‘கார்த்திகேயன்’- எனது கதாநாயன். (எனது எழுத்துக்களை மக்களின் நலத்திற்காக அர்ப்பணிக்கச் செய்த திரு.மு.கார்த்திகேசன் ‘மாஸ்டர்’ நினைவாக)

Mu.Karthikesu Master‘கார்த்திகேயன்’- எனது கதாநாயன்.

(எனது எழுத்துக்களை மக்களின் நலத்திற்காக அர்ப்பணிக்கச் செய்த திரு.மு.கார்த்திகேசன் ‘மாஸ்டர்’ நினைவாக)

மேற்குலகில் எழுதப்பட்டுப்,பிரசுரிக்கப்பட்ட முதலாவது தமிழ் நாவல் ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்ற எனது முதலாவது நாவல்,1978ம் ஆண்டு ‘லண்டன் முரசு’ பத்திரிகையில் வந்தது. 1991ம் ஆண்டு புத்தக வடிவில் தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகளுள் ஒருத்தரான டாக்டர் சிவசேகரம் அவர்கள் முன் வெளியீடு செய்யப்பட்டது.

இந்த நாவல்,பொது மக்களை மேம்படுத்தவேண்டிய மகத்தான அரசியற் பணியை, அரசியல்வாதிகள் என்னவென்று தங்கள் சுயலாபத்திற்கான ‘வியாபாரமாக்கி’ விட்டார்கள் என்பதைச் சொல்லும் நாவல்.அந்தக் கதையின் கதாநாயகன்,’கார்த்திகேயன்’. ஏன் நான் ‘கார்த்திகேயன்’ என்ற பெயரைத் தோர்ந்தெடுத்தேன் என்பது பெரிய கதை. அதன் காரணம்,’கார்த்திகேயன்’ என்ற பெயர் ‘தமிழ்க்கடவுள்’முருகளின் பெயர் என்பதல்ல. கார்த்திகேயன் கடவுள் தனது, ‘ஆறுமுகங்களுடன்’ அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றினான் என்ற நம்பிக்கையுமல்ல.

மனித நேயத்தை முன்னெடுத்த ஒரு கம்யுனிஸ்ட மாஸ்டர்:
;:
கார்த்திகேசன் மாஸ்டர்( 25.6.19-10.9.1977),நான் முன் பின் பார்த்திராத ஒரு
சமூகநலவாதி. ‘கார்த்திகேசன் மாஸ்டர்’என்ற அந்த மாபெரும் மனிதரின் மனித மேம்;பாட்டுக்காகச் செய்த பணிகளை,திரு பாலசுப்பிரமணியம் மூலம்,1970ம் ஆண்டுகளிற் தெரிந்து கொண்டேன்.சாதி வெறி,வர்க்க அகங்காரம் பரவியிருந்து வெள்ளாளரல்லாதோர் படுமோசமாக அடக்கப் பட்டிருந்த அந்த காலகட்டத்தில்,யாழ்ப்பாணத்தின் சமுகநிலை மாற்றத்திற்கு உழைத்த ‘கார்திகேசு’ மாஸ்டரின் பணிகளைக் கேள்விப் பட்டேன்.
சாதித் திமிர் கொண்ட ஆறுமுகநாவலரால் ஸ்தாபிக்கப் பட்ட வண்ணார்பண்ணை இந்துக் கல்லூரியில், ஆசிரியராகப் பணியாற்றியவர்.’சாதி சமயம் என்பன ஒட்டுமொத்த மக்களின் உயர்ச்சியையும் பாதிக்கின்றன,அவைகளை உணராத வரைக்கும்; ஒரு சமுதாயம் முன்னேறமுடியாது’ என்ற கருத்தைக்கொண்ட ‘கம்யுனிஸ்ட்; மாஸ்டர்’ ஆசிரியராகப் பணியாற்றி பல்நூறு மாணவர்களின் மூலம் பரந்த கொள்கைகள் பரவக்காரணமாக இருந்தவர் என்றும் கேள்விப் பட்டேன்.

மிகவும் இறுக்கமான சமூகக் கட்டுமானங்களைக் கொண்ட வடபுலத்தில் கம்யுனிஸ்ட கட்சியை ஸ்தாபித்து அதன் முழுநேரப் பொறுப்பாளரக இருந்துகொண்டு,ஆசிரியராகவுமிருந்து கடுமையான பணிகளைச் செய்தவர். மக்களின் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிய இடைவிடாத வகுப்புபகளை எடுத்தவர். வடபுலத்தில் மூலை முடுக்கெல்லாம் அடக்குப் பட்ட சமுதாயம் விழித்தெழக் கம்யுனிஸ்ட் கட்சிக் கிளைகளைத் திறந்து பல பணிகளைச் செய்தவர்.

மனித நேயத்தில்அப்படியான அன்பும்,ஒட்டுமொத்த மக்களின் மேன்மைக்கும் உழைத்த அந்த அயராத உழைப்பாளி,கடமையுணர்ச்சியில் அப்பழுக்கற்ற பணி செய்த ஆசிரியன், தனது பல பொதுப் பணிகளுக்குமிடையில் ஒரு அன்பான கணவனாக, தந்தையாக வாழ்ந்து பொது வாழ்க்கையிலும் தனிப் பட்ட வாழ்க்கையிலும் பல அரிய நற்பண்புகளால் அன்று பலராலும் மெச்சப் பட்டவர்.அவரின் பெயரை, எனது நாவலில் வரும் முற்போக்குவாத கதாநாயகனுக்கு வழங்கினேன். எனது நாவலில் வரும் ‘கார்த்திகேயன்’இலங்கையில் வாழும் தமிழர்களின் ஒட்டுமொத்த சமூக விடுதலைக்காகப் போராடும் தமிழ் மாணவனாகும்.

