‘பெண்களின் மேம்பாடு மட்டுமல்லாது,ஒட்டுமொத்த ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடிய அகில உலகப் பெண்களின் வரலாறு’
அகில உலக மாதர் தினம். பங்குனி 8.2019
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
1.
‘பெட்டர் த பலன்ஸ் ,பெட்டர் த வோர்ல்ட்-‘சமத்துவம் வளர்ந்தால் சமத்துவ உலகமும் உயரும்’
இந்த உலகில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களின் உழைப்பும் ஈடுபாடும் பலதுறைகளிலும் முன்னேறிக்கொண்டு வருகிறது. அந்த வெற்றிக்கு அத்திவாரமிடப் பல போராட்டங்கள் கடந்த காலங்களில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டன. அந்த வெற்றிகளின்; பிரதிபலிப்புத்தான் இம்மாத ஆரம்பத்தில் நடக்கவிருக்கும்; அகில உலக மாதர்தின விழாக்களாகும் .
தங்களுக்காகவும் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவும்,பத்தொன்பதாம்,இருபதாம் நூற்றாணடுகளில்;,பெண்கள் தொடங்கிய போராட்டங்கள் மானுட வரலாற்றின் பிரமாண்டமான மாற்றங்களைத் தந்தன.
உலக நாடுகளில் மிகப் பெரிய நாடுகளான இரஷ்யா,iசானாவில் நடந்த அரசியற் புரட்சிகள் மட்டுமல்லாது, தொழிற் துறைப் புரட்;சிகள், விஞ்ஞான மாற்றங்கள் என்பன கடந்த நூற்றாண்டில் அதிவிரைவாக நடந்து கொண்டிருந்தபோது,சமத்துவத்திற்கான மனித மேம்பாட்டுக்கான விழிப்புணர்வுகளும் முளையிட ஆரம்பித்தன.
பல்லாயிரம் வருடங்களாக,கலாச்சார, சமய, குடும்பக் கட்டுமானங்களால் ஆண்களின் அதிகாரத்தில் ‘தனித்துவமான உணர்வுகளும், அறிவுமுள்ள பெண்கள்’ என்ற சுயமையின் அடையாளத்தை இழந்து,ஆண்களின் தேவைகளுக்காகப் பிறந்த ஒரு பிறவியாக நடத்தப்பட்ட பெண்களுக்கு, பல தரப்பட்ட அரசியல்,பொருளாதாரம், தொழில் வளர்ச்சிகள் போன்ற மிக விரைவான நவீன உலக மாற்றங்கள்,பெண்களின் சாதாரண நிலையை,வேறொரு முற்று முழுதான பரிமாணத்திற்குள் சிந்திக்கப் பண்ணிய பல போராட்டங்கள் கடந்த இரு நூற்றாணடுகளிற்தான் தொடங்கியது.
அதன் நீட்சியாகப் பெண்கள் தங்களால் முடிந்தவரைக்கும்,தாங்களே -பெண்கள் மட்டுமே ஒன்று கூடிப் பல விடயங்கள் பற்றிப் பேசவும்,அரசியல்,பொருளாதார சமத்துவத்திற்காகப் போராடியும் பல வெற்றிகளையடைந்தார்கள். பெண்களின் போராட்டத்தால் அடைந்த வெற்றி உலகிலுள்ள அத்தனை ஒடுக்கப் பட்ட மக்களின் வெற்றியுமாகும்.
ஆனாலும் ஆண்களின் தரத்தோடு படிப்பும் அனுபவும் இருந்தாலும் இன்றுவரை பெண்கள் வேலை செய்யுமிடத்தில்,;ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கு ஊதியம் கிடையாது. அது போலவே, மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளில் பெண்களின் விகிதம் சமமாக இருப்பதில்லை. இப்படியே ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்குப் பாரபட்சம் இருப்பதால்,
இவ்வருட அகில உலக மாதர்; தினத்தின் முக்கிய கோஷமாக,’;பெட்டர் த பலன்ஸ் பெட்டர் த வோர்ல்ட்;’ அதாவது, ‘சமத்துவ வளர்ந்தால் உலகமும்; உயரும்’;; என்பது உரக்க ஒலிக்கப் போகிறது.
மேற்கு நாடுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டங்கள்:
ஒட்டு மொத்த மனித குலத்தின் நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் ஆண்பெண் என்ற வித்தியாசம் பாராத ஒன்றிணைந்த பணிகள் இன்றியமையாதன. ஆனால் மனித இனம் தோன்றி ஆண்களின் ஆதிக்கம் பலப்பட்ட கால கட்டத்தலிருந்து,ஆண்களின் அதிகாரத்தின் கோட்பாடுகளுக்குள் வரையறை செய்யப் பட்ட, அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் பெண்கள் ஒடுக்கப் படுகிறார்கள்.இந்த வரைமுறைக்கு, வர்க்க பேதம்,சமயக் கருத்துக்கள், பொருளாதார வலிமை,இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் சாதி அமைப்பு என்பன துணையாகின்றன.
இவற்றை எதிர்த்துக் கிட்டத்தட்டக் கடந்த இருநாற்றி ஐம்பது வருடங்களாக உலகின் பல பகுதிகளிலும் பல முற்போக்குவாதப் பெண்களும் ஆண்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.இந்தியாவிற் பரவலாகவிருக்கும் வர்ணாஸ்மர அடிப்படைக் கொடுமையான சாதி,மத அடிப்படையில் பெண்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்துப் பலர் பத்தொன்பதாம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். அந்தப் போராட்டங்களால் ஆண்களுக்குச் சமமான உரிமைகள் இந்தியப் பெண்களுக்குக் கிடைக்காவிட்டாலும் சமுதாய மாற்றத்தின் ஏணிப்படிகளில் அவர்கள் மெதுவாக உயர இடம் கொடுத்தது.
ஆனாலும் பங்குனி மாதத்தில் நடைபெறும் அகில உலக மாதர் தின நிகழ்வுகள் மேற்கு நாட்டுப் பெண்கள் மட்டும்தான் உலகிலுள்ள ஒட்டுமொத்தமான கொடுமைகளுக்கும் குரல் கொடுத்தார்கள் என்ற பிரமையைப் பலருக்குக் கொடுக்கிறது.
