எனது இலக்கியப்பாதையில் உதவிய பத்திரிகை ஆசிரியர்கள்:
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-2.12.17
எனது இலக்கியப் பாதையில் உதவி செய்தவர்கள் பலர். எனது எழுத்துக்கள் எனது பார்வைக்கும் கருத்துக்கும் பிழை என்று படுவதை பிரதிபலிப்பவை. என்னை ஒரு பெண்ணியவாதி என்றோ,இடதுசாரி என்றோ பீற்றிக் கொள்வதை விட ஒரு மனித நேயவாதி என்று சொல்வதில் பெருமைப் படுகிறேன். எனது படைப்புக்கள் பலதரப் பட்ட சமூகக் கொடுமைகளைக் கண்டு சகிக்காத ஒரு சாதாரண தாயின் ஆத்திரத்தையும் துயரத்தையும்; சார்ந்தது.
எனது படைப்புக்கள் மனிதாபிமானத்தை மையமாகக்கொண்டவை.
சாதிக் கொடுமை,சீதனக் கொடுமை, பொருளாதார சுரண்டல்,இனவாதம் (இங்கிலாந்து), தழித்தேசியம் என்ற பெயரில் முன்னெடுக்கப் பட்ட,எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாசிசக்கொள்கைகள்,மதத்தின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்களை அடிமைகைளாய்,இச்சைப்பொருட்களாளாய் நடத்திப் பெண்ணடிமைத்தனத்தை நியாயம் படுத்தும் கோட்பாடுகளுக்கு எதிரானவை எனது எழுத்துக்கள்.
எனது எழுத்தைப் பொறுக்காத பிற்போக்குவாதிகளால் என்னை மட்டுமல்லாமல் எனது எழுத்துக்களைப் பிரசுரித்த பல பத்திரிகை ஆசிரியர்களையும்; மிகவும் மோசமான வார்த்தைகளாற் தாக்கி வைதார்கள்;. முதுமை நிழலாடும் எனது கடைசிக் காலத்தில் மறதி வந்து தாக்க முதல் எனது எழுத்துக்கு உதவிய பத்திரிகை ஆசிரியர்களை நினைவு கூர்வதும் அவர்களுக்கு நன்றி சொல்வதும் எனது கடமை என்ற நினைக்கின்றேன்.
எனது இளமைக் காலத்தில் படிப்பு காரணமாக யாழ்ப்பாணம் சென்றபோது நான் கண்ட சாதிக் கொடுமைகள் என்னைத் துடிக்கப் பண்ணியது.எனது வயதுடைய ஒரு இளம் பெண் ஒரு ‘மேல்சாதிக்'(?) காமுகனால் ஏமாற்றப் பட்டதைத் தாங்காமல் தன்னை எரித்துக்கொண்ட காயங்களுடன் நான் வேலை செய்துகொண்டிருந்த வார்ட்டுக்கு அட்மிட் பண்ணப் பட்டு சிகிச்சை பயனளிக்காமல் எனது கண்களுக்கு முன்னால் துடித்திறந்தாள்.அந்தத் துயர்,’சித்திரத்தில் பெண்ணெழுதி’ என்ற எனது சிறுகதையாக,அக்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களால்,செ.யோகநாதன் ஆசிரியராகவிருந்த’வசந்தம்’ பத்திரிகையில் வெளிவந்தது.
அந்தக் கதை வெளிவர முதல் எனது மிகவும் இளம் பருவத்தில் தேசிய பத்திரிகைகளில் பாலர் பகுதியில் ஏதோ ஒன்றிரண்டு கவிதைகள்; எழுதியதும்,பின்னர் ‘வீரகேசரி; பத்திரிகையில் ஒன்றிரண்டு கதைகளும(கற்பனை சார்ந்தவை);, ‘மல்லிகை’ பத்திரிகையில்,’எழில் நந்தி’ என்ற புனைபெயரில் ஒன்றிரண்டு கதைகள்(சாதி,பேதங்களை அடிப்படையாகக் கொண்டவை) ஏற்கனவே எழுதியிருந்தாலும்,’ சித்திரத்தில் பெண்ணெழுதி’ என்ற கதை,உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதியதாலோ என்னவோ,அந்தக் கதை என்னை அக்காலத்தில் ‘முற்போக்கு’எழுத்துக்களில் ஆர்வமுடையோர் சிலரின் பார்வையை என் எழுத்துக்களில்ப் பதியப் பண்ணியது.
