்றார். அத்தோடு மேலை நா:டுகளில் இன்று பெண்ணிய எழுத்தாளர்கள் பலர் பெண்களைப் பற்றியும் பெண்களுக்காகவும் எழுதுகிறார்கள். இந்தியாவிலும் இலங்கையிலும் விழிப்புணர்வு கொண்ட பெண் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணிய எழுத்துலகில் மாற்றங்கள் வருவதற்குக் காரணமாக மிச்சேயில் பூக்கோவும், ஃபிராய்டும் எங்களிடம் பிறக்க எத்தனையோ வருடங்கள் பிடிக்கும். இன்று பெண் எழுத்தாளர்கள் தங்களுக்குப் போடப்படும் தடைகளைத் தாண்டி,எழுப்பப்படும் கிண்டல்களைச் சட்டை செய்யாது ஆரோக்கியமான ஒரு எழுத்துச் சூழலை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எழுத எத்தனையோ இருக்கின்றன. எங்களிடமிருந்து ஒரு சீமொன்டிபூவா, ஜேமன் கிறியா, எமிலி மார்ட்டின், டொனா ஒரலேய், அஞ்சலா டேவிஸ், ஒரு ரோணி மொறிஷன் பிறக்க வேண்டும். பெண்களுக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. அதை ஆண்கள் நிழலாக்கலாம். ஆனால், அதனை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் பெண் எழுத்துக்களை எழுதியாகவேண்டும் என்கிறார் ராஜேஸ்வரி.இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட ராஜேஸ்வரி ஆங்கிலத்திரைப்படங்கள் வழியாக திரைப்படத்துறைக்கள் ஆகர்ஷிக்கப்பட்டேன் என்கிறார். லண்டனில் 1985ஆம் ஆண்டில் நடைபெற்ற சுரங்கத்தொழிலாளர்கள் நடாத்திய நீண்ட போராட்டத்திற்கு எதிராக அப்போதைய பிரதமர் மார்கிரட் தாச்சர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளுக்க எதிரான போராட்டத்தில் தான் தீவிர ஈடுபாடு காட்டியதாகவும், அந்த அடக்குமுறைகளை அவர் வீடியோவில் பதிவு செய்ததாகவும். அதை அவதானித்த டேவிற் றேர்னர் என்ற திரைப்படக்க கலைஞர் அவரைத் திரைப்படத் துறையில் நுழையுமாறு ஊக்கப்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றார். அவர் பயின்ற திரைப்படக் கல்லூரியில் அத்திரைப்படப் பயிற்சியைப் பெற்ற முதல் ஆசியப் பெண்ணாக ராஜேஸ்வரி திகழ்ந்திருக்கிறார். அத்திரைப்படக் கல்லூரியின் அதிபர் ப்ரசித் கையம் நிறைய உற்சாகம் கொடுத்ததை நன்றியுடன் நினைவுகூரும் ராஜேஸ்வரி தனது பயிற்சி நெறிக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆராய்ச்சிக் கட்டுரைக்காகத் தமிழகம் சென்றபோது பாலுமகேந்திரா உட்பட்ட பல்வேறு திரைப்படக் கலைஞர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஈழத்தில் தமிழ் அகதிகளை அடிப்படையாகக் கொண்டு ‘Escape From Genocide ’ என்ற விவரண ஆவணப்படத்தை 1986ஆம் ஆண்டிலும், ‘Private Place’ என்ற திருமண வாழ்வில் பாலியல் வன்முறை தொடர்பான 16MM என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். மூன்று குழந்தைகளுடன் தனித்த ஒரு தாயாக லண்டனில் வாழ்க்கையைக் கொண்டு நடாத்தும் போராட்டத்தில் எனது திரைப்பட ஆர்வத்தை பலியிட நேர்ந்தது என்கின்றார் ராஜேஸ்வரிஇவருடைய முகநூல் நட்பு இரண்டு நாள் முன்னர் கிடைத்தது. இவரைப் பற்றி Iravi.com இல் படித்து அறிந்து கொண்டேன். இவருடைய முகநூல் நட்பு பெருமைக்குரியது.

