‘A story of a brief marriage-by Anuk Arudpragasam’.

 

‘ஒரு குறுகிய காலகட்டத்; திருமணம்’-ஒரு ஆங்கில நாவலுக்காக எழுதப்பட்ட ஒரு சிறு விமர்சனம்.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-22.9.18

இந்நாவலுக்குத் தங்கள் விமர்சனத்தை எழுதிய பல வெளிநாட்டு எழுத்தாளர்கள்,இலங்கையில் நடந்த போரின் கடைசிக் கட்டத்தில் தமிழர் பட்ட அவலத்தை நேரிற்காணாதவர்கள். ஆனால், போர்ப் பிரதேசத்திலிருந்து அரச படையினரின் பகுதிக்குப் பாதுகாப்புத் தேடி ,’இடம் பெயர்ந்தோடிவந்த’ தமிழ் மக்களின் துயரை நேரிற் கண்ட அனுபவம் எனக்கிருப்பதால்,இந்நாவலைப் படிக்கும்போது, ஆசிரியரின் கதைப் படைப்பும், தத்ரூபமாக அந்தப் போர்ச் சூழலை விபரித்து எழுதியதையும் படித்தபோது, துயரில் தவித்துக் கதறிக் கொண்டிருந்த இடம் பெயர்ந்த தமிழ் மக்களைக் கண்ட பழைய ஞாபகங்களால் எனது இதயம் துடித்தது.

ஒவ்வொரு நாளும் அடிக்கடி நடக்கும் தாக்குதல்களினால்,தன்னுடைய மனைவியையும், ஒரே ஒரு மகனையும் ஒரு நொடியில் இழந்து தவித்துத் துடித்த தகப்பன் சோமசுந்தரம்,அவரின் மகள், கங்காவை, அவளின் பாதுகாப்பை நினைத்து தினேஸ் என்ற இன்னுமொரு’அகதிக்குத்’திருமணம் செய்து வைக்கிறார்.தொடர்ந்து நடக்கும் போரால், மனிதக் கேடயங்களாக்கப் பட்ட ஒரு பிரமாண்டமான மனிதக் கூட்டத்தில்,’நான். எனது’ என்ற அடையாளத்தை எப்போதோ இழந்து நடைப்பிணமான ஒரு இளைஞனுக்குத் திடிரென்று ஒரு கல்யாண பந்தம் வருகிறது.ஒரு மனிதனின் ‘சுயமையை’,இளமையின் உணர்வுகளை வெளிப் படுத்த,ஒரு பெண்ணில் ஏற்பட்ட ‘ஈர்ப்பு’ (காதல்?) எவ்வளவு தூரம் அவனை மாற்றுகிறது என்பதை உருக்கமாகச் சொல்கிறது இந்த நாவல்.
இலங்கையைச் சேர்ந்தவர்களாகிய பெரும்பாலோர் இதைப் படிக்கும்போது,போர்க்கால அனுபவம் பற்றி இந்த நாவலிற் சொல்லப் பட்ட பெரும்பாலான விடயங்களையம் அனுபவித்தவர்கள். இத்தனை காலமும் போர்க்கால எழுத்துக்ககளாக வெளிவந்தவை பல பெரும்பாலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட கருத்துப் பார்வை சார்ந்ததாகவிருந்தன என்பதை நாம் மறக்கலாகாது.அவற்றில் பெரும்பாலானவை,போராட்டத்தைச் சார்ந்தோ அல்லது போராட்டத்தை விமர்சித்து, போராட்டத்தில் நடந்த கொடுமைகளை, அழிவுகளை, அதர்மங்களைச் சுட்டிக் காட்டி எழுதப் பட்டிருக்கின்றன..
இந்த நாவலில் அப்படி எதுவும் கிடையாது. யாரையும் விமர்சிக்கவில்லை. எந்தவிதமான கருத்தையும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பிரசாரம் செய்யவில்லை. வருடக் கணக்காகத் தொடரும் தமிழ் மக்களின் அவல வாழ்வுக்கான அரசியல் நிகழ்வுகளை அலசவில்லை.உலகில்,பல்லாயிரம் வருடங்களாகப் பல போர்கள் நடந்திருக்கின்றன. எதிரிகளால் மக்கள் சொல்லவொண்ணாத் துயர்களை அனுபவித்திருக்கிறார்கள். இடமாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்புக்கு வழிதேடும்போது பயங்கர அனுபவங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்..
