பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22

உலக தமிழ்ச் சங்கம் மதுரை நடாத்திக்கொண்டிருக்கும் ‘பாரெங்கும் பாரதி’ இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்குத் தலைவியான,மதிப்புக்குரிய,தா. லலிதா அம்மையார் அவர்களுக்கும்.மற்றும் இம்மாகாட்டைத் திறம்பட நடாத்திக் கொண்டிருக்கும்,மதிப்குரியவர்களான,ஜான்ஸிராணி, சோமசுந்தரி,செல்வராணி, அத்துடன் பல நாடுகளிலிருந்து இங்கு வந்திருக்கும் ஆளுமைகள் ஆகியோருக்கும், எனது தாழ்மையான வணக்கம்.நான் எடுத்துக் கொண்டிருக்கும்,’ஸ்வர்ணகுமாரி’என்ற சிறு கதை,பாரதியின் ஐம்பத்தொன்பது கதைகளில் இரண்டாவதாகப் பிரசுரிக்கப் பட்ட சிறுகதையாகும். ஒரு எழுத்தாளனின் படைப்பு எதுவாக இருந்தாலும் அது அவன் வாழும் கால கட்டத்தின் சரித்திரத்தை, அதனுடன் இணைந்த அவனது அனுபவத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பது யாதார்த்தம்.

பாரதியார் ஒரு பன்முகத்திறமையானவர்.

‘தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தை அழித்திடுவோம்’ என்று பாடிய மனித நேயமுள்ள உன்னத கவிஞன்.

‘சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,

நீதி உயர்ந்தமதி கல்வி-

அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்’ என்று சமத்தவத்தைப் போற்றியவர்..

பாரதி, ஒருபத்திரிகையாளன்,சமூகநலவாதி,பாலிய வயது திருமணத்தை எதிர்த்தவர். தேசியவிடுதலைப் போராளி,பெண்கள் கல்வி,அவர்களின் முன்னேற்றம் போன்றவற்றில் மிகுந்த அக்கறை காட்டியவர்.சாதி மதபேதமற்றவர் ஆன்மீகவாதி.பல மொழி தெரிந்தவர்.புதிய தமிழ் உரைநடையின் தந்தை.சிறுகதை எழுத்தாளர்;.

‘ஸ்வர்ணகுமாரி’ என்ற சிறுகதை,2.2.1907ல் ‘இந்தியா’ பத்திரிகையில் வந்தது.இக்கதை மணிபிரவாளம் நடையில்; எழுதப்பட்டிருக்கிறது. பாரதி எழுதிக் கொண்டிருந்த சுதேச மித்திரனில் பாரதி தனது தீவிரவாதக் கொள்கைப் பிரசாரங்களை எழுத முடியாததால் ‘இந்தியா’ பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.பிரித்தானியரை மிதவாதமாக எதிர்க்கும் பிரம்ம

ஸமாஜத்தினரை ஆவேசமாக எதிர்க்க இக்கதையை ஆயுதமாகக்கொண்டிருக்கிறார்.

‘ஸ்வர்ணகுமாரி’ என்ற தலைப்புடனான இக்கதை ஒரு காதல் கதை போலான தலையங்கத்துடனிருந்தாலும் இது ஒரு முற்று முழுதான அரசியல் பிரசார படைப்பாகும்.

20; நூற்றண்டின் ஆரம்பத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தை மிகவும் நேசித்தபல இந்தியப் பெண்களின் ஒருத்தராக ஸ்வர்ணகுமாரி படைக்கப் பட்டிருக்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய ஒரு சில பெண்களிருந்தார்கள்.அவர்களில் வேலு நாச்சியார்,பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியருக்கு எதிராகக் போராடிய ஜான்ஸிராணி-அதாவது ராணி லக்~மிபாய் போன்றோர் இருந்த சரித்திரமுண்டு.

ஸ்வர்ணகுமாரி பாரதியால் அப்படிப் படைக்கப் படவில்லை. அவளுக்காக பிரம்ம ஸமாஜவாதியாக மாறிய அவள் காதலன்,அவள் பக்தியுடன் நேசிக்கும் விடுதலை வீரர் ஸ்ரீபால கங்காதர திலகரை மதிக்கதாதால் அவனிடமிருந்து பிரிந்து காசியிலுள்ள அத்தை வீட்டுக்குச் செல்பவளாக, அவன் அவளின் மனநிலையறிந்து மாறும்வரை காத்திருப்பவளாகப் படைக்கப்பட்டிருக்கிறாள்.

