‘பேர்லின் சுவர்’ -9.11.2019.

‘பேர்லின் சுவர்’
.9.11.2019.

1961ம் ஆண்டிலிருந்து 1989ம் ஆண்டு வரை கிழக்கு பேர்லினையும் மேற்கு பேர்லினையும் பிரித்து வைத்திருந்த பேர்லின் சுவர் மக்களால் தகர்க்கப் பட்ட முப்பதாண்டு விழாவை ஜேர்மன் நாட்டு மக்கள் மட்டுமல்லாது மேற்கு ஜரோப்பிய நாடுகள் பலவும் ஒரு சரித்திர விசேடமான நாளாக (இன்று) சனிக் கிழமை கொண்டாடுகிறார்கள்.இதை இரஷ்யாவை வீழ்த்திய நாளாகவும் சிலர் கொண்டாடுகிறார்கள்.

அந்தச் சுவர் உடைபடக் காரணமாகவிருந்து மேற்கத்திய அரசியற் சக்திகளில் அன்றைய பிரித்தானிய பிரதமர் திருமதி மார்க்கிரட் தச்சரும் அக்கால கட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியிருந்து றொனால்ட் றீகனும் முக்கியமானவர்களாகும். அந்த முக்கிய அரசியற் திருப்பத்திற்குக் காரணிகளில் ஒருத்தரன றொனால்ட் றீகனின் உருவச் சிலையை பேர்லினிலுள்ள தங்கள் தூதுவராலயத்தில் அமெரிக்க அரசு திறந்துவைத்துப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். உடைந்த பேர்லின் சுவரின் சில பகுதியை அமெரிக்காவில் காட்சிக்காக வைத்திருக்கிறார்கள்.இந்தச் செயற்பாடுகளில் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியும்.

ஆதிகாலத்திலிருந்து பல அரசர்கள் தங்கள் நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கத் தங்கள் நாட்டைச் சுற்றிப் பெரும் சுவர்களைக் கட்டுவது பாரம்பரிய கடமையாகவிருந்தது. உலகத்தின் அதிசயங்களில் ஒன்றான சீனாவின் பெரும் சுவர் 2000 வருடங்களுக்கு முன் சீனாவின் வட பகுதியிலிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தன் நாட்டைக் காப்பாற்ற சீனாவின் முதல் அரசர் குன் ஷி ஹ_ஆங் என்பரால் கட்டப் பட்டது.இது 5000 மைல் நீளமும் 40 அடி உயரமும் கொண்டது.இதைக் கட்டும்போது ஒரு கோடி வேலையாளர்கள் இறந்தார்கள். அதனால் இந்தச் சுவரை,’மிகவும் நீண்ட சவக்குழி’ என்றும் சொல்வதுண்டாம்.

பிரித்தானியாவை ஆண்ட உரோமர்கள் இங்கிலாந்தின் வடபகுதியிலுள்ள’காட்டுமிராண்டிகளிடமிருந்து'(ஸ்கொட்டிஷ் வீரர்கள்;!) பிரித்தானியாவைக் காப்பாற்ற கி.பி.2ம் நூற்றாண்டு 84 மைல் நீளமான சுவரைக் கட்டினாhர்கள். சரித்திரப் பிரசித்தி பெற்ற இப்படிப் பல சுவர்கள் துருக்கி (கொன்ஸ்ரான்ரன் அரசர் கட்டிது),லெபனான்,இத்தாலி போன்ற பல நாடுகளிலுமுள்ளன.

ஆனால் தற்காலத்தில்’அரசியல்’ ரீதியாகப் பல சுவர்கள் எழும்புகின்றன. ‘யுனைரெட் கிங்க்டமான’பிரித்தானியாவின் ஒருபகுதியான அயர்லாந்தில், கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்டன்ட் சமயத்தினருக்குமிடையில் பிரச்சினை வராமலிக்க அவர்கள் வாழும் பகுதிகளுக்கிடையில்,’சமாதானச் சுவர்கள்'(!) கட்டப்பட்டிருக்கின்றன (சில இடங்களில 3 மைல் நீளம்).