73You, Noel Nadesan, Radha Manohar and 70 others15 Comments6 SharesLikeCommentShare

Posted in Tamil Articles | Leave a comment

‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’


‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’ – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –

 – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – கலை 29 ஜூலை 2021

என்னை இங்கு, திரு சிவாஜி கணேசன் அவர்களின 20வது நினைவு நாளை ஒட்டிய இந்த நிகழ்வில்,சிலவார்த்தைகள் பகிர அழைத்த பேராசிரியர்,திரு பாலசுகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி. அத்துடன் இங்கு வந்திருக்கும் பேச்சாளர்கள், பார்வையாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.பல மொழிகளில் பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த திரு சிவாஜி அவர்களைப் பேசுவதற்குச் சில மணித்தியாலங்களிலோ சில நாட்களோ போதாது. எத்தனையோ தளத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட வேண்டியவர் எங்கள் நடிகர் திலகம். இங்கு எனது பார்வை ஒரு திரைப்படப் பட்டதாரியின் கண்ணோட்டமாகும்.

அவர், சமூகத்தைப் பிரதிபலிக்கும் பல தரப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்லாது. இதிகாச காலப் பாத்திரங்களான கர்ணன், பரதன், அத்துடன் நாரதர். முருகன் என்பதோடு மட்டுமல்லாது சாக்கரட்டிஸ்,ஓதெல்லோ போன்றவர்களையும் எங்கள் கண்முன் நிறுத்தியவர்.. நான் திரைப் படப் பட்டதரியாகப் படிப்பதற்குச் சென்ற காலத்தில்,பல பிரசித்தி பெற்ற படங்களும் அதையொட்டிய நாவல்களும். திரைப் படப் படிப்பு சார்ந்த செமினார்களுக்கு எடுக்கப் படுவது வழக்கம்.சத்தியத்ரேயின் ‘பதர் பாஞ்சாலி’ என்ற இந்திய கலைப் படம் தொடக்கம்,’சிட்டிசன் கேன்’ என்ற மிகவும் பிரசித்தமான அமெரிக்கப் படம்வரை நாங்கள் பார்க்கவேண்டும். கலந்துரையாடவேண்டும். கட்டுரைகள் எழுதவேண்டும், செமினார் செய்யவேண்டும். அப்படியானவற்றில், 1899ல் ஜோசப் கொன்றாட் என்பரால் எழுதப்பட்ட ‘ஹார்ட் ஒவ் டார்க்னெஸ்’ என்ற நாவலை ஒட்டிய செமினாரும் ஒன்று. அது, ‘அப்போகலிப்ஸ் நவ்’ என்றொரு படமாக 1979ல் பிரான்ஸிஸ் போர்ட் கொப்பலா என்பரால் எடுக்கப் பட்டிருந்தது.இது ஒரு போர் சார்ந்த உளவியல சிக்கல்களைக் காட்டும்  படம்.

