சிதப்பரம் பேயைப் பார்ப்பதுபோற் பார்த்தான்.,
‘லண்டனில் வாழ என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது? அந்நியமான ஆங்கிலமொழி,ஆத்மாவை நடுங்கப் பண்ணும் பயங்கரக் குளிர்,என்பவற்றைத் தாங்குவதுவேறு.இப்போது மனைவியுடன் சந்தோசமாக இருக்கக் கவசம் போட்டுக்கொண்டு கலவி செய்வதென்றால்’?
சிதம்பரம் மௌனமாகச் சென்று விட்டான். மாலதியின் புத்திமதிகளை அவன் கேட்கமாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.எப்படியும்,கர்ப்பம் வராமல் ‘கவனமாகக்’ கொஞ்சக்காலத்தைத் தள்ளினால் போதும் என்று அவள் நினைத்தாள்.
லண்டன் குளிருக்கு முன்னால், என்ன ‘கவனத்தைப்’ பார்ப்பது?மனைவியின் அணைப்பிற் கிடைக்கம் சூடு எந்த ஹீட்டராலும் தரமுடியாதே!அழகான குழந்தையை அந்த நேர்ஸ் கம்பளிப் போர்வையாற் சுத்தியபடி மாலதியிடம் கொடுத்தாள்.
அழகான குழந்தைதான்.ஆனால் ஒரு பெண்குழந்தை. கறுப்பான பெண்குழந்தை. குழந்தையை வைத்த கண்வாங்காமற் பார்த்த மனைவியிடம்,’லண்டனில் என்ன நிற வித்தியாசம் பார்ப்பதாம், நாங்கள் எல்லோருமே கறுப்பர்கள்தான்’. சுpதம்பரம் மனைவியிடம் முணுமுணுத்தான்.
மாலதி, மூன்றாவது பெண்ணாக அவள் குடும்பத்திற் பிறந்தவள். பெரிய குடும்பம். பணவருவாயிலில்லை. குழந்தைகளின் எண்ணிக்கையில் பெரிய குடும்பம். அந்தக் காலத்தில், எந்தத் தகப்பன்மார் தனது ‘ஆண்மைக்குக் கவசம்’போட்டுக் கலவி செய்தார்கள்? பிள்ளைகள்’ கடவுளின்(?)’கிருபையால் தாராளமாகப் பிறந்துகொண்டிருந்தன.
கல கலவென்று எட்டுக் குழந்தைகள் மாலதி மூன்றாவது பெண்.மூத்த தமக்கைகளுக்குக் கல்யாணம் முடியும்போது மாலதிக்கு முப்பது வயது தாண்டி விட்டது.குடும்பத்திலுள்ளவற்றைச் சீதனமாகக்கொடுத்துச் சிதப்பரத்தை அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.லண்டனுக்கு வந்து தனது முப்பத்தி மூன்றாவது வயதில் வளர்மதி என்ன குழந்தைக்குத் தாயாகி விட்டாள்.
‘பிள்ளை பெற்றுக் கொள்வதானால், கெதியாகப் பெற்றுக்கொள்,வயது ஏறிக்கொண்டு போனால் இடும்பெலும்பு வளைந்து கொடுக்காது.பிள்ளை பெறக் கஷ்டமாகவிருக்கும்’ சொந்தக்காரக் கிழவி ஒருத்தி மாலதியின் வீட்டுக்கு வந்திருந்தபோது வடையை முழுங்கிக்கொண்டுப் புத்திசொன்னாள். மாலதியின் மனதிலுள்ள கர்ப்பத்தடை விடயங்கள்,கிழவியின் புத்திமதியைக் கேட்டதும் காற்றில் கலந்தன.
குழந்தை பிறந்தது. வ.வா,என்ற எழுத்துக்களில் தொடங்கும் பெயரை வைக்கச் சொல்லி ஊரிலிருந்து கடிதம் வந்திருந்தது.குழந்தைக்கு வளர்மதி என்று பெயர்வைக்க மாலதிக்கு விருப்பம்..
‘வாசுகி என்று பெயர் வைப்போமா?’ சிதம்பரம் கேட்டான்.
‘அந்தப் பெயரை ஆங்கிலேயர் சரியாக உச்சரிப்பார்களா?’என்று மாலதி கேட்டதும் அவனுக்குக் கோபம் வந்தது. ஆங்கிலேயர்களுக்குப் பிடித்தபெயர் வைப்பதானால் மார்க்கிரட் தச்சர் என்று பெயர் வை’என்று மனைவியிடம் சொன்னான். கடைசியாக எப்படியோ தங்கள் குழந்தைக்கு வளர்மதி என்று பெயர் வைத்தார்கள்.
