‘தாமரைச் செல்வி- தனித்தவமான படைப்பாளி’; ‘வன்னியாச்சி’ சிறுகதைத் தொகுதி பற்றிய விமர்சனக் கட்டுரை-15.4.18

 

திருமதி தாமரைச் செல்வி அவர்களின் சிறுகதைகளைப் படித்து விமர்சனம் செய்யச் சொல்லிக் கேட்டதற்கு மிகவும் நன்றி.
‘இலக்கியப் படைப்பு என்பது ஒரு படைப்பாளி வாழும் சுற்றாடல்,சூழ்நிலைகளின் நிலைகளையும்,படைப்பாளியுடன் ஒன்றிணைந்து வாழும் மனிதர்களையுப்; பற்றியதுமாகும். அந்தப் படைப்பாளி வாழும் காலகட்டத்தில் முன்னெடுக்கப் படும்;,அரசியல், பொருளாதார, சாதி,சமய விழுமியங்களால் நடக்கும் மாற்றங்கள் என்னவென்பது அந்தக் கதா மனிதர்களின் வாழ்க்கையுடன் எப்படிச் சம்பந்தப்படுகின்றன.அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கின்றன,என்ற யதார்த்த சாட்சியங்களின் பிரதிபலிப்பே ஒரு படைப்பின் கருவூலங்களாகின்றன’ என்பது எனது கருத்து..

இதே மாதிரியான கருத்தையே,தாமரைச்செல்வி தனது, ‘என்னுரையிற்’ குறிப்பிடும் போது,’சொந்த மண்ணிலேயே,இருப்பிடம் இழந்து அகதிகளாகிக் குண்டுகளின் அதிர்வும் கந்தக நெடியும்,ஒரு புறம் துரத்த, உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில்,பதற்றத்தோடும் பசி பட்டினியோடும் பதுங்கு குழிகளின் பக்கத் துணையோடும்,வாழ்ந்திருந்தவர்கள்.இந்த மக்களின் நடுவே நானும் ஒருத்தியாக வாழந்து கொண்டுதான் இந்தக் கதைகளை எழுதினேன் என்னைச் சுற்றிய நிகழ்வுகள்,தந்த அதிர்வுகள்,பாதிப்புகள்,நெருடல்கள், இவைகள்தான் இப்படைப்புகள்.இம்மக்களின் துயரங்களை வார்த்தைகளில் பதியம்போது, எனக்கு வலித்திருக்கிறது.இந்த மக்கள் அனுபவித்த கடலளவு துயரங்களில் ஒரு சில துளிகளையே என்னால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் (‘வன்னியாச்சி’பக் 15).

தாமரைச் செல்வியின் தனித்துவ இலக்கியக் கண்ணோட்டம்:

இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் எழுத்தின் சரித்திர வரலாறு ஒரு,நூற்றாண்டைத் தாண்டிவிட்டது. பெண்கள் படைப்புக்கள்,1914ல் மங்கள நாயகம் தம்பையா எழுதிய,’ நொறுங்கண்ட உள்ளங்கள்’ என்ற படைப்புடன் ஆரம்பிக்கிறது.
அதைத் தொடர்ந்து பெண்களால் எழுதப் பட்ட படைப்புக்கள் அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நடந்த சாதி சமய,அரசியல்.சீதனப் பிரச்சினை, சமுக மாற்றங்களை மையமாக வைத்துப் படைக்கப் பட்டிருக்கின்றன.
அதன் பின்,60ம் ஆண்டு கால கட்டங்களில்,அவர்கள் வாழும் பிராந்தியங்களை மையப் படுத்தி,கோகிலா சுப்பையாவின்,’தூரத்துப் பச்சை'(1964) போன்றோரின் நாவல்கள் வெளிவந்தன.

83ம் ஆண்டு கால கட்டத்தின் பின்,போர்க்கால சூழ்நிலையால் ‘சுதந்திர சிந்தனையும்’ அதன் நீட்சியான படைப்புகளும் வெளி வரமுடியாத ஒரு தேக்கம் கண்டன. ஆனால் தாமரைச்; செல்வி தொடர்ந்து பல காலம் நாவல்கள் சிறு கதைகள் என்ற எழுதிக் கொண்டிருக்கிறார் பல பரிசுகள் பெற்றிருக்கிறார்.அதற்குக் காரணம்,, அவர் தனது படைப்புக்களில், போர்சூழல் சார்ந்த எந்த’அரசியல்’ கருத்துப் பரிமாறலையும் பெரும் பாலும் தனது படைப்புக்களில் வெளிப் படுத்தவில்லை என்பது பரவலான கருத்தாக இருக்கிறது..

‘வன்னியாச்சி’ சிறு கதைத் தொகுதியில் முப்பத்தி ஏழு கதைகள் படைத்திருக்கிறார். பெரும்பாலானவை கிளிநொச்சிப் பிரதேசத்தை மையமயாக வைத்த படைப்புக்கள். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தையும் அந்தச் சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரங்களையும் வாழ்க்கையுடன் இணைத்துத் தொடரும் மக்கள் பொர்ச் சூழலால் படும் துயர்களைப் பிரதி பலிக்கும் படைப்புக்கள் இவை.

இவரின்,கதை மாந்தர்களின் பல் விதப்பட்ட துயரங்கள், பெண்கள், குழந்தைகள்,இளம் வயதினர்,முதுமையைத் தழுவியவர்கள், என்ற பாகுபாடற்ற விதத்தில்,போர்ச் சூழலில் அவர்கள் முகம் கொடுக்கும் அன்றாட வாழ்க்கைப் போராட்டம்; படைப்பாளியின் கண்களிலால் ஆழமாகப் பார்க்கப் பட்டிருக்கின்றன.

