‘இன்று இலங்கைத் தமிழ்ப் பெண்கள் லண்டனிற் கொண்டாடும் அகில உலக மாதர் தினம்’;.

 

‘இன்று இலங்கைத் தமிழ்ப் பெண்கள் லண்டனிற் கொண்டாடும் அகில உலக மாதர் தினம்’;.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-3.3.18

இங்கு கூடியிருக்கும் சகோதரிகளே,
இன்று நாங்கள் உலக மாதர் தினவிழாவைக் கொண்டாடுவதற்காகவும்,அத்துடன் எங்களின் பண்பாடு,கலை கலாச்சார விழுமியங்களை, வெளிப்படுத்தும் பல நிகழ்வுகளை நடத்தவும் ஒன்று சேர்ந்திருக்கிறோம்; என்று எதிர்பார்க்கிறேன். இன்றைய நிகழ்வுகள் அத்தனையும் இங்கு வந்திருக்கும் பெண்கள் மனத்தில் ஒரு பூரிப்பையுண்டாக்கும்.தங்களின் திறமையை மற்றவர்கள் அங்கிகரிப்பதும்,அதன் பெருமையைப் பேசுவதைக் கேட்பதும் அந்தக் கலையைப் படைத்தவர்களை மிகவும் மகிழ்விக்கும் என்பது உண்மை.

இந்தமாதத்தில் உலகமெங்கும் பற் பல மாதர் அணிகளால்; அகில உலக மாதர் தினக் கொண்டாங்கள் நடைபெறும்.அதிலும் பெண்கள் தினவிழாவைப் பொறுத்தவரையில் இவ்வருடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால்,இதே கால கட்டத்தில் கடந்த நூற்றாண்டுகளுக்கு முன் பிரித்தானிய பெண் போராளிகளால் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.பெண்களின் முன்னேற்றத்தில் மட்டுமல்லாமல் பல சமுதாய மாற்றங்களுக்கு பெண்களுக்குக் கிடைத்த வாக்குரிமை ஒரு திருப்பு முனையாகவிருந்தது.

கடந்த சரித்திர கால கட்டத்தைத் திருப்பிப் பார்த்தால் எங்களைப் போன்ற பெண்களின் திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப் பெண்களே முன்னின்று பல போராட்டங்களைச் செய்யவேண்டியிருந்தது என்பது தெரியும். எங்கள் அதாவது இந்திய இலங்கைப் பெண்களின் கல்வி வளர்ச்சி என்பது பிரித்தானிய காலனித்துவக் கோட்பாடுகளுடன் பின்னிப் பிணைந்திருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கையில் தங்கள் சேவைகளுக்குத் தேவையான கல்வியைக் கொடுக்கப் பிரித்தானியர் ஆண்களுக்கு ஆங்கிலக் கல்வியை பத்தொன்பதாம் ஆண்டின் மத்திய கால கட்டத்தில் ஆரம்பித்தார்கள்.

இலங்கையில் இருந்ததுபோல்,பிரித்தானியாவிலும்;,பெண்களின் கல்வி, கலாச்சார ஈடுபாடுகள் என்பன ஆண்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. பெண்கள் ஆண்களின் உடமையாகக் கருதப் பட்டார்கள்.பிரித்தானியாவில் பெண்களுக்காக கல்வி நிலையம் 1833ல்தான் ஆரம்பிக்கப் பட்டது. ஆனாலும் பெண்களுக்கான கோட்பாடுகளை நிர்ணயிக்கும் எந்த உரிமையும் பெண்களுக்கு இருக்கவில்லை. பெண்களின் உரிமை பற்றிப் பேச அவர்களக்கு வாக்குரிமையுமில்லை.

1869ல் பெண்களுக்கான வாக்குரிமை பற்றி ஒரு ஆண் பாராளுமன்றவாதி தனது குரலை எழுப்பினார்.ஆனாலும் பெண்களுக்கான வாக்குரிமை பற்றிய கருத்து பெரிதாக எடுபடவில்லை.

1903ம் ஆண்டில் மடம் கியுறி அம்மையார் தனது திறமைக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார்.ஆனாலும் பெண்களுக்கான சமத்துவம் பற்றிய கருத்துக்கள் கூர்மையடையப் பெண்களுக்கான வாக்குரிமை பற்றிய கோட்பாடுகளுடான போராட்டங்கள்தான் உதவின.

