‘என்னைப்போல்ப் பல சாதாரண தமிழ் இளம் பெண்களுக்குச்; சமுதாயச் சிந்தனை பிறக்கச் செய்தவர்’
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- 28.03.2016.
அண்மையில் இறைவனடி எய்திய திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மரணச்சடங்குக்கு,எனது உடல் நலம் காரணமாகப் போகமுடியவில்லை. அவரையிழந்து வாழும் அவரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த துக்கங்கள். எனக்குச் சொற்பகாலத்துக்குமுன் நடந்த சத்திரசிகிச்சையால் வீட்டைவிட்டு வெளியே பெரும்பாலும் போகமுடியாது.
அவரின் மரணச் செய்தி சமுதாயத்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கப் போராட,அவரால் ஒருகாலத்தில் பொது மேடைக்கு இழுக்கப்பட்ட எனது பழையகால நினைவுகளைப் பட்டென்று வெளிக் கொணர்ந்தன.
மனிதர்களின்; சரித்திர மாற்றத்துக்குப்; பெண்களின் ஈடுபாட்டுக்கு உந்து சக்தியாயிருந்து,ஒரு சமுதாயத்தையே கொதித்தெழப் பண்ணிய பெண்களின் பங்கு ஏராளம்.ஆண்களால் இது கண்டுகொள்ளப் படுவதில்லை. தமிழ்த்தேசியத்தில் பெண்கள் கொடுத்த பங்கு அளப்பரியது. இழப்பு சொல்லமுடியாதவை.தமிழ்ப் பெண்கள் ஆயுதம் எடுத்துத் தங்கள் ஆண்போராளிகளுடன் போராடத்தைரியம் கொடுக்க உந்துதலாக இருந்தது அவரின் அன்றைய அரசியல் பிரவேசம். ஒரு தலைமுறைக்கு முன்னரே திருமதி அமிர்தலிங்கம், அஹிம்சை சார்ந்த, தமிழ்த்தேசியப் போராட்டத்திற்குப் பல பெண்களை வீpட்டினுள் இருந்து வெளியே கொண்டு வந்தவர்களில் ஒருத்தராகும். அவரைக் கண்டதும் அவருக்கு ஒரு பெரிய மரியாதையைக் கொடுக்கவேணடும் என்ற மதிப்பான தோற்றத்தையுடையவர்.அவரின் ஆவேசமான தமிழ்த் தேசியப் பேச்சைக்கேட்டால் எந்தத் தமிழனும் தமிழுக்காகத் தனது உயிரைக் கொடுக்கவேண்டிய உந்துதல் வரும்.;
படித்த .மத்தியதரப் பெண்கள் பொதுமேடையேறாத அந்தக்காலத்தில் கணவரின் அரசியல் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணத்துக் கொண்டவர்.
யாழ்ப்பாணத்தில் திருமதி மங்கையற்கரசி போன்றவர்கள், மட்டக்களப்பில், அந்தக்காலத்தில் எங்களால்,ஆசையாகவும்,அன்பாகவும்,’கலா அக்கா’ என்று அழைக்கப்பட்ட கலா மாணிக்கம். (பின்னர் புலிகளால் கொலை செய்யப்பட்ட கலா தம்பிமுத்து தம்பதிகள்-இப்போது மட்டக்களப்பு அரசியல் பிரமுகரான அருண் தம்பி முத்துவின் தாய்) என்பவர்கள் அன்றைய காலத் தமிழ்த் தேசிய அரசியலில் முக்கியமான பெண்கள்;.
‘உங்கள் சமுதாயக்கண்ணோட்டம் பரந்து விரிய திருமதி மங்கையற்கரசியும் ஒரு காரணகர்த்தா என்ற பல தடவை சொல்லியிருக்கிறீர்கள், அவர் இறந்து விட்டார்.அவரின் கால கட்டத்திலிருந்து தொடர்ந்த உங்கள் பழைய சரித்திரத்தைப் (தமிழ்த்தேசிய) பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா? என்று ஒரு நண்பர் கேட்டார்.