தாமரைச் செல்விக்கான இலக்கிய அங்கிகரிப்பு:
தாமரைச் செல்வி பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவரது 5 சிறுகதைகள்; ஆங்கிலத்திலும் 3 சிறுகதைகள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது ‘பசி’ என்ற சிறுகதை தமிழகத்தைச் சேர்ந்த இமயவர்மன் என்பரால் குறும்படமாக எடுக்கப்பட்டு,லண்டனில் நடந்த ‘விம்பம்’பார்வையாளர் தெரிவாக விருது பெற்றிருக்கிறது.வேறு ஐந்து சிறகதைகள் வெவ்வேறு ஆளுமைகளால் குறும்படங்களாகத் தயாரிக்கப் பட்டிருக்கினறன.

அவர் அவரது படைப்புக்கள் மூலமோ அல்லது தனிப் பட்ட பதிவுகள் மூலமோ தன்னை ஒரு பெண்ணியவாதி என்றோ,சமுகநலப் புரட்சியாளர் என்றோ எந்த இடத்திலும் அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை.

1973ம் ஆண்டுகளிலிருந்து எழுதிக்கொண்டு வருகிறார். இருநூறு சிறுகதைகளையும்,மூன்று குறுநாவல்களையும்,ஆறு நாவல்களையும் படைத்திருக்கிறார்.எழுதுவது மட்டுமல்லாமல் சித்திரம் வரைவதிலும் ஆளுமையுள்ளவர்.இவரது சித்திரப் படைப்புக்கள்.வீரகேசரி, தினகரன்,சுடர்,ஈழநாடு போன்ற இலங்கைப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றிருக்கிறது.

இவர் எழுதிய 37 கதைகளிலம் என்னை மட்டுமல்லமால் அவரின் வாசகர்களையம் கிளிநொச்சிக் கிராமங்களுக்கு இழுத்துச் செல்கிறார். அவர்களுடனும் அவர்களுக்காகவும் கதறப் பண்ணுகிறார். பசிக்க உணவில்லை என்ற பரிதவித்த குழந்தைகள் தொடக்கம் முதியவர் வரையும் என்னருகில் பாதாபமாக இரங்குவதாக நினைக்கப் பண்ணுகிறார்.

இவரை ஒரு மனித நேயமுள்ள பெண் எழுத்தாளர் என்று வரையறை செய்யலாம். ஏனென்றால் இவர் எழுதிய கதைகளில் எந்த அசியல் வாடையும் பெரிதாக அடிக்காமல், யாரையும் திட்டாமல்,தனக்குள் ஆழந்து கிடக்கும் உள்ளுணர்வின் உண்மைக் கருத்துக்களின் எதிரொலியைப் போதனைகள் பொரிந்து தள்ளாமல்,தன்னுடன் வாழ்ந்த மக்களையும் அவர்களின் வாழ்க்கையும் மட்டுமே முன்னிறுத்திக் கதைகள் படைத்திருக்கிறார்.

 

இவரின் கதை மாந்தர்கள்: எந்த சமுதாயத்திலும் எங்கள் கண்முன் தெரியும் 99 விழுக்காடான சாதாரண மனிதர்கள். குழந்தைகள்,இளைஞர்கள்,முதியவர்கள், கல்யாணமாகாதவர்கள்,கலயாணமானவர்கள், தனிமையிற் சுமை பல தாங்கும் தாய்மார்.தகப்பனாக ஒடிந்துடையும் ஆண்கள். போர்ச் சூழலிலிருந்து தப்பியோட வெளிநாட்டுக் கனவுகளுடன் வாழ்பவர்கள், என்று பல தரப்பட்டோர்.
பேரும்பாலானவர்கள்,ஒட்டு மொத்தமான ஒரு சிக்கலான சூழ்நிலையிலும் சமுதாயத்தின் உயிரோட்டமான மனித நேயத்தைச் சுமந்து போரின் வலியை மறக்க மனிதத்தின் அற உணர்வுகளுடன் ஒருத்தரை ஒருத்தர் அணைத்துச் செல்பவர்கள்.

கடை வைத்திருக்கும் வியாபாரி தொடக்கம் வயலில் வேலை செய்யும் கூலி தொடக்கம் பாதணி திருத்தும் கூலி வரைக்கும் ஒவ்வொருவரும் தங்களை நம்பி வாழும் குடும்பத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு வினாடியையும் நாளையும் மரணத்துடன் எதிர்நோக்கி வாழும் பயங்கரத்தை வார்த்தைகளால் வடித்திருக்கும் புனித செய்யுள்கள் இந்தப் படைப்புக்கள்.

துன்ப துயர்க் கால யதார்த்தங்களை சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு பிணைத்து எழுதிய அவரது படைப்புக்களில் பல சரித்திரத் தடயங்கள் ஆவணப் படுத்தப் பட்டிருக்கின்றன.அதாவது, இடம் பெயர்தல்கள்,எங்கெங்கே எவ்வெப்போது நிகழ்ந்தன எப்படி நிகழ்ந்தன என்பதைப் பல கதைகளில் பதிவிட்டிருக்கிறார்.

இவை புனைகதைகளல்ல. போர்க்காலச் சூழ்நிலையில்; சிக்குண்ட ஒரு பிரதேசத்தின் சரித்திரம். சாதாரண மனிதர்கள் முகம் கொடுத்த சொல்லவொண்ணாக்; கொடுமைகளைக் கண்ணீர் துளிகளுடன் படைத்திருக்கும் ஒரு சரித்திர காவியம்.