‘மதி’ என்று மாலதி தனது மகளை ஆசையுடன் அழைப்பாள். மாலதி வேலைக்குப் போனதும் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஐரிஷ் பெண் ‘மதி’ என்ற உச்சரிப்பைச் சரியாகச் சொல்லத் தெரியாமல், குழந்தையை’மட்டி’ என்று செல்லமாகக் கூப்பிடுவாள்.அவளின் குழந்தைகள்’ மாட்தி’ என்று ஆசையாகக் கூப்பிடுவார்கள்.
குழந்தையை ஐரிஷ்காரி பராமரிக்க, மாலதி இந்தியக் கடை ஒன்றில் வேலைக்குச் சென்றாள். குழந்தை பிறந்து கொஞ்சநாளில் குடும்பத்தின் பொருளாதார நிலையால் மாலதி வேலைக்குப் போகவேண்டிவந்தது.அவளுக்குக் குடும்பப் பொறுப்புக்கள் ஏராளம். சிதம்பரம் அவனின் தம்பியை லண்டனுக்கு எடுத்தவுடன் தனது தம்பியையும் எப்படியும் லண்டனுக்கு எடுக்கவேண்டுமென்ற அவள் ஓயாது உழைத்தாள். அத்துடன் குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தாள்.
தெரிந்த மனிதர்களுடன் சேர்ந்து சீட்டுக்கட்டி எடுத்தகாசை சிதம்பரம் தனது தம்பியை எடுக்கம் முயற்சிக்குப் பாவிக்கப்போகிறான். சீpட்டுக்கட்ட ஒவ்வொருமாதமும் காசு சேர்க்கவேண்டும். மாலதி வேலை செய்யமிடத்தில் அவள் ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலங்கள் வேலை செய்கிறாள் அதனால் வரும் சம்பளம் போதாது. அந்தக் கடையில் வேலை செய்யும் பெண்கள் யாரும் லீவ எடுத்தால், மாலதி தன்னால் முடிந்த நேரத்தில் அப்படியான வேலைகளையும் செய்து உழைக்கிறாள்.அப்படி ஓவர் டைம் செய்து உழைக்கும் பணத்தில் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குகிறாள்
உடம்பு உழைப்புடன், குடும்பத்தைப் பற்றிய மனத் துயர்களும் அவனை முன்கோபக்காரனாக்கியிருக்கிறது. வீpட்டுத் தேவைகள் பற்றி மாலதி ஏதும் சொன்னால் அதைக் கேட்கப் பொறுமையில்லாமல் அவன் எரிந்து விழுவான்.அந்தக் கடையில் வேலை செய்யும் ஒருபெண் லீவிற் போய்விட்டாள். அந்த இடத்திற்கு இன்னொரு பெண்ணைத் தற்காலிக் வேலைக்கு நியமித்து, முழுச் சம்பளமும் கொடுக்க விரும்பாத கருமியான முதலாளி,மாலதிக்கு இன்னும் இரண்டொருமணித்தியாலங்களைக ;கூட்டி வேலை செய்ய நிர்ப்பந்தித்தபோது அவளால் அதைத் தட்டிக் கழிக்க விரும்பவில்லை. கூடுதலாக வேலை செய்யும் நேரத்துக்குரிய முழச் சம்பளம் கிடைக்காவிட்டாலும், கொஞ்சக் காசு கூடவரும் என்பதால் அந்த வேலைக்கு ஒப்புக் கொண்டாள்.
வேலை முடிந்து வீட்டுக்குப் போனதும்,அல்லது வேலைக்குப் போகமுதலும்,துணிகளைத் துவைக்க அவள் லாண்டரிக்குப் போவது பெரிய சிரமமான வேலையாயிருந்தது. சின்னக் குழந்தை இருக்கும் வீட்டில் அடிக்கடி துணிகளைத் துவைப்பது தவிர்க்க முடியாத விடயம். வாஷிங் மெஷின் வாங்குவது அத்தியாவசியமானது.
இரண்டுமாதம் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்து உழைத்தால் அதில் வரும் பணம் ஒரு வாஷிங் மெஷின் வாங்க உதவியாக இருக்கும்.தவணை முறையில் வாஷிங் மெஷின் வாங்க அவள் ஆர்டர் கொடுத்துவிட்டாள். அடுத்த கிழமை வாஷிங் மெஷின் வீட்டுக்கு வரும்.இனி அவள் லாண்டரிக்குப் போகத் தேவையில்லை.
‘வளர்மதி சரியாகச் சாப்பிடவில்லை, மிகவும் துவண்டுபோயிருக்கிறாள்..சாடையான காய்ச்சலும் இருக்கிறது’ ஐரிஷ் ஆயா சொன்னாள்.
காலையில் மாலதி குழந்தைக்குக் கொஞ்சம்’ வீடாபிக்ஸ்’ சாப்பாட்டைப் பாலில் கரைத்துக் கொடுத்தாள். குழந்தை மிகவும் சிரமப்பட்டு ஒன்றிரண்டு ஸ்பூன்கள் மட்டும் எடுத்தது.
