பிரித்தானியாவில் தமிழ் மொழி வளர்ச்சியின் ஆரம்ப சரித்திரம்’

‘பிரித்தானியாவில் தமிழ் மொழி வளர்ச்சியின் ஆரம்ப சரித்திரம்’
திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
எம்.ஏ(மானுட மருத்துவ வரலாறு,பி.ஏ.(ஹானஸ்,திரைப்படத்துறை).

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது,அந்த மொழியைப் பேசும் மக்களின் திறமையான,செயற்பாடுகளின் தொடர்ச்சியை அடிபடையாகக் கொண்டது.தமிழின் தொன்மையும் அந்த மொழியில் தமிழர்கள் வைத்திருக்கும் நேசமும் பக்தியும் இன்று உலகெங்கும் தமிழ் வளர்ந்து கொண்டிருப்பதற்கு மூலகாரணியாகவிருக்கின்றன.

இலங்கைத் தமிழர்கள் முற்போக்குத் தமிழ் இலக்கிய சங்கத்தை 1942ம் ஆண்டிலேயே யாழ்ப்பாணத்தில் தொடங்கியவர்கள். மேற்கு நாடுகளில், முக்கியமாகப் பிரித்தானியாவை மையமாக வைத்துத் தமிழின் மகிமையை உலகுக்குப் பரப்புவதில்; முன்னணி நிலை எடுத்தவர்கள்,1950ம் ஆண்டு தொடக்கம்,மேற்படிப்பு, உத்தியோகம் போன்ற காரணங்களால் லண்டனிற் குடியேறிய இலங்கைத் தமிழர்களாகும்.
இவர்களால் லண்டனில் தொடங்கப் பட்ட,வானொலிகள்,பத்திரிகைகள்,பாடசாலைகள்,அச்சுக் கூடங்கள்,கோயில்கள்,பல தரப்பட்ட தமிழ்ச் சங்கங்கள்,நடத்திய தமிழ் மகாநாடுகள் என்பன உலகம் பூராவும் தமிழ் பரந்தொலிக்க அத்திவாரமிட்டன.

லண்டனில் இலங்கைத் தமிழர்கள்:
1956ம் ஆண்டுக்குப் பின்,இலங்கையில் ‘சிங்களம் மட்டும்’சட்டம் வந்து தமிழ் மொழிக்குச் சம அந்தஸ்துக் கொடுக்காததால் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலேயத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் பிரித்தானியா கொடுத்த வேலை வாய்ப்புக்களால் லண்டனுக்கு வந்தார்கள்.
ஆங்கிலப் பட்டதாரிகளாகவிருந்தாலும் 1960 ஆண்டின் பிற்பகுதியில் லண்டன் வந்த இளம் தமிழர்களிடையே,இலங்கையில் வளர்ந்து கொண்டிருந்த முற்போக்கு இலக்கியத் தூண்டுதலால் தமிழுணர்வு பரந்திருந்தது.

லண்டன் சோ.ஆ.எஸ். பல்கலைக்கழகம்:1916ம் ஆண்டிலிருந்து ஆங்கில பேராசிரியர்களால் தமிழ்மொழி இங்கு கற்பிக்கப் பட்டது.டாக்டர் பொன் கோதண்டராஜா.டாக்டர் மார் போன்றோர் பல அரியசேவைகளைத் தமிழுக்குச் செய்திருக்கிறார்கள்.

