‘இன்று கிழக்கிலங்கையின் மாபெரும் அண்ணல் விபுலாந்த அடிகாளார் பிறந்த நாள்’ என் போன்ற கிராமத்துப் பெண்களின் கல்விக்கு வித்திட்ட புதுமைத் துறவி,விபுலானந்தரை நினைவு கொள்வோம்-27.3.18

 

இன்று உலக நாடகக் கலையைப் போற்றும் நாள். அத்துடன்,எங்கள் கிழக்கிலங்கை மாமனிதன், நாடகத் துறையின் திறமைகளை ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களைப் பன்முகத் தனமையில் ஆய்வு செய்து ‘மாதங்கசூளாமணி’ என்ற நாடக விரிவுரைப் பத்தகம் எழதிய,’யாழ்நூல் தங்த தமிழ்த்துறவி சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களின் பிறந்தநாள்.

மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் அவர்களின் சமுதாயமுன்னேற்றத்திற்கும் கல்வியறிவு முக்கியம் என்பதைச் சொன்ன அறிஞர்களில் கிழக்கிலங்கை பெற்றெடுத்த,முத்தமிழ் வித்தகரான விபுலானந்த அடிகளாரும் ஒருத்தர். சமயத்தின் உயர் தத்துவங்களை சமுதாய மேம்பாட்டுக்குச் செயல்படுத்திய கிழக்கிலங்கைத் துறவியின் பிறந்த நாளான இன்று (18.3.1892),அவரின் சமத்துவக் கல்விச் சேவையினாற் பயனடைந்த என்னைப் போல கிராமியப் பெண்கள் அவரின் பிறந்த தினத்தை ஞாபகத்திற் கொண்டு,அவரை மனமார வணங்குகிறோம்.

அவரின் முயற்சியால் உண்டாகி,’அன்பன்’ நடராஜா என்ற இராமகிருஷ்ண பக்திமான் தலைமை ஆசிரியராகவிருந்த, அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில்,எனது ஐந்தாவது வயதில், வெள்ளித்தட்டில் பல பூசைப் பொருட்களுடன் பரப்பியிருந்த பச்சை அரிசியில், பரமஹஷம்சர் இராமகிருஷ்ணர், சாரதா தேவி, வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் படங்களுக்கு முன், எனது தகப்பனாருக்கும் ஆசிரியைக்கும் நடுவிவிலிருந்துகொண்டு,தட்டில் பரப்பியிருந்த பச்சையரிசியில் ;ஆனா,ஆவன்னா’ எழுதத் தொடங்கியது எனது இளவயது ஞாபகங்களில்; மிக முக்கியமானதொன்று.

அழகிய காலைநேரத்தில் அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு,எதிர்காலத்தில் எங்கள் அக்கரைப்பற்று மாவட்டத்திலிருந்து லண்டன் வந்து திரைப்படத் துறையில் பட்டதாரியாவாள்,மருத்துவரலாறில் முதுகலைப்பட்டம் பெறுவாள்,அத்துடன் பல மேற்படிப்புக்களையும் தொடர்வாள் என்ற கற்பனை கடைசி வரைக்கும் இருந்திருக்காது.

நான் பிறந்த கோளாவில் கிராமத்தில்,பெண்களுக்கான படிப்பும் அதையொட்டிய மேம்பாடும் மிகவும் அருமையாகவிருந்த கால கட்டத்தில்,பாரதி,காந்தி,பெரியார் போன்றவர்களில் ஈர்ப்பு கொண்ட எனது தந்தை போன்றவர்கள் பெண் கல்வியில் மிகவும் ஆர்வமாகவிருந்தார்கள்.திருக்கோயிலைச் சேர்ந்த எங்கள் உறவினர்(பெயர் ஞாபகமில்லை-தெரிந்தால் சொல்லுங்கள்) அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்?) படித்துக் கொண்டிருந்தார்.அவர் வீட்டுக்கு வரும்போது இந்தியாவில் நடக்கும் தமிழர்கள் விழிப்புணர்ச்சி,(திராவிட அரசியலின் எழுச்சி?)பெண்களின் படிப்பு என்பது பற்றியெல்லாம் பற்றி எனது தந்தையாரிடம் பேசிக்கொண்டிருப்பார்