அண்மை வரைக்கும் நடந்து கொண்டிருந்த சிரியப் போரில், அரசுக்கு எதிராகக் ஆயதம் எடுத்த பல குழுக்களிடம் அகப்பட்டுப் பல்லாயிரம் சிரிய மக்கள் பட்டபாட்டைப் பல வருடங்களாக டி.வியிலும் சமூக வலைத் தளங்களிலும்பார்த்துக் கலங்கித்; துடித்தவர்கள் நாங்கள்.
அதே நேரம், எங்களின் மக்கள், அவர்களைப் பாதுகாப்பவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்களிடமே,மனிதக் கேடயங்களாகிய’ அகப்பட்டு அழிந்ததைத் தடுக்கமுடியாமல் கையாலாகத் தனத்தால்; தடுமாறி அழுதவர்கள் எங்களிற் பலர்.
‘கல்யாணம்’ பேசி வந்த நிமிடத்திலிருந்து,தினேஸ் தனது,’தனித்துவ அடையாளத்தைத்’ தேடுவதற்குச் சட்டென்று அவனுக்குப் பல பழைய நினைவுகள் வருகின்றன.
கதைக்குள் பல கதைகள், கதைகளுக்கள் பல திருப்பங்கள் என்று இந்தக் கதை தொடர்ந்து செல்கிறது.
போராட்ட சூழ்நிலையில்,அவசரமாக வெளியேறி,நாளைக்கு,இன்னும் சில நாட்களில்;, அல்லது என்றோ ஒரு நாள் திரும்பிவருவோம் என்ற உணர்வோடு புறப்பட்டுப் போய்க்கொண்டு,எண்ணற்ற துயர்களை எதிர்நோக்கும் மக்களுடன் ஒருத்தனான தினேசின் வாழ்க்கை கங்கா என்ற இளம் பெண்ணுடன் ஒரு மதிய நேரத்தில் இணைக்கப்படுகிறது..
ஓக்டோபர் மாத கால கட்டத்தில் மன்னார்ப் பிரதேசமான அடம்பனிலிருந்து புறப்பட்ட தினேஸ் போரின் கடைசிக் கால கட்டத்தில் -தைமாதக் கடைசி அல்லது பெப்ரவரி கால கட்டத்தில் மலையாளபுரம் பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் கங்காவின் தகப்பனான சோமசுந்தரத்தைச் சந்திக்கிறான்.
சயன்ஸ் படித்து டாக்டராகவர ஆசைப்பட்ட ஒரு இளைஞன். சட்டென்று வந்த வாழக்கையின் திருப்பத்தால் உடுத்திருக்கும் ஒரு சாரத்தையும்,சோர்ட்டையும் தவிர எதையும் தனது உடமையாக வைத்திருக்காத ஒரு தமிழ் அகதியிடம், கங்காவின் தந்தை சோமசுந்தரம ஒப்படைக்கிறார். அவர் ஒருகாலத்தில் ஒரு கல்லூரியின் தலைமைத்துவத்தவப் பதவியை வகித்தவர், அவரின் ஒரே ஒருமகனையும் வாழ்க்கைத் துணையாகவிருந்த மனைவியையும் அரசின் செல்லடியில் சிதைந்த பிணங்களாக ஒரு சில நிமிடத்தில் இழந்தவர்.
அங்கு மரணங்கள், எப்போது,யாருக்கு வரும் என்று தெரியாது. ஷெல்லடிபடும்போது,மகளும் அவரும் ஒரேயடியாக இறந்துபோகலாம். அல்லது அவர் மட்டும் இறந்துபோகலாம்.அத்துடன்,இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்,எந்த நிமிடமும் இங்கு வந்து இளம் பெண்களையும் இளம் ஆண்களையும் போர்முனைக்கு இழுத்துச் செல்லும்போது கங்காவையும் அவர்கள் இழுத்துக் கொண்டுபோகலாம். அவருக்குத் தனது இறப்பின் பின தன் மகள் யாருமற்றவளாகிப் போவாளே என்ற தவிப்பு மட்டுமல்லாமல், கல்யாணமாகாதவளாகவிருந்தால் இயக்கத்தின் தொல்லையுமிருக்கும் என்பதால், மகள் கங்காவை எப்படியும் ‘காப்பாற்ற’ எண்ணி அங்குள்ளவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கும்,பிணங்களை மட்டுமல்லாமல்,சிதறுப் பட்ட மக்களின் கை கால்கள், பாதியுடல்கள், அடையாளம் தெரியாத தசைக்குவியல்களான அங்கங்களையும்; தேடி அவைகளை அடக்கும் செய்து கொண்டிருப்பனுமான, தினேஸ் என்ற அகதிதத் தமிழனிடம்; மகளைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்கிறார்.