லண்டன் தமிழ்ச் சங்கம்::சென்ற நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலிருந்து இந்தியத் தமிழர்களால் தமிழ் மொழிபற்றிய செயற்பாடுகள் லண்டனில் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்கள் இருக்கின்றன. அக்கால கட்டத்தில் தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு கட்டிடம் இல்லாததால் தமிழ் சார்ந்த கூட்டங்கள் லண்டனில் உள்ள ‘இந்தியா கிளப்பில் அவ்வப்போது நடந்ததாகத் தெரிகிறது. ஆனால் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் 1960ம் ஆண்டு தொடக்கம் நடந்து வருகின்றன.
கிழக்கு லண்டனிலிருக்கும் இச்சங்கத்தின் நிர்வாகத்தில் முதன்மையாயிருந்த,கோவை மாநகரைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியம்,அவரின் செயலாளராகவிருந்த இலங்கைத் தமிழரான .திரு.ந.சச்சிதானந்தன் போன்றவர்களால்,1972-76 கால கட்டத்தில்,ஒட்டுமொத்த லண்டன்வாழ் தமிழர்களுக்காகவும்,சாதி,சமய,இன வேறுபாடற்ற முறையில் தீபாவளி,பொங்கல்,நத்தார் விழாக்கள் கொண்டாடப்;பட்டன.1974ம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து லண்டன் வந்திருந்த திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களும் சங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார்.அத்துடன்,லண்டன் தமிழ் சங்க நிகழ்வுக்கு இந்திய முதல் கவர்னராகவிருந்த,ஸ்ரீ.சி.இராஜகோபாலாச்சாரியர் அவர்களும் வருகை தந்திருக்கிறார்கள்.

1979ம் ஆண்டு பிரண்ட் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டு இன்று வரை,தமிழ் மொழி,கலை சார்ந்த விடயங்கள் வளர உதவிக்கொண்டிருக்கிறது.
‘சைவ சித்தாந்தக்கழகம்:தமிழ்த் தேவார திருவாசக பாரம்பரியத்தை வளர்க்க 1980ல் திரு.கி.ஞானசூரியன் தலைமையில்,டாக்டர்.எஸ்.நவரத்தினம் உபதலைவருடன்.மற்றும்,டாக்டர்.கே. ஆறுமுகம்,டாக்டர்.சி.சொர்ணலிங்கம்,திரு.கனகசுந்தரம் போன்றோரால் ஆரம்பிக்கப் பட்டது.

பி;.பி.சி உலக சேவையில் தமிழும் அக்காலகட்டத்தில் லண்டனில் உதயமாகியிருந்தது.அதனால் உலகம் பரந்த தமிழர்கள் தமிழ் சேவையூடாக லண்டனில் வாழும் தமிழர்கள் பற்றிய செய்திகளைக் கேட்டார்கள்.அக்கால கட்டத்தில் பி.பி.சி தமிழ் சேவையில் திரு.சங்கரமூர்த்தி,திரு.சோ.சிவபாதசுந்தரம்,திரு.சுந்தரலிங்கம்,திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் போன்றோர் ஈடுபட்டிருந்தார்கள்.
லண்டன் சைவ இந்து சங்கம்: திரு.சோ.சபாபதிப்பிள்ளையவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.
‘லண்டன் முரசு’-தமிழ்ப் பத்திரிகையான லண்டன் முரசு 1970ம் ஆண்டு,இலங்கையைச் சேர்ந்த திரு.ச.சதானந்தன்,இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் கே.எஸ்.சுப்பிரமணியம் போன்றோரால் தொடங்கப் பட்டது. மேற்குலகத் தமிழ்ப்; பத்திரிகை வரலாற்றில் லண்டனில் முதலில் ஆரம்பிக்கப் பட்ட தமிழ்ப் பத்திரிகையான லண்டன் முரசு.இப் பத்திரிகை ஆரம்பத்தில் தாயகச் செய்திகளுடன் தொடங்கியது. 1974ம் ஆண்டில் இலங்கையில் நடந்த ‘அகில உலகத் தமிழ் மகாநாடு’ பற்றிய செய்திகளை கலாநிதி கோபன் மகாதேவா இலங்கையிலிருந்து எழுதினார்.அப்போது லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களின்,தமிழ்,இலக்கிய,தத்துவக் கட்டுரைகளும் தொடர்ந்து வந்தன. காலக்கிரமத்தில் பல இலக்கியப் படைப்புக்களையும் வெளியிட்டது. இந்தப் பத்திரிகையில் தமிழ்ப் பெண் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய’ உலகமெல்லாம் வியாபாரிகள்'(1978) என்பதுதான் மேற்குலகில் முதலில் வந்த தமிழ்த் தொடர்கதையாகும்.

