பிரித்தானிய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தைக் கொண்டாடும் நூற்றாண்டு விழா.

பிரித்தானிய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தைக் கொண்டாடும் நூற்றாண்டு விழா.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-6.02.18

19ம் நூற்றாண்டின் கடைசி காலம் தொடங்கிப் பெண்களுக்கு வாக்குரிமை கோரிப் பிரித்தானிய பெண்களால் முன்னெடுக்கப் பட்ட பிரமாண்டமான பல போராட்டங்களுக்குப் பின், 06.02.1918ம் ஆண்டு, பெண்களுக்கான வாக்குரிமைச் சட்டம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.அந்த வெற்றியைக் கொண்டாட இன்று பிரித்தானியாவில் பல இடங்களிலும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

. உலகத்திலேயே பெண்களுக்கான வாக்குரிமையை முதன் முதலில் 1893ல் கொடுத்த பிரித்தானியாவின் காலனித்துவ நாடான நியுசீலந்து நாட்டின் தற்போதைய பிரதர் திருமதி யசீந்தா ஆர்டென்,தனது பிரசவத்திற்கான விடுதலை எடுத்திருக்கிறார்.இன்று பல நாடுகளில் பெண்கள் அவர்களின் நாட்டுத் தலைவர்காக இருக்கிறார்கள்.அதை வென்றெடுக்கப் பிரித்தானிய பெண்கள் செய்த போராட்டங்களை நினைவு கூர்தல் மிக முக்கியமான விடயமாகும்

மிகவும் பழைமை வாதம் கொண்ட பிரித்தானியாவில் பெண்கள் ஆண்களின் உடமையாகக் கருதப்பட்ட கால கட்டத்தில்,ஒரு பெண் பாராளுமன்றத்திற்குச் செல்வதே நடக்கமுடியாத காரியம் என்பதைத் தங்கள் போராட்டங்களால் வெற்றி கொண்டவர்கள் பிரித்தானியப் பெண் வாக்குரிமைப் போராளிகள்.அதற்குப் பிரித்தானியாவில் 19ம் நூற்றாண்டில் நடந்த கல்வி சம்பந்தமான மாற்றங்கள் மிகவும் உதவிசெய்தன.கல்வி கிறிஸ்தவ தேவாலயங்களாலும் வசதி படைத்தவர்களின் வீடுகளிலும் அவர்களின் குழந்தைகளுக்குப் புகட்டப்பட்டது. பெண்களின் கல்வியும் பெரும்பாலும் அப்படியே இருந்தது விக்டோரியா மகாராணி காலத்தில் 40 விகிதமான பெண்கள் மட்டும் எழுத,வாசிக்கத் தெரிந்தவர்களாகவிருந்தார்கள்.

19ம் நூற்றாணடில் பிரித்தானியா உலகத்தின் பல நாடுகளைத் தங்கள் வசமாக்கிக் கொண்டிருந்தன. பொருளாதாரம் விருத்தியடைய பல தொழிற்சாலைகள் உருவாகின். அவற்றில் பெண்களும் சேவைக்கமர்ந்தார்கள். பொருளாதார வளர்ச்சியால் பெண்களுக்குக் கல்வியும் தொழில் சார்ந்த நிபுணத்துவம் சார்ந்த பயிற்சியும் ஆரம்பிக்கப் பட்டன.1823ல் ஆண்களுக்கான மெக்கானிக்கல் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப் பட்டது. அது பெண்களுக்கான கதவை 1830ல் திறந்து விட்டது.

1878ல் லண்டன் பல்கலைக்கழகம் பெண்களுக்கான முதலாவது பட்டதாரியை உருவாக்கியது. 1880ல் பிரித்தானியாவில் சமத்துவக் கல்வியை அரசு பிரகடனப் படுத்தியது. கல்வியினால் ஏற்பட்ட தாக்கத்தால்,பிரித்தானிய சமூகத்தில் படித்த பெண்கள் தங்கள் உரிமைகள்,பெண்கள் முன்னேற்றம் பற்றிய புதிய கண்ணோட்டத்தில் பல மாற்றங்கள் செய்ய வழி தேடினார்கள்.

1897ம் ஆண்டில் மிலிசென்ட் பவுசெட் என்ற பெண்மணியால் பெண்களுக்கான வாக்குரிமை பற்றிய அமைதிப் போராட்டம் அரம்பித்தது. அன்றிருந்த தொழிலாளர் இயக்கம் (இன்றைய தொழிற்கட்சி) சார்ந்தவர்கள் அவர்களை ஆதரித்தனர். மிலிசென்ட் அம்மையாருடன் பல பெண்கள் சேர்ந்தார்கள்.

