‘புலம் பெயர் சுதந்திர எழுத்துக்களும் தமிழ்ச் சமுதாய மாற்றமும்’
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-16.12.17.
தோழர்; திரு பரா குமாரசுவாமி அவர்களின் பத்தாவது ஆண்டின் நினைவாக:
எழுத்துக்கள் என்பன,அவை கதைகள்; கட்டுரைகள் அல்லது கவிதைகளாகவிருக்கலாம்,எழுதப்பட்ட அந்த எழுத்துக்கள் பல, அந்த எழுத்துக்குரியவன் வாழ்ந்த காலத்தின் சரித்திரத்தை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கிறது என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால் எனது எழுத்துக்கள் அதாவது சிறுகதைகளும் நாவல்களும் ஒரு நாளும் அப்பட்டமான கற்பனையான காதற் கதைகளைச் சொல்லவில்லை. அவற்றைப் படித்தவர்களுக்கு கடந்த ஐம்பது வருடங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை மட்டுமன்றி உலகு சார்ந்த பல பிரச்சினைகளம் எனது கதைப் பொருட்களாக அமைந்திருப்பது தெரியும்.
அவை சமுதாயத்தில் நடக்கும் பல விதமான மனித நேயத்திற்கு எதிரான விடயங்களில் கண்டு கொதித்த துயரில், ஆத்திரத்தில், தவிப்பில்,உண்டானவை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இருந்த கருத்துச் சுதந்திரம் எழுத்தை எங்கள் ஆயதமாகப் பாவித்து அடக்குமுறைக்குச் சவால் விட்டன.அந்தத் தூய்மையான சுய சிந்தனையின் துடிப்பால் இலக்கியத்துடன் பரிச்சியமானவர் மறைந்து விட்ட எங்கள் நண்பர் பராராஜசிங்கம் அவர்கள்.
அடக்கு முறைகளுக் கெதிரான புலம் பெயர்ந்த குரல்களும் எழுத்துக்களும்; 1970ம் ஆண்டுகாலத்திலேயே லண்டனில் பல கஷ்டமான பிரசவத்தைக் கண்டு பிறந்தன. 1971ம் ஆண்டு. சித்திரை மாதம் இலங்கையில் ஜே.வி.பிக்கு எதிராக யு.என்.பி அரசு செய்த கொடுமைகளுக்கெதிராக லண்டன் வாழ் சிங்கள்-தமிழ் முற்போக்குவாதிகள் குரல் எழுப்பினோம். ஆயதம் எடுத்தவர்களை அடக்கவென்று அரசு தொடுத்த கொடிய போரில் காமவெறி படித்த அதிகார ஆண்மையில்,1958ல் தமிழருக்கெதிராக அவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரத்தில் களுத்துறையில் நடந்த ஐயரின் மனைவிக்கும் நடந்த கொடுமை சிங்களப் பெண் பிரேமாவதி மன்னம்பெரிக்கும் நடந்தது. கிட்டத்தட்ட 4-5000 மேலான சிங்கள் இளைஞர்,அதிகாரத்தின் கொடிய கரங்களால் கொல்லப்பட்டன.
இந்திய அரசின் உதவியுடன் நடந்தது அந்தக்கொடுமை. அதற்கு எதிராகக் குரல் எழுப்பிய லண்டன வாழ் சில சிங்கள நண்பர்கள் இலங்கை சென்றதும் மிகப் பெரிய அச்சுறத்தல்களுக்குள்ளானார்கள்.சிங்கள மக்களைத் திருப்திப் படுத்த சிங்கள் அரசு தமிழர்களை வதைக்கத் தொடங்கியது.இலங்கையில் இதே நிலை தமிழர்களுக்கெதிராகத் தொடர்ந்தது. அதை எதிர்த்த முற்போக்குவாதிகளும் எழுத்தாளர்களும்; இலங்கை அரசின் அடக்குமுறைக்கு முகம் கொடுக்கவேண்டி வந்தது. அக்கால கட்டத்தில் திரு இராஜநாயகம் போன்ற பல இடதுசாரி முற்போக்குவாதிகள் பலர் லண்டன் வந்து சேர்ந்தார்கள்.
1972ம் ஆண்டு கல்வி தரப்படுத்தலின் பின்லண்டன் வந்த பெருந் தொகையான தமிழ் மாணவர்களில் கணிசமானவர்கள் முற்போக்கு இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார்கள். ஈரோஸ் இராஜநாயகத்தின் வீட்டில் பல இலக்கியக் கலந்துரையாடல்கள் நடந்தன. 1977ம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான இனக் கலவரமும் அதன்பின் லண்டன் வந்த தமிழ் இலக்கிய ஆர்வலர்களால்’ தமிழ்த் தேசிய’ இலக்கியம் முன்னெடுக்கப் பட்டது.