அதற்குக் காரணம், பெண்ணிய சிந்தனைகளின் போராட்டங்களைப் பெண்களே பெரும்பாலும் மேற்கு நாடுகளில் முன்னெடுத்தார்கள். பிரான்ஸ் நாட்டின்; அரசியல் மாற்றத்திற்கு பிரான்ஸிய புரட்சிக் காலத்தில்(1789) பெண்களின் பங்குடன்; தொடர்ந்துவந்த மாற்றத்தால் ‘பெண்ணியச்’ சிந்தனைகள் உதயமாகின.அதைத் தொடர்ந்து மேற்கத்திய பெண்ணிய சிந்தனைகள் பன்முகப் படுத்தப் பட்டன என்ற வாதிடுவோருமுண்டு.
அமெரிக்காவில் முதலாளித்துவத்தை முன்படுத்தித் தொடங்கிய தொழில் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அத்துடன்,அமெரிக்க உள்நாட்டுப் போரில்(1861-1865) பெண்களின் ஈடுபாடு என்பன உழைக்கும் பெண்கள் மத்தியில் புதிய’சுயவிடுதலைச் சிந்தனைகளை உருவாக்கின.
1902ம் ஆண்டு திருமதி மேரி ஹரிஸ் ஜோன்ஸ்(1837-1930) என்பவர் தொழிலாளர்களை ஒன்றிணைத்ததில்; முக்கியமானவராகும். 1910ம் ஆண்டில் சிக்காகோ என்ற நகரில்; பெண்களின் தொழிலாளர் சங்கம் உண்டாகியது. தொழிலாளர்களின் சங்கத்தையுண்டாக்கிப் பெரிய மாற்றங்களைச் செய்ததால் அக்காலத்தில் இவர் அமெரிக்காவின் மிகவும்’அபாயமான பெண்’ என்று ஆதிக்க சக்திகளால்; வர்ணிக்கப்பட்டார்.இவர் தொடக்கிவைத்த போராட்டத்தால் பெண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்க வழிகள் பிறந்தன.
இங்கிலாந்தில் அடிமைகளின் விடுதலையை முன்வைத்துப் பெண்களால் எடுக்கப் பட்ட சில செயற்பாடுகள்தான் 1780-1860ம் ஆண்டுகளில் பிரித்தானிய பெண்ணியவாத சிந்தனைக்கு வித்திட்டது என்கிறார்,; ‘கிலாரா மிட்ஜெலி (1991.’ஜென்ட்டர் அன்ட் ஹிஸ்டோரி ‘பக்1). ஆனால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெண்களுக்கு வாக்குரிமையில்லாததால் அவர்களால் எந்த விதமான பெரிய மாற்றத்தையும் செய்ய முடியவில்லை. ஆனால் மார்கரெட் மிடில்டன் சீமாட்டி போன்றவர்கள் அடிமைகளின் விடயத்தில் முன்னணியிற் செயற்பட வில்லியம் வில்பாவொர்ஸ் என்பரை மிகவும் ஊக்கப் படுத்தினார் என்று சொல்லப் படுகிறது.
ஆனாலும் பெண்கள்,பிரித்தானியாவில் மட்டுமல்ல பல மேற்கத்திய காலனித்துவவாதிகளால் கட்டமைக்கப் பட்ட அடிமைமுறையை ஒழிக்கத் தங்களாலான போராட்டங்களைச் செய்தார்கள் என்ற தகவல்களுமுள்ளன. 1792ம் ஆண்டு ஹன்னா மோர்ஸ் என்ற பெண்மணி எழுதிய ‘ஆபிரிக்கன் அடிமை’ என்ற கவிதை போன்றவை, அடிமைகளின் விடுதலை என்ற விடயத்தைக் கூர்மைப்படுத்தின.
இதையொட்டி,பிரித்தானிய அரச பரம்பரைப் பெண்ணான டச்சஸ் ஒவ்; டெவன்ஷையார் ஜோர்ஜினா
என்பவரும், பிறிஸ்டல் என்ற இடத்தைச் சேர்ந்த பால்க்காரியான அன்னா ஜேர்சிலி போன்ற பெண்ணும் அடிமைகளுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றிக் கவிதைகளும் கதைகளும் எழுதினார்கள்.
இதனால் சமுதாயத்தின் பல மட்டத்திலுமுள்ள பெண்களுக்கு அடிமை வியாபாரம் பற்றிய விழிப்புணர்வு வந்தது. அடிமைகளின் உழைப்பில் விற்கப் பட்ட சீனியை வாங்க மறுத்தார்கள்.
பேர்மிங்காம் என்ற நகர்ப் பெண்கள் 80 விகிதமான வீடுகளுக்குச் சென்று அடிமை வியாபாரத்தை ஒழிக்கப் பிரசாரம் செய்தார்கள். அன்னா நைட் போன்ற பெண்கள் பிரான்ஸ் நாட்டுக்கும் சென்று பிரசாரம் செய்தார்கள்.
1823ல் அடிமைகளை,வாங்குவது,விற்பது, வைத்திருப்பதற்கு எதிரான அமைப்பு இங்கிலாந்தில் தொடங்கப் பட்டது.1834ம் ஆண்டு அடிமைகள் வைத்திருப்பது குற்றம் என்ற சட்டம் பிரித்தானியாவில் அமுலுக்கு வந்தது.
1890-1890ம் கால கட்டத்தில் இங்கிலாந்தில்,பெண்களுக்கான வாக்குரிமைப் போராட்டம் காரெட் பவுசெட் என்ற பெண்மணியின் தலைமையில் ஆரம்பித்தது.இந்தப் போராட்டத்தின் வெற்றியாக 1918ம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட (மத்திய வர்க்க) பெண்களுக்கு வாக்குpரிமை கிடைத்தது. ஆனால் அவர்களின் தொடர்ந் போராட்டத்தால் (இதில் ஆண்களும் சேர்ந்தார்கள்) ஒட்டு மொத்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் வர்க்கரீதியற்ற முறையிலான வாக்குரிமை 1928ல் கிடைத்தது.
பிரித்தானியப் பெண்களின் குடும்பக் கட்டுப்பாடு விடயத்தை முன்னெடுத்தவர் சீமாட்டி ஹென்றி சமர்செட்(1851-1921) என்பவர் ஆகும்.ஆனால், 1960 ஆண்டுகளிற்தான் கர்ப்;பத்தடை மாத்திரைகள் பற்றிய சிந்தனை பரவலாக்கப்பட்டடு.
