கோவை ஞானி அவர்களின், பெண்ணியம்,மனித நேயம் பற்றிய பதிவுகள்;’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். லண்டன்.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த தமிழினம் செய்த தவப்புதல்வர்களாகப் பலர் இப்பூமியில் தரித்து,தெய்வத் தமிழ் மொழிக்கும், மொழிசார்ந்த அறிவு விருத்திக்கும் பற்பல தொண்டுகளைச் செய்திருக்கிறார்கள். பல்லாயிரம் தமிழ் மக்களின் அறிவியல் உணர்வை பன்முகத் தன்மையில் மேம்படுத்தியிருக்கிறார்கள்.தமிழ்மொழியின் சிறப்பை உலகுக்குப் பரப்ப இந்த அறிஞர்கள் பிரமாண்டமான உந்துதலைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்த அண்ணல்களில் எனது மதிப்புக்குரிய கோவை ஞானி அய்யா ஒருத்தராக என்னால்க் கணிக்கப் படுகிறார்.

தமிழ் மொழியில் இவர் கொண்டிருந்த ஆழமான ‘பக்தியை’ ஒரு சில வரிகளில் அல்லது ஓராயிரம் வார்த்தைகளிலும் என்னால் எழுதி முடிக்க முடியாது.

ஞானி அவர்கள் 1998ம் ஆண்டிலிருந்து நடத்தி வந்த தமிழ் நேயம் பதிவில்,தமிழர்களின்,தமிழ் நாட்டின்,தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றி மிக வேதனைப்பட்டு தமிழ் நேயம் பதிவின் (2003);முன்னுரையில் எழுதிய ஒரு குறிப்பை இங்கு பதிவிட விரும்புகிறேன்.

‘ தமிழ் மக்களின் உரிமைகளை-நலன்களை ஒடுக்குவதில்,அழிப்பதில் மைய அரசு விடாப்பிடியாகச் செயல்படுகிறது.தமிழர்களை வைத்தே தமிழ் இனத்தை ஒடுக்கமுடியும் என்று நம்புகிறது.

நம் வரலாற்றை நாம் இழந்து விடமுடியாது.அரசின் அதிரடி நடவடிக்கைகளை உலகத் தமிழர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

போதும் இந்த அரசியல் அநாகரிகம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..தமிழச் சான்றோர்கள் இனியும் மவுனிகளாய் இருக்க முடியாது’.இது அவரின் பதிவு.தன்மானமுள்ள தமிழர்கள் தமிழ் மொழியும் தமிழ்க்கலாச்சாரமும் அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டாம் என்ற வேண்டுகோள் என்று நான் புரிந்து கொள்கிறேன்.

தமிழ் மொழியினதும் தமிழரின் கலாச்சாரத்தையும் மேம்படுத்தும் வேட்கையில்,

இவரின் தேடல் பன்முகத் தன்மையானது. தமிழின் தொன்மை,தமிழின் செழுமை, தமிழின் தத்துவங்கள், தமிழரின் வாழ்க்கை நெறிகள், முக்கியமாகத் தமிழரின் பாரம்பரியத்தில் பெண்களுக்கான சமத்துவம் எனபவற்றில் மட்டற்ற ஆழமான தேடல்களை நாடியவர்.

சாதி மதபேதமற்ற தொல் தமிழனின் சமத்துவத் தத்துவத்தின் சாட்சியங்களைத் தேடியவர். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, நீட்சி, கலாச்சாரப் பிரதிபலிப்புக்கள். பண்பாட்டுக் கட்டுமானங்கள் என்பன அந்தச் சமுதாயத்திலுள்ள பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தங்கியிருக்கிறது என்பதை அப்பட்டமாகப் புரிந்து கொண்டவர். அந்தத் தேடலில் என்னையும் ஒரு விதத்தில் ஈடுபடுத்தியவர்.எனது லண்டன் வாழ்க்கையின் பரிமாணம் வித்தியாசமானது.அந்த வாழ்க்கைகப்பால் தமிழ்த் தொன்மையையும் அந்த அற்புதமான காலகட்டத்தில் பெண்களின் சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் பல சங்ககாலப் பெண்களின் பாடல்களளைப் படிக்கத் தூண்டியவர்.

பல்லாயிர வடங்களாக ஒரு செறிந்த நாகரீக சமத்துவ சமுதாயமாகத் தமிழினம் வாழ்ந்ததன் மகிமைக்கு,அச்சமுதாயத்தில் பெண்கள் எப்படி பங்காற்றினார்கள் என்பதைச் சங்கத் தமிழ்ப் படைப்புகளில் பெண்கள் வாயிலாகவே அறியலாம் அதற்குச் சான்று,அவ்வையார் போன்றவர்களின் படைப்புகளாகும். சங்ககாலப் பெண்களின் படைப்பகளில் பிரதி பலிக்கும் பன்முக விடயங்கள் அடங்கிய கட்டுரைகளை எழுத என்போன்றவர்களை ஊக்குவித்தவர்.

அத்துடன் எனது படைப்புகளில் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் அவளின் ‘தனித்துவத்தையும்,அடையாளத்தையும் அறிவையும்,மேம்பாட்டையும் அழிக்க முயல்கிறது’ என்பதைத் தெளிவாக அடையாளம் கண்டவர்.அவை பற்றி எழுதிய முதலாவது இலக்கிய ஆய்வாளர்.

கடந்த சில நூற்றாண்டுகளாகப் பெண்கள் பெரும்பாலான சமுதாயங்களில் இரண்டாம் பிரஜைகளாக நடத்தப் படுகிறார்கள்.அது இன்று உலகம் பரந்தவித்தில் மனிதனின் ‘நாகரீக வளர்ச்சியைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.தமிழகத்தில்,பெரும்பாலன பெண்களின் நிலையும் அதுவே. அந்நிலையை மாற்ற, பெண்களுக்கும் சமுதாயத்தில் சமத்துவ பங்காற்றப் பெண்களின் சிந்தனையில் மாற்றமுண்டாக்க வேண்டும் என்ற உணர்வு கொண்ட என்போல எழுத்தாளர்களை மதித்தவர்.அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க’பெண்கள் சிறுகதைப்போட்டியை’நான் திட்டமிட உதவியவர்.

அவர் பெண்ணிய சிந்தனையை எப்படித் தனது வார்த்தைகளில் இனிவரும் பரம்பரை படித்துப் பயன்பெற வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார் என்பதை ஆய்வு செய்கிறது. இந்தச் சிறிய கட்டுரை.அண்மையில் அவரின் சொன்னதாகச் சில பெண்ணியக் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சம காலச் சமுதாயத்தில் ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்குத் தன்னை ஈடுபடுத்திப் பல அரிய பணிகளைச் செய்த ஒரு மகா அறிஞர் மறைந்து விட்டால். அவரைத் தங்களின் மிக நெருங்கிய நண்பராகக் காட்டிக் கொள்ளவும்,’அவர் என்னிடம் இதைச் சொன்னார்’ என்று பதிவிடுவதையும் மேற்கு நாடுகளில் பெரும்பாலும் காணமுடியாது. தனிமனித சம்பாஷணைகளை ஆவணத்தின் ஆதாரமாக்க முடியாது.

