‘ஈஸ்வரா நீ எங்கே?’

லண்டன் 1995.
பார்வதியாம் அவள் பெயர்.
மெலிந்து,சுருங்கிய தனது கறுத்த உடலை, சிவப்புப் பொட்டுக்கள் நிறைந்த சேலையால் மூடிக்கொண்டிருந்தாள்.அவளுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கலாம். அல்லது அதற்கும் கூடவாகவிருக்கலாம்.
‘இந்தப் பெண்தான் நான் சொன்னவள்…அவளுக்கு விளங்கப் படுத்திச் சொல் கோர்ட்டில் என்ன கேட்பார்கள் என்று. பயமில்லாமல் எல்லாவற்றையும் சொல்லச் சொல்.’ எனது சினேகிதி சகிலா அந்தப் பெண்ணிடம் அழைத்துக் கொண்டுபோய் எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

சகிலா  ஒரு அழகான சினேகிதி. துன்பப்படும் மனிதர்களுக்காக இரங்குபவள்.

எங்கள் சினேகிதம்,நாங்கள் இருவரும் ஒருகாலத்தில் திரைப்படத்துறைப் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆரம்பித்தது.இன்னும் தொடர்கிறது. .

நான் இரண்டாவது வருட மாணவியாக இருந்தபோது அவள் முதலாவது வருட மாணவியாக வந்து சேர்ந்தாள்.; நான் படித்த திரைப்படக் கல்லூரி அந்தக் கால கட்டத்தில,இனவாதம், காலனித்துவ மிச்ச சொச்ச ஆளுமை, பாலஸ்தீனிய மக்களின் விடுதலை என்ற விடயங்களில் மும்மூரமாக இடுபட்டுக் கொண்டிருந்தது. சகிலா போன்ற முற்போக்குவாதப் பெண்கள் இன மத பேதமின்றி இணைந்த போராட்டங்கள் அவை.
‘நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்’ என்று  லண்டனில் பல வருடங்களாக நடந்த போராட்டத்தில் எங்களுடன் ஒன்றாகத் திரிந்தவள்.
 இப்போது.அவள் தனது முழுநேர வேலையான சவுண்ட் எடிட்டிங் வேலையுடன், நேரம் கிடைக்கும்போது இந்தியப் பெண்கள் நிறுவனமொன்றில் உதவி தேடி வரும் அனாதராவாக பெண்களுக்கு உதவி செய்கிறாள்.

அண்மையில் எனக்குப் போன்பண்ணி என்னைச் சந்திக்கவேண்டுமென்றாள்.
திரைப்படத்துறை மாணவர்கள் ஒரு காலத்தில் சந்திக்குமிடமான நாஷனல் பிலிம் தியேட்டருக்குப் பக்கத்திலுள்ள காப்பிக் கடையில் அவளுக்காகக் காத்திருந்தேன்.

 சகிலா எனக்குப் போன் பண்ணியபோது, இலங்கையின் தமிழரின் தலைநகரான யாழ்ப்பாணத்திலிருந்த, அரசியற் காரணங்களுக்காக பல்லாயிரம் மக்களை முஸ்லிம் மக்களை தமிழ்விடுதலைப்புலிகள் உடனடியாக நகரை விடடு வெளியேறச் சொன்ன செய்தி வந்திருந்தது.
 ‘ ஆண்டாட்டு காலமாக வாழ்ந்த முஸ்லிம் மக்களை அரசியல் வக்கிர உணர்ச்சியால் இனசுத்திகரிப்பு செய்வது மனிதமற்ற செயல்’ சகிலா என்னிடம் கத்தினாள்.

‘விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் செய்து கொண்டிருக்கும் இனசுத்திகரிப்பு விடயத்துக்கு லண்டனிலிந்து கொண்டு நான் என்ன செய்ய முடியும்?’ நான் விரக்தியுடன் அவளைக் கேட்டேன்.அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த நூற்றக்கணக்கான முற்போக்குவாதிகள், புத்திஜீவிகள், மாற்றுக் கொள்கையாளர்கள் மண்ணோடு மண்ணாய் மறைந்ததை அவளுக்கு விளங்கப் படுத்தினேன்.

அதைப் பற்றிய விளக்கத்தை என்னிடம் கேட்கத்தான் என்னைச் சந்திக்கச் சொல்கிறாளா என்று நான் யோசித்துக் கொண்டிருககும்போது அவள் வந்தாள்.

வரும்போது, அவள் நடையில் அவசரம்.’ சவுண்ட் எடிட்டிங்கை அரைகுறையுமாகச் செய்து விட்டு வந்திருக்கிறேன்..உன்னிடமிருந்து அவசரமாக ஒரு உதவி தேவை’ என்றாள்.