அமெரிக்கப் பெண்களைப் பொறுத்தவரையில், அமெரிக்க சுதந்திரப் (1775 -1783) போராட்டத்தில்,பெண்களுக்கெதிராக இருந்த இறுக்கமான கட்டுப்பாடுகளால் அவர்களின் பங்கு பெரிதாகவிருக்கவில்லை.
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களின் நிலையையும், சம்பளத்தையும் முன்னெடுத்த முதலாவது போராட்டம் அமெரிக்க நியுயோர்க் நகரில் 1908ம் தொடங்கியது.இது மாசி மாதம் 28ம் திகதி நடந்தது. இது ஒரு ஞாயிற்றுகிழமையாகும். ஞாயிற்றுக் கிழமையான விடுமுறை நாளில் பெண்கள் ஒன்று கூடுதலைத் தவிர்த்து,அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூட,1910ம் ஆண்டில், பெண்கள் தினம்,பங்குனி மாதம் 8ம் திகதியில் ஒவ்வாரு வருடமும் கொண்டாடப் படவேண்டும் என்ற முடிவெடுக்கப் பட்டது.
. அமெரிக்காவில் நிகழ்ந்த பெண்களின் போராட்டத்தின் தொடராக,இவ்வருட அகில உலக மாதர் தின நிகழ்வுகள் உலகெங்கும் பல இடங்களில் தொடர்கின்றன.
முதலாவது உலகப் போராட்டத்தை (1914-1919)எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்தபோது அதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டார்கள். அமைதிக்கான இந்தப் போராட்டம் இரஷ்யப் பெண்களால்’அகில உலகப் பெணகள்’தினமாக மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் நிகழ்ந்தது.
2
இந்தியப் பெண்களின் சமத்துவம் சார்ந்த போராட்டங்கள்:
23.2.19 அன்று அமெரிக்காவில் நடந்த ஒஸ்கார் விருது விழாவில்;,’பீரியட்-என்ட் ஒவ் சென்டன்ஸ்’ என்ற டாக்குயுமெண்டரிக்கான பரிசை றேய்கா ஷெபராச்சி,மெலனி பேர்ற்ரொன் என்ற இருவர் பெற்றிருக்கிறார்கள்.இதற்கு முன்னோடியாகச் செயற்பட்டவர் தமிழகம் கோவை மாநகரைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பராகும்;;. இவர்,பெண்களின் முக்கிய தேவைகளில் ஒன்றான மாதவிடாய் காலத்திற்கு வேண்டிய சனிட்டரி பாட்களை மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்வதற்கான கண்டுபிடிப்பால் எத்தனையோ கோடி இந்தியப் எழைப் பெண்கள் நன்மை பெறப் போகிறார்கள்.இந்திய அரசு ‘பத்ம சிறி’ என்ற உயர் பட்டத்தையும் இவருக்குக் கொடுக்கப் போகிறது.பெண்களின் வாழ்க்கைத் தரம்,சமுக மேம்பாடு என்பவற்றிற்கு ஆண்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை மேற்குறிப்பிட்ட மாதியான சரித்திரம் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
தென்னாபிரிக்காவிற்குக் கூலிகளாக இந்தியாவிலிருந்த கிட்டத்தட்ட 152000 தமிழ் மக்கள் 1860-1911ம் ஆண்டுவரை கொண்டு செல்லப் பட்டார்கள். அவர்களில்,தில்லையடிக் கிராமத்தைச் சேர்ந்த.ஆர்.முனிசாமி-ஜானகி தம்பதிகளின் மகள் தில்லையடி வள்ளியம்மை என்ற பதினைந்து வயதுப் பெண்தான்; காந்தி அடிகள்; சுதந்திரப்போராட்டத்துக்குள் நுழையக் காரணமானவர் என்று பல குறிப்புக்கள் சொல்கின்றன. இந்தத் தகவலைக் காந்தியடிகள்; லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் 1914ம் ஆண்டு கூறியிருக்கிறார்.; இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்துக் காந்தியின் போதனைகளால்ப் பல பெண்களும் தென்னாபிரிக்காவில் போராடினர், அதில் தில்லையடி வள்ளியம்மையும் ஒருத்தர் அதனால் நோய்வயப்பட்டு பதினைந்த வயது வள்ளியம்மை இறந்தார்.வள்ளியம்மையின் இடிந்த கல்லறையை நெல்சன் மண்டேலா 1997ல் திருத்திக் கொடுத்தாராம்.
இந்திய சுதந்திரப் போரிலும்,பல பெண்கள் காந்தியின் போதனையை ஏற்றுக் குதித்தார்கள். இலங்கைப் பெண்களின் வாழ்வின் மேம்பாட்டிற்கும் இந்தியக் கலாச்சாரம், பண்பாடு.சாதி சமய முறைகள் அடித்தளமாகவிருக்கின்றன.எனவே இந்தியாவில் நடக்கும் மாற்றங்கள் இலங்கையைப் பாதித்துக் கொண்டிருக்கின்றன என்பதால்,மேற்கு நாடுகளில் பெண்களாக முன்வைத்துப் பெண்களின் சமத்துவத்திற்குப் போராட முதஷலெ இந்தியப் பெண்களின் சமத்துவப் போராட்டங்கள் முற்போக்கு ஆண்களாலும் பெண்களாலும் முன்னெடுக்கப்பட்டன என்பது பற்றிச் சிறிதாகவென்றாலும் இங்கு குறிப்பிடுவது இன்றியமையாததாகும்.
1972ம் ஆண்டில்.ஐ.நாடுகள் சபையின் 27வது மகாசபைக் கூட்டத்தில்,1975ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 8ம் திகதி பெண்கள் தினம்;, கொண்டாடப் படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அது 1975ம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் தொடர்கிறது. பல்லாயிரக் கணக்கான,அரசாங்கம்,அதிகார சார்பற்ற மகளீர் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள்; பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.