‘ குழந்தைகள் ஓடியாடுற வயதில இப்படி வரும்தானே’ மாலதி குழந்தையின் நிலை கண்டு தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, வழக்கம்போல் மாலதி வேலைக்குப் போகமுதல்,காலையில் ஐரிஷ் ஆயாவிடம் குழந்தையைக் கொண்டுபொனாள்.
;’குழந்தையை டாக்டரிடம் கொண்டுபொகவில்லையா?’ ஐரிஷ் ஆயா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
‘இல்லை, இரவில் ‘கல்போல்’ கொடுத்தேன். காய்ச்சல் இருக்கவில்லை. காலையில் வீடாபிக்ஸ் கொடுத்தேன் கொஞ்சம் சாப்பிட்டாள்.இன்றைக்குப் பழையபடி ஓடியாடி விளையாடுவாள்’
மாலதி வேலைக்குப் போகும் அவசரத்தில் தனது கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னாள்.ஒரு கையில் குழந்தை அடுத்த கையில் லாண்டரியிலிருந்து எடுத்து வந்த உடுப்புகள் கனத்தன.
குழந்தையை ஆயாவிடம் கொடுத்துவிட்டு வேலைக்குப் போகமுதல் மாலதி தனக்கள் சொல்லிக் கொண்டாள். அன்று அவள் வேலைக்குகு; கொஞ்சம் தாமதமாக வந்ததால் முதலாளி முறைத்துப் பார்த்தான்
‘பாசமுள்ள தாய்கள் வீட்டோடு இருக்கவேணும்’ முதலாளியின் குரலில் கிண்டலா அல்லது உருக்கமா என்பதை மாலதியால் கண்டு பிடிக்கமுடியவில்லை. அவள் வேலையில் கவனத்தைத் திருப்பினாள். முதலாளியின் குரலில் எப்போதும் அதிகாரம் தாண்டவமாடும். அவன் கண்கள் கொள்ளிவாய்ப்பேய்போல தனது வேலையாளர்களை எப்போதும் வலம் வரும். அந்தப் பார்வையை,வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் தவிர்ப்பதுண்டு. மாலதியின் அடிமனதில் துவண்டுபோய்க் கிடக்கும் அவளின் மகள் வளர்மதியின் முகம் அடிக்கடி வந்துபோனது. இப்படிக் கஷ்டப் பட்டு உழைக்கும் தனது வாழ்க்கையை நினைத்து அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்போது,அவளின் குழந்தையைப் பார்க்கும் ஐரிஷ் ஆயாவிடமிருந்து டெலிபோன் கால் வந்தது.
வந்த கொஞ்ச நேரத்தில் வேலையை விட்டோடும் மாலதியை முதலாளி முறைத்தப் பார்த்தான். அவனுக்குக் குழந்தையின் நிலையை விளக்கிச் சொல்ல அவளுக்கு நேரமிருக்கவில்லை.
‘ இப்படிக் கண்டபாட்டுக்கு லீவ எடுத்தால், நான் வேலைக்கு வேறு யாரையும் பார்க்க வேண்டிவரும்’
முதலாளி திட்டுவதைப் பற்றி அவளுக்கு அக்கறையில்லை. அவள் விரைந்தாள்.
டாக்டர் குழந்தையின் நிலை பற்றி மாலதிக்குச் சொன்ன விளக்கம் அவளுக்குப் புரியவில்லை.
‘வைரஸ் மெனஞ்;சைட்டிஸ் பற்றி உனக்குத் தெரியுமா?’ என்று மாலதியை டாக்டர் கேட்டார்.
பாவம் மாலதி, பெரிய படிப்புப் படிக்காதவள் இந்தியக் கடையில் வெண்காயத்துடனும் வெண்டிக்காய்களுடனும் வேலை செய்பவள்.
குழந்தையின் உயிர் தப்பியது. ஆனால் குழந்தைக்கு வந்த வருத்தம் அவளின் மூளையைத் தாக்கியதால், குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டு விட்டது என்றும் குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால வளர்ச்சி கேள்விக்குரியதென்றும் டாக்டர் சொன்னார்.
வாடிய தண்டாய்த் துவண்டு கிடந்தாள் வளர்மதி.
வீட்டில் ஒரு புதிய வாஷிங் மெஷின் கொண்டு வந்து பூட்டப்பட்டிருக்கிறது.
‘இந்த மெஷினுக்க ஆசைப்பட்டு ஓயாமல் வேலை செய்யாதிருந்;தால்,வளர்மதியின் வருத்தத்தைக் காலாகாலத்தில் கண்டுபிடித்து வைத்தியம் செய்திருந்திருக்கலாம்..வளர்மதி இந்த நிலைக்கு வரவேண்டிய நிலையையும் தவிர்த்திருக்கலாம்’ பாவம் மாலதி, அவள் ஒரு சாதாரண தாய். தனது குடும்பத்தின் நன்மைக்குத் தன்னை வருத்தியுழைப்பவள். சாதாண ஆசைகளால் ஆட்டிப் படைக்கப் படுபவள்.