ஓரு அறிஞர். எதை மக்களுக்காகப் பதிவிட்டுச் சென்றார்,பொது மேடைகளில் பலர் முன்னிலையில் என்ன பேசினார், ஊடகங்களில் என்ன பேசினார் என்பவைதான் ஆவணங்கள். அந்த விதிமுறையில்,அவா,’பெண்ணியம்.பெண்களின் விடுதலை.சூழல் மாசி படுதலை எதிர்த்துப் பெண்களின் போராட்ட சிந்தனை என்பன பற்றி எப்படி நோக்கினாh. என்று பதிவிட விரும்புகிறேன்

,ஆணாதிகத்தை எதிர்த்த பெண்ணிய சிந்தனைகள்,பெண்மையை வணங்கிய தமிழ்த் தொன்மை.மேற்குலத்திற்கும் எங்களுக்குமான முரண்பாடுகள் என்பன போன்ற விடயங்களில் பல இடங்களில் அவரால் பதிவிடப் பட்ட விடயங்களையும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பெரும்பாலான சமூகங்கள்,ஆணாதிக்க சிந்தனையில் தங்கள் வாழ்வின் பல்வித கோட்பாடுகளையும் அமைத்திருக்கின்றன. அவை அப்படித் தொடர்வதற்கு, ஆண்களால் கொண்டுவரப்பட்ட கடவுளர்களும் சமயங்களும், அதை வலுப்படுத்தும் தத்துவங்களும் உதவுகின்றன.அவற்றின் பிரதிபலிப்பு,கலை கலாச்சாரம்,பண்பாடு,என்பவற்றில் அடியூன்றி நீடிக்கும். ஆளுமையானவர்களால் பெரிதுபடுத்தப்படும் கலாச்சாரத்தின்; பிரதிபலிப்புக்கள் ஊடகங்களில் தொடர்கின்றது.

அண்மைக்காலம் வரை பெரும்பாலான ஊடக எழுத்தாளர்கள் தொடக்கம்,இலக்கிய எழுத்தாளர்களும் ஆண்;களாகவிருந்தார்கள்.அவர்கள் பார்வையின் ‘கலாச்சார விழுமியங்கள்’ பொதுமக்களை மூளைச்சலவை செய்கிறது. அந்த விழுமியங்கள் பெண்களின் சமத்துவத்தைப் பெரிதும் கண்டுகொள்வதில்லை.

அன்னியராட்சி அவர்கள் அடிமைப் படுத்தியிருந்த நாடுகளில் ஆண் பெண் சமத்துவக் கல்வியை அறிமுகப்படுத்தியதிலிருந்து,பெண்களின் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.ஏற்கனவே மேற்கு நாடுகளில் பெண்கள் தங்களுக்கான வாக்குரிமைப் போராட்டத்தைத் தொடங்கி வெற்றி பெற்றார்கள்.அதன் பிரதிபலிப்பாகக் காலனித்துவ நாடுகளிலும் பெண்களுக்கும் மட்டுமல்லாது, சமயத்தின் அடிப்படையில் ஒடுக்கப் பட்டு வைத்திருந்த மக்களுக்கும் வாக்குரிமைச் சுதந்திரம் வந்தது (1928). ஆனால்,இந்தியா போன்ற நாடுகளில், பாரம்பரியமாக அவர்களை அடக்கி வைத்திருந்த ஆளும் வர்க்கம்,பெண்களை மட்டுமல்ல,ஒடுக்கப் பட்ட மக்களைச் சாதி ரீதியாகப் பிரித்து மனிதமற்ற நிலையில் நடத்திக் கொண்டு வருகிறது.

மேற்கு நாடுகளில்.ஒடுக்கப்பட்ட கறுப்பு மக்களுக்காக உயர் இன வெள்ளையினப் பெண்கள் இலக்கியம் படைத்ததுபோல் இந்தியா ,இலங்கையிலும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிப் பல பெண்கள் எழுதினார்கள்.

அப்படியான பெண்எழுத்தாளர்களை வர்த்தகப் பத்திரிகைகளில் எழுதிப் பெயர்பெற்ற பெரிய எழுத்தாளர்கள் ஏனென்றும் கணக்கெடுக்காத காலத்தில் அவர்களை மதித்து அந்தப் பெண்களின் எழுத்தைப் பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் ஞானி அய்யா அவர்கள்.

‘அவருடைய எண்பதுகளில் தமிழ் நாவல்கள்'(விஜயா பதிப்பகம்.1994) என்ற அறிமுகப் படைப்பில், முப்பத்தி மூன்று எழுத்தாளர்களின அறுப்பத்தி ஏழு தமிழ் படைப்புகள் பற்றிய தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

இந்தப் பதிவின்; முன்னுரையில் அவர்,’வரலாறு,மெய்யியல் என்ற தளங்களோடு எனது பார்வை இயங்குகிறது.கதைகளைக் காட்டிலும்,மனிதர்கள்மீதுதான் எனது கவனம் பதிந்திருக்கிறது.இவை எனது வரையறைகள்.இந்த வரையறைகளிலிருந்து என்னை விடுவித்துக் கொள்வது சாத்தியமில்லை’. என்கிறார் (ஞானியின் முன்னுரை’எண்பதுகளில் தமிழ் நாவல்கள்’.1.12.1994).

‘எண்பதுகளில் தமிழ் நாவல்கள்’ என்ற இந்த,’அறிமுகப் படைப்பில்’க.நா.சுப்ரமணியம்,லா.ச.ராமாமிருதம்.மு.கருணாநிதி,ஜெயகாந்தன்,

சுயாதா போன்றவர்களுடன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,ராஜம் கிருஷ்ணண்,காவேரி, சிவகாமி போன்ற நான்கு பெண’எழுத்தாளர்களையும் சேர்த்து முப்பத்தி மூன்று எழுத்தாளர்களின் படைப்புக்களை ஆய்வு செய்திருக்கிறார்.

அவர் எடுத்துக் கொண்ட நான்கு பெண் எழுத்தாளர்களின் படைப்பைப் பல கோணங்களில் பார்வையிட்டிருக்கிறார். பெண்களின் எழுத்துக்களைப் பெரும்பாலான ஆண்கள் ஏறெடுத்தும் பார்க்காமல் உதாசீனம் செய்யும் கால கட்டத்தில். சமதாயத்தில் பெண்களின் நிலை பற்றிய எழுதிய இந்த நால்வரையும் அவர் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப் படுத்துகிறார். ஆண்களால் கட்டுமானத்தப் பட்ட சமுதாயத்தில்,பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் மேற்குறிப்பிட்ட பெண்களின் படைப்புக்களில் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதை அவர் பார்வையில் பதிவிட்டிருக்கிறார்.