லண்டன் முரசில் ‘மாற்றுக் கருத்துக்களுடன்’ எனது படைப்புக்கள் வெளிவரத் தொடங்கியதும் பிற்போக்குவாதிகளின் வசைகளும் தொடர்ந்தன.1981ம் ஆண்டில்,முற்போக்கு இடதுசாரியான திரு இராஜநாயகம் அவர்கள் தமிழ் டைம்ஸ்சைத் தொடங்கி,லண்டன வாசகர் வட்டத்தில் புதியதொரு பரிணாமத்தையுண்டாக்கினார்.இலங்கையில் தொடர்ந்து கொண்டிருந்த கொடுமைகளை மனித உரிமைக் கெதிரான கொடுமைகளாகப் பார்த்தார்
1982ல் ‘தமிழ்ப் புத்திஜீவிகள’ ;இலங்கை அரசால் கைது செய்யப் பட்டபோது,’லண்டனில் ;ட,’தமிழ் மகளீர் அமைப்பு என்ற மனித உரிமைக்குழு அமைக்கப் பட்டு அங்கு கைது செய்யப் பட்டவர்களுக்குக் குரல் கொடுத்தபோது இலங்கை அரசை ஆதரிக்கும் பிரித்தானிய அரசு எங்களை விசாரிக்க வந்தபோது பிரித்தானிய முற்போக்குப் பத்திரிகைகளான’ நியு ஸ்டேட்ஸ்மன்’ போன்றவை குரல் எழுப்பியதால் இலங்கைத் தமிழர் பிரச்சினை பிரித்தானிய பொதுமக்களுக்கும் பெருமளவிற்; தெரிய வந்தது.
இங்கிலாந்தில் தமிழ் மகளீர் அமைப்பு செய்த பிரசாரங்களால், ஐரோப்பிய முற்போக்குவாதிகளும் தமிழர்களின் மனித உரிமைப் போராட்டத்தில் அக்கறை காட்டினார்கள். அவர்களின் அழைப்பால் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் 1984ம் ஆண்டு தொடக்கம் சென்றேன்.
தமிழ் அகதிகளைப் பார்க்க ஜேர்மனிய நகரொன்றிலிருந்த இடமொன்றுக்குச்; சென்றபோது,அப்போது தமிழ் மக்கள் பொது மண்டபங்களில் கூட்டமாக வைக்கப் பட்டிருந்தார்கள். அவர்கள் அந்த மண்டபத்தில் தனித்தனியான சிறு சிறு கூட்டமாக நின்றிருந்தார்கள். ஏன் என்று விசாரித்தபோது,’ அவர்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்,ஒரு கூட்டத்துடன் ஒருத்தர் சேரமாட்டார்கள்’ என்ற விளக்கம் எனக்குக் கொடுக்கப் பட்டது.
சிங்கள இனவாதத்திற்குத் தப்பி வந்தவர்கள் புலம் பெயர்நாடுகளிலும்; தங்களுக்குள்,சாதி வெறியுடன் வாழ்வது எனக்குத் தாங்கமுடியாத அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் தந்தது.இனவாத்தின் கொடுமை தெரிந்தவர்கள்,இன்னல் பட்டவர்கள்,இடம் பெயர்ந்த இடத்தில் ஒன்று சேர்ந்து ஒரு புதிய உலகைப் படைக்காமல் பழைய சிந்தனைகளுக்குள்ளும் கோட்பாடுகளுக்குள்ளும் சிறை பட்டிருப்பதையுணர்த்த புலம் பெயர் நாடுகளில் ஒரு புதிய சிந்தனைக் களம் உருவாகாதா என என் மனம் ஏங்கியது.
இன்னுமொரு சம்பவம்,ஜேர்மன் மனித உரிமைவாதிகளால் அழைக்கப் பட்ட கூட்டம் ஒன்றுக்குச் சென்றபோது,அங்கு அகதிகளாக வந்திருந்த தமிழ் அகதிகளைப் பார்க்கச் சென்றேன் அப்போது இரவு இரண்டுமணி,இளைஞர்கள் நித்திரை செய்யம் நேரத்தில் சமைத்துக் கொண்டிருந்தார்கள். நித்திரை செய்யும் நேரத்தில் மிகவும் ஆரவாரமாயிருக்கிறார்களே என்று நான் விசாரித்தபோது,
ஏனென்றால் அவர்கள் ஒரு இடமும் வெளியில் போகமுடியாது.ஊருக்கு அப்பாலான ஒரு இடத்தில் அடைக்கப் பட்டு வைத்தது மட்டுமல்லாமல் எங்கும் போக முடியாது என்ற படியால் ஒருவேலையும் செய்ய முடியாது.அவர்கள் இரவில் பல மணித்தியாலங்கள் விழித்திருந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.பகலெல்லாம் தூங்குவார்கள். இவர்கள் மிகவும் கட்டுப் பாட்டுடன் வைக்கப் பட்டிருப்பதாகவும்; சொன்னார்கள்.