‘ஹார்ட் ஒவ் டார்க்னெஸ் என்ற நாவல்,ஆபிரிக்கக் கண்டத்து கொங்கோ என்ற நாட்டையும்.மக்களையும் அந்நாட்டு நதியையும் மையமாக வைத்துக் கதை எழுதப் பட்டிருந்தாலும்.அதையொட்டி எடுத்த ‘அப்போகலிப்ஸ் நவ்’; என்ற படம் அமெரிக்காரால் நடத்தப்பட்ட வியட்நாம் போரை(1960) மையமாக வைத்து எடுத்த படம்.வியட்னாம் போர்க் குற்றவாளியான,அமெரிக்க விசேட இராணுவப் பிரிவைச் சேர்ந்த கொலனல் கேர்ட்~; என்பவரைத் தேடி, தென் வியட்நாமிலிருந்து கம்போடியா வரையாக அமெரிக்கக கப்டன் பென்ஜமின் வில்லார்ட் என்பவரின் நதிப் பிரயாணத்தை ஒட்டி எடுக்கப் பட்டிருந்தது. மார்லன் ப்ராண்டோ அமெரிக்க கப்டனால் தேடப்படும் கொலன் கேர்ட்~; என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்குப் பல விமர்சனங்கள் வந்ததுபோல் பொருளாதாரமும்; வந்து குவிந்தன.உலகத்திலேயே சிறந்த படங்களிலொன்றாகக் கணிக்கப் பட்டிருக்கிறது.இதில் நடித்த பிரபலங்களில் ஒருத்தர் மார்லன் ப்ராண்டோ(1924-2004) அவர்களின் நடிப்பு சரித்திரம் பற்றி மாணவர்களாகிய நாங்கள் பேசினோம். அவர் அக்கால கட்டத்தில் உலகத்திலேயே மிகவும் பிரபல நடிகர்களாகக் கணிக்கப் பட்ட ஒருத்தர். அத்துடன் இந்தியத் திரைப் படவுலகில் பிரபலமாகவிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அவரின் நடிப்புடன் ஒப்பிட்டுப் பல விமர்சனங்கங்கள் வந்திருந்தன. காரணம் அவர்களின் இருவருக்கும் இருந்த நடிப்புத் திறமையின் ஒற்றுமையாகும். இருவரும் பல தரப்பட்ட படங்களில் முற்றிலும் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து, ரசிகர்களிதும் விமர்சகர்களினதும் உலகம் பரந்த விதத்தில் பாராட்டுக்களைப் பெற்றவர்கள்.

மார்லன் ப்ராண்டோ 40 படங்களில் மட்டும் நடித்தவர் அமெரிக்காவின் கடந்த நூற்றாண்டின் 100 முக்கிய பேர்வளிகளில்,ஆறு நடிகர்கர்களில் அவரும் ஒருத்தர். அவர் நடித்த ‘கோட்பாதர்’ கிடைத்த வருமானம் மாதிரி இதுவரைக்கும் எந்தப் படத்திற்கும் கிடைக்கவில்லை.. ‘மியுட்டினி ஒன் த பௌன்டி (1962),’லாஸ்ட் ராங்கோவின் பாரிஸ்’ அத்துடன் 1972ன்,ஒஸ்கார் நொமினேரட் படமான,மரியோ புN~hஸ் என்பவரின் 1969ல் எழுதிய நாவலைத் தழுவிய படமான ‘த கோட் பாதர்’ என்பன பலரால் பேசப்பட்ட காலமது. மார்லண் ப்ராண்டோவும் 1950ம் ஆண்டுகளில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகர்.அவரின்,’த ஸ்ரீட் கார் நேம்ட் டிசாயர்’ என்ற 1951 ஆண்டு படத்தின் மூலம் மக்கள் பேசுமொழியைத் திரைப் படத்தில் பிரபலமாக்கியவர்.