ராஜம் கிருஷ்ணன் கதைகளிலிருந்து:’தஞ்சை கிழக்குப் பகுதியில் உழவர் மத்தியில் தோன்றிய கதையைச்,’சேற்றில் மனிதர்கள்’ நாவலிலும்,தென் தமிழகத்தில் தீபெட்டித் தொழிற்சாலையில்; சிறுவர்,சிறுமியர் படும் துயரங்களை,’கூட்டுக் குஞ்சுகள்’ நாவலிலும்,தூத்துக்குடி வட்டாரத்தில் உப்பளத் தொழிலாளர் வாழ்க்கையை’கரிப்பு மணிகள்’நாவலிலும் சித்தரிக்கிறார்’ கோவை ஞானி அவர்கள்,ராஜம் கிருஷ்ணன் பற்றிச் சொல்லும்போது,’எழுபதுகளிலேயெ பெண் உரிமைக்கான இந்தப் போர்க்குணம் தீவிரப்படுத்தப்பட்டு,மேலும் பல நாவல்களில் இவர் மூலம் உருப் பெற்றன’ என்கிறார் (எண்பதுகளில் தமிழ் நாவல்கள் .பக்31.விஜயா பதிப்பகம்.1994).

ராஜம் கிருஷ்ணண் என்ற பெண் எழுத்தாளரின் படைப்புக்களில், பெண்ணியம், மனித நேயம், சமூக உணர்வு என்பனபற்றி ஞானி மெச்சுகிறார். ராஜம் கிருஷ்ணணின்,’மானுடத்தின் மகரந்தங்கள்’ நாவலில் விதவைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார்.

பிராமணப் பெண் எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணனின் கதைகளில்;,பெண்களுக்களை அடக்கி வைப்பதற்காக எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திர கோட்பாடுகள் உடைத்துத் தள்ளப் படுகின்றன. பெண் தனது சமத்துவத்துவத்திற்குப் பழைய கொள்கைளைத் தாண்டிச் செற்படுவது காட்டப் படுகிறது. இவற்றை ஞானி அவர்கள் வரவேற்கிறார்கள்.

‘துயர்படும் பெண்கள் தாமே இனி என்ன செய்யவேண்டும் என,வழிகாட்டிபோல் இந்நாவல்கள் பல விபரங்களைத் தருகின்றன’என்கிறார் (பக் 32).

பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பெண்களின் தன் முயற்சி முக்கியம் என்ற எனது தாரக மந்திரத்தை இந்தக் கதையினுர்டாகக் கண்டு பதிவிட்டிருக்கிறாரோ என்ற பெருமிதப் பட்டேன். அத்துடன்,’உரிமைக்காகப் போராடும் பெண்கள், அன்பு,தாய்மை.கருணை ஆகியவற்றை இழந்துவிடக் கூடாது என்று மனித நேயத்தை வலியுறுத்துகிறார்.(பக்34).

பெண்ணிய முன்னேற்றப் போராட்டம் என்பது,ஏதோ வானத்தால் வந்துதித்த பெண்களால் முன்னெடுக்கப் படுவதில்லை;.

கடந்த கால சரித்திரத்தில் பெண்களால் நடத்திய போராட்டங்களில் முன்னின்றவர்கள். பன் முகமான பெண்கள். தொழிலாளர் நிலையை சிக்காகோ நகர் தெரிற்சாலையில் பெரிதுபடுத்திப் போராட்டத்தைத் தொடர்ந்தவர் ஒரு தொழிலாளித் தாய்.அமெரிக்காவில் தொடர்ந்த அடிமைமுறையை ஒழிக்கக் குரல் எழுப்பியவர்கள் சாதாரண குடும்பத்துப் பெண்கள் என்பது சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தாற் தெரியும்.வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்தவர்கள் இங்கிலாந்தில் குடும்பத்துப் பெண்கள். தாய்கள். மனைவியர். பாட்டிமார் போன்றவர்கள்.இவர்களுக்கு ஞானி அய்யா குறிப்பிடும்,அன்பு,தாய்மை,கருணை,என்பனவற்றின் முழு அர்த்தமும் தெரிந்தபடியாற்தான் தங்கள் குடும்பத்துக் குழந்தைகள் மடுமல்லாது ஒட்டுமொத்த எதிர்காலத்துகாகவும் போராடக் குதித்தார்கள்.

அமெரிக்க அணுயுதங்கள் 1980ம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் குவிக்கப் பட்டபோது அதை எதிர்த்த ஒரு பிரித்தானியத் தாயின் குரலில் ஆரம்பித்த போராட்டத்தில் என்னைப் போன்ற தாய்கள் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டோம்.(இவைபற்றிய எனது கட்டுரைகளை எனது இணையத் தளத்தில் பார்க்கலாம்).

அடுத்ததாக இவர் குறிப்பிடும் பெண்எழுத்தாளர் லண்டன் நகரிலிருந்துகொண்டு தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமாகும். இது என்னைப் பற்றியும் எனது எழுத்துக்களையம் பற்றிய ஞானியின் கண்ணோட்டமாகும்.அவர் எனது நாவலகளான,இலங்கையிலிருந்து வெளியிடப்பட்டு இந்தியாவில் திரு பத்மநாம ஐயரால் அவர்களால் அறிமுகப்படத்தப்பட்ட’ஒருகோடை விடுமுறையைப் படித்துவிட்டு’ விமர்சனத்தை எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதிகளில் எழுதினார்.என்னை அவர்,’எண்பதுகளில் ஒருசாதனையாளராகத் தமிழ் ;இலக்கியத்துக்கு அறிமுகமாகியிருக்கும் ராஜேஸ்வரி’என்று தொடங்குகிறார்..

அப்போது ஞானி அவர்கள்பற்றி எனக்கு எதுவும் .தெரியாது. அந்த ‘ஒரு கோடை விடுமுறை’நாவலில் வரும் பெண்களில் சில பெண்பாத்திரங்களை ஞானி அய்யா அவர்கள் அவரின் வாழ்க்கையில் கண்டிருக்க முடியாது.அவர்களில் இருவர் ஆங்கிலப் பெண்கள். ஆடத்த இருவரும்,கதாநாயகன் பரமநாதனின் உறவினர்கள்,ஒருத்தி அவனுடைய பழைய காதலி.

977ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடந்த கொடுமையான அரச பயங்கரவாதத்தின் பின் இலங்கைத் தமிழரின் முக்கியமாகப் பெண்களின் வாழ்க்i மாறுகிறது. அந்தப் பெண்களின் வாழக்கையுடன் இறுக்கமாகத் தன்னைப் பிணைத்துக் கொண்ட,லண்டனில் வாழும் ஒரு இலங்கைத் தமிழனையும் அவனைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் இலங்கை அரசியல் மாற்றங்களையும் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.