‘சகிலா, இலங்கையில் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது பற்றி செய்து என்னிடம் சொல்லி என்ன பிரயோசனம். நானும் நீயும் சாதாரண பெண்கள், பெரிய அரசியல் மாற்றங்களைத் தடுக்க ஒன்றும் செய்ய முடியாதவர்கள். உலகத்தில் பல இடங்களிலும்தான் சொல்லமுடியாத கொடுமைகள் நடக்கின்றன. தென்னாபிரிக்கா, பொஸ்னியா,என்று எத்தனை” நான் விரக்தியுடன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவள் குறுக்கிட்டாள்.
‘நான் கேட்க வரும் உதவி ஒரு அபலைப் பெண்ணுக்கானது. இன மதத்துக்கப்பால் ஏழை பணக்காரர் என்ற அடிப்படையில் நடக்கும் பாரிய கொடுமை பற்றியது. லண்டனில் மனிதமற்றுக் கொடுமை செய்யப்பட்டுத் துயர் படும் பெண்ணுக்கு விடுதலை எடுக்கத் தேவையான உதவியை நீ எனக்குச் செய்வாயா’ சகிலாவின் குரலில் கலக்கம்.
அவள் உதவி செய்யும் பெண்கள் ஸ்தாபனத்திற்கு வரும் பெண்கள் சொல்லும் துயர்க் கதைகள் எண்ணிக்கையற்றவை. கேட்கவே நெஞ்சுருக வைப்பவை.
‘திருமணத்துக்குள் நடக்கும் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் பெண்கள் ஸ்தாபனத்துக்குள் தஞ்சம் கேட்கும் பெண்களின் கதைகளைப் பிரசுரம் செய்தால் எத்தனை பெண்கள் திருமணத்தை வெறுப்பார்களோ தெரியாது’ என்ற பல தரம் சகிலா பெருமூச்சு விட்டிருக்கிறாள்.
அவள் என்ன உதவி கேட்கப் போகிறாள் என்பதைக் கேட்க அவளைப் பார்த்தேன். பசியாற எனது வாயில் ஏதோ ஒரு துண்டு கேக்கை வைக்கிறேன். அவள் சொல்லப் போகும் விடயம் இனிக்கப் போவதில்லை என்று தெரியும்.
 ‘தமிழ் பேசுவாய்தானே,’ சகிலா என்னைக் கேட்டாள்.
சகிலா,டெல்லியைச் சோர்ந்தவள் சிறுவயதில் லண்டனுக்கு வந்தவள். தாய்தகப்பனுடன் அடிக்கடி தாய்நாடு செல்வதால் அவள் பல விடயங்களில் இன்னும் ஒரு ‘இந்தியப்’ பெண்ணாக எனக்குத் தெரிவாள். அரையும் குறையுமாக. ஆறு இந்திய மொழிகளைப் பேசுபவள். தனக்குத் தமிழ் தெரியவில்லை என்பது பெரிய துக்கம் என்ற சொல்பவள்.
 ‘சங்கத் தமிழா அல்லது தற்காலத் தமிழா?’ நான் வேடிக்கையாகக் கேட்டேன்.
அவள் என்னை முறைத்துப் பார்த்தாள்.
‘ ம் ம். தமிழ்ப் பாடல்கள் பாட அவ்வளவாக வராது,சுமாராகப்பேசுவேன் தாராளமாகத் திட்டுவேன்’ நான் வேண்டுமென்றே குறும்பாகச் சொன்னேன்.
அவள் கல கல வென்று சிரித்தாள் அவள் சிரிப்பதைப் பார்க்க எனக்கு ஆசை. முக்காடு போடாத முஸ்லிம் அழகின் சதங்கை ஒலி போன்ற சிரிப்பு, பக்கத்துத் தேம்ஸ்நதியின் மெல்லலையுடன் இணைந்து ஒலித்தது. மூக்கில் ஒரு சிவப்புக்கல் மூக்குத்தி.அண்மையில் இந்தியாவுக்கு விடுதலைக்குப் போய்வந்ததன் பிரதிபலிப்பாகப் பளபளத்தது.
கிழக்கையும் மேற்கையும் இணைக்கு மூக்குத்திகள் மட்டும்போதுமா?
அவள் சிரிப்பு ஒரு கணநேரத்தில் மறைய அவள் கண்களில் கலக்கம் பளிச்சிட்டது.
‘எங்கள் ஸ்தானத்திற்கு ஒரு முதிய தமிழ்ப் பெண் வந்திருக்கிறாள். எங்களில் ஒருத்தருக்கும் தமிழ் சரியாகத் தெரியாது.
இந்தப் பெண்; முப்பாய்த் தமிழ்ப் பெண்ணாம். ஒரு வேலைக்காரியாக அராபிய வீட்டில் வேலை செய்தவளாம். அந்த வீட்டில் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆளாகியிருக்கிறாள். பக்கத்து வீட்டு ஆங்கிலேயன் இவளின் கதறல்கள்கேட்டு போலிசுக்குப் போன்ன பண்ண, போலிசார் அவளைக் கொண்டு வந்து எங்கள் ஸ்தாபனத்திச் சேர்த்தார்கள்.போலிசார் இந்தப் பெண்ணுக்குக் கொடுமை செய்த அந்த அராபியச் சீமாட்டிக்கு எதிராகக் கேஸ் போட்டிருக்கிறார்கள்.அவளின் வாக்கு மூலத்தை நீ தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். செய்வாயா?’
சகிலா அந்த ஏழைப் பெண்ணுக்காக எடுக்கும் கரிசனம் அவளின் குரலிற் பிரதிபலித்தது. அவள் என்னிடம் என்ன உதவி கேட்க வந்திருக்கிறாள் என்ற விளக்கத்தை நான் கேட்கமுதலே அவள் விளக்கமாகப் பல விடயங்களைச் சொல்லி விட்டாள்.