இக்கதை மூலம்,பாரதியின் நோக்கம் அந்தக் கால கட்டத்திலிருந்த விடுதலைப்போர்ச் சூழ்நிலையில் பிரித்தானியரை எதிர்க்கும் தீவிரவாதக் கொள்கையுடைய திரு.திலகரை ஆதரிப்பதை முன்னிலைப் படுதிதுவதாகும்.காரணம் 1907ம் ஆண்டு திரு திலகர் அவர்கள் அங்கத்தவராக இருந்த இந்திய காங்கிரஸ் கட்சி மிதவாதம்,தீவிரவாதம் என இரு கருத்துக்களால் பிரிகின்றது. பால கங்காதரதிலகரை இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள். அந்த ஆதரவை விரிவுபடுத்தும் பிரசாரக் கருவியாக இக்கதை படைக்கப் பட்டிருக்கலாம.

‘நீ காதலிக்கும் பெண் எத்தனை அழகியாகவிருந்தாலும்,இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்ஸ்ரீபால கங்காதர திலகரை நீ ஆதரிக்காவிட்டால் உன் காதலி உன்னைப் பிரிந்து விடுவாள்’ என்ற பாரதியின் குரல் இக்கதையில் இளைஞர்களை நோக்கி ஒலிக்கிறது.

இக்கதையை வாசகர்களைக் கவரும்படி பாரதியார் எப்படி எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம்.கதையைப் பாரம்பரியமுறையில் அழகிய வர்ணிப்புக்களுடன் ஆரம்பிக்கிறார்.

கதையின் கதாநாயகன் மனோரஞ்ஜனன், 23 வயது.சுந்தர ரூூபமுடையவன்.மன்மதனைப் போன்றவன். இவனுடைய நண்பர்களால் அர்யுனன் என்றழைக்கப்பட்டு வந்தவன்.

ஸ்வர்ணகுமாரி,18 வயது. சூர்யகாந்த பாபு என்ற பெருஞ்செல்வரும் பிராமண குல ஆசாரங்களைக் கைவிட்டு பிரம்ம ஸமாஜக் கொள்கைகளான,சாதிபேதம் இல்லை.விக்கிரஹாராதனை கூடாது.பெண்களும் ஆண்களும் சமமாக ஒத்துப் பழகலாம் என்பது போன்ற நவீனக் கோட்பாடுகளைக் கொண்டவரின்; மகள்.

இவளது ரூபலாவண்யமோ சொல்லுந்தரமன்று.இவளை என்னவென்று சொல்வோம்?

சுகப்பிரம்ம ரி~p பார்த்தபோதிலும் மயங்கிப்போய்விடும்’

என்று வர்ணிக்கிறார்.

கதா நாயகனின் தாய் மிகவும் ஆசாரமான தாயார். தனது குலதெய்வமான ஸ்ரீ கிருஸ்ணபகவானிடம்,’ஸர்வ ஜீவதயாபரா எனது பிள்ளைக்கு அந்த மிலேச்சனுடைய பெண்மீது இருக்கும் மோகத்தை நீக்கி அவனுக்கு நல்ல புத்தி கொடுக்கலாகாதா?’ என்று அடிக்கடி கண்ணீர் சொரிந்து பிரார்த்தனை புரிவாள்.

அன்றிலிருந்து இன்று வரை தொடரும் காதற்கதைகளில் வருவதுபோல் இக்கதையிலும் ஒரு வில்லன் வருகிறான்.

வில்லன் என்ற ஹேமசந்திரபாபு,ப்ரம்ம ஸமாஜத்தைச் சேர்ந்தவன்.எருமை மாடுபோல் உருவமைப்பு மட்டுமல்லாது கோமாமிசம் உண்ணுபவனாகவும்,மது அருந்துபவனாகவும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவனாகவும் படைக்கப் பட்டிருக்கிறான்.

பிரம்ம ஸமாஜக் கொள்கையுடைய ஸ்வர்ணகுமாரியின் தந்தையான சூரியகாந்தபாபுவும் தனது விருப்பப்படி மகள் ஹேமச்சந்திராவை திருமணம் செய்யாவிட்டால் அவளை நிர்க்கதியாக வீட்டை விட்டுத் துரத்திவிடுவதாப் பயமுறுத்துகிறார்.