எனது நாவலின் கதாநாயகனுக்குக் கார்த்திகேசன் மாஸ்டரின் பெயரை ஏன்வைத்தேன் என்றால்,யாழ்ப்பாணத்தில் 1947-77 வரை, ஒட்டுமொத்த தமிழ் மக்களின்
சமூகமாற்றங்களுக்காகப் பாடுபட்ட,’கார்த்திகேசன்; மாஸ்டரின்’ சிந்தனைக்கு சிரஞ்சீவித் தன்மை கொடுக்கவேண்டும் என்ற எனது ஆவலின் வெளிப்பாடாகும்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி ‘கார்த்திகேசு மாஸ்டரைப்;’ பற்றித் தெரிந்து கொண்டபோது,அவரின் சிந்தனையைச் செம்மைப்படுத்திய பல சரித்திரத் தடயங்கள் கண்களிற் பட்டன.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தையண்டிய கால கட்டத்தில்,வடபுலத்தில் இடதுசாரிக் கொள்கைகளைப் பரப்பி,மக்களிடம் சமத்துவ உணர்வைத் தூண்டியவர்களில், திரு மு.கார்த்திகேசன் மாஸ்டர்,எம்.சி சுப்பிரமணியம்,டாக்டர் சு.வே சீனிவாசகம்,ஆகியோர் இணைந்து செயல் பட்டனர் என்றும்,தோழர் இராமசாமி ஐயர்,நீர்வேலி.எஸ்.கே.கந்தையாவும் இணைந்து பொதுவுடமைத்தத்துவவாதி,கார்ல் மார்க்ஸின்’கம்யூனிஸ்ட் அறிக்கையைத’ தமிழில் 1948ம் ஆண்டு மொழிபெயர்த்தார்கள் என்றும் ஆவணங்கள் சொல்கின்றன.

1950ம் 60ம் ஆண்டுகளில்,இன்று தொடரும் அரசியற் சிக்கல்களுக்கான பல மாற்றங்கள் இலங்கையில் பல இடங்களிலும் நடந்தன. அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த மாற்றங்கள்தான் இன்று தமிழர்கள் வாழும்நிலைக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் முன்னோடியாகவிருந்தன.

அவரின் மாணவர்களிலொருவரான.திரு.ரி.சிறினிவாசனின் கருத்துப்படி,மார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள்.’ஒரு ஆசிரியர்,அதிபர்,சமூகசீர்திருத்தவாதி,மனிதநேயவாதி,கம்யூனிஸ்ட்,தோழர்,சினேகிதன்,சக உத்தியோகத்தன், இலக்கியவாதி, பிரமாண்டமான செயற்பாடுகளை ஒழுங்குசெய்பவர்,நாடகவாதி,விமர்சகர்,கல்வியாளன்,தீர்க்தரிசி.நாத்திகன்,என்று பல்முகங்களைக் கொண்ட ஆளுமையாளன்’.அவரால் வடஇலங்கையில் நடந்த மாற்றங்களை அறிவது இளம் தலைமுறைக்கு மிகவும் பிரயோசனமாகவிருக்கும் என்பதால் சில விடயங்களை இங்கு பதிவிடுகிறேன்.

 

இலங்கை -அந்நியர் ஆட்சியில்

1948ல்.இலங்கை சுதந்திரம் பெற்றபோது ,இலங்கையின் கல்வி,பொருளாதாரம் என்பன ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் பிடியிலிருந்தது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில்,அந்த நிலவரம், அந்நியர் ஆட்சியில் அவர்கள் கொடுத்த கல்விiயால் பயன் பெற்ற ‘மேட்டுக்குடி வெள்ளாரிடம்’ மட்டுமிருந்தது. இந்நிலமையின் சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால்,1832ம் ஆண்டு பிரித்தானியர் தாங்கள் ஆண்ட இலங்கையின் விபரங்களிலிருந்து தெரிய வரும். ‘திரு.றோபோர்ட் மொங்கோமரி மார்ட்டின்’ என்வர் எழுதிய ‘பிரித்தானிய காலனித்துவ நாடுகளின் சரித்திரம்’ என்ற அந்த முதலாவது அறிக்கையில் இலங்கை மக்கள் அத்தனைபேரும் ‘ கறுப்பு’ மக்களாகக் கணிக்கப் பட்டிருக்கிறார்கள்.சிங்கள்,தமிழ்,முஸ்லிம் என்ற வித்தியாசம் எதுவும் கிடையாது. வெள்ளையின் பிரித்தானிய பார்வையில் இலங்கை மக்கள் அத்தனை பேரும்’கறுப்பர்களாகும்’.

இதைப் பற்றிய மேலுமுள்ள சரித்திரத் தடயம் என்னவென்றால்,1658ம் ஆண்டு,ஒல்லாந்தரிடமிருந்த யாழ்ப்பாணம் டச்சுக்காரர் கைகளுக்கு மாறியது.அவர்கள் அப்போது யாழ்ப்பாண சமூக வழக்கத்திலிருந்த, ‘குடிமை, அடிமை’ முறைகளை டச்சுக்காரர் விளங்கிக்கொள்ளவில்லை.அத்துடன்’தங்களின் ஆளுமையைத்’; தக்க வைக்க ‘வெள்ளாராரின்’உதவி இன்றியமையாததாகவிருந்தது.தங்கள் நிர்வாகத்தை அன்றிருந்த சமூகக் கட்டுமானங்களையொட்டி வரையிறுத்தார்கள். அதையொட்டியே ஆங்கிலேயரும் எல்லோரையும்’ கறுப்பர்களாகக்’ 1832ல் கணக்கெடுத்தார்கள்.

ஆங்கிலேயர் இலங்கை முழுவதையும் 1815ல் தங்கள் ஆதிக்கத்திற்குக் கொண்டுவரமுதலே,1813ம் ஆண்டு தொடக்கம் போர்த்துக்கேய,டச்சுக் கத்தோலிக்கபாதிரிகளால், பாடசாலைகள் பரந்த விதத்தில் யாழ்ப்பாணத்திலும்,ஒருசிறிய அளவில் மட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்பட்டன.
அதைப் பாவித்து, இலங்கையில் ‘வெள்ளாளர்கள்’ கிறிஸ்தவர்களாகிப் படிப்பில் முன்னேறினார்கள்.
1815ம் ஆண்டு இலங்கை முழுதும் ஆங்கிலேயர் ஆளுமைக்குள் வந்தது.

டச்சுக்காரரின் கத்தோலிக்க சமயத்துடன் ஆங்கிலேயரின் ‘புரட்டஸ்டன்ட்’சமயமும் இலங்கையில் முன்னெடுக்கப் பட்டது.1820ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் அச்சகம் உண்டானது.