எங்கள் ஊர்ப் பெண்களுக்கு அக்காலத்தில் மேற்படிப்புக்கள் படிக்கும் வசதிகள் கிடையாது. 1925ம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் உண்டாக்கிய காரைதீவு சாரதா மகளீர் வித்தியாலயத்தில் எனது மைத்துனியான திருமஞ்சணம் என்பவர் (இந்தியா சென்று தென்னிந்திய நடிகர் பி.யு.சின்னப்பாவுடன் நடித்த மல்யுத்த ஜாம்பவான் எங்கள் மாமா சான்டோ சங்கரதாஸ் அவர்களின் மகள்) ஊரிலிருந்து சென்று அங்கிருந்த விடுதியில் படித்த எங்கள் ஊர் முதல் இளம் பெண்ணாகும்.

அவரது தாயும்(இராசம்மா மாமி,மற்ற மாமிகளான, சீவரத்தினம்,இராசம்மா,போன்ற பலர்)அக்கால கட்டத்;திற்கு முன், அக்கரைப்பற்று மெதடிஸ்ட் மிசன் பாடசாலையில் படித்தார்கள் என்று எனது மைத்துனி திருமதி ஜானகி; காங்கேசபிள்ளை நேற்று என்னிடம் சொன்னார்

அதைத் தொடர்ந்து விபுலானந்தரால் உண்டாக்கப் பட்ட(1925 -1928) அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் பாடசாலையில் எனது மூத்த சகோதரிகள் உட்படப் பல பெண்கள், தங்கள் படிப்பைத் தொடங்கினார்கள். அத்துடன் என் போன்ற கிராமத்துப் பெண்களின் படிப்பும் தொடர்ந்தது.

 

இலங்கையில் பௌத்த மதம் வரமுதல் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில்,கல்வி இந்தியாவைப்போல், ஒருகுறிப்பிட்ட படித்தவர்களால் படிப்பை விரும்பியவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. எனது தாத்தா கந்தப்பரின் தந்தை வையாளிப்போடியார் காலகட்டத்தில் (1850ம் ஆண்டு காலகட்டம்?) எங்கள் ஊரில் ‘திண்ணைப் பள்ளிக்கூடம்’ இருந்ததாகவும் அதில்,எனது தாத்தா படித்ததாகவும் எனக்குச் சொல்லப்பட்டது.

அக்கால கட்டத்தில் படிப்பு என்பது, மூதாதயைரின் வழிமுறைத் திறமைகள்,கலைப்பாரம்பரியங்களைத் தங்கள் பரம்பரைக்குச் சொல்லிக் கொடுப்பதற்குச் செயற்பட்டதா என்ற கேள்வி,எங்கள் ஊரின் பழைய சரித்திரத்தைத் திருப்பிப்பார்க்கும்போது எனக்குள் எழுகிறது.

அதாவது எனது தாத்தா மிகவும் ஆளுமையுள்ள சித்தவைத்தியராகவும், மந்திரியத்தில் வல்லவராகவும் வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியும். உதாரணமாக, அவர் இறந்ததும் அவரின் மந்திர ஓலைகளுடன் ஒரு பெட்டியில் வைத்திருந்த மண்டையோட்டையும் மாய மந்திர தந்திரங்களில் நம்பிக்கையற்ற.பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப் பட்டிருந்த எனது தகப்பனார் குழந்தைவேல், தூக்கி எறிந்ததாக எனது தமக்கை மீனாட்சி வடிவேல் எனது சிறுவயதில்,எங்கள் தாத்தா பற்றிய பேச்சுக்கள் வரும்போது சொல்லியிருக்கிறார்.

