எனது படைப்பு அனுபவம்! – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –


எனது படைப்பு அனுபவம்! – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –

 – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்! – இலக்கியம் 20 ஜூலை 2021

– 18.7.21 ‘மெய்நிகர்’ – திருப்பூர் கனவு இலக்கியப் பேரவை நிகழ்வுக்கான பதிவு –



எழுத்தாராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர்  எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால் எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும்  எழுத்தாளர் ஒருவரை  உருவாக்க உதவும் என்பது எனது படைப்பு அனுபவத்தில் தெரிந்து கொண்ட விடயங்களில் சிலவாகும்.

எனது இளவயதில் எங்கள் வீட்டில் எனது தகப்பனார் திரு குழந்தைவேல் நூற்றுக்கணக்கில் பல தரப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார். சிறுவயதில்,எங்களுக்குத் தெரிந்த தேவார திருவாசக புத்தகங்களில் எனது ‘புத்தகப்படிப்பு’ ஆரம்பித்தது.கால கட்டத்தில அப்பா வாங்கி வரும் கல்கி கலைமகளுடனும் வாசிப்பு தொடர்ந்தது. அந்த அனுபவங்கள்,பல விதமான எழுத்துக்களைப்; படிக்கும் உணர்வையும் எழுத்தை ரசிக்கும், பூசிக்கும் உணர்வையும் எனது இளவயதில் எனக்குத் தந்தது என்ற நினைக்கிறேன்..அந்த அனுபவங்களால்,எனது அடிமனதில் எழுத்தாளராக வரவேண்டும் ஒரு உந்துதல் பிறந்திருக்கும் என்றால் அது மிகையாகாது.

அப்பாவின் புத்தகங்களில் அவ்வப்போது மனதைத் தட்டிய விடயங்களுக்கான விளக்கத்தைப் பிற்காலத்தில் பல துறைகளில் நுழைந்த எனது வாசிப்பு புரிந்து கொள்ள உதவின. அவை பொதுவான அறிவு தேடல் சார்ந்தவை மட்டுமல்ல. சமூகத்தில் ஆண் பெண்களின் நிலைப்பாடுகள்,மதம்,சாதி,இனம்,பற்றிய சிக்கலான கருத்துக்கள் என்பனவும் அடங்கும்.

இதுவரை பதினெட்டுத் தமிழ்ப் புத்தகங்களையும் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் முக்கியமாகப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுத, இன்னும் எழுதிக் கொண்டிருப்பதற்கு எனது இலக்கியப் படைப்பு வரலாறு நீட்சி செய்கிறது. எனது படைப்பு வரலாறு பல திருப்பங்களைக் கண்டதாகும. எனது படைப்பனுபவம், எனது சிறுவயதில் ஒரு கட்டுரைப் போட்டியில் கிடைத்த பரிசுடன் ஆரம்பித்திருக்கலாம் என்ற நினைக்கிறேன். அந்தக் கட்டுரைப் போட்டிக்கு முன் ஏதோ ஒரு தமிழ்ப் பத்திரிகையில் சிறுவர் பகுதியில் ஒரு சிறுகவிதை எழுதியது ஞாபகமிருக்கிறது.

அக்கவிதை நான் விதைத்த ஒரு சிறு விதை பெரிதாகி கிளை விட்ட பிரமிம்பு சார்ந்தது என்பது எனது ஞாபகம். அதன்பின் மாவட்டக் கட்டுரைப் போட்டியில்’ பாரதி கண்ட பெண்கள் என்ற தலைப்பில் எழுதிப் பரிசு பெற்றேன். அதைத் தொடர்ந்து இலங்கை அரசால் நடத்தபபட்டுக்கொண்டிருந்த ‘ஸ்ரீலங்கா’என்ற செய்திப் பத்திரிகையில் எங்கள் ஊர்க் கோயில் பற்றிய எனது கட்டுரை வெளிவந்தது.