ஞானி அய்யா அவர்கள் இதுபற்றிப் பேசும்போது பல கருத்துக்களை முன்வைக்கிறார். தன்னைக் கைவிட்டுச் சென்ற பழைய காதலனின் நல்வாழ்வுக்குப் பிரார்த்தனை செய்யும் இலங்கைத் தமிழ்ப் பெண் கார்த்திகாவையும்,தண்கணவன் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று அவனைப் பிரிந்து சொல்லும் அவனின் ஆங்கில மனைவி மரியன் பற்றியும். அவனின் வாழ்க்கையின் போராட்டங்களை மறக்க அவன் தன்னைப் பாவிக்கப் போகிறான் என்றுணர்ந்து அவனை விட்டு விலகும் லிஸா என்ற ஆங்கில எழுத்தாளப் பெண்ணையும் பற்றி அவர் எழுதுகிறார்.

பெண்களின் சிந்தனைகளின் போராட்டங்களை,அவர்களை ஆண்களுடன் இறுக்கப் பிணைத்திருக்கும் குடும்ப,காதல் உறவுகளுக்குள்ளால் அவர் விரிவாகக் காண்கிறார்.தங்கள் சுயமையை,திறமையை அடியோடு இழந்து விட்டுக் ‘கணவனுக்காக’மட்டும் வாழும் பல பெண்கள், வேண்டா வெறுப்புடன் வாழ்க்கை நடத்தும் வெற்று வாழ்க்கையில் தனது காலத்தைக் கடத்தாமல் அவனைப் பிரிந்து,தனது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு சுதந்திரப் பெண்ணாக பரமநாதனின் ஆங்கில மனைவி மரியனைக் காண்கிறார்.

இலங்கையில் தன்னைக் காதலித்தவன் லண்டனில் இன்னொருத்தியைத் திருமணம் செய்த,விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருந்தவள் கார்த்pகா.1977ம் ஆண்டுக் கலவரத்தில்.அரசபடையின் பாலினக் கொடுமைக்காளானவள். பத்து ஆண்டுக்காத்தின்பின் அவள் நிலை கண்டு பரமநாதன் துடித்தபோது, அவனின் நினைவிலிருந்து தன்னை அகற்றி அவன் சந்தோசமாக வாழ,அவளை மனதார விரும்பும் ஒருத்தனைத் திருமணம் செய்கிறாள். இந்தப் பாத்திரம், ‘பாரம்பரிய’நடைமுறைகளிpலிருந்து விடுபடுவதாகக் கதை சொல்வது ஞானிக்குப் பிடித்திருந்தது.

தனது துன்பங்களிலிருந்து,விடுதலைபெற,லிஸா என்ற ‘புதுமைப் பெண்ணிடம்;’உடலுறவுக்கு எதிர்பார்த்ததை அவள் உதறித் தள்ளி விடுகிறாள். முற்போக்குப் பெண் என்றால் அவள் ‘ஆண்கள்மாதிரி’ பாலியல் உறவுகளில் நடந்து கொள்வாள் என்ற அற்ப விளக்கத்திற்கு லிஸா சாட்டையடி கொடுக்கிறாள்.

மேற்சொன்ன மூன்று விதமான பெண்களின் சிந்தனையில் பிரதிபலிப்பாக அவர்கள் அமைத்துக் கொண்ட வாழ்வில்,’பெண்களில் தங்கி வாழும்’ பரமநாதன் போன்ற ஆண்களுக்கு இடமில்லை; என்கிறார் ஞானி அய்யா அவர்கள், பெண்களின் அன்பில்,ஆதரவில்,உறவில் தங்கிவாழும் பரமநாதன் இறுதியில் ‘விபத்தில்;அகப்படடு உயிர் விடும் நிலையில் இருப்பதாக ‘ஒரு கோடை விடுமுறை’ நாவல் சொல்கிறது. ஞானி அவர்கள்.’பரமன் எதையும் புரிந்து கொள்ளவில்லை.இவன் சாகப் பிறந்த தமிழன்’ என்று முடிக்கிறார் (பக் 80)

இதில் என்ன சொல்ல வருகிறார் என்றால்,’ஆண்களில்லாமல் பெண்களுக்கு வாழ்வில்லை என்று தாங்களாகக் கட்டி வைத்திருக்கும் கட்டுமானத்தை ஆண்கள் தொடர்ந்தால் வாழ்க்கை சிக்கலாகி விடும்’ என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின்,இரண்டாவது நாவல் ‘தில்லையாற்றங்கரை’ (பக்80-82) இந்தியாவில் எண்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது.பெண்களுக்கான மிகவும் கட்டுப்பாடான இலங்கையின் கிழக்குப் பகுதியின் ஒரு கிராமத்தில் நடக்கும் வரலாற்று மாற்றங்களைக் கௌரி என்ற இளம் பெண்ணின் பார்வையில் இந்நாவல் சொல்கிறது.

ஆணாதிக்கத்தை எதிர்த்துத் தங்கள் கல்வியை முன்னெடுக்க கௌரியின் சிந்தனையுடன் அந்தப் பெண்கள் தொடர்ந்த போராட்டம்,கிராமியப் பண்பாட்டுடன் இணைத்து மிகவும் சுவையாகச் சொல்லப் படுகிறது. கிராமமாகவிருந்தாலும் அந்தக் கிராமத்தில் ஆழமாக ஊறிப்போயிருக்கும் அசைக்கமுடியாத பழைய நம்பிக்கைகளுக்குப் பலியானவர்களின் கதைகள் இந்நாவலில் சொல்லப்படுகிறது.

இந்த நாவலில், ‘ஒரு வரலாறு’ எப்படி மாறுகிறது, அதற்கான போராட்டங்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைக் காணுகிறார்.

‘நிறைய மனிதர்களையும்,நிகழ்ச்சிகளையும் கௌரியின் பார்வை வழியே சென்று நாம் புரிந்து கொள்கிறோம்.நுட்பமான செழிவான சித்தரிப்புக்கள்,விடுதலைக்கு எது வழி என்ற கௌரியின் இடையறாத் தேட்டம்,குடும்பத்திற்குள் ஆணாதிக்கம்,பொறுப்பற்றவர்களின் சாமியார்த்தனம்,தன்னை முதன்மைப் படுத்திக் கொள்பனின் தலைமைப்பித்து ஆகிய இழைகள் நாவல் ஆக்கத்தில் இணைந்துள்ளன.’

இதில் அவர்,பெண்ணியச் சிந்தனையின் போராட்டத்தை மட்டுமல்ல, சமயக் கோட்பாடுகளுடன் இணைந்த ஆளுமையான ஒரு ஆணாதிக்கக் கட்டமைப்பு பற்றியும் குறிப்பிடுகிறார்.’உயர்சாதிக் குணங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளாத

சமூகம்,விடுதலைக்கான தகுதியைப் பெறுவதில்லை என்ற உணர்வைப் பெறுகிறோம’.என்ற அவரின் சோகக் குரல் கேட்கிறது.

‘ஈழத்தமிழரின் வரலாறு சொல்ல ராஜேஸ்வரி மாதிரி, ஒருசில,நல்ல எழுத்தாளர்கள் உள்ளனர்.தமிழகத்தின் வரலாற்றை இங்கு யார் சொல்வார்’? என்ற பெருமூச்சுடன் விமர்சனத்தை முடிக்கிறார்.