லண்டனுக்கு வந்ததும், படிக்கவந்த மாணவர்களைத் துண்டில் போடும் பணம் படைத்தோரின் ‘சீதனம்’ என்ற வசீகரச் சொல்லால்ச் சுயமை இழந்து தவித்த ஒன்றிரண்டு இளம் மாணவர்களின் வாழ்க்கை,’ஒருவன் விலைப் படுகிறான்’ என்ற பெயரில் ‘லண்டன் முரசில்’ சிறுகதையாக வந்தபோது நான் மட்டுமல்ல லண்டன் முரசு ஆசிரியர் சதானந்தன் லண்டன் வாழ் தமிழ்ப் பிபோக்குவாதிகளால் தாறுமாறாகத் திட்டப் பட்டார் அவர் அஞ்சவில்லை.
அதைத் தொடர்ந்து,தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தன்னலத்தை முன்வைத்து அரசியல் செய்யும் ‘பெரிய’ மனிதர்களை அடிப்படையாக வைத்து ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்ற எனது நாவலை வெளியிட்டார். அவருக்கும் எனக்கும் வசைகள் தொடர்ந்தன.’மதர்ஸ் ஒவ் சிறிலங்கா’,என்ற எனது ஆங்கிலச் சிறுகதையை ‘தமிழ் டைம்ஸ்’ஆசிரியர் திரு இராஜநாயகம் துணிவுடன் பிரசுரித்தார்,தூற்றல்கள் தொடர்ந்தன.
திரு.தேவராஜா-‘வீரகேசரி’இலங்கை, எனது சிறுகதையான’ மேதகு வேலுப் பிள்ளையை’யைப் பிரசுரித்ததால்,(2006) பிரச்சினைகளுக்காளாகினார்.அவரைப் போல் பலரையும் இப்போது நினைவு கூருகிறேன்:
. ஆசிரியர் ‘தினகரன்’இலங்கை.திரு யேசுராசா’அலை’.இலங்கை.
ஆசிரியர்’சிரித்திரன்’இலங்கை.ஆசிரியர்’சிந்தாமணி’இலங்கை.’திரு பவுசர்’ மூன்றாம் மனிதன்;’ இலங்கை.’திரு டாக்டர் ஞாகசேகரன்’ஞானம்’ இலங்கை.டொமினிக் ஜீவா’ மல்லிகை’ இலங்கை.
திரு.ஜோர்ஜ் குரஷெவ்-‘தாயகம்’கனடா. ஆசிரியர்’சக்தி’கனடா.திரு நவம்’நான்காவது பரிமாணம்’கனடா.
திரு மகாலிங்க சிவம்’நாழிகை’ லண்டன்.திரு பத்மநாப ஐயர்’அகதி’லண்டன்.ஆசிரியர்’தமிழன்’ லண்டன். திரு இராஜகோபால்’புதினம்’ லண்டன்.
திரு.சபேசன்’பனிமலர்’லண்டன்.ஆசிரியர்’பாரிஸ்முரசு’-பாரிஸ்.திரு கலாமோகன்,லஷ்மி,’ உயிர் நிழல்கள்’ பாரிஸ்.
திரு சார்ள்ஸ்.’ஆனா ஆவன்னா’- நெதர்லாந்து.திரு பழனிசாமி,’தமிழ் நேயம்’ இந்தியா.திருமதி வாசந்தி,’இந்தியா டுடெய்’.திரு மாலன்,’தினமணி’இந்தியா. ஆசிரியர் -தாமரை,இந்தியா.ஆசிரியர் ‘கணையாழி’-இந்தியா.ஆசிரியர் ‘சுபமங்களா’ இந்தியா.ஆசிரியர்’நிறப் பிரியை’இந்தியா.
டாக்டர் நடேசன்,’உதயம்’;-அவுஸ்திரேலியா.ஆசிரியர்’மரபு’அவஸ்திரேலியா(?).
ஆசிரியை’அவுட் றைட்’அமெரிக்கா.ஆசிரியை,’ஸ்பார் றிப்’-லண்டன்,ஆசிரியர்’டெஸ்கார்ட்’-லண்டன்
இப்படி எத்தனையோ பத்திரிகை ஆசிரியர்கள் எனது நேர்மையான எழுத்துக்குத் தங்களின் பாதுகாப்பையும் பொருட் படுத்தாமல் இடம் தந்தார்கள். பெரும்பான்மையான தன்னலவாதிகளைக் கொண்டிருக்கும் எங்கள் தமிழ்ச் சமூகத்தில் நீதிக்கும் நேர்மைக்கும் போராடவென்று ஒரு கூட்டம் எப்போதுமிருந்து மாற்றங்களைக் கொண்டு வர உதவும் என்பதை எனது இலக்கியப் பாதையில் கண்டிருக்கிறேன்.