1829ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கர்களுக்கும்,புதிதாய் வந்த புரட்டஸ்டன்ட் சமயக்காரருக்குமிடையில் சண்டை வந்தது. இந்தச் சண்டை பிரித்தானிய நிர்வாகம்’தாழ்த்தப்பட்ட’ மக்களைத் தங்கள் பாடசாலைகளிலோ அல்லது நிர்வாகத்திலோ சேர்த்ததினால் வந்ததால் என்று கூறப்படுகிறது.

1832ம் ஆண்டு,யாழ்ப்பாணத்திலிருந்த ‘கறுப்பர்;கள்’ தொகை-145638 அவர்களிடம் அடிமையாகவிருந்த ‘கறுபர்களின்'(தமிழர்கள்) தொகை:20483 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது அடிமையாக இருந்தவர்கள் சாதி அடிப்படையில்’வெள்ளாள சாதியினர்க்கு கொத்தடிமையாகவிருந்தவரர்களாகவிருக்கலாம்.
அக்கால கட்டத்தில் பிரித்தானியர்மட்டுமல்லாது,மற்றைய மேற்கத்திய ஆதிக்க சக்திகளான ஸ்பானிஸ்,போர்த்துக்கேயர் போன்றோரும்,தங்களின் காலனித்துவ நாடுகளில் அடிமைகளை வைத்திருந்தார்கள்.

இங்கிலாந்தில் மனித உரிமைவாதிகளின்’அடிமைத்தனத்திற்கு எதிரான’ போராட்டங்களால் அடிமைத்தளைகள் அகற்றும் சட்டம் 1833ம் ஆண்டு கொண்டு வரப் பட்டது. மனிதர்களை வாங்குவதும் விற்பதும் சட்ட விரோதமாக்கப் பட்டது.
அக்கால கட்டத்தில் பிரித்தானியாவின் பிரபல எழுத்தாளர் சார்ள்ஸ் டிக்கின்ஸ்(1812-1870),சமுதாய மாற்றத்தை அடிப்படையாக முக்கியமாக ஒடுக்கப்பட்ட குழந்தைகள், மக்கள் பற்றிப்; பல நாவல்கனை எழுதிக் கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலும் சமுக மாற்றம், கல்வி மேம்பாடு போன்ற விடயங்கள் முன்னெடுக்கப் பட்டன. அக்கால கட்டத்தில் காலனித்துவ நாடுகளின் கல்வி கிறிஸ்தவ பாதிரிமாரின் கையிலிருந்தது. அதைப் பாவித்து, இலங்கையில் ‘வெள்ளாளர்கள்’ கிறிஸ்தவர்களாகிப் படிப்பில் முன்னேறினார்கள். யாழ்ப்பாணத் தமிழர்கள் தமிழில் ‘பைபிளைப்’படிக்கவேண்டும் என்று,ஆறுமுகநாவர் பைபிளைத் தமிழாக்கம் செய்தார்.

1847ல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபராகவிருந்த பீட்டர் பேர்சிவல் தாழ்த்தப்பட்ட சிறுவர்களைப் பாடசாலைக்குச் சேர்த்தபோது ஆறுமுகநாவலர் அதை எதிர்த்து வெளியேறி வண்ணார் பண்ணையில்’ வேளாளருக்கு’ மட்டும் பாடசாலையையை அமைத்தார்.
1871ல் யாழ்ப்பாணத்தில் இன்னுமொரு சாதிக் கலவரம் வந்தது. ஆறுமுகநாவலர், ‘வேளாளரின் நலம் கருதி,;’சைவபரிபாலன சபையை’அமைத்தார்.

ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மிகவும் அடிமட்டத்திலிருந்தது.
1876ல் யாழ்ப்பாணத்தில் பஞ்சம் வந்தபோது,ஆறுமுகநாவலர் ;வேளார்களுக்கு மட்டும்’ உணவு தேடிக் கொடுத்தார்.
‘படித்தவர்களுக்கு’ மட்டுமான அதிகாரத்தால் 1887ல் சேர் பொன் இராமநாதன்,பிரித்தானிய அரசின் ‘ஒட்டுமொத்தமான இலங்கைக்குமான’பிரதிநிதியான பெரிய பதவிக்கு வந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை.1907ம் ஆண்டு, பி. அருணாசலம்,சாதி முறையின் கட்டுமானத்தின் தேவை பற்றிப் பேசினார்.

அரச நிர்வாகத்தில் ‘மக்கள் குழுக்களின் பிரதிநிதிகள்’ மையப்படுத்த வேண்டும் என்ற பிரித்தானியக் கொள்கையை,’மேற்குடியினரால்,’ முன்னெடுக்கப்பட்ட சபை நிராகரித்தது.
1921ம் ஆண்டு,’தமிழ் மஹாஜன சபை’ உண்டாக்கப்பட்டு,அதன் வேண்டுகோளாக 50:50 பிரதிநிதித்துவம் முன் வைக்கப் பட்டது.
1923ம் ஆண்டு,திரு.பி.அருணாச்சலம் ‘இலங்கை தமிழ் மக்கள் சங்கத்தை'(மேற்குடியினர் மட்டும்) உண்டாக்கினார்.
அந்த ஆண்டு சுதுமலையில் சாதிக்கலவரம் வெடித்தது.

1924ம்; ஆண்டு இலங்கையில் முதலாவது பொதுத்தேர்தல்,’மானிங்’என்பவரின் திருத்தங்களுடன் நடந்தது.
1929ம் ஆண்டு,மன்னாரைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள்,’டொனமூர்’ சட்டத்தால், சாதி முறையில் தாங்கள் ஒடுக்கப் படுவதாகவும் தங்களுக்குச் சிறுபான்மை அடி;படையில் உரிமை தரவேண்டும் எனக் கூறினர். ஆனால் ‘ புரட்டஸ்டன்ட்’ தமிழ் சார்பார் அதை எதிர்த்தனர்.

