ராஜேஸ் பாலாவின் “லண்டன் 1995” ஒரு பெண்ணிய கண்ணோட்டம்.

ராஜேஸ் பாலாவின் “லண்டன் 1995”
ஒரு பெண்ணிய கண்ணோட்டம்.
************************************************
புலம் பெயர் இலக்கியத்தில் மூத்த பெண்ணிய எழுத்தாளரும் பல்துறை ஆளுமையுமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பல சிறுகதைகள்,நாவல்கள்,ஆய்வுக் கட்டுரைகள்,மருத்துவ நூல்கள் என்பவற்றை எழுதியிருப்பதுடன் திரைப்பட இயக்குனரும் ஆவார். இவரின் ஆற்றல்களில் திளைப்பதில் நாம் பெருமை கொள்ளக் காரணம் நம் கிழக்கு மண்ணில் பிறந்து வளர்ந்தவர் என்பதேயாகும்.இன்று லண்டனில் வசித்து வருகிறார் என்றாலும் கிழக்கு மண் மீது தீராக் காதலும் பக்தியும் கொண்டவர். எமது மண்ணையும் மண் சார்ந்த பாரம்பரியங்களையும் மிகவும் மதிப்பதுடன் அவற்றைப் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் மும்முரமாக உழைப்பவர். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளைக் கொண்ட ஆறு தொகுப்புகளை வெளியிட்டதுடன் ஆங்கிலத்திலும் சிறுகதைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது “லண்டன் 1995” என்ற சிறுகதைத் தொகுப்பை பெண்ணிய கண் கொண்டு பார்க்க முற்பட்ட வேளை,

இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இருந்தன. அவற்றின் கதைக் களம் அனேகமாக இங்கிலாந்தை மையப்படுத்தியதாகவும், பெண்களின் உணர்வுகளை முன்னிறுத்தியதாகவும் இருந்தது. மேற்கத்தேய உணர்வுகளும் புலம்பெயர் நாடுகளில் வாழும் நம்மவர்களின் உணர்வுகளும் சந்திக்கின்ற ஒரு புள்ளியில் ஏற்படும் முரண்பாடுகளையும் அவர் சொல்லிச் செல்கிறார். ஒவ்வொரு கதையின் கருவும் ஏதோ ஒரு வகையில் கதாசிரியரின் மனதைப் பாதித்த சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருந்ததையும் உணர முடிந்தது. கதைகளில் ஒரு கதாபாத்திரமாவது பெண் ஆண் சமத்துவம் பேசும் விதமாக அமைந்திருந்தது. கதைக்களத்தின் காலம் சற்றுப் பின்னோக்கியதாக இருந்ததாலோ என்னவோ சில முடிவுகள் தற்காலத்தோடு ஒட்ட மறுத்ததாகப் பட்டதை தவிர்க்க முடியவில்லை. கதையின் நாயகிகள் மூலமாக பெண்களின் மெல்லிய அந்தரங்க உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்த விதம் அருமையாக இருந்தது.