சிவாஜி கணேசன் அவர்களை உலக மயப்படுத்திய நடிகராக எடுத்த எடுப்பிலேயே அறிமுகப் படுத்திய படம் பராசக்தி. திரு.மு.கருணாநிதி அவர்களால் எழுதப் பட்ட தமிழ்ப்படம். கிருஷ்ணன்-பஞ்சு என்பர்களின் டைரக்ஸனில் உருவான படம்.பாவலர் பாலசுந்தரம் அவர்களின் நாடகத்தைத் தழுவிய படம். 1952 தீவாபளி அன்று வெளியடப்பட்டது. இந்தப் படத்தில் பல கருத்துக்களால் இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற குரலும் தமிழ் நாட்டில் ஒருத்தது. அந்த எதிர்ப்புக்களைத் தாண்டி 175 நாட்கள் ஓடியது. அதைத் தொடர்ந்து சிவாஜியின்,’அந்த நாள்’ என்ற படம் ஜாவர் சீதாராமனால் எழுதப் பட்டு,-1954.ஏ.வி.எம் மெய்யப்பன்- எஸ் பாலசந்தர்- அவர்களால் எடுக்கப் பட்டது. ஆடல் பாடல் இல்லாத முதல் தமிழ்ப் படம்-ஒரு துப்பறியும் கதை.-ஒரு ஜப்பானிய துப்பறியும் கதையை ஒட்டியது.அக்கிரா குரொசோவா என்பரால் ‘டிரக்ரால்-ரா~;மொன்’ என்ற பெயரில் 1950 எடுத்த ஒரு உளவியல் சார்ந்த படம். இந்தப் படம், இரண்டாவது இந்திய தேசிய திரைப்படவிழாவில் 1954ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றது. 2013ம் ஆண்டில் சி ஏன்.என். செய்தி 18 பதிவில் உலகத்தில் வெளியான சிறந்த 100 திரைப் படங்களில் ஒன்று என்று பாராட்டப் பட்டது.அப்படியாகத் திரையலகத்திற்கு வந்த சிலவருடங்களிலேயே அகில உலகத்திற்கும் தெரிந்த நடிகனானவர் சிவாஜி அவர்கள். கிழக்கிலோ மேற்கிலோ இப்படி ஒரு நடிப்பு பேராண்மை இதுவரை பிறக்கவில்லை.

மேற்குலத் திரைப் படத்துறையில் மார்லன்பிராண்டோ போன்றவர்களின் நடிப்பு பழையகால சினிமா பேச்சுவழக்கு மட்டுமல்ல நடிப்பு வகையையம் மாற்றியதுபோல் சிவாஜியின் வரவும் தமிழ்த் திரைப்படவுலகில் பல மாற்றங்களைச் செய்தது என்பது மிகையாகாது. படக்கதைக்கேற்ற வசனங்களை, மக்கள் மொழியைத் திரைப்படத்தில் புகுத்திய நடிகர்களில் மார்லண் ப்ராண்டாவை யாரும் மறக்க முடியாது. மார்லன் பிராண்டோவைச் சிவாஜியுடன் ஒப்பட்டப் பேசியவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவிருந்து சி.என்.அண்ணாதுரை என்ற நினைக்கிறேன். இதற்குக் காரணம் அவர்களின் இருவரும் நடிப்புத் திறமை என்று பாராட்டப் பட்டது. திரைப் படத்துறையில் நடிப்பு பாரம்பரியம் பற்றி சில வரைவிலக்கணங்களைத் திரைப் படப் பட்டப் படிப்பு படிக்கும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.மெய்ஸ்னர் டெக்னிக்-இது உண்மைபூர்வமாக நடிப்பது.அறிவு உத்திகளை உள்நுழைக்காமல் மன உணர்வைப் பிரதிபலிப்பது.

2.ஸ்ரானிஸ்லாவாக்கிஸ் ஸிஸ்டம்.என்பது இதில் ஒரு நடிகன், தனக்குக் கொடுக்கப் பட்ட பாத்திரமாகவே முற்றுமுழுதாக ‘அவதாரம்’ எடுத்ததுபோல் நடிப்பது.

3.லீ ஸ்ராஸ்பேர்க் முறை என்பது,தன் நடிப்பின் ஆழத்தைத் தனக்குக்கொடுத்த பாத்திரத்தில் காட்டுவது. அதாவது,தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை இருந்தால் எப்படியிருக்கும் என்று நடித்துப் பிரதிபலிப்பது.