இந்த மகாநாடுகள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளிலேயே நடந்து கொண்டிருந்தன. 1975ம் ஆண்டு; நடந்த பேர்லின் பெண்கள் மகாநாடு,சமத்துவம்,சமுதாய முன்னேற்றம்,சமாதானம்’ஆகிய மூன்று முக்கிய இலட்சியங்களும் முத்திரை பதித்தன.
1
பாரிஸ்
பிரான்ஸ்
1945
2
புடாபெஸ்ட்,
ஹங்கேரி
1949
3
போபன்ஹேஹன்
டென்மார்க்
1953
4
வியன்னா
ஆஸ்ட்ரியா
1958
5
மொஸ்கோ
இரஷ்யா
1963
6
ஹெல்சிங்கி
பின்லாந்து
1969
7
பேர்லின்
மேற்கு ஜேர்மனி)
1975
(‘மகளிர் இயக்கம்’பக்.17.எம். கல்யாணசுந்தரம்-செயலாளர்.தமிழ் மாநிலக் குழு,இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி-1976)
1975ம் ஆண்டு,பேர்லினில் நடந்த மகாநாட்டுக்கு,140 நாடுகளிலிருந்து,2000 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள்அதில் 700 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மனித குலத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாகவிருக்கும், மதம்,சாதி,அரசியல் என்ற பல தடைகள் தாண்டிய பொது நலம் சார்ந்த செயற்பாடுகளுக்கு இம்மகாநாடு அத்திவாரமிட்டது.
இந்தியாவிலிருந்து இம்மகாநாட்டுக்கு,145 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள்.அவர்களில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பிரதிநிதிகளோடு,இந்திய காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரான திருமதி. புரபி முகர்ஜி தலைமையில் பங்கு கொண்டுள்ளனர்.
அந்தக் கால கட்டத்திருந்து இன்று வரை பெண்கள், கல்வி,தொழில் வாய்ப்பு போன்ற விடயங்களில் முன்னேறிக் கொண்டு வந்தாலும்,இந்தியா போன்ற நாடுகளில்,’பெண்களுக்கான’ சமத்துவம் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன.
”சமுதாய வளர்ச்சியும் பெண்களும்’ என்ற தலைப்பில் ‘மகளிர் இயக்கம்’ என்ற சிறு புத்தகத்தில்(1976) ‘பாசா’ என்பரால் எழுதப் பட்ட கட்டுரையில் பக்19-):
‘-வில்லியம் கேரே.எல்பின்ஸ்டன் போன்ற ஆங்கிலேய அதிகாரிகள்.உடன் கட்டை ஏறுதலின் தீமையை விளக்கி அன்றிருந்த பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தாலும் ஆட்சியிருந்தவர்கள் கவனம் செலுத்தாதலால் ராஜாராம் மோன்ராஜ் என்பவர், உடன் கட்டை ஏறுவதைத் தடுப்பது பற்றி பெரும் கிளர்ச்சி செய்தார்.இதன் எதிரொலியாக 1829ம் ஆண்டிலிருந்து உடன் கட்டை ஏற்றுவது தடை செய்யப் பட்டது. இவர் பலதார மணத்தையும் தடுக்க முயன்றார்.
1828ம் ஆண்டு பிரம்ம சமாசத்தையுண்டாக்கினார்.
-இரவிந்த்ரநாத் தாகூரின் தந்தையாராகிய தேவேந்த்ரநாத் தாகூர்,மறுமணம் செய்த கைம்பெண்களுக்கு எதிராக எழுந்த தடைகளை நீக்கி வெற்றி கண்டார்.வங்காளத்தில் பெண்களுக்காகப் பல பள்ளிகளை நிறுவினார்.
-இந்து சாஸ்திரங்களில் நன்கு பயிற்சி பெற்ற வித்யாசாகர்,கைம்பெண் மறுமணத்திற்கான சட்டம் இயற்ற கிளர்ச்சியில் ஈடுபட்ட வெற்றி கண்டார்.பெண்களுக்குப் பல பள்ளிகளை நிறுவினார்.கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்வதற்கான சட்டமியற்றக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார்.1856ம் ஆண்டு இந்து கைம்பெண்கள் மறுமண சட்டம் பிறப்பிக்கப் பட்டது.
-1875ல் ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த தயாநந்த்த சரஸ்வதி வடமொழி வல்லுனர், பெண்களுக்காகப் பல பள்ளிகளை நிறுவினார்.பலதார மணம்,கைம்பெண்களுக்குச் சொத்துரிமை மறுக்கப் படுதல்,பெண்களுக்குக் கட்டாய திருமணம் போன்ற கொடுமைகளை எதிர்த்துப் போரிட்டார்.
இந்து சமயம் மிக உயர்ந்த சமயம்,இந்திய மக்கள் வேதகாலத்துக்குத் திரும்ப வேண்டும் என்பன இவர் கருத்துக்கள்.எனவே, இந்து சமயக் கட்டுக் கோப்புக்குள்,பல சீர்திருத்தங்கள் சாத்தியப் படும் என்று கருதி,அச்சீர்திருத்தங்கள் மறுக்கப் பட்டால் இந்து சமயம் அழியும் என்று வற்புறுத்தினார்.
-1795-1804 ஆண்டுகளில் குழந்தைகளைக் கொல்வது தடை செய்யப் பட்டது.
-கைம்பெண்களுக்கு மறுமணம் தடுக்கப் படக் கூடாது என்ற கிளர்ச்சி வைதிகர்களின் எதிர்ப்பையும் தாண்டிய கிளர்ச்சி ஈஸ்வர சந்திர வித்யசாகர் தலைமையில் தொடங்கியதால் 1856ம் ஆண்டு இந்து கைம்பெண்கள் மறுமணச் சட்டம் பிறப்பிக்கப் பட்டது.
-சாலிக்ராம் பகதுர் என்பவர் பெண்டிர் பர்தாவை ஒழிக்கவும்,யோகப் பயிற்சியிலும் பிரார்த்தனையிலும் ஈடுபடச் செய்தார்
– கேசவ சந்த்ர சென்:பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்.சமுதாயச் சீர் திருத்தத்தில் அரிய பங்காற்றியவர்.பெண்களின் கல்வி,கைம்பெண்களின் மறுவாழ்வு,மறுமணம் இவற்றுக்காகப் பாடுபட்டார்.
