இன்றிரவு நியுஸ் 7ல் ‘கேள்வி நேரம்’ என்ற இந்திய அரசியல் பற்றிய நிகழ்ச்சியைப் பார்த்தேன். ‘திராவிடக் கட்சியா பாஜக?’ என்ற தலைப்பில் அந்த விவாதம் நடந்தது. திராவிட, பாஜக கட்சிகளின் அடிப் படைக் கொள்கைகள்,அரசியல் முன்னெடுப்புக்கள்,எதிர் வரும் தேர்தல்களில் மக்களை வென்றெடுக்க அந்த இருகட்சிகளும் எடுக்கும் புதிய உத்திகள் என்பன பலவிதத்திலும் பேசப் பட்டன.அவை தெற்கு,வடக்கு, திராவிடம்,பார்ப்பனியம்,என்று சுற்றிச் சுற்றி வந்தது.கட்சிகள் என்னவென்று பல ‘உருவங்கள்’ எடுக்கின்றன என்பதை உணர்ந்தபோது என்னையறியாமல் எனது சிந்தனைகள் ‘இந்தியர் பற்றி ஆங்கிலேயர் வைத்திருக்கும் சில கருத்துக்கள்,அணுகுமுறைகள் என்பது பற்றிப் படர்ந்தன.
இலங்கையிலிருக்கும்போது நான் எந்தக் கடசியிலும் அங்கத்தவராக இருக்கவில்லை. பிரித்தானியாவில் நான் ஒரு தொழிற்கட்சி அங்கத்தவர். இன்று,எங்கள் அரசியலில், ‘பிறக்ஷிட்’ பற்றிய பிரச்சினைகளால் நாள்தோறும் ஏதோ ஒரு அறிக்கை வந்தபடியிருக்கிறது. எனது கட்சி சகாக்களுடன் அதுபற்றி அடிக்கடி விவாதிப்பதுண்டு. பிரித்தானிய பிரiஐ என்ற உணர்வுடன் இதை விவாதிக்கிறேன். பிரித்தானியாவின் முக்கிய கட்சிகளிலும்; இங்கிலாந்திலுள்ள பல்லின மக்களுமிருக்கிறார்கள்.லண்டனில் மட்டும் 300 மேலான மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள்,நான் வசிக்கும் தெருவில் 40க்கும் மேலான தேசங்களிலிருந்து வந்த பல்லின மக்களும் வாழ்கிறோம்.
அரசியற் கட்சிகளில் இன, மத,நிற வேற்றுமை கிடையாது.எங்கள் விவாதங்கள் எப்போதும் கொள்கை சார்ந்ததாக மட்டுமிருக்கும் தனிப்பட்ட மனிதர்; சார்ந்ததாகவோ.இனம், மொழி,மதம் சார்ந்ததாகவோ இருப்பதில்லை.நான் எந்த நாட்டைச்சேர்ந்தவள்,என்ன மதத்தைச் சேர்ந்தவள் என்று எங்கள் கட்சியில் யாரும் கேட்டது கிடையாது. இலங்கைப் பிரச்சினை காலத்தில் தொழிற்கட்சியினருக்கு அதைப் பற்றிச் சொல்லும்போதுதான் நான் ‘இலங்கைத் தமிழ்ப் பெண்’என்று அவர்களுக்குத் தெரிந்தது.
உலகில் நடக்கும் மனித உரிமைப் போராட்டங்களில் மிகவும் கவனமெடுக்கும் தொழிற் கட்சி, இலங்கையில்’தமிழருக்கு’ நடக்கும் இனக்கொடுமையை எதிர்த்தார்கள்.எங்கள் கட்சி இலங்கைத் தமிழரர்களுக்கு உதவ எனது தலைமையில்’ தமிழர் அகதி ஸ்தாபனத்தையும்’ ‘தமிழ் அகதிகள் வீடமைப்பையும்’ நிறுவ உதவினார்கள். அகதிகளாக இங்கிலாந்துக்கு வர தொழிற் கட்சி பெரிய உதவிகள் செய்தது.தமிழர்கள் இந்துக்களா,கிறிஸ்தவர்களா,திராவிடர்களா(?)இல்லையா என்ற எந்தக் கேள்வியுமில்லை.
அரசு என்பது அத்தனை மக்களையும்’ சமமாக’ நடத்துவது என்பதுதான் அரச தர்மம். என்பது கடந்த பல வருடங்களாக எனது உதிரத்தில் ஊறிய உண்மை.