பேர்லின் சுவரை இடிக்கப் பண்ணிய அமெரிக்க ஆளுமை அமெரிக்காவில் ஒரு பிரமாண்டமான சுவரை எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.இன்று உலகத்திலுள்ள பலராலும் விவாதிக்கப்படும் ‘மெக்சிகன் சுவரை'(2000 மைல் நீளமானது) அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் ட்ரம்ப் பல கோடி டாலர்கள் செலவழித்துக் கட்டி, மெக்சிகோ நாட்டிலிருந்து அமெரிக்கா வரும் அகதிகளைத் தடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பேர்லின் சுவர் தங்கள் நாட்டுக்கு வரும் எதிரிகளைத் தடுக்கவோ அல்லது அகதிகளைத் தடுக்கவோ கட்டப் படவில்லை.
இரண்டாம் உலகப் போரில் 1945ம் ஆண்டு படு தோல்வியடைந்த ஜேர்மன் நாட்டைக் கைப்பற்றிய மேற்கத்திய சக்திகளும் இரஷ்யாவும் ஜேர்மன் நாட்டை மேற்கு -கிழக்காகப் பிரித்தார்கள்.அத்துடன் ஜேர்மனியின் தலைநகரான பேர்லின் நகரையும்; தங்களுக்குள் கூறுபோட்டுக் கொண்டார்கள்.

இதனால் ஒரே மொழி பேசும் ஜேர்மன் மக்கள் தங்கள் தலைநகரில் இருவிதமான ஆட்சிக்குள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். உறவுகள், சொந்தங்கள், நண்பர்கள் என்ற வித்தியாசமின்றி ஜேர்மன் மக்கள் ‘இரு நாடுகளுக்கள்என்ற ரீதியில் பிரிக்கப் பட்டார்கள்.மேற்கு நாடுகளின் கண்காணிப்பிலுள்ள மேற்கு பேர்லின் மக்கள் பொருளாதார ரீதியில் முதலாளித்துவ அமைப்பில் முன்னேறத் தொடங்கினார்கள். கிழக்கு ஜேர்மன் மக்கள் இரஷ்யாவின் கம்யுனிசப் பொருளாதார அமைப்பில் கஷ்டங்களை எதிர் நோக்கி வாழ்ந்தார்கள்.

அந்தமாதிரியான சிக்கலான வாழ்க்கையிலிருந்து தப்பி மேற்கு ஜேர்மனிக்குள் நுழைய பலர் கிழக்கு பேர்லினைப் பாவித்தார்கள். அதை இரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு ஜேர்மன் ஆட்சி விரும்பவில்லை. 1949ம் ஆண்டிலிருந்து 1961ம் ஆண்டு வரை 2.5 கோடி கிழக்கு ஜேர்மன் மக்கள் மேற்கு ஜேர்மனிக்குத் தப்பி ஓடினார்கள்.இவர்களிற் பெரும்பாலோர், புத்தி ஜீவிகள்,உயர் படிப்பு படித்தவர்கள்,பெரிய திறமையுள்ள தொழிலாளர்களாகும்.இதனால் கம்யுனிச நாடான கிழக்கு ஜேர்மனி பல கஷ்ட நஷ்டங்களை எதிர்கொண்டது.

மக்கள் தப்பியோடாமலிருக்க பிரமாண்டமான வேலிகள் போடப்பட்டன.அவற்றிலேறிக் குதித்து 5000 மக்கள் தப்பிச் சென்றார்கள்.5000 மக்கள் சிறை பிடிக்கப் பட்டார்கள் 191 மக்கள் இறந்தார்கள்.

அக்கால கட்டத்தில் (1950ம் ஆண்டு தொடக்கம்;) இரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே அரசியல்,பொருளாதார, இராணுவ ரீதியான ‘பனிப்போர்’ ஆரம்பித்தது. 1956ம் ஆண்டு இரஷ்யா ஹங்கேரிக்குப் படையெடுத்தது. ஹங்கேரி நாடு மாதிரிப் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. முதலாளித்தவ அமெரிக்காவின் அடுத்த நாடான கியுபாவில்.இரஷ்யாவின் கொம்யுனிசக் கொள்கையினடிப்படையில் 1.1.1959ம் ஆண்டு பிடால் காஸ்ட்ரோவின் தலைமையில் சோசலிச ஆட்சி மலர்ந்தது.