அதைத் தொடர்ந்து எங்கள் பாடசாலை கையெழுத்துப் பத்திரிகையைச் சில மாணவர்கள் சேர்ந்து நடத்தினோம். ஆரம்பகால படிப்பும் பரீட்சைகளும் முடிந்து,மேற்படிப்புக்காக மருத்துவத் தாதியாகப் பயிற்சி பெற யாழ்ப்பாணம் சென்றேன்.யாழ்பாணம் தாதிமார் பாடசாலையில் அனட்டமி அன்ட பிசியோலஜி'(உடலமைப்பியலும் தொழிலியலும்’) விரிவுரையாளராகக் காலம் சென்ற பிரபல தமிழ் எழுத்தாளரான மருத்துவ கலாநிதி திரு.சிவஞானசுந்தரம் அவர்கள் கடமையாற்றினார்கள்.அவரின் எழுத்து மட்டுமல்லாது விஞ்ஞான ரீதியாக அவர் அவ்வப்போது எங்கள் படிப்பு சம்பந்தமான விடயங்களுக்கப்பால், சமுக சிந்தனை,மனித வாழ்வியல் பற்றிய சில விடயங்களைச் சொன்னது எனது சிந்தனையில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

அவர் அப்போது ‘நந்தி’ என்ற புனை பெயரில் எழுதிக் கொண்டிருந்தார். அவரின் இலக்கியத்திலம் அறிவுரைகளிலும் மிகவும் மதிப்புக் கொண்ட நான்’ எழில் நந்தி’ என்று பெயரில் எழுதத் தொடங்கினேன்.’வீரகேசரி’ என்ற இலங்கைத் தேசியப் பத்திரிகையில் ‘நிலையாமை’ என்ற எனது சிறு கதை வெளிவந்தது.அப்போது, எங்கள் தாதிமார் பாடசாலையில்,படிப்பு மட்டுமல்லாமல் எங்கள் மாணவர்கள் பத்திரிகைக்கும் (நேர்ஸிங் ஜேர்ணல்) ஆசிரியையாகவுமிருந்தேன்.

அக்காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவராகவிருந்த மறைந்த எழுத்தாளர் செ. யோகநாதன் அவர்கள் என்னைத் தங்கள் இலக்கியப் பத்திரிகை;கு ஒரு கதை எழுதச் சொல்லிக் கேட்டார். அன்றைய எனது யாழ்ப்பாண வாழ்க்கை அனுபவங்கள்,நாங்கள் வாழும் சூழ்நிலை,சிக்கலான உலகக் கண்ணோட்டங்கள், படித்துக் கொண்டிருக்கும் பல விதமான இலக்கியப் படைப்புக்கள்;, வேலையில் சந்திக்கும் மனித வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்கள் என்பன,இலக்கியப் படைப்பு பற்றிய எனது பார்வையைக் கூர்மையடையச் செய்துகொண்டிருந்தது.

அதன் பிரதிபலிப்பாக எனது சிறுகதை’ சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற பெயரில்,பல்கலைக் கழகப் பத்திரிகையான ‘வசந்தம் பத்திரிகையில் வெளிவந்தது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சமுதாயத்தில் நான் கண்ட,சாதிமுறைகள்,பெண்களின் நிலை, வர்க்க மேம்பாடு என்பன அக்கதையில் பிரதி பலித்ததால்,ஒரு சில முற்போக்கு இலக்கியவாதிகளிடம் எனது எழுத்து பேசு பொருளாகியது.

அதைத் தொடர்ந்து அக்காலத்தில்,யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபலமாக வெளிவந்துகொண்டிருந்த’ மல்லிகை’ என்ற முற்போக்கு பத்திரிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவா அவர்களைச் சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது.அவர் என்னைத் தனது பத்திரிகையில் எழுதச் சொன்னார். அந்தப் பத்திரிகைக்கு’ ரத்தினம் அப்பா’ என்ற சிறுகதையை எழுதினேன்.யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்த கொடுமையான சாதியுணர்வை யதார்த்தமாக அக்கதை பிரதிபலித்தாகப் பேசப் பட்டது.

அதைத் தொடர்ந்து திரு டொமினிக் ஜீவா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எனது மதிப்புக்குpரிய விரிவுரையாளரும் இலங்கையின் பிரபல எழுத்தாளருமாகிய வைத்திய கலாநிதி திரு சிவஞானசுந்தரம்(‘நந்தி’) அவர்களைப் பற்றிய சிறு பதிவொன்றை எழுதினேன்.