தினேஸ்; ஒரு நல்லபிள்ளையாகத் தெரிவதாகவும், படித்தவன்போலிருப்பதாலும், வயதும் சரியாகவிருப்பதாலம், அவன் அவரின் மகளைத் திருமணம் செய்யச் சரி என்ற சொன்னால் ஷெல்லடியில் காயம் பட்ட ஐயரின் நிலை ‘சீரியசாகமுதல்’ ஐயர் மூலம் கல்யாணச் சடங்கைச் செய்யலாம் என்கிறார்.
தினேஸ் அதற்கு மறுத்தால், வயது வந்த ‘எந்த’ இளைஞரையென்றாலும் தனது மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கும் அவசரத்திலிருக்கிறார் என்று அவனுக்குத் தெரிகிறது.அவனுக்கு இந்தக் கல்யாணப் பேச்சை எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை..
தினேஸ்,மனிதரின் கட்டாய தேவையான ஒருபிடி உணவுக்காக மட்டும்,அவன் அகதிகள் தங்கியிருக்குமிடத்திலுள்ள வைத்திய கிளினிக் ஒன்றில் ஏதோ உதவிகள் செய்து கொண்டு அங்கு கிடைக்கும் உணவில் உயிர்வாழ்கிறான். அத்தனை பிரமாண்டமான கூட்டத்தில் அவனுக்கு யாரும் சொந்தமில்லை, நெருங்கிய எந்த உறவோ சினேகிதமோ எதுவுமில்லை. இன்று காண்பவர்கள், இந்த நிமிடத்தில் பேசிக் கொண்டிருப்பவர்கள் ஷெல்லடிக்குப் பலயாகிச் சிதறியழிவதை ஒவ்வொரு நாளும் காண்பவன். உணர்வுகள் மரத்த பல்லாயிரம் தமிழ் அகதிகளில்; அவனும் ஒருத்தன்.
உயிர் தப்ப, அரசபகுதிக்குப் போகநினைப்பதை ‘இயக்கம்’அறிந்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தவன். அப்படித் தப்பி ஓடி அரச படைகளிடம் தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு என்ன நடக்கும் என்ற தெரியாதவன்.
அந்தச்சூழ்நிலை தமிழ் மக்களை நடமாடும் வெறும் பிணங்களாக வைத்திருக்கிறது.வெளியுலகம் என்ற ஒன்று உலகத்துப் பெரும்பான்மை மக்களைக் கொண்ட அசாதாரண நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று யதார்த்ததை மறந்தவர்களாக வைத்திருக்கிறது.
அந்த நேரத்தில், இந்த இளைஞனுக்குக் கல்யாணம் பேசப்படுகிறது. ஒரு அன்பான தாய்,தந்தை,சகோதர,உற்றார் உறவினர் என் பாசங்களை மறந்துவிட்ட ஒருத்தனுக்கு,இன்னுமொரு உயிருடன் தன்னை நெருக்கத்தில் கொண்டு வரும் கல்யாணம் என்பதைக் கற்பனைகூட செய்ய முடியாது.
சோமசுந்தரத்திற்கு அவனால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. அவனால் அவர் சொன்னதை உள்வாங்க நேரம் தேவை. அவர் சொன்னவற்றின் பின்னால் அடங்கியிருக்கும் பிரமாண்டமான வாழ்க்கை மாறுதல்களை அவனால் அந்த நேரத்தில் ஒழுங்காக அல்லது செயற்கையாக ஆக்கப்பட்ட சூழ்நிலையின் ‘உண்மையான’ நிகழ்வாகக் கிரகிக்க முடியவில்லை.