பெரும்பாலோனேர் முற்போக்குக் கொள்கைகள் என்று பகிரங்கதாகச் சொல்வது ஒன்று, ஆனால் தங்கள் சுயநலத்திற்காகத் தங்கள் வாழ்க்கையில்; செய்வது வேறு ஒன்று என்பதையும், அப்படியான முற்போக்கு பேசுபவர்களை நம்பாதே என்று பாரதி இக்கதை மூலம் சொல்கிறார்.

பாரதியார் பிரம்ம ஸமாஜவாதிகளிடம் உள்ள தனது ஆத்திரம் அத்தனையையும் இந்த இரு பாத்திரப் படைப்புக்களில் தாராளமாகக் காட்டியிருக்கிறார்.

ஆனால் ஸ்வர்ணகுமாரியின் காதல் உடைந்து போனதற்கு, ஆசாரமான மனோரஞ்ஜனனின் தாயோ, பிரம்ம ஸமாஜ சமத்துவம் பேசும் தகப்பனோ அல்லது திருமணத்துக்கு முதல் ஸ்வர்ணகுமாரியை அனுபவிக்க நினைக்கும் ஹேமசந்திரபாபு என்ற பிராமணனோ காரணமில்லை.

இவள் குழந்தை முதலாகவே இந்திய தேசிய விடுதலைக்குப் போராடும் ஸ்ரீபால கங்காதர திலகரைத் தெய்வம்போலக் கருதி வந்தவள்.மனோரஞ்ஜனனிலுள்ள காதலை விட சுதேசத்தின் மீதுள்ள இவள் அன்பு பதினாயிரமடங்கு வலிமையானதால் அவள் காதலனை உதறித் தள்ளி விட்டு 1906ம் ஆண்டு விலகிப் போகிறாள்.

அவளின் கடிதத்தைப்படித்துத் திருந்திய மனோரஞ்ஜனன்,இந்திய விடுதலைப்போரின் முதற்தலைவராகபு; போற்றப்பட்ட பால கங்காதர திலகரிடம் சேர்ந்து தேசபக்திப் பாடல்கள் படித்து வருகின்றான் என்று கேள்விட்டதாகக் கதை முடிகிறது.

இக்கதை பாரதியிடமிருந்த, திலகர் பக்தி தேசபக்தி என்பவற்றின் ஆழத்தைக் காட்டுகிறது.

இக்கதை நடந்த கால கட்டம் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் மிக முக்கியமான மாற்றங்கள் நடந்த கால கட்டமாகும்.

இதற்கு முன்னர் நடந்த சம்பவங்களைப் பார்த்தால்,

1890ல் நடந்த காங்கிஸ் மகாநாடு காலகட்டத்திலிருந்து,பால கங்காதர திலகர் பிரித்தானியருக்கெதிரான மிதவாதக் கொள்கையை எதிர்க்கிறார்.அதற்குக் காரணம் பிரித்தானியர் இந்திய மக்களை மிகமோசமாக நடத்தி வருத்துவதாகும்;.1886ல் இந்திய மக்கள் பட்டினிக்கும், அதைத் தொடர்ந்த 1896-97 பிலேக் என்ற பயங்கர தொற்று நோய்க்கும் பலியாகிக்கொண்டிருக்கும்போது பிரித்தானியர் விக்டோhரியா மகாராணிக்கு வைரவிழா எடுத்தார்கள்;;.

பிரித்தானிய அரசு இந்திய செல்வங்களைக் கொள்ளையடித்து ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தங்கள் ஆதிகத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தார்கள்.அத்துடன் தங்கள் சுயநலத்திற்காக 1905ல் வங்காள தேசத்தை மத ரீதியாக இரு கூறாகப் பிரித்தார்கள்.இதனால் ஆத்திரம் கொண்ட இந்திய மக்கள் மிக ஆவேசமாக பிரித்தானியரை எதிர்த்தார்கள்.

1907ம் ஆண்டு பாரதியார்,சுராட் என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்கு.உ.வை சிதம்பரனார் அவர்களுடன் செல்கிறார். அங்கு,பிரித்தானியருக்கு எதிரான போராட்டத்தில் சேர்ந்தவர்கள் மிதவாதம்-தீவிரவாதம் என்ற கருத்துக்களால் பிரிகிறார்கள்.பால கங்காதர திலகர் ஆயதப்போராட்டத்தை ஆதரிக்கிறார்.பாரதியாரும் அதை ஆதரிக்கிறார்.திலகர் பழமைவாதி. ஆனால் பாரதி எதிர்மாறானவர்.ஆனாலும் அவர் திலகரை ஆதரிக்கிறார்.