1903ம் ஆண்டு சமூக-அரசியல் பெண்கள் அமைப்பு எமிலி பாங்கேஸ்ட் என்பரும் அவருடைய மகள்களான கிறிஸ்டபெல்ரால்,சில்வியா என்பவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.’இவர்கள் பெண்கள் வாக்குரிமை;ப் போராளிகள்’ எனப் பலரால் அறியப் படத் தொடங்கினார்கள்.
மக்களுக்கான சட்டங்களையுண்டாக்கும் பாராளுமன்றத்துக்குப் பெண்களும் அனுமதிக்கப் படவேண்டும் என்ற குரல்கள்,படித்த மத்தியதரப் பெண்களிடமிருந்து புறப்பட்டன. பராளுமன்றத்திக்குப் பெண்கள் செல்லவேண்டும், பெண்களுக்கான சேவைகளைப் பாராளுமன்றத்திற் சமர்ப்பிக்கப் பெண்களின் பங்களிப்பு தேவை என்ற கோட்பாடுகளுடன் பெண்கள் போராடத் தொடங்கினார்கள்.

பாராளுமறன்றம் பற்றிய சிக்கலான நடைமுறைகளையோ சட்ட திட்டங்கள் அமைக்கும் நுண்ணறிவோ பெண்களுக்கு இல்லை என்ற அன்றிருந்த ஆண்கள் நம்பினார்கள்
ஆணவம் பிடித்த ஆண்களின் போக்கைத் தங்கள் அமைதியான போராட்டங்களால் வெல்ல முடியாது என்று கண்டு கொண்ட ‘வாக்குரிமைப் பெண் போராளிகள்’ தங்கள் போராட்டத்தை வன்முறையில் திருப்பினார்கள்.

1905ம் ஆண்டு அன்றைய ‘லிபரல் பார்ட்டிப்’பிரமுகர்களான வின்ஸ்ரன் சேர்சிலும் ,சேர் எட்வேர்ட் கிரேய் என்பரும்,மான்செஸ்டர் என்ற இடத்தில் கூட்டம் போட்டபோது ‘போராளிப் பெண்கள் அந்தக் கூட்டத்தைக் கூச்சல் போட்டுக் குழப்பினார்கள்.அதனால் சிறைபிடிக்கப்பட்டார்கள். சிறையில் உண்ணாவிரதமிருந்ததால் அவர்களுக்குக் ‘கட்டாயப்’ படுத்திக் குழாய்கள் மூலம் உணவு கொடுத்ததால் அந்தக் கொடுமையைப் பொது மக்கள் எதிர்த்தார்கள்.

அதைத் தொடர்ந்து,பெண்களின் போராட்டம், ஒக்ஸ்போர்ட் வீதிக் கடைகளை உடைத்தும்,அரசியல் வாதிகளைத் தாக்கியும், அரசியல் வாதிகளின் விளையாட்டுத் திடல்களை நாசம் பண்ணியும்,அரசியல் வாதிகளின் வீடுகளுக்குக் கைக்குண்டுகள் வீசியும், தங்களைப் பாராளுமன்ற மதில்களுடன் கைவிலங்குளாற் பிணைத்துக் கொண்டும் போராடினார்கள்.

1913ம் ஆண்டு, அரசரின் குதிரைக்கு முன்னால், வாக்குரிமைப் போராளிகளின் ஒருத்தரான எமிலி வைல்டிங் டேவிட்ஸன் என்பவர் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். ஆவரின் தியாகத்தால் மக்கள் ஆதரவு ‘வாக்குரிமைப் பெண்போராளிகளுக்காகப்’பெருகியது.

இப்படியான பல போராட்டங்களால் 1918ம் ஆண்டு மக்கள் சட்டம் பாராளுமனறத்தில் நிறைவேற்றப் பட்டுப் பெண்களுக்குக் கணிசமான வாக்குரிமை கொடுக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின் முழு வாக்குரிமையும் 1928ல் கொடுக்கப் பட்டது. இன்று கிட்டத்தட்ட 33 விகிதமான பெண்கள் பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளாகவிருக்கிறார்கள்.

அவர்கள் செய்த போராட்டத்தால் உலகம் பரந்திருந்த பிரித்தானிய காலனித்துவ நாடுகளின் அத்தனை மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்தது.

இலங்கை, உலகத்தின் முதலாவது பெண்பிரதமரை உருவாக்கியது. ஆனால் பெண்களுக்கான இடம் பாராளுமன்றத்தில் மிகவும் அற்பமே. பல நாடுகளில் பாராளுமன்றம் செல்லும் பெண்களின் விகிதம் மிகக் குறைவே. அதிலும் இலங்கை போன்ற நாடுகளில் பாராளுமன்றம் செல்லும் பெண்களின் தொகை 6 விகிதமாகமட்டுமெ உள்ளது. பெண்கள் பாராளுமன்றத்துக்குச் செல்வதைப் பாராளுமன்றவாதிகளோ,சமூக வளர்ச்சியில் அக்கறையற்ற ஊடகங்களோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் உள்ளூர்த்தேர்தலுக்கு, வெலிகந்த பிரதேசத்தில் அபேட்சகராக நிற்கும் ஒரு பெண்மணி 2.2.18ல் பாலியற் தொல்லைகளுக்கு ஆளாகி வைத்திய சாலையில் சிகிச்சை பெறுவதான செய்தியைப் படித்தேன்.
மிகவும் வெட்கப் படவேண்டிய விடயம் இது.

லண்டனில் பல இடங்களில் பெண்களுக்காப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்த இந்த நாளைக் கொண்டாடும்போது,இலங்கையில் பெண்களின் நிலை மிகவும் வேதனையாகவிருக்கிறது.

 

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s