‘ருணா’ என்ற படைப்பு நோர்வேயில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களைச் சுற்றி எழுதப் பட்டாலும் அந்தக் கதையின் மையம் ‘ருணா’என்ற நோர்வேய்ப் பெண்ணைச் சுற்றியது.இது போன்ற,ஓன்றிரண்டு படைப்புக்கள் தவிர மற்றவையாவும்.போர்க்கால நிர்ப்பந்தத்தால்,மரணபயம் துரத்தும்போது அதைத் தடுக்கவோ ஒன்றும் செய்யமுடியாமலும், அது பற்றிக் கேள்வி கேட்கவோ முடியாமல்.பலவீனமானவர்களையும் சுமந்து கொண்டு உயிர் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் பரிதாபமாத்தைப்,’பாதை'(வெளிச்சம்-98) படைப்பு சொல்கிறது.

போரை மௌனமாக ஏற்றுக் கொண்டு எப்போதும் மரணம் சம்பவிக்கலாம் என்பதை அடிமனத்தில் இருத்திக் கொண்டு அன்றாட வாழ்க்கையைத் தொடரும் ஏழைகளின் வாழ்க்கை பற்றிய பிரதிபலிப்பக்கள் இந்தக் கதைகள்.இவரின் கதை மாந்தர்களில் கொஞ்சம் வசதியானவர்கள், கிராமத்தாரின் எளிய வாழ்க்கை முறையைப் புரியாதவர்களாகவும் அல்லது அந்நியமாககப் பார்ப்பவர்களாகம் ஒரு தெளிவான விரிசலை ஓரிரு படைப்புக்கள் சொல்கின்றன. எந்தச் சூழ்நிலையும் வசதியான வர்க்கம் தங்கள் வாழ்வு நிலையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்பதை இவர் தனது’;உறவு'(ஈழநாடு 98) போன்ற படைப்புக்கள் மூலம் சொல்கிறார் என்றுதான் நினைக்கிறேன்..

 

ஆவணமாகும் அரிய படைப்புக்கள்:

தற்காலத்து,இலங்கைப் பெண் எழுத்தாளர்களில், தாமரைச் செல்விக்கு மிகவும் முக்கியமான தனித்துவத்தைக் கொடுப்பது பெரும்பாலான அவரின் படைப்புக்கள் விளைநிலம் சார்ந்த மக்களின் யதார்த்த வாழ்க்கையை நுண்ணியமாகத் தனது எழுத்துக்களில் படைப்பதுதான என்பது எனது கருத்து. இவரைப் போலவே இலங்கைப் பெண் எழத்தாளர்கள் பலர் யதார்த்தமான கதை சொல்லும் பாணியை முன்னெடுத்தவர்கள். தாங்கள் வாழும் பிரதேசத்தின் பாரம்பரிய வாழக்கை நெறிகளைத் தங்கள் ஆவணப் படுத்துபவர்கள்.
பெண்கள் எழுத்துக்களின் ஆர்வத்தில். அவர்களின் புத்தகங்கள் சிலவற்றை என்வாழ்நாளில் படித்திருக்கின்றேன்.அவர்கள் பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள். பலவிதமான அரசியல்,பாலியல், பொருளாதார சூழ்நிலைகளை மையப்படுத்திய படைப்புக்களைத் தந்தவர்கள்.

 

பெண் எழுத்தாளர்கள் பலரில் ஒட்டுமொத்தமான ஒரு பொதுத் தன்மையிருக்கிறது.

அண்மையில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவி டிலோஷினி ஞானசேகரம் என்பவர்,’இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புலம் பெயர் நாவல்கள் ஒரு ஆய்வு’ என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில் பெண் நாவலாசிரியர்களின் பங்களிப்பைப் பின் வருமாறு குறிப்பிடுகிறாh,;(பக் 9)

1- ஈழத்தில் முதன் முதல் யதார்த்தமான,காத்திரமான சமுகப் பிரச்சினைகளையும்,பாத்திரங்களையும் நாவலில் பிரதிபலித்துக் காட்டியமை
2- மலையக வாழ்க்கையை வரலாற்றாக்கியவை,
3- பிரதேசப் பண்மையும்,விவசாயிகளின் வாழ்க்கையையும் இயல்பாக வெளிக் கொணர்ந்தமை,
4- பெண்நிலை அனுபவங்களை,பிரச்சினைகளை உயிரோட்டமாகப் பேசியமை,
5- போரின் இறுதி நாட்களை எழுத்துக்களின் ஊடாக ஆவணப்படுத்தியமை,
6- புகலிட அனுபவங்களை வெவ்வேறு களங்கள்,பிரச்சினைகள்,பண்பாடுகள்,வழியாகப் பேசுதல்,அரசியல் கருத்துக்களையும் முன்வைத்தல்,
7-பெண்ணிச் சிந்தனைகள்,ஆண்களின் உளவியலை,சமுகவியற் பின்னணியுடன் முன்வைத்தமை
என்று வகைப் படுத்தியிருக்கிறார்.

பெண்கள் எழுத்துக்களில் பட்டென்று வந்து சிந்தனையை ஊடுருவது,அவர்கள் வாழும் உலகத்தைப் பற்றி ஆழமாகவும், மனித நேயத்துடனும் பார்க்கும் அவர்களின் இலக்கியக் கண்ணோட்டமாகும். கதைகளில் வரும் கருத்துக்களைத்தாண்டிப் படிப்பவரின் உள்மனத்தைச் சுரண்டி, உணர்வுகளின் அத்தனை அம்சங்களையம் தங்கள் கதையின் வாசிப்புக்குள் வலைபோட்டு இழுக்கும் எழுத்துத் திறமையுள்ளவாக்களில் தாமரைச் செல்வியும் ஒருத்தர் என்பது அவரது கதைகளை வாசிக்கத் தொடங்கிய சொற்ப நேரத்தில் தெரிய வந்தது.