தினேஸ் என்ற இளைஞனினின் குழப்பமான மனநிலை, கல்யாணம், பெண் ஒருத்தியுடனான உறவு என்ற பல பரிமாணங்களின் ஆழத்தை அறிய அவன் திண்hடடுகிறான். அவன் விஞ்ஞான பாடத்தில் ஒரு சில புள்ளிகள் குறைந்ததால்; டாக்டராக வரமுடியாமற்போன சோகத்தைத் தெரிந்து கொண்டவன்.’நீ மறுத்துவிட்டால் இங்கு இன்னுமொரு இளைஞன் எனக்கு மருமகனான வரலாம்’ என்று சொன்ன சோமசுந்தரத்தின் அவசரமான உளவியல்த் தேடலைச் சாடையாகப் புரிந்து கொண்டவன்.
ஒரு அர்த்தமற்ற பிரயாணமாக வாழ்க்கை ,பல பயங்கரங்களை ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்து ஊர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு’ சாதாரண’ வாழ்க்கையின் மறுமுகத்தை அவன் அவனுக்கு அருகில் படுத்திருக்கும் கங்காவின் அமைதியான உறக்கநிலயில் உணர்கிறான்.
ஆண் பெண் உறவின் ஆரம்ப நிகழ்வுகளின் மன நெகிழ்ச்சியை போர்ப் பயங்கரம் தவிர எந்தக் கோணத்தையும் தொடர்ந்து வைத்திருக்காத இளைஞனின் பார்வையில் கவிதையாக வடிந்திருக்கிறது இந்த நாவலின் சிலபகுதிகள்.இக்கதை, கதையா ஒரு காவியமா என்று பிரித்துப் பார்க்கமுடியாத விதத்தில் எழுத்துநடை அற்புதமாகப் படைக்கப் பட்டிருக்கிறது.
இத,இந்தக் காதாசிரியனின் முதலாவது நாவலா என்று வியக்கும்படி எழுத்துநடை. கதையமைப்பு,ஒரு நடுநிலமையான ஒரு துயாபார்வை,வாசகனைக் கவர்ந்து கொள்கிறது.
எனது மகளைத் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று அந்தத் தகப்பன் கேட்கும்போது, அவளை தினேஸ் கட்டாயம் ஏற்றுக் கொள்வான்; என்று அவர் நினைப்பதாகவும் வாசகனுக்குப் புரிகிறது.
பல மாதங்களாக அகதிகளாக அழத்துச்செல்லப் படும்; ஒரு மனிதக் கூட்டம், அவர்கள் அவர்களின் ‘பாதுகாப்புக்காக’அழைத்துச் செல்லப் படுவதை நம்பித் தங்கள் வீடுகள், சொத்துக்கள், அவர்களின் நாளாந்த வாழ்க்கைக்குக்கு இன்றியமையாத காய்கறித் தோட்டங்கள் அவர்கள் வளர்த்த அன்பான வீட்டுப் பிராணிகள், அவர்களின் வணக்கத்துக்குரிய கடவுளர்கள் படங்களில் பலவற்றையும் பிரிந்து புறப்படுகிறார்கள். அந்த அழைப்பின் கோரத்தை ஒரு துளியும்; கற்பனை கூடச் செய்து பார்க்காத அப்பாவிகளாகத் தங்களின் ‘அகதிப்’ பயணத்தைத் தொடரும்போது, இதுவரை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு ‘இறந்து’போன காலகட்டம் என்பதை அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிகளும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும், அவர்களால் அந்த நிலையை மாற்றக்கூடிய எந்த விதமான வலிமை,மனநிலை எதுவுமற்ற மனிதர்களாக அவர்களின் சூழ்நிலை ஆக்கப் பட்டிருக்கிறது.
அந்த நேரத்தில், தினேசுக்கு’ ஒரு கல்யாணம் கங்காவின் தந்தையால் பேசப்படுகிறது.