மேற்கத்திய பெண்ணிய சிந்தனைகள் வித்திட முதல் இந்தியாவில்,பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என்பது உண்மை.
இந்த வரிசையில்: ரவீந்தரநாத தாகூர், விவேகானந்தர், பாரதியார், ஈ.வே.ராமசாமி (பெரியார்) என்போரின் பணி இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்கு அத்திவாரமாக அமைந்தவையாகும் (பக்20);.
– ஈ.வே.ரா:(பக் 21) தமிழகத்தில் பெண்ணுரிமை,பால்ய மணத்தின் கொடுமை,ஆண்பெண் சமத்துவம்,கைம்பெண் மறுமணம்,போன்ற கொள்கைகளுக்காக ஏறத்தாள ஐம்பது ஆண்டுகள் பெருந்தொண்டாற்றிய பெருமை பெரியார் ஈவெ.ராவுக்கு உரியது.மூடப் பழக்க வழக்கங்கள்,புராணப் பொய் புனைச் சுருட்டுக்கள், மத நம்பிக்கைகளை எதிர்த்துச் சாடியதில் வேறு எவரும் பெரியாருக்கு இணையில்லை.தமிழகத்தில்,கைம்பெண் திருமணங்கள்,சீர்திருத்தத் திருமணங்கள்,இவற்றைப் பெருமளவில் செய்து காட்டியவர் பெரியார்.’பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் அவர் நூல் பல புதுமைக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. சோவியத் நாட்டில் பெண்கள் அடைந்துள்ள ஏற்றத்தைப் பற்றிப் பெருமையாகப் பல கட்டுரைகளில் எழுதியுள்ளார்.
இந்தியாவில் மாதர் இயக்க முன்னோடிகளான பெண்கள்.(பக் 21)
-;,பண்டித ராமாபாய் முக்கியமானவர்(1858-1922).மராட்டிய சித்பவன் பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.தந்தை அனந்த சாஸ்திரி அவர்களால் ராமாபாய்க்கும் அவரின் தாய்க்கும் சமஸ்கிருதம் படிப்பிக்கப்பட்டது. இதனால் அவர்களின் உறவினர்களால் வெறுத்து ஒதுக்கப் பட்டனர். வறுமையில் தாய் தந்தையிறந்ததும் தன்னந் தனியளாய் ராமாபாய் வங்காளம் சென்றார்.சமஸ்கீரதப் பயிற்சி இந்து சமய சட்டங்களைப் பயிலத் துணை நின்றது. பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பேசியும் எழுதியும் பல அரிய கடமைகள் செய்தார். 1880ல்; காயஸ் வகுப்பைச் சேர்ந்த விபின் பிஹார்தாஸ் என்பவரைக் கலப்புத் திருமணம் செய்தார்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு ராஸாராம் மோகன் மாதிரிப்; பல தொண்டுகளைச் செய்தார் இவரைப் போலவே. ராமாபாய் ரானடே (1862-1924),என்பவர் அத்துடன் இந்தியப் பெண்களின் கல்விக்குத் தொண்டாற்றிய,தோரு தத், ஆனந்திபாம் ஜோஷி,பிரான்சினா சோரப்ஜி,ஆனி ஜெகநாதன்,ருக்குமாபாய் போன்றோர் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பெண்ணிய இயக்கத்தில் முன்னணியில் தன் இருத்தலைக் காட்டியவர் மேடம் ருஸ்தகாமா என்பராகும்; (பக்23). 1907ம் ஆண்டு ஸ்ருட்கார்ட்டில்(ஜெர்மனி) நடைபெற்ற லெனின் கலந்து கொண்ட சோஷலிஷ்ட் சர்வதேச மகாநாட்டில் இந்தியாவின் ‘மூவர்ணக் கொடியைத் தூக்கி வந்தேமாதரக்’ கோஷத்தை உலகமறியச் செய்தார்.
இதேபோல் விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி,அன்னி பெசண்ட்,போன்றோரும் இந்தியப் பெண்களின் முன்னேற்றுக்கு மட்டுமல்ல இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் உறுதுணையாகவிருந்தவர்களாகும்.அன்னி பெசண்ட் அம்மையரால் ஈர்க்கப் பட்டவர்களில் கிருஷ்ணமேனனும் ஒருத்தர் (மேற்குறிப்பிட்ட இரு பெண்களும் பிரித்தானிய ஆதிக்கத்துக்கு எதிரான ஜரிஷ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள்).
இந்தியாவில்,’ஹோம் ரூல்’ (தேசிய ஆட்சி) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்ததுடன், இந்தியப் பெண்களுக்கு வாக்குரிமைப் போராட்டத்தை இந்தியாவிற்; தொடங்கியவர் அன்னி பெசண்ட் அம்மையாராகும்.1914ல் சென்னையில்’ எழுக இந்தியா’ என்ற பெயரில் கோஷத்தை முன்வைத்தார் இந்திய மாதர் இயக்கம் ஆரம்பிக்கக் காரணியாகவிருந்தார்.
1926ம் ஆண்டு அனைத்திந்திய மாதர் மகாநாடு நடந்தது.
இந்தியப் பெண்களின் கல்வி மேன்மைக்கும், சமத்தவத்திற்கும்,சாதி, சமய,கலாச்சார அடிப்படையிலான கொடுமைகளுக்கும் எதிராகப் பல பெண்கள் போராடியும், எழுதியும், பிரசாரம் செய்தும் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.
அவர்களில்:இந்தியா சுதந்திரம் பெறமுதல் பெண்ணின மேம்பாட்டுக்காக உழைத்தவர்கள்.-சரளாதேவி,சௌதுராணி,சரோஜினி நாயிடு,ருஸ்தும்ஜி பரிதான்ஜி,ஹீராபாய் டாடா,டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி,துர்க்;காபாய் தேஷ்முக்,ராஜகுமாரி அமுத கௌரி,விஜயலஷ்மி பண்டிட்,கமலாதேவி சட்டோ பாத்யாயா,பீதம் சரியா அமீது.மங்களாம்பாள் சதாசிவ ஐயர்,கார்ஸீலீயா சோரப்ஜி, என்போர் குறிப்படத்தக்க பணிகள் செய்ததாகத் தகவல்கள் சொல்கின்றன.