4.அத்லாந்திக் செயற்பாட்டு அழகியல் முறையில் நடித்துக் காட்டுவது.உன் சிந்தனையையை முன்னெடுக்காமல் நடிப்பை முன்னெடுத்து நடி.அடுத்தது, நடிக்கமுதல் உனது சிந்தனையை முன்னெடு, நடிப்புக்குள் உள்படுத்திக்கொள் என்பதாகும்.

முக்கிய நடிகர்கள் யாரும் நெறிப்படுத்துபவர் சொல்வதற்கேற்ப நடிப்பது கிடையாது. அவர்கள் கதையையும் வசனங்களையும், சினிமா அமைப்பு பற்றிய விளக்கங்களையும்கவனமாகப்படித்துத்தான் தங்கள் நடிப்பைத் தொடங்குவார்கள்.சிலவேளை கதைக்கேற்ற சில விசேட அம்சங்களையும் டைரக்டருடன் பேசுவார்கள். தமிழ்ப்பட வரலாறு இசைசேர்ந்த நாடத்துறையுடன் வளர்ந்தது. ஆனால் சிவாஜின் வரவு நடிப்புத் துறையில் பல பரிமாணங்களை பார்வையாளுருக்கு அறிமுகம் செய்தது. அப்பழுக்கற்ற அழகிய தமிழ் நடையிற்பேசி இரசிகர்களைக் கவர்ந்தவர்.அத்துடன்,அவர் பரதக்கலை, கதகளி குச்சுப்புடி என்பவற்றைப் பயின்றவர். பலகாலமாக மேடை நடிப்பு மூலம் அவரின் முகபாவம், உடல் மொழிகள், அத்தனையையும் மிகத் திறமாக உருவகப்படுத்தியவர். மார்லன் பராண்டோவும் சிவாஜி கணேசனும்’ஸ்ரானிஸ்லாவாக்கிஸ் ஸிஸ்டம்’ என்ற முறையில் தங்களின் பாத்திரப் படைப்புக்களுடன் ஒன்றிணைந்து நடித்தவர்கள். ஆனால் மார்லன் ப்ராண்டோ சிவாஜியைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவரால் என்னைப் போல் நடிக்கமுடியும் ஆனால் என்னால் அவரைப்போல் நடிக்க முடியாது என்ற சொன்னதாகச் சொல்லப் படுகிறது. ஆது பெரும்பாலும்; உண்மை ஏனெ;றால் இருவரும் திரைப் படத் துறையின் நடிப்புக்கலையை வித்தியாசமான நிலைகளில் படித்துத் தெரிந்து கொண்டவர்கள். சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்புத் துறை மேடை நாடகத்டன் ஆரம்பித்தது. பத்து வயதிலேயே மேடை நடிகராகியவர்.மார்லண் ப்ராண்டோ வழக்கம்போல் மேற்கத்திய திரைப்படத்துறை அனுபவத்துடன் தொடர்ந்திருக்கலாம்.

சிவாஜி அவர்கள்; தனது வாழ்நாளில் பெரும்பாலும் திராவிடக் கட்சியின் கொள்கைகள் சமத்துவதின் அடிப்படையிலான நாடகங்களில் நடித்தவர் முழக்கவும்; சாதாரண மக்களுடனும் கலைஞர்களுடனும் தொடர்புகளைக் கொண்டாடியவர். உதவிகளைச் செய்தவர்,இளம் கலைஞர்களை உயர்த்திவிட்டவர் என்று பல தகவல்கள் சொல்கின்றன். மார்லன் ப்ராண்டோவும், அமெரிக்காவில் நடந்த கறுப்பு மக்களுக்கான சமத்துவப்போராட்டங்கள், அமெரிக்க பூர்வீகக் குடிகளின் சமத்துவத்திற்கான போராட்டங்களில் ஈடுபாடு கொண்டவர்.சாதாரண மக்களை பிரதிபலிக்கும், ரெனஸி வில்லியத்தின்(தோமஸ் லயினர் வில்லியம் 1911-1983) நாடகமான ‘த ஸ்ரீட் கார் நேம்ட் டிசாயர் (1951) படத்தின் மூலம் ஹொலிவூட் படத்தறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.

