‘தமிழ்ப் புனைகதைகளில் பெண் பாத்திரப் படைப்பு’.

‘தமிழ்ப் புனைகதைகளில் பெண் பாத்திரப் படைப்பு’.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.லண்டன்.26.6.2020.
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,தமிழ்த்துறை,தமிழ் ஆய்வு மையம் மூன்று நாட்களாக இங்கு நடந்துகொண்டிருக்கும் ‘தமிழில் புனைகதைகள்’ என்ற கருத்தரங்கில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு எனது நன்றியை,முனைவர் செ. அசோக் அவர்களுக்கும்,அத்துடன்,
திரு.கி.அபிரூபன் தாளாளர்,
முனைவர் ந.அருள்மொழி-இணை ஒருங்கிணைப்பாளர்,
முனைவர்க.சிவனேசன்,தலைவர்,தமிழ்த்துறை மையம்,
திரு பா .இராமர்,உதவிப் பேராசிரியர்,கணனி அறிவியற் துறை,தொழில் நுட்ப உதவியாளர்,
முனைவர்.சோ.முத்தமிழ்ச் செல்வன் ஒருங்கிணைப்பாளர், அவர்களுக்கும் இந்த மூன்று நாள் நிகழ்வுகளில் அளப் பெரிய உரையாற்றிய ஆளுமைகள் அத்தனைபேருக்கும்,இந்த நிகழ்ச்சியல் கலந்து கொண்டிருக்கும்,ஆய்வாளர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவருக்கும் எனது அன்பான காலை வணக்கம்.

புனைகதைகளில் ‘பெண்பாத்திரப் படைப்பு’ என்ற தலையங்கத்தில் ஆய்வு செய்ய முனையும் இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் ஒரு மிகப் பிரமாண்டமான ஆராய்ச்சி ஒன்றைச் செய்யலாம். பெண்பாத்திரங்கள் இல்லாமல் புனைகதைகள் படைப்பது அரிது.’புனைகதைகள’; என்பவை யாரோ ஒருத்தரால் ‘புனையப் பட்டிருந்தாலும்’ அவை ஒட்டுமொத்தமான ‘கற்பனைக் கதைகள்’ அல்ல. கதை எழுதியவரின் கால கட்டத்தில் நடந்த அல்லது அவருக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை அப்படியே உண்மையாகப் பதிவிடாமல் அவர் சில, கற்பனைகளையும் உள்ளடக்கி ஒரு விடயத்தை மற்றவர்களுக்குச் சொல்ல வருகிறார் என்பது எனது அபிப்பிராயம்.அந்த விடயம் பல வடிவங்களில் அங்கு புனையப் பட்டிருக்கலாம்.அந்தப் புனைகதைகள் எக்கால கட்டத்தில் யாரால் எழுதப் பட்டது,என்ன விடயத்தைச் சொல்கிறது, என்று ஆரம்பிப்பதிருந்து அது யாருக்காக எழுதப்பட்டது என்பதையும் பொறுத்து அந்தத் தலையங்கத்தின் ஆய்வைத் தொடரலாம்.

ஏனென்னறால்,ஒரு எழுத்தாளன் எப்போதும் அவனின் சிந்தனையைத் தூண்டும்; தன்னைச் சுற்றிய உலகத்தைப் பற்றியே ஆரம்பத்தில் எழுதத் தொடங்குவான்.ஆனாலும் அந்த எழுத்தாளனின் படிப்பு நிலை, வாழ்க்கைத் தரம்,சமூக அடையாளம். அரசியலுணர்வு, அத்துடன் எழுத்தானின் சமுதாயக் கண்ணோட்டங்கள் என்பன அவனது படைப்புக்கு உருவமும் உணர்வும் கொடுக்கிறது என்பது எனது கருத்து.

ஒரு புனைகதை என்பது பெரும்பாலும்,காதல்,சோகம்,வீரம்,அறிவுரை, ஆன்மீகத் தேடல்.தத்துவம்,சமூக நோக்கம்,வரலாறு வர்த்தக நோக்கம்,அத்துடன் ஜனரஞ்சகம் போன்ற பல அடித்தளங்களைச் சார்ந்ததாகவிருக்கும்,ஆனாலும் மேற்குறிப்பிட்டவை அந்தக் கதையை எழுதும் எழுத்தாளனின் யதார்த்த வாழ்க்கையின் முற்று முழுதான பிரதிபலிப்பாக இருக்கு வேண்டும் என்றில்லை.
அதாவது,தனது வருமானம் கருதி ஒரு பத்திரிகைக்கு எழுதுபவன் அந்தப் பத்திரிகைக்கு ஏற்றபடி எழுதவேண்டும்.இல்லையென்றால் அவனுடைய படைப்பை அந்தப் பத்திரிகை ஏற்றுக் கொள்ளாது.இதை எங்கள் இலக்கிய உலகில் பகிரங்கமாக அறிந்து வைத்திருக்கிறோம்.

அத்தோடு.தமிழ் இலக்கிய உலகு பெரும்பாலும் ‘கதை கதைக்காக’என்ற பரிணாமத்தில் பெரும்பாலும் ஆரம்பித்ததா, சிலரால் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறதா என்பதை’ புனைகதையின் பற்பல பரிமாணங்களையும் ஆய்வு செய்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஏனென்றால். உலகத்தில் பலவேறு நாடுகளில் எழுத்துக்கள் மூலம் பல அரசியல் சமூக மாற்றங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் தமிழ் இலக்கிய உலகம் ‘மிகவும்’ பாதுகாப்பான விதத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது’. தமிழ் இலக்கியங்கள் ஒட்டுமொத்த தமிழ் உலகம் சமுதாயமும் ‘ ஒன்றிணைந்த ‘சமுதாயப் பார்வையைக்’ கொண்டிருக்கவில்லை. பற்பல காரணங்களால் ஒவ்வொரு தமிழ் இலக்கியக் குழுமங்களும் கூட்டமும் ஒவ்வொரு தனித்துவத்துடன் இயங்குகிறது. அத்துடன் எங்கள் நாடுகளில் ஒரு மனிதனின் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் மறைமுக சக்திகளால் கட்டுப்படுத்தப் படுகின்றன.

என்னுடைய,’தேம்ஸ் நதிக்கரையில்’ (பாரி பிரசுரம் 1992) என்ற நபவலுக்கு அறிமுக உரை எழுதிய இலங்கையின் முக்கிய எழுத்தாளரான செ. கணேசலிங்கம் அவர்கள்,’ நாவலின் பல்வேறு தன்மைகள்.அமைவுகள்,பணிகள் பற்றி விளக்கித் தமிழில் வரைவிலக்கணம் ஒன்று வகுத்துத் தந்த பெருமை மறைந்த பேராசிரியர்,கலாநிதி கைலாசபதி அவர்களையே சாரும். நாவல்களை, கற்பனாவாதம்,இயற்பண்புவாதம்,யதார்த்த வாதம் என வகைப் படுத்தி வளர்ச்சிப் போக்கில் மதிப்பீடு செய்யும் முறைகளை முன்வைத்தவர் அவரே. சமூக நாவல் எனக் கூறப்படுபவற்றை,’சமகால வரலாற்று நாவல்’ எனக் கணிப்பிடவேண்டும் எனவும் கைலாசபதியே முதன் முதலில் அறிமுகப் படுத்தினார்.

சமகால வரலாற்று நாவல்’என அணுகும்போது மூன்று அம்சங்களை முன்வைத்து விமர்சிக்கப் படவேண்டும்: பொருளாதாரம்,அரசியல்,கருத்தியல்.

ராஜேஸ்வரியின் ‘தேம்ஸ் நதிக்கரையில்’ என்ற இந்நாவலை மதிப்பிடும்போது இம்மூன்று அம்சங்களையும் முன்வைத்து எளிதில் கணித்துப் பார்க்கலாம்’ என்கிறார்.

எனவே சமகாலப் படைப்பகளைப் பார்க்கும்போது அவற்றில்’புனைகதைகளில்’ பெண் பாத்திரப் படைப்புக்கள்’ பற்றிய கண்ணோட்டததில் மேற்கொண்ட விடயங்களையும்; உள்வாங்கிக்கொணடு ஆய்வது இன்றியமையாதது..

இதுவரை எழுதப்பட்ட தமிழ்ப் புனைகதைகளில் பெண்களின் பாத்திரப் படைப்பு என்று ஆராயமுனைந்தால் பெரும்பாலான ஆண்களின் புனைகதைப் படைப்புக்கள்தான் வாரிக் கிடக்கும். பராணங்களும், இதிகாசங்களும் பெண்களை முன்வைத்துத்தான் கதைகளைப் படைத்திருக்கிறார்கள். ஆனால் இன்று இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில், நவீன அறிவியல், தொழில்நுட்பம் என்பன மக்களின் வாழ்க்கையின் பல அம்சங்களிலம் இடம் பிடித்து விட்டன. மறைத்து வைத்திருந்த மனித அவலங்கள்,துன்பங்கள் துயர்கள் கதைகளில் முட்டிமோதிப் பகிரங்கத்துக்கு வருகின்றன. இவற்றைக் கடந்து,சமுதாய பிரக்ஞை அற்று தமிழ் இலக்கியத்தை நகர்த்த முடியாத நிலை வந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சமதாயத்தின் பல்வித கட்டுமானங்களுக்குள்ளும்,ஆண் பெண் சமுத்துவம் என்ற ‘மனிதநேயக் கோட்பாடு’ முழுமையாக உணரப் படாமல் சிக்கியிருக்கிறது. அண்மைக் காலம்வரை,சமுதாயத்தின் கண்களாகக் கருதப் படும் பெண்களின் நிலை ஆண்கள் வரித்த கோட்டுக்குள் இதுவரை நகர்ந்தது. தற்போது,சமுதாய,பொருளாதார,கல்வி நிலை மாற்றங்களால் பெண்களுக்கான ‘சுயமான’ குரல் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.பெண்களும் கணிசமான விதத்தில் பல துறைகளிலும் தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்துகிறார்கள். அத்துடன் சிறுகதைகள் எழுதுவதில் தொடக்கம், நாவல்கள், சினிமாத் துறை போன்ற இடங்களிலும் தங்கள் சிந்தனையின் பிரதிபலிப்பைக் காட்டத் தொடங்கி விட்டார்கள்.ஆனாலும் இந்த ‘எழுத்தாளப்’; பெண்களிற் பெரும்பாலோர் கிட்டத்தட்ட ஒரு வசதியான வாழ்க்கை நிலையிலிருந்து வந்தவர்கள்.

யதார்த்தமாகப் பார்த்தால்,உலக சனத் தொகையில் 51 விகிதமாக இன்று உலகில் வாழும் பெண்களில் பெரும்பாலோர் ஆண்கள் தயவில் வாழும் வாழ்க்கை நிலையைத் தொடர்பவர்கள்.இவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் தங்கள் கஷ்டமான வாழ்க்கையிலிருந்து வெளிவந்து இலக்கியம் எழுத்து என்பவற்றில் ஈடுபடமுடியும். அவர்களின் யதார்த்த வாழ்க்கையைச் சொல்ல முடியும்.அப்படியான நீண்ட இலக்கியப் பிரயாணம் மிகப் பெரும் அனுபவம் எனக்குண்டு.