எனது தாத்தைவைப்போல், பல மந்திரத்தின் மூலமும். மூலிகைகள் பற்றிய அறிவு மூலமும் வைத்தியம் செய்பவர்கள் நான் கோளாவில் கிராமத்தை விட்டு வெளியேறும்வரை இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் எங்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் சிறந்த வைத்தியர்கள், பாம்புக்கடி வைத்தியம். பைத்தியத்தைக் குணப்படுத்தும் சிகிச்சைகளில் பிரபலம் பெறிறிருந்தார்கள். அவர்களிடம் சிகிச்சை பெற இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து நோயாளிகள் எங்கள் ஊருக்கு வருவார்கள்.

அத்துடன் ஊரிலுள்ள பல’படித்தவர்களின்’ வீடுகளில் மிகப் பெரிய எழுத்துக்களுடன் உள்ள ‘மகாபாரதம்.இராமயணப் புத்தகங்களுடன் பல சமயப் புத்தகங்களும் இருந்தன. பக்கத்து வீட்டு வைரவப் போடியார் தனது பெரிய ‘மகாபாரதப் புத்தகத்தை விரித்து வைத்து அதில் லயித்துப்; போய் அதை பெரிய சத்தத்துடன் வாசிப்பார்.

‘நீ வெறுக்கிலன்,இருந்த மன்னவர் திகைக்கிலன் பலர் மறக்கிலன்,
ஈ இருக்குமிடம் எனினும் இப்புவியில் யான் அவர்க்கு இடம்;; கொடுக்கிலன்’ என்று பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களென்றாலும் கொடுக்கச் சொல்லிக் கேட்க வந்தகிருஷ்ண கிருஷ்ண பரமாத்மாவுக்குத் துரியோதன் சொன்ன கட்டத்தை
எதுகை மோனையுடன் இரசம் கொட்ட வாசிக்கும் கவனத்திலிருக்கும்போது, நான் எனது தம்பிகளுடன் அவர் வீட்டு மாங்காய்களைத் திருடிக்(மன்னிக்கவும்,இளமையிற் செய்த பல மாங்காய்த் திருட்டுகளில் இதுவுமொன்று) கொண்டது இன்னும் பசுமையான நகைச்சுவை நினைவுகள். அந்தப் புத்தகங்கள் பெரும்பாலும் 1800ம் ஆண்டின் கடைசியில் அச்சிடப்பட்டவை என்பது எனது ஞாபகம்.

எங்கள் வீட்டுப் பெட்டகத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பிரமாண்டமான ஏடுகள் பாரம்பரிய ‘கூத்துக்கள்’ பற்றிய விளக்கங்களைத் தன்னில் பதித்திருந்தன.அவற்றில் சிலவற்றை நான் கொப்பிகளில் எழுதி அப்பாவுக்கு உதவி செய்தேன். குத்துவைக்காத எழுத்துக்கள் நிரம்பிய ஏடுகளைப் படித்து விளங்கிக் கொள்வது 10-12 வயதான எனக்கு மிகவும் கடினமான விடயமாகும்.

1900ம் ஆண்டுகளில் கிறிஸ்தவ பாதிரிகளால் உண்டாக்கப்பட்ட பாடசாலைகளில்(அக்கரைப்பற்று ஆர்சி.எம்.பாடசாலை?) எனது தந்தையார் குழந்தைவேலும் (1911ல் பிறந்தவர்) கிராமத்திலுள்ள மற்ற மாணவர்களும் போய்ப்படித்தவர்கள் என்று சொல்லப் பட்டது.

தமிழ்க் கிராமங்களில் இப்படியான படிப்புகள் தொடர்ந்த காலத்தில் சிங்களப் பகுதிகளில்,கல்வி பௌத்த குருமாரின் கையிலிருந்தது.

 

இலங்கையின் கல்வி:

1505ம் ஆண்ட இலங்கையைத் தனவசமாக்கிய போர்த்துக்கீசரோ அல்லது அவர்களுக்குப் பின் வந்த டச்சுக்காரர்களோ (1656) இலங்கை மக்களின் கல்வியைப் பற்றி அக்கறைப்படவில்லை.இலங்கையின் செல்வத்தைச் சுரண்டிக் கொண்டு போவதில் கண்ணாகவிருந்தார்கள்.