சிவாஜி (1928-2001) அவர்கள் அவர் ஆண்டு பிறந்த தனது நாலரை வயதிலேயே நடிப்புக்குள் நுழைந்தவராகச் சொல்கிறார்கள். அவரின்,நடிப்புக்கலை வளர்ச்சி சாதாரண மக்களின் நேரடி இரசனையுடன்,மேடைகளில் வளர்ந்தது. அவரை அதிகப் படியான உணர்வுகளைக் கொட்டி நடிப்பவராகப் பார்ப்பதற்கு அந்த நடிப்பு முறை தேவையாகவிருந்தது. மார்லண் ப்ராண்டோவின் ‘கோட்பாதா’; நடிப்பை சிவாஜியால் நடிக்க முடியும் என்பதைச் சிவாஜியின் ‘தேவர் மகன’; தந்தை பாத்திரத்தித்தை ரசித்தால் புரிய வரும். ஆனால் 1967ம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் சிவாஜியிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது, சிவாஜி அவர்கள் மார்லன் ப்ராண்டொவின் பெயரைக் குறிப்பிடவில்லை. பழம்காலத்து ஹொலிவூட் நடிகரான றுடொலப் வலன்ரினோ(1895-1926) என்பவர்தான் தனது பிடித்த நடிகர் என்றும் அவரின் ‘த N~க்'(1921) என்ற படத்தைப் பல தடவைகள் பார்த்ததாகவும் சொல்கிறார். ‘த N~க்’ என்பது ஒரு காதல்படம். ஆனால் சிவாஜி கணேசனுக்குப் பெயரும் புகழும் எடுத்துக் கொடுத்த படங்கள் அரசியல் கருத்துக்கள் சார்ந்த பராசக்தியும் ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகன் என்ற விருதைக்கொடுத்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற படமாகும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படத்தைத் தொடர்ந்து எஜிப்திய முதல்வர் நாஸர் அவர்கள் சிவாஜி அவர்களை வீடுதேடி வந்து சந்தித்ததாகச் சொல்லப் படுகிறது. இதற்குக் காரணம் சிவாஜி அவர்கள் வீரபாண்டிய கட்பொம்மன் என்ற விடுதலை வீரனாக, ‘ஸ்ரானிலாவ்ஸ்கி’ நடிப்புமுறையில் தன்னை முற்று முழுதான ஒரு நாட்டுப் பற்றுள்ள வீரனாக அடையாளப் படுத்தியதை திரு கமால் அப்துல் நாசர் அவர்கள் ஆணித்தரமாகப் புரிந்திருப்பார்கள் ஏனென்றால் திரு நாசர் அவர்கள் தனது நாட்டுக்காக மிகவும் வீரத்துடன் அன்னியனான பிரித்தானியரை எதிர்த்துப் போராடியவர். பிரித்தானியாவிடமிருந்த எகிப்திய சூயெஸ் கால்வாயைத் தேசிய மயப்படுத்திய மகாவீரன்தான். அவர், 1956ம் ஆண்டு பரித்தானியருடன் சூயெஸ் கால்வாய் காரணமாக ஒரு பெரும்போரையே நடத்த வேண்டியிருந்தது. சிவாஜி கணேசன் சுதந்திர போராட்டத்தில் சிறை சென்ற தகப்பனின் சரித்திரத்துடன் வாழ்ந்தவர். சுயமரியாதை இயக்கமான திராவிடக் கட்சியுடன் சிறு வயதில் இணைந்தவர்.சிவாஜிக்குப் போராட்ட வீரனாக நடிப்பது அவர் உதிரத்திலேயே ஊறியிருக்கலாம்.