எங்கள் தாதிமார் பாடசாலைப் பத்திரிகையின் ஆசிரியை,கட்டுரை ஆசிரியை என்பவை என்னை சிறுகதைகளுக்குள் மட்டும் நடமாடும் ஒரு பெண்ணாக இல்லாத அடையாளத்தைக் கொடுத்தது. ‘சித்திரத்தில் பெண்எழுதி’ சிறுகதை வசந்தம் பத்திரிகையில் வந்தததைத் தொடர்ந்து,திரு பாலசுப்பிரமணியத்தின் உறவு வந்து. அதன் நீட்சியால் திருமணத்தில் இணைந்தோம்.கணவரின் ஆதரவுடன் எனது எழுத்து தொடர்ந்தது.இலங்கைப் பத்திரிகைகளில் எனது சில சிறு கதைகள் பிரசுரமாகின.

எங்கள் வாழ்க்கை லண்டனுக்குக் குடிபெயர்ந்தது. லண்டனில் முதல் தமிழ்ப் பத்திரிகையான ‘லண்டன் முரசு’ பத்திரிகையை திரு.ச.சதானந்தன் அவர்கள் நடாத்திக்கொண்டிருந்தார். அந்தப் பத்திரிகையில் எனது சிறுகதைகள் பிரசுரமாயின.அதைத் தொடர்ந்து பிரச்சினைகளும் வந்தன. சீதனம் வாங்குதல்,சாதி பேதம் பார்த்தல் போன்ற விடயங்களுக்கு எதிரான எனது படைப்புக்கள் பிற்போற்குவாதிகளின் எதிர்ப்பைச் சந்தித்தது. அக்கால கட்டத்தில் ‘லண்டன் முரசு’பத்திரிகையில் வெளிவந்த ‘மௌன அலறல்கள்’ என்ற எனது தமிழ்க்கதை இந்திய அந்தோலஜி ஒன்றில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு பிரசுரமாகியது. சிறுகதைகளைத் தாண்டி, தொடர் நாவல்களை’லண்டன் முரசு’ஆசிரியர் திரு சதானந்தன் அவர்களின் வேண்டுகோளின்படி எழுதினேன்.

எனது முதலாவது தொடர் நாவல்,தமிழ் அரசியல்வாதிகள் பற்றி எழுதிய,’உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்பதாகும். அந்த நாவலுக்கு, ஆதரவும் திட்டலும் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து ‘தேம்ஸ்நதிக்கரை’ என்ற நாவல் மிகவும் பிரபலமாக வரவேற்கப்பட்டது. அதற்குக் காரணம் அது அரசியலைவிட ஒரு சோகமான ‘காதல்’ பற்றிய கதை என்ற காரணம் என்பதாகும். அது புத்தகமாக வெளிவந்தபோது இலங்கை சுதந்திர எழுத்தாளர் பரிசும் (1993) கிடைத்தது.

அதைத் தொடர்ந்து,1980ல் இலங்கை சென்று வந்ததன் தாக்கத்தில்’ ஒரு கோடை விடுமுறை’ என்று நாவல் எழுதினேன்.இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளை ஒரு தனி மனிதனின் அரசியல்.சமுகம் என்ற தளங்கள் மட்டுமல்லாது,மூன்று பெண்களுடன் சம்பந்தப் பட்ட ஒரு தமிழனின் உளவியலும் இணைத்து எழுதியிரு;தேன்.அந்நாவல் பலராலும் மிகவும் ஆர்வத்துடன் படிக்கப் பட்டது என்பதை அந்த நாவலுக்கு வந்த விமர்சனங்களிலிருந்து புரிந்து கொண்டேன். அந்த நாவலை இலங்கையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர் திரு.ஆர். பத்மநாபஐயர் அவர்கள் இலங்கையில் பிரசுரிக்க முன்நின்றது மட்டுமல்லாமல்,அதை இந்தியாவிலும் அறிமுகம் செய்தார்.