1972ம் ‘கல்வியில் தரப்படுத்துதலை’இலங்கை அரசு முன்னெடுத்ததால் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத தமிழ் இளைஞர்கள் பெருவாரியாக லண்டனுக்கு வந்தார்கள்.இவர்கள் இலங்கையில் வாழ்ந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில்,சமுதாயம்,மொழி மேன்மை சார்ந்த பல இலக்கியப் படைப்புக்கள் பெருவாரியாக வரத் தொடங்கின.1974ம் ஆண்டு காலத்தில் லண்டனுக்குப் படிக்க வந்த தமிழ் மாணவர்களின் குரல்கள்,’லண்டன் முரசு’ பத்திரிகையூடாகத் தமிழ் மக்களைச் சென்றடைந்தது.

1976ம் ஆண்டின் நடுப்பகுதில் எங்களைப் போன்ற சில இலக்கிய ஆர்வலர்களால் சிறிய அளவில் இலக்கியக் கருத்தரங்குகள்,ஈரோஸ் இராஜநாயகம் அவர்களின் வீட்டில் நடைபெற்றன.
1976ல் திரு. அன்டன் பாலசிங்கம் அவர்களால்,’தமிழ்த் தேசியமும் சுயநிர்ணய உரிமையும்’ என்ற தமிழ்ப்புத்தகம் வெளியிடப்பட்டது.
1977ம் ஆண்டு லண்டனில் வாழ்ந்த தமிழ் மாணவர்களால்,’,ஈழமாணவர் பொது மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. இதில், திரு.யோக சங்கரி,திரு எஸ்.தம்பையா,ஈரோஸ்(ஈழப் புரட்சி அமைப்பு)திரு.இ..இரத்தினசபாபதி போன்றவர்கள் ஈடுபட்டார்கள்.இவர்களின்,’அனுபந்தம்’ என்ற படைப்பு, டாக்டர் ஆர்.நித்தியானந்தனின் மதிப்புரையுடனும்,காலம் சென்ற திரு.அ.அமிர்தலிங்கம் எம்.பி. (அக்காலத்தில் இலங்கையரசில் எதிர்க் கட்சித் தலைவராகவிருந்தவர்),திரு ட்ரெவர் பிலிப் (பிரித்தானிய மாணவ சங்கத் தலைவர்) போன்றோரின் குறிப்புக்களுடனும் பதிவிடப் பட்டது.
மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மாணவர்களின்’ஈழவிடுதலை’தமிழ்க் கையெழுத்துப்பத்திரிகை திரு.என்எஸ்.கிருஷ்ணனால் வெளியிடப்பட்;டது.
1978ல் டெலோ இயக்கத்தினரால்,’புரட்சி’என்ற தமிழ்ப் பத்திரிகை வெளியிடப்பட்டது.
1977ம் ஆண்டு தந்த இனக்கலவரத்தின் பின்னர்;, மேலும் பல் துறைத் தமிழர்கள் லண்டன் வந்தார்கள். அத்துடன் மேற்படிப்புக்காக அடிக்கடி லண்டன் வரும் கலாநிதி சிவசேகரம் போன்ற பேராசிரியர்களும்,80ம் ஆண்டு முற்பகுதியில் லண்டனில் பல இலக்கியக் கலந்துரையாடல்களுக்கு வித்திட்டார்கள்.
தி.மு.க.பிரமுகர் செஞ்சி இராமச்சந்திரன் சொற்பொழிவுக்காக டெலோ திரு.சிறிகங்காதரனால் லண்டனுக்கு 1982ல் அழைக்கப்பட்டார்.

தமிழ்ப் பாடசாலைகள்: 1979ம் ஆண்டில் லண்டனில் முதலாவது தமிழ்ப் பாடசாலை மேற்கு லண்டனிற் தொடங்கப் பட்டது.இதை திரு..ஜே.ரி.தாமோதரம்,டாக்டர் ஆர்.நித்தியானந்தன் போன்றவர்கள் முன்னின்று நிறுவினார்கள்.கிழக்கு லண்டனில் சிங்கப்பூர்-இந்தியத் தமிழர்களால் தொடங்கப் பட்ட,தமிழர் முன்னேற்றச் சங்கத்தின் நீட்சியான அமைப்பாகத் திருவள்ளுவர் பாடசாலை இக்கால கட்டத்தில் தொடங்கப் பட்டது. இன்று லண்டனில் ஏறத்தாள முப்பது தமிழ்ப் பாடசாலைகளில் 6000 மேலான சிறார்கள் தமிழ் கற்கிறார்கள்.