சமூகம் எதையெல்லாம் தவறு என வாதிடுகின்றதோ அதையெல்லாம் நியாயமாகவும் தனி மனித உரிமையாகவும் பார்க்க வாசகர்களை அழைக்கிறது இக்கதைகள்.
சின்னச் சின்ன ஆசை என்ற கதையின் நாயகி மைதிலி ஊடாக தாய் நாட்டுப் பற்றை வெளிப்படுத்திய ஆசிரியர் கல்யாணம் என்பதை தவிர்க்க முடியாத ஒரு சடங்காகப் பார்க்கும் கட்டமைப்புக்குள் தான் இன்னும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கிறார். பெண்கள் தமது எண்ணப்பாட்டினை முன் வைக்கையில் கேட்க வேண்டிய இடத்தில் நிற்கும் ஒரு ஆண் அதனை எவ்விதம் எடுத்துக் கொள்கிறார் என்பதோடு அதனை புரிய அவர் எவ்விதத்தில் முயற்சிக்கிறார் என்பதும் ஒரு பெண்ணின் முடிவெடுக்கும் சுதந்திரம் ஆண்களால் நிர்ணயிக்கப்படுவதையும் கூறுகிறது. கதையின் படி மைதிலியின் மனதிலோ பேராசிரியரின் மனதிலோ எந்தக் காதலும் இல்லை. ஒருவருக்கொருவர் ஏதோ ஒருவித ஆறுதலையும் அன்பையும் பரிமாரிக்கொண்டனரே தவிர வேறில்லை என்ற போதும் சம்பந்தன்” நீங்கள் மைதிலியை காதலிக்கிறீர்களா?” என்ற ஒரு கேள்வியில் சமூகம் ஆண் பெண் நட்பை எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்த்தி விட்டது. இதில் ஏன் அவர்கள் இருவருக்கிடையிலும் இருந்த ஆரோக்கியமான நட்பை புரிய வைக்கும் முயற்சி நடைபெறவில்லை என்பது கேள்விக்குறி. அவளின் கருத்தை சம்பந்தன் புரிந்திருந்தால் பிரிந்திருப்பான் ஆனால் அவனது புரிதல் தவறானமையே அவன் பேராசிரியரை சந்தித்துக் கேட்ட கேள்வி விளக்கியது. இவ்வாறான ஒருவனை நம்பி மைதிலியை விட்டுச் செல்ல பேராசிரியர் எடுத்த முடிவு எவ்விதத்தில் சரியானது எனத் தெரியவில்லை அதே வேளை இம்முடிவு மைதிலியை காப்பாற்றுமா? சம்பந்தன் போன்ற புரிதல் இல்லாத ஒருவனிடம் சிக்க வைத்து அவளின் வாழ்வை கேள்விக்குறியாக்குமா? அல்லது எந்தப்பதிலும் சொல்லாமல் பிரச்சினையே வேண்டாம் என தப்பிச் செல்லும் ஆண்களின் உத்தியா?
உண்மையில் காதல் என்பது காமத்தை மட்டும் உள்ளடக்கியது இல்லை அதையும் தாண்டி ஒரு நம்பிக்கை, ஆறுதல், பாதுகாப்பு உணர்வு, பக்கபலம் இவற்றையும் கொண்டது.
எதிரிக்காக துளியும் விட்டுக் கொடுக்காத பல விடயங்களை பிரியமானவர்களுக்காக விட்டு விடும் அந்த உள்ளம் அது தான் இக்கதையின் கருவாக இருப்பதை உணர்கிறேன்.

ஒரு பெண் துணிவுடனும் தன்நம்பிக்கையுடனும் செயற்பட ஆரம்பிக்கையில் அவளது ஒட்டு மொத்த பலத்தையும் உடைக்க ஆண் சமூகம் கையில் எடுப்பது விமர்சனம்,திருமணம் மற்றும் பிள்ளைப் பேறு. இதனை விளக்க கொஞ்சம் வரலாற்றுப் பிண்ணனியுடன் எழுதப்பட்ட கதை “ஒரு ஒற்றனின் காதல்”. ஒற்றர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற எவ்வளவு தூரத்திற்கும் இறங்க முழு உரிமையும் பெற்றவர்கள் என்பதை இக்கதை பேசுகிறது. சித்ரா போன்று துணிவான எத்தனை பெண்கள் காதல்,கர்ப்பம் என்பவற்றால் முடக்கப்பட்டார்கள் என்பதை எண்ணிப்பார்க்கையில் பெரியாரின் கர்ப்பையை தூக்கி எறியுங்கள் என்பது எத்தனை நியாயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

“காதலைச் சொல்ல..” என்ற கதை ஒரு அழகிய காதல் கதை. தயக்கங்கள் எப்போதும் பல இழப்புகளைக் கொண்டு வரும் என்பதை காதலை முன்வைத்துச் சொல்லிய விதம் அருமை. அதில் கதாநாயகனின் எண்ணமாய் வெளிப்பட்ட ஒரு விடயம் என்னை மிகவும் நெருடியது.      ” பெண்கள் காதலிக்க உரிமையற்றவர்கள் தங்களின் உள்ளத்தின் உயிர்த்துடிப்பை மறைத்து விட்டு சமுதாயத்திற்காக வேடம் போடுபவர்கள்” இது மிகவும் யதார்த்தமான வார்த்தை தான். ஆனால் தற்காலத்தில் முற்று முழுதாக அனைவரையும் இதற்குள் பொருத்தி விட முடியாது.
” அக்காவின் காதல் ” எனும் கதையின் தொடக்கமே ஒரு க்ரைம் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய அதேவேளை அக்கதையில் மேலைத்தேய கலாச்சார அதிகம் பரவியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. அக்கதையில் வரும் அக்கா கதாபாத்திரத்தின் ‘ வயது வந்த இருவர் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் உறவு வைத்துக் கொள்வதை யாரும் தடுக்க முடியாது’ என்ற கருத்து பெரியாரிஸமா? பெண்ணிலை வாதமா? என்று ஆராய வைக்கிறது.  “மோகத்தைத் தாண்டி..” ஒரு பெண்ணின் உணர்ச்சிப் போராட்டங்களை மிகத் துள்ளியமாகச் சொல்லிச் செல்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையப் பெற்றாலும் எல்லோராலும் வழி தவறிச் செல்ல முடியாது என்பதையும், ஒருவர் மேல் வைக்கும் அன்பும் அக்கறையும் அவர்களின் நம்பிக்கையில் தான் வளர்கிறது என்பதையும் பக்குவமான கதை நகர்வில் கூறி விட்டார். வாசகர்களின் எண்ணவோட்டத்தில் சில குழப்பங்களை விளைவித்த கதை தான் என்றாலும் தான் சொல்ல நினைத்ததை ஆசிரியர் ஏதோவொரு இடத்தில் சொல்லி விட்டார்.