பிரித்தானிய பெண்கள் தங்கள் வாக்குரிமைப் போராட்டத்தைத் தொடங்கி வெற்றி பெற்றபின், உலகம் பரந்தவிதத்தில் ஜனநாயகத்தை முன்னெடுக்கும் பல விடயங்கள் தொடங்கின.
அந்த நிகழ்வால் பெண்கள் மட்டுமல்ல உலகத்திலுள்ள பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலிருக்கும் அத்தனை மக்களுக்கும் இன மத, வர்க்க,மொழி, பேதமற்ற வாக்குரிமை கிடைத்தது.
வாக்குரிமைப் போராட்டத்திற்கு முந்தைய கால கட்டங்களில், பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பெண்கள் நடத்திய பல போராட்டங்கள்தான்’ அகில உலக மாதர் தினத்தை’ உலகம் பரந்த விதத்தில் கொண்டாடத் தூண்டியது.
1857ம் ஆண்டில் நியுயோர்க் நகரிலுள்ள தொழிற்சாலைகளில் மிகக் குறைந்த ஊழியத்தில் வேலைசெய்து துயர் பட்ட பெண்கள் தங்கள் ஊதியத்தை உயர்த்தித் தரச் சொல்லி நடத்திய போராட்டம்தான் பெண்கள் ஒன்றிணைந்து நடத்திய முதலாவது போராட்டமாகும்.

அதன்பின்,1909ம் ஆண்டில் நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் நடந்த விபத்தில் ஒரு பெண் இறந்தததை எதிர்த்து நடத்திய பெண்கள் ஊர்வலம்தான் ‘அகில உலக மாத தினத்தின்’ முன்னோடி நிகழ்வாகும்.

அதன் தொடர்பாக 1910ம் ஆண்டு, டென்மாhக் கோபன்ஹேகனில் நடந்த மகாநாட்டில்,’பெண்கள் தினத்தைக்’ கொண்டாட ,ஜேர்மனிய சோசலிஸ்ட் பார்ட்டியின் முக்கிய பெண்மணியான கிளாரா ஷெட்கின் என்ற பெண்ணின் தலைமையில் முடிவெடுக்கப் பட்டது.

1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் தினத்தை அகில உலக ரீதியாகப் பிரகடனப்படுத்தியது.

அந்தப் பிரகடனம் 1977ம் ஆண்டு உலகின் பல பாகங்களிலும் நடைமுறைத்தப் பட்டது.
அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்தில் பல பெண்ணியவாதிகள் தங்களின் சமத்துவத்திற்காகவும் உலகின் பல பாகங்களிலும் ஒடுக்கப் படும் பெண்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இன்று,பெண்களின் போராட்டங்கள் உலகின் பல பாகங்களிலும் நடந்து கொண்டிருந்தாலும் பெண்களுக்கான ஒடுக்கு முறைகள் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

இன்று இவ்விடம் வந்திருக்கும் தமிழச் சகோதரிகள், இங்கும், எங்கள் தாய் நாட்டிலும் ,கலாச்சாரம், பண்பாடு குடும்ப ஒழுங்குமுறை என்ற பன்முறைத் திரைகளுக்குப்பின்னால் நடந்துகொண்டிருக்கும் பெண்களுக்கான வன்முறைகள், ஒடுக்குமுறைகளைத் தடுக்க என்ன செய்யலாம் என்று ஒரு சில நிமிடமாவது சிந்திப்பது நல்லது என்று நினைக்கிறேன். பெண்கள் ஒன்று பட்டால் எத்தனையோ மாற்றங்கள் செய்யலாம் என்பதை விளக்க ஒரு சிறு தகவல்களை உங்களுடன் பரிமாறிக்கொண்டு எனக்குத் தந்த சிறு நேரத்தில் எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

இலங்கை அரசால் எங்கள் தமிழ் மக்களுக்குஇலங்கையில் நடந்த கொடுமைகளை எதிர்த்துப் போராட 1982ம் ஆண்டு,எனது தலைமையில்,’ தமிழ் மகளீர் அமைப்பை’ லண்டனில் உண்டாக்கினோம். அப்போது அந்த அமைப்பிருந்தவர்கள் பதினைந்தும் குறைவான தமிழ்ப் பெண்களே. ஆனாலும்,கடுகு சிறிது காரம் பெரிது என்பதுபோல் அந்தச் சிறுகுழு தமிழரின் எதிர்காலத்திற்கான பல மாற்றங்கi லண்டனில் உண்டாக்கியது.