ஞானி அவர்கள் பெண் எழுத்தாளர் காவேரியின் படைப்புகளைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, அவர் சொல்வதுபோல் மூன்றாம் நாடுகளில்,முக்கியமாக ,ஒரு பெண்ணுக்கு வீடு (விடுதலை) இல்லை. காவேரியின்,’ஆத்துக்குப்; போகணும்'(பக்84-85)

‘பெண்ணிய நோக்கில் சற்று வித்தியாசமாக எழுதப்பட்ட நாவலென,காவோரியின்’ ஆத்துக்குப் போகணும்’ ‘என்ற நாவலைப் பற்றிப் பேசுகிறார்.

காயத்ரி என்ற பெண்ணுக்கு நல்ல கணவன் கிடைத்தும்,கணவன் வரும்வரைக்கும் அவளுக்கு இருந்த ‘சுதந்திரம்’ இல்லை.

பேராசிரியர் ரமா என்ற பெண் பெற்றோரால் மிகவும் அடக்குமுறையில் வளர்க்கப் பட்ட துரை என்பரைத் திருமணம் செய்கிறாள். அவளின் எழுத்துலகமும் அவள் தேடும் ‘தனித்துவத்தைத’தரவில்லை. அவளுடன் வேலை செய்யும் ஒரு பேராசிரியருடன் கொள்ளும் உறவு ரமாவுக்குத் தருவது தற்காலிக விடுதலை என்கிறார்.

இப்படியான உறவுகள் பற்றி ஏற்கனவே பல படைப்புகள் வந்து விட்டன. ஆனாலும் இந்தக் கதையை எழுதியவர் ஒரு பெண் என்ற படியால் இந்தக்கதை வித்தியாசமாகப் பார்க்கப் படுகிறதோ என்று யோசிக்க வைக்கிறது.

படித்த பெண்கள் வேலை செய்யுமிடத்தில் அவர்களுக்கேற்படும் தொல்லைகளால் வந்த விரக்தியில் தற்கொலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவலைப் பற்றிப் பேசும்போது,’உடலும்.கூட ஒரு சிறை என்று இந்த நாவல் பேசுகிறது..நம் சமூகச் சூழலில் பெண்ணின் உடலை வைத்து ஆண் அவளைச் சிறைபடுத்துகிறான் என்று இதற்குப் பொருள் காணலாம்.மூன்றாம் உலக நாடுகள் என்ற சூழலில் பெண்ணை வைத்தும் இந்த நாவல் சிலவற்றைச் சொல்கிறது’.

‘பெண்ணுக்கு மட்டுமா இங்கு விடுதலையில்லை?. ஆண்களுக்கும் தான் இங்கு விடுதலையில்லை.இந்த நாவலில் ஆண்களைப் பற்றிய எரிச்சல் எதுவும் கொடடுப்படவி;லை. இந்த நாவலில்லைப் படித்து முடிக்கும்போது நாம்,எல்லோருமே, ஒரு சிறையில் அகப்பட்டிருப்பதைப் போன்ற உணர்வை இந்த நாவல் நமக்குள் ஏற்படுத்துகிறது’பக்(85) என்கிறார்.

இந்த உணர்வு, ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார, சாதி, சமூக,இன மொழி,சமயக் கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கிப் போய் வாழும்போது ‘மனிதனின் ஒட்டு மொத்த சுயமையை’ இழந்து இந்த உலகில் வாழ்கிறோம். அப்படியான பல்லாயிரம் ஆத்மாக்களின் ஏக்கம் ஞானியின் ‘உணர்வில்’ பிரதிபலிக்கிறது என்பது எனது புரிதலாகும்.

அடுத்ததாக ஞானி அய்யா எடுத்துக் கொண்ட நாவல் எழுத்தாளர் சிவகாமியின்,’பழையன கழிதலும்’ என்ற நாவலாகும்.

தமிழில எழுதப்பட்ட,’தலித்’ நாவல் என்ற சிறப்பிற்குரியது.சிவகாமியின்.’பழையன கழிதலும்’ என்கிறார்.

இந்த நாவலில் வரும் கதாநாயகன், காத்தமுத்து ஒரு நல்ல தலைவனாகவும் வில்லனாகவும் வருகிறான். நெடுங்காலமாக நில உடமையாளர்களின் திமிரான போக்குகளை எதிர்ப்பவன்.

இவனின் மகள் கௌரியும் தகப்பனைப்போல் தன் சமூக மக்களில் அக்கறை கொண்டவள்.கௌரியின் குணம் கொண்ட இளைஞர்களையும் சேர்த்து ‘பழையன கழித்து புதிய’ சமுதாயத்தை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை தொனிக்கிறத.

ஞானி அவர்கள் எடுத்துக் கொண்ட மேற்கூறப்பட்ட நான்கு பெண் எழுத்தாளர்களும், வெவ்வேறு சமுதாயக் கட்டுமானங்களுக்குள்ளான வாழ்க்கை முறைகளைத் தங்கள் பெண்ணியச் சிந்தனைகள் படிந்த இலக்கியமாக்கியிருக்கிறார்கள்.

இந்த நான்கு எழுத்தாளர்களும் ஆண்களைத் திட்டித்தீர்த்துத் தங்களின் வாழ்க்கை நிலைக்கு அவர்களை மட்டுமே குறை காணவில்லை. சமுதாய மாற்றம் ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடத்தும் போராட்டங்களால் மட்டும்தான் உருவாகும் என்று எழுதியிருக்கிறார்கள்..

யாதும் ஊரெ யாவரும் கேழீர்’உன்ற பாரம்பரியத்தல் சமத்துவமாக வாழ்ந்த சமுதாயமுறை அழிக்கப் பட்டு மக்களைச் சாதி என்ற அசிங்கமான கோட்பாட்டு ரீதியாகச் சின்னா பின்னமாகப் பிரித்து வைத்திருக்கிறது மனு தர்ம சாஸ்திரம்.எங்கள் சமுதாயத்தில் உள்ள வர்ணாஸ்மரக் கட்டுமானங்களால் நாங்கள் அத்தனை மனிதர்களும் ஏதோ ஒரு விதத்தில் அடிமையாக்கப் பட்டிருக்கிறோம்.ஒட்டு மொத்த இந்திய உபகண்டங்களிலுள்ள மக்களும் அறிவியலற்ற பிண்டங்களாகப் பல்விதமான சாதி முறையில் பிரிக்கப் பட்டிருக்கிறார்கள். .அந்தக் கட்டுமானங்களைத் தொடர கடவுளர்களும் அரசியல் மயமாக்கப்பட்டிருக்கிறார்கள்.

தாங்கள் வாழும்; குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்குச் சமத்துவம் தேடும்,பெண்ணிய சிந்தனை என்பது மனித உரிமை சம்பந்தமானது.அந்த சிந்தாந்தத்தைத்தான் மேற்கண்ட நான்கு பெண்களும் படைத்திருக்கிறார்கள். மனித நேயத்தில் மிகவும் ஆழ்ந்த பற்று கொண்ட ஞானி அவர்களும் மேற்கண்ட பெண்களைத் தனது ஆய்வில் தேர்ந்தெடுத்ததற்கு அதுவே காரணமாகவிருக்கமுடியும்.