சமூகத்தில் பெண் உடலை பண்டமாக பார்க்கப்பட்ட காலம் தொட்டு ,அது பெண்ணுக்கு சொந்தம் என்பதை பெண்ணே மறந்து விட்ட சோகம் தான் இன்றும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆண்களைப் பழி வாங்கவும், பெண் உடல் தான் பயன் படுகிறது என்பது எவ்வளவு கொடுமை. ” இப்படியும் கப்பங்கள்” என்ற கதையில் கப்பமாக கேட்கப் படுவதும் பெண் உடல் தான் என்பது வேதனை. அதே சமயம் வன்புணர்வின் பின்னான பெண்ணின் மனநிலையும் உடல்நிலையும் எவ்விதம் செயற்படுகின்றன என்பதை அருமையாக பதிவு செய்கிறது. பாலியல் லஞ்சம் கூட இனம், மதம், மொழி, நாடு கடந்தது தான் போலும்.

“அந்த இரு கண்கள்” யதார்த்தத்திற்குப் பொருந்தாத முடிவைக் கொடுத்தாலும். கதை நகரவு அருமையாக இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒரு இன மக்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பற்ற வாழ்வும், உயிர்க்கு உத்தரவாதமற்ற நிலையையும் கூறுகிறது. சொந்த நாட்டில் ஒடுக்கப்பட்டு புலம் பெயர் நாட்டிலும் ஒதுக்கப்படும் போது ஏற்படும் வலி மரணத்தை விடக் கொடியது.
‘வன்முறை என்பது அறிவற்ற கோழைகளின் ஆயுதம் ‘ என்பது எவ்வளவு பெரிய உண்மை.

“பரசுராமன்” இந்த நவீன பரசுராமனை யாரும் தூண்டவில்லை.  கால காலமாக மூளையில் பதிய வைக்கப்பட்ட பெண் பற்றிய எண்ணவோட்டங்களின் பிரதிபலிப்பு. மறுமணம், பெண்களுக்கு எவ்வளவு சவாலான விடயம் என்பதைக் கூறும் கதை. முற்போக்கு சிந்தனையாளர்களால் முற்போக்கு சிந்தனையாளர்களை உருவாக்க முடியாது ஏனெனில் அது ஒரு உணர்வு. அதை உணர வேண்டும் அதன் பின் செயற்பட வேண்டும். குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் இருந்து சமூகம் என்ற வெளி உலகிற்கு வரும் பெண்கள் குடும்பத்தாலும் உறவுகளாலும் சமூகத்தாலும் எவ்விதம் பார்க்கப் படுகிறார்கள் என்பதை இக்கதையில் ஆசிரியர் அற்புதமாகக் கூறுகிறார். பார்வையாலும் செயலாலும் சொல்லாலும் பெண்களின் உணர்வுகளைக் கொல்லும் உறவுகள் இருப்பது பெண்களின் முன்னேற்றத் தடைக்கல்கள். அதையும் மீறி வெளிவரும் பெண் தன் மகனால் வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் என்பது வெறும் கற்பனை எனக்கூறி கடந்து விட முடியாது.
துணை என்பது உடல் தேவைக்கானது மட்டுமே என்ற எண்ணவோட்டத்துள் மூழ்கிக் கிடந்த சமூகம் நம் எதிர் கால சந்ததியினரை எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம். ‘பெண்கள் படிக்காதவரை ஆண்கள் அவர்களை அடக்கப் பார்ப்பார்கள்’
என்று ஒரு ஆண் சொல்வதாக இக்கதையில் வருவது அவனை ஒரு முற்போக்குவாதியாகக் காண்பித்தாலும் அவனது இறப்பிற்குப் பின்னரே அது சாத்தியப்பட்டதை நாம் கவனிக்க வேண்டும். அது மட்டுமன்றி பெண்கள் மறுமணம் பற்றிய கருத்துக்களை எவ்விதம் பார்க்கின்றார்கள் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் மீதான வன்முறை என்று வரும் போது ஆண்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை மிக யதார்த்தமாகப் பேசுகிறது இக்கதை. தமிழ் என்ற பெயரில் நடந்த கொலைகள் கணக்கெடுப்பில் வராவிட்டாலும் அதில் ஏற்பட்ட இழப்புகளுக்கு முகம் கொடுத்தவர்கள் அதனை மறக்க மாட்டார்கள். தமிழ் சமூகத்தின் பாதுகாவலர்கள் எனச் சொல்லும் அவர்களை தமிழ்த் தீவிரவாதிகள் என்ற சொற்பதத்தால் குறிப்பிட்டதன் மூலம் அவர்களையும் ஆற்றுப்படுத்துகிறார்.
கைக் குழந்தையுடன் கணவனை இழந்து நிற்கும் பெண்களுக்கு அசாத்திய வைராக்கியம் இருப்பது உண்மைதான் ஆனால் அது அவளது தேவையைப் பொருத்து மாறுபடக்கூடியது என்பதையே இச்சமூகம் ஏற்க மறுக்கிறது. இதுவே பெண்கள் தம் வாழ்வில் இன்னுமொரு துணையைத் தேட தடையாகவும இருக்கிறது. இக்கதையில் வரும் தாய் ஒரு சந்தர்ப்பத்தில் ,’ குடும்பப் பொறுப்புக்களால் தொலைந்து போன இளமை திரும்புவது போலிருந்தது’ எனக் கூறுவார். இது எத்தனை பெண்கள் தொலைத்து விட்ட உண்மை. ஒரு சிலர் அதை மீட்டெடுக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு சமூகம் கொடுக்கும் பரிசு தான் வன்முறை.

