‘லண்டனில் தமிழ் மொழிக் கல்வி’

‘லண்டனில் தமிழ் மொழிக் கல்வி’
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- ஓய்வு பெற்ற குழந்தைநல அதிகாரி.

ஒரு மனிதனின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஆரம்ப சக்தியாயிருப்பது அவனுடைய மொழியாகும். இந்த மாபெரும் அடிப்படையில் அவனுடைய அடையாளம்,அறிவு, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம்,இசை நாடகம் போன்ற விழுமியங்கள் கட்டமைக்கப் படுகின்றன,வளர்கின்றன.காலக் கிரைமத்தில் அவனுடைய மொழி சார்ந்த ஆக்கங்கள் அவனுடைய பாரம்பரியத்தின் சரித்திமாகின்றன.

அது மட்டுமல்லாமல்,ஒரு மனிதனின்,உடல்,உள.அறிவியல்,சமூக,ஆத்மீக வளர்ச்சியுடன் மொழி வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு குழந்தையின் மொழிவளர்ச்சியின் ஆரம்பம் அந்தக்குழந்தை தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தனக்குப் பரிச்சயமான ஒலிகளை, குழந்தை தனது தாயின் வயிற்றிலிருக்கும்போதே அடையாளம் காண்கிறது. குழந்தை தனது தாயின் வயிற்றில் உண்டாக்கும் முதல் அசைவைக் கொண்டாட வளைக் காப்பு வைபம் மூலம் குழந்தைக்குத் தாயின் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் நல்லொலியை ஆரம்பித்தவர்கள் எங்கள் மூதாதையர்.

குழந்தை பிறந்ததும் அதன் மொழி வளர்ச்சி மொழியற்ற வித்தியாசமான ஒலிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.பின்னர் குழந்தை சார்ந்த நெருங்கிய சூழ்நிலையில் உள்ள குடும்பத்தினரிடமிருந்து பல்வகையான ஒலிகளின் படிமம் சார்ந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.
அதன் நீட்சி குழந்தை மிகச் சிறுவயதில் மற்றக் குழந்தைகளுடன் விளையாடிப் பழகும்போதும், அன்னியர்களுடன் பழகும்போதும் தொடர்கிறது.அதன் பின்னர் குழந்தையின் கல்வி பாடசாலையில் ஆரம்பிக்கும்போது,அந்தக் கல்வி குடும்பம், சமுகம், தாண்டி, ஒரு நாட்டின் கல்வியற் கோட்பாடுகளின் கட்டுமானங்களுடன் நீட்சிபெறுகிறது.

இன்றைய உலக நிலவரம் மனிதர்கள்; தாங்கள் வாழ்ந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டைத் தங்கள் வாழ்விடமாகத் தெரிவு செய்வது பலகாரணிகளால் தொடரும் யதார்த்தமாகும்.அதேபோல் ஒரு காலத்தில் ஆளுமையாகவிருந்த மொழிகளும் கலாச்சாரங்களும் இன்னுமொரு ஆளுமையால் பலமிழப்பதும் தொடரும் சரித்திரம் சார்ந்த சம்பவங்களாகும்.

ஒருகாலத்தில் ஐரோப்பா நாடுகளின் அரச,அறிவு.சமய, தொடர்பு மொழியாகவிருந்த லத்தின் மொழியின் இடத்தை காலக்கிரமத்தில் இத்தாலி மொழியும், அதன் பின்னர் பிரனெ;ஸ் மொழியும் ஆட்கொண்டிருந்தன. பொருளாதார, காலனித்துவ ஆளுமையால் ஆங்கில மொழி பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பா மட்டுமல்லாது உலகின் பெரும்பாலான நாடுகளின் தொடர்பு மொழியானது.

உலகில் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் வீட்டில் பேசும் தங்கள் நாட்டின் மொழியிற் கல்வி கற்கிறார்கள். ஒரு நாட்டின் அரசிலமைப்புக்கேற்பவும், நிர்வாகவசதி என்பனபோன்ற காரணிகளால் சில நாடுகளில் இருமொழிக் கல்வி கொடுக்கப் படுகிறது. உதாரணமாக பல மொழிகள் சேர்ந்த பிரதேச மக்களை ஒன்றிணைக்கும் தொடர்பு மொழியாக இந்தியாவில் ஆங்கிலம் செயற்படுகிறது.கனடாவில் ஆங்கிலமும் பிரன்சும் இருக்கின்றன.சில நாடுகளில் அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மனதில் கொண்டு அமெரிக்கா போன்ற நாட்டில் சிறுபான்மை மக்களின் மொழியை(ஸ்பானிஸ்) மற்றவர்களும் படித்தால் நல்லது என்று போதிக்கப்படுகிறது.ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம்,ஜேர்மன் பிரன்ஸ்,ஸ்;பானிஸ் மொழிகளைப் படிக்கும் வாய்ப்புக்கள் தாராளமாகவிருக்கின்றன.

பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பூவுலகம் ‘உலகமயமாதல்’என்ற கட்டுமானத்திறகுள் வந்திருக்கிறது. தங்கள் தாய் மொழியுடன் உலக தொடர்பு மொழியாக ஆங்கிலமும் இருப்பதுபோல் வேறு சில மொழிகளும் இப்போது முன்னணியிலிருக்கின்றன.
இக்காரணிகளால் பெரும்பான்மையான உலகமக்களின் தாய் மொழி அவர்கள் ‘வீட்டு’ மொழியாக மட்டும் சுருங்கிவிடும் அபாயம் ஏற்படலாம் என்பதால், பெரும்பாலான புலம் பெயர்ந்த சிறுபான்மை மக்கள் தங்கள் மொழியைப் பல வழிகளிலும் முன்னேற்றத் தேவையான செயற்பாடுகளைச் செய்கிறார்கள்.

இந்தக் கோட்பாட்டை வலியுறுத்த உலக ரீதியான பல திட்டங்களைப் பெரிய நிறுவனங்கள் மேற் கொள்கின்றன.
ஒவ்வொரு மனிதரும் தங்கள் தாய்மொழியைப் பாவிப்பது மனித உரிமை விடயமாகப் பல உலக அமைப்புக்கள் பிரகடனப்படுத்தியிருக்கின்றன.

இலங்கையில் தொடர்ந்த போர்காரணமாகவும்,தங்களின் சொந்த வாழ்க்கை விருத்தியின் பொருளாதார தேவை நிமித்தமாகவும்,அத்துடன் மேற்படிப்புகளுக்காகவும் பல்லாயிரம் தமிழர்கள் இன்று, பல நாடுகளில் வாழ்கிறார்கள்.
அவர்களை ஒன்றிணைத்துக் கொண்டிருப்பது அவர்களின் தாய்மொழியான தமிழாகும்.
இன்றைய காலகட்டத்தில்,1960ம் ஆண்டுகளிலிருந்துலண்டனுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைஅவர்களின் வயது காரணமாக முடிவுறும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.அக்கால கட்டத்தில் வந்த பெரும்பாலானவர் ஆங்கிலக் கல்வியின் பலனாக வெளிநாடுகள் வந்திருந்தாலும்,அவர்கள் தமிழில் ஆர்வமுள்ள மொழிப்பற்றாளார்களாகவிருந்தார்கள். லண்டனில் தமிழ்ப் பத்திரிகைகள், சைவக்கோயில்கள்,தமிழ்ச்சங்கங்கள்,மொழிசார்ந்த மகாநாடுகள், கலந்துரையாடல்கள் தொடரக் காரணிகளாகவிருந்தார்கள்.

அதைத் தொடர்ந்து, அவர்களின் பாரம்பரியத்தில் வந்த இரண்டாம் தலைமுறையினர் தங்கள் தாய்தகப்பன்மாதிரித் தமிழ்மொழிப் பற்றாளாகளாக இருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது. ஆனால் தமிழ்க்கல்வியின் வளர்ச்சியில் இன்றைய புலம் பெயர் தமிழச் சமுகம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன்னும் மிகவும் திறமானவிதத்தில் செயற்படவேண்டும் என்ற குரல்கள் தமிழ்ச் சமூகத்திலிருந்து அவ்வப்போது கேட்டுக்கொண்டிருக்கிறது.

1960-1970 வரை பெரும்பாலான தமிழர் இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் அவர்களின் தொழில் நிமித்தம் காரணமாகச சிதறி வாழ்ந்து வந்தார்கள்.லண்டனில் வாழ்ந்த அவர்களின் தொகை ஒருசில ஆயிரக்கணக்கிலிருந்தன.பாடசாலைகளை அமைக்குமளவுக்கு சிறுவயதுப் பாலகர்களின் எண்ணிக்கையும் பெரிதாகவிருக்கவில்லை.

1972ம் ஆண்டு இலங்கையிற் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் காரணமாகப் பல்கலைக் கழகம் செல்லமுடியாத பல தமிழ் மாணவர்கள் லண்டன் வந்தார்கள். அவர்கள் வருகையால் தமிழ்க் கையெழுத்துப் பத்திரிகைள் சில வெளிவந்தன. தமிழ்மொழி, கலை கலாச்சாரம் பற்றிய ஒரு புதிய விழிப்பு எற்பட்டது. இந்தியத் தமிழ்ப் பத்திரிகைகள் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிரண்டு கடைகளில் வாங்கக் கூடியதாகவிருந்தது.லண்டனில் தமிழ் வாசிப்பின் ஒரு மறுமலர்ச்சிக்காலம் புதிய இளம் தமிழ்மாணவர்களால் ஆரம்பித்தது.