1905-1907 திலகரின் கொள்கைகள் மக்களின் ஆதரவைப் பெறுகின்றன.அதற்குப் பாரதியும் பிரசாரம் செய்கிறார்.

இக்கதையில் வரும் ஸ்வர்ணகுமாரி தேச விடுதலைக்குப் போய்ச் சேரவில்லை. அத்தை வீட்டுக்குத்தான் போயிருக்கிறாள்.அவளையுணர்ந்த அவள் காதலன் தேசவிடுதலைப் போராட்டத்தில் திலகருடன் சேர்கிறான்.

ஸ்வர்ணகுமாரி தேசவிடுதலைப் போராட்டத்தில் மற்றவர்கள் சேர்வதற்கு உந்துதலாக இருந்திருக்கிறாள் என்றால் பாரதியின் கதாநாயகியின்; பெயர் யாரைப் பிரதி பலிக்கிறது? தனது மகள் தங்கம்மாளையே ஸ்வர்ணகுமாரி என அவர் அழைத்து மகிழ்ந்த அளவுக்கு அந்தப் பெயர் அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது.

பாரதியார் ஸ்வர்ணகுமாரியை,ஆண்களுக்கு விட்டுக்கொடுக்காத ஒரு ஆளுமையான பெண்ணாகப் படைத்ததற்கு என்ன நிகழ்ச்சிகள் உந்துதல்களாக இருக்கும்,யார் அந்த உந்ததலின் பின்னணி என்ற ஆராய்ந்தால் பல தகவல்களைக் காணலாம்.

அக்கால கட்டத்தில் கொல்கத்தாவில் சரளாதேவி (1872-1945) போன்ற பெண்கள்; சுதேசி அரசியலில் மிகத் தீவிரமான பங்கெடுத்திருக்கிறார்கள்.சரளாதேவியின் கணவர் ராம்புஜி தத்தா சௌட்ரரானி பஞ்சாப் ஆரிய சமாஜ்ஜின் தலைவர் அத்துடன் லாகோரிலிருந்து வந்த ஹிந்தஸ்தான் பத்திரிகையின் ஆசிரியர்.

சரளாதேவியின் தாயின்; பெயர் ஸ்வர்ணகுமாரி.இவர் ரவீந்திர நாத தாகூரின் தமக்கை.இந்தியாவின் முதலாவது நாவலாசிரியை.கவிஞை,இசையில் ஈடுபாடுள்ளவர்,

சமூக நலவாதி,இவரின் கணவர் பெயர் ஜானகிநாத் கௌசல். அவர்கள் இந்தியன் நா~னல் காங்கிசை ஆரம்பித்தவர்கள். ஸ்வர்ணகுமாரி, அவரின் குடும்ப பத்திரிகையான பராட்டி'(பாரதி?)க்கு ஆசிரியையாகவிருந்தவர்.இந்தியன் நா~னல் கொங்கிரசில் செயற்பட்ட முதலாவது பெண்மணியாகவுமானவர்.அனாதைகள்,விதவைகளுக்கு உதவும் சக்தி சமித்தி-(நண்பர்கள்கள் வட்டம); என்ற,அமைப்பை 1896ல் அமைத்தவர்.

இப்படியானஆளுமையுள்ள ஸ்வர்ணகுமாரியைப் பாரதியார் சந்தித்ததாக எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்த ஸ்வர்ணகுமாரியைப் பற்றிப் பாரதி அக்காலகட்டத்தில் கேள்விப் படாமலிருந்திருக்க மாட்டார். தனது நாவலுக்கு,’ஸ்வர்ணகுமாரி’ என்று பெயரிட இந்த ஆளுமையான பெண்ணும் ஒரு காரணமா என்று எங்களுக்குத் தெரியாது. அத்துடன் பாரதியைப் பெண்கள் கல்வி தொடக்கம்,அவர்களின் முன்னேற்றம்,விடுதலை பற்றிச் சிந்திக்கப் பண்ணிய மற்ற நிகழ்வுகளையும் பார்ப்போம்.

1905ம் ஆண்டு விவேகானந்தரின்(12.1.1863–4.7.1902) சீடையும் பிரித்தானிய ஆட்சியை அயர்லாந்தில் எதிர்த்துப் போராடிய ஹமில்டன் என்பவரின் பேத்தியும் திரு நோப்ல் என்பவரின் மகளுமாகிய சகோதரி மார்கரெட் என்ற நிவோதிதாதேவியை பாரதி சந்தித்த பின் அவரின் வாழ்க்கையில்; பல மட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.

நிவேதிதாவைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டவர் பாரதி. நிவேதிதாதேவி,பெண்களின் கல்வி, முன்னேற்றம் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றியெல்லாம பாரதிக்கு அறிவுரை கூறியவர். நிவேதிதாவைக் கண்டபின்,’சக்தியைக் கண்டேன் சக்தியைக் கண்டேன்’ என்று பாரதி சொன்னதாகத் தகவல்களுண்டு.அவ்வருடம் பாரதிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது.அந்த மகள் தங்கம்மாவைத்தான் ஸ்வர்ணகுமாரி என்று அழைத்து மகிழ்ந்தாராம்.

நிவேதிதாதேவி .கல்கத்தாவில் பெண்கள் பாடசாலையை அமைத்தார்.

நிவேதிதா அம்மையரின்; பங்கு இந்தியப் போராட்டத்தில் மிகவும் முக்கியமானது.இந்தியாவில் பிரித்தானியர் செய்யும் கொடுமைகளைப் பிரித்தானியர் கையில் அகப்பட்டுத் தவிக்கும்; தனது அயர்லாந்து நாட்டு நிகழ்வுடன் ஒப்பிட்டு நன்கு உணர்ந்தவர்.

அயர்லாந்து பிரித்தானியர் பிடியில் 1169லிருந்து துன்பப் பட்டுக் கொண்டிருந்தது. பிரித்தானிய காலனித்துவத்தை விரிவுபடுத்தும் பல பரிசோதனை முறைகளை அயர்லாந்து மக்களிடம் பயன்படுத்திப் பார்த்தவர்கள்.சொல்ல முடியாத வரிக் கொடுமை, என்பவற்றின் மூலம் அயர்லாந்து மக்கள் மிக மிகக் கொடுமையாக பிரித்தானியரால் வதை பட்டுக் கொண்டு வந்தார்கள்.

லண்டனில்;1895ல் விவேகானந்தர் மார்கரெட் நோப்ல் என்ற பெண்மணியைச் சந்தித்தபோது மார்க்கரெட்; லண்டனில் ஒரு ஆசிரிiயாகவிருந்தார் அவரின் பாட்டனார் திரு. ஹமில்டன் என்பவர் பிரித்தானியாவுக்கெதிராக பெரும்பான்மையான அயர்லாந்து மக்கள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

பிரித்தானியருக்கெதிரான ஜரிஸ் மக்களின் போராட்டமும் பிரித்தானியருக்கெதிரான இந்திய மக்களின் போராட்டம் மாதிரித்தான் தொடர்ந்தது. லண்டனில் மார்க்கரெட்; வாழ்ந்தபோது அவர் கவிஞர் யேட்ஸ்,நாடகாசிரியர்; பேர்னார்ட ~h,அத்துடன்,மானுடவியலாளரான தோமஸ் ஹக்ஸ்லி போன்ற பிரபலமானவர்களின் வட்டத்திலிருத பெண்ணாளுமையாகும்.

லண்டனில் விவேகானந்தர் மார்க்கரெட்டைச்; சந்தித்தார்.மார்க்கரெட்டின் கொள்கைகளும் ஆளுமையும் விவேகானந்தருக்குப் பிடித்தன.

1898ல் விவேகானந்திரின் அழைப்பில் இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்குச் செயற்பட மார்கரெட் இந்தியா வந்தார். விவேகானந்தர் அவருக்கு நிவேதிதா என்று நாமம் சூட்டினார்

ராஜாராம் மோகன்ராஜ் 1828ம் ஆண்டு தொடங்கிய இந்திய பிரம்ம சமாஜத்திற்கு ஆதரவாகவிருந்த விவேகானந்தர், தீவிரவாதியான திலகரை ஆதரிப்பதற்கு நிவேதிதாவின் சந்திப்பு திருப்பு முனையாகவிருந்தது என்பதைச் சரித்திரத்தை ஆராயும்போது தௌ;ளெனத் தெரியும் அதாவது, பிரித்தானியரிடம் ‘மிதவாத’ அரசியல் வேலை செய்யாது என்பதை நிவேதிதா மூலம் அவர் தெரிந்துகொண்டிருக்கலாம்;.1902ல் விவேகானந்தர் இறந்து விடுகிறார். நிவேதிதாதேவி முற்று முழுதாகத் தன்னை இந்திய விடுதலைப் போரில் இணைத்துக் கொள்கிறார்.