பிரித்தானியாவில் வேலை கிடைத்து வந்த காலத்தில் (1970) அதிகம் ‘இந்தியர்கள்’ லண்டனிலிருந்தார்கள் (ஆங்கிலேயரைப் பொறுத்தவரையில் இலங்கையர் இந்தியர் என்ற வேறுபாடு தெரியாது-சேலை கட்டிய அத்தனைபேரும் இந்தியப் பெண்கள்தான்). இனவாதம் அப்போது பெரிதாக இருக்கவில்லை. 1972ல் உகண்டா நாட்டு அதிபர் ‘இடி ஆமின்’ உகண்டாவிலிருந்து பெருந்தொகை இந்தியர்களை இங்கிலாந்துக்குக் கப்பல் ஏற்றியபின்தான் ‘ஆசிய நாட்டாருக்கு’ எதிரான இனவாதம் பிரித்தானியாவில் ஆரம்பித்தது.
60-70ம் ஆண்டுகளில் இந்திய,இலங்கை டாக்டர்கள்,இந்தியா இலங்கையிலிருந்து ,மேற்படிப்புக்கு வந்த ஆங்கிலம் படித்த மத்தியதர வர்க்கம் லண்டனை நிரப்பிக் கொண்டிருந்த காலம். நான் எனது வேலைக்குச் சேலை அணிந்து சென்றது கிடையாது. ஆனாலும் என்னை 90 விகிதமான ஆங்கிலேயர்கள்,’இந்தியப்’ பெண்ணாகத்தான் அடையாளம் கண்டார்கள்.
1980ம் ஆண்டுகளில் அவர்கள் என்னை அப்படி அடையாளம் காணுவது அதிகரித்தது. 1984ம் ஆண்டு, சுவிடசர்லாந்தில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றி’ பேர்ண்’ யூனிவர்சிட்டியில் உரையாற்றச்; சென்றபோது, இலங்கைத் தமிழ் அகதிகள் நிலை பற்றியறிந்து கண்கலங்கினார்கள். ‘நான் எனது வாழ்க்கையில் முதற்தரம் ஒரு இந்தியப் பெண்மணியின் பேச்சைக் கேட்டது பற்றிப் பெருமைப்படுகிறேன்’ என்று ஒரு மாணவி வந்து சொன்னார்.
நான் இலங்கைப் பெண் என்றேன். ‘ஆமாம் ஆனால் நீங்கள் இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணுபவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.உங்களைச் சந்தித்ததில் பெருமைப் படுகிறேன்’ என்றார். சேலையணிந்திருந்த எனக்கா அல்லது என்னிடம் தெரிந்த ‘இந்திய’த் தன்மைக்கா அவள் பெருமைப் பட்டாள் என்று எனக்குத் தெரியாது.
லண்டனிலுள்ள எனது ஆங்கிலேய நண்பர்களிடம் ‘ஏன் நீங்கள் என்னை அடிக்கடி ‘இந்திய’அடையாளத்துடன் பார்க்கிறீhர்கள்’என்று நான் கேட்டபோது அவர்கள் சொன்ன விளக்கங்களிற் சில என்னை மெய்சிலிர்க்கப் பண்ணின.
ஆங்கிலேயரில் பல படித்தவர்கள், இந்திய கலாச்சாரம், பண்பு,தத்துவங்கள், ஆத்மீகக் கோட்பாடுகள், அவர்கள் கேள்விப் பட்ட இந்திய மக்களின் ‘ஒற்றுமை’பற்றிச் சொன்னார்கள். யோகா தியானத்தை, ‘அசைவ ‘ உணவின் மகிமை பற்றிச் சொன்னார்கள். இதயத்தைக் குளிரப் பண்ணும் இந்திய இசை பற்றிச் சொன்னார்கள்.
அரசியலில் ஈடுபட்ட பிரித்தானிய நண்பர்கள் ‘இந்திய அஹிம்சா தத்துவம்’ உலக அரசியலை மாற்றிக் கொண்டிருப்பதைப் பற்றிச் சொன்னார்கள்.அப்போது நெல்சன் மண்டேலா சிறையிலிருந்தார். நாங்கள் பல நாட்களை ஆபிரிக்க தூதுவர் கட்டிடத்துக்கு முன்,’ நெல்சன் மண்டேலை விடுதலை செய்’ என்ற கோஷத்துடன் கழித்ததுண்டு.
அவரின் கோட்பாடான,’என்னைச் சிறை வைக்கலாம்,எனது சிந்தனையைச் சிறை வைக்கமுடியாது’என்ற காந்திய தத்துவம் எங்கள் தாரக மந்திரமாகவிருந்தது.