அதே ஆண்டு,தமிழ் மொழிமூலம் கல்வி கற்கவேண்டும் என்ற கோரிக்கை,திரு.இராமநாதன் போன்றோரின் கையெழுத்துடன் பிரசுரிக்கப்பட்டது. அந்த ஆண்டு, தென் இந்தியாவில,; திராவிட இயக்கத்தை’ ஆரம்பித்த இ.வெ.இராமசாமி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

அதே ஆண்டில்,’தாழ்த்தப் பட்ட மக்களுக்காக’ ஒதுக்கப் பட்ட கல்வியிடங்களில், பெஞ்சுகளில் உட்காராமல்,அவர்கள் தரையில் மட்டும் உட்காரவேண்டும் என்று ‘வேளாளர்’ முழக்கமிட்டனர்.
அதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மாணவர்களை மேல் மட்ட சாதியினர் அடித்து உதைத்து கொடுமை செய்தனர்.இதனால் ஒடுக்கப் பட்ட மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்ற அவர்களைப் பாடசாலை போகாமற் தடுத்தனர்.

வாசாவிளான:. புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த வேளாளரும்,சாதி முறையில் ஒடுக்கப் பட்ட மாணவர்கள்,பெஞ்சில் சரி சமமாக இருக்கலாம் எனற ஆங்கில அரசின் கோட்பாட்டை வாபஸ் பெறச்சொல்லி அரசைக் கோரினார்கள்.

1931ம் ஆண்டு, டொனமூர் சட்டத்தின்படி இலங்கைப் பிரஜைகள் அத்தனைபேருக்கும் வாக்குரிமை ச் சட்டம் வந்தததை,’மேட்டுக்குடியார்’ தீவிரமாக எதிர்தனர் ‘ஒடுக்கப்பட்ட சாதியினருக்க ‘வாக்குரிமை கொடுத்ததால்,தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்று
கூறினார்கள்..
சங்கானையில் இன்னொருதரம் சாதிக் கலவரம் வெடித்தது. அந்த ஆண்டு இந்தியாவிலிருந்து நேரு அவர்கள் யாழ்ப்பாணம் வந்தபோது,இளைஞர் காங்கிரஸ் அவருக்கு அமோக வரவேற்பளித்தது.

1933ம் அண்டு,திரு,ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள்,தேர்தலைப் பகிஸ்பரிப்பதை வாபஸ் வாங்கினர்., ஆனால் அதே கால கட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் பெண்களுக்கும் கொடுக்கப் பட்ட வாக்குரிமையை எதிர்த்துப் பல பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் வெளியிடப்பட்டன.

1935ல் யாழ்ப்பாண அசோசியேசன் 50:50 கோரிக்கையை மீண்டும் முன்வைத்தார்கள்.அதாவது, சிங்களவர்களுக்கு 50 விழுக்காடு, தமிழர்களுக்கு 25 விழுக்காடு, மற்ற சிறுபான்மையினருக்கு (முஸ்லிம்,பேர்கஸ்,மலே போன்றவர்களுக்கு) 25 விழுக்காடு என்ற நிபந்தனையை முன்வைத்தது.

1936ம் ஆண்டு திரு.ஜிஜி. போன்னம்பலம் பாராளுமன்றம் சென்றார்.
, திரு .ஜி.ஜி. பொன்னம்பலம் தேர்தலை எதிர்த்த (1931) காரணத்திலால், அந்தக் கோபத்தில்,முழுக்;க முழக்கச் சிங்களவர்களைக் கொண்ட சபையை 1937ம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்கா அமைத்தார்.அந்த சபையில்,திரு.ஜிஜி.அவர்கள் முதற்தரம் அவரின் 50:50 கோரிக்கையை வைத்தார்.

‘பிரிவினையை முன்னெடுத்த ஆங்கிலேயன்’

1938ம் ஆண்டு பிரித்தானிய பிரபல எழுத்தாளரான வேர்ஜினியா வூல்வின் கணவருமான லியனோல்ட் வூல்வ் என்றவர்,யாழ்ப்பாணம் கண்டி போன்ற இடங்களில் பிரித்தானிய அரச அலுவராகவும், பின்னர், ஹம்பாந்தோட்டைப் பகுதியில் 1911ம் ஆண்டு வரை,உதவி அரச அதிபராகவுமிருந்தவர்;. தமிழருக்குச் ‘சமஷ்டி’ கொடுப்பதைப் பற்றிப் பேசினார்.

‘இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுடன் சேரவேண்டும்’

1939ம் ஆண்டு, திரு.ஜி.ஜி.அவர்கள் 50:50 பற்றி பற்றி; 9 மணித்தியால உரை நிகழ்த்தினார். ஆனால் யாழ்ப்பாணத்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.கே. பாலசிங்கம்,இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுடன் சேர்ந்த அரசியலை முன்னெடுப்பதைப் பற்றிப் பேசினார்.

1941ம் ஆண்டு,ஜே.ஆர்.ஜெயவார்த்தனா எழுதிய அரசியல் யாப்பில்,சிங்களமும்,தமிழும் இலங்கையின் அரசியல் மொழிகளாகவிருக்கும் என்ற சொன்னாலும், சிறுபான்மையினர் கேட்கும் உரிமைகளைக் கொடுக்கத் தயாரில்லை.
1943ல் இலங்கை முழுதும் தாய்மொழிக் கல்வி பற்றிப் பேசப்பட்டது.
1944ல் திரு.ஜி.ஜி. அவர்கள்,இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமை பற்றிப் பிரிட்டிஷ் அரசுக்குப் பல தந்திகள் அனுப்பினார்.

அகில இலங்கை கொம்யுனிஸ்ட் பார்ட்டியும்,சிங்கள-தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய கொன்பரன்ஸ் ஒன்றை நடத்தியது.அதில் தமிழ் காங்கிரஸ்,கண்டியன் அசம்பிளி, யூரோப்பியன் அசோசியென்ஸ் கலந்து கொள்ளவில்லை.

1944-45 சோல்ஸ்பரி கொமிஸன் இலங்கைக்கு வந்தது. இலங்கை அரசால் தயாரிக்கப் பட்ட அரசியல் யாப்பை ஆய்வு செய்தது,அதில் சிங்கள மக்கள்; கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அந்த அரசியல் யாப்பு,சில திருத்தங்களுடன்.’சோல்ஸ்பரி யாப்பு’என நடைமுறைக்கு வந்தது.