இவைகள் கதைகள் அல்ல, அந்த மண்ணிற் பிறந்த எழுத்தாளப் பெண்மணியின் கண்ணீர்த்துளிகள். உதிரத்தையும்,உணர்வையம் சேர்த்துப் பிழிந்தெடுத்த வேதனையை வெளிப்படுத்தி வாய்விட்டழவும் முடியாத நேரத்தில், மன ஓடையிலிருந்துது வாய்க்காலாய் வழிந்தோடும் துல்லிய துயர்ப் படிமங்கள்.

இந்தக் கதைகளின் கருத்துக்கள் என்ன என்று யாரும் கேட்டால், சட்டென்ற வந்த சமுதாயமாற்றத்தில் பாரிய வாழ்க்கை விழுமியங்கள் அர்த்தமற்றுப் போகும் போது,மண்ணோடு தங்களைப் பிணைத்த பெரும்பான்மையான கிராமத்து மக்கள் திசை தெரியாது பல பக்கங்களுக்கும் பாதுகாப்புத் தேடி ஓடும்போது, சாதாரண வாழ்க்கை அசாதாரணமான அவலங்களின் சாட்சியாகியதை இதில் எழுதப் பட்டிருக்கும் பல கதையின் கருத்துக்கள் கண்ணீருடன் தொடர்கிறது என்பதுதான் எனது விளக்கம்.

சட்டென்று சரியும் சரித்திரத் தடயங்கள்:
இதற்கு உதாரணம். இவரது படைப்பின் பெயரான,’வன்னியாச்சி’ என்ற சிறுகதை. அந்தக் கிராமத்திலேயே வயதுபோன,எண்பத்திரண்டு வயது மூதாட்டியைச் சுற்றிப் படைத்திருக்கும் கதை ஓவியம் இந்தக் கதை. அவளின் அப்பாவின் அழகிய ‘நாச்சியாராக’ வலம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு முன் முன்,சரசாலையிலிருந்து வந்து தன்னை மணமுடித்து, அவ்விடத்து இயற்கை வனப்புகளுடன் இணைந்து திரிந்து.காதலைத் தந்த கணவன்,சட்டென்று பாய்ந்து வந்த ‘இந்தியனின்’ குண்டுக்குப் பலியான துயரத்தை நினைத்துப் பெருமூச்சு விடுகிறாள்.

கிழவியின் இளவயது நினைவுகள் மூலம்.படைப்பாளி எங்களையும் இழுத்துக் கொண்டு,மாங்குளத்திலிருந்து துணக்காய் போகும் வழியில் இருக்கும் அழகிய கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார்.மூதாட்டியின் நினைவலைகளில் தத்தளிகும் கிராமத்தின் பழைய சரித்திரத்தின் மூலம் ஒரு வரலாற்றை எங்கள் முன் விரிக்கிறார் iவாகசி விசாகத்தில் நடக்கும் பொங்கலை நினைத்து ஆதங்கப் படுகிறாள்.கடைசிக் காலத்தில் உயிருக்குப் பயந்தோடிக் கொண்டிருக்கும் தனது குடும்பத்திற்கு அவள் வைத்திருந்த நூறு ரூபாயையும்
எடுத்துக் கொண்டு ஓடிப் போய் உதவி செய்யமுடியாத வேதனையுடன் அந்த மூதாட்டி பொருமுகிறாள். இப்படி நிர்க்கதியாகப் பெருமூச்சுடன் பல கதை மாந்தர்கள் இவரின் படைப்புகளில் நடமாடுகிறார்கள்.

’83ம் ஆண்டு பரந்தன் சந்தியில் விழுந்த குண்டுச் சத்தத்தோடு ஓடத் தொடங்கினார்கள்,இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் (சாம்பல் மேடு,பக் 77)’. அப்படித் தொடர்ந்து ஓடிய,தாயைச் ஷெல்லடியில் பறி கொடுத்த எழைக் குடும்பத்தில்,சில வினாடிகளில் சீறி எறியப் பட்ட எதிரியின் ஆக்ரோஷத்தில் எரிந்து சாம்பலான ஏணையிற் கிடந்த சிசுவின் மரணம் படிபோர் மனத்தைத் துடிக்கப் பண்ணுகிறது.-சாம்பல் மேடு-(ஈழநாடு-92)

பாரம்பரிய சமய நம்பிக்கைகள்:
பாரம்பரிய நம்பிக்கைகள் போர்ச் ‘சூழலிலும் தொடர்ந்தது என்பதற்கு,’காணிக்கை’வெளிச்சம்-96) கதை ஒரு சான்று.கிராமத்தார் வளர்க்கும் மாட்டிற் கறக்கும் முதற்பாலும்,அவர்கள் நட்ட வாழை மரம் போட்ட முதற் குலையும் காணிக்கையாகக் கடவுளுக்குக் கொடுப்பது சொல்லப் படுகிறது.ஆனால் வறுமையில் வாடும்போது அந்தப் பாரம்பரியத்தின் நியதி மாறுகிறது.காணிக்i சாதாரண மனிதத்தின் தேவையை நிறைவு செய்கிறது.