அதைத் தொடர்ந்து, ஞானி அவர்களும் நானும் சேர்ந்து, பத்து வருடங்களுக்கு மேலாக நடத்திய பெண்கள் சிறுகதைப்போட்டிக்கு வந்த கதைகளின் நூலாக்கத்தின் பதிவுகளாக அவர் சொல்லிய கருத்துக்களில் சிலவற்றையும் இங்கு ஆவணப்படுத்த விரும்புகிறேன்.

பெண்களுக்கான சிறுகதைப்போட்டியை நடத்தவேண்டும் என்ற எனது ஆசையை திரு ஞானி அய்யா அவர்களுடன் பேசினேன். இந்தியாவிலோ இலங்கையிலோ எனக்குத் தெரிந்தவரை 1998ம் ஆண்டு வரை பெண்கள் சிறுகதைப்போட்டி என்று ஒன்றிருக்கவில்லை. எனது யோசனையை ஏற்றுக் கொண்ட ஞானி அவர்கள், போட்டிக்கு வரும் சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் வேலையை மூவர் கொண்ட குழுவுடன் தொடங்கினார். ஒவ்வொரு வருடமும் அறுபது தொடக்கம் அறுபத்தைந்து என்ற எண்ணிக்கையில் வந்த படைப்புக்களைப் படித்து நல்ல கதைகளைத் தெரிவு செய்து,அவற்றில் சிறந்த மூன்று கதைகளுக்குப் பரிசு கொடுத்தோம். அத்துடன் அவ்வருடம் வந்த பத்துக்கு மேற்பட்ட கதைகளைத் தொகுதியாக்கி அவை ஒவவொரு வருடமும் ஒரு நூலாக வெளியிடப் பட்டது.

பத்தாண்டுக்கு மேலாக நடந்த போட்டிக்கு வந்த கதைகளில் சிறந்த நூறுகதைகளைத் தெரிவு செய்து ‘காவியா’ நிறுவனம் 2015ல் ஒரு பிரமாண்டமான புத்தகத்தை வெளியிட்டது. இந்த நிகழ்வு,பெண்கள் இலக்கிய வரலாற்றில் பதிக்கப் படவேண்டிய முக்கிய வரலாற்றுச் செய்தியாகும்.

அவரைப் பற்றிய பலவித ஆய்வுகளும் கருத்துக்களும் நாளாந்தம் வந்தபடி இருக்கிறது.அவரின் பன்முகத் தன்மையான ஈடுபாடுகளில் பெண்ணியம் பற்றி அவர் எடுத்த செயற்பாடுகளும் கருத்துக்களும் குறிப்பிடத்தக்க விதத்தில் சொல்லப்படவில்லை என்பது மிகவும் கவனிக்கடவேண்டிய விடயமாகும்.

மறைந்து விட்ட ஆளுமையான ஞானி அவர்களின் பெண்ணியம் பற்றி இதுவரை பதிவிட்டவர்களோ, ஞானியின் பதிவுகள் பற்றிப் பேசியவர்களோ,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்துடன் வேண்டுகோளில் அவரின் பொறுப்பில் பதினொரு வருடங்கள் நடந்த பெண்கள் சிறுகதைப் போட்டியைப் பற்றிய தகவல்களைச் சொல்லாதது வேதனையைத் தந்தது.

இந்தப் போட்டி பற்றி அவர்,பெண்கள் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாவது தொகுப்பான,’உடலே சவப் பெட்டியாக’ என்ற நூலில் பதிப்புரையாக வெளியிட்டதை நான் கட்டாயம் ஞாபகப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

‘இலண்டனில் வாழும் தமிழ் எழுத்தாளர் திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்; அவர்களின் திட்டப்படி 1998ம் இறுதியில் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை நடத்தினோம்.போட்டிக்கு வந்த பன்னிரண்டைத் தெரிவு செய்து,’காயங்கள்’ தொகுப்பை வெளியிட்டோம். 99 இறுதியிலும் பெண்எழுத்தாளர்களுக்கென நடத்திய போட்டியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கு வந்த 55 சிறுகதைகளிலிருந்து 15 சிறுகதைகளைத் தெரிவு செய்து இப்போது வெளியிடுகிறோம்'(‘நிகழ்’ பதிவு.1999).

அந்தத் தொகுதியில்,’கதைகளைத் தொடர்ந்து படிக்கும்போது,எத்தனை காலமாக இத்தனை உணர்வுக் கொந்தளிப்போடு நம் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு நமக்குள் மேலிடுகிறது.’இது பொறுப்பதற்கில்லை.எரிதழல்.கொண்டு வா’ என்று நம்மை அறியாமல் நம்மனம் கொதிக்கிறது. இவர்களின் உணர்வு வெடிப்புக்குக் குரல் கொடுக்க வாய்ப்பு நமக்கு நேர்ந்திருக்கிறது என்பதற்காக ஆறுதல் அடைகிறோம்.வணிக இதழ்களில் இவர்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்படுவதையும் நாம் புரிந்து கொள்கிறோம்’என்கிறார்.

அதாவது,பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கக் காரணமாக இருந்த பெண்கள் சிறுகதைப் போட்டியை அவர் எவ்வளவு தூரம் விரும்பியிருந்தார் என்பது அவருக்குப் பெண்களின் இலக்கிய மேம்பாடுகளிலிருந்த ஆர்வத்தை அவரின் பதிவு வெளிப் படுத்துகிறது.

தனது தள்ளாத வயதிலும் பதினொரு வருடங்கள்,இருநூற்றுக்கு மேலான பெண்களை எழுதப்பண்ணிய செயற்பாட்டில் என்னுடன் சேர்ந்து மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். மனித நேயம் என்பது சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதின் முக்கிய கோட்பாடாகும்.

1.1998-; ‘காயங்கள்’- ‘நிகழ்’ வெளியீடு;

2.1990- ‘உடலே சவப்பெட்டியாக-‘நிகழ்’ வெளியீடு

3..2000- ‘காற்றாய்ப் புயலாய்’- நிகழ்’ வெளியீடு;.

4.2001- ‘பிளாஸ்டிக் மனிதர்கள்’- ‘நிகழ்’ வெளியீடு;

5.2002- ‘உழவு மாடுகள்’-தமிழ் நேயம் வெளியீடு

6.2003-‘ புதிய ஏவாள்’ -தமிழ்நேயம் வெளியீடு

7.2004-”கனாக்காலம்’-தமிழ்நேயம் வெளியீடு

8.2005- ‘புதிய காளி’-தமிழ்நேயம் வெளியீடு

9.2006- ‘கனலும் எரிமலை.-தமிழ்நேயம் வெளியீடு

10.2007. ‘சுடும் நிலவு’-தமிழ்நேயம் வெளியீடு

11.2008.’இலையுதிர் காலம்’-தமிழ்நேயம் வெளியீடு

என்று பதினொரு வருடங்கள் பெண்கள் சிறு கதைப் போட்டி தொடர்ந்தது.