இங்கிலாந்தில் முற்போக்குவாதிகளால் நடத்தப் பட்ட பல தரப் பட போராட்டங்களில் (பாலஸ்தினிய மக்களின் உரிமை,தென்னாபிரிக்காவின் வெள்ளையினக் கொடுமைகள் போன்றவை)ஈடுபட்ட காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கான இனக் கொடுமைகள் யூ.என். புp அரசாலாற் கட்டவிழ்த்து விட்டபோது எங்கள் மக்களின் உரிமைக்கான போராட்டங்களை ஆரம்பித்தோம்.,
வர்க்க பேதம்,இன,நிற,சாதி மத,பிராந்திய பேதங்களுக்கு அப்பாற்பட்டது எனது எழுத்துக்கள்.
1982ம் ஆண்டு,இலங்கைப் பேரினவாத வெறியர்களால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்ப்புத்திஜீவிகளான திரு திருமதி நிர்மலா நித்தியானந்தன், டாக்டர் இராஜசிங்கம் போன்றோரை மையப் படுத்தி,இலங்கைத் தமிழ் மக்களுக்கான மனித உரிமைப் போராட்டத்தை’தமிழ் மகளீர் அமைப்பு, (இதுதான் லண்டனில் உருவாகி,இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்த முதலாவது மனித உரிமை ஸ்தாபனம்) மூலம் முன்னின்று நடத்தினேன். அந்தப் போராட்டத்தைத் தொடந்து நடந்த சம்பவங்களால் இங்கிலாந்திலுள்ள பத்திரிகைகளால் (கார்டியன்,நியு ஸ்டேட்ஸ்மன்,ஆசியன் டைம்ஸ், அப்படிப் பல) இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகள் பற்றிய விபரம் பிரித்தானியப் பொதுமக்களைச் சென்றடைந்தது.
புலிகளால் முஸ்லிம் மக்கள் துரத்தப் பட்டதை எதிர்த்துக் குரல் எழுப்பினேன்,
சவுதி ஆரபியாவில் அநியாயமாகத் தூக்குக் கயிற்றுக்கத் தள்ளப் பட்ட மூதுர் முஸ்லிம் இளம் பெண் றபினா நபிக்கு;காகவும் போராடினேன்.
யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர கணேசலிங்கம், தன்னிடம் வேலைக்கமர்ந்த வேலைக்காரப் பெண் யோகேஸ்வரியைப் பாலியல் கொடுமைசெய்ததாகக் குற்றம் சாட்டப் பட்ட போது அப் பெண்ணுக்கு நீதி கேட்டுப் போராடினேன். அதேபோல் புலிகளால் கொலை செய்யப் பட்டதாகச் சொல்லப் படும் மகேஸ்வரி,றேலங்கி போன்றவர்களுக்காக நீதி கேட்ட எனது குரலைப் பதிய வைத்தவர்கள் பல பத்திரிகையாளர்கள்.
இணையத் தளமான ‘தேனி’ ஆசிரியர் எனது படைப்புக்களுக்கு எப்போதும் இடம் தருபவர். அவருக்கு எனது நன்றிகள். எனது கட்டுரைகளை வெளியிட்டு உதவும் ‘தினக்குரல்’ ஆசிரியா பாரதிக்கும் நன்றிகள்.
சாகித்திய மண்டல பரிசு பெற்ற எனது நாவலான ‘பனிபெய்யும் இரவுகளை’ சிங்களத்தில மொழி பெயர்த்து சிங்கள வாசகர்களிடையே எனது இலக்கியத்தை அறிமுகப்படுத்திய மதுலகிரிய விஜயரத்தினாவுக்கு எனது நன்றிகள்.
இந்தியாவிலும் இலங்கையிலும் பல பல்கலைக்கழக மாணவர்கள்,(கிழக்கிலங்கை,தென்கிழக்கிலங்கை,போன்ற சில) எனது எழுத்தை ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்த மாணவர்கள் பற்றியோ,அவர்கள் செய்த ஆய்வு பற்றியோ பல தகவல்கள் என்னிடமில்லை.மதுரையைச் சேர்ந்த சீதா என்ற மாணவி எனது படைப்புக்களில் எம.;ஏ ஆய்வு செய்ததாக அண்மையிற்தான்; அறிந்தேன். கோவை,கலை,விஞ்ஞானக் கல்லூரியைச் சேர்ந்த பிரியா றமேஸ் எனது படைப்புக்களில் பல ஆய்வுகள் செய்திருக்கிறார் கடந்த வருடம் எனது நாவல்களைத் தனது கலாநிதிப் பட்டப்படிப்புக்காகச் செய்தார். இவ்வருடம்,எனது சிறு கதைகளை ‘இலக்கிய தத்துவம்’ என்ற பொருள் பட ஆய்வு செய்கிறார்.