இதையும் விட 1886ல் பிரம சமாஜத்தின் ஆதரவின் கீழ்,கவர்ண குமாரி என்பவர் ஒரு மாதர் சங்கத்தை அமைத்தார்.பல கட்டுரைகளை எழுதிப் பெண்களை விழித்தெழச் செய்தார்.
-சாரதா சாதன்,முக்தி சாதன்,மஹாபத்ர ரூப்ராம்,அனந்தாஸ்ரமம்,ஸொராஸ்டிரிய மண்டல்,குஜராத்தி ஸ்திரி மண்டல்,சேவாதாசன்,மஹினசபை,வாஹினி சமாஜ போன்ற அமைப்புக்கள் இந்தியாவில் ஆங்காங்கே தோன்றிப் பெண்களுக்கான பல மேம்பாட்டு வேலைகளைச் செய்தன.
1917ல் இந்திய மாதர் சங்கம் தோன்றி,சென்னை,ஸ்ரீநகர்,கள்ளிக்கோட்டை,விஜவாடா,பம்பாய்,முதலான இடங்களில் கிளைகளையமைத்த,அன்னி பெசண்ட அம்மையார் சிறந்த தலைவியாக விளங்கினார்.
1953ல் சுவிடன் நாட்டு ஸ்டொக்ஹோம் நகரில் நடந்த சர்வதேச மாதர் மஹாநாட்டில் இந்திய மாதர் சம்மேளனத்திற்கு பெண்களின் கல்வி.சமத்தவம்,முன்னேற்றம், சம்பளம் போன்ற விடயங்களில் பல மேம்பட்ட வழிகள் காட்டப்பட்டன. (மேற்கண்ட தகவல்கள் ‘மகளிர் இயக்கம்’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.இவ்வெளியீடு 44, கீழவெண்மணி தியாகிகளான,குழந்தைகள்,பெண்கள்,ஆண்களுக்கு(தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு)அர்ப்பணம் செய்யப் படுகிறது.21.4.1976).
3
இலங்கையினல் பெண்களின் தற்போதைய நிலைகள்;.
தென்னாசிய நாடுகளில் பல கல்வி நிலையங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து கிறிஸ்தவ மிஷனரிகளால் தொடங்கப் பட்டன.இலங்கையின் வடபகுதியில் பெண்களுக்கான பல கல்லூரிகள் ஆரம்பிக்கப் பட்டன. காலக்கிரமத்தில் இலங்கையின் பல நகரங்களிலும் பெண்களுக்கான கல்வி நிறுவனங்கள் தொடங்கப் பட்டன. திரு. பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் சைவ சமயப் பெண்களுக்காக இராமநாதன் கல்லூரி போன்றவற்றை ஆரம்பித்தார். 1927ம் ஆண்டுகள் தொடக்கம் சுவாமி விபுலானந்தர் கிழக்கின் கல்வியை மேம்படுத்தப் பல கல்வியமைப்புக்களை நிர்மாணத்தார் அதில் பெண்களுக்காக அமைக்கப் பட்ட காரைதீவு விபுலானந்தர் பெண்கள் வித்தியாலயமும் ஒன்று. 1981ம் ஆண்டு, ஐ.நா. அறிக்கையின்படி தென்னாசியாவில் உயர் கல்வி கற்ற பெண்களின் நிலவரத்தில் இலங்கை முன்னிலமை வகித்தது. ஆனால் பொருளாதார நிலை காரணமாக வட,கிழக்கு ஏழைப்பெண்களும் மலையகப் பெண்களும் மேற்படிப்புப் படிப்பது என்பது சிரமமான விடயமாகும்.
தோட்டத் தொழிலாளர்கள்: இலங்கையின் பொருளாதார அடிமட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. அதிலும் இலங்கைத் தோட்டத்துப் பெண் தொழிலாளர்களின் நிலை இன்னும் மிகவும் அடிமட்டத்திலேயே தங்கி இருக்கிறது. தேயிலையின் உற்பத்தி 2013ம் ஆண்டு மிகவும் உயர்ந்த தளத்திற்குச் சென்றாலும் அதைப் பறித்துக் கொடுக்கும் நிலையில் எந்த முன்னேற்றமும் கிடையாது.
பி.பி.சி.4.10.2018,செய்தியின்படி,’இலங்கையின் 5 விகிதமான மக்கள் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.இவர்களின் பாரம்பரியம் 1887லிருந்து தொடர்கிறது. இவர்கள் ஒருநாளைக்கு 18 கிலோகிராம் தேயிலைக் கொழுந்து பறித்தால் £.2.70 சம்பளமாகப் பெறுகிறார்கள்.அந்த நிறையளவு கொழுந்துக்களைப் பறிக்க முடியாவிட்டால் £.1.30 மட்டுமே ஊதியமாகக் கிடைக்கிறது.’
இவர்கள், 1920ம் ஆண்டில் பிரித்தானியரால் (1796-1948) கட்டப் பட்ட அடிப்படை வசதிகளற்ற ஒரு அறை வீடுகளில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கைத் தோட்டத் தொழிலாளிகளாகத் துயர்படும் தமிழ் உழைப்பாளிகள் 1820; ஆண்டுகள் தொடக்கம் தென்னிந்தியக் கிராமங்களிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஏழைத் தமிழ் மக்கள். இவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தமிழ்த் தலைமைகளோ இலங்கை அரசோ பெரிய உதவிகளைச் செய்தது கிடையாது என்பதை விட, அவர்களின் தொடரரும் துன்ப வாழ்க்கைக்கே மேற்குறிப்பட் தலைமைத்துவங்களின் ‘வர்க்க’ உணர்வே பெரும் தடையாக இருக்கிறது என்பதைச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தாற் தெரியும்.
தாங்கள் அடிமைப் படுத்தும் நாடுகளிலுள்ள மக்களைப் பல வழிகளிலும் பிரித்தாளும்விதத்தில்,1797ல் பிரித்தானிய ஆட்சி சிங்கள ‘கோவிகம’சாதியினரையும், தமிழர்களில் ‘வெள்ளாரையும்’ தங்கள் வேலைகளுக்கு அமர்த்திக் கொண்டார்கள்.அவர்கள் தங்களின் வர்க்க நலம் கருதிய நிர்வாகத்தையே இன்றும் தொடர்கிறார்கள்.