 

1946ம் ஆண்டு, கம்யுனிஸ்ட் கார்த்திகேசன்:

என்ற முற்போக்குவாதி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணியேற்கிறார்.அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழ்க் காங்கிசின் கை ஓங்கியிருந்தது. அவர்களிடமிருந்து பிரிந்த தமிழருச்கட்சியனர்,ஜனநாயக முறையில் கூட்டம் வைப்பதையும் காங்கிரஸ்காரர் குழப்பிய காலத்தில் தமிழரசுக் கட்சிக்கு உதவியவர்கள் கார்த்திகேயன் மாஸ்டரின் வழியில் செயற்பட்ட கம்யூனிஸ்டுகளாகும்.

அகில இலங்கை காங்கிரஸ்.எஸ்.சி..சிவசுப்பிரமணியம் ‘சோல்ஸ்பரி’ யாப்பை எதிர்த்தாலம், யு.என்.பியுடன் சேர்ந்து வேலை செய்வதைப் பற்றிப் பேசினார். டி.எஸ்.சேனநாயக்கா,’சிங்களம்’ மட்டும் என்ற கோரிக்கையைப் பற்றிப் பேசினார்.
1947ல் நடந்த பொதுத்தேர்தலில், யு.என்பியும் காங்கிரசும் வெற்றி பெற்றது. இந்தியத் தொழிலாளர்கள் பலரின் பிரஜா உரிமை.திரு.ஜி.ஜி.பொன்னப்பலம் போன்றவர்களின் உதவியினால் பறிக்கப் பட்டது.

அவர்களின் மாணவர்கள் இலங்கைத்தமிழ் இலக்கியத்திலும,பொதுவுடமைக் கருத்துக்களின் மூலம் தமிழ் மக்களின் சமத்துவ நிலைக்கும் எவ்வளவு பெரும்பணி செய்திருக்கிறார்கள் என்பது விரிவாக ஆய்வு செய்யவேண்டிய விடயமாகும்.
இந்தக் கட்டுரை எழுதத் என்னைத் தூண்டிய விடயம், மிகவும் சாதிக் கொடுமை நிறைந்த வடபுலத்தில்,இடதுசாரிகளின் பலம் பெருக கார்த்திகேசன் மாஸ்டர் முன்னெடுத்த பல விடயங்களாகும் அதைப் பற்றி எழுத் முதல், வடபுலத்தின் ‘மேல் மட்ட’ அரசியற் போக்கு’ எப்படி ஒட்டு மொத்த இலங்கைத் தமிழரின் தலையெழுத்தையும் நிர்ணயகிக்கும் வலிமையுடன் செயற்பட்டது என்பதைச் சரித்திரத்தின் சாட்சியத்துடன் ஆராயப் படவேண்டும்.

1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றது.

யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமத்துவக் குரல்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கின.
அவர்களின் உரிமைகளைப் பெறுவதைத் தடுக்க, ‘வெள்ளாள ஆதிக்க வர்க்கம் ஒடுக்கப் பட்ட மக்களின் தனித்துவமான குரல்களை ஒடுக்கவும் இலங்கையிலுள்ள,படித்த மேல் மட்டத் தமிழர் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும்,’ ‘தமிழ்’ என்ற ஆயதத்தைத் தாங்கத் தொடங்கினார்கள். அவர்களின் ‘தமிழ் அரசு’ என்ற அந்தக் கோட்பாட்டுக்குள் ஒடுக்கப் பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியோ அவர்களின் ஒட்டுமொத்தத் தமிழர்களின் விடுதலை பற்றியோ எந்த விதமான விளக்கமும் இருக்கவில்லை.

1950ம் ஆண்டின் நடுப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப் பட்ட மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் விடுதலைக்கான பல முற்போக்க குரல்கள் இலக்கியத்தின் வழியாகவும், அரசியல் ரீதியாகவும் உரத்து ஒலிக்கத் தொடங்கியிருந்தன. பட்டிதொட்டி முழுதும்,இடதசாரி இயக்கம் தனது கிளைகளைப் பரப்பி ஒடுக்கு முறைக்கு எதிராக, சாதிக் கொடுமைக்கு எதிராக என்று பல முற்போக்குக் குரல்களை உயர்த்தினார்கள்.

‘தமிழ்த்தேசியவாதிகளின்’ பிற்போக்கு ஆதிக்கம் ஆட்டம்காண முற்பட்டது. ‘தமிழத்தேசியம், இரண்டு கட்சிகளாகப் பிரிந்திருந்தாலும், அவர்கள் இலங்கையின் பிற்போக்குவாதத்தையும், முதலாளிகளையும், அன்னிய ஊடுருவுலையும் ஆதரிப்பவர்களாகவிருந்தார்கள். ஆனால் இடதுசாரிகளின் வலிமை முற்போக்குவாதிகளால் மக்களிடம் எடுத்துச் செல்லப் பட்டது.
தேர்தல்களில் வடபுலத்தின் சரித்திரத்தில் முதற்படியாக ஒரு இடதுசாரி பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.இடதுசாரியான திரு. கந்தையா அவர்கள் பருத்தித்துறையின் பாராளுமனறப் பிரதிநிதியானார்.

இடங்கைத் தமிழரின் அரசியற் பாதையில் அந்தத் தேர்தல் ஒரு திருப்புமுனை என்பது எனது கருத்து. அதாவது,ஆண்டாண்டாகத் தமிழரைச் சாதி முறையில் அடக்கி வைத்த வடபுலத்துத்
‘தமிழ் தேசிய’ சக்திகளுக்குப் பிரமாண்டமாக வளர்ந்துகொண்டுவரும் இடதுசாரிகளின் ஆளுமை அச்சத்தைத் தந்தது. அத்துடன் இலங்கைப் பிரதமர், ‘இலங்கை மக்கள் அத்தனைபேரம் சமத்துவமாக நடத்தப் படவேண்டும்’ என்பதற்கான பல சட்டத்தைக் கொண்டுவந்தார்.

இலங்கையில் எந்தப் பிரஜையும் சாதி ரீதியாக ஒடுக்கப்படுவது கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும் என்ற சட்டம் வந்தபோது,சாதித் திமிரினால் வடபுலத்தைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்து ‘தமிழத்தேசியம்’ மிரண்டு பயந்தது. தமிழர்களைத் திசை திருப்பி,அரசியல் இலாபம் தேடும் ஒரே ஒரு ஒரு காரணத்தால் அவர்கள், தமிழ்மொழிக்கான உரிமை’ பற்றிக் கோஷமிட்டு அதை அரசியல் ஆயதமாக்கினார்கள்.
சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளாகும் என்று சட்டம் வந்தபோது அதைச் செயற்படுத்த எந்த விதமான பெரிய நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் ‘திறந்த வெளி நாடகமாக ஒரு சத்தியாக்கிரகத்தை’ ஆரம்பித்தார்கள்.