ஜெயலலிதாவுக்குக் கொடுத்த நேர்காணலில், திராவிடக் கடசியின் ஏழாவது சுயமரியாதை மகாநாட்டில், மராத்திய வீரனான சிவாஜி மன்னனாகத் தன்னுடைய நடிப்பைக் கண்ட பெரியார் இ.வெ.இராமசாமி தனக்குச் சிவாஜி என்ற பட்டத்தைத் தந்ததாகச் சொல்கிறார்.

‘ஸ்ரானிஸ்லாவாக்கிஸ்’ நடிப்பு முறை என்பது ஒரு நடிகன் முற்று முழுதாகத் தன்னை அந்தக் கதாபாத்திரமாகச் சித்தரிப்பதாகம்.இதன் அடிப் படையிற்தான விமர்சகர்கள் மார்லன் ப்ராண்டிடாவையும் சிவாஜியையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். மார்லண் ப்ராண்டோவின் ‘லாஸ்ட் ராங்கோ இன் பாரிஸ்,(1972’ ‘யுலியஸ் ஸீஸர் 1956). ‘த ஸ்ரீட் கார் நேம்ட் டிசாய்யர்(1951) என்பன சில. மார்லண் பிராண்டோவின் 1951)’த ஸ்ரிட் கார் நேம்ட் டிசாயர்’ என்ற படமும் சிவாஜியின் (1952) ‘பராசக்தியும’; என்னவென்று பாரம்பரிய திரைப்படத் துறையைக் கட்டுடைப்பு செய்தன என்பதை இருபடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். சிவாஜி அவர்களின் இந்த நடிப்பு முறைக்கும் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த நடிகைகளும் ஒருவித்தில் உந்துதல் கொடுத்திருக்கிறார்களா என்ற கேள்வியும் வரலாம் ஏனென்றால் தனக்குப் பிடித்த நடிகை இந்தி நடிகையான நர்கிஸ் என்று சொல்கிறார். நர்கிஸ் அவர்களின் நடிப்பு ‘மதர் இந்தியா(1957)’ என்ற படத்தில் முழக்க முழுக்க ;ஸ்ரானிஸ்லாவ்ஸ்கி’ நடிப்பு பாரம்பரியத்தில் பிரதிபி;த்தது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.இந்தப் படம் ஒஸ்கார் பரிசுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட படம்.

சில பிரபல படங்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்த அவருடன் நடித்த சில பெண்பாத்திரங்களையும் இங்கு குறிப்பிடவேண்டும். சிவாஜி கிட்டத்தட்ட 299 திரைப் படங்களில் 60 நடிகைகளுடன் நடித்திருக்கிறார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படம்(1968) ஆனந்த விகடனில் நாவலாக வெளிவந்து பின்னர் திரைப் படமாக வெளிவந்து பாரிய வெற்றியையும் விருதுகளையம்; தந்த படம். இந்தப் படத்தில் அவரும் பத்மினியும் சேர்ந்து நடித்திருக்காவிட்டால் இந்தப் படம் இவ்வளவு வெற்றி தந்திருக்கமுடியுமா என்பது எனது கேள்வி. ஏனென்றால் இருவரும் இருகலைஞர்களாக முற்று முழுதாக தங்களை அர்ப்பணித்து நடித்து எடுத்தபடமது. அதேபோல்,உலக திரைப்பட உலகத்தில் அக்கால கட்டத்தில் மிகவும் செலவுசெய்த எடுத்த றிச்சார்ட் பேர்ட்டனும் எலிசபெத் டெய்லரும் நடித்த ‘கிளியோபாத்திரா (1963)’படத்தில் அவர்கள் இருவரும் அவ்வளவு தூரம் நெருங்கி இணைந்து நடிக்காமலிருந்தால் பல விருதுகளைத் தட்டிக் கொண்ட அந்தப் படம் அவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்குமா என்பதும் ஒரு கேள்வி. அதேபோல் சிவாஜி நடித்தவற்றில் எனக்குப் பிடித்த முக்கிய படமான ‘முதல் மரியாதையில், ராதாவும் சிவாஜி அவர்களும் கதைப் பாத்திரங்களின்; முற்று முழு உணர்வுகளையும் ‘ஸ்ரானிஸ்லாவ்ஸ்கி’ நடிப்பு முறையில் பிரதி பலித்திருக்கிறார்கள். காரணம் இந்தப் படம் ஒரு உண்மையான கதையைத் தழுவி எடுத்த படம் என்று சொல்லப் படுகிறது.