1977ம் ஆண்டுக் கலவரத்துடன் இலங்கையிலிருந்து ஆங்கில-தமிழ் மொழிசார்ந்து பல தரப்பட்ட அறிவுள்ள படித்தவர்கள்,எழுத்தாளர்களின்; வருகை லண்டனில் தமிழ் மொழியின் செழிப்பையுயர்த்தியது.தமிழ்ப் பாடசாலைக்கு அனுப்பத்தக்க ஓரளவு எண்ணிக்கையில் பாலகர்களின் தொகையும் கூடியது.தமிழ்ப் பாடசாலை மேற்கு லண்டனிற் தொடங்கப் பட்டது. 1970ம் ஆண்டு லண்டன் வந்த எங்கள் தலைமுறையினரின் குழந்தைகள் அதில் மாணவர்களானார்கள்.தமிழ் தெரிந்தவர்கள்,தமிழில் பலதரப்பட்ட நூல்களைப் படித்த அனுபவாதிகள் தமிழ் கற்றுக் கொடுத்தார்கள். காலக் கிரமத்தில் மொழி மட்டுமே கற்றுக்கொடுக்குமிடமாக ஆரம்பித்த பாடசாலைகளில் குழந்தைகளின் தமிழ்த்திறமையை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டன.

1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கெதிராக நடந்த பிரமாண்டமான இனக்கலவரத்தால் பல்லாயிரக் கணக்கானோர் லண்டன் வரத் தொடங்கினார்கள். கோயிற் திருவிழாவுக்குக் கடைபோடுவதுபோல்,அரச உதவியுடன் பல தமிழர் நிறுவனங்களும்,பாடசாலைகளும் ஆரம்பிக்கப் பட்டன. பணம் படைத்தவர்களால் கோயில் கட்டிப் பணம் சேர்க்கும் முயற்சியாக,ஏட்டிக்குப் போட்டியாகப் பல இடங்களில் பல கோயில்கள் எழுப்பப் பட்டன.

1970-1980ம் ஆண்டுஅக்கால கட்டத்தில் லண்டனில் தமிழ்ப் பாடசாலை, சைவக் கோயில்கள் என்பனவற்றின் முயற்சிலீடுபட்டவர்களின்; இலட்சியம் தமிழ் மொழியையும் சைவசமயப் பண்பாடுகளையும் தங்கள் பரம்பரைக்குப் போதிப்பதாகவிருந்தது. ஆனால் இன்று தொடரும் தமிழ்க் கல்வியையும், தமிழர்களின் கோயில்களின் செயற்பாடுகளையும் கவனிக்கும்போது, எதிர்காலத்தில் லண்டனில் வளரும் இலங்கைத்தமிழக் குழந்தைகளின் தமிழ் மொழி பற்றியும் சைவம் பற்றிய அறிவும் எந்த நிலையிலிருக்கும் என்ற கேள்வி எழுவதாகச் சிலர் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்;கள்.

லண்டனில் தமிழக் கல்வி;கற்கப் பெரும்பாலான இளம் மாணவர்கள் அவர்களின் ஐந்து வயதிலிருந்து தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கு வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் முழுக்கத் தமிழ் தெரிந்த பெற்றோரின் பிள்ளைகள்.ஐந்து வயதில் தமிழ்ப் பாடசாலைகளுக்கு வரும் இளம் சிறார் மொழி மட்டுமல்லாது,இசை,நடனம்,என்பன கற்பிப்பதும்; தமிழ்ப் பாடசாலைகளின் செயற்பாடாகவிருக்கிறது.

ஆங்கிலேய பாடசாலைகளில், பள்ளிப் படிப்பின் இரண்டாம் கட்டம் வரையும் குழந்தைகளின் எதிர்கால படிப்பு சம்பந்தமான விடயங்கள் கற்பிக்கப் படுகின்றன.அதாவது, எந்தக் கல்வியும் அதைப் படிக்கும் மாணவர்களின் தேவை பொருந்தியே தொடங்கப்படும்போதுதான் அந்த முயற்சி வெற்றி பெறும் உதாரணமாக,தமிழ்ப் பாடங்களில் இசை படிக்கும் சிறார்களுக்கு இவர்களுக்குப் பரிச்சியமான தமிழ் தவிர்ந்த இன்னொரு மொழியான தெலுங்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது. நடனங்களின் விளக்கங்கள் ஆங்கிலமொழியுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ் மொழிசார்ந்த இளம் சிறாரின் உளவியல் பலவிதமான கற்றுக் கொடுத்தலுக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது.