இதுவரையும், சுமுகமாகவிருந்து ஒரு கட்டுரை எழுத எனது உடல்நலம் பாதிப்பாகவிருந்தது. நண்பர் எழுதச் சொன்ன கட்டுரை பற்றி ஆழமாக யோசித்தேன். ‘எங்களால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் என்பன மந்திரங்கள்.அவை உண்மையாகவும் தர்மத்தின் அடிப்படையிலும் பாவிக்கப்படவேண்டும்’ என்று எனது இந்தியச் சினேகிதி ஒருத்தி அடிக்கடி சொல்வார்.அதனால் இந்தக் கட்டுரையை எழுதும்போது,என்னால் முடிந்தவரை இக்கட்டுரை,கடந்தகால சரித்திரத்தின் ஒரு கடுகளவான தொகுப்பாகவும் அதன் சாராம்ஷம் சத்தியத்தின் குரலாக இருக்குமென்றும் நினைக்கின்றேன்.
லண்டனில் நான் திருமதி மங்கையற்கரசியைச் சந்தித்தபோது,எனது அரசியற் பார்வை மாறியிருந்தது. ஆனால் என்னைத் தமிழ்த்தேசியம் பற்றிய பன்முகப்பார்வையை விரிவாக்கிய அவருக்கு நான் நன்றிக்கடமைப்பட்டிருக்கறேன்.
அவர் அரசியலிற் குதித்தகால கட்டத்தில் அவருக்குத் தெரிந்த அரசியலை முன்னெடுத்தார். கணவரின் வழிசெல்லும் மனைவியின் கடமையைச் செய்தார்.அந்தக்காலத்தில் பெண்களின் தனித்துவத்துக்கு இடமில்லை-இப்போதும் பெரிதாக மதிக்கப்படுவதில்லை.
தட்டுவேலிகளால் மறைக்கப் பட்ட வீடுகளில்,தாவணி பாவாடை கட்டிக்கொண்ட பட்டிக்காட்டுச் சிறுபெண்ணாக இருந்துகொண்டு தந்தையாரின் பன்னூறு புத்தகங்களுக்குள் உலகத்தைக்கண்டு, இலக்கியத்தை இரசித்துக்கொண்டிருந்த என் போன்றவர்களைத் தமிழரின் எதிர்காலத்துக்காகத் தெருவில் வந்து கோஷம் போடப் பண்ணியவர்களில் திருமதி அமிர்தலிங்கமும் ஒருத்தர்.
மிக மிகப் பின் தங்கிய கிராமம் ஒன்றிற் பிறந்தபெண்கள், பாடசாலைக்கும், கோயிற் திருவிழாக்களுக்கும் மட்டும் வெளியே போக அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழத்தேசியம்,மட்டக்களப்பு எட்டுப்பகுதிகளிலும் ஊர்வலம் போடத் தொடங்கியது. தமிழ் பேசத் தெரியாத தமிழ்த்தலைவர்களான நாகநாதன் போன்றவர்களுக்கு எங்கள் ஊர் தோரணம்போட்டு வரவேற்றது. பெற்றோர் தினவிழாக்கள், சரஸ்வதிபூஜை போன்ற விசேடநாட்களில் மட்டும் மேடையேறிப்பாட அனுமதிக்கப்பட்டவர்களாயிருந்த கிராமத்து இளம் பெண்கள் பலர் தமிழ்த்தேசியம் தந்த உற்சாகத்தில் வெளியுலக மேடைப்பாடகிகளானோம்.
மிக இளவயதில், (பதினொரு வயது என்ற நினைக்கிறேன்), அக்கரைப்பற்று வட்டார பாடசாலை பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி (பாரதி கண்ட பெண்கள்!;) போன்றவற்றில் பரிசு எடுத்த பெயர் எனக்கிருந்ததால் தமிழ்தேசியப் பொது மேடைப் பாடகிகளில் நானும் ஒருத்தியானேன்.
எங்கள் பாடசாலைக்குப் புதிதாக வந்திருந்த ஒரு ஆசிரியருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.’தமிழரசுக்கட்சி என்றே பெயரே பொய்மையில் புனையப்பட்டது’ என்றார். எங்களுக்குப் புரியவில்லை.
‘சிங்களப் பகுதிகளில் சமஷ்டிக்கட்சி (சமத்துவக்கட்சி),தமிழப்பகுதிகளில் தமிழரசுச்கட்சி என்று தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்’ என்றார்.