தமிழ்த்தகவல் நடுவம்:1979ம் ஆண்டு லண்டனில் தமிழர் தகவல் நடுவம் தி.கே.கந்தசாமி, திரு.வை.வரதகுமார் போன்றோரால் ஆரம்பிக்கப் பட்டது.இது அகில உலக மக்களுக்கும் செய்தி பரவும் நிறுவனம் மட்டுமன்றி,பல கருத்தரங்கங்களை முன்னின்று நடத்தும் நிறுவனமாக இன்றும்; செயற் பட்டுக் கொண்டிருக்கிறது.

சைவ சமயக் கோயில்கள்: 1980ம் ஆண்டு வரை,லண்டனில் இலங்கைத் தமிழர்களுக்கென எந்தக் கோயிலும் இருக்கவில்லை.விம்பிள்டன் என்ற இடத்தில்,லண்டன் முரசு பத்திரிகையின் ஆசிரியரின் தந்தை திரு. சோ.சபாபதிப்பிள்ளை அவர்களால் ‘;லிட்டில் ஹால்’என்ற இடத்தில் 1970ம் ஆண்டின் பிற்பகுதியில் கடவுள் சிலை வைத்து வணக்கங்கள் ஆரம்பிக்கப் பட்டன. காலக்கிரமத்தில்,லண்டன் ஹைகேட் என்ற இடத்தில் திரு.சோ.சபாபதிப் பிள்ளையவர்களால் தொடங்கப் பட்ட திருமுருகனின் கோயிலில்,தமிழ்த் தேவார திருவாசக பாரம்பரியங்கள் தொடர்ந்தன. பிறப்பு தொடக்கம் இறப்புவரையும் தமிழரின் சடங்குகள் தமிழில் நடத்தும் செயல்கள் ஆரம்பிக்கப் பட்டன.இன்று லண்டனில் முப்பதுக்கும் மேலான அளவில் கோயில்கள் இருக்கின்றன. தமிழில் பூசை நடக்கும் கோயில்கள் ஒன்றிரண்டு மட்டுமே. ஆரம்பத்தில் லண்டன் வந்த தமிழர்களான திரு.சோ. சபாபதிப்பிள்ளை போன்றவர்களால் சைவத்தையும் தமிழ் சித்தாந்தையும் வளர்க்க எடுத்த முயற்சிகள் அளப்பரியன.

மனித உரிமைக் குழுக்கள். 80ம் ஆண்டுகள் தொடக்கம் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இலங்கையரசு முடக்கிவிட்ட அரச பயங்கரச் செயல்களைக் கண்டித்து. லண்டன் வாழ் தமிழர்கள் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பினார்கள் இவர்களில் திரு.எஸ்.மகரசிங்கம்(தமிழ் அக்சன் குறுப்) முக்கியமானவர்;. 1982ம் ஆண்டு,எழுத்தாளர் இராஜேஸ்வரியின் பாலசுப்பிரமணியத்தின்; தலைமையில்’தமிழ்ப் பெண்கள் அமைப்பு தொடங்கப் பட்டது. அவர்களால் ‘தமிழ்மாது’என்ற பத்திரிகையும் அச்சிடப்பட்டது.

இலங்கையில் தொடர்ந்து கொண்டிருந்த இன ஒடுக்கலால் 1983ம் ஆண்டு தொடக்கம்,தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் லண்டன் வந்தார்கள். இக்கால கட்டத்தில் 10.000 லண்டனில் வாழ்ந்ததாகக் கணிக்கப் பட்டது. இன்று கிட்டத்தட்ட 300.000 இலங்கைத் தமிழர்களால்,லண்டனில் தமிழ் வளர்ச்சியின் பரிமாணம் பன்முகத் தன்மையெடுத்து வளர்கிறது.இன்று திரு.இராஜகோபால் அவர்களால்;,’புதினம்’ போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

1 Response to பிரித்தானியாவில் தமிழ் மொழி வளர்ச்சியின் ஆரம்ப சரித்திரம்’

  1. yarlpavanan says:

    சிறப்பான பதிவு
    வரவேற்கிறேன்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s