எனக்குத் தாங்கமுடியாத ஆத்திரமும் அழுகையும் வந்தது. என்னை அழைத்தவர்களிடம் கேட்டேன்,’ ‘யூத,மக்களை அடைத்து வைத்துக் கொடுமை செய்த இனவாதம் இன்னும் ஜேர்மனியிற் தொடர்கிறதா என்று கேட்டேன்’.
ஜேர்மனிக்கு அகதிகளாக வந்தவர்களுடனான அனுபவங்கள் ஆரம்பத்தில் இப்படித்தான் எனக்குக் கிடைத்தது. பிறந்த நாட்டில் வாழமுடியாத துயர் வலியைச் சுமந்துகொண்டு, புலம் பெயர் நாட்டின் மொழி தெரியாது,கலாச் சாரம் தெரியாது,என்று தடுமாறிய தமிழ் மக்களுக்கு உறுதுணை செய்தது தமிழ் மொழி. இலங்கையில் அடக்குமுறை அரசாலும், ஆணவம் பிடித்த புலிகளாலும் தாங்கள் அனுபவித்த வலிகள் துயர்,இன்றைய தனிமை என்பன அவர்களின் எழுத்தின் மூலம் பிரவகித்து ஓடின. ‘புலம் பெயர்ந்த நாட்டில் சிடைத்த’சுதந்திர சிந்தனை,அதன் பிரதிபலிப்பான கதைகள் கவிதைகள் என்பன பல புலம் பெயர் பத்திரிகைகள் பலவற்றில் சரித்திரம் படைத்தன.அந்த முன்னோடிகளில் ஒருத்தர் மறைந்து விட்ட எங்கள் நண்பர் பரா அவர்கள்.
, 1985ல் பரா போன்ற முற்போக்குவாதிகள் தங்கள் சுயசிந்தனைத் தூண்டுதலால் தமிழர்களுக்குள்ள பிரிவை ஒரு சற்றேனும் தனது எழுத்துக்காலும்,இலக்கியத்திலுள்ள ஆர்வத்தாலும் மாற்றியமைத்தார்கள் என்பது எனது அபிப்பிராயம்.
நண்பர் பரா தனது,’ சிந்தனை’ என்ற பத்திரிகையை 1985ம் ஆண்டு தொடங்கினார்.ஜேர்மனியிற் காலடி வைத்த சொற்ப காலத்திலேயே அவரது இடதுசாரி சிந்தனை எழுத்தின் வலிமையைச் செயலில் காட்டியது.
அதைத் தொடர்ந்து,ஜேர்மனி புலம் பெயர் இலக்கியத்தின் பலமான களமாயிற்று. இலக்கிய ஆர்வமுள்ள பார்த்தீபன் என்ற இளைஞரால் ‘தூண்டில்’ பத்திரிகை வெளிவரத் தொடங்கிய அடுத்தவருடமே ஜேர்மனியில் பரா போன்றவர்களின் ஒன்றிணைவுடன் புலம் பெயர் இலக்கி சந்திப்பு தொடர்ந்தது. புதிய சிந்தனைகள்,புதிய கருத்தாடல்கள் களம் கண்டன.
பெரும்பாலும் ஆண்களின் ஆளுமையிலிருந்த இலக்கியச் சந்திப்பிலிருந்து,தங்கள் கருத்துக்களையம்,படைப்புக்களையும்,பெண்கள் முகம் கொடுக்கும் பல பிரச்சினைகளையும் கலந்துரையாட பெண்கள் சந்திப்பு உருவானது.
இலக்கியச் சந்திப்புக்களில் இலங்கையில் பேசமுடியாத அரசியல் விடயங்கள்,கருத்துப் பரிவர்த்தனைகள் இடம் பெற்றன. நவினத்துவம் பதிய நவினத்துவம்,போன்ற மேற்குநாட்டுச் சிந்தனைக் கோட்பாட்டு வடிவங்கள் புலம் பெயர் எழுத்துக்களில் தொடங்கியது,அதன் பின் தமிழ் இலக்கியத்தில் தாவியேறியது.