அவர் பெரும்பாலான எங்கள் ஊராரின் சிந்தனைக்கு அப்பாற்பட்டுப் பேசுபவராக இருந்ததால் அவரைக்த் தமிழ்த் தேசிய தாபம் கொண்ட யாரும் விளங்கிக் கொள்ளவில்லை.
‘யாழ்ப்பாணத்து மேல்மட்டத் தமிழரின் சுயநலவெறிக்கு, அப்பாவிகளான தமிழ் மக்கள் பலியாக்கப்படுகிறார்கள்’ என்று அவர் முணுமுணுத்தார்.
அதுவும் எங்களுக்கோ பெரும்பாலான ஊராருக்கோ புரியவில்லை.அவர் மலையகத்தில் ஆசிரியராகவிருந்தவர். யாழ்ப்பாணத்தைச் சோர்ந்த தமிழ் ஆசரியர்களும் தமிழ் மேலதிகாரிகளும் மலையகத் தமிழ்க்குழந்தைகளின் கல்விக்கு உதவவில்லை என்று பல தடவைகளில் அவர் சொல்லியிருக்கிறார்.
மட்டக்களப்பிலும் இந்து,கிறிஸ்தவ மதம்சார்ந்த பாடசாலைகளான இராமகிருஷ்ணமிஷன், உரோமன் கத்தோலிக்கமிஷன் போன்றவற்றில் மட்டும் உயர்தரக் கல்வி தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்குக் கிடைத்தது. தமிழ்ப்பகுதிகளிலுள்ள பெரும்பாலான அரச பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிப்பில்லை. அப்படிப் படிக்க ஆசைப்படுபவர்கள் வெளியிடம் சென்று படிக்கவேண்டும். அதற்கு வழியற்றவர்கள் படிப்பை நிறுத்திக் கொள்வார்கள்.முக்கியமாக, பெண்களின் மேற்படிப்பு என்பது மட்டக்களப்புப் பகுதியில் மிக மிக அருமையாகவிருந்தது.
எங்கள் பாடசாலைக்கு உயர்வகுப்பு வைப்பதை, ஒரு யாழ்ப்பாணத்து மேலதிகாரி பல காலம் (இன்று தமிழ்த் தேசிய அரசியற் பிமுகராக இருக்கும் ஒருத்தரின் சகோதரா!) தடுத்துக்கொண்டேயிருந்தார். பெண்கள் கல்வியில் அக்கறை கொண்ட எனது தந்தை போன்றோரின் பெரிய போராட்டத்தின் பின் எங்களுக்கு மேல்வகுப்பு வைக்க அனுமதி தரப்பட்டது.
‘ஆங்கிலம் படித்த ஒருசிறுகுழவான யாழ்பாணத்து மேல்வர்க்கம் தங்களது ஆளுமையை நிலை நிறுத்த,சாதாரண மக்கள் அரச உத்தியோகம் பெறுவதைத்தடுக்க இலங்கையெங்கும் பரவலாக்கப்படும் சுயபாஷாக் கல்வியை எதிர்க்க தமிழத் தேசியத்தை ஆயுதமாக்குகிறார்கள்;’ என்று எங்கள் ஆசிரியர்; விளக்கம் தந்தார்.
சத்தியாக்கிரகம் வந்தது.தமிழத்தேசியம் வீடு வீடாகப் பிரசாரம் செய்யப்பட்டது. மங்கையற்கரசி அவர்களின் கணிரென்ற கவர்ச்சியான பேச்சுக்கள் சுதந்திரன் பேப்பரில் பிரசரிக்கப்பட்டு எங்களைப்போன்ற பெண்களை வீறுகொண்டெழப்பண்ணின. மட்டக்களப்பில், கா.சி. ஆனந்தன் தமிழ்த்தேசியப் பாடல்கள் எழுத, கலா அக்கா தனது இனிமையான குரலில் பாட, எங்களைப்போன்ற பட்டிக்காடுகள் தமிழ் உணர்வால் பரவசப்பட்டோம்.