‘த மேக்கர் ஒவ் மொடேர்ன் இந்தியா’ என்ற மகாத்மா காந்தியால் புகழப்பட்ட தேசிய விடுதலைப் போராளி திலகர் அவர்களின் இந்திய தேசிய விடுதலைப் போராட்டமும் பிரித்தானியருக்கெதிரான ஜரிஸ் மக்களின் போராட்டமும் ஒரேமாதிரியானது.தீவிரமானது.எதிரிக்கெதிரான மிதவாத கோட்பாடுகளை எதிர்த்தது. எதிரியுடன் நடத்தும் வெறும் பேச்சுவார்த்தை தந்திரத்தை பெரும்பாலான இந்தியர்கள் விரும்பாதிருக்கலாம்.அதனால் சுதந்திர உணர்வு கொண்ட பெண்களும் ஆண்களும் திலகரைப்; பின் பற்றியதில் ஆச்சரியமில்லை.

இந்திய சுதந்திப்போர் பற்றி அறிய முனைவோருக்குப் பிரித்தானிய ஆட்சிக்காலமான 1857லிருந்து 1947வரையும் பல இந்தியப் பெண்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பிரித்தானியரை எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள் என்பது புரியும்.ஆனால் அவர்களின் பெயர்கள் பெரும்பாலும் பலருக்குத் தெரியாத விடயமாகவே இருக்கிறது.

மடம் ருஸ்தோம் காமா என்பவர் இந்தியப் பெண்கள் போராட்டங்களில் லண்டனிலும் வெளிநாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.1907ம் ஆண்டு ஜேர்மனி ஸ்ருட்கார்ட் நகரில் லெனின் கலந்து கொண்ட சர்வதேச சோசலிஸ்ட் மகாநாட்டில் மடம் காமா அவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை (பச்சை மஞ்சள் சிவப்பு) ஏற்றி வந்தேமாதரம் பாடலை உலக அரங்கில் பாடிய முதலாவது பெண்ணாகும்.

பாரதியை ஒரு மனித நேயப்போராளிiயாக மாற்றிய நிவேதிதா மாதிரியே ஐரிஸ் நாட்டைச்சேர்ந்த அன்னிபெஸன்ட் அம்மையாரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

ஆளுமையான இம்மாதர்களின் நாடான அயர்லாந்தின் தேசியக்; கொடியின் மூவர்ணம்தான் இந்திய நாட்டின் தேசியக் கொடியிலுமுள்ளன என்று பலருக்குத் தெரியாது.மனித நேயமுள்ள இவர்கள் பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.

எனவே ஸ்வர்ணகுமாரி என்ற இக்கதை பிரசாரக் கதையாகவிருந்தாலும் பெண்களின் சுயமரியதையையும் ஆளுமையான பெண்களால் மக்களுக்காகப் போராடுபவர்களாகப் பலரையும் மாற்றமுடியும் என்பதையும் மிகவும் அழகாக சொல்கிறது.

‘நாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம’; என்று பாடிய பாரதியின் இரண்டாவது கதை பெருவாரியான வட சொற்களை உள்ளடக்கியதாகும். தமிழ் உரை நடைக்கு அத்திவாரமிட்ட பாரதியின் இக்கதை, அக்கால கட்டத்தில் தழிம் இலக்கியப் படைப்புகளில் தமிழ் மொழி எந்த நிலையிலிருந்ததது என்பதைப் பிரதி பலிக்கிறது.

இக்கதை 1907ம் ஆண்டு எழுதப் பட்டிருக்கிறது. 1918ம் ஆண்டு காந்தியடிகள் இந்திய திரும்பியதும் இந்திய விடுதலைப் போராட்டம் புதிய மாற்றங்களைக் கண்டது. 1918ம் ஆண்டு பாரதியார்,’பிரித்தானிய அரசுக்கு விசுவாசமாக இருப்பேன்.சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்’என்று கடிதம் எழுதிய அளவுக்கு மிதவாதியாக மாறிவிட்டார். ஒரு போராட்டம் எத்தனை வடிவம் எடுக்கும் மக்கள் எப்படித் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்வார்கள் என்பதற்கு பாரதியின் வாழ்க்கையும் உதாரணமாகும.;என்னை இங்கு பேச அழைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள். வணக்கம்

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a comment