மிகவும் கட்டுப்பாடான ஓரு சிறு கிராமத்தில் பிறந்து வளந்து படிப்பு காரணமாக ஊரிலிருந்;து வெளியேறியள் நான்.அரைநூற்றாண்டாக லண்டனில் வாழ்கிறேன்.இளவயதிலிருந்தே எழுதத் தொடங்கினேன். இதுவரை பதினெட்டு நூல்களை எழுதியிருக்கிறேன். எட்டு நாவல்கள், ஏழு சிறு கதைத் தொகுதிகள்,இரண்டு மருத்துவ நூல்கள், தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வு நூல் ஒன்று. என்று,எனது நூல்களில் என்னை ஈர்த்த பன்முகத் தன்மையான சிந்தனைகள பிரதிபலிக்கின்றன.

இளம் வயதிலிருந்து,பல வித்தியாசமான பின்னணியைக் கொண்ட மக்களுடன் பழகி,அவர்களுடன் வேலை செய்து, பன்முகக் கல்வித் தகமைகளுடன்,பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் படைப்புக்களில் சிலவற்றைப் படித்த அனுபவம் எனது பரந்த கண்ணோட்டத்திற்குத் துணை செய்தது. இதுவரையிலான எனது அனுபவப் பதிவுகள், எங்களைச் சுற்றிய அளவிடமுடியாத வராலற்றுத் தடயங்களைப் பிரதி பலிக்கிறது.
எனது,’தாயும் சேயும்’ என்ற மருத்துவ நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் எம்.கே. முரகானந்தன் அவர்கள் என்னுடைய பன்முகத் தனமையான எழுத்தை விபரிக்கும்போது பின்வருமாறு கூறுகிறார். (‘தாயும் சேயும்’மீரா பதிப்பகம்.2002).’சிறுகதை,நாவல் என தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில்கடந்த மூன்ற தசாப்தங்களாக இயங்கி வருபவர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.’ஒரு கோடை விடுமுறை’முதல், ‘அவனும் சில வருடங்களும்’வரையான அவரது படைப்புக்கள் எமக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தந்தன. துணிவும் ஆற்றலும்,வசீகரமான நடையும் கொண்ட படைப்பாளி அவர்.இன்று அவர் தமது எழுத்தாற்றலை நலவியல் துறைக்கு விஸ்தரிப்பதன் டூலம் அறிவும், ஆரொக்கியமும் வீரியமும் கொண்ட புதிய தமிழ்ப் பரம்பரை உருவாவதற்கு அத்திவாரமிடுகிறார்.குழந்தை நல ஆலொசகராகக் கடமையாற்றும் அவர்இந்நூலை எழுதுவதன் மூலம் தனக்குரிய வரலாற்றுக் கடமை ஒன்றைப் பூர்த்தி செய்கிறார் எனலாம்’.

எனது எழுத்துக்களுக்கு உந்துதலும், ஆதரவும் தர ஒருசிலர் இருந்தார்கள், இன்னும் இருககிறாhகள.;.அவர்களின் உதவி இருந்திருக்காவிட்டால் எனது எழுத்துத் தொடர்ந்திருக்காது.அதில் மிக முக்கியமானவர் கோவை ஞானி அய்யா (கே. பழனிச்சாமி) அவர்கள். அத்துடன்,எனது குழந்தைகள்.மேலும்,’ உங்கள் உடல் உளம்,பாலியல் நயம் பற்றி'(மீரா பதிப்பகம் 2003) என்ற புத்தகத்தை எழுதிப் பிரசுரிக்க,கோவை ஞானி அய்யா அவர்களும், எழுத்தாளர் சுஜாதா, எழுத்தாளர் மாலன்;,போன்றோரும் அருமையான யோசனைகளை முன்வைத்தார்கள்.

என்னைப் போன்று பல பெண்கள் இன்று எழுத ஆர்வம் இருந்தும் அவர்களுக்கு உந்துதல் தருவபர்கள் இpல்லாபடியால் ,அவர்களின் சிந்தனைகள் எழுத்து வடிவில் பிரதிபலிப்பது குறைவு. குpராமத்துப் பெண்ணான எனக்குக் கிடைத்தமாதிரிப் பல பெண்களுக்குக் கல்வி வசதி ஓரளவு இன்று கிடைக்கிறது. அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கின்றன. அப்படியான எங்கள் தமிழ்ப் பெண்களின் உள்ளக் கிடக்கைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், அத்துடன் அவர்கள் எதிர் நோக்கும் போராட்டங்கள் அவர்களின் எழுத்துக்களில் பிரதிபலிக்கவேண்டும் என்று விரும்பினேன். அவர்களிற் சிலர் எழுதினாலும் அதைப் பதிவிட வசதியற்றிருக்கிறார்கள். எழுத்தார்வம் உள்ள இவர்களைச் விழிப்படையசெய்து பெண்களின் ‘சுயநிலையை’ அவர்கள் மூலம் உலகம் அறிய வேண்டும் என்று பல காலமாக ஆவல் கொண்டேன். அதன்மூலம் பெண்களின் சிந்தனையின் பிரதிபலிப்பை, அவர்கள் வாழும் சூழ்நிலையை,அவர்களின் எதிர்பார்ப்பை,இவர்கள் வாழும் காலத்தினதும் உலகத்தினதும் சரித்திரத்தைப் பதிக்க வேண்டும் என மிகவும் விரும்பினேன்.

எனவே ‘சாதாரண இந்தியத் தமிழ்ப் பெண்களை எழுதத் தூண்ட வேண்டும் அவர்களுக்கான பரிசை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்ற எனது ஆவலைக் கோவை ஞானி அய்யர் அவர்கள் சொல்லி அவரின் உண்மையான பங்களிப்பு மூலம் இந்தியாவில் பெண்கள் சிறுகதைப் போட்டியை ஆரம்பித்தேன். அவரின் அரும் பெரும் ஆதரவுடன் 1998ம் ஆண்டு பெண்கள் சிறுகதைப் போட்டி கோவை நகரில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் போட்டியை 2008ம் ஆண்டுவரை தொடர்ந்தோம். புதினொரு பெண்கள் சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்தன. சில நூறுபெண் எழுத்தாளர்களை உருவாக்கினோம். அவர்கள் எழுதிய 100 சிறு கதைகளைத் தொகுத்து காவ்யா நிறுவகம் ஒரு பிரமாண்டமான தொகுதியை 2005ம் ஆண்டு வெளியிட்டது.அந்தப் போட்டியில் கலந்து கொண்ட சிலர் இன்று தமிழக எழுத்துத் துறையில் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சுpலர் பிரபலம் பெற்றிருக்கிறார்கள்.

அந்தப் பெண்கள் எழுதத் தொடங்கிய ஆரம்பப் புனைகதைகளில் தொடக்கம் 2008ம் ஆண்டு வரையிலான புனைகதைகளில் பெண்பாத்திரப் படைப்பு எப்படி இருக்கிறது என்பதைத்தான் இன்று பேச எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இவர்கள் மிகவும் சாதாரண பெண்கள். பல தரப் பட்ட பின்னணியைக் கொண்டவர்கள். இன்றைய கால கட்டத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்வதற்கான பல தகவல்களை இவர்களின் படைப்புக்கள் தரும் என்பது எனது அபிப்பிராயம்.

அத்துடன், எண்பதுகளில் தமிழ் நாவல்’ என்று கோவை ஞானி அய்யா அவர்களின் பதிவில் சில பெண்எழுத்தாளர்களான, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ராஜம் கிருஷ்ணன்,காவேரி,சிவகாமி ஆகியவர்களின் படைப்பில் பெண்பாத்திரப் படைப்பு பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் தகவல்களையம் பகிர்ந்து கொள்கிறேன்.மேலும் எனது இலக்கிப் படைப்புக்களில் பெண்பாத்திரங்கள் எப்படிப் படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அந்தப் படைப்புகளுக்கு முன்னுரை எழுதியவர்களின் பதிவிற் சிலவற்றையும் குறிப்பிட்டிருக்கிறேன.;

1998ம் ஆண்டு பெண்கள் சிறுகதைப் எழுத்துப்போட்டியை ஆரம்பித்ததும், முதலாவது போட்டிக்கு,43 பெண்கள் தங்களின் 45 சிறுகதைகளை அனுப்பியிருந்தனர். அத்தனைபேரும் புதியவர்கள். கோவை ஞானி அய்யா இவர்கள் பற்றிக் குறிப்பிடும்போது,’இக்கதைகள் எழுதியவர்களில் பலர் தமிழ் சிறுகதைக்குப் புதியவர்கள்.காலம் காலமாகத் தமக்குள் அடக்கி வைக்கப் பட்டுள்ள உணர்வுகளை,கிடைத்த இந்த வாய்ப்பின்போது,சிலரேனும் அற்புதமாய் இந்தக் கதைகளில் வெளிப் படுத்தியிருக்கிறார்கள்.வடிவம் என்ற பெயரில் இவர்களின் தேர்ச்சிகுறித்து நமக்குள் மாறுபாடு இருக்கலாம்.வடிவ அழகை ஒதுக்கி வைத்துப் பார்க்க இயலுமானால்,இக்கதைகளுக்குள் பேரளவில்,புதிய ஒளிச் சிதறல்களை,விடுதலைக்கான ஆவேசத்தை நம்மால் கண்டு பரவசப்படமுடியும்.இவர்களிலிருந்து எதிர்காலத்தில் ஒரு புதிய சமுதாயம் எதிர்காலத்தில் மலரும் (2008)’ என்று சொன்னார்.

மூவர் கொண்ட நடுவர் குழு ஒன்று அத்தனை கதைகளையும் படித்துப் பரிசீலித்து இருகதைகளைப் பரிசுக்காகத் தெரிவு செய்தார்கள். 12 கதைகளைக் கொண்ட முதலாவது புத்தகம் ‘காயங்கள்’ என்ற பெயரில் வெளிவந்தது. இப் பெண்களின் விழிப்புணர்வு மற்றப் பெண்களுக்கும் செல்ல இந்த முதற் புத்தகம் உதவியது.

இதைத் தொடர்ந்து,’உடலே சவப் பெட்டியாக'(1999).’காற்றாய்ப் புயலாய்'(2000).’பிளாஸ்டிக் மனிதர்கள்'(2001).’உளவு மாடுகள்'(2002),’புதிய ஏவாள்@(2003).’கனாக் காலம்'(2004).’புதிய காளி(2005).’கனலும் எரிமலை’ (2006).’ சுடும் நிலவு'(2007),’இலையுதிர்காலம்'(2008). என்று ஒட்டுமொத்தமாகப் பதினொரு தொகுதிகள் வெளிவந்தன.

மேற்குறிப்பிடப்பட்ட தலையங்கங்களிலிருந்து இத்தத் தொகுதியில் என்னமாதிரிக் கதைகள் எழுதப் பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். அவை,பெண்கள் துயர் சொல்லிக் கண்ணீர் வடிக்கும், பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் கண்டு பீரிட்டெழும், பெண்களின் இந்த நிலை மாற என்ன செய்யலாம் எனக்குமுறும்.தமிழ் இலக்கியத் துறையில் இது ஒரு பிரமாண்டான முயற்சி.பெண்கள் தங்கள் வாழ்க்கையை இலக்கியத்தில் பிரதிபலித்தது அற்புதமான ஒரு விழிப்பு நிலையைக் காட்டுகிறது. இதை ஆங்கிலத்தில், ‘சோசியோ அந்திரபோலோஜிகல் ஸ்ரடி-‘ அதாவது. சமதாய வரலாற்றுப் பதிவு என்று சொல்லலாம்.இப்படி முயற்சிகளை இலக்கிய ஆர்வலர்கள் பாராட்டவேண்டும். சமுதாய விழிப்புணர்வுகளையும், சமகால மாற்றங்களையும் ஆய்வு செய்பவர்கள் இந்த முயற்சிகளுக்குள் மறைந்திருக்கும் வரலாற்றைச் சொல்லவேண்டும்.