அக்கரைப்பற்றில் தொடங்கிய சத்தியாக்கிரக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் எந்தப் பெண்களும் சேரவில்லை. ஆர்ப்பாட்ட ஊர்வலம், எங்கள் ஊர் கோளாவிலுக்கு வந்து எங்கள் தெருவையடைந்தபோது, தட்டுவேலிக்கு மேலால் புதினம் பார்த்துக் கொண்டு நின்ற எங்களைக் கண்ட, ஆண்கள்,’யாழ்நகரில் மங்கையற்கரசி, மீன்பாடும் தேனாட்டில் கலா மாணிக்கம் வீடு கடந்து வந்து தமிழர் விடுதலைக்குப் போராடுகிறார்கள், எங்கள் ஊர் பெண்களுக்குத் தமிழ் உணர்வு கிடையாதா?’என்று ஆர்ப்பரித்தனர்.
நானும் எனது தமக்கை சரோஜாவும் (நடா மோனின் மாமியார்) மங்கையற்கரசி, கலா மாணிக்கத்தைப் பின்பற்றத் தமிழ் உணர்வுடன், தாவணி பாவாடையுடன் தட்டுவேலி தாண்டிக் குதித்தோம். அன்று பின்னேரம் அக்கரைப்பற்று விளையாட்டுத்திடலில் கூட்டம் நடந்தபோது நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கு பற்றினார்கள். சத்தியாக்கிரகப் போராட்டக் கூட்டத்தைத் தொடங்கிய ஆண்கள்; எங்களைப் பாராட்டினார்கள்
எங்களின் ஈடுபாட்டால்,பெண்களின் பங்கு பட்டி தொட்டியெல்லாம் பரவின.ஆயிரக்கணக்கான பெண்கள் சத்தியாக்கிரகத்தில் பங்கு பற்றினார்கள். தாவணி பாவாடையுடன் மட்டுநகருக்குச் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றச் சென்ற பட்டிக்காட்டுப் பெண்களான எங்களைப் பட்டணத்துப் பெண்கள் பகிடியாகப் பார்த்தார்கள்.’தமிழ அரசு’ கிடைக்கும் என்ற உணர்வால் நாங்கள் எதையும் பொறுத்தக்கொண்டோம்.
பாடசாலையில் எங்கள் ‘இடதுசாரி ‘ஆசிரியர் சத்தியாக்கிரகத்தை ஒரு நாடகம் என்று கிண்டலடித்தார்.
அடுத்த சில வருடங்களில்,,மருத்துவத்தாதி பயிற்சிக்கு.யாழ்ப்பாணம் போய்விட்டேன்.
66ம் ஆண்டில்,சங்கானையில் சாதிக்கலவரம் வெடித்தது. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் உயர்சாதித் தமிழரால் மிருகத்தனமாகத் தாக்கப் பட்டார்கள். ஓடுக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள்,உயர்சாதித் தமிழர்களால்; படுகேவலமான கொடுமைகளுக்கு ஆளாகினார்கள். ஆண்கள் பயங்கரமாகத் தாக்குப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஓரு ஒடுக்கப்பட்ட தமிழரின் முள்ளந்தண்டு சாதி வெறிபிடித்த உயர் மட்ட தமிழனின்; கோடரியல் பிழக்கப்பட்டு அவர் உயிருக்கப்போராடிய நிலையில் வந்திருந்தார். முதல் வருட மாணவியான நான் ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்குச் செயயும் கொடுமை கண்டு அதிர்ந்து போனேன்.
58ம் ஆண்டில் சிங்களவர் தமிழருக்குச் செய்த கொடுமைகள் மாதிரி யாழ்ப்பாணத்தில் ஒருசில ஆண்டு இடைவெளியில் உயர் மட்டம் ஒடுக்கப் பட்ட தமிழருக்குச் செய்கிறது!தமிழ்த்தேசியம் மௌமாகவிருந்தது!
ஊருக்கு வந்தபோது,எனது இடதுசாரி ஆசிரியரைச் சந்தித்தேன்.அவர் எனது யாழ்ப்பாண அனுபவம் பற்றிக்கேட்டார்.சங்கானை விடயத்தைச் சொன்னேன்.அவர்,
‘ பிரித்தானியர் இலங்கையில் எல்லா மாணவர்களுக்கும் கல்வி தேவை என்ற சட்டத்தை அமுல் நடத்தத் தொடங்கியபோது, யாழ்ப்பாணத்து உயர்மட்டத்தினர்,ஒடுக்கப்பட்ட மக்கள் பாடசாலை செல்ல முடியாதவாறு பயங்கரமாகத் தாக்கினார்கள்.தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்குச் சமமாகவிருப்பதை அவர்கள் விரும்பவில்லை.அதுபோலவே பிரித்தானியாவில் பெண்களின் போராட்டத்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் வாக்குரிமை வந்ததை இலங்கையிலும் அமுல்நடத்த முனைந்தபோது, ஒடுக்கப்பட்ட தமிழருக்குக் ஓட்டு உரிமை கொடுப்பதை அவர்கள் ஆக்ரோஷமாகத் தடுத்தார்கள். மலையகத் தமிழ்மக்களின் இலங்கைப் பிரஜா உரிமை பறிபோகச் சிங்கள் முதளாளித்துடன் ஒன்று சேர்ந்தார்கள்.தமிழ்த்தேசியம் யாரின் நன்மைக்காக அரசியல் செய்கிறது என்று புரிகிறதா’ என்று கேட்டாh.