தாமரைச் செல்வியின் ‘பிராந்தியக்காதல்’ கனிந்த படைப்புக்களைப் படிக்கும்போது அவரின் தனித்துவம் என்பது தன்னைச் சுற்றிய உலகை ஒரு திறமான ஆய்வாளன் போல் ஆவணப் படுத்தியிருப்பதுதான். இன்னும் பல வருடங்களின்பின் திரும்பிப் பார்க்கும்போது,இந்தத் தொகுதியிலுள்ள கதைகளின் வாயிலு+டாகப் பல ஆய்வுகள் நடக்கும்.அவை,பாரம்பரியத்தைப் போற்றி வாழந்த ஒரு சாதாரண சமுதாயம் என்னவென்ற ஒரு குறிப் பிட்ட குறுகிய காலத்துக்கள் அவர்களின் பல தலைமுறைகள் காணாத மாற்றங்களுக்கு முகம் கொடுத்தார்கள் என்பது பெரிய ஆய்வாக இருக்கலாம்.

இடம் பெயர்தல்:
ஓரு மனிதனுக்கு வரும் மன அழுத்தங்களில், மிகப் பெரிய மன அழுத்தம் அவர்கள் அன்புடனும் பாசத்துடனும் நேசித்த உறவினர் இறப்பைத் முகம் கொடுப்பதாகும்.
அதற்கு அடுத்ததாக உலகத்திலுள்ள எந்த மனிதனும் படும் வேதனை,தாங்கள் பிறந்து வளர்ந்த,பிள்ளைகள் பெற்று அவர்களை ஆளாக்கிய, உத்தியோகம் பார்த்து,உறவினர்கள்,சினேகிதர்கள் என்ற ஒரு பெரிய வட்டத்துக்குள் வாழ்ந்த நிலத்தை, அன்பம் அமைதியும் தந்த சூழ்நிலையை,பாரம்பரியத்தைக் கட்டிக்காத்த சமுதாயப் பிணைப்புக்களைச் சட்டென்று இழந்து விட்டு இன்னொரு இடம் பிரிவதாகும்.

தனது எதிர்காலத்தின் தேவைக்காக, உத்தியோக ரீதியாக,திருமணத்தின் தேவைக்காக எனப் பல காரணிகளால் பல நாள் திட்டமிட்டு, ஒரு வீடு வாங்கிக்கொண்டோ.வீடு கட்டிக் கொண்டோ ஒரு மனிதன் போகும்போது வரும,;’பிரிவு’காரணமான மன அழுத்தத்திற்கும், தற்செயலாக வந்த பெருங்காற்றில் சட்டென்று முறிந்து விழுந்த கிளையாக,அனைத்தையும் இழந்து தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடும் போது மன அழுத்தத்திற்கும் உள்ள பாரிய வேறுபாடுகளை, வேதனைகளை வெற்று வசனத்தில் கொட்டி விடமுடியாது. ஆனால் அந்த நிகழ்வுகளைத் தத்ருபமாக பிரதி
பலிக்கும் இவரின் மிகவும் வசன,வார்த்தைத் தொடர்கள் எங்களையும் அந்த மக்களுடன் ஓடப் பண்ணுகிறது.

பிற்போக்குவாத சிந்தனைகள்
சமுதாயத்தில் ஊடுருவிப் போன பழையப் பி;போக்குக் கட்டுமானங்களையும் உணர்வில் சுமந்துகொண்டோடும் சுயநலம் பிடித்த மனிதர்களைச் சுடுவார்த்தைகளால் சாடவேண்டும் என்பதை மௌன மொழியில் ஆணையிடுகிறார்.

ஆண்மையின் ஆளுமை வக்கிர புத்தி,மற்றவர்களை அடக்கியாழவேண்டும் என்ற தன்னிறைவுச் செயற்பாடுகள் எந்தச் சூழ்நிலையிலும் சில தமிழர்களிடமிருந்து அழியப் போவதில்லை என்பது இவரின்’அக்கா’-( நாற்று-1999.)’சுயம்’,(வீரகேசரி1998) போன்ற கதைகளில் பிரதிபலிக்கின்றன..

வெளிநாடுகளில் பல கடினமான வேலை செய்து உழைக்கும் உறவினர்களிடமிருந்து எத்தனை வழிகளில் பண உதவி பெறலாமோ அவற்றைப் பெற்றுக்கொண்டு,தங்களுக்கு உதவியவனின் அன்றாட துயர் வாழ்க்கையின் யதார்த்தத்தின் பிரக்ஞை அற்ற ஆடம்பரமாக வாழும் ஒரு புதிய பணக்காரக் கூட்டத்தின் வாழ்க்கை முறை சில கதைகளில் திறமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

எதிரி கிராமத்தை நோக்கி வரக் காரணமான சில நிகழ்வுகள்

‘சில வேளைகளில் சில இழப்புக்கள்’ஈழமுரசு-1986.’பெடியள் அவங்கட ட்ரக்குக்கு குண்டு வச்சிட்டாங்கள் போல கிடக்கு,அவங்கள் கண்டபாட்டுக்குச் சுடுறான்கள்’.கடன்பட்டு வாங்கிய பாணைக் கூட உண்ணமுடியாமல்,அவர்களின் உயிர்கள் உடமை என்பன சட்டென்று ஒரு நிமிடத்தில் இழந்து விட்டதை உணர்த்தும் கதை

-போர்ச் சூழ்நிலையில் செக் பொயின்ட்ஸ் என்பவை. என்னவென்று அப்பாவி மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாக்கி அவர்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கியது என்பதை’ ‘அவன்,அவள்,ஒரு சம்பவம்'( ஈழமுரசு 1987) என்ற கதை சொல்கிறது.
– போரின் காரணிகள், போரைத் தொடங்கியவர்கள்,தொடர்பவர்கள், என்ற விடயங்களை யாரும் கேள்வி கேட்டதாகவோ அல்லது தங்களுக்கள்ளே என்றாலும் அசை போட்டுப் பார்க்கவில்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு,
– எந்த நாடாக இருந்தாலும் போர் நடந்துகொண்டிருக்கும்போது அந்தப் போர் பற்றிய விமர்சனங்களை அல்லது அபிப்பிராயங்களை எழுதுவது ஆபத்தான விடயம் என்பதால் மனிதத்தின் உள்ளணர்வின் கேள்விகள் இப்படைப்புக்களில் இடம் பெறவில்லையா?