இன்று எனது பேச்சுப் பொருளாக இந்தத் தொகுதிகளில் உள்ள சில கதைகளில் பெண்களின் புனைகதைகளில் பாத்திரப் படைப்பு என்ற விடயம் பற்றி ஒரு சிறு குறிப்புத் தர முயற்சிக்கிறேன். இவர்களின் கதைகளில்,காலம் காலமாக ஆண்களின் புனைகதைகளில் பரவலாககக் காணப்படும் பல உத்திகளோ அல்லது பெண்களுக்கான மறைமுக அறிவுரைகளோ கிடையாது.

அத்துடன்,ஆண்களின் உள்ளுணர்வின் பிரதிபலிப்பாகத் தொடங்கும் பெண் உடம்பு வர்ணனைகளோ அல்லது. ஓரு பெண் என்னவென்று ஒரு ஆணின் தேவையை உணர்ந்து கொண்டு நடக்க வேண்டும் என்ற ஆணாதிக்க வாசகங்களோ அல்லது ஒரு பெண் என்பவள் காலம் காலமாக அவளுக்கென்று வரையறுக்கப் பட்ட கோடுகளுக்குள் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற போதனைகள் பெரும்பாலும் கிடையாது. பெரும்பாலான கதைகள். பெண்கள் வாழும் யதார்த்த சூழ்நிலையைப் பிரதி படுத்தி எழுதப் பட்டிருக்கின்றன.

1998ம் ஆண்டில் ஆரம்பித்த முதலாவது போட்டியில் எழுதிய கதைத் தொகுதியான,’காயங்கள்’ என்ற தொகுதியின்;; பின் அட்டையில், ‘ பெண் குடும்பத்தைத் தாங்கி நிற்கிறாள்.துயரங்களைத் தாங்கிக் கொண்டு இவள் செய்வது தவம்.ஆணாதிக்கச் சமூகம் இவளுக்கு எற்படுத்தும் காயங்களுக்கு இவள் எவ்வளவு காலம் மருந்திட்டுக்கொண்டிருக்க முடியும்? காயங்களை உற்பத்தி செய்யும் சமூக நிலவரங்களுக்கு எதிரான இவள் போர் தொடுக்கவேண்டும்.இதற்கான விழிப்புணர்வை பெரும் நிலையில் இவளுக்குள் சிறகுகள் முளைக்கும்.இவள் உலகத்தைப் புதிதாக மாற்றுவாள்.இவள் கைகளில் உலகம் பத்திரமாக இருக்கும். இந்த உணர்வோடு வெளிவருகிறது இந்தச் சிறுகதைத் தொகுப்பு’ என்று ‘நிகழ் வெளியீடு குறிப்பிட்டிருக்கறது.

முதலாவது தொகுப்பில்,முதலாவது கதையாயப் பதிவு செய்யப் பட்டிருக்கும்’தீப்பொறி’என்ற கதை சென்னையைச் சேர்ந்த லலிதா என்பரால் எழுதப்பட்டது. இவரது கதை பெண்மையின் சுய அடையாளத்தின் தேடலைப் பெண்களின் கருத்தாடல் மூலம் பதிவிடுகிறார். இவர் படைத்திருக்கும் பெண்கள் ஒரு பெண்கள் ஹாஸ்டலில் வாழும் பல ரகப் பட்ட பெண்கள்.அதில் வெண்ணிலா என்ற பாத்திரம், காலம் காலமாகத் தொடரும் கல்யாணங்களின் பரிமாணத்தையும் அதில் பெண்களின் நிலையையும் 1998ம் ஆண்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கிறாள்.

இன்றைய பெரும்பாலான பெண்களின் குடும்ப,சமுதாய நிலை எப்படி மாறிக் கொண்டு வந்தது என ஆய்வு செய்யும் அறிஞர்கள்,’மனிதன் நாகரீகமடைந்து,அறிவு வளர்ச்சி,தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி விருத்தியடையத் தொடங்கியதும், ஒரு காலத்தில் ஒரு கூட்டத்தின் தலைவியாகக் கணிக்கப் பட்ட பெண்ணின் தராதரம் சமுக வளர்ச்சி, உறவு. சாதி,இனம் என்பவற்றின் முக்கியத்துவத்தைத் தொடரப் பாவிக்கப் படும் பண்டமாற்றாகிறாள்’ என்று சொல்கிறார்கள்.

இந்திய சரித்திரத்தில் மன்னர்கள் போரிற் தோற்றால் அவரின் மனைவியை வெற்றி கொண்ட மன்னனுக்குக் கொடுத்து விடுவது நடந்திருக்கிறது. அதாவது ‘பெண்’ என்பவள்,அவள் சார்ந்த குடும்பத்தின், சமுதாயத்தின் தேவைகளுக்கேற்ப பாவிக்கப் படவேண்டியவளாகவே சமுதாயக் கட்டுமானங்கள் வரையறை செய்திருந்தன. உதாரணம், கி.மு.நான்காம் நூற்றாண்டில் முதலாம் சந்திரகுப்த மவுரியனின் (கிமு.322-கிமு.298) மகன் இராமகுப்தன் எதிரிகளாற் தோற்கடிக்கப் பட்டபோது, தன்மனைவியான துருவதேவியை எதிரிகளிடம் கொடுத்து விடுகிறான்.இதைக் கேள்விப் பட்டு கோபமடைந்த சந்திரகுப்தன்,துருவதேவி மாதிரி வேடமணிந்து எதிரிகளிடம் சென்று அவர்களை அழிக்கிறான்’ என்ற வரலாறு தெரிகிறது. (தமிழ்க் கடவுள் முருகன்’ (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம.;1999, பக் 47).

எனவே கலாச்சார ரீதியாக ஆய்வு செய்தால் திருமணமான பெண் அவளுக்கென்று ஒரு சுய அடையாளமற்றவளாக வாழ்ந்து முடிவது தெரிகிறது. பெரும்பாலான சமுதாயங்களில் கல்யாணம் மிகவும் முக்கியமான மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்கின்றன.
1. கடமைக்கான கல்யாணம். சாதி. மத, இன,பணக் கட்டுமானங்கள் சார்ந்தது.இதில் ஆண்பெண் ஒருத்தரை ஒருத்தர் விரும்புவது, புரிந்து கொள்வது என்றெல்லாம் பெரிதாக இருக்காது.இன,வர்க்க.சமய.சமுதாய எதிர்பார்ப்பை முன்னெடுக்கும் திருமணங்கள் இவை. இதில் ஆண் பெண் இருவரின் குடும்ப சேர்க்கை அத்துடன் வாரிசுகள்,பொருளாதாரத் தேடல்கள்தான் முக்கியம்.இதுதான் மிகப் பிரமாண்டமான தொகையில் தொடரும் மனித விருத்தி சார்ந்த திருமணங்கள்.

2.காதலுக்கான கல்யாணம். இது சாதி மத, இன எல்லைகளைக் கடந்தது. இரு மனித உறவுகளின் சங்கமித்த நெருக்கத்தைப் பிரதிபலிப்பது. பல தரப் பட்ட சவால்களை எதிர் நோக்கிய இப்படியான கல்யாணங்கள சிலவேளை அவர்கள் எதிர்பார்த்த சந்தோசத்தைக் கொடுக்காமல் பரிதாபமான முடிவைக்காண்பதுமுண்டு. இந்தியாவிலும்,இன்னும் பல நாடுகளிலும் நடக்கும் காதல் கல்யாணங்களும்.அதனாற் தொடரும் கௌரவக் கொலைகளும் இதற்கச் சான்றாகும்.

3 அடுத்தது, மேற் குறிப்பிட்ட இருநிலைகளையும் கடந்த சந்தர்ப்பங்களில் அமையும் கல்யாணங்கள். இவை இரு புத்திஜீவிகளிடையோ கலைஞர்களுக்கடையோ நடக்கலாம். இங்கு பணம், சாதி. இனம் என்ற பல்வித எல்லைகளையும் தாண்டி அவர்கள் தாங்கள் நம்பும்,கலை சார்ந்த அல்லது அறம் சார்ந்த பாதையில் வாழ்க்கையைத் தொடரும் புத்திஜீவி;கள் இப்படியான உறவுகள் மூலம்.தங்கள் உறவைத் தொடர்வதாக இருக்கலாம்.இங்கு இருவரிடமும் ஒருத்தருக்கொருத்தர் ஆளுமை செலுத்தும் மனம் பான்மை இருப்பதில்லை. இவை எங்கள் சமுதாயத்தில் மிகக்குறைவு. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இன்று பரவலாக உள்ளது.

இந்த வித்தியாசங்களை விளக்கும் விதத்தில், இலங்கை சாகித்திய அக்கடமிப் பரிசு பெற்ற.சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள.’பனி பெய்யும் இரவுகள்’என்ற நாவலை 1993ல் (பாரி பிரசுரம்) எழுதியிருக்கிறேன். இதற்கு முன்னுரை எழுதிய செ. கணேசலிங்கம்,’பருவகால அடிப்படையில் தோன்றும் காதல்,காதலுக்காக தன்னை அர்ப்பணிப்பது,பரஸ்பரம் உணர்ந்துகொண்ட இன்டெலெக்சுவல் காதல் என மூன்றாகக் காதலைப் பிரித்தும் பார்க்கும் கோட்பாட்டை ஆசிரியர் கதை மாந்தர் மூவரின் தனிப்பட்ட காதலுணர்வுகள் மூலம் நாவலில் காட்ட முனைந்துள்ளார்’ (பக்7) என்று குறிப்பிடுகிறார்.

‘தீப்பொறி’ கதையில் (பக்8) லலிதா என்ற எழுத்தாளர் படைத்திருக்கும் பெண்பாத்திரம், முதலாவதாகச் சொல்லப்பட்ட மேற்கண்ட பாரம்பரியத்தைக் கேள்வி கேட்கிறாள்.
‘நான் என்ன நினைக்கிறேன்னா காதல் கல்யாணம் கொஞ்ச காலத்துக்கேனும் ஒரு சமத்துவம் நெறஞ்சதா பொண்ணுக்குக் கொஞ்சம் மரியாதை கொடுக்கிறதா இருக்கும்.பெரியவங்க ஏற்பாடு செய்யற திருமணம் சொந்தத்தில அல்லது சாதிக்குள்ளே,அந்த இடத்துல பொண்ணுக்கு மரியாதை இல்லே.அவ கொண்டு வர்ற பணத்துக்குத்தான் எல்லாம்.பணத்தைக் கொடுத்தாலும் பொண்ணுங்கிறவ அடங்கிப் போகணும் இல்லாட்டி அடக்கி ஒடுக்கிடுவாங்க.இது தானே காலம் காலமா நடந்துகிட்டு இருக்கு.இதுக்கு ஒரே ஒரு மாற்று காதல் கல்யாணம்தான்’ என்கிறாள. இந்தப் பாத்திரப் படைப்பு இன்று ;கல்யாணமும் பெண்களும்’ பற்றி இந்தியாவிலிருக்கும் ஒரு புதிய சிந்தனை வடிவாக இருக்கலாம். அதைப் பெண்களாற்தான் யதார்த்தமாகப் படைக்கமுடியும்.