சாதிக் கொடுமையால் உயிரிழந்த ஒடுக்கப்பட்ட இளம் தமிழ்ப் பெண்ணை வைத்து,’சித்திரத்தில் பெண்ணெழுதி’ என்ற எனது சிறு கதை பல்கலைக்கழக மாணவர் பத்திரிகையில் வெளிவந்தபின். திரு பாலசுப்பிரமணியத்தினதும், பல இடதுசாரிகளினதும் தொடர்பு கிடைத்தது.
தமிழ்த்தேசியம் பற்றிய எனது பார்வை கூர்மையடைந்தது.
60ம்ஆண்டுகளின் பிற்பகுதியில், யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள்,அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கோயிற் பிரவேசத்தை எதிர்த்த போராட்டம்,இடதுசாரிகளின் துணையுடன் ஆரம்பமானது. அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின் தலைமையில், உயர்சாதித் தமிழர்கள் சிங்களப் போலிசாரின்; உதவியுடன் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைப் பயங்கரமாகத் தாக்கினார்கள்.
தமிழ்த்தேசியம் மௌனம் சாதித்தது.
கடவுள்கள் உயர்சாதித் தமிழர்களுக்கு அனுக்கிரகம் செய்ய மட்டுமா கோயிலில் வாசம் செய்கிறார்கள்?எனது கேள்விகள் தொடர்கின்றன.
தமிழ்த்தேசியம் வளர்கிறது. தலைவர்கள் மாறுகிறார்கள். தங்களுக்குள் ஆளுமையை வைத்துக்கொள்ள என்னவெல்லாமோ செய்கிறார்கள்.முன்னுக்கப்பின் முரணாக எத்தனையோ சொல்கிறார்கள். சிங்களவர்களிடம் அவர்களாற் கொடுக்கமுடியாதவற்றைக்(தமிழ் ஈழம்!) கேட்டு முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.அதே நேரம் தங்கள் சொந்த நலன்களையம் இலாபங்களையம் வளர்த்துக் கொள்கிறார்கள். போருக்குப்பின் இரு சமூகமும் சமாதானமாக இருக்கக்கூடாது என்பதில் பல கவனம் செலுத்திப் பிரச்சினைகளையுண்டாக்குகிறார்கள்.
தமிழ்த் தேசியம் என்ற முகமூடிக்குப் பின்னாலிருந்துகொண்டு,தங்களின் சாதித் திமிர், பிராந்திய வெறியைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.மட்டக்களப்புத் தலைமையை அடக்குகிறார்கள். அன்று மட்டக்களப்பு மக்களால்,’செந்தமிழச் செல்வன்’ ‘மட்டக்களப்பின் இளவரசன்’என்றெல்லாம் பெருமையாகப்பேசப்பட்ட செ.இராசதுரையை ஓரம் கட்டினார்கள்.இன்று மட்டக்களப்பு மக்களுக்கு,இன மொழி பேதமற்று, உண்மையான சேவை செய்த மண்ணின் மைந்தனான சந்திரகாந்தனை ஒதுக்கி விட்டார்கள்
1982ல்,நிர்மலா நித்தியானந்தன் உட்படப் பலர் கைது செய்யப்பட்டபோது, எனது தலைமையில் லண்டனில், இலங்கைத் தமிழருக்கான மனித உரிமையை முன்னெடுத்துப் பல போராட்டங்கள் தொடங்கின. எனது ‘தமிழ்’ உணர்வு,மொழிவெறியற்ற, பிராந்திய வெறியைத் தாண்டிய மனித நேயத்தில் பிறந்தது, வளர்வது, வாழ்ந்து கொண்டிருப்பதாகும்.
