‘கிழக்கிலங்கையின் பெண்ணாளுமை செல்வி தங்கேஸ்வரி கதிராமன்-
(அண்மையில் இறைவனடி சேர்ந்த செல்வி தங்கேஸ்வரியின் நினைவு மலருக்காக எழுதப்பட்ட சிறு பதிவு)
‘கற்றது கடுகளவு கல்லாதது கடளலளவு’ என்பது பழமொழி. கல்வி,அறிவு என்பவவை பற்றிய தேடல்களின் விளக்கங்கள்; ஒரு பிரமாண்டமான பரிமாணம். தற்செயலாகக் காணும் சில அறிவான மனிதர்களைக் காணுவதிலும் அவர்களுடன் பழகும்போது அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளும் பற்பல தகவல்களைக் கண்டு ஆச்சரியப் படும்போதும்தான்,நாங்கள் கற்கவேண்டியவை இந்த உலகத்தில் எவ்வளவோ இருக்கின்றன என்று புரியும். அப்படியான ஒரு சிந்தனைப் பொறியை உண்டாக்கச் செல்வி தங்கேஸ்வரி போன்றவர்களின் தொடர்ப எவ்வளவு இன்றியமையாதது என்பதை அவரைச் சந்தித்தபோது என்னால் உணர முடிந்தது.
செல்வி தங்கேஸ்வரியுடனான எனது முதற் சந்திப்பு 1998ம் ஆண்டு கென்னையில் நடந்த முருகன் மகாநாட்டில் ஏற்பட்டது. ‘தமிழ்க் கடவுள் முருகனும் அவனின் இரு மனைவியர்களும்’; என்ற தலைப்பில் மகாநாட்டமைப்பாளர்கள் என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள். இலக்கியப் படைப்புக்களான,கதை,நாவல்கள் என்பவைகளுடன், அரசியல்,பெண்ணியம்,சமுதாயம் சார்ந்த கட்டுரைகளும் எழுதும் என்னிடம்; சமய விடயம் பற்றிய கட்டுரையை ‘முருக மகாநாட்டமைப்பாளர்கள்’கேட்டது ஆச்சரியமாகவிருந்தது. அதுபற்றி அவர்களிடம் விசாரித்தபோது, ‘உலகத்திலுள்ள எந்தக் கடவுள்களுக்கும் இருமனைவிகள் கிடையாது.தமிழ்க் கடவுள் என்று சொல்லப்படும் முருகன் மட்டும் இருமனைவிகள் வைத்திருக்கிறார்,மானுட மருத்துவ வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற உங்களிடமிருந்து இதுபற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை எதிர்பார்க்கிறோம்’ என்று சொன்னார்கள்.
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி,லண்டனில் நான் ஆரம்பித்த ஆய்வில் முருகக் கடவுளுக்கு ஏன் இருமனைவிகள்? என்ற கேள்வியைத் தொடர்ந்து,அந்த நம்பிக்கை சார்ந்து தமிழர்களின் முருகக் கடவுளுக்கான வழிபாடுகளும் சடங்குகளும் நம்பிக்கைகளும் தொடரக் காரணமாகவிருக்கும் தமிழர்களின் கலாச்சார,சமயக்கோடுபாடுகள், கடவுள் சார்ந்த விடயத்தில் ஆதித் தமிழர்கள் வைத்திருந்த தத்துவம் சார்ந்த கட்டுமானங்கள்; என்பன ஓரளவு தெரிய வந்தன.அந்த ஆய்வு கட்டுரையுடன் சென்னை சென்றேன்.
அங்கு பல நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர்கள் முரகக் கடவுள் பற்றிய ஆய்வுகளையும் கட்டுரைகளையும் மகாநாட்டில் சமர்ப்பிக்க வந்திருந்தார்கள். அங்கு வந்திருந்து முருகக் கடவுள் பற்றி பல தரப்பட்ட கட்டுரைகளையும் மகாநாட்டில் படித்த மேன்மையான மனிதர்களுடன், இலங்கையிலிருந்து வந்திருந்த செல்வி தங்கேஸ்வரியும் ஒருத்தராவார்.