ஆனால் பெண்கள் 1998ம் ஆண்டு,தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்க விரும்புவது ஒன்றும் புதிய விடயமல்ல. சுயம்வர திருமணங்களை நடாத்தியவர்கள் எங்கள் முன்னோர்கள்.
காலம் மாறியபோது ஆண்கள் தங்கள் விருப்பு வெறுப்பு,ஆசை அபிலாசைகளைப் பிரதிபலிக்கம் பெண் பாத்திரங்களைத் தங்கள் படைப்புக்களில் பிரதிபலித்தார்கள். அதுதான் அறம் என்றும், வாழ்க்கை நியதி என்றும் திட்டவட்டமாகச் சொல்லிக் கொண்டு வருவதை இன்றைய பெண்கள் கேள்வி கேட்பதும் தங்கள் கல்வியின் நன்மையால் கிடைத்த புத்திஜீவித்துவத்தின் அடிப்படையில் தங்களைச் சார்ந்த சமூகத்தில் தங்கள் இருப்பு நிலை என்று வாதாடுவது லலிதாவின் படைப்பில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. தனது கதையில் ‘பெண்விடுதலையையும் சமுக விடுதலையையும் பின்னிப் பிணைத்திருக்கிறேன்’ என்று தனது படைப்பு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். (பக் 12.).

ஒரு சமுதாயம் எப்படி உலக அரங்கில் மதிக்கப் படுகிறது என்பதற்கு அந்த நாடு தனது நாட்டின் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அவதானித்து குறிப்பிடப்படுகிறது என்பதற்கு, மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானுக்குப் போர் தொடுத்ததற்குக் கூறிய ஒரு காரணத்தை முன்னுதாரணமாகக் காட்டலாம். அதாவது, மதரீதியான அமைப்பான தலிபான் பயங்கரவாதிகள் பெண்களை மனித நேயமற்ற விதத்தில்,பெண்களின் கல்வியை மறுப்பதிலிருந்து பெண்களின் ஒவ்வொரு கணத்தையும் ஆண்கள் கட்டுமானத்தில் நடத்தும் விதத்தை உலகுக்கு எடுத்துக்காட்டி, மனிதமற்ற ஆபகானிஸ்தான் மீதான மேற்கு நாட்டவரின் ஆக்கிரமிப்பு,மனித நேயத்தை முன்னெடுத்த போர் என்று நியாயம் காட்டினார்கள். ஆபகானிஸ்தான் மட்டுமல்ல உலகில் பெரும்பாலன நாடுகளில் பெண்கள் இரண்டாம் பிரஜையாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பன்முகத் தன்மையுடன் இன்று மிகவும் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில் பெண்களுக்கெதிரான கொடுமைகள்,தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்றின்படி, உலகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றென்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதற்குப் பல உதாரணங்களாக, இந்தியாவில் நடந்த,உலகமறியப்பட்டப் பல பாலியற் கொடுமை சம்பவங்களுள்ளன. அவற்றை இங்கு விளக்கிக் கொண்டிருக்க தேவையில்லை.

பெண்கள் சிறுகதைப் போட்டிக்கு 2005ம் ஆண்டு வந்த’புதிய காளி’;’ என்ற தலையங்கத்தைக் கொண்ட தொகுதியுpலுள்ள ‘அவளும் ஒரு பெண்தானே’ என்ற கதையில்; வரும் பெண்பாத்திரம் வளர்மதி மூலம், பாலியற் கொடுமைக்குள்ளான பெண்ணின் வாழக்கைப் போராட்டம் சொல்லப் படுகிறது.
அதை எழுதியவர் பெயர் எஸ்.பர்வின் பானு.சென்னையைச் சேர்ந்தவர். இக்கதை மூலம்,’சமூக அவலத்தை எதிர்த்துத் துணிந்து நிற்கின்ற பெண்ணை உலகம் புரிந்து கொள்ளாமல் போகலாம். அவள் நம்பும் உறவுகள் புரிந்து கொள்ளாமல் போனால் அவள் நிலை என்னவாகும் என்ற என் சிந்தனையின் விளைவே இந்தக் கதை’ என்று கதை ஆசிரியர் சொல்கிறார். அதாவது, பெரும்பாலான சமுதாயங்களில், பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்தால் அந்தக் கொடுமைக்குக் காரணம் அந்தப் பெண்தான் காரணம் என்று பழிசுமத்தி அவளை வதைப்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கதையில்,படிப்பறிவற்ற ஒரு காமுகன் அவளை வழிமறித்துக் கொடுமை பாலியல் செய்யும்போது அவனை அவள் கொன்று விடுகிறாள்.

இறந்தவனின் தமயன் அவளில் வழக்குத் தொடர்கிறான். வளர்மதி என்ற பெண் இறந்து விட்ட தனது தம்பியைக் ‘காதலித்ததாகவும்’ வளர்மதி அவனை மறைவிடத்திற்கு வரவழைத்து கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டுகிறான். அவள் குடும்பமும் அவளைப் புரிந்து கொள்வதைத் தவிர்த்து அவளை ஒரு ஈவிரமற்ற கொலைகாரியாக நடத்துவதைத் தாங்காமல் அந்தப் பெண் தனது வாழ்க்கையைத் தொடர வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கதை செல்கிறது.

இந்தக் கதைபோல் எத்தனையோ கதைகளைப் பலர் கேட்டிருக்கிறோம். தன்னைக் கெடுத்தவனை அவள் பழிவாங்கியதை இந்தக் கதையில் உறவினர் பெரிதுபடுத்தாமல் அவளை ஒரு அசாதாரணமான முறையில் அணுகுவது, எங்கள் கலாச்சாரம் எவ்வளவு தூரம் பெண்களை மதிக்கிறது, புரிந்து கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. பெண்களுக்கு எதிராக எடுக்கப் படும் பாலியல் வன்முறைகள் என்பது மனித உரிமையை மீறும் ஒரு கொடிய செயல் என்பதை முன்னெடுத்துப் போராடாமல் ஒரு பெண்ணின்மீது பழியைப் போடுவது அதர்மம் என்பதை உணர்ந்த அந்தப் பெண்பாத்திரம் தனது உறவுகளையே துறந்து தனது எதிர்காலத்துடன் போராட வெளியேறுகிறார் என்பது இக்கதையில் சொல்லப் படுகிறது.

இத் தொகுதிக்கு முன்னரை எழுதிய கோவை ஞானி ஆய்யா அவர்கள், ‘ புதிய காளி ‘ என்ற இந்தத் தொகுப்பில்.கலை நேர்த்தியோடு,கவித்துவ நடையில்.சில வித்தியாசமான கோணங்களில், சமூகச் சூழ்நிழலில்,சில கூர்மையான அனுபவங்களைப் பதிவு செய்கிற பல நல்ல கதைகள் உள்ளன.புதியவர் சிலரும் இத் தொகுப்பில் இடம் பெற்றள்ளனர்.காளி என்ற தொன்மம் நமக்குத் தேவையான பெண்ணியப் பார்வையைக் கச்சிதமாக வெளியிடுவதை வாசகர்கள் கவனிக்க முடியும். காளி வடிவத்திற்குள் நம் காலத்துப் பூலான் தேவியையும் நாம் தரிசிக்க முடியும்.’ என்கிறார்

இத் தொகுப்புக்குப் பின் அட்டைக் குறிப்பு எழுதிய,சூ.இ.குழந்தை என்பவர்,’காலம் தோறும் பெண்மையின் சீற்றம் காளியின் மூலம் பொங்கி எழுகிறது.கண்ணகியின் கனலாய் தகிக்கிறது.மேகலையாயப் பசிப் பிணி தீர்க்கிறது. மாதவியின் ஓயாத நடனம் ஆதிக்க மண்டபங்களை அதிரவைக்கிறது.ஐம்பதினாயிரமாண்டு நீண்ட எங்கள் வரலாறு எங்கே?எங்கள் படைப்புக்கள் எங்கே? நாங்கள் ஆக்கியவையும்,செதுக்கியவையும், பதுக்கியவையும், எங்கே? எங்கள் ஆற்றலுக்கு அணைபோட்டவன் எவன்? முலைகளைத் திருகி எறிந்து நகர்களைப் பற்றியெரியச் செய்யும் கண்ணகியின் ஆவேசங்களாய், ஆற்றலோடு சிந்திக்கும்,ஒளவையாரின் கேள்விகளாய் அணிவகுக்கின்றன. புவிக்குள் ஒரு பூகம்பம்.பெண்மைக்குள் ஆயிரம் பூகம்பங்கள். பல நூறு எரிமலைகள். பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கும்வரை பெண் காளியாக மாறுவது தவிர்க்க முடியாது’ என்று பொங்கி ஆரவாரிக்கிறார்.

2008ம் ஆண்டு வந்த ‘இலையுதிர் காலம்’; என்ற தொகுதி வந்தது. நாங்கள் பெண்களுக்கான சிறுகதைப் போட்டி ஆரம்பித்து பத்தாண்டு ஆண்டுகளின் கடைசித் தொகுப்பு. இதில் ஒரு கதை’ஆசை ஆசை’ என்ற தலைப்பிலுள்ளது. இதை எழுதியவர் சென்னையைச் சேர்ந்த ரகிமா என்பவர். திலகவதி என்ற ஒரு சாதாரண பெண்ணை மையமாக வைத்த கதை. இந்தத் திலகவதி தான் செய்யும் நடவடிக்கைகளுக்கு என்ன எதிர்விளைவுகள் வரும் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவள். வீpட்டார் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்தவள்.இவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபின் அவளுடைய கணவன்; நல்ல வேலை தேடுவதாகச் சொல்லிக் கொண்டு அவளுடைய நகை நட்டுக்களுடன மறைந்து விட்டான்.

பத்து வருடங்கள பறந்து விட்டன.அவள் வாழ்க்கையின் தேவைகள் காரணமாக,இன்னொருத்தனுடன் வாழ்கிறாள்.உற்றார் உறவினர் வெறுக்கிறார்கள். திலகவதியின் மகன் தாய்க்குச் சொல்லாமல்,தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போய்விட்டான்.மகளும் அப்படியே. ஆனால் அந்த மகள்,தன்மான உணர்வு கொண்டவள். தன்னில் சந்தேகப் பட்ட கணவனை உதறிவிட்டுத் தாய் வீடு வருகிறாள். அந்த மகளைச்;’ சின்ன வீடாக’ வைத்திருக்க திலகவதியின் தம்பி கேட்கிறான். அவனைத் திலகவதியின் மகள் வெறுத்துத் துரத்துகிறாள்.இதையெல்லாம் நினைவில் புரட்டிக் கொண்டிருப்பதைத் தவிரத் திலகவதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்தக் கதையில், திலகவதியின் உற்றார் உறவினர் திலகவதி ஓடிப்போன கணவனை நினைத்து திலகவதி ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணாக வாழ்க்கை முழுதும் வாடி நலிவதைக் கற்பான பெண்ணுக்கு அடையாளம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் என்று தெரிகிறது.இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்,வேலைக்குப் போகும் பெண் கடந்த நூற்றாண்டில் வீட்டோடு அடைந்து கிடந்து பெருமூச்சு விட்டபடி வாழ்க்கையிழந்த பெண்ணாக வாழ நினைப்பது மனித நேயமற்றது என்பதை உணராத சமூகமாகவிருக்கிறது.