அந்த ஒவ்வொரு தொகுதிக்கும் ஞானி அவர்கள் எழுதிய பதிவுகளிற் சில துளிகள் இங்கு இந்தக் கட்டுரையில் தெளிக்கப் படுகின்றன.

அவரின் பெண்ணிய சிந்தனையின் கருத்து வடிவம் அவர் வார்த்தைகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது,இரண்டாவது தொகுப்பில் வந்த அவரின் கருத்துக்களை ஏற்கனவே எழுதியிக்கிறேன்.

மூன்றாவது தொகுதியான ‘காற்றாய் புயலாய்'(2000) தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரையில்:’வரலாறு என்றும்.சமூகம் என்றும் ஒரு பெரிய சூழலில் ஆண்களோடு பெண்களும் தான் அகப்பட்டுத் திணறுகிறார்கள.; புலம்பலை நிறுத்திக் கொண்டு இம்முறையில் பெண்கள் தம்மை ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும்.இப்படிக்கருதுகிறார்கள் நடுவர்கள். என்கிறார்.

அதாவது, பெண்கள் பதிவுகளை ஆய்வு செய்யும் நடுவர்களின் பார்வையூடாகத் தனது கருத்தைச் சொல்கிறார்.

சாதி மத.இன, மொழி பாலியல் வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஒவ்வொருவரின் திறமைக்கும் (பெரும்பாலும்) முக்கியத்துவம் கொடுப்பதால் மேற்கு நாடுகளின் பொருhதார வளர்ச்சி உயர்ந்து கொண்டு போவது பலரும் அறிவார்கள்.

ஆனால் எங்கள் தாயகங்களில் (இலங்கை,இந்தியா) போன்ற நாடுகளில், மனிதர்களுக்கிடையான பிரிவுகள் அளப்பரியன.’எல்லோரும் ஓரினம், எலNலொரும் ஓர் குலம் என்ற சமத்துவ வாழ்க்கை முறையே ஒரு நாடும் மக்களும் பன்முகத் தன்மையல் வளர்ச்சி பெற உதவும் என்பது பல அறிஞரின் கருத்துக்களும்.மனித நேயம் பெண் விடுதலை என்பவற்றில் ஆழமான பற்றுள்ள ஞானி அவர்கள், இன்றைய சமூதாயத்தின் ஏற்றத் தாழ்வுக்குக் காரணம், எங்களை அடிமையாக்கிவைத்திருக்கும் ‘சமயம் சார்ந்த’ கட்டுமானங்கள் என்பதைப் பல கோணங்களில் பதிவிட்டிருக்கிறார்.

சமத்துவ முறையில் வாழ்ந்த தமிழச்சமூகத்தின் பாரம்பரியம் அழிக்கப் பட்டதால் இந்த அழிவுகள் தொடர்கின்றன என்பதை அவர் ஆமோதிக்கிறார்.

அவரின் உந்துதலால்,என்னால் எழுதப்பட்ட,’தமிழ்க்கடவுள் முருகன்’-வரலாறும் தத்துவமும்’ என்ற ஆய்வுப் பதிப்பையிட்டு அவர் என்னிடம் கேட்ட கேள்விகளில்,தமிழர் தொன்மையில் அவர் வைத்திருக்கும் மதிப்பு பிரதிபலிக்கிறது.;

‘தமிழரின்;; கடவுள் முருகன்’ பற்றிய ஆய்வு நூல் எழுதியிருக்கிறீர்கள்.இந்தப் புத்தகத்தில் முருகன் தமிழரின் கடவுள் என்ற ஆய்வுக்கு நீங்கள்; தேடிய தடயங்கள் என்ன?’ என்னைக் கேட்டார்.இந்தக் கேள்வி ஒரு தடவை, ஒரு இரு வரிகளில் மட்டும் வரவில்லை. பல விதத்தில் பல தடவைகளில் பலவிடயங்களை உள்ளடக்கிக் கேட்டார்.

‘முருகன் தமிழர் பண்பாட்டின் சின்னம். குன்றுகளில் வாழ்ந்த தொன்மைத் தமிழரின் வழிபாட்டு வழிமுறையின் தொடர்ச்சி.முருகு என்றால் அழகு.இயற்கையின் மாதங்கள் பன்னிரண்டு,முருகனுக்கும் பன்னிரண்டு கைகள்.பருவங்கள்ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு,ஒரு நாளின் வெளிச்சம் என்பது பகல்.இருள் என்பது இரவு. முருகனுக்கு இரு மனைவியர். தொன்மைத் தமிழன் கண்ட இயற்கையின் பிரதிபலிப்பு முருக தோற்றம’;.

‘பல நாட்டு மக்களுக்கும் முருகன் போன்ற வனக் கடவுள்கள் இருந்திருக்கிறார்கள்.கிரேக்கத்தில் வனக் கடவுளாக டையனிஸிஸ் இருக்கிறார்.முருகன் சாதிப் பிரிவற்ற ஆதிகாலத் தமிழர் பாரம்பரியத்தின் நீட்சியின் சாட்சி. சமத்துவத்தில் ஈர்க்கப் பட்டவன்,எங்கேயோ காட்டில் வாழும் குறப் பெண்ணைக் காதலி;த்துக் கல்யாணம் செய்தவன்.’

‘முருகனின் தொன்மைக்குக் கால வரையறை என்ன என்று கண்டு பிடிக்க முடியாது.இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இருந்த காலத்தில் இலங்கையில் முருகவழிபாடு இருந்ததற்குப் பல சான்றகள் உள்ளன. இலங்கையில் முருகனுக்குச சமஸ்கிருதத்தில் பூஜை செய்வது கிடையாது.எனவே முருகன் தமிழர் வணக்க முறையில் சமஸ்கிருதம் உள்ளிட முதல் உறைந்திருந்தவன்.’

‘இன்றைய கடவுளரில் வித்தியாசமான பாரம்பரிய வணக்கமுறைகளான காவடியாட்டம் போன்றவை ஆதித் தமிழரின் பாரம்பரியத்தின் நீட்சி. வேறு எந்தக் கடவுளருக்கும் காவடி எடுப்பதில்லை. முருகன் எல்லோரையம் சாதி மத பேதமற்று தமிழர் அத்தனைபேரையும் இணைத்த சக்தி.’

‘உலகம் பரந்த ஆதிக்குடிகள் பெரும்பாலும் தங்களையீன்ற தாயை,தங்களைப் பாதுகாக்கும் தாயை மதித்தவர்கள். பெண்களின் பெயரைத் தங்கள் நாகரிக வளர்சிசியின் அடையாளமான நகரங்களான பாரிஸ் என்றும் அதன்ஸ் என்றும் பெண்கள் பெயர் சூட்டி அழைத்தவர்கள்.’

‘அகில இந்தியாவிலும் பரவியிருந்த திராவிடத் தமிழர் நதிகளைக் பொன்னி என்றும் காவேரி என்றும் அழைத்தவர்கள்.ஆதித் தமிழன் பெண்களுக்குச் சமத்துவம் கொடுத்தவன்’.