இளம் தமிழக் குழந்தைகள்,அவர்களின் வீட்டில்; தாய்தகப்பன், தாத்தா பாட்டிகளிடமிருந்து தமிழ் பேசக் கற்றுக் கொண்டவர்கள் தமிழ் எழுத்து இலக்கணம் என்பற்றைப் படிக்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அதற்குத் தேவையான தகுதியுள்ள ஆசான்கள் அமையாவிட்டாலோ அல்லது இளம் சிறார் விரும்பிப் படிக்கும் வித்தில் புத்தகங்களும்,பாடத்திட்டமும் பெரும்பாலாக நடைமுறையிலில்லை என்று குறைப்படும் தமிழ் மக்களின் குரலும் அடிக்கடி இப்போது வெளிவருகிறது.

குழந்தைகளின் மொழியார்வத்தை மேம் படுத்தும் புத்தகங்கள் தமிழ்ப் பாடசாலைகளில் பாவிக்கப் படுவதில்லை என்றும் அதனால் ‘ இளம் சிறார்களின் ‘தமிழ் வாசிப்பு’ ஊக்கப் படுத்தப் படுவதுமில்லை என்ற தோரணையில் அண்மையில் ஒருத்தர் சமூகவலைத் தளத்தில் எழுதியிருந்தார்.
அத்துடன் அவர் மேலும் குறிப்பிடும்போது,வெளிநாட்டில் வாழும் தமிழக் குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பரிச்சயமில்லாத விடயங்களை,அவை எங்கள் பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்ற பரிமாளத்தில் கற்பிப்பதாகவும் அவர் எழுதியிருந்தார்.

இன்று புலம் பெயர் தமிழர்கள் வீட்டில் இந்திய சின்னத்திரையும்(நாடகங்கள்),பெரிய திரையும்(படங்கள்) தமிழ்த் தொடர்பு சாதனங்கள் என்ற இடத்தைப் பிடித்து விட்டது.அவை இந்தியத் தமிழ் உரையாடல் மொழியையும்,கலாச்சார விழுமியங்களையும் முன்னெடுப்பவை. இளம் வயதில் தமிழ் மொழியில் அவர்களுக்கு உண்டாக்கப் படவேண்டிய ஆர்வத்தை மட்டுப் படுத்துபவை. அப்படியான சாதனங்னால் தமிழ் மொழிக்கல்வி மேன்மையடைகிறதா என்பது கேள்வி. அத்துடன் பெரும்பாலான தமிழர்களின் வீட்டில் தமிழ் வாரப் பத்திரிகைகளைக் காண்பதரிது. பெரியவர்கள் சமூக வலைத் தளங்களில் தாய்நாட்டுச் செய்திகளைத் தெரிந்து கொள்வதால் தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கவேண்டிய அவசியமில்லை என்று பலர் நினைக்கலாம்.

ஆனால், ஒரு காலத்தில் இலங்கைத் தமிழர் வீடுகளில்; பெரியவர்களுக்கான பத்திரிகைகளுடன் சிறுவர்களுக்கான பத்திரிகையான ‘அம்புலிமாமா’, ‘கற்கண்டு’ போன்றவைதான் நாங்கள் சிறுவர்களாகவிருந்த காலத்தில் தமிழ் மொழியை வாசிக்கப் பண்ணியவை. அதைத் தொடர்ந்த வாசிப்புத்தான் தமிழ் இலக்கியங்களைத் தேடிவாசிக்கப் பண்ணின,அதன் நீட்சியாக என்னைப் போல் ஒருசிலரைத் தமிழ் எழுத்தாளர்களாக்கின.

புலம் பெயர் தமிழ்ப் பாடசாலைகள் முப்பது வருடங்களுக்கு மேலாகச் செயல்படுகிறது. பல நடன,இசை அரங்கேற்றங்கள் தொடர்கின்றன.ஆனால் எத்தனை தமிழ் இளம் தலைமுறை தமிழ் எழுத்தாளர்களாக,ஆய்வாளர்களாக, பேச்சாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்? அந்தத் துறைகளதான் ஒரு மொழி எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்பதற்குச் சாட்சி சொல்பவை. அப்படியில்லாவிட்டால்; புலம் பெயர் தமிழ்க் கல்வியை ஆரோக்கியமான விதத்தில் முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய தலையாய கடமையாகும் என்பது,தெய்வத் தமிழை உயிராக நேசிக்கும் எனது தாழ்மையான கருத்தாகும்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s