அங்கு இருவரும் அறிமுகமானோம். எனது கதைகள் வெளிவந்த இலங்கைத் தமிழ்ப் புத்திரிகைகள் மூலமாக அவருக்கு என்னைத் தெரிந்திருந்தது. ஆனால் எனக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. 1952ம் ஆண்டில் பிறந்த தங்கேஸ்வரி தனது இருபது வயது இளமைக் காலத்திலேயே வீரகேசரி பத்திரிகையில் ‘கிழக்கிலங்கைக் கலாச்சாரம்’ சம்பந்தமான கட்டுரைகளை 1972ம் ஆண்டிலேயே எழுதத் தொடங்கினார் என்று தெரிந்தபோது மிகவும் ஆச்சரியப் பட்டேன். நான் அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்து வந்தபடியால் பல இளம் தமிழ் எழுத்தாளர்களைத் தெரிந்திருக்கவில்லை. தங்கேஸ்வரி தமிழ்ப் பத்திரிகைகளில்,இலக்கிய ரீதியாக ஒரு சில நாட்டுப் புறக்கதைகள் எழுதினாலும் அவர் தனது முழுநோக்கையும் தொன்மை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுத்துகிறார் என்று தெரிந்து கொண்டேன்.
அந்த மகாநாட்டில் பல நாட்கள் தங்கேஸ்வரியுடன ஒன்றாகப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ் நாட்டிலுள்ள தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்றபோது பல நாட்கள்,பிரயாண வண்டியில் இருவரும் அருகிலிருந்து பல விடயங்களைப் பேசினோம். எனது ஆய்வுகள் உலகத்திலுள்ள பல தரப்பட்ட மக்களின் மருத்துவ தேவைகள் என்னவென்று அவர்களின் கலாச்சார,சமய,குடும்ப, இனக் கோட்பாடுகளுடன் இணைந்து பிணைந்தது என்பதாகும் என்று சொன்னேன்.அவர் களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர் என்றும், தொல்லியல் சார்ந்த விடயங்களில் அவரின் ஆய்வுகள் அமைந்திருப்பதாகவும் சொன்னார்.அந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தமிழ்ப் பெண்களில் ஒரு மகத்துவமானதும் ஆளுமையானதுமான பெண்ணான செல்வி தங்கேஸ்வரியைச் சந்தித்தது எனது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.
அவர் ஏற்கனவே பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக்கிறார்;.அத்தோடு,சில வருடங்களின் பின், 2007ம் ஆண்டில் அவர் எழுதிய’ கிழக்கிலங்கையின் பூர்வீக வரலாறு என்ற புத்தகத்தில் (மணிமேகலை பிரசுரம்) கிழக்கிலங்கையின் தொன்மையைப் பல தரப்பட்ட ஆதாரங்களுடன் செம்மையாகச்; சொல்லியிருக்கிறார்.
உலகத்தில் எல்லா இடங்களிலும் நடப்பதுபோல்,இலங்கையிலும் பல அரசியல் மாறுதல்களால் கடந்த பல நூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது.அதனால் கிழக்கிலங்கையின் தொன்மையின் உண்மைகளில் மாற்றங்கள் வருகின்றன. அவற்றைச் செல்வி தங்கேஸ்வரி தனது ஆய்வு நூல்களில் தெளிவாக விளக்குகிறார்.
அவரை இரண்டாம் தடவையாக 2011ம் ஆண்டு கொழும்பில் நடந்த தமிழ் மகாநாட்டில் சந்தித்தேன். அதில் வெளியிட்ட கட்டுக்கோவையில் ‘கிழக்கிலங்கையில் தொலைந்துபோகும் தொன்மையும் தொன்மைக் கிராமங்களும்’ என்ற அவருடைய ஆய்வு பலராலும் கவனிக்கப் பட்டது.