அவனின் அனுபவம் இதுவரையும் அவனால் ஆற அமர்ந்து சிந்தித்து அழக்கூட முடியாத வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இயக்கத்தில் சேர்ந்த தமயன், ,’இயக்கம்’ அவர்களை வெளியேறச் சொன்னபோது, திரும்பி வரும் நம்பிக்கையுடன், வீட்டிலுள்ள பல பொருட்களை வாடகைக்கு அமர்த்திய ட்ரக்டரில் திணித்துக்கொண்டு புறப்பட்டதிலிருந்து,பல இடங்களைக் கடந்து பல இழப்புகளைக் கண்டு தாயையும் இழந்த தனியனாக தினேஸ் தன்னை அந்த மனிதக் கூட்டத்தில் புதைத்துக் கொண்டபோது, அந்த அவல நிலையிலும் தங்களைச் ஷெல்லடியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் வயது வந்த குழந்தைகயை,’ இயக்கத்திடமிருந்து’ காப்பாற்றவும் ஒவ்வொரு தாய் தகப்பனும் படும் துயரைக் கண்டவன்.
இயக்கத்திலிருந்து காப்பாற்றத் தன் மகனை,ஒரு இரும்புத் தகரத்தில் மண்குழியில் புதைத்து வைத்த தாயின் துயர் கண்டவன்.மகன் இறந்ததால் புத்திபேதலித்த ஒரு தாயின் துயரைக் கண்டு பரிதாபப்பட்டவன். இப்போது, அவனின் ‘உயிரோடு இருத்தலைப்’ பல இடைஞ்சல்களுக்குள்ளும் தொடர்ந்து கொண்டிருப்பவனை, அந்தக் கொடிய போர்ச் சூழல்; கங்காவுடன் இணைத்துவிடுகிறது.
சாதாரணங்கள், அசாதாரணமான சூழ்நிலையில் அந்தத் தகப்பனின் எதிர்பார்ப்பு@ நீண்ட நாட்களாக எந்தவொரு ‘ தனித்துவ அடையாளமுமின்றி’ ஒரு கூட்டத்தின் சிறுதுளியாய்க் கலந்து கொண்டிருந்தவனுக்கு இப்போது,’கங்காவைப்’ பாதுகாக்க, அவளுக்குத்துணையாகவிருக்க,இருவரும் காதலிக்க,அல்லது ஷெல்லடியில் அங்கவீனமாகும்போது ஒருத்தரை ஒருத்தர் ஆதரித்து உதவிசெய்யக் கங்காவைக் கல்யாணம் செய்ய உத்தேசிக்கிறான்.
மாற்றிக் கொள்ள இன்னுமொரு சாரம்கூட இல்லா அவனுக்குக் கங்கா மனைவியாகிறாள்.
ஐயர் காயம் பட்டிருப்பதால் அவர்களின் கல்யாண சடங்கை நடத்த முடியவில்லை.
சோமசுந்தரம் அவசரமாகத் தனது மகளுக்குத் தினேசைக் கைபிடித்துக்கொடுத்து விட்டு விலகுககிறார். கல்யாணத்தின்பின் எப்படி கங்காவுடன் பழகுவது என்றுகூடத் தெரியாத தினேஸ் ஒருசில மணித்தியாலங்களில் பல மாற்றங்களை எதிர்நோக்குகிறான்..
தன்னிடம் மனைவியாக வந்தவளை ஒரு கணவனாகத் திருப்திப்படுத்த முடியாத தன் நிலையைக்கண்டு அவனை அணைத்து ஆறதல் கொடுத்த கங்கா அவன் மனைவியாக மட்டுமல்லாமல்,அவனது வாழ்க்கையில் அவனைப் பரிபூணமாக புரிந்து கொண்ட ஒரு துணையாக அவனுடன் இணைகிறாள். .
சட்டென்று வந்தபோர்ப் பயங்கரசூழலில் மனிதவாழ்வின் அர்த்தத்தையே மறந்துபோன அல்லது விளங்கிக் கொள்ளமுடியாத வேதனையில் வாழ்ந்துகொண்டிருந்தவனுக்கு, அன்பு,காதல்,இரு உடல்களும் உள்ளங்களும்; ஒருமித்த இணைவின் மகிமை என்பன கங்காவின் அன்பில் வெளிப்படுகிறது..