இந்தப் போட்டிக்குத் தனது முழு ஆதரவையும்,நேரத்தையும் அர்ப்பணித்தவர் கோவை ஞானி அய்யா அவர்களாகும். ஒவவொரு தடவையும் கிடைக்கும் 60-70 சில கதைகளைப் படித்துப் பரிசுக்கும் பதிவுக்குத்; தேர்ந்தெடுக்கும் கடினமான வேலையைச் சில முனைவர்களுடன் சேர்ந்து பொறுப்பெடுத்துக் கொண்டவர். பெண்களின் சிந்தனைக்கு உருக்கொடுக்க, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை இலக்கியமாகப் படைக்கத் தனது தள்ளாத வயதிலும் தனது மனித நேயப் பணியைத் தொடர்ந்தவர் கோவை ஞானி அய்யா அவர்கள். இந்தத் தொகுதி பற்றி கோவை ஞானி அய்யா அவர்கள் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார்.

அவர்; இந்தத் தொகுப்பைப் பற்றிச் சொல்லும்போது.’இத்தொகுதியிலுள்ள உள்ள ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பிடித்திருக்கிறது.நம் சமூகச் சூழலில் நமக்குள் எவரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்தச் சூழல் முற்றாக மாறினால் ஒழிய நம் தேசம்.நம் மரபு. என்று மரியாதைக்குப் பேசுவதற்கில்லை.நம் சமூகத்தின் சிக்கல குறித்து குறைந்த அளவுக்கேனும் நம் எதிர்வினைகளை வெளிப் படுத்தத்தான் வேண்டும்.இயலுமானால்,இவை தீர போராடவும்தான் வேண்டும்.இன்றில்லை என்றாலும்,இனிவரும் எதிர்காலத்தில் போராடி சம் சமூகத்தை மாற்றியமைக்கத்தான் வேண்டும்.இதுவே நமக்கு முதல் நோக்கம். கலைத் தரமும் தேவைதான்.சமூக உணர்விலிருந்து கலை உணர்வைப் பிரித்துப் பேசவும் முடியாது.கலைத் தரம் என்று பேசி சமூக உணர்வு குறித்து பேலாமலும் இருக்க முடியாது.

நம் சகோதரிகள் பேசுகிறார்கள்.இவர்கள் இன்னும் உரத்துப் பேசவேண்டும்.இயலுமானால் போராடுபவர்களுடன் தம்மை இணைத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய உணர்வுத் தூண்டுதலை இந்தத் தொகுப்பு தரமுடியும்( ‘இலை உதிர் காலம்’பக்3 ஞானி 16.12.2008.) என்று குறிப்பிடுகிறார். அத்துடன் அவர் எனது சிறுகதைத் தொகுதியான’அரைகுறை அடிமைகள்'((மணிமேகலைப் பிரசுரம் 1998) என்ற தொகுதிக்கு முன்னுரை எழுதும்போது,’ஆணுக்குப் பெண் அடிமை, அரசுக்குக் குடிமக்கள் அடிமைகள். ‘அரைகுறை அடிமைகள்’ என்ற இந்தக் கதை நமக்குள் எழுப்பும் உணர்வுகள் வழியே இந்தக் கதைத் தொகுப்பில் உள்ள அநேகமான எல்லாக் கதைகளையும் படிக்க முடியும்'(பக்5) என்கிறார்.

தமிழ் இலக்கியப் பாதையில் பெண்களின் எழுத்துக்கள் பற்றியோ அல்லது புனைகதைகளில் பெண்களின் பாத்திரப் படைப்பு பற்றியோ இதுவரையும் ஏதும் பரந்த விதத்தில் விமர்சனக் கட்டுரைகளோ அல்லது ஆய்வுக் கட்டுரைகளோ விதத்தில் வந்ததாகத் தெரியாது. எனது நாவல்கள், சிறுகதைகள்பற்றி பல பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள், பி.ஏ, எம் ஏ, எம்பில், பிஎச்டி போன்ற பட்டப்படிப்பிற்கான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். அண்மையில் 2016ம் ஆண்டு,கொங்கு நாடு கலை அறிவியற் கல்லூரி தமிழ்த்துறையைச் சேர்ந்த த. பிரியா என்பவர் தனது ‘முனைவர்’பட்டப் படிப்புக்கான ஆய்வை, எனது எட்டு நாவல்களைத் தேர்ந்தெடுத்து, ‘ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதினங்களில்,புலம் பெயர்ந்தோரின் வாழ்வியற் சிக்கல்கள்’;என்ற தலைப்பில் செய்திருக்கிறார்.

ஆனால் எனது படைப்புக்கள் பற்றி ஆய்வு செய்த பலரின் ஆய்வுக் கட்டுரைகள் எனக்குக் கிடைக்கவில்லை. எனது கதைகளில் பெண் பாத்திரப் படைப்புக்கள் பற்றி இதுவரை ஒரு ஒட்டுமொத்த பார்வை வைக்கப் படட்டதா என்று எனக்குத் தெரியாது. தமிழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியகளும் முனைவர்களும், எனது படைப்பக்களுக்குப் பன்முக மதிப்பீடுகள், திறனாய்வகள்,வமர்சனங்களை எழுதியிருக்கிறார்கள்.ஆனால் ‘பெண்பாத்திரப் படைப்பு’ சார்ந்த விசேட பாhவையைப் பதிவிடவில்லை. அப்படியில்லை என்றால்,அதற்குக் காரணம் பலவாக இருக்கலாம்.

புலம் பெயர்ந்த எனது அனுபவங்களில் என்னால் படைக்கப் படும் பல்நாட்டுப் பெண்களின் நிலை பற்றிய யதார்த்த உணர்வு அவர்களுக்கு அன்னியமாகவிருக்கலாம். எனது படைப்பான,’வசந்தம் வந்து போய்விட்டது’ (குமரன் பதிவு 1997) என்ற நாவலுக்கு முன்னுரை எழுதிய திருமதி,புவனேஸ்வரி அவர்கள் பேசும்போது,’பெண்கள் எந்த நாட்டை.எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலும் ஆணாதிக்க கருத்தியலின் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும் நாவலின் பெண்கதா பாத்திரங்கள் வாயிலாக ராஜேஸ்வரி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்’ என்கிறார்.

மேலும், இந்திய,இலங்கைப் பெண் எழுத்தாளர்களுக்கில்லாத அனுபவம் மிக நீண்டகாலமாகப் புலம் பெயர்ந்து அன்னிய கலாச்சாரத்துடன் இணைந்ததால் எனக்குக் கிடைத்திருக்கிறது.இதில் முக்கிய அம்சம், அனுபவங்ளை ஒளிவு மறைவின்றி எனது படைப்புக்களில் பதிவிடுகிறேன். இந்த அனுபவங்கள் இந்திய, இலங்கை வாசகர்களக்கு ஆச்சரியத்தை,அல்லது கேள்விகளை எழுப்பலாம்.

எனது சிறு கதைத் தொகுதியான,’ இலையுதிர்காலத்தில் ஒரு மாலை நேரம்’ (லோகோஸ் பதிவு 2002) என்ற படைப்புக்கு,முன்னுரை எழுதிய இலங்கையின் பிரபல எழுத்தாளரான திரு .செ. கணேசலிங்கம் அவர்கள், ’80-90 சதவிகிதமான தமிழ் எழுத்தாளர்கள் யாவரும் ஆண்கள்.அவர்களே பெண்களை,பெண்கள் உணர்வுகளை தமது ஆணாதிக்க பார்வையிலேயே விபரிப்பர்.பெண் எழுத்தாளர்களும் ஆண்கள் எழுதிக் காட்டியபடியே எழுதுவது வெறும் ஏமாற்றமாகும்.ராஜேஸ்வரியின் தனிச்சிறப்பு அவர் இந்த வலையில் விழுந்து விடுவதில்லை.பெண்களின் உணர்வுகளை,அவர்களது யதார்த்த எண்ணங்களைத் துணிச்சலுடன் தன் நாவல்,சிறுகதைகளில் வெளிக் கொணர்வதாகும்'(பக்7) என்கிறார்.

பெண்கள் பற்றிய என்னுடைய யதார்த்தமான பிரக்ஞைக்கு எனது லண்டனிற் கிடைத்த பல தரப்பட்ட பட்டப் படிபு;பக்களும் அனுபவங்களும் அடிகோல்களாக அமைந்தன என்பது எனது கணிப்பு. எனது வாழ்க்கையில் பல படிப்புக்களைபப் படிப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் பல தமிழ்ப்பெண் எழுத்தாளர்களக்குக் கிடைப்பது அரிது. எனது அனுபவத்தில், படிப்பு, உத்தியோகம், பொருளாதார நிலை மேன்மை என்ற பலதரப் பட்ட விதத்தில் பெண்கள் முன்னேறினாலும், ஏதோ ஒரு மறைமுகமான ஆணாதிக்கக் கோட்பாடுகள் பெண்களை அழப் பண்ணுகின்றன, என்பதைக் கண்டிருக்கிறேன் அவையே எனது கதைகளில் பிரதிபலிக்கின்றன. அந்தப் பெண்களின் அடையாளங்கள் பல. பல நாடுகள்,பல மொழிகள்,பல இனங்கள்,பல சமயங்களை; ஆனால் ஆணாதிக்க வரையறுப்பில் அவர்களின் அடையாளம் வித்தியாசம் இல்லை.ஆண்களுக்காகப் படைக்கப் பட்ட பெண்களாகவே கருதப்படுகிறார்கள்

என்னுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியான,’நாளைக்கு இன்னொருத்தன்-‘1997. என்ற தொகுதிக்கு நான் எழுதிய என்னுரையில்,’ இந்தத் தொகுதி என்னுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.இந்தத் தொகுதியில் எனக்குத் தெரிந்த பல பெண்களை நீங்களும் சந்திக்கலாம்.எல்லாக் கதைகளும் யாரோ ஒரு பெண்ணின் சோகத்தைத் தழவி எழுதப் பட்ட கதைகளாகும்’ என்று எழுதியிருக்கிறேன்.

ஆண்களால் நிர்ணயிக்கப் பட்ட வட்ட திட்டங்கள்,சமூக வழக்கப்பாடுகள்.சமய ஒழுங்கங்கள் என்பனவற்றிற்குள் ஒதுக்கப் பட்டு,தங்கள் ஆத்மாவையிழந்த வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கதைகள் கண்ணீர் வடிக்கின்றன.

பாலியல் வன்முறைகள்.அரசியல் கொடுமைகள்,குடும்ப அடக்குமுறைக்கும் தங்களையிழந்து கொண்ட எத்தனையோ பெண்களை இந்தக் கதைகள் பிரதி பலிக்கிறது’ என்று எழுதியிருக்கிறேன்.