இந்தியத் தோட்டத் தொழிலாளார்களின் போராட்டத்தை ஒடுக்கச்,சிங்கள சக்திகளுடன் சேர்ந்து,ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற தமிழ்த்தலைவர்கள்,1948ம் ஆண்டு இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் பலரின் பிரஜாவுரிமை பறிபோக உதவினார்கள்.
1964ம் ஆண்டு, இலங்கைப் பிரதமர்,திருமதி பண்டாரநாயக்காவுக்கும் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்குமிடையிலான இந்தியத் தோட்டத் தொழிலாளர் பற்றிய ஒப்பந்தம் 9.75.000 இந்தியத் தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியது. இதில் 5.25.000 தோட்டத் தொழிலாளிகள் இந்தியா சென்றார்கள்.
மிகுதியானவர்களில் 3.00.000 தமிழ் மக்களை இந்தியாவும் இலங்கையும் இந்தியாவும் பகிர்ந்து கொள்ளச் சம்மதித்தன.ஆனால் 1981ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பிட்டின்படி இலங்கையரசு 280.000 தோட்டத் தொழிலாளர்களைத் திருப்பியனுப்பிட்டது. 1.60.000 மக்களுக்கு மட்டும் இலங்கைப் பிரஜாவுரிமை கொடுக்கப் பட்டது.
தமிழ்த் தேசியத்தை முன்வைத்துத் தேர்தலில் வென்று தங்களின் சொந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் தமிழ்த்; தலைமைகள் ஒருகால கட்டத்திலும் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களைத் தமிழர்களாகக் கணிக்கவுமில்லை.அவர்களின் வாழ்வாதாரத்துக்கோ சமத்துவத்திற்கோ போராடவுமில்லை என்பது வரலாற்றைத் தேடினாற் தெரிய வரும்.
இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களில் 50 விகிதமானவர்கள் பெண்கள்.அடிமட்ட ஊதியம், தரம் குறைந்த வீடுகள், கல்வி,சுகாதார உதவிகள் பெற உதவியின்மை,என்பன இவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்களில் ஒரு சில இவர்களுக்காக,பெரிதாகக் குரல் கொடுக்க இலங்கையின் பெரிய தமிழத் தலைமைகளோ,சமயத் தலைவர்களோ ஆளுமையான பெண் தலைவிகளோ கிடையாது. ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய்களைச் சம்பளமாகப் (கிட்டத்தட்ட ஒரு முழுநாளுக்கும் £5) பெறுவதற்குக் கூடப் பெரும் அரசியற் தலைமைகள் ஒத்துக் கொள்ளாதது இலங்கையில் இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த பாரபட்சத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்தக் கொடுமைகளை எதிர்த்து உலக அரங்கில் குரல் கொடுத்து நீதி தேட யாருமில்லாத நிலையால் இவர்கள் துயர் தொடர்கிறது.
வட கிழக்கிலுள்ள பெண்தலைமைக் குடும்பங்கள்:
இலங்கையின் சனத் தாகையில் 23.5 விகிதமான(1.2 கோடி) குடும்பங்கள் பெண்கள் தலைமையில் வாழ்கின்றன.இவர்களின் வாழ்வாதாரங்களைக் கவனிக்க அரசால் எடுக்கப் படும் முயற்சிகள் எத்தனைதூரம் பிரயோசனமானது என்று தெரியாது.
2015ம் ஆண்டின் ஐ.நா,தகவல்களின்படி இலங்கையின் வடகிழக்கில். 58.121 பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள் இருக்கின்றன என்ற சொல்லப் படுகிறது.
அதில் 4 விகிதமானவர்கள் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் ( சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாதவர்கள், சமய முறைப்படி திருமணம் செய்தவர்கள்,இருவரும் சேர்ந்து ஓன்றாக இருந்தவர்கள் என்று இவர்களைக் கணிக்கலாம் என்று நினைக்கிறேன்). வடக்கிலும்; கிழக்கிலும் 90.000 விதவைகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நிலை மிகவும் வறிய நிலையிலேயே இருக்கினறது. தமிழ்த் தலைமைகளாலோ,மத்திய அரசு சார்ந்தோ இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்கள் எதுவும் அமைக்கப் பட்டதாக எனக்குத் தெரியாது.
இரு வருடங்களுக்கு முன் லண்டன வந்திருந்த தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதியிடம், தமிழ்ப் பகுதியிலுள்ள விதவைகள், பெண்களின் தலைமையிலுள்ள குடும்பங்களுக்கு உதவி செய்யும் திட்டங்களைப் பற்றிக் கேட்டேன். அவர் ‘அப்படி ஒரு திட்டமும் கிடையாது ‘ என்று எனக்குப் பதில் சொன்னார்.
பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகச் செயற்படுவதாக இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து அன்னிய அமைப்புக்களிடமிருந்து பொருளாதார உதவி பெறும் பெண்கள் அமைப்புக்கள் இப்படியான பெண்களுக்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்கள், என்னென்ன உதவி செய்கிறார்கள் என்பதை ஆய்வது கடினமாகவிருக்கிறது.
இலங்கையின், சாதி, மத,இன,வர்க்க,பிராந்திய,பிரிவனைகளைத் தாண்டி பெண்களுக்கான முன்னேற்ற நடவடிக்கைககைள எடுப்பது கல்லில் நார் உரிப்பது போன்ற விடயமாகும்.
பெண்களின் பிரதிநிதித்துவம் அரசு மட்டுமல்லாத,ஊடக,சமய, சமுதாயம் சார்ந்த அமைப்புக்களின் பல மட்டங்களிலும் இருந்தாற்தான் பெண்களுக்கு ஒரு நல்ல வழிகிடைக்க உதவும். இன்றைய மேற்கத்திய கோஷமான,’பெட்டர் த பலன்ஸ்,பெட்டர் த வோர்ல்ட்’ என்பதை ஆயும்போது,இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஆண்களின் பிடியிலிருக்கும் அரச, ஊடக,சமய.சமுதாய அமைப்புகளுக்குள்ளால் பெரிதாக எதுவும் செய்ய முடியுமா என்ற கேள்வி எழும்புகிறது.