அந்த நாவல் பற்றி கோவை ஞானி என்னும் பழனிசாமி அய்யா அவர்கள் எழுதிய விமர்சனத்தை திரு. பத்மநாபஐயர் அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து கோவை ஞானி அய்யாவுடன் தொடர்பு கொண்டேன். அவரின் தொடர்பு இலக்கிய வரலாறு புதிய திருப்பம் கண்டது.

எனது எழுத்து பற்றி, அவரின் எண்பதுகளில் தமிழ் நாவல்கள் புத்தகத்திலும் பின்வருமாறு (பக்78) குறிபிட்டிருக்கிறார்.;’எண்பதுகளில் ஒரு சாதனையாளராகதமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் ராஜேசுவரி பாலசுப்ரமணியம். லண்டனில் குறியேறியுள்ள, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். வரலாற்றில் வைத்து தம் வாழ்வைக்காணும் திறம் பெற்றவர்.’

80ம் ஆண்டின் ஆரம்ப கால கட்டத்தில் லண்டனில் இலங்கையின் பிரபல கவிஞர்களில் ஒருத்தரும் பல்கலைக்கழக முனைவருமான திரு.எஸ்.சிவசேகரம் லண்டன் வந்திருந்தார் . அப்போது,திரு பாலசுப்பிரமணியம் அவர்களின் தூண்டுதலால் எனது’ தில்லையாற்றங்கரை’ என்ற நாவல் எழுதப் பட்டது. அந்நாவலைப் படித்துத் திருத்தியவர்கள் கலாநிதி,திரு.சிவசேகரம், தமிழ் இலக்கிய ஆர்வலர் திரு.மு நேமிநாதன் போன்ற நன்மனம் கொண்டவர்களாகும். அந்த நாவலை டாக்டர் சிறிதரன், வழக்கறிஞர் திரு.தே.ரங்கன் என்பவர்கள் இந்தியாவில,1987ல் பிரசுரிக்க உதவினார்கள். இரண்டு தடவைகள் அப்புத்தகம் அச்சேறியது. லண்டன் ஆர்ட்ஸ் கவன்சில் நிதி உதவியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் லண்டனில் வெளியிடப்படுகிறது.

1982ம் ஆண்டிலிருந்த இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து பல மனித உரிமை போராட்டங்கள் எனது தலைமையில் நடந்தன. அதனால் லண்டனில் பல பல்கலைக்கழகங்கள் பேச அழைத்தார்கள். எனது படைப்புகள் இலக்கியம் மட்டுமல்லாமல், சமூக விடயங்கள்,பெண்ணியம், மனித உரிமை போன்ற பல தளங்களில் விரிவு கண்டன. 1985ல் சசக்ஸ பல்கலைக் கழகத்தில் எனது முதலாவது ஆங்கிலக் கட்டுரைவாசிக்கப் பட்டது. 82ம் ஆண்டு லண்டனில் ஆரம்பித்த தமிழ் மகளீர் அமைப்பு, 85ல் ஆரம்பித்த தமிழ் அகதிகள் ஸ்தாபனம், தமிழ் அகதிகள் வீடமைப்புச் சட்டம், என்பவற்றில் தலைவியாகவிருந்தேன். அத்துடன் இலங்கையில் தமிழர் நிலை பற்றி ‘ எஸ்கேப் புறம் ஜெனசைட்’ என்ற ஆவணப் படத்தையும் தயாரித்துக் கொண்டிருந்தேன். அதனால் எனது எழுத்து பல பரிமாணங்களில் விரிந்தது.

1987ல் எனது திரைப் படப் பட்டப்படிப்பு சம்பந்தமான ஆய்வு, அத்துடன் இந்தியாவுக்குச் சென்றிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றிய விடயங்களைப் பற்றிய ஆய்வு போன்ற விடயங்களுக்காக இந்தியா சென்றேன். எழுத்தாளர் ஜெயகாந்தன்,இந்திராபார்த்தசாரதி, இராஜம் கிரு~;ணன்,போன்ற எழுத்தாளர்களையும்.பானுமதி, பாலு மகேந்திரா போன்ற சினிமாத் துறை சம்பந்தப் பட்டவர்களையும் சந்தித்து.நேர்காணல்கள் செய்தேன் முக்கியமாக கோவை ஞானி- என்ற பழனிசாமி அய்யாவை நேரில் சென்று சந்தித்தேன்.