அதைத் தொடர்ந்த பல இழுபறிகள் ‘தமிழத்தேசியத்தை’ ஆயுதமாகக் கொண்டவர்களால் தொடரத் தொடங்கியது.

வடபுலத்து இடதுசாரிகளோ,பொது மக்களுக்கான விழிப்புணர்வையுண்டாக்க பல முக்கிய சேவைகளைச் செய்தார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திரு. மு கார்த்திகேசனின் மாணவர்.திரு. கைலாசபதி முக்கிய பொறுப்பிலிருந்ததால், ‘யாழ்ப்பாணச் சமுகப் ப்ரக்ஞையில்’ புதிய திருப்பம் ஏற்பட்டது. அதே கால கட்டத்தில் வடபுலத்தில் மூலை முடுக்கெல்லாம் இடதுசாரிகளால் ‘சமத்துவக்’ கொள்கைகள் பரவின.ஆனால் சாதிக் கொடுமையை அழிக்க முடியவில்லை.

1960ம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் சென்ற எனக்கு அங்கிருந்த சாதிக் கொடுமை மிக மிக அதிர்ச்சியைத் தந்தது.

முற்போக்கு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், முக்கியமாக மாணவர்களால் மிகவும் மதிக்கப் பட்ட ‘மு. கார்த்திகேசு’ என்ற ஆளுமை பற்றி அப்போது எனக்கு எதுவும்; தெரியாது.யாழ்ப்பாணத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அடக்குமுறைகளை எதிர்த்துப் பல குரல்கள் முற்போக்குவாதிகளால் எழுப்பப் பட்டகாலத்தில் அந்தக் குரல்களின் அடிநாதமாகவிருந்தவர்களில் கார்த்திகேசு மாஸ்டரும் ஒருத்தர் என்று அந்த விடயங்கள் நடந்து சில வருடங்களின் பின்தான் தெரிந்து கொண்டேன்.

யாழ்ப்பாணத்தில்,மாணவியாக இருந்தபோது,’மல்லிகையில்’ நான் இரு சிறு கதைகளை(‘எழில் நந்தி’ என்ற புனைபெயரில் எழுதினேன);.அவை சாதியை அடிப்படையாகக் கொண்டது. அதில் ஒரு கதை,வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு சாதி வெறி பிடித்தவர், அவர் உயிருக்குப் போராடியபோது,மலம் அள்ளும் ஒரு தொழிலாளியின் குருதி (அக்கால கட்டத்தில் பணத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள் ‘இரத்த ‘தானம்'(?) செய்வார்கள்) கொடுத்து,சாதித் திமிர் பிடித்தவர் உயிர் பிழைத்ததைப் பற்றி எழுதினேன்.

எழுத்தாளர் செ.யோகநாதன்,அப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில்,மாணவர். ‘வசந்தம் பத்திரிகையில் ஆசரியராகவிருந்தார்.எனது கதையைப் படித்துவிட்டு.தங்கள் பத்திரிகை;கு ஒரு கதை கேட்டார். அந்த மாணவர்கள் தலைமுறைதான் திரு. கார்த்திகேசன் மாஸ்டரின் வழித்தோன்றல்கள்.

அன்றைய கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த பல சாதிக் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமைப் போராட்டங்களில் கார்த்திகேசு அவரின் முற்போக்கு மாணவர்களின் அளப்பரிய பங்கும் எனக்குத் தெரியாது.

யோகநாதன் என்னிடம் கதை கேட்டபோது,தன்னைவிட உயர் சாதி(?)யைச் சேர்ந்தவனுடன் வந்த காதலால் கர்ப்பமாகி அதன் விளைவாக, தன்னைத்தானே எரித்து இறந்துபோன என்னுடைய வயதுடைய ஒரு பெண்ணின் கதையை,’சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற தலைப்பில் எழுதினேன்.

அடக்கு முறைகளுக்கு எதிரான எனது தார்மீகக் குரலை எனது எழுத்துக்கள் மூலம் கண்ட திரு. பாலசுப்பிமணியம் என்னுடன் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டார். தங்கள் சிந்தனைகள் மூலம், எழுத்துக்கள் வழியாக,மனித விடுதலைக்குப் போராடிய பல ஆளுமைகளை அறிமுகப்படுத்தினார். பல தரப்பட்ட புத்தகங்களை வாரி வாரி அனுப்பிக் கொண்டிருந்தார்.

பாலசுப்பிரமணியம்,யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரி;யில் திரு கார்த்திகேசன் மாஸ்டரின் மாணவராகவிருந்தவர். தனது ‘மாஸ்டரின்’ பொதுவுடமைக் கொள்கைகள் பற்றி பாலசுப்பிரமணியம் என்னிடம் மணிக்கணக்காகப் பேசுவார். ‘மாஸ்டரின்’ இலக்கிய ஆளுமை பற்றியும், அக்கால கட்டத்தில் அடக்கு முறைகள், சாதிக் கொடுமைகள் என்பவற்றைப் பற்றி எழுதிய டானியல்,யோகநாதன்,கணேசலிங்கம்,பெனடிக்ட் பாலன்,நீர்வேலி பொன்னையன் போன்றோரின் எழுத்துக்கள் என்ன மாற்றங்களைச் செய்கின்றன என்பதை ‘மாஸ்டர்’ மாணவர்களுக்கு விளங்கப் படுத்தியதை எனக்குச் சொல்லும் பாலசுப்பிரமணியம் ‘உமது எழுத்துக்களும் மனித நேயத்தை முன்னெடுக்கத் தொடரவேண்டும்’ என்று சொல்வார்.