இலங்கையில் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தில் பெண்களின் பங்கு ஆகக்குறைந்து 25 விகிதம்
இருக்கவேண்டும் என்பதை நியதியாகக் கொண்டாலும் இதுவரைக்கும் பாராளுமன்றத்தில் 6 விகித பெண்களே பாராளுமன்றவாதிகளாகவிருக்கிறார்கள். 1930ம் ஆண்டிலிருந்து இன்றுவரை பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத் தொகையில் பெரிய மாற்றமில்லை.உள்ளூராட்சியில் 2 விகித பெண்களே நிர்வாகத்திலிருக்கிறார்கள்.
பெரும்பாலான பெண்; தலைமைக் குடும்பங்கள் விதவைகளாலானவை.இவர்கள் சமுதாயத்தில் ‘அன்னியப்’ படுத்தி நடத்தப் படுகிறார்கள் இளம் விதவைகள் பாலியற் சுரண்டல்கள், தொல்லைகளால் வதை படுகிறார்கள். போதிய வருமானற்ற நிலையால் குழந்தைகளின் படிப்பு. ஆரோக்கியம் என்பன பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றன.
தங்களின் மேம்பாடு நோக்கிய பெண்களின் ஈடுபாட்டை, சமயவாதிகள் மட்டுமல்லாது, சமுகத்தின் பிரபலங்களும் மறைமுகமாவது தடுக்க முயல்கிறார்கள் என்பதற்குப் பல தடயங்களுள்ளன. அத்துடன் மக்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் வலிமையுள்ள இலங்கைப் பத்திரிகைகளிலும் பத்திரிகையில் பெண்களின் முன்னேற்றத்திற்கான விடயங்கள் பிரசுரிக்கப் படவேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கும் ஆற்றலுள்ளவர்களின் பங்களிப்பு அதிகமிருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகள்:
கொழும்பு: பத்திரிகைகள்:
– வீரகேசரி,தினகரன்,தினத்தந்தி,சுடரொளி.தினக்குரல்,
யாழ்ப்பாணம்:
உதயன்,தினக்குரல்,வலம்புரி.காலக்கதிர்,தினப் புயல்,தீபம்,எதிரொலி,புதுவிதி
மட்டக்களப்பு:
அரங்கம். அத்துடன் வவுனியாவிலிருந்து ஒரு பிராந்திய பத்திரிகையும் வருவதாகத் தெரிகிறது.
இவற்றில் எத்தனை விகிதமான படைப்புக்கள் பெண்கள் முன்னேற்றம், வழிகாட்டல்,விழிப்புணர்வு பற்றி வெளிவருகின்றன என்று தெரியாது.
வீட்டுப் பணிவேலைகளுக்கு வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் நிலை:
இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து பெரிய விதத்தில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் நடைபெறாததால் வெளிநாடுகளில் வேலை செய்து பிழைக்கப் பலர் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களில் படித்தவர்கள், மேற்படிப்புப் படிக்கப் போகிறவர்கள், என்பதைத் தாண்டிப்பல நாடுகளுக்கும் முக்கியமாக மத்தியதரை நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்குப் போகும் பெண்களின் தொகை கணிசமானது.
செல்வி பிலேஷா வீரரத்னா அவர்கள், வீட்டு வேலைகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களைப் பற்றி எழுதிய புத்தகத்தில் பல தகவல்களைத் தந்திருக்கிறார். 2013ம் ஆண்டு இலங்கையை விட்டுப் பல தரப்பட்ட வேலைகள் நிமித்தமாக வெளியேறிய 293.105 இலங்கையர்களில் 40 விகிதமானவர்கள் பெண்கள்.இவர்களில் வீட்டு வேலைக்காகச் சென்றவர்களில் 82 விகிதமானவர்கள் பெண்கள். அந்தப் பெண்களில் 98 விகிதமானவர்கள் மத்தியதரை நாடுகளுக்குப் பெரும்பாலும் செல்கிறார்கள். சவுதி அரேபியா, குவெய்ட, போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
2012ம் ஆண்டு வீட்டுப் பணிப் பெண்கள் மத்தியதரை நாடுகளிலில் வேலை செய்யும் இடங்களில் படும் பலதரப்பட்ட துன்பங்களை,10.220 முறைப்பாடுகள் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள்.
முப்பதாண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்,இன்று இலங்கையில் அமைதி நிலவுகிறது.ஆனால்,சுதந்திரம் பெற்ற நாட்களிலிருந்து உழைக்கும் மக்களுக்கு,அதிலும் இலங்கையின் அன்னிய செலவாணியைப் பெருமளவில் உழைத்துக் கொடுக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கான பெண்களின் முன்னேற்றம் பற்றி பெரிதாகச் சொல்வதற்கில்லை.
லண்டனில்,3.3.19 பெண்களுக்காகப் பெண்கள் (வுமன் போர் வுமன்) என்ற அமைப்பிலிருந்து,பிரிட்டா பெர்ணாண்டஸ் ஸ்மிட என்ற பெண்மணி பி.பி.சி.2 றேடியோ நிகழ்வில் பேசும்போது,’இன்று உலகில் வளரும் தொழி;ல் வளர்சிக்கு 66 விகிதமான பெண்கள் முக்கிய பங்களிக்கிறார்கள்,உலகத்திற்கத் தேவையான உணவுகளில் 50 விகிதமானவை பெண்களின் உழைப்பில்; உண்டாகிறது.ஆனால் சொத்து வைத்திருக்கும் பெண்கள் 1 விகிதம் மட்டுமே. அத்துடன் உலகிலுள்ள பெண்களில் மூவரில் ஒருபெண்; ஏதோ ஒரு வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.’ என்று சொன்னார்.
இந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் குரலல்ல. ஓடுக்கப் படும் பெண்களின் சமத்துவத்திற்காக உலகெங்கும் பரந்து ஓங்கி ஒலிக்கும் பல்லாயிரம் பெண்களின் குரல்களாகும்.
இன்று உலகெங்கும் ஒலிக்கும் ‘பலன்ஸ் போர் த பெட்டர்’ என்ற கோஷத்தின் ஒரு சிறு துளி மாற்றமாவது இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் அடிமட்டத்தில் வாழும் பெண்களுக்குக் கிடைக்க பெண்களின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டுக்கும் குரல் கொடுக்குபம் பலர் ஒத்துழைப்பது இன்றியமையாதது.