1985ல் இலங்கையிலிருந்து தப்பி வந்த அகதிகளுக்கான ஸ்தாபனத்தில் தலைவி பதவியால், எனது வேலையை இராஜினாமா செய்து விட்டு எனது மக்களுக்காகச் சேவை செய்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் பிறந்த பிராந்தியத்திலிருந்து ஒருத்தரும் அகதியாக லண்டனுக்கு வரவில்லை.
தமிழ்தேசிவாதிகளோ சந்தர்ப்பம் வரும்போது தமிழர்கள் பெயரில் சுயலாபம் தேடுகிறார்கள்.சரத் பொன்சேகா ஜனாதிபதி பதவிக்குப் போட்டி போட்போது,அவர்களை ஆதரித்த தமிழ்த்தேசியவாதிகளுக்குக் கோடி கோடி டாலர்ஸ்கள் கொடுக்கப்பட்டதாக வதந்தி அடிபட்டது.அதைத் தமிழர்களுக்குச் செலவழித்த தகவல்கள் கிடையாது.போரின் காரணமாக வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்த பல்லாயிரம் விதவைகள், அனாதைக்குழந்தைகள் தமிழ்தேசியத்தின்; கவனத்தை ஈர்ப்பது குறைவு
இலங்கைத் தமிழ்ப்பகுதிகள் இணைப்பதற்கு அடிமூலமாக வேலைசெய்த திரு அமிர்தலிங்கத்தைப் புலிகள் கொலை செய்தார்கள்.
கொலைசெய்யப்பட்ட செய்தி கேட்டு, திரு அன்ரன் பாலசிங்கத்தக்கப் போன்பண்ணி,’ தமிழ்த்தேசியம் கேட்ட வட கிழக்குப் பிரதேசத்தை ஒன்று சேர்த்து எடுத்துத்தந்த தலைவரை,சிங்கள முதலாளித்துவத்தைத் (பிரேமதாச) திருப்தி படுத்த ஏன் கொலை செய்தீர்களா?”என்று ஒப்பாரி வைத்தேன்.
அவர் அப்போது,’ இந்த மோறோன்கள்(முட்டாள்கள்)தான் செய்திருந்தால் அவர்களுடன் ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன்’ என்றார். ஆனால் சில நாட்களின் பின் அவர் என்ன சொன்னார் என்பது பலரும் தெரிந்தது. தமிழ்த்தேசியமும் அதன்சார்பில் வாழத்தெரிந்தவர்களும் மிக மிகச் சுயநலவாதிகள என்று தெரிந்துகொண்டும் அதை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.;
அஷிம்சா வழியில் ஆரம்பித்த தமிழ்த்தேசியம்,அரசியலறிவற்ற ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்து.அந்தத் தோல்வியால் இன்று ஒரு இனத்தின் பெரும் செல்வமான், சனத்தொகை, கல்வி வளம்,சமுக முன்னேற்றம் அத்தனையையும் இழந்து நிற்கிறது.
திருமதி மஙகையற்கரசியின் இனவாதம் சார்ந்த பேச்சான,’சிங்களவரின் தேலையுரித்துக் காலணி போடுவேன்’ என்பதை ஒரு நண்பர் ஞாபகப்படுத்தினார்.
மங்கையற்கரசி,பெரும்பாலான தமிழ்த்தேசியவாதிகள்போல் அதைச் சொல்லியிருக்கிறார். தமிழ்த்தேசியம் அப்படியான பேச்சுக்களை ஊக்குவித்தது. அப்படியான பேச்சுக்கள் சிங்கள இனவாதத்தை எப்படித் தூண்டியிருக்கும் என்ற சொல்லத் தேவையில்லை.அப்படித்தான் ஹிட்லரின் அடிவருடிகள் செய்தார்கள்.யூதமக்களின் தோலை உரித்துப் பாதணிகள், லைட் கவர். போன்ற பலவற்றைச் செய்தார்கள்.