புலம் பெயர்ந்த பல நாடுகளிலிருந்து நாற்பதுக்கும் மேலான இலங்கைத் தமிழரின் இலக்கியப் பிரசுரங்கள் வெளிவந்தன. முழுக்க முழுக்கத் தென்னிந்திய ஆளுமையிலிருந்த தமிழ் இலக்கியம் புலம் பெயர் தமிழ் இலக்கிய வரவால் புது வடிவெடித்தது. பிரமாண்டமான இந்தியத் தமிழ் இலக்கிய உலகில் புலம் பெயர் எழுத்துக்கள் தவிர்க்கமுடியாத இடமாக ஏற்றக் கொள்ளப் பட்டன.இத்தனைக்கும் காரணம் பராபோன்றவர்கள் ஆரம்பித்து வைத்த சுதந்திர சிந்தனையின் எழுத்து முயற்சிகளாகும்.
அன்றிலிருந்து,தனது மறைவு காலம் வரை,பராவும் அவரது குடும்பமும் ஒவ்வொரு இலக்கிய சந்திப்புக்களிலும் ஒன்றிணைந்து பாடுபட்டார்கள். புலம் பெயர் இலக்கிய சந்திப்பின் ஆரம்ப கால கட்டம்,’சுயமையான தமிழ் எழுத்தாளர்களின்’ சந்திப்புக் கூடமாக அமைந்தாலும் கால கட்டத்தில் புலிகளின் பாசிசத் தன்மைக்கு எதிராக கொதித்தெழுந்த ஒரு கூட்டமாக உருவெடுத்தது.
புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களின் சிந்தனையைத்’ தமிழ்தேசியம்’ என்ற ஒட்டுமொத்த கூண்டுக்குள் தள்ளி தங்கள் பிரசாத்திற்குப் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களைப் பாவிக்கலாம் என்ற புலிகளின் பேராசை இலக்கிச் சந்திப்பிலிருந்தவர்களால் 90ம் ஆண்டுகளில் முறியடிக்கப் பட்டது.
போரட்டத்தற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சக இயக்கங்கங்களை அழித்தொழித்த புலிகளால் இலக்கியச் சந்திப்பை அழிக்கமுடியாததற்குப் பரா போன்ற சுய சிந்தனை ஆர்வலர்கள்,பலகாலமாகப் பொறுப்பாகவிருந்தார்கள் என்பது கருத்து.
புலிகளால் பத்திரிகையாளர்கள் பலர், இலங்கையிலும் புலம் பெயர்நாடுகளிலும் படுமோசமாக் கொலை செய்யப் பட்டபோது,இலக்கியச் சந்திப்பின், ‘உரத்த, துணிவான’ குரலை அடக்கி வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பரந்துபட்ட கருத்துக்களை ஒன்றிணைத்த களமாகவிருந்த இலக்கியச் சந்திப்பு பல பிரிவளாக மாறிவிட்டது.சமுதாயச் சிந்தனைகப் பேசிக் கலந்தாடும் ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் ஒன்ற பட்டவர்கள் பல காரணங்களால் சிதறி விட்டார்கள். எதுவும் எப்போதும் ஒரே பரிமாணத்தில் பயணிப்பதில்லை என்பதற்கு இலக்கியச் சந்திப்பின் மாற்றுத் தோற்றங்கள் விதிவிலக்கல்ல.,
இன்ற போரில் துயர்பட்ட தமிழ் மக்களின் துயர்நீக்குவார்கள் என எதிர்பார்க்கப் பட்ட தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் சுயநலத்தை மட்டுமே முன்னெடுத்துத் தமிழரின் எதிர்காலத்தை இருண்டபாதைக்குள் தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலை மாற இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலும் இலக்கியவாதிகளை ஒன்று சேர்க்க,முக்கியமாக இளம் தலைமுறையை ஊக்குவிக்க ஒரு புதிய தளம் அமைக்கப்படவேண்டும்.
புதிய சிந்தனைகள்,மக்களின் ஒட்டுமொத்த நலங்களையும் முன்னெடுக்கும் பரந்த மனம் கொண்ட பரா இன்ற இல்லையே என என் மனம் ஏங்குவதுண்டு. ஆனாலும் அன்று ஒரு கால கட்டத்தில் பரா முன்னெடுத்த சுதந்திர சிந்தனை எழுத்தக்களை மனதார வாழ்த்தி இன்ற அவரது பத்தாவது நினைவு நாளைக் கொண்டாடுமபோது என்னையும் ஒரு பொருட்டாக நினைத்தழைத்த அவரது குடும்பத்தினருக்கு எனத மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.