போர்ச் ‘சூழ்நிலையில் நிம்மதியான நித்திரையே என்னவென்று தெரியாமல் நகர்ந்து கொண்டிருந்தவனின் வாழ்வில் ஒருசில மணித்தியாலங்களில் நடந்த மாற்றங்கள் அவனை நித்திரையில் ஆழ்த்திய ஒரு சொற்ப நேரத்தின் இடைவெளி இனித்திரும்ப முடியாத ஒரு முடிவைக் காட்டுகிறது..
அவன் நித்திரையால் விழித்தபோது காணவில்லை. அவனை ஒரு முழுமையான மனிதனாகக் கண்டு தன்னை அவனிடம் அர்ப்பணித்த கங்காவை, பூமியதிரக் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருக்கும் போர்விமானங்களின் இரைவில் திடுக்கிட்டு எழும்பியபோது காணவில்லை.ஆண்மையின் முக்கிய கோணத்தின் பலவீனத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டவளைத் தேடுகிறான்.
போர்விமானங்களின் இரைவில் செவிப்புலன்கள் செயலிழக்க, பயங்கரக்குண்டுகளின் கந்தக நெடி மூக்கைத் துளைக்க,கரும் புகை கண்களை மறைக்க அவன் தனது உயிரின் உயிரைத் தேடுகிறான். அவனின் இருத்தலுக்குக் கருகொடுத்தவளைத் தேடுகிறான்.

குண்டடி பட்ட கோரமான இடத்தில் அவளைத் தேடுதலும், பிணமாக அவளைக் கண்டதும் அவன் துடித்து வெடிப்பதும்; இதுவரை அவன் காணாத உணர்வுகளின் பிரவகமாகச் சிதறுகிறது. ‘நீங்கள் இருவரும் எப்போதும் சேர்ந்திருங்கள்.இருவரும் ஒருத்தரை ஒருத்தர் எக்காரணத்தாலும் பிரிந்து விடாதீர்கள்’ என்ற அறிவுரையுடன் தன்னிடம் உப்படைத்த கங்காவைக் கடைசிவரைக்கும் அவன் தன்னால் முடியுமட்டும் கவனித்துக் கொள்கிறான். அவனின் உயிர் பிரிந்துகொண்டிருக்கும்போது அவளுடன் தன்னையிணைத்துக்கொண்டு வாழ்வை முடிக்க அவன் போராடி வெல்கிறான். உயிரற்ற இரு இளம் உயிர்கள் அருகருகே இணைகின்றன என்று இந்தக் கதை முடிகிறது.
,,ந்நாவலைப் பாராட்டிப் பல ஆங்கிலேய ஆளுமைகள் எழுதியிருக்கிறார்கள்.
-‘ஓரு அபரிமதமான நாவல’; – சண்டே டைம்ஸ் சொல்லியிருக்கிறது.
-‘கெட்டித்தனமாக எழுதப்பட்ட மிகத் திறமையான’- நியூ யோர்க் டைம்ஸ் பக் றிவியு
-‘ஒரு வித்தியாசமானது மட்டுமல்லாது ஒரு அற்புதப் படைப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது’- பைனான்சியல் டைம்ஸ்.இப்படிப் பற்பல பாராட்டுகளைப் பெற்றிருக்கும் இந்நாவல். டிலான் தோமஸ் நிறுவனத்தின் சிறந்த புத்தகப் பரிசுக்கும் தெரிவு செய்யப்பட்டதொன்றாக இருக்கிறது.

மக்களின் வாழ்க்கை,அவர்களையும் மீறிய சக்திகளால் நடத்தப் பட்டிருக்கும் தருணத்தில் அரசியல் சார்பற்ற பார்வையுடன்,ஒரு சாதாரண இளைஞனின் உணர்வைத் துல்லியமாக,அழகாக,கவிதை நயத்துடன்; படைக்கப் பட்ட அற்புதமான நாவலிது. அருட்பிரகாசம் என்ற எழுத்தாளனின் முதல் நாவலிது என்பது நம்ப முடியாமலிருக்கிறது.ஒரு கைதேர்ந்த சிற்பக்கலைஞனின் கருத்தைக்கவரும் சிலையாக இப்படைப்பு எனக்குப் பட்டது. இளம் தமிழ் எழுத்தாளர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நாவல்களில் இதுவும் ஒன்று என்பது எனது அபிப்பிராயம்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s