– போரில் ஈடுபட்ட பல தமிழ் இiளுஞர்கள் இந்தமாதிரிச் சமுகத்திலிருந்தும்தான் சென்றார்கள். அது பற்றிய எந்த சான்றும் இக்கதை மாந்தர்களில் பிரதிபலிக்கப் படவில்லை.

என.;ஜி.ஓ
–‘ஒரு யுத்தம் ஆரம்பம்’-(ஆனந்த விகடன் 1983) யுத்தத்தில் பாதிக்கப் பட்ட எழைகளுக்காக அந்நியர் கொடுக்கும் பணத்தில்,என் ஜி.ஓ. என்ற பெயரில் தாங்களும் தங்களைச் சேர்ந்தவர்களும நன்மை பெறுவதை இக் கதையில் வெளிப் படுத்துகிறார். போர்ச் சூழலை வைத்துப் பல வழிகளிலும் பெரிய மனிதர்களாகுவதைப் போர் தொடங்கிய காலத்திலேயே அவதானித்து எழுதியிருக்கிறார். பிணத்தில் பணம் படைத்த பலர்,சாதாரண கிராமத்துத் தமிழனை மட்டுமல்ல இந்தக் கதையில் வரும் பட்டதாரியையயம் ஏமாற்றி,உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இன்று பெரிய மனிதர்களாக உலவி வருகிறார்கள் என்பது தமிழர் அத்தனைபேருக்கும் தெரிந்த உண்மை, இதை இவர் ஒரு வேலையற்ற படித்த பட்டதாரியின் பார்வையில் எழுதியிருக்கிறார். ஏனெ;றால் துயர் பட்ட தமிழ் மக்களைத் தங்கள் உயர் நிலைக்குப் பாவிக்கும்போது படித்தவர்களும் ஏமாற்றப் படுகிறார்கள் என்ற உண்மை துல்லியமாக இக்கையூடாகச் சொல்லப் படுகிறது.

போரினால் விலையேறும் கல்யாணச் சந்தை:
இளம் தலைமுறை ஆண்கள் போரினால் அழிந்துகொண்டிருந்த காரணத்தால், காலம் காலமாகவே நடைமுறையிலிருந்த ‘சீதனம்’கல்யாணத்திற்கு ஆண்கள் தட்டுப்பாட்டால் எப்படி ஏறிக் கொண்டு போகிறது என்பதைச் சில கதைகள் விபரிக்கினறன.’விழிப்பு’ (ஈழமுரசு 94) என்ற கதையில்,ஜேர்மன் மாப்பிள்ளைக்கப் பெண்பேசும் மாப்பிள்ளை வீட்டார்,’வெளி நாட்டுப் பொம்புளயள் நிறைய நகை நட்டுப் போட்டிருக்கினம்,வீடியோவில பார்த்தம்,பொம்பளக்க நிறைய நகை நட்டு வேணும்,வீடு.ஒன்றும வேணும்,சொத்து ஒன்டு இருக்கத்தானெ வேணும்’ என்று சொல்லி முப்பது பவுண் நகைக்கும்,மேற்கு நாட்டில் வாழப் போகும் தம்பதிகள் இலங்கையில் சொத்த வைத்திருக்க வேண்டும் என்றும் மாம்பிள்ளை வீட்டார் பேரம் பேசுவது என்ற பாரம்பரியம் தொடர்கிறது. அதிபயங்கரமான போர்ச் சூழலிலும் பேராசை பிடித்தவர்கள் ஒரு நாளும் மாறப் போவதில்லை என்பதைக் காட்டுகிறது.

சாதகம் பொருத்தம் பார்த்தல்@
நாளோடும் பொழுதொடும் போர் தொடர்ந்து கொண்டு மக்கள் எதிரியின் குண்டடியில் விட்டில் பூச்சிகள்பொல் விழுந்த மடிந்து கொண்டிருக்கும் போதும், திருமணங்களுக்கச் சாதகமும் பொருத்தமும் பார்ப்பதும் தொடர்கிறது;. கல்யாணமாகிச் சொற்ப நாளில் ஷெல்லடியில் மனைவி சிதறிச் செத்த சில மாதங்களில் அவன் குடும்பத்தினர்,சாதகப் பொருத்தம் பார்த்துப் பெண்பார்க்கிறார்கள்.’ முதல் செய்த கல்யாணத்துக்கும் சாதகம் பாhத்துத்தானே நடந்தது’ என்ற அவனின் கேள்வி, சாதகம், கடவுள் நம்பிக்கை என்பன போர்க்காலத்தில் அர்த்தமற்றுப் போவதை எடுத்துரைக்கிறது.