‘ இந்தியாவில் ஆதிகாலத் தமிழர்கள் பெண்களைத் தெய்வமாக வணங்கியவர்கள். முருகனின் தாய் கொற்றவை.முருகன் தமிழரின் போர்க்கடவுள்.’இப்படிப் பண்டைத் தமிழரின் பலவகையான சமத்துவக் கொள்கைகளையம் அவற்றைப் பிரதிபலிக்கும் முருகவழிபாட்டையும் விளக்கினேன்.

முருக வழிபாட்டில் இயற்கையை வணங்குதல்,பெண்மையைப் போற்றுதல்,சமத்துவத்தை முன்னெடுத்தல் என்பன பண்டைத் தமிழரின் வாழ்க்கையில் இயற்கையும் பெண்ணும் எப்படிப் போற்றப் பட்டார்கள் என்பதை விளக்குகிறது.

அந்தத் தொன்மை ஆரியரின் வருகையால் குழப்பப் பட்டிருக்கிறது.அதன் விளக்கத்தை எனது முருக புத்தகத்தில் படிக்கலாம்.அவரின் உந்துதலால் நான் எழுதிய ‘தமிழ்க்கடவுள் முருகன்-வரலாறும் தத்துவமும்’ அவரின் ‘நிகழ்’ வெளியீடாக 2000ம் ஆண்டு வெளியிடப் பட்டது.

அடுத்ததாக ஞானி அவர்கள், பெண்களின் வாழ்க்கை முன்னேற்றம் மட்டுமல்ல எங்கள் அத்தனை பேருடைய வாழ்க்கை பரந்த முறையில் வளர்ச்சியடையமலிருப்பதற்கு, நாங்கள் பழைய கொள்கைகளையும் கருத்துக்களையும் இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம் என்று பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு என்னுடைய,’ நாளைய மனிதர்கள்'(புதுப் புனல் வெளியீடு.2003) என்ற நூலுக்கு அவர் எழுதிய அணிந்துரையில் பிரதிபலிக்கிறது.

‘கடந்த சில நூற்றாண்டுகளாக,மேற்கத்திய நாகரிகத்தோடு நமக்கு ஏற்பட்ட மோதல்மற்றும் உறவுகள் குறித்து நாம்,தொடர்ந்து கவலைப்படவும்.சிந்திக்கவும் வேண்டியவர்களாக இருக்கிறோம்.இந்திய அளவில்,மட்டுமல்லாமல்,உலக அளவிலும் நாகரீகங்களுக்கிடையான உறவின் சாதகம்,மற்றும் பாதகமான கூறுகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாது.நமது மரபு சார்ந்த கலாச்சாரம்தான் மேன்மையானது, என்றும் அதை இறுகப் பற்றிக் கொள்வதன் மூலம்தான் நமக்கு வாழ்வு என்று இருப்பதற்கில்லை.மேற்கு நாடுகளிலிருந்து வரும் கலாச்சாரம் எல்லா நிலைகளிலும் நம்மை அடிமைப்படுத்தும் என்றும்,கீழ்மைப்படுத்தும் என்றும்,நமக்குள் அரண் அமைத்துக்கொள்ளவும் முடியாது.வரலாற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை சரியான பார்வையோடு புரிந்து கொள்வதும் முன்னைய மரபுகளிலிருந்து இன்றைக்கும் நம்மை வளர்க்கக்கூடிய கூறுகளை மேம்படுத்திக் கொள்வதும் நமக்குத் தேவையான கடமை.மேற்கை இகழ்ந்துரைத்து நம்மை பெருமைப்படுத்திக் கொள்ள முடியாது.

திருமதி ராஜேஸவரியின் அவர்களின் எந்தப் படைப்பையும், நாம்வாசிக்க நேரும்பொழுது, இப்படி ஒரு சிந்தனைக்குள் நாம் செல்கிறோம்.’ என்கிறார்.

50 வருடகாலம் என்னுடைய வாழ்க்கை ஆங்கிலேயர்களுடன் இணைந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் எங்களை (இந்தியர்களை- முக்கியமாகப் பெண்களை) மதிக்கிறார்கள் எடைபோடுகிறார்கள் என்பதை விளக்கப் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறேன்.

இந்திய கலாச்சாரத்தை,பண்பாட்டை,இந்தியப் பெண்மையின் தாய்மை அன்பைப் புரிந்து கொண்ட ஒரு’இனவாத’ ஆங்கிலேயனைப் பற்றிய எனது சிறு கதைக்கு ஒரு சில வரிகளில் விமர்சனம் எழுதும்போது,’மைக்கேலுக்கு வேலையில்லை. இளம் வயதிலேயே இவன் தனது தாயை இழந்தான்,தந்தை இவனைக் கற்பழித்தான்.இனவாத வெள்ளைக்கார இளைஞர்களோடு இவன் சேர்ந்து கொண்டான்.மருத்துவ மனையில் தாயாயிருந்து அவனை மீண்டும் மனிதனாக்கினாள் மைதிலி.'(இந்தியத்) தாய்மையின்’ கருணையை மைக்கேல்’ பாராட்டுகிறான்’ என்று பதிவிடுகிறார்.

மனித நேயம் அற்புதமானது.அதன் சக்தி மகத்தானது என்பதை இக்கதை பிரதிபலிக்கிறதென்றால்.இக்கதை இந்தியவின் அற்புத சக்திகளான பெண்களைப் போற்றுகிறது.

அந்தப் பெண்களில் பலர் தங்களின் அடையாளமற்ற வெற்று மனிதர்களாக வாழ்ந்து மடிந்துவிடுகிறார்கள். பெண்ணின் சக்தியின் சுவாலை வெளிவந்தால் இந்த உலகம் தாங்காது. அதனால் ஆண்கள் அவளைப் பல வழிகளிலும் அரை குறைஅடிமையாக்கி வைத்திருக்கிறான். அந்த அடிமை நிலைமாற,பெண்களின் அறிவும், உலகைப் புரிந்துகொள்ளும் சாமர்த்தியமும் தெரிந்திருக்க வேண்டும். இந்த நவநாகரீக காலத்தில் இன்னும் தங்களை ஒரு அடிமாடாக நடத்துவதை எதிர்த்துப் போராட வேண்டம். இப்படியான எனது சிந்தனைக்கு உதவி செய்ய என்னடன் சேர்ந்து பதினொரு வருடங்கள் சிறுகதைப் போட்டியை முன்னின்று நடத்தினார்.அதந்ச் செயற்பாடு ஞானி அவர்கள் பெண்களை எவ்வளவு தூரம் மதிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்தியப் பெண்களின் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் அவர்போன்று சில நல்ல மனிதர்கள் செய்த பணி அளப்பரியது. எங்களை விட்டுப் பிரிந்த அவருக்கு நாங்கள் செய்யும் பணி அவர் காட்டிய வழியில் சென்று பெண்கள் இலக்கியம் வளரப் பாடுபடுவோம.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s