அதே நேரத்தில் அமெரிக்காவில் கறுப்பு மக்களும் ‘அஹிம்சா’ வழியில் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அறுபதாம் ஆண்டு;கால கட்டத்தில் அமெரிக்காவில் கறுப்பு இன மக்கள் தங்கள் மனித உரிமைக்கான போராட்டத்தில் அவர்களின் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் காந்தி காட்டிய ‘அஹிம்சா’ வழியில் நடத்தி அவர்களை நல்வழிப்படுத்தியிருந்தார்.;
அந்த ‘அஹிம்சா’தத்துவம் ஐம்பது வருடங்களின் பின் வெள்ளை மாளிமையில் ஒரு கறுப்பனை ‘ உலக தலைவனாக்கியது’ அந்த நிகழ்வு ‘இந்திய’ தத்துவத்தின் வெற்றி. உலகத்தின் சத்ய நிகழ்வுகளுக்கு இந்திய தத்துவங்கள் மையமாக இருக்கிறத என்பதன் வெளிப்பாடு.
இங்கிலாந்தில் இந்தியாவின் அரசியல் கோட்பாடுகள் மட்டுமன்றி இந்தியாவின் கலைகளிலும்,அத்மீக வழியிலும் பல ஆங்கிலேயர்களுக்கு நாட்டம் வளர்ந்து கொண்டிருந்தது. ரவி சங்கர் தனது சித்தார் மகிமையால் ஆங்கிலேயரை மகிழ்வித்த காலமது. பல மஹரிஷிகள் இந்தியத் தத்துவத்தை மேற்குலகுக்கு இறக்குமதிசெய்த காலகட்டமது.’பீட்டில்ஸ்’ பாடர்கள் (ஜோன் லெனின், மக்கார்தி போன்றவர்கள்) ஆத்மீகத்தைத்தேடி இந்தியா சென்ற கால கட்டமது.
அதிகம் படிக்காத ஆங்கிலேயர் இந்திய உணவு தொடக்கம், இந்தியர்களின் கடுமையான உழைப்பு அத்துடன் முக்கியமாக,’இந்திய குடும்ப முறை’ (அப்போத எனது வீட்டில் மூன்று மைத்துனர்கள் எங்களுடனிருந்து மேற் படிப்பு படித்துக் கொண்டிருந்தார்கள்) பற்றிச் சொன்னார்கள்.பெண்களின் அன்பான தாய்மையான அணுகுமுறையை வியந்ததாகச் சொன்னார்கள்.
இன்று இங்கிலாந்தில் ‘அசைவ’ உணவு எடுப்போரின் தொகை, யோகா தியானம் செய்பவர்கள் தொகை கூடிக் கொண்டு வருகிறது. 60-70ம் ஆண்டுகளில் வந்த ‘இந்திய,இலங்கை வாசிகளால் ஆங்கிலேயர்களின் ‘.இந்தியா’ பற்றிய கண்ணோட்டம் இங்கிலாந்தில் ஒரு உயர் நிலை பெற்றிருக்கிறது.
‘அவன் ஒரு இனவாதி’ என்ற எனது சிறுகதையில் படிப்பறிவில்லாத ஒரு ஆங்கிலேயனைக் கூட எப்படி இந்த ‘இந்திய’ தார்மீக,தர்ம உணர்வு மாற்றுகிறது என்பதைச் சாடையாக எழுதியிருந்தேன்.
போதை மருந்தெடுத்து’ அநியாயமாக வாழ்க்கையை நாசப்படுத்திய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது ஒரு ‘இந்தியத் தாயை'(?) ஒரு ஏழை ஆங்கிலேயன் எப்படி மதிக்கிறான், அந்த அன்பால் எப்படித் தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறான் என்பதுதான் அந்தக் கதை.
30.1.18ல் இந்தக் கட்டுரை எழுதத் தொடங்கினேன் காந்தியின் நினைவு வந்த துக்கத்தால் தொடரமுடியவில்லை. இந்தியாவில் ‘அஹிம்சா’ அழிந்து விட்டதா? என்ற கேள்வி கடந்த சில நாடகளாகச் சில அரசியல் வாதிகள், சமயவாதிகள் பேசிக் கொள்ளும் முறையும் நடந்து கொள்ளும் முறைகளால்; எனக்குள் குடைந்து கொண்டிருக்கிறது.
இந்தியா ஒரு மகத்துவமான நாடு மட்டுமல்ல அற்புதமான கொடைகளை உலகுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்டமான சக்தி.உலக முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்கு ஈடு இணையற்றது. இதை மேற்கு நாட்டார் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய ,அரசியல்,சமய, முக்கியமாக ஊடகவாதிகள் உணர்ந்து கொள்வார்களா என்ற ஏக்கம் என்னைத் துக்கப் படுத்துகிறது.
இந்திய இளம் தலைமுறை எதிர்காலத்தில் உலகத்தில் எத்தனையோ மாற்றங்களை, விஞ்ஞான ரீதியாக,தத்துவரீதியாக,கலை ரீதியாக கொடுக்கும்.அந்த அளவு திறமை அவர்களிடமிருக்கிறது. இந்தியாவின் மகிமையை சமய,இன ரீதியான வெறிகளைத் தூண்டித் தயவு செய்து அழித்து விடாதீர்கள்.