ஒரு சமூகத்தின் அடித்தளமான விவசாயம்:
இக்கதைகள் பல விவசாய சமூகத்தைப் பற்றியது. அதனால் போர்ச்சூழலில், மண்ணை நம்பி வாழும் மக்களின் விவசாயம் சார்ந்த பல விடயங்கள் சீர்குலைந்ததால் அவர்கள் படும் துன்பம் சிறு சிறு சம்பவங்கள் மூலம் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது.’ஓட்டம்’ (பக் 284)(வெளிச்சம்-2001) என்ற கதையில்,’90களில் வயல் செய்வது என்பதும் சிரமம் ஆயிற்று.கிருமிநாசினிகளின் தடையால் நெல் விளைச்சல் குறைந்து விட்டது.ஆனாலும் வயல் செய்வதை விட முடியவில்லை.96ம் ஆண்டு எல்லாமே திசை மாறிவிட்டது’ என்ற கதாபாத்திரங்களிக் ஏக்கமான குரல்களின் வழியே விவசாயிகள் என்ன துயர்பட்டார்கள் என்ற பதிவிடப் பட்டிருக்கிறது.ஏனென்றால்,மிதி வெடிகளுக்குப் பயந்து வயலுக்கள் யாரும் இறங்கவில்லை.பசளை வாங்க முடியாத நிலை,நெல் சங்கங்களில் நெல் விற்கமுடியாத நிலை,போன்ற விவசாயிகளின் நிலையை இக்கதையில் காணலாம்.

போரினால் மனநிலை சிதறிய சிலர். கொழும்பில் பிடிபட்டுச் சித்திரவதைபட்டதால் மனநிலை சிதறியவர்கள்,கொழும்பில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டதால் அயலவர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட அப்பாவிப் பெண்கள் என்று போரினாற் பாதிக்கப் பட்ட அத்தனை மக்களையும் தாமரைச் செல்வியின் கதைகள் பிரதி பலிக்கின்றன.

போரினால் பலியாகும் இளம் குழந்தைகள்:

தமிழ்-சிங்கள புத்தாண்டைக் கொண்டா அதிகாலையில்(14.4.18) எழுந்தபோது,பி.பி.சி செய்தியில்,அமெரிக்கா,பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற மூன்று பெரும் மேற்கு நாடுகள் சிரியாவில் குண்டு போட்டுத் தகர்த்துக் கொண்டிருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தது. அவர்கள் அதற்கச் சொல்லிய காரணம், சிரியா நாட்டில் கெமிக்கல் ஆயதங்களால் குழந்தைகள் பாதிக்கப் படுகிறார்கள் அதைத் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதாகும். இலங்கையில் தொடர்ந்த போரில் பல்லாயிரக் கணக்கான இளம் குழந்தைகள் இறந்தார்கள். போருக்குப் பிரமாண்டமான ஆயதத்தை யார் கொடுத்தார்கள் என்று தெரியும் தாமரைச் செல்வியின் கதைகளில் என்னை அழப் பண்ணிய கதைகள் பல. முக்கியமாக ஏணையில் ஆடிக்கொண்டிருந்த தாயற்ற சிசு(‘சாம்பல் மேடு’-ஈழநாடு,92) சில வினடிகளில் கருகிய பரிதாபம், பசி தாங்காமல் குண்டு வருவதையும் தாங்காது ஒருவாயச் சோற்றுக்கு ஓடிப் போய் இறந்த சிறுவன் (‘பசி’சிரித்திரன் 94) ) என்று எத்தனையோ கதைகள் எங்கள் சமுகத்தின் எதிhகால வாரிசுகள் எப்படிக் கொடுரமாகக் கொல்லப் பட்டார்கள் என்பதை விபரிக்கின்றன.

போரைத் தாங்கும் மனபாவம்:
-புற்று நோய் என்று வைத்தியர் சொன்னபோது இனி உயிருடன் இருக்கும் நாட்களை எப்படியும் வாழ்ந்து முடிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்துடன் வாழும் நோயாளிபோல்,போர்ச் சூழலில் வாழந்த மக்கள்,ஹெலியும், கிபீர் விமானமும்,பொம்மரும் பறந்து வந்து குண்டுகளைக் கொட்டி மக்களையழிக்கும்போது அவர்கள் அதை எதிர்பார்த்து வாழப் பழகிய மனநிலையை,’ எங்கேயும் எப்போதும்’ (முரசொலி,87) சொல்கிறது.

காணாமற் போனவர்கள்: போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன். ஆனால் எங்கள் தமிழ் மக்கள் ‘காணாமற்போன தங்கள் உறவினர்களைத் தேடியலையும் துயரத்தை அடிக்கடி பார்க்கிறோம். ‘அடையாளம்'(ஞானம் 2002) என்ற கதையில்,எலும்பாக் கண்டு படிக்கப் பட்ட மனித உடலின் மிச்ச சொச்சங்களை வைத்துத் தங்கள் உறவினர்களைத்தேடத் தமிழினம் படும் துயர் நெஞ்சைப் பிழிகிறது.’வேலிபாய்ந்து ஓட முற்பட்ட அந்தக் கணத்தில் சுடப்பட்டு வேலி மேலேயே தொங்கிக் கொண்டிருந்த அதே நிலையில் எலும்புக் கூடாகப் போயிருந்த மனிதன்’பக்308) என்ற வசனங்கள் கண்களில் நீரைக் கொட்டின.

தலைவர்கள் பற்றிய தாமரைச் செல்வியின் கதை,’ஊர்வலம்'(வெளிச்சம்-99) என்ற பெயரில் எழுதப் பட்டிருக்கிறது.83;ம் ஆண்டு போர் தொடங்கி எத்தனையோ இழப்புக்களைத் தமிழர்கள் எதிர்நோக்கி அழிந்து கொண்டிருந்தாலும்,’யாழ்ப்பாணத்துத் தலைவர்கள் வருவதால் கூட்டம் முக்கியத்துவம் பெறும்'(பக்253) என்று பெருமைப் படுகிறான் இளவயதிலிருந்து’தமிழர்’ அரசியலுக்காகத் தன் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கொண்ட ஒரு தமிழன். தலைவர்கள் வரும் பாதையில் அவர்களின் கால் பதித்து வர நிலப்பாவாடை விரித்து வரவேற்று ‘தலைவரின்’ அடுக்கு மொழியில் உணர்வு பொங்கித் தன் வாழ்க்கையையே இழப்புக்களுக்காக இழந்து விட்ட தகப்பன், மகனை ஊர்வலத்திற்கு வரக் கேட்க. ஆந்த இளைஞன் கேட்கிறான்,’அதுக் கென்ன வாறன்,ஆனால் இந்த ஊர்வலங்கள் நடப்பதால் மட்டும் எங்கட பிரச்சினை தீர்ந்திடுமே’ என்று மகன் கேட்கும்போது, தனது பதினேழுவயதில் எனக்கேன் இது தோன்றாமற் போனது? ஏன்று சிந்திக்கிறான் தகப்பன்.