அதைக் கண்ட அமெரிக்கா பொங்கியெழுந்தது. கியுபாவில் நடந்த புரட்சியை எதிர்த்து அமெரிக்காவுக்குத் தப்பியோடியவர்களுடன் சேர்ந்து ‘பன்றிகளின் வளை குடா’ என்ற இடத்தில்,கியுபாவுக்கு எதிராக, 17.4.1961 அமெரிக்கப் படை போர் தொடுத்தது. மூன்றாம் நாள் அது தோல்வி கண்டது. அமெரிக்காவிடமிருந்து வரும் தாக்குதல்களைத் தடுக்க, இரஷ்யா கியுபாவுக்குப் பாதுகாப்பாகத் தனது ஏவுகணைக் கப்பலை அனுப்பியது. அந்த நிகழ்ச்சி உலகத்தை மாற்றியமைத்த சம்பவமாக மாறியது. மூன்றாம் உலகப்போர் வெடிக்கப் போகிறது,அணுகுண்டுத் தாக்குதல்களால் உலகம் அழியப்போகிறது என்று உலகமே நடுங்கியது. அதே வருடம் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜோன் எவ்.கென்னடி இரஷ்யாவுடன் இதுபற்றிப் பேச வியன்னா சென்றார்.இரஷ்யா மசியவில்லை

அதைத் தொடர்ந்து.அமெரிக்காவும் இரஷ்யாவும் அணுகுண்டு தயாரிப்பதிலும் தங்கள் இராணுவ பலத்தை மேம்படுத்துவதிலும் போட்டி போடத் தொடங்கின. அமெரிக்கா தனது பொருளாதாரத்தின் 7 விகிதத் தொகையை இராணுவத்திற்குச் செலவிட்டது. அமெரிக்காமாதிரி பொருளாதார பலமற்ற இரஷ்யா அமெரிக்காவுடன் சரி சமமாகப் போட்டியிட இரஷ்யாவின் பொருளாதாரத்தில் 30 விகிதத்தைச் செலவிடவேண்டிய நிர்ப்பந்ததிற்குள் தள்ளப் பட்டது.
அது இரஷ்யாவில் தாக்குப்பிடிக்க முடியாத விடயமாகவிருந்தது.இரஷ்யாவின் பொருளாதார நிலை உலகமட்டத்தில் சரியத் தொடங்கியது. கிழக்கு ஐரோப்பிய கொம்யுனிஸ்ட் நாடுகளிலும்; பல போராட்டங்கள் வளரப் அந்நாடுகளின் பொருளாதாரச் சரிவு காரணமாகவிருந்தது.

1961ம் ஆண்டு யூலை மாதம் கிழக்கு ஜேர்மனியிலிருந்து ஒவ்வொரு நாளும் 1000 மக்கள் மேற்கு ஜேர்மனிக்கு,கிழக்கு பேர்லின் வேலியைத் தாண்டித் தப்பியோடத் தொடங்கினார்கள் இதனால் கிழக்கு பேர்லின் சுவர் அவசர அவசரமாகக் கட்டப்பட்டது.

இரஷ்யாவும் மேற்கு நாடுகளும் போட்டியைத் தொடர்ந்தன.1970ம் ஆண்டுகளில் இருபகுதியினருக்குமிடையில்; பலவிதமான முரண்பாடுகளும் வளர்ந்தன.1976ம் ஆண்டு இரஷ்யா மேற்கு நாடுகளைத் தாக்கக்கூடிய எஸ்.எஸ்-20 ஏவுகணைகளை அவர்களின் கட்டுப் பாட்டிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளிற் குவித்தது.அப்போது மார்கிரட் தச்சர் பிரித்தானியாவின் சாதாரண மந்திரியாகவிருந்தார்.இங்கிலாந்தில் மார்க்கிரட் தச்சர் இரஷ்யாவுக்கு எதிராகப் பேசும் பேச்சுக்களை அவதானித்த இரஷ்ய பத்திரிகைகள் அவரை ஒரு’ இரும்புச் சீமாட்டி’ என வர்ணித்தது.
4.5.1979ம் ஆண்டு திருமதி மார்கிரெட் தச்சர் பிரித்தானியாவின் பிரதமரானார். இரஷ்யாவுக்கு எதிரான தனது எதிர்ப்பைத் தொடர்ந்தார்.