எங்கள் இருவரினதும் கருத்துப் பறிமாறல்களினால் தொடர்ந்த தொடர்பின் நீட்சியால் திருமணமானது.
லண்டன் வந்தோம். லண்டனிலும் பாலசுப்பரமணியம் அவர்களின் சினேகிதர்களையும்,கார்த்திகேசு மாஸ்டரின் சில பழைய மாணவர்களையும் சந்தித்தேன். அவர்களிற் பெரும்பாலோர், ‘கார்த்திகேசு மாஸ்டர்’ கனவு கண்ட சாதி மத பேதமற்ற ஒரு மேன்மையான தமிழ்சமுதாயத்தை வளம் படுத்தும் கொள்கைகளையுள்ளவர்களாகவிருந்தார்கள்.

‘மு.கார்த்திகேசு’ என்ற ஓரு சாதாரண ஆசிரியர் என்னவென்று இப்படியான பெருந்தன்மையும் சமத்துவமும் கொண்ட கொள்கைகளை இந்த எதிர்கால ஆளுமைகளில் விதையிட்டிருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

பாலசுப்பிரமணியத்தின் ‘மாஸ்டர்’ மானசீகமாக எனது மாஸ்டராகிவிட்டார். மனித மேம்பாட்டுக்கான அவரது கனவுளை நான் புரிந்துகொண்டேன். அதற்காக அவர் என்னவென்று தனது வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார் என்று கேள்விப் பட்டபோது அந்த ‘ஆளுமையை’ நான் சந்திக்க முடியவில்லை என்ற துயர் வருவதுமுண்டு.

கார்த்திகேசு மாஸ்டர் பற்றி பாலசுப்பரமணியம் பேசும்போது,’மாஸ்டரின்’ மனைவி எவ்வளவு தூரம் மாஸ்டரின் மனித நேயமான பணிகளுக்கு, ஒடுக்கப் பட்ட மனிதர்களின் விடுதலைக்குப் பாடுபடும் தனது கணவருக்கு உதவுகிறார் என்று சொல்லிப் பெருமைப்படுவார்.’ தேர்தலில் நிற்பதற்குத் தன் மனைவியின் தாலிக்கொடியை அடகு வைத்ததைப் பற்றிச் சொன்னார். அவர் மனைவி எவ்வளவு தூரம் தனது கணவரின் உயர்ந்த கொள்கைகளுக்கு உதவியிருக்கிறார் என்பதைக் கேட்டபோது மெய் சிலிர்த்தது.

,மனித நேயத்தில் வைத்திருக்கும் அளவிடமுடியாத பற்றும் நம்பிக்கையும்,சிந்தனையைச் செயலில் காட்டும் அற்புதமான பண்பாடு. தனது ‘ஆசிரியர் ஸ்தானத்தை’ அடிப்படையாக வைத்து அவர் மாணவர்களுக்குச் செய்த பணிகள், அவரின் பிரமாண்டமான சக்தியான அவரின் நா வன்மையால், அவரின் பேச்சுக்கiளால் எதிர்கால ஆளுமைகளான மாணவர்கள் மனங்களில் அவர் பதித்த நல் கருத்துக்கள் என்பன யாழ்ப்பாணத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு உந்துதலாகவிருந்தது.

அதே நேரம்,அந்த சிந்தனையாளர்கள், பிற்போக்குவாதம் கொண்ட யாழ்ப்பாணத்து சாதிமான்களால் எப்படி நடத்தப் பட்டார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

எனது முதலாவது நாவல்’ உலகமெல்லாம் வியாபாரிகள்’அந்தக் கால கட்டத்தில் லண்டனுக்குப் படிக்க வந்த தமிழ் மாணவர்களையும்,அக்கால கட்டத்தில் லண்டனில் வாழ்ந்த ஆங்கிலம் படித்த,மேல்மட்டத்துத் ‘தமிழ்’ உணர்வாளர்களையும் பின்னணியாகக் கொண்ட கதை. மேற்குறிப் பிட்ட இரு வர்க்கத்தாரும்,அரசியற் கருத்துக்களில் மிகவும் வித்தியாசமான ஈடுபாடு கொண்டவர்கள்.

இலங்கையில் ஆங்கிலம் படித்துப் பட்டம் பெற்ற பல தமிழ் -சிங்கள மேல் மட்டத்தினர், 1956ம் ஆண்டு ,அன்றைய பிரதமர் எஸ்.டபிளியு.ஆர்.டி.. பண்டாரநாயக்கா அவர்கள் கொண்டுவந்த ‘சிங்களம் மட்டும் சட்டத்தின்பின் நாட்டை விட்டு வெளியேறியவர்கள்.

அதன் பின் பெருந் தொகையான தமிழ் மாணவர்கள், 1972ம் ஆண்டு,இலங்கையில் கொண்டுவரப்பட்ட’தரப் படுத்தலால்’ பல்கலைக்கழகங்களுக்குப் போக முடியாது பாதிப்படைந்தாhல் லண்டன் வந்து சேர்ந்தார்கள்.

1977ம் ஆண்டு வட்டுக்கோட்டை மகாநாட்டில் ‘தமிழ் ஈழம்’ பிரகடனப்படுத்த முதல் அவர்கள் லண்டனிற்தான் அதைப் பற்றிப் பேசினார்கள். யாழ்ப்பாணதது மேல் தட்டுத் தலைமையால்; ஆயிரக் கணக்கான மக்கள் சாதி ரீதியாகவும், பிராந்திய ரீதியாவும் பிரிக்கப் பட்டிருப்பதைப் பொருட்படுத்தாமல்,’ ஒரு குறிப்பட்ட வர்க்கத்தின் நன்மை சார்ந்த,’ஈழப் பிரகடனத்தை’ மேற்தட்டுத் தமிழர் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள’ முன்னெடுக்கப் படும்போது அது நடைமுறை சாத்தியப்பட முடியாத கோரிக்கை என்று நாங்கள் சொன்னபோது எங்களை அன்றைக்கே ‘துரோகிகள்’ என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

இலங்கையிற் தொடரும் அரசியலால்,தமிழ் மாணவர்களின்; வாழ்க்கையில் பல மாற்றங்களால் லண்டனுக்கு வந்தவர்களில் கணிசமான தமிழ் மாணவர்கள் யாழ்ப்பாணம், கொழும்பு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் முற்போக்கு மாணவர்கள், ‘சிங்கள் ஆதிக்கத்தின் ஒடுக்குமுறைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் சேர்ந்து போராட வேண்டும் என்ற ‘பொதுவுடமைக் குரலை முன் வைத்தார்கள். அக்கால கட்டத்திலேயெ தமிழர்கள் பல பிரிவுகளாகி விட்டார்கள்.