உதாரணங்களில் ஒன்றை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் நீங்களும் எங்கள் சமுதாயத்திற்குப் பல மாற்றங்களைச் செய்யலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
அக்கால கட்டத்தில் தமிழ்ப்பகுதிகளில் சிங்களப் பேரினவாதம் பயங்கரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துக் கொண்டிருந்தது. பல தமிழர்கள் அகதிகளாகப் பல நாடுகளுகு;கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு உதவப் பல போராட்டங்களைப் பிரித்தானியாவில் நடத்தினோம். அகதிகளுக்கு உதவவென எழுதப்பட்ட,ஜெனிவாப் பிரகடனத்தின்படி தங்கள் நாட்டில் வாழப் பயந்தவர்களுக்கு மேல் நாடுகள் உதவவேண்டும் என்று கோட்பாடும் உள்ளது. அந்தக் கோட்பாட்டின்படி தமிழர்களுக்கு அகதிகள் அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று போரடினோம்.எங்களுடன் லண்டனிலிருந்த பற்பல மனித உரிமை ஸ்தாபனங்கள் கைகோர்த்தன. பெண்கள் ஸ்தாபனங்கள் எங்களுடன் சேர்ந்து போராடின.

தொழிற்கட்சியின் பல அங்கத்தவர்கள் எங்களுடன் சேர்ந்தார்கள். எங்களின் போராட்டத்தால் 1985ம் ஆண்டு வைகாசி மாதம், 29ம் திகதி பிரித்தானிய அகதிச் சட்டம் மாற்றப் பட்டது. அது சரித்திரத்தில் பதிவு செய்யப்படவேண்டிய விடயம் ஏனென்றால், மிகவும் சிறிய தொகைமக்களாக லண்டனில் வாழ்ந்த தமிழ் பெண்களாகிய நாங்கள்,எங்களின், அயராத போராட்டத்தால் பிரித்தானியாவில் ஒரு முக்கிய சட்டம் உண்டாவதற்காகப் பாடு பட்டோம். அந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப் பட்டபோது,’தமிழ் மகளீர் அமைப்பினாராகிய நாங்கள் பிரித்தானிய பாராளுமன்றப் பொதுமக்கள் வரிசையிலிருந்துகொண்டு கைதட்டி ஆரவாரம்செய்தோம்.

லண்டனில் தமிழ் மகளிர் அமைப்பு செய்த இந்த மகத்தான போராட்டத்தால் உங்களைப்போன்ற பல தமிழர்கள் லண்டனுக்கு வந்தார்கள். இதை உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு ஒரு காலத்தில் சொல்லிப் பெருமைப் படுங்கள்.

இன்று எங்கள் நாட்டில்,பெண்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இதைப் பற்றிப் பேச பலருக்கு நேரமில்லை, அத்துடன் இங்கிருக்கும் வாழ்க்கைப் பழுவினால் மற்றவர்களுக்கு உதவ முடியவில்லை,இப்படிப் பல காரணங்கள் உள்ளன.
தாய்நாட்டில் இன்று பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றிக் கலந்து பேசுதல், ஒரு கண்டனமாவது செலுத்துதல், அல்லது அவர்கள் எடுக்கும் போராட்டங்களுக்கு ஏதோ ஒரு வழியில் உதவுதல் என்பன எங்கள் தார்மீகக் கடமையாகும்.

இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட 89.000 விதவைகளும் பல்நூறு ஆனாதைக் குழந்தைகளும் வாழ்வாதாரமின்றித் துன்பப் படுகிறார்கள். ஒரு சமுதாயத்தின் வளம் அந்த சமுதாயத்தின் மனித வளமாகும். எங்கள் தமிழ்ப் பகுதிகளில் மனிதவளத்தின் விருத்திபற்றிக் கவலைப்படப் பெரு அளவான அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை.

சில மாதங்களுக்கு லண்டனுக்கு வந்த ஒரு பாராளுமன்றவாதியிடம், ‘போரினாற் துன்பப்பட்ட தமிழ்ப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதும் கோட்பாடுகள் தீட்டப்பட்டிருக்கிறதா’ என்ற கேட்டேன்.’அப்படி ஒன்றுமில்லை..’ என்று ஏனோ தானோ என்ற பதில் சொன்னார். பெண்கள் பற்றி விடயங்களுக்கு அவர் போன்ற பாராளுமன்றவாதிகள் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை என்பது அவர் பேச்சிலிருந்து பிரதிபலித்தது.