டச்சுக்காரரைப் போரில் வென்ற ஆங்கிலேயர் (1796ல்) இலங்கையின் கரையோரங்களிற் தங்கள் ஆதிக்கத்தை நிறுவினார்கள். 1915ல் கண்டி இராசதானியை தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயர், தாங்கள் கொள்ளையடிக்கும் செல்வத்தின் கணக்கு வழக்குகள்,அவை எப்படிச் செலவழிக்கப்படுகின்றன என்பதைப் பதிவிட எழுதுவினைஞர்களைப் பயிலுவித்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்,அதில் ஒருசிலர் இலங்கையர். அதைத் தொடர்ந்து,ஆங்கிலேயர்களுக்குத் ‘தேவையான கல்வி’ இலங்கையர்களையம் உள்வாங்கி ஆரம்பிக்கப் பட்டது. ஆங்கிலேயர்கள் தங்களின் விருப்பத்திற்கிணையக் கூடிய ஒரு படித்த ‘வர்க்கத்தை’ உருவாக்கத் தொடங்கினார்கள்.
அப்படியான கல்வியைப் பெறக் கணிசமான இலங்கைவாசிகள் அந்நிய மதத்திற்கு மாற்றப் பட்டார்கள். இக்கல்வித் திட்டம் பாதிரிகளின் கையிலிருந்தது.

அந்தக் கல்வித் திட்டத்தை அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணியும் ஒருவர்க்கம் பயன்படுத்தித் தங்கள் குடும்பத்தையும்,உறவினர்களையும்,சாதியினரையும் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றினார்கள்.
1833ம் ஆண்டு கோல்புறுக் திட்டத்தின் பின் பாதிரிகளின் ஆளுமையிலிருந்த இலங்கையின் கல்வி அரசு கைக்கு மாறியது. ;’கொழும்பு அக்கடமி’ (றோயல் கொலிஜ்) 1935ல் ஆரம்பிக்கப் பட்டது.அதைத் தொடர்ந்து,கண்டி,காலிப் பகுதிகளிலும் கல்விக் கூடங்கள் பல (1935-37) ஆரம்பிக்கப் பட்டன.

யாழ்ப்பாணத்தில்,அமெரிக்க மிசனரியால் 1813ல் ஆசியாவிலேயே முதலாவதான பெண் பாடசாலை ஆரம்பிக்கப் பட்டது.1843ல் வேம்படி மகளீர் பாடசாலையும்,1896ல் சுண்டிக்குளி மகளீர் பாசாலையும்,ஆரம்பிக்கப்பட்டன.

கிழக்கிலங்கையில் கிறிஸ்தவ வெஸ்லெயன் மிசனரி பாதிரிகளால், வின்சென்ட் மகளிர் கல்லூரி 1820ல் ஆரம்பிக்கப்பட்டது.கிழக்கிலங்கை பரவலான கல்விவளர்ச்சியின்றி,அத்துடன்; பொருளாதாரத்திலும் பின் தங்கியிருந்தது.
கிழக்கிலங்கை பல்நூறு வருடங்களாகச் சைவ சமயம் சார்ந்த சமுகப் பண்பாடுகளின் பாரம்பரியத்தை,அரச உதவியின்றித் தங்கள் படிப்பின் மூலம்; பாதுகாத்துக் கொண்டிருந்தது. பாரம்பரியக் கலைகளான இயல் இசை.நாடகங்கள் கிராமங்களிலுள்ள கலைஞர்ளால் தொடர்ந்த கற்பித்தலால் வளர்ந்து கொண்டிருந்தது.

அப்படியாக காலகட்டத்தில்,கிழக்கிலங்கையின் கல்வித் தேவையையுணர்ந்து,மனித வளத்தின் வளர்ச்சி மேன்மையான சமூகக் கடமை என்றெண்ணி சமத்துவக் கல்விக்காகப் பல பாடசாலைகளை அமைத்த அண்ணல், புதுமைத் துறவி சுவாமி விபுலானந்தரை இன்று நாங்கள் நன்றியுடன் நினைவு கூருவோம். அவர் இலங்கையில் பாரதியின் கவித்துவத்தையும் சமத்துவக் கொள்கைகளையும் பிரபலப் படுத்தினார்.