1981ம் ஆண்டு புத்தகமாக வெளிந்த எனது முதலாவது நாவலான ‘ ஒரு கோடை விடுமுறை'(1981) என்ற நாவல், இலங்கைத் தமிழரின் அரசியற் பிரச்சினையை எழுதியதால் இந்திய வாசகர்களால் பரவலாக வாசிக்கப்பட்ட நாவலாகும். இதில் இலங்கைப் பெண்கள்,ஆங்கிலேயப் பெண்கள் என்று பலர் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். இந்த நாவலுக்கு முன்னரை எழுதிய நிர்மலா என்ற இலங்கைப் பெண்ணியவாதி,’நம் பெண்களும் இன ஒதுக்கலின் ஒரு முக்கிய இலக்காகி விட்டிருந்தும் கார்த்திகா,பானுமதி போன்ற பெண்கள் அனுபவவாயிலாயே இவற்றை அறிந்திருந்தும்,, பரமநாதன்,சபேசன் போன்றோர் வகுக்கும் தீர்வுச் சட்டங்களுக்குள் அவர்களின் வாழ்க்கை அடங்கிப் போகிறது.தங்கள் சுயமுனைப்பின் அடிப்படையில் இயங்குவதில்லை.ஈழத்துத் தமிழ்ப் பெண்களின் மனப் பாங்கினைச் சரியாக இயக்கியிருக்கிறார் ராஜேஸ்வரி.இப் பெண்களின் மறுதுருவமாகவும் மாற்று மாதிரியாகவும் அமைகிறது (ஆங்கிலேயப் பெண்ணான) லிஸா பேர்க்கரின் பாத்திரம்.தன் சுதந்திரம் பற்றி அரைகுறைப் பிரக்ஞையுடன் பொறுமையின்றித் தன் பொறுப்பிலிருது விலகிச் செல்லும் மரியனிடமிருந்து கூட வேறுபடுகிறாள் லீஸா’-(‘ஒரு கோடை விடுமுறை-1981) என்று சொல்கிறார் எனவே இந்தப் பாத்திரப் படைப்புக்களிலிருந்து தமிழ்ப் பெண்களும் மேலைநாட்டுப் பெண்களும் எப்படித் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன்.

எனது கதைத் தளங்கள் ,இலங்கை,இங்கிலாந்து, பேர்ளின்,பாரிஸ், வெனிஸ் என்று நீண்டு கொண்டு போகும். அதில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ்ப் பெண்களின் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவைகள் வெறும் கதைகள் அல்ல. ஈழத் தழிழ்ப் பெண்களின் புலம் பெயர் சரித்திரத்தின் வரலாறுகள்.

அதை ‘கீதா’ என்ற விமர்சகர்; விளக்கமாகச் சொல்கிறார்.எனது இன்னொரு சிறுகதைத் தொகுதியான,’அம்மா என்றொரு பெண்’ (குமரன் பதிவு,இந்தியா-1996) என்ற தொகுப்புக்கு முன்னுரை எழுதிய (பக் 5).அவர்,எனது பெண்பாத்திரப் படைப்பு பற்றிப் பேசும்போது, ‘றோசா லஷ்சம் பேர்க் வீதி ஒரு தனித்துவமான கதை. கிழக்கு ஜேர்மனியில் உள்ள வீதி,கிழக்கும் மேற்கும் ஒன்றாகியபின்னைய காலத்தில் கதை நிகழ்கிறது. இலங்கை அகதியாகச் சென்று ஜேர்மனியில் நாலுகுழந்தைகளுடன் வாழும் இலங்கைத் தமிழ்ப்பெண்,அதிகாலையில் எழுந்து பத்திரிகை விநியோகப்பதில் ஏற்படும் கஷ்டங்களையும் வீட்டில் பிள்ளைகளையம் கணவனையும் காப்பாற்றும் பொறுப்புடன் படும் துயரங்களையும் கூறும். அத்தோடு அடிநாதமாக ஜேர்மனியில் யூத இனத்தை அழித்தொழித்த செயல்களை ஈழத்தமிழருக்கு சிங்களவர் செய்த கொடுமைகளுடன் ஒப்பிடுகிறது.’

‘இக்கதையில் இராஜேஸ்வரியின் உலக அரசியறிவு,ஒப்பியலறிவு,உலகநேயம்,மனிதாபிமானம்,சமுதாய உணர்வு மட்டுமல்ல கதை மாந்தர், தேர்தல்,சம்பவங்கள் சூழ்நிலைகளை யதார்த்தமாகச் சிருட்டித்தல், கூற எண்ணிய கருத்தை ஆணித்தரமாக கதைமூலம் கலையுணர்வு குன்றாது விளக்குதல் போன்ற படைப்பாற்றல் திறன்களைக் காட்டுகிறது’ என்கிறார்.

தமிழ் நாவல் இலக்கியத்தின் முக்கிய கால கட்டமான 1980ம் ஆண்டுகளல் தமிழகத்திலும் இலங்கையிலுமிருந்து பல தரப் பட்ட படைப்புக்கள் வெளியாயின. இந்தக் கால கட்டத்தைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு முக்கிய கால கட்டம் என்று சொன்னால் மிகையாகாது. சில நூறுநாவல்களாவது வாசகர்கள் கைகளிற் தவண்டிருக்கலாம் அவற்றில் அறுபத்தைந்து நாவல்களைப் படித்து, கோவை ஞானி அய்யா அவர்கள், எண்பதுகளில் தமிழ் நாவல்கள்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார் (விஜயா பதிப்பகம் 1994).
தமிழ் இலக்கிய வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய மிக முக்கியமான படைப்பு இது என்று நான நினைக்கிறேன்.

இந்தத் தொகுதியில், கருணாநிதியிலிருந்து,க.நா.சுப்பிரமணியம், லா.சா.ரா,ஜெயகாந்தன்,சுந்தரராமசாமி,ராஜம் கிருஷ்ணன்,காவேரி,சிவகாமி போன்ற இந்திய பிரபல எழுத்தாளர்களும், தலித் மக்களின் இலக்கியத்தை முதலில் அறிமுகம் செய்த இலங்கை எழுத்தாளர் கே. டானியல்,அத்துடன், இந்தியா, இலங்கை தவிர்ந்த நாடுகள் தாண்டி அன்னிய மண்ணான ஆங்கில நாடான இங்கிலாந்தில் முதற்தரம் தமிழ் இலக்கியம் படைத்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் அவர்களும் ஞானி அய்யா அவர்களின் விமர்சனத்தைப் பெற்றுக் கொண்ட அதிர்ஷ்டசாலிகளாகும்.அவரின் விமர்சனத்தில் புனைகதைகளில் பெண்பாத்திரப் படைப்புக்கள் பற்றிய சில குறிப்புக்கள் உள்ளன.

‘எண்பதுகளில் தமிழ் நாவல்’ என்ற புத்தகத்தின் பின் அட்டையில்,’ஞானி அய்யா அவர்கள் மனித நேயத்தைத் தன் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பவர்.ஆரோக்கியமான விவாத திறனும்,தீர்க்கமான திறனாய்வுப் பார்வையும் கொண்ட மார்க்சியச் சிந்தனையாளர்.இன்றைய இளம் படைப்பிலக்கியவாதிகள் பலரும் ஞானியின் நிழலில் சற்றேனும் அமர்ந்து இளைப்பாறியிருக்கிறார்கள்.வரலாறு, பண்பாடு,பெண்ணியம், தலித்தியம் யாவற்றிலும் பாசாங்கற்ற பார்வைகள் கொண்டவர்.அடித்தள மக்களின் சுதந்திரத்திற்காக அயராது குரல் கொடுப்பவர்’ என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
அப்படிப் பட்ட பல தகமைகள் வாய்ந்த திரு.ஞானி அய்யா அவர்கள் எனது நால்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.

-1970ம் ஆண்டிலிருந்து லண்டனுக்குப் புலம் பெயர்ந்து வாழும்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘ஒரு கோடை விடுமுறை’1981 நாவல் மூன்று பெண்களுடன் உறவு வைத்த ஒரு தமிழ் ஆணின் கதை. இதைப் பற்றிச் சொல்லும்போது
-லண்டனுக்கு வந்த பரமநாதன் மரியன் என்ற ஆங்கிலப் பெண்ணை மணக்கிறான்,மரியன் அவனின் மனைவி,அவனின் மகளின் தாய்.தகப்பனின் உடல் நிலை காரணமாகப் பரமநாதன் இலங்கை செல்லும் வழியில் லீஸா என்ற முற்போக்கு ஆங்கிலப் பெண்ணைச் சந்திக்கிறான்.அவள் தொடர்பு அவனுக்குச் சபலத்தைக் கொடுக்கிறது. இலங்கைக்குச் சென்றதும்
பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது அவனின் காதலியாக இருந்த காதலி கார்த்திகா தமிழருக்கெதிரான கலவரத்தில் கொடுமைக்குள்ளானதைக் கண்டு மனம் கலங்குகிறான்

லண்டனுக்கு; திரும்பி வந்ததும் அவன் மனம் சலனத்தால் அவனின் மனைவி பிரிந்து,இன்னொருவனுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள். இவனின் பழைய காதலியான கார்த்திகா, இதுவரை இவனையே நினைத்துக் கொண்டிருந்தவள் தனது வாழ்க்கையை மாற்றுகிறாள். புரமன் தன்னை மறக்காமல் வாழ்க்கையைத் துயராக்கிக் கொண்டதையறிந்து அவனின் மனதிலிருந்த தன்னையகற்றிக் கொள்ளத் திருமணம் செய்கிறாள்.அவனின் மூன்றாவது உறவான,லீஸாவிடம் அவன் அன்பு தேட முனைந்தபோது அவள் அவனை நிராகரிக்கிறாள்.

.இதற்கு விமர்சனம் செய்த திரு ஞானி அவர்கள்,’லீஸா பொருளியல் வாழ்க்கையை வெறுத்தவள்.பெண்விடுதலையை நேசிக்கிறவள்.இன்னொருமுறை தன்னை ஆடவனுக்கு அடிமைப் படுத்திக் கொள்ளமுடியாது.’ என்று சொல்வதன் மூலம் ஒரு பெண்ணாற்தான் தனது முழுமை பெறும் என்று நினைக்கும் ஆண்களைப் பற்றிப் பரிதாபப்படுகிறார். மூன்று பெண்களின் வாழக்கையுடன் தொடர்புள்ள, மனத்திடமற்ற பரமனின் முடிவை இவன் ‘சாகப்’ பிறந்த தமிழன் என்று முடிக்கிறார்.

-திரு ஞானி அவர்கள், சமகால மாற்றங்களை ஒரு கிராமத்தின் வாழவோடு இணைத்து விபரிக்கும் இராஜேஸ்வரியின் ‘தில்லையாற்றங்கரை’ என்ற நாவலில் வரும் கிராமத்துப் பெண்களையும் அக் கிராமத்து ஆண்களால் அவர்களின் வாழ்க்கையின் நடக்கும் மாற்றங்களையும் ஆழமாக அவதானிக்கிறார்.’ இந்தக் கதை இரு குடும்பங்களின் கதை,நாவலில் கௌரியின் பார்வையில்; சொல்லப் படுகிறது.