அவரைச் சந்தித்தபின் எனது இலக்கிய படைப்பு வரலாற்றில் முற்று முழுதான பல திருப்பங்கள் நடந்தன.அதுவரையும், லண்டன் வாழ்க்கையில் இணைந்த எனக்குத் தமிழில் எழுத நேரமிருக்கவில்லை. ஆனால் ஞானி அய்யாவின் ஆதரவால் தமிழில் மீண்டும் எழுதத் தொடங்கினேன். பல சிறு கதைகள் பல நாவல்கள் பல விருதுகள் என்ற இலக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அய்யாவின் ஆதரவால் எனக்குத் தெரியாத புதிய பரிமாணத்துக்கள் நுழையவேண்டிய நிலை வந்தது. அதாவது,தமிழ்க் கடவுள் முருகன், தமிழர் தொன்மை, தமிழ்ப் பாரம்பரியம்,பெண்கள் இலக்கியம் போன்ற விடயங்களில் அய்யாவின் தொடர்பால் பல படைப்புக்களை முன்னெடுத்தேன்.

1998ல் சென்னையில் நடந்த ‘சர்வதேச முருக மகாநாட்டுக்;கு அழைக்கப் பட்டபோது அய்யாவிடம் அதைப் பற்றிக் குறிப்பிட்டபோது நான் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று அன்பான தொனியில் சொன்னார்.அதன் விளைவு இன்றும் தொடர்கிறது. தமிழர் தொன்மையை ஆய்வு செய்ய அந்த ‘முருக மகாநாடு; எனக்கு ஒரு அத்திவாரமிட்டது.அய்யாவின் ஆலோசனையுடன் ‘ தமிழ்க் கடவுள்’ முருகன்’ பற்றிய ஆய்வு நூலை எழுதினேன் அதை அவர் 2000ம் ஆண்டு வெளியிட்டார்.

அய்யாவும் நானும் இந்தியாவில் பெண்கள் சிறுகதைப் போட்டியை 1990ம் ஆண்டிலிருந்து 2009 வரை நடத்தினோம். 200 மேற்பட்ட பெண்களின் படைப்புக்களை வெளியிட்டோம். அந்தத் தொகுதியைக் காவ்யா பிரசுரம் 2015ல் வெளியிட்டிருக்கிறது.

முருகன் மகாநாட்டுக்கு இலங்கையிலிருந்து வந்து டாக்டர்களின் வேண்டுகொளின்படி இரண்டு சுகாதாரக் கல்வி நூல்களை எழுதினேன்

இப்படியே எனது படைப்புலக அனுபவங்கள் பற்றிய பல விதமான திருப்பங்களை நான் சொல்லிக் கொண்டேபோகலாம்.

1998ல் முருக மகாநாட்டில் சந்தித்த தஞ்சாவ10ர்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு பவுண்துரை அவர்களால், முன்னெடுக்கப்பட்ட எனது படைப்புகள் சார்ந்த ஆய்வை பத்து முனைவர்கள்’பன்னாட்டுத் தமிழரும் பண்பாடும்'(2001)என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள்.அவர்கள் எனது பத்து படைப்புகளிலும் பல்வித ஆய்வகள் செய்திருக்கிறார்கள்.

அத்துடன் படைப்பு அனுபவத்தில் என்னைக் கௌரவப் படுத்திய சில நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் அதாவது,இலங்கை சாகித்திய அக்கடமி பரிசுபெற்ற(1994) எனது ‘பனிபெய்யும் இரவுகள’; என்ற நாவல் சிங்கள இலக்கிய ஆளுமையான திரு மதுல கிரிய வியரத்தினா அவர்களால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப் பட்டதை ஒரு சினேகிதர் மூலம் தெரிந்துகொண்டது எனக்கு வியப்பைத் தந்தது.அவரைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது,அந்த நாவலின் கதைக் கரு. எழுத்து நடை, வாசகர்களைத் தன்னுடன் இலக்கியத்தின் மூலம் இணைத்த பல்துறை விளக்கங்களின சிறப்பு என்பவற்றைத் தனது சிங்கள மக்களும் வாசித்து மகிழவேண்டும் என்றார்.