கி.மு.250 கால கட்டத்தில் புத்த மதத்தைத் தழுவிக் கொண்டிருந்த அசோக மன்னனால் கலிங்க பிரதேசத்திலிருந்து வெளியேற்றப் பட்ட சைவ வழிபாடுடைய 150.000 கலிங்க மக்கள்; தென்னாசிய நாடுகளான சிங்கப்பூர்,பாலி,பிஜி தீவுகளில் குடியேற்றப்பட்டதோடு மட்டுமல்லாது அவர்களிற் பெரும்பான்மையோர் இலங்கை மன்னன் முத்துசிவனால் கிழக்கில் குடியேற்றப் பட்டார்கள்கள். ஏனென்றால் ஏற்கனவே சிழக்கிலங்கை விஜயன் காலத்திலிருந்து தமிழரின்,அதாவது சிவனை வணங்கிய இந்தியப் பாண்டிய மன்னரின் பரம்பரை அரசின் கீழிருந்தது. தமிழ் மன்னரின் ஆட்சி கிழக்கிலங்கையிலிருந்ததற்குச் சான்றாக, பிரித்தானிய மியுசியத்தில் முதலாம் நூற்றாண்டு தமிழில் எழுதப்பட்ட கிழக்கி;லங்கை அரச நாணயம் காடசிக்கு இருக்கிறது என்று அவருக்குச் சொன்னேன். ‘இன்று கிழக்கிலங்கையில் பாண்டிய பரம்பரiயின் ஆச்சிகளும் நாச்சிகளும் ஆண்ட கிழக்கிலங்கைப் பிரதேசங்கள் அவர்களின் சரித்திரத்தையும் தொலைத்து விட்டுத் துயர் கண்ணீர் வடிக்கிறது.அவர்கள் கட்டிய கோயில்கள் இடிக்கப் பட்டு அங்கு சில இடங்களில் மீன் கடை போடப்பட்டிருக்கிறது’ என்று ஆற்றாத் துயருடன் சொன்னார்.
இன்று பழமை வாய்ந்த தமிழ்க்கிராமங்களின் தொன்மை அழிக்கப் படுவதைத் தனது ஆய்வுகளில் எழுதியிப்பது மட்டுமல்ல என்னுடன் உரையாடும்போது,பல தடவைகள் அவற்றை விளங்கப் படுத்தி மிகவும் துக்கப் பட்டார்.தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் வெறும் வாய்வீச்சாளராகளாக மட்டுமிருப்பதையும்; கிழக்கிலங்கையின் தொன்மையான அடையாளங்கள் அழிவதுதுபற்றிப பற்றி வெட்கமும் துக்கமுமின்றியிருப்பதாகச் சொல்லிக் குமுறினார். தங்கேஸ்வரி இந்த விடயம் பற்றிப் பேசுவதையே தமிழ்த் தலைமை தடைசெய்ததாகத் துயர்பட்டார்.செல்வி தங்கேஸ்வரி சொன்ன விடயத்தையே, சில வருடங்களுக்கு முன் கிழக்கிலங்கையிலிருந்து லண்டன் வந்திருந்து பக்தியுள்ள ஒரு அரசியல்வாதியும் குறிப்பிட்டார்.
கொழும்பு மகாநாட்டைத் தொடர்ந்து,2011ம் ஆண்டு அவருடன் சில நாட்களை கிழக்கிலங்கையிற் செலவழித்தேன். கிழக்கிலங்கையில் பல புராதான இடங்களுக்கு அவருடன்; சென்றேன்.அதில் தான்தோன்றீஸ்வரர் கோயில் பற்றிய பிரயாணத்தின்போது பல விடயங்களைச் சொன்னார். கிட்டத்தட்ட மூவாயிர வருடங்களின் சரித்திரம் அந்தக் கோயிலுடன் இணைந்திருப்பதாகச் சொன்னார்அதற்கான கல் வெட்டுப் படிவங்கள் சாட்சியமாக இருப்பதாகச் சொன்னார்.
கிழக்கிலங்கையின் தொன்மையைக் காப்பாற்றக் கூடிய அரசியற் தலைமையில்லாதது அவரின் பேச்சிற் தெரிந்தது. அதுபற்றிப் பேசும்போது,’தமிழ்த்தேசியம் பேசுபவர்கள்’ கிழக்கிலங்கையின் வரலாறு தொன்மை தெரியாமல் அரசியல் செய்வது பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இவர் பன்முகத்திறமை வாய்ந்த ஒரு பெண்ணாளுமை.அவரது வாழ்நாளில் தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல பெரும்பாலான பல பெண்கள் சாதிக்கமுடியாத பல விடயங்களைச் செய்திருக்கிறார். பல மகாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறார். விருதுகளும் பெற்றிருக்கிறார். பல துறைகளில் பணியாற்றியிருக்கிறார். 2004ம் ஆண்டு பாராளுமன்றம் சென்றிருக்கிறார். ஆனால் தமிழத்தேசியத்தில் அவர் வைத்திருந்த மரியாதை,நம்பிக்கை என்பன அவர்கள் எப்படிக் கிழகிலங்கையைத் தூக்கி எறிந்து நடத்துகிறார்கள் என்பதை நேரில் அனுபவத்தபோது தனக்கு அவர்கள் பேசும்; போலித்;’தமிழ்த் தேசியம்’ என்ற கோட்பாட்டில் வெறுப்பு வந்து விட்டதாகக் கூறினார். அதற்குப் பல உதாரணங்களும் சொன்னார்.அரசியல் காரணிகளால் அவற்றை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
இவர் தன்னல மற்ற மனித நேயவாதி.நேர்மை,சுயமை,கடமை,கனிவான மனப்பான்மை நிறைந்தவர். போலியாகப் பழகத் தெரியாதவர். தனது வாழ்க்கைக் காலத்தில் பல்வேறுபட்ட மனிதர்களுடன் வேலை செய்திருக்கிறார்.