இந்த யதார்த்தங்களை அடிப்படையாக வைத்துப் போராட்டக் குரலை எழுப்பிய மாணவர்களில் பலர்’கார்த்திகேசு’ மாஸ்டரின் பொதுவுடமைக்கருத்துக்களோடு தங்களைப் பிணைத்துக் கொண்டவர்கள்.

அவர்களிற் பெரும்பாலானவர்கள், யாழ்ப்பாணத்தில் 1967ம் ஆண்டுகளில் நடந்த சங்கானைச் சாதிக் கலவரங்கள், மாவிட்டபுரம் கோயில் அனுமதி போன்ற போராட்டங்களில் பரிச்சயமுள்ளவர்கள். லண்டனில் அன்று பெரிதாக நடந்து கொண்டிருந்த பாலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டங்களிலும் இனவாதப் போராட்டங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.

எனது கதாநாயன் ‘கார்த்திகேயன்’அவர்களில் ஒருத்தன்.தங்கள் இன மக்களின்,சாதி,மத,பாலியல் சமத்துவத்திற்காகக் குரல் கொடுத்தவர்கள்.

அவர்களிற் பலர்,சமத்துவ சிந்தனையாளர் ‘,கார்த்திகேசு மாஸ்டரின்’ சமத்துவக்குரலை லண்டன் தெருக்களில் ஒலித்தவர்கள்.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தமிழர்களின் பெயரிற் தொடங்கியபோர். சுயநலம்பிடித்த ஒருசிலரின் பிரபுத்துவ வாழ்க்கைக்கு அத்திவாரமிட்டது.அதனால் தார்மிகமற்ற போர் தோல்வியில் முடிந்தது.

இன்றும், இலங்கையில் அந்த ‘மேல்மட்ட வர்க்கத்தினர்’பல வழிகளிலும் தங்கள் ஆடம்பர வாழ்க்கையைத் தொடர,’தமிழ்த்தேசியம், சமய மேன்பாடுகள்’ என்ற போலிக் கருத்துக்களால் தமிழ் மக்களை ஏமாற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அண்மையில்,முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சிகளில் யாழ்ப்பாணத்து மாணவர்கள் சிலர் பிராந்தியவெறியைக் காட்டியதாகச் செய்திகள் வந்தபோது.அந்தப் படுபிற்போக்கான செயலைக் கண்டித்துக் குரல் எழுப்பிய பலரிடமிருந்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் அதைப் பற்றி யாழ் பல்கலைக்கழக மாணவர் பகுதியிலிருந்தோ அல்லது முள்ளிவாய்க்காலில் பிரசன்னமாகவிருந்த’தமிழ்த்தலைமை;யிடமிருந்தோ எந்த விதமான பதிலும் வரவில்லை என்பது , பிற்போக்குவாதத் தமிழ்த் தேசியம் எவ்வளவு விகாரமானது என்று புரிகிறது. அவர்கள் இன்று தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள எடுத்திருக்கும் பயங்கர ஆயதம் ‘ பிராந்தியவாதம்’ என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

அரசியல் நுண்ணறிவற்ற பல செயற்பாடுகளால் தமிழ் இனத்தையே அதல பாதாளத்துக்குள் தள்ளி விட்ட முப்பதாண்டு போராட்டத்தினால் பிற்போக்குத் தமிழ்த் தேசியம் எதையும் படித்துக் கொள்ளவில்லை என்பது மிகத் துன்பமான சரித்திரமாகும். ஒரு இனத்தின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் அந்தச் சமூகத்தின் அத்தனை மக்களும் எந்த வித பேதமுமற்று ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற அடிப்படை உண்மையை அவர்களின் ஆதிக்க வெறியால் உணரமுடியாதிருக்கிறது.

இதை உணர்ந்த தமிழ் மக்கள்,அண்மைக் காலங்களாகத் தமிழத் தலைவர்களைப் பொது நிகழ்ச்சிகளிலிருந்து துரத்தியடிக்கிறார்கள்
அத்துடன் 10.6.18ல் நடந்த சிங்கள படையதிகாரி திரு. ரத்தினபிரிய பண்டு அவர்கள் தமிழ் மக்களுக்குச் செய்தசேவை அவரை எவ்வளவு தூரம் மக்களிடைம் இணைத்த வைத்திருந்தது என்பதைப் பொது மக்கள் கண்ணீருடன் அவரை வழியனுப்பியதிலிருந்து தெரிகிறது. இவ்வளவுகாலமும் ‘சிங்களப் பூச்சாண்டி’ காட்டித் தமிழ் மக்களைச் சிங்களவர்களுடன் சேரவிடாத தந்திரம் இனிப் பலிக்காது என்று படையதிகாரி ரத்தின பிரிய பண்டுவில் மக்கள் காட்டிய அன்பிலிருந்து தெரிய வந்திருக்கும்.

தமிழ் மக்களைத் தங்களின் சுகபோக வாழ்க்கைக்குப் பாவிக்கும் தமிழத் தலைமையின்; சிந்தனையின் கோரத்தை உரித்துக் காட்ட இன்னுமொரு ‘கார்த்திகேசு மாஸ்டர்’ வரமாட்டாரா என்று எனது மனம் ஏங்குகிறது. மலேசியாவிற் பிறந்து மேற்படிப்புக்காக இலங்கை வந்து, இலங்கைத் தமிழர்களிலுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு கொதித்துச் செயலாற்றிய ஒரு தார்மீக நாவன்மையை இழந்தது பெரிய துயர்.

ஆனால் அவரின் மாணவர்கள், ‘கார்த்திகேசு மாஸ்டரின்’ ஞாபகமாகப் பல சமுதாய ஆய்வுகள் செய்து அவரின் உயரிய சிந்தனைக்குப் புத்துயிர் கொடுக்கவேண்டும். அவரின் ஞாபகார்த்த நாளன்று பல கலந்துரையாடல்களை நடத்தி அவர் செய்த பணிகளையம் அவர் கண்ட கனவையும் எதிர்கா இளம் தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது எனது அவாவாகும்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s