தென்னிந்தியத் தமிழ்த் திரையுலக இசையமைப்பயாளர் இளையராஜா அவர்கள் இந்தியா குடியரசு தினத்தன்று கௌரவிக்கப்பட்ட பல கலைஞர்கள்,அறிஞர்கள்,சமூக சேவையாளர்கள் என்ற பலரில் இந்தியாவின் இரண்டாவது உயர் விருதான ‘பத்மவிபூஷண்’ பெற்றவர்களில் ஒருத்தராகக் கௌரவம் பெற்றுத் தமிழ் இசையுலகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார்.
1970ம் ஆண்டுகளிலிருந்து உலகம் பரந்திருக்கும் தமிழர்களைத் தன் தமிழிசையால் இன்புற வைத்துக் கொண்டிருக்கும் இந்த இசைஞானிக்குக் கிடைத்த பெருமையை எனது சகோதரனுக்குக் கிடைத்த பெருமையாக எண்ணிப் பெருமைப் பாராட்டுகிறேன்,மகிழ்கிறேன்.
இவர் பாட்டுக்கு வாயசைத்துப் பிரபலமான நடிகர்கள் பலர்.இவரின் இசையமைப்பில் வந்த பாட்டுக்களால் வெற்றிக் கொடி ஈட்டிய படங்கள் பல. பட்டிதொட்டி எல்லாம் தமிழிசையைத் தவழவிட்ட இந்த ‘இசைஞானி’ தமிழருக்குப் பெருமை தந்த தவமகன். கிராமத்துத் தமிழ் இசைப்பாட்டுக்களை பொதுஜன இசையாக்கி எங்களை அவரின் அற்புதமான இசையுடன் இணைத்த அண்ணலை உலகம் பரந்த தமிழினம் பாராட்டிக் கொண்டாடும் சந்தர்பம் இது.
‘பத்மவிபூஷண்’பட்டம் பெற்ற இசைஞானி,தமிழில் மட்டுமல்லாது,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,இந்தி போன்ற பல இந்திய மொழிப்படங்களுக்கும் இயைமைத்திருக்கிறார்.அத்துடன் மேற்கத்திய இசையிலும் கர்நாடக சங்கீதத்திலும் முறையான புலமையும் பயிற்சியும் பெற்றவர் என்பது இவரின் அளப் பரிய தகமைகளின் பட்டியல்களிற் சில.
‘ராஜா,ராஜாதி ராஜன் இந்த ராஜா.
நேற்று இல்லை நாளையில்லை,எப்பவும் நான் ராஜா,
கோட்டையில்லை,கொடியுமில்லை,
எப்பவும் நான் ராஜா’
இது இசைஞானி இசையமைத்த பழைய தமிழப் பாடல் ஒன்று. காலையில் எழுந்ததும் அவருக்குக் கிடைத்த விருது பற்றிய செய்தியால் அவருடைய இந்தப் பாட்டு ஞாபகம் வந்தது.