மக்களுடன் அவர் எப்படி இணைந்து அவர்களுடன் அன்புடனும்; பண்புடனும் பழகுகிறார் என்பது கிழக்கிலங்கை வெள்ளத்தால் மூழ்கிக் கிடந்த கால கட்டத்தில் அவ்விடங்களைப் பார்த்துத் தன்னால் முடிந்து உதவி செய்ய தங்கேஸ்வரி பல இடங்களுக்குச் சென்றபோது மக்கள் அவருக்குக் கொடுத்த வரவேற்பை அவருடன் சென்றிருந்த நான் நேரிற் கண்டேன்.அவரைக் கண்ட மக்களின் அன்பும் வரவேற்பும் அளவு கடந்திருந்தது. மக்களுக்கான தங்கேஸ்வரியின்; பொதுத்தொண்டு மனப்பான்மை என்னைச் சிலிர்க்கப் பண்ணியது.
பாராளுமன்றவாதியாக மட்டுமல்லாமல் இவர், பிரதேச அமைப்பின்கீழ் இயங்கிய மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார திணைக்கழத்தின் செயலாளராக இருந்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்லாமல், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பிரிவில் பகுதி நேர விரிவுரையாளராகவுமிருந்திருக்கிறார். இந்தக் கால கடடங்களில் எத்தனையோ மனிதர்களுடன் அவர் வாழ்வு தொடர்ந்திருக்கும்.இவை எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்களுக்குக் கிடைக்கம் அதிர்ஷ்டமான சந்தர்ப்பங்களாகும்.
இலங்கைத் தமிழ்ப் பெண்ணாளுமைகளில் மிகவும் ஆச்சரியப்படத்த பல ஆய்வுகளைச் செய்த இவரைக் கிழக்கிலங்கை போற்றவேண்டும். இதுவரையும் யாரும் செய்யாத பல ஆய்வுகளைச் செயது, பல நூல்களை எழுதிய இந்தப் பேரறிவுள்ள பெண்ணைப் பற்றியும் அவரின் ஆய்வுகள் பற்றியும் விரிவாக எழுதப்படவேண்டும்.
இவர் பல பாடசாலைகளிற் படித்திருக்கிறார். பலருடன் வேலை செய்திருக்கிறார். பலருடன் பழகியிருக்கிறார்.அதனால், கிழக்கிலங்கையின் தொன்மையைத் தேடிய இவர் பற்றி.இவருடன் படித்தவர்கள்,வேலை செய்தவர்கள்,இவரைச் சமுக வேலை காரணமாகத் தெரிந்தவர்கள் என்போரிடமிருந்து, தங்கேஸ்வரி பற்றிய அவர்களின் அனுபவங்களை எழுத்து வடிவில் தொகுக்கப் படவேண்டும்.அவை எதிர்காலச் சமுகத்தினருக்கு மிகவும் பிரயோசனப்படும்.