1979ம் ஆண்டு மார்கழி மாதம் இரஷ்யா ஆப்கானிஸ்தானுக்குப் படைகளையனுப்பியது. மார்க்கிரட் தச்சர் இரஷ்யாவுக்கு எதிரான கடும்போக்கை அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொண்டார்.
1981ம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக றொனால்ட் றேகன் பதவியேற்றார். மார்க்கிரட் தச்சரும் றோனால்ட் றேகனும் இரஷ்யாவை எதிர்ப்பதில் மும்மூரமாக ஈடுபட்டார்கள். மார்க்கிரட் தச்சர் இரஷ்யாவுக்கு எதிராக. இங்கிலாந்து மண்ணில் அமெரிக்க அணுகுண்டுகள் வைக்கக் கிறின்ஹாம் கொமன் என்ற இடத்தில்; இராணுவத் தளம் கொடுத்தார்.இதனால் இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுத்தளங்களுக்கெதிராகப் பிரமாண்டமான போராட்டங்கள் வெடித்தன.

அமெரிக்கா மிகப் பிரமாண்டமான ஏவுகணைகளைத்(‘ஸ்ரார் வார்’) 1983லிந்து தயாரிக்கத் தொடங்கியது. இரஷ்யாவின் பொருளாதாரம் சரிந்து கொண்டுபோனது. 1985ம் ஆண்டு மிக்காயில் கோர்பச்சொவ் இரஷ்யாவின் தலைவரானார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். கம்யூனிசத்தின் பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இரஷ்யாவின் ஆளுமை குறைந்தது. இரஷ்ய-அமெரிக்க அணுகுண்டுத் தயாரிப்புப் போட்டியைத் தவிர்க்க 8.12.85ல் அமெரிக்கா-வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கோர்பச்வோவ் கலந்து கொண்டார்.அத்துடன் அவர்; அதுபற்றிய ஒப்பந்தத்திலும்; கையொப்பமிட்டார்.

உலக அரங்கில் மேற்கு நாடுகளின் கையோங்கின.
1987ம் ஆண்டு, றொனால்ட் றேகன், கோர்பச்சோவைப் பார்த்து,’ உங்களுக்கு லிபறலிசம் தேவையானால் கிழக்கு ஜேர்மனியையும் மேற்கு ஜேர்மனியையும் பிரிக்கும் இந்த பேர்லின் கதவைத் திறந்து விடுங்கள். இந்தச் சுவரை இடித்து விடுங்கள்’ என்றார். அதைத் தொடர்ந்து, பேர்லின் கதவு கிழக்குஜேர்மன் கம்யூனிஸ்ட் அரசால் திறக்கப் பட்டது.இருவருடங்களின் பின் 11.9.89ல் பேர்லின் சுவர் மக்களால் தகர்க்கப்பட்டது. ஜேர்மனி பழையபடி ஒன்றானது .கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் தோல்வி கண்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை வலிமையடையத் தொடங்கியது.

மேற்கு நாடுகளின் ஒன்றியத்தை மிகவும் வலுப்படுத்தி ஐரோப்பாவை ஒட்டுமொத்தமாக ஒன்றிணைக்க பிரித்தானிய பிரதமர்(1997-2007); டோனி பிளயார் 2004ம் ஆண்டு ‘பிரித்தானியா ஐரோப்பியர் அத்தனைபேருக்கும் பொதுவானது’ என்று பிரித்தானியாவின் கதவைத் திறந்து விட்டார். இன்று அந்தக் கதவை அடைக்கப் பிரம்ம பிரயத்தனம் நடக்கிறது.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s