தமிழத்தேசியத்தின் இனவாதப்பேச்சுக்கள் சிங்கள இனவாதத்தை வளர்க்கிறது. இருபக்க அரசியல்வாதிகளும் இனவெறியைத்தூண்டிக் கொண:;டு தங்கள் ஆளுமையை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள்.தமிழ் இனவாதம் சிங்கள மக்களை மட்டுமல்ல முஸ்லிம் மக்களையும் தமிழரிடமிருந்து அந்நியப் படுத்தி வைத்திருக்கிறது. 1990ல் முஸ்லிம் மக்களை மனிதமற்றமுறையில் யாழ்நகரிலிருந்து துரத்தினார்கள்.
மேல் மட்ட ஆணவம் பிடித்த தமிழ்த்தேசியத்துக்கு தங்களைத் தவிர யாரையும் பிடிக்காது. சிங்களவர், முஸ்லிம்கனைப் பிடிக்காது, மலையகத்து,மட்டக்களப்பு. மன்னார், வவுனியா,கிளிநொச்சி போன்ற பிராந்தியங்களில் வாழும் தமிழர் அத்தனைபேரையும் ஆளும் தகுதி தங்களுக்கென்று ஆணவத்துடன் நினைக்கிறார்கள்.இவர்களுக்கு ‘வடக்கத்தியாரைப்'(இந்தியரை) பிடிக்காது.அவர்களின் நாட்டுக்கே சென்று அவர்களின் தலைவரைக(ரஜிவ் காந்தி); கொலை செய்தார்கள். ஆனாற் தங்களுக்குத் தேவை வரும்போது தமிழ்நாட்டில,’;@இலங்கைத் தமிழ்த் தேசியத்துக்குக்’கூலிக்கு மாரடிக்கும் கோமாளி அரசியல்வாதிகளைப் பாவித்துக்கொள்வார்கள்.
சிங்களத் தலைவர்கள் யாழ்ப்பாணம் சென்றபோது ‘செருப்பெறி’வரவேற்பு கொடுத்து (1977.ஜே.ஆர் ஜெயவார்த்தனா) சிங்கள இனவாதத்தின் அனலைச் சீறிடப்பண்ணினார்கள். சிங்கள மக்களுடன் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுடனும் இணைந்து வாழாமல் பிரிந்து வாழ கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். பிரிவினை வாதத்தில் வந்த அழிவையோ அதன் பிரமாண்டமான சமுகமாற்றத்iதுயோ ஆராய மறுக்கிறார்கள்.
திருமதி மஙகையற்கரசிபோன்றோரின், கவர்ச்சியான பேச்சால் குறுகிய குடும்ப அமைப்பக்குள்ளிருந்து வெளியே வந்து, இன்று ஒரு பரந்த அரசியல், கலாச்சார, பெண்ணியக் கண்ணோட்டத்தில் வந்த ஒருசிலர் எங்கள் தமிழ்ச் சமுதாயம் ஒரு நல்வழியில் காலடி எடுத்துவைக்க எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்.
அரைநூற்றாண்டுக்கு முன் திருமதி அமிர்தலிங்கத்தால் வெளி வந்த எனது’விடுதலை’ உணர்ச்சி ,அதன் பின் தொடர்ந்த வாழ்க்கை மாற்றம், வித்தியாசமான சூழ்நிலை. ஓரளவான மேற்படிப்பு என்பவற்றால் பன்முகப்படுத்தப்பட்டிருக்கிறது.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத காலத்தில், தங்களின் குடும்பத்து ஆண்கள் காட்டியவிதத்தில் அரசியல் செய்ய வெளிவந்தவர்கள்.மங்கையற்கரசியும் அந்த வழியில் வந்தவர்.அவர் தனக்குத் தெரிந்தததை மிகவும் திறமையாகச் செய்தவர்.பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து எத்தனையோ மாற்றங்களைச் செய்யலாம் என்ற தத்துவத்தை எங்கள் போன்ற பெண்கள் மனதில் பதித்தவர்.
2009ம் ஆண்டு தமிழ்ப் போராட்டம் தோல்வியடைந்தபோது, எல்லாம் இழந்து இடம் பெயர்ந்த மக்களக்கு உதவத் தமிழத் தேசியம் முன்வரவில்லை. எங்களைப்போன்ற சிலர் அவர்களுக்கு உதவப் இலங்கையிலிருந்த பல தூதுவர் ஆலயங்களுக்கும்,பல சமயவாதிகளிடமும். இலங்கையிலிருந்த பல உலக ஸ்தாபனங்களுக்கும் சென்றோம்.