இறுதியாக “லண்டன்1995” என்ற சிறுகதையில் , குடும்பங்களை பாதுகாக்கும் பொருட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆண்கள் எதிர் நோக்கும் சவால்களையும், அதேவேளை பெண்கள் உள்ளாட்டில் கணவனின்றி தனித்து வாழ்ந்து குழந்தைகளைப் பெறுவதும் அவர்களை வளர்ப்பதும் சமூகப் பிரச்சினைகளை எதிர் கொள்வதும் எத்தனை கொடுமை என்பதையும் கூறுகிறது.
தன் பிள்ளை தன்னைப் பார்த்து “இது யார் அம்மா?” எனக் கேட்கும் அந்த சூழலை நினைத்தாலே கண்கள் கலங்கும். ஆனால் ஏன் இவ்வாறு பிரிந்து வாழ்ந்து சங்கடங்களையும் வேதனைகளையும் நாம் அனுபவித்தோம்?சொந்த நாட்டில் வாழும் சூழலை மறுத்தது யார்?
இந்தக் கேள்விக்கு ஒன்பது வயது மகனின் வாக்குமூலம் பதிலாய் அமைந்தது. நம் நாட்டின் மக்கள் அடிபட்டது ஒரு பக்கத்தினால் என்றால் மறுபக்கமாக சாய்ந்திருப்பர். அடி விழுந்ததோ பல பக்கத்திலிருந்தும்;
இனவாதம் குறித்து அச்சிறுவன் எவ்வாறான மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால் தமிழ் பேசினாலே அடி விழுமே என்று பயந்திருப்பான்.
இலங்கையின் இனவாதம் இளம் பிள்ளைகளின் எதிர்காலத்தில் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கூறும் இச்சிறுகதை அற்புதம். அத்துடன், ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பது உண்மைதான். எதையும் பேசி முடிவு செய்யாமல் கை ஓங்குவது முட்டாள் தனம் என்பதையும் விளக்கி விட மறுக்கவில்லை ஆசிரியர்.

ராஜேஸ் பாலாவின் இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் பெண்ணியத்தை மையமாக வைத்து எழுதப்பட்டதாகவே எனக்குப் படுகிறன. ஒரு பெண்ணிலைவாத செயற்பாட்டாளர் என்ற வகையில் தன் கடமையை கதைகளின் மூலம் வெளிப்படுத்திய ஆசிரியர் பாராட்டுக்குரியவரே. இதில் நமது செயற்பாடு என்ன? மாற்றம் எங்கிருந்து வர வேண்டும் என்பதும் எவ்வாறு ஆணாதிக்கத்தை இல்லாதொழிக்க முடியும் என்பதையும் வாசகரிடமே விட்டுச் செல்கிறார்.

நிலாந்தி.
மட்டக்களப்பு

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s