அதேமாதிரி, 2016ம் ஆண்டில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் திருமதி த.பிரியா அவர்கள் எனது எட்டு நாவல்களைத் தனது முனைவர் பட்டப்படிப்புக்கு ஆய்வுசெய்து.’ ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதினங்களில் புலம் பெயர்ந்தோரின் வாழ்வியல் சிக்கல்கள்’ என்ற ஆய்வு நூலாக வெளியிட்டிருந்தார்.அதில் அவர்’ஒரு பெண்ணாகப் பிறந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்து ஒரு படைப்பாளியாகத் தன்னை அறிவித்துக்கொண்டு தமிழ் சமூகம் முன்னேறவேண்டும் என்ற தணியாத ஆவலைத் தன் எழுத்தக்களின் மூலம் புலப்படுத்திக்கொண்டுள்ள புதின ஆசிரியர் திருமதி ராஜேஸவரி பாலசுப்பிரமணியத்தின் புதினங்களைப் பற்றிய திறனாய்வு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத தேவையாகிறது’ என்று தனது ஆய்வில்(பக்4) குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை எழுத்தாளர்களில என்னுடைய நாவல்கள்தான் முதற்தரம் இந்தியாவில் முனைவர் பட்டப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புக்கள் என்பது பெண் எழுத்தாளர்கள் பெருமைப்படக்கூடிய விடயமென்று நினைக்கின்றேன.

இலங்கை சுதந்திர எழுத்தாளர்களின்; பரிசு(1998) பெற்ற இன்னுமொரு நாவலான,’வசந்தம் வந்து போய்விட்டது’ என்ற நாவலுக்கு முன்னுரை எழுதிய திருமதி புவனேஸ்வரி அவர்கள்,’வியாபாரப் போக்குடன் பெண்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப் படுத்தும் கதைகள்,கதாசிரியர்கள் பெருகிவரும் இந்தக் கால கட்டத்தில்,சமூகப்பணிக் கட்டுப்பாட்டுடன் ஒரு முன்மாதிரி நாவலைப் படைக்க ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார்.அவர் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.1997)’ என்று குறிப்பிட்டுக்கிறார்.

2019ல்;,தமிழ்நாடு எழுத்தாளர்,கலைஞர் சங்க விருது பெற்ற எனது ‘லண்டன்1995; பற்றிய சிறுகதைகள் தொகுப்பு பற்றி, ஐரோப்பிய பெண்கள் சந்திப்பு 26.6 21ல்; கருத்தரங்கில்,கலந்து கொண்ட முன்னாள் முனைவரும் தமிழ்நாட்டில் தெரியப் பட்ட பெண்ணிய எழுத்தாருமான திருமதி ஆர்.பிரேமா ரத்தன் அவர்களின் கூற்றுப்படி,’இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எழுத்துக்கள் பல தளங்களுக்கு வாசகர்களை அழைத்துச் சொல்கிறது.மனிதநேயம், சமூகவியல், வாழ்வியல் மாற்றங்கள்,பெண்ணிக் கருத்துக்கள், மருத்துவ விளக்கங்கள், உளவியல் கருத்துக்கள் என்று பல தளங்களில் அவரின் படைப்புக்கள் தடம் பதிக்கின்றன.அவரின் இயற்கையை மதிக்கும் தொனி பல படைப்புகளில் தெரிகிறது. தொல்காப்பியரின் முதல் பொருள்,கருப்பொருள் உரி பொருள்களின் விளக்கம சார்ந்த விதத்தில் இவரின் படைப்புகள் இருப்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது என்ற குறிப்பிட்டிருக்கிறார்.

எனது படைப்பு அனுபவம் முற்று முழவதுமாகப் பல திருப்பங்களைக்கொண்ட பரந்த பிரயாணம் என்று கூறிக்கொண்டு,எனக்கு இங்கு சந்தர்பமளித்த திரு சுப்பிரபாரதி மணியன் அவர்களுக்கும் நானிறி சொல்லிக்கொண்டு எனது கட்டுரையை முடிக்கிறேன்.

rajesmaniam@hotmail.com


This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s