இரண்டாம் உலக யுத்தத்தில் பெருமளவில் ஆண்களையிழந்த பிரித்தானிய அரசு, போரினாற் பாதிக்கப் பட்ட தலைமுறையை வளம் படுத்த பல அரசியல் மாற்றங்களைச் செய்தார்கள். அனைத்து மக்களுக்கும் உதவ சுகாதார சேவை அரச மயமாக்கப் பட்டது. பல தொழிற்சாலைகள் உருவாகி வேலை வாய்ப்பு வழங்கப் பட்டது. 1945ம் இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது. முப்பது வருட காலத்தில் பிரித்தானியா பழையபடி தனது ஆளுமையை நிலை நிறுத்தியது.

அதேபோல் போரினாற் சிதிலமாகிய ஜேர்மனியும், அணுஆயுதக் கொடுமையால் பல துயர் அனுபவித்த ஜப்பானும் முப்பது வருடங்களில் உலக மாபெரு பொருளாதார சக்தியாக வளர்வதற்கு அவர்கள் தங்களின் மக்கள் வாழ்வாதார, மனித வளத்தை மேப்படுத்தியதே காரணம்.
ஆனால் போரினாற் பாதிக்கப் பட்ட தமிழினம் சரியான தலைமைகளில்லாததால் இன்னும் பல துயர்களை அனுபவிக்கிறது.
இன்று பெண்களின் பல சாதனைகளைப் பாராட்டி விழா காணும் நாங்கள் எங்கள் மக்களுக்கு, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு இங்கிருந்தபடியே ஏதும் செய்யமுடியுமா என்று யோசித்து சில கருத்;துக்களைப் பகிர்வது இன்றியமையாதது என்று நினைக்கிறேன்.

‘பெண்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்’ என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். எனது வசதிக்கும் தகமைக்கும் முடிந்ததாகச் சில விடயங்கள் செய்திருக்கிறேன்.இலங்கையில் பல விடயங்களைச் செய்யபொருளாதார வசதிகிடையாது.

ஆனாலும்,எங்கள் தமிழ் மக்கள் போரினால் இடம் பெயர்ந்து,வீடற்ற அகதிகளாய் முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தபோது, இலக்கியவாதிகள் என்று மட்டுமல்லாமல் மனித உரிமைவாதிகளான நானும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நடேசனும் இந்தியா சென்று இந்திய மத்திய அரசின் தென்னாட்டு அங்கத்தவரும் இலக்கியவாதியுமான திருமதி கணிமொழி கருணாநிதியைச் சந்தித்து,’இந்திய அரசின் பன்முகக் கட்சிப் பிரமுகர்கள் இலங்கைக்க வந்து தமிழர்களின் நிலையைப் பார்த்து அவர்களுக்கான உதவிகள்-முக்கியமாக விதவைகளுக்கான வீடமைப்பு உதவிகள் செய்யவேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அவர்கள் எங்கள் வேண்டுகோளின்படி இலங்கை வந்தார்கள். நிலைமைகளைப் பார்வையிட்டார்கள். 50.000 வீடுகளை அமைத்து உதவ இந்திய அரசு முன்வந்தது.

அதையும் விட,இன்னுமொரு குறிப்பிடத் தக்கதொன்று என்று நான் சொல்ல விரும்புவது,இலக்கியவாதி என்ற அடிப்படையில், இந்தியாவில் ‘பெண்கள் சிறுகதைப் போட்டி’ ஒன்றை எழுத்தாளர் ஞானி அய்யாவுடன் சேர்ந்து பதினொரு வருடங்களாக நடத்தி கிட்டத்தட்ட 180 பெண் எழுத்தாளர்களை முக்கியமாக சாதாரண பெணகளைப் போட்டியிற் பங்குபெறவைத்து ஊக்கப்படுத்தியிருக்கிறேன்.பதினொரு இலக்கியத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் சிந்த சிறுகதைகள்’ காவியா’ பிரசுரத்தால் வெளியிடப்பட்டிருக்கிறதது.சிறந்த சிறு கதைகள் இந்தியாவின் சில மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.

இந்த பெண்கள் அமைப்பில் இலக்கிய ரீதியான பல ஆளுமையான படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்களால் முடியுமென்றால் தாயகத்திலிருக்கும் இலக்கிய உணர்வுள்ள பெண்களை எழுதவும் அவர்களின் படைப்பைப் பிரசுரிக்கவும் உதவலாம். இங்கு மருத்துவ ரீதியான ஆளுமையுள்ளவர்கள் எங்கள் பெண்களின் உளவள நலத்திற்கான வேலைப்பாடுகளை முன்னெடுக்கலாம். இப்படியே எத்தனையோ விடயங்களை முன்னெடுக்க இன்றைய அகில உலக மாதர் தின விழா அத்திவாரமிடும் என்று நினைக்கின்றேன்.

உங்களின் பணிகள் தொடரவும் சிறக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s