இலங்கைத் தமிழர்களில் மிகவும் போற்றப்படவேண்டிய தகமைகளில் ஒருத்தரான,’யாழ்நூல்’ எழுதிய விபுலானந்தர்; பற்றியும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.கிழக்கிலங்கை மக்களின் முன்னேற்றத்திற்காகச் சாதி சமய இன பாலியல் வேறுபாடற்ற சமத்துவத்திற்குத் தேவையான கல்வி வளத்தைக்கொடுத்தவர் சுவாமி விபுலானந்தர். அத்துடன்,தென்னிந்தியாவில் ஒடுக்கப் பட்ட மக்களுக்குக் கல்வியற்ற காலத்தில் அவர்களுக்குக்; கல்வி கொடுத்தவர்.அதனால் பார்ப்பனர்களால் சுவாமிக்குக் குடிநீர் தடைசெய்யப் பட்டது. உப்புத் தண்ணீர் கொடுக்கப் பட்டது.அதைக் குடித்துக்கொண்டு ஒடுக்கப் பட்ட மக்களின் கல்விச் சேவையைத் தொடாந்தவர் கிழக்கிலங்கை ஞானியான சுவாமி விபுலானந்தர். தங்கேஸ்வரியின்; ‘விபுலானந்தர் தொல்லியலைப்’ படிக்க மிகவும் ஆவலாகவிருக்கிறேன். கிழக்கிலங்கையின் மகா மேதை விபுலானந்தர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பற்றி, விபுலானந்தர் எழுதிய ‘ மாதங்க சூளாமணி’ பற்றி தங்கேஸ்வரி ஆய்வு செய்திருக்கிறார் என்பது பெருமையாகவிருக்கிறது.
அவரைப் பற்றிய செல்வி தங்கேஸ்வரியின் ஆய்வுப் புத்தகமான,’ விபுலானந்தர் தொல்லியல்’; எதிர்காலத் தலைமுறையினரின் ஆய்வுக்கு இன்றியமையாத புத்தகமாகவிருக்கும் என்று நம்புகிறேன்;. அதே மாதிரி,’குளக்கோட்டன் தரிசனம்,’மாகோன்வரலாறு’,’மட்டக்களப்புக் கலைவளம்,’கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியம்;,’கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு’, என்பனவும் மாணவர்களால் மட்டுமல்லாது கிழக்கிலங்கை மக்களாலும் பொக்கிஷமாகப் பாதுகாக்கப் படவேண்டிய நூல்களாகும்.
அவரின் எல்லா நூல்களையும் நான் படிக்கவில்லை. ‘மாகோன் வரலாற்றை’ நீண்ட காலத்துக்கு முன் படித்தேன். இப்போது அவரின் ‘கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு படித்துக்கொண்டிருக்கிறேன்.
அவருடன் இந்தியாவிலும் இலங்கையிலும் நான் ஒன்றாயிருந்த சில நாட்கள் மறக்கமுடியாதவை. அன்பும் பண்பும்,ஆற்றலும் உள்ள இந்தப் பெண்மணியில் நான் மிக மதிப்பு வைத்துள்ளேன். அவர் சுகவீனமாகவிருந்த கால கட்டத்தில் சில தடவைகள் போனில் பேசினேன்.அண்மையில் இலங்கை சென்றிருந்தபோது, நேரமின்மை காரணமாக அவரைச் சந்திக்கமுடியாது போனது பற்றி நான் மிகவும் துக்கப் படுகிறேன்.
அவருடன் நான் இங்கு தங்கியிருந்த நாட்களில் அவரை ஒரு அன்பள்ள தாய்மையுள்ளம் கொண்ட பெண்ணாகக் கண்டேன். அந்தத் தாய்மை அவரைச் சுற்றியிருக்கும் அத்தனைபேரையும் அன்புடன் கவனிப்பதில் பிரதிபலித்தது. அந்தத் தாய்மையுணர்வுதான் தான் பிறந்த மண்ணிண் மகளாக மட்டுமல்லாமல் அம்மண்ணிணன் தொன்மை, சரித்திரம், கலாச்சார விழுமியங்கள், சமயக் கோட்பாடுகள் என்பற்றை மற்றவர்களும் படிப்பதற்காகப் பல ஆய்வுகளைச் செய்யும் ஆய்வாளராகும் உந்துததலைக் கொடுத்திருக்கும் என்பது என்கருத்து.
பல அரிய ஆய்வு நூல்களைப்; படைத்துத் தமிழ் உலகுக்குத் தந்த செல்வி தங்கேஸ்வரி இவ்வுலகை விட்டு மறைந்து விட்டாலும் அவராது அயராத ஆய்வின் உழைப்பிற் பிற்கு அவரின் ஆய்வு நூல்களின் வழியாகத் தமிழ் மக்கள் அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வார்கள். அவருடன் பழகுவதற்குக் கிடைத்த சில நாட்கள் நான் செய்த அதிர்ஷ்டமாகும். அத்துடன்; கிழக்கிலங்கையின் மிகவும் குறிபபிடத்தக்க ஆளுமையான புதல்வியான தங்கேஸ்வரியின் மரணத்திற்கு எனது மனமார்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.