அத்துடன் பாரதி பற்றிய கவியரங்குகள்,கட்டுரைப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் என்பன கிழக்கிலங்கையில் பிரபலமானது. நாடகக்கலை ஊக்குவிக்கப்பட்டது. பல பாடசாலைகள் நாடகப் போட்டிகளில் ஆர்வம் காட்டின.

நாடகக் கலையை மேம்படுத்த கிழக்கிலங்கையில் மாவட்டப் போட்டிகள் நடத்தப் பட்டன. எங்கள் கோளாவில் கிராமத்தின் தமிழ்க் கலவன் பாடசாலையும் பங்கு பெற்றது. ‘அசோகவனத்தில் சீதை என்ற நாடகத்தில் நான் அனுமராக நடித்தேன். அந்த நாடகம் போட்டியின் மூன்றாம் பரிசைத் தட்டிக் கொண்டு பெருமை பெற்றது.

பாரதி பற்றிய பேச்சுப் போட்டி ஒன்றிலும் பரிசைத் தட்டினேன். எந்த வருடம் என்ற ஞாபகமில்லை.மகாகவி பாரதி எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத இன்னொரு மாமனிதன். ஏனென்றால் எனது எழுத்தின் ஆர்வம்,அக்கரைப்பற்று மாவட்ட கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற, ‘பாரதி கண்ட பெண்கள்’ என்ற எனது முதற்படைப்புடன் ஆரம்பமாகியது.பாரதியின் சமத்துவக் கொள்கைகள்,பெண்கiளின் முன்னேற்றம் பற்றிய கவிதைகளால் ஈர்க்கப்பட்டு,சமுதாயத்தின் பல தரப்பட்ட மக்களுக்கும் கல்வியறிவைக்கொடுக்க அரும்பாடு பட்டு சுவாமி விபுலானந்த அடிகள்; அமைத்த கல்விக் கூடத்தில் படித்து வெளிநாடு வந்ததற்கும் அத்துடன் பல மேற்படிப்புக்களைத் தொடரவும் வழிகாட்டிய அண்ணலுக்கு என் மனமார்ந்த வந்தனங்கள்.

சாதி,வர்க்க பிரிவுகளின் அடிப்படையில் கல்வியையும் அதன் மேம்பட்ட பலன்களையும் சமுதாயத்தின் ஒருபகுதியின் மட்டும் தங்கள் உடமையாக வைத்துக் கொண்டிருந்த காலத்தில், தனது தளராத உழைப்பாலும் துணிவாலும் சாதாரண மக்களுக்குக் கல்வி கொடுத்த மகானுக்கு என் வந்தனம். தமிழர்களின் அதி உயர்ர்ந்த இலக்கியப் பொக்கிஷமான ‘யாழ்நூல்’ தந்தஞானி, ஆங்கில நாடகாசிரியன் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை நுணுக்கமாக ஆராய்ந்து’ மாதங்கசூளாமணி’ என்ற அற்புத விளக்கத்தைக் கொடுத்த வள்ளலுக்கு எனது சிரம் தாழ்ந்த வந்தனம்.

என்னைப் பின் பற்றிய பல பெண்கள் எனது கிராமத்திலிருந்தும், இன்னும் பல கிழக்கிலங்கைக் கிராமங்களிலிருந்தும் மேற்படிப்பைத் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையையும் தாங்கள் வாழும் சமுதாயத்தையம் மேம்படுத்துகிறார்கள் என்பது எங்களின் கல்விக்கு அடித்தளம் கொடுத்த விபுலானந்த அடிகாளாரின் மேன்மையான சரித்திரத்தில் பதிக்கவேண்டிய முக்கிய தகவல்களாகும்.

(அவரின் சமுகக் கடமைகளைச் செயற்பாட்டில் கொண்டுவர உந்துதலாக இருந்த இந்திய வரலாற்று ஆளுமைகள் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன்.விரைவில் பதிவு நடக்கும்).

 

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s