உதவிகள்: போரினாற் துயர் பட்ட எம்மக்களுக்குப் புலம் பெயாந்த மக்களின் சிறு உதவியும் எவ்வளவு முக்கியமானது என்பதை உரக்கமாகச் சொல்கிறது,’தூரத்து மேகங்கள்'(தினக் குரல் 2005) என்ற படைப்பு

 

நம்பிக்கை:
தங்கள் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் இலங்கைப் படையை,வியட்நாமை ஆக்கிரமித்த அமெரிக்கரோடு படைக்கப் பட்ட கதையியான,’ நாளைய செய்தியில்’ (ஈழநாடு 96), நாங்கள் எங்கள் மண்ணை மீட்டெடுப்போம்,எதிரிகள் தோல்வியுடன் திரும்பிப் போவார்கள் என்ற நம்பிக்கையின் தொனி. ஒலிக்கிறது. ஆனால் அமெரிக்கப் படை 1967ல் வியடநாமை விட்டுப் போனது. இலங்கையில் எதிரியின் குரூரம் 2009 வரை தொடர்ந்தது.

எந்த சார்புமற்ற இலக்கியமா?
தாமரைச் செல்வியின்,அத்தனை கதைகளையும் படித்தபின்,இத்தொகுதிக்கான விமர்சனத்தை எழுத முயன்றபோது. கதைகளில் நான் எடுத்த குறிப்புக்களை மிகவும் கவனமாக ஆராய்ந்தேன் ஏனென்றால் ஒரு படைப்பாளி தனது அடிமனத்துக்குள் புதைந்து கிடக்கும் தனது,’படைப்பின் அற நிலையை’ மிகவும் ஆழமாக ஏதோ ஒரு விதத்தில் பதிவிடுவான். இவரது,முதலாவது கதை,’பாலம்'(ஈழநாதம்-1992). இக்கதைதையை இவர், தனது முதலாவது கதையாக வேண்டுமென்றே பதிவிட்டிருக்கிறாரா என யோசித்தேன். ஏனென்றால்,

இக்கையில் வரும் ‘பாலம்’ வெறும் பாலமல்ல. இவரின் எண்ணத்தில் தொங்கி நின்ற கருத்துக்களின் ‘பாலம்’. புழைமையையும் புதுமையையும் பாரம்பரியமாகச் சுமந்து நின்ற பாலம்.
கல்லாலும் மண்ணாலும் கட்டப் பட்ட பாலமல்ல பாரம்பரிய கிராமத்து மக்களின் உறவு. தொடர்பு. சரித்திரம், சம்பிரதாயம், எதிர்பார்ப்பக்கள்,என்பவற்றின் அடையாளமான பாலம்.

அதைக் கடந்து எதிரி தங்கள் கிராமத்துக்கு முன்னேறப் போகிறான் என்பது நிதர்சனம். அதைத் தடுக்க என்ன செய்வது?

அவன் பாலத்தை ஒரு தமிழ்ப் போராளி; தகர்க்கிறான். பாலத்தை மட்டுமா? ஏதிரியால் அழிக்கப் படப்போகம் தங்கள் வாழ்நிலையை அவன் தகர்க்கிறான். வாழ்ந்த பாரம்பரியத்தைத் தகர்க்கிறான். ஏனென்றால், முற்றுகையிட வந்த எந்த எதிரியும்,தான் பிடித்து வைத்திருக்கும் பூமியில் பல நாள் தங்கி விடப் போவதில்வை என்ற சரித்திரம் அவனுக்குத் தெரியும். போர்ச் சூழலால் சிதறப் படப் போகும் ஒரு சமுதாயத்தைத் தன்னால் முடியுமட்டும் காப்பாற்ற, எதிரி தன் இடத்திற்கு வரும் வழியை அடைத்து ‘ அகதி’ நிலைக்குள்த்தான் அல்லற்படப் போவதும் அவன் எதிர்பார்த்ததே. ஆனால் ஒரு காலத்தில: இந்தப் பழைய பாலம்’ மட்டு மல்ல அவர்களால் உடைக்கப் பட்ட பாடசாலைகள், குளக் கட்டுக்கள்,கோயிற் கோபுரங்கள்,அழகிய வீடுகள்,தெருக்கள்,தெருக்கள் என்ற அத்தனையும்,புதிதாகக்’ கட்டப் படும் என்ற அறிவு அவனக்குண்டு. ஏனென்றால் இடம் மாறித் தத்தளித்து எங்கேயோ ஓடிய இந்த மண்ணின் மைந்தர்கள் திரும்பி வருவார்கள் என்று அவனுக்குத் தெரியும். இது மக்களின் இலக்கியம்,அதில் ஒரு எதிர்பார்ப்பு இல்லமலிருப்பது அசாதாரணம்.

 

தாமரைச் செல்வியின் படைப்புக்களில் ‘அரசியல்’ இல்லை என்பவர்கள் ‘பாலம்’ என்ற கதை மட்டுமல்ல வேறு சில படைப்புக்களையும் ஆழமாகப் படிக்கவும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s