– ‘கௌரி கல்வியை விரும்புகிறவள்.காதலை ஒதுக்கியவள்.
-நிறைய மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் கௌரியின் பார்வை வழியே சென்று நாம் புரிந்து கொள்கிறோம்.நுட்பமான செறிவான சித்தரிப்புக்கு. விடுதலைக்கு எதுவழி என்பது கௌரியின் இடையறாத தேட்டம்.
-உயர்சாதி குணங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளாத சமூகம்,விடுதலைக்கான தகுதியைப் பெறுவதில்லை என்ற உணர்வைப் நாம் பெறுகிறோம்’என்கிறார் (பக் 78-81 ‘எண்பதுகளில் தமிழ்நாவல்கள்’1994).

அய்யா அவர்கள் எனது நாவலில் பெண் படைப்பு பற்றிய கூற்றைப்படிக்கும்போது, 1997ல் வெளிவந்த ‘வசந்தம் வந்து போய்விட்டது’என்ற எனது நாவலுக்கு புவனேஸ்வரி- (சைக்கோலயிஸ்ட்) என்பவர் எழுதிய முன்னுரையில் சில வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.’வியாபார நோக்கில் பெண்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப் படுத்தும் கதைகள்,கதாசிரியர்கள் பெருகிகக் கொண்டு வரும் இந்தக் கால கட்டத்தில் சமூகப் பணிக் கட்டுப்பாட்டுடன் ஒரு முன்மாதிரி நாவலைப் படைக்க ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார்.அவர் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்’ என்று எழுதியிருக்கிறார்.

எனது நாவல்களில் வரும் பெண்கள் தாங்கள் அங்கம் வகிக்கும் சமூகத்தின் நிலவரத்தைத் தங்கள் அனுபவத்தோடு பார்ப்பவர்கள். அவை மனித நேயத்தை வதைத்தால் அதைக் கேள்வி கேட்கத் தயங்காத பாத்திரங்கள் எனது பதிவுகளில் உள்ளனர்.

‘தில்லையாற்றங்கரை’ நாவலுக்கு நான் எழுதிய ‘என்னுரையில்’,–கௌரியோடு சேர்ந்து பழகிய மக்களை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தவேண்டும் என்ற ஆசைதான் எழுதப் பண்ணியது.மரகதத்தை அழப்பண்ணியவர்ளை அவள் போன்ற தமிழ்ப் பெண்கள் ஆவேசத்தடன் எதிர்க்க வேண்டும் என்றுதான் இந்த நாவலை எழுதினேன்.பெண்களை ஒடுக்கும்,உலகத்தை அலடசியம் பண்ண சாரதா போன்ற பெண்கள் பழகிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையிற்தான் இதை எழுதினேன். இனத்தையும், சாதியையும்,மதத்தையும்,மொழியையும் தங்கள் சுயநலத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பாவிக்கும் ஒரு சிலர் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கி விட்டார்கள என்பதைத் தமிழ் இளம் தலைமுறைக்குச் சொல்லத்தான் இந்த நாவலை எழுதினேன்’ (பக் 7-8). என்றெழுதியிருக்கிறேன்.

புனைகதைகளில் பெண்பாத்திரப் படைப்பு பெண்களின் தனிப்பட்ட கதைகளுடன் மட்டுமல்லாது அவர்கள் வாழும் காலத்தின் வரலாற்றுடனும் ஒன்றியிணைந்தது. இதைப்பற்றி ஞானி அய்யா அவர்கள் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ராஜம் கிருஷ்ணன் போன்ற பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிப் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார்.

ஞானி அய்யா அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் மூத்த பெண்எழுத்தானரான, திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களின் படைப்புக்களில் பெண்பாத்திரப் படைப்பு பற்றி எப்படிக் கணிக்கிறார் என்பதைச் சில உதாரணங்களின் மூலம் பார்க்கலாம்.

எழுபதுகளில் தமிழகத்தில் சில வட்டார,சமூகநிலமைகளை நேரிற் கண்டு விபரங்களைத் தொகுத்து,அவற்றின் அடிப்படையில் பல நாவல்களை எழுதியவர் ராஜம் கிருஷ்ணனை, இவரது நாவல்களில் கலைத் திறம் இல்லை என்பதற்காக நாம் புறங்கணித்தோம்.எண்பதுகளில் இதே செயலைஅவர் உறுதியோடு தொடாந்திருக்கிறார்.

‘எழுபதுகளில் பெண் உரிமைக்கான போர்க் குணம் கனல் பெற்றது.எண்பதுகளில் பெண்ணுரிமைக்கான இந்தப் போர்க்குணம் தீவிரப்பட்டு,மேலும் பல நாவல்கள் இவர் மூலம் உருப்பெற்றன.முற்போக்காளர் என்ற பெருமையோடு கட்சிக்காகப் போராடும் எழுத்தாளர்களிடம் காண இயலாத அளவுக்கு இவரிடம் சமூக அக்கறை உரம் பெற்றுள்ளது. கலைத் தரம் குறைவு என்பதற்காக இவரை ஒதுக்கியதன் தவறு, இப்போது நன்றாகப் புரிகிறது’ என்கிறார். (பக்31-32) எண்பதுகளில் தமிழ் நாவல்கள்’1994).

-‘பெண்ணுரிமை சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிய ராஜம் கிருஷ்ணன் நாவல்களை இங்கு எடுத்துக் கொள்ளலாம்.’மானுடத்தின் மகரந்தங்கள்’நாவலில் விதவைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார்.
– ‘மண்ணகத்துப் பூந்தளிர்கள்’ நாவலில் வரும் அழகாயி தன் கணவன் இருக்க இன்னொருவரிடம் ஆசையோடு படுத்துக் கொள்கிறாள்.அழகாயியைக் கணவன் வெறுக்கவில்லை.
-‘புதிய சிறகுகள்’ நாவலில் அபிராமியின் தயரங்களைச் சித்தரிக்கிறது.இளம் வயதில் பெற்றோர் ஆதரவிலும்,திருமணத்தின்பின் கணவன் ஆதரவிலும்,கணவனுக்குப் பின் மகன் ஆதரவிலும் ஒரு பெண் இருக்கிறாள்; என்பதின் துயரை என்பதை அடிப்படையாக வைத்தப் படைத்திருக்கிறார்.
– பெண்களின் வாழ்வில் பல வகைகளில் எற்படும் பாதிப்புக்களைச் சித்தரிக்கிறார் ராஜம் கிருஷ்ணன், என்று சொல்கிறார் கோவை ஞானி அவர்கள்.

அய்யா தனது பதிவில் குறிப்பிட்ட இன்னொரு பெண் எழுத்தார் காவேரி என்பராகும்.

காவேரி (லஷ்மி கண்ணன்) அவர்களின்,’ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல் பற்றிக் குறிப்பிட்டுப் பேசும்போது,’பெண்ணிய நோக்கில் எழுதப் பட்ட ஒரு வித்தியாசமான நாவல்'(பக் 84). என்று குறிப்பிடுகிறார்.’உடல் கூட சிறை என்று இந்த நாவல் பேசுகிறது. நம் சமூகச் சூழலில்,பெண்ணின் உடலை வைத்து ஆண் அவளைச் சிறைப் படுத்துகிறான் என்று இதற்குப் பொருள் காணலாம்.’ என்று குறிப் பிடுகிறார்.

இன்னொரு பெண் எழுத்தாரனான,சிவகாமி பற்றிச் சொல்லும்போது,’தமிழில் எழுதப் பட்ட ‘தலித்’ நாவல் என்ற சிறப்பிற்குரியது சிவகாமியின் ‘பழையன கழிதலும்’ என்கிறார். உயர் சாதியினர்க்கும் தலித் மக்களுக்கும் இடையில் நிலவும் கடுமையான பகைச் சூழலில் ஒரு சிறு பொறியும் பெருநெருப்பாக வெடிக்கலாம் என்ற முறையில் ஊருக்குள் வெடிக்கும் ஒரு சாதிக்கலவரம் பற்றிய சிறப்பான சித்தரிப்பு,இந்த நாவலில் இடம் பெறுகிறது. கூடியவரை தலித் மக்களின் யதார்த்த வாழ்க்கை,இரத்தமும் சதையும் கலந்த வடிவத்தில் சொல்லப் படடிருக்கிறது. தமிழில் உருவாகவேண்டிய பல தலித் நாவல்களுக்கு இந்த நாவல் ஒரு சிறந்த முன்னோடியாகும்’. (பக் 87-88) என்கிறார்.

சிவகாமி ஒடுக்கப் பட்ட ஒரு குழு மக்களின் பிரச்சினையை யதார்த்தமாகச் சொல்வதுபோல், 1991ல் வெளிவந்த,’உலகமெல்லாம் வியாபாரிகள்(நீலமலர் பிரசுரம்); என்ற இலங்கை அரசியலும் அரசியல்வாதிகளையும் பற்றிய நாவலில்,’ஒரு ஆண் தான் சுதந்திரமற்று இருக்கும்போது என்னவென்று பெண்ணின் உரிமைகளை உணரமுடியும்.எங்கள் சமுதாயம் மனித உரிமையற்ற மந்தைக் கூட்டங்களாக்கப் பட்டுள்ளது. இன்று சிந்திப்பது,கேட்பது, என்பன கடும் குற்றுங்கள் என்று கணிக்கப் படுகிறது. குற்றங்கள் கொலைகளாகின்றன.எதிர்க்க கார்த்திகேயன்கள் பிறந்துகொண்டேயிருப்பார்கள்.அவர்களின் இலட்சியம் வளர்ந்து கொண்டே இருக்கும் கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு என்பன எப்போதும் வெற்றி பெறும்’ என்று குறிப் பிட்டிருக்கிறேன்.

எனது சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான,’ஏக்கம்'((மணிமேகலை பிரசுரம்.1997) என்ற தொகுதிக்கு முன்னுரை எழுதிய சீதாலஷ்மி விஷ்வநாத் என்பவர்,’பெண் உரிமையில் மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள்.ஆனால் ‘பெண்’ என்ற வட்டத்தையும் விட்டு அவரால் கடக்க முடிகிறது.இந்த வட்டத்தைக் கடந்து மனித உரிமைகளையும்,மனித நேயம் தொலைந்து போனால் ஏற்படும் வெறுமையையும் கூட இவரால் உணர்த்த முடிகிறது.’ என்று சொல்கிறார்.

நான் எனது எழுத்துக்களில் மனித நேயத்தை வலியுறுத்துகிறேன் பெண்ணடிமைத் தனத்தைக் கேள்வி கேட்கிறேன். அதற்காக நான் ஒரு பிரசார எழுத்தாளர் அல்ல. ‘பாரதி கண்ட பெண்’ என்ற தலையங்கத்தில் கட்டுரை எழுதிச் சிறுவயதிலேயே பரிசு பெற்ற பெண்நான். கவிதை நயம் என் எழுத்துக்களோடு சிலவேளை உறவாடும். இது பற்றித் திருமதி சீதாலஷ்மி அவர்கள் குறிப்பிடும்போது,’இவரது எழுத்தில் பல இடங்களில் கவிதை எட்டிப் பார்க்கிறது.’-என்பதைச் சில வரிகள் மூலம் இனம் காட்டுகிறார்.
‘இவர் மனதின் சூட்டுக்கு யார் பன்னீர் தெளிக்கப் போகிறார்கள்.?’
‘தூரத்துச் சந்தனக் காடுகள் வெறும் சுடுகாடுகள் என்பதை அவர் உணரவில்லை’
‘மனித நேயம் அடையாளத்தை இpழந்து அவமதிப்பை வாழ்க்கையாக்கிக் கொண்டு விட்டதே’
‘மனிதன் உண்டாக்கிய ‘கடவுளை மீறிக் கடவுள் என்ன செய்ய முடியும்’ இப்படிப் பல முத்துக்கள் தேடத் தேடக்குறையாமல். என்று முடிக்கிறார்.