இரஸ்ய எழுத்தாளர் ப்யடோர் தொஸ்தாய்வேஸ்கி (1821-1881)அவர்களின் ‘க்ரமை; அன்ட் 91866) பணிஸ்மென்ட்’ என்ற உண்மைக கதையைத் தழுவி ஆர் செல்வராஜா(கம்யுனிஸ்ட் ஒருத்தரின் உறவினர்) என்பவர் எழுதிய ‘முதல் மரியாதை’ என்ற கதையைப் பாரதிhராஜா படமாக்கியிருக்கிறார். வைரமுத்து பாட்டெழுதிப் பரிசு பெற்றிருக்கிறார். இளையராசா இசையமைத்திருக்கிறார். ஆனால் இதை எழுத்தாளர் ஜெயகாந்தன்(கம்யுனிஸ்ட்) எழுதிய’சமுகம் என்பது நாலுபேர்’ என்ற கதையின் தழுவல் என்றும் சொல்வாருண்டு. ஆனால் அந்தப் படம் வயதுபோன எழுத்தாளரான தொஸ்தாயவேஸ்கிக்கும் அவரின் மிகவும் இளம்; காரியதரிசியான அன்னா என்ற பெண்ணுக்கும் உண்டான உறவை அடிப்படையாகக் கொண்டது என்று தகவல்கள் சொல்கின்றன.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்தில் எடுத்தபடம். பலரும் இந்தப் படம் பொருளாதாரரீதியில் வெற்றி பெறாது என்று சொன்னபோதும் மிகப் பிரமாண்டான வெற்றியைக் கொடுத்திருக்கிறது.பல விருதுகளைக் குவித்திருக்கிறது. இரஸ்யா இந்தப் படத்தை வாங்கியிருக்கிறது. காரணம் தமிழர்களுக்கச் சொல்லப் பட்ட ஒரு வித்தியாசமான கதை என்பது மட்டுமல்ல,இந்தப் படத்தின் கதை இரஷியாவை இந்தியாவுடன் இணைத்த கதையாகும்.அத்துடன் இந்தப் படத்தில் சிவாஜியும் ராதாவும் ஒருத்தருக்;கொருத்தர் மெருகு கொடுத்த இணைந்து அற்புதமாக நடித்ததுதான் காரணம்.

ஓரு திரைப்படப் பட்டதாரியாகச் சிவாஜியின் நடிப்பை ஆய்வு செய்யும்போது, நடிப்பு என்பது ஒரு கலை என்பதும் இக்கலைவளர்ச்சிக்கு,மெருகுபடுவதற்கு, சிறுவயதிலிருந்தே சிவாஜி அவர்களின் பன்முகத் தன்மையான அரசியல். பொருளாதார.வாழ்வியல் அனுபவங்களும்தான் முற்று முழுதான காரணங்களாக இருந்திருக்கின்றன என்பது எனது அபிப்பிராயம். அதை ஸ்ரானிஸ்லாவ்ஸ்கி நடிப்பு முறை என்று அவர் தெரிந்திருப்பாரா என்பது எனது கேள்வி.
திரைப்படக்கலை படிக்கும் மாணவர்களும், கலைஞர்களும் சிவாஜி பற்றிய ஆய்வுகளைச் செய்வது அவர்களின் திறமையை மேன்படுத்த உதவும் என்பது எனது கருத்து.

Posted in Tamil Articles | Leave a comment