நானும் டாக்டர் நடேசனும்,(அவுஸ்திரேலியா) இந்தியா சென்று, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியைச் சந்தித்து, இந்திய மத்திய அமைச்சிலிருந்த பன்முகக்குழு இலங்கை வந்து தமிழ் அகதிகளின் நிலையைப் பார்வையிடச் செய்து, இந்திய அரசாங்கத்தால் 50.000 வீடுகள் கட்டிக்கொடுக்க சம்மதம் தெரிவிக்கப் பண்ணினோம். அதைச் செய்து முடிக்க நாங்கள் பட்ட சிரமம் பலருக்குத் தெரியாது. அவலப்படும் மக்களுக்காகச் சேவை செய்யவேண்டுமென்ற எங்கள் பிரக்ஜை அடுத்தவனின் துன்பத்தைத் தீர்க்கவேண்டும் என்ற மனிதாபிமானத்தில் தொடர்வது. தார்மீகக்கோட்பாடுகளை உள்ளடக்கியது.; தர்மத்தைத் துணைகொண்டது.
எங்களின் இப்படியான, சுயநலமற்ற வேலைகளைத் தமிழ்த்தேசியம் செய்யாது.ஏனென்றால் அவர்கள் மக்களைத் தங்கள் உழைப்பின் ‘மூலப்’; பொருளாக மதிப்பவர்கள். எங்கள் முயற்சியால் முன்னெடுக்கப்ட்ட அந்த வீட்டுத் திட்டத்திலும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களால் பல மோசடிகள் நடக்கின்ற என்று செய்திகள் வருகின்றன. தங்களைத் தெரிவு செய்யும் மக்களுக்கு உதவி செய்யாத,நேர்மையற்ற, தார்மீகமற்ற, தர்மத்தை மதிக்காத எந்த அரசியலும் ஒருநாள் தோல்வியடையும்.
அரசியல் ஆளுமையற்ற,உணர்ச்சி பூர்வமான எந்த போராட்டமும் தோல்வியடையும் என்பதை மங்கையற்கரசியும்; உணர்ந்திருப்பார்.
ஓரு அழகான அதிகாலைநேரம், அந்த சத்தியாக்கிரகக் கோஷத்தில்,’யாழ்ப்பாணத்தில் ஒரு மங்கையற்கரசி, மட்டுநகரில் ஒரு கலா மாணிக்கம் ‘என்ற வரிகள் அடிக்கடி என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.
இந்த இருபெண்களும் தாங்கள் நம்பிய தமிழ்த் தேசியத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள்.தமிழ்த்தேசியத்தின் பயங்கர முகத்தைக் கண்டவர்கள். என்னைப் போன்றவர்கள், தமிழ்த்தேசயத்தின்,குருரத்தை,அசிங்கத்தை,கேவலத்தை, பொய்மையைக் கேள்வி கேட்பதால் மிக மிகக் கேவலாமாக நையாண்டி செய்யப்பட்டவர்கள். அவமானப்படுத்தப் பட்டவர்கள்.
இதுவரை,சாதி மத,இனப் பாகுபாடு பார்க்காமல் எத்தனையோ பெண்களின் விடயத்துக்காகப் போராடியிருக்கிறேன். ஆனால்,நான் தமிழத்தேசியவாதிகளால்; கேவலப்படுத்தப் பட்டபோது இதுவரையும் எந்தப் பெண்ணியவாதியும் (முற்போக்கு தமிழ் ஆண்களும்!) எனக்காகக் குரல் தரவில்லை.
திருமதி மங்கையற்கரசியால் என்னைப்போல் ஆயிரக்கணக்கான பெண்கள், வெளியே வந்தார்கள். ஆயிரக்கணக்கானோh,அளப்பரிய இழப்புக்களை எதிர் கொண்டிருக்கிறார்கள். திருமதி மஙகையற்கரசியின் வாழ்க்கை வரலாறு பல தமிழ்ப்பெண்களின் வாழ்க்கை வரலாறு. பல கேள்விகளைக் கொண்டது.அதிலிருந்த படிக்கவிருப்பது ஏராளமான விடயங்களாகும்.
Like this:
Like Loading...
Related
மிகச்சிறந்த அலசல்.எழுத்தின் நேர்மை வசீகரிக்கிறது.
LikeLike