இதுவரை சில எழுத்தாளர்களின் படைப்புக்களில் பெண் பாத்திரங்கள் எப்படிப் படைக்கப் பட்டிருக்கிறார்கள். என்று சொல்லப் பட்டது. இந்தப் படைப்புக்கள் சாதாரணமானவையல்ல. மாறிக் கொண்டிருக்கும் தற்போதைய சமுகத்தில் பெண்களின் நிலை என்பதைப் பன்முகப் பார்வையோடு தரும் வரலாற்றுத் தொடர்களாகும்;.

தமிழ் இலக்கியத் தறை பன்முகத் தன்மையானது. இவை,வாணிப இலக்கியம், கலை இலக்கியம், வரலாற்று இலக்கியம், பெண்கள் இலக்கியம், தலித் இலக்கியம் என்று பல வரிசைகளில் நீண்டு கொண்டு போகும். இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் ஒரு பெரும் மாற்றத்தை உள்வாங்குகிறது. அது புலம் பெயர்ந்த தமிழர் இலக்கியம். வித்தியாசமான பல்வேறு தளங்களை வாசகர்களுக்குப் புலம் பெயர் இலக்கியம் அறிமுகப் படுத்துகிறது. பல்வேறு நாடுகளின்,; கலாச்சாரங்களுக்களின் திரைகளை அகற்றி அந்தக் கலாச்சாரத்தின் அளவிடமுடியாத ஆளத்தின் ஒரு சிறு பகுதியை என்றாலும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.

முக்கியமாகப் புலம் பெயர் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் படைப்பு இந்தியப் பெண் எழத்தாளர்களின் படைப்பிலிருந்து வித்தியாசமானது. இன்று புலம் பெயர்ந்தெழுதும் பல பெண் எழுத்தாளர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அனுபவம் பல தரப் பட்டன. அவர்கள் பலரின் எழுத்துக்களில்,இலங்கையிற் தமிழர்களுக்கெதிராக நடந்த போரின் கொடுமை, துயர், வலிகள் பிரதி பலிக்கின்றன. அவர்கள் தற்போது வாழும் நாடுகளில் அவர்கள் முகம் கொடுக்கும் பல பிரச்சினைகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. எனவே, தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் பல நாடுகளிலிருந்து வரும் படைப்புக்களில் ஒன்றிரண்டை என்றாலும் வாசித்தால் ஒரு புதிய அனுபவத்தை, தூண்டலை, சிந்தனையைப் பெறலாம் என்பது எனது கருத்தாகும்.

நீண்ட காலமாகப் புலம் பெயர் நாட்டிலிருந்து எழுதும் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, கோவை ஞானி அய்யா அவர்கள், ‘நாளைய மனிதர்கள்'(புதுப் புனல்.2003 பக் 4) என்ற நாவலுக்கு அணிந்துரை எழுதியபோது சொல்வதாவது,’கடந்த சில நூற்றாண்டுகளாக மேற்கத்திய நாகரீகத்தோடு நமக்கு ஏற்பட்ட மோதல்கள் மற்றும் உறவுகள் குறித்து நாம் தொடர்ந்து கவலைப்படவும் சிந்திக்கவும் வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் நாகரீகங்களுக்கிடையான உறவின் சாதகம்,மற்றும் பாதகமான கூறுகளிலிருந்து நாம் தப்ப முடியாது.நமது மரபு சார்ந்த கலாச்சாரம்தான் மேன்மையானது என்றும், அதை இறுகப் பற்றிக் கொள்வதன் மூலம் நமக்கு வாழ்வு என்று இருப்பதற்கில்லை’.

‘மேற்கிலிருந்து வரும் கலாச்சாரம் எல்லா நிலைகளிலும் நம்மை அடிமைப்படுத்தும் என்றும் கீழ்மைப் படுத்தும் என்றும் நமக்குள் அரண் அமைத்துக் கொள்ளவும் முடியாது. வரலாற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை சரியான பார்வையோடு புரிந்து கொள்வதும் முன்னைய மரபுகளிலிருந்து இன்றைக்கும் நம்மை வளர்க்கக் கூடிய கூறுகளை மேம்படுத்திக் கொள்வதும் நமக்குத் தேவையான கடமை. மேற்கை இகழ்ந்துரைத்து நம்மை பெருமைப் படுத்திக் கொள்ள முடியாது.திருமதி ராஜேஸ்வரி அவர்களின் எந்த ஒரு படைப்பையும் நாம் வாசிக்க நேரும்போது இப்படி ஒரு சிந்தனைக்குள் நாம் செல்லுகிறோம்.’ என்கிறார்.

2001ம் ஆண்டில் தங்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் ஒருத்தரான டாக்டர் இராசு புவன்துரை அவர்களால்’பன்னாட்டுத் தமிழரும் பண்பாடும-;’என்ற தலைப்பில் ‘ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் படைப்புலகம்(காந்தி பதிப்பகம் 2001.) பற்றிப் பல முனைவர்கள்; எழுதிய நூல் ஒன்று வெளியிடப் பட்டது.

இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர்.வீ. அரசு அவர்கள்,’ ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்குக் கிடைக்கும் குறைந்த பட்ச விடுதலைகூட, கிழக்காசிய பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்ற கோபம் இவரது பெண்பற்றிய புனைவுகளில் விரிவாகவே இடம் பெற்றிருப்பதைக் காணமுடியும். பால் உணர்வுகள் குறித்த பல்வேற விழுமியங்கள்,உறவுமுறை குறித்த பல்வகை நம்பிக்கைகள்.நாள்தோறும்,பெண்களுக்கான சடங்குகள் போன்றவை தொடர்பான கேள்விகளைத் தமது படைப்பில் முதன்மைப் படுத்துகிறார். ஐரோப்பிய மண்ணில் வாழும் ஈழம் போன்ற நாடுகளின் பெண்கள் சந்திக்கும் முரண்குறித்தும் விவாதிக்கிறார்.இவ்வகையில் இவரது புனைகதைகளில் கல்வி பெற்ற நடுத்தர வர்க்க,மேல்தட்டப் பெண்கள் குறித்த புனைவுகளை விரிவாகவே செய்திருப்பதை இத்தொகுப்பின் கட்டுரைகள் விரித்துப் பேசுகின்றன.’ என்கிறார்.

இந்தத் தொகுப்பில்,பத்து நூல்களைப் பத்து முனைவர்கள் பன்முகக் கண்ணோட்டங்களில் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

1-‘நாளைக்கு இன்னொருத்தன்’- ‘சிறுகதைகள் திறனாய்வு,’முனைவர் காந்திமதி.ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி,தூத்துக்குடி
2.’பனிபெய்யும் இரவுகள்@’கருத்தும் கலையும்’;,டாக்டர் ம.திருமலை,தமிழயற் புலம்,மதுரை காமராசர் பல்கலைகழகம், மதுரை.
3.’தில்லையாற்றங்கரை’ நாவல் அறிமுகம்,முனைவர் சு.வெங்கட்ராமன்.பேரா.துறைத்தலைவர்.மதுரை.காமராசர் பல்கலைக்கழகம். மதுரை
4.’வசந்தம் வந்து போய்விட்டது’திறனாய்வு.முனைவர்.மு அருணகிரி,தமிழ்ப் பேராசிரியர்,தியாகராசர் கல்லூரி.மதுரை
5.’உலகமெல்லாம் வியாபாரிகள்’புதினம் ஒருபார்வை.அ.அறிவு நம்பி.தமிழ்ப் பேராசிரியர்,புதுவைப் பல்கலைக்கழகம்,
6.”அரைகுறை அடிமைகள்’மதிப்பீடு. முனைவர். சா. அங்கயற்கண்ணி.தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
7.’தேம்ஸ் நதிக்கரையில் ஒரு திறனாய்வு,முனைவர்.கு.வெ.பாலசுப்பிரமணியம்.பேரா. தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்
8.’ஒருகோடை விடுமுறை’அறிமுகமும் மதிப்பீடும்,முனைவர் பா. மதிவாணன்,துணைப் பேராசிரியர்,தமிழ்த் துறை,தமிழ்வேள் உமா மகேசுவரனார் கரந்தைக்கல்லூரி,தஞ்சாவூர்
9.’புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தில் ‘ஏக்கம்’டாக்டர் சரோஜினி,தமிழ் விரிவுரையாளர்,எம் வி; எம்.அரசினர் மகளீர் கல்லூரி, திண்டுக்கல்
10.’அம்மா என்றொரு பெண்’ திறனாய்வு,முனைவர்,கோ.இந்திராபாய்.வி.ராவ்,இணைப் பேராசிரியர்.கு.நா.அரசு மகளிர் கலைக் கல்லூரி.தஞ்சாவூர்.

இவர்களின்,இந்த ஆய்வுகள் மிகவும் ஆழமானவை. இலக்கிய ஆய்வு செய்யும் மாணவர்கள் கட்டாயமாகப் படிக்கவேண்டிய ஒரு நூல் என்பது எனது அபிப்பிராயம்.

இந்து நூல் வெளிவர இரவும் பகலும் உழைத்த பேராசிரியர் இராசு. பவுன்துரை அவர்கள், எனது படைப்புக்களைப் பற்றிச் சொல்லும்போது, ‘உணர்ந்ததை,காண்பதை,கண்ணீரில் மிதந்ததை,நெருப்பில் கண்ட தீயை.துப்பாக்கியால் கேட்ட சப்தத்தை.பேசாமலே சொல்லிச் சென்ற மௌன வார்த்தைகளை,கிராமியங்களை இணைக்கும் ஒழுங்கைகளின் வெளிச்சத்தில் பளிச்சிடும் சுவடுகளை,காடுகளை நாடாக்கிய கைகளை, ஒருமுறையேனும் இமைகொண்டு பார்க்காமல், படைக்கப்படும் எழுத்துத் தாள்களால்,எண்ணங்கள் ஈடேறப் போவதில்லை. வளமையின் பொலிவில்,வாழ்கின்றவர்களின் செயல்,கருத்து,விளைவு, என்பன வேறு,தொல்லையின் நிழலில் வாழ்கின்றவர்களின் செயல், கருத்து,விளைவு என்பன வேறு.இவ்விரண்டு செயன்மைகளின் அடிப்படையிற் பார்க்கும்போது, லண்டன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் படைப்புலகம், என்பது, சமகால யதார்த்த இலக்கிய வடிவங்களாகும். இவர் சில நேரங்களில்,கண்ணீர் சிந்துவார்,சில நேரங்களில் புயலின் அமைதியாகவும் புலப்படுவார்,அரசியல் முரண்பாடுகளையம் தலைமைகளால் ஏற்படும் இருமுக விளைவுகளையும்,இதயச் சுத்தியோடு இன உணர்வால் புலம்புவார்.இவையனைத்தம் சமகாலப் புலப்பாட்டு உளவியல் உள்ளடக்கமாகும்’ என்று விபரிக்கிறார்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s