வழக்கு எங்கே எத்தனை மணிக்கு, எப்போது நடக்கிறது என்ற பல விடயங்களைச் சகிலா சொன்னதால் நான் இன்று,இங்கு பார்வதியைச் சந்திக்க சகிலாவின் ஸ்தாபனத்தக்கு வந்து பார்வதிக்கு முன்னாலிருக்கிறேன்.

பார்வதி அங்கு உட்கார்ந்திருக்கிறாள். சகிலா இன்னொருதரம் எனக்கு பார்வதியின் வழக்கு பற்றிய விளக்கங்களைத் தருகிறாள்.

பார்வதியைப் பார்த்ததும் என் மனதில் ஒரு சிலிர்ப்பு. இந்த வயதிலும் மற்றவர்களிடம் வேலை செய்து குடும்பத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஏழ்மையின் கொடுமை என்னை நெகிழப் பண்ணியது.இவளை வைத்துப் பாதுகாக்க, கணவன், மகன் என்று யாருமே கிடையாதா?
பார்வதி முப்பாயில் வாழ்ந்த ஏழைத் தமிழ்ப்பெண். பூர்வீகம் தமிழ் நாடாக இருக்கலாம்.அவளுக்குக் கொஞ்சம் ஹிந்தியும் மராட்டியும் தெரியும். சகிலா டெல்லியைச் சோர்ந்தவள். இருவருக்கும் இடையில் நான் ஒரு மொழிபெயர்ப்பாளராகவேண்டும்.அத்துடன் பார்வதியின் வாக்குமூலத்தை மொழி பெயர்த்து கோர்ட்டாருக்குச் சொல்லவேண்டும்.
நான் எனது பெயரைப் பார்வதிக்குச் சொன்னேன்.
‘சந்தோசங்க’ என் முகத்தைச் சாடையாகப் பார்த்தபடி ஏனோதானோ என்று சொன்னாள். அவள் குரலில்,தன்னோடு உரையாட ஒரு தமிழ்மாது வந்திருப்பதை வெளிப்படுத்தும் எந்தவிதமான ‘சந்தோசத்தின்’ அடையாளமேயில்லை. நான் அவளுக்கு உதவி செய்ய வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லையா? எங்களுக்கிடையில் ஏதோ ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக எனக்குப் புரிந்தது. நான் சகிலாவைக் குழப்பத்துடன் பார்த்தேன். சுகிலா,’அந்தம்மா ரொம்பவும் விரக்தியாக இருக்கிறாள்’ என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.
‘நான் உனக்கு மொழி பெயர்ப்பாளராக வந்திருக்கிறேன்’ நான் அழுத்திச் சொல்கிறேன்
‘நன்றிங்க’ அவள் குரலில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. அவள் மறுமொழி, ஏதோ சாட்டுப் போக்குக்காகத் தொடரும் சம்பாஷணையாகப் பட்டது.
நாங்கள் பெண்கள் ஸ்தாபனத்தின் ஹாலில் உட்கார்ந்திரக்கிறோம்.பார்வதி மிகவும் பயந்துபோயிருப்பதாகவும் நாங்கள் அவளுக்கு உற்சாகம் கொடுக்கவேண்டும் என்றும் பெண்கள் ஸ்தாபன பெண்மணியொருத்தி சகிலாவுடன் சேர்ந்துகொண்டு எனக்குச் சொன்னாள்.
‘பார்வதி…’நான் தொடர்ந்தேன்.
‘……….’
அவளிடமிருந்து ஒரு மறுமொழியுமில்லை.
‘தேனிர் கொண்டுவரட்டா?’ என்குரலில் ஆதரவு.
‘வேண்டாங்க’தள்ளிப் போயிருக்கும் தவிப்பு அவள் குரலில்.
‘சாப்பிட்டாயா?’ அவளின் வாடிய தோற்றத்தைப் பார்க்கப் பாவமாகவிருந்தது.
‘ஆமாங்க’ அவள் சட்டென்று மறுமொழி சொன்னாள்.
ஏழைகள் உணவைக் கண்களிற் காணாமல் மனதால் கண்டு நிறைவு பெறுவார்களா? இவள் தங்கள் ஸ்தாபனத்தில் சரியாகச் சாப்பிடுவதில்லை என்று சகிலா சொன்னது எனக்குத் தெரியும்..
‘பார்வதி..நான் உனக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன..பயப்பிடக் கூடாது’
 அவள் அழுதுவிட்டாள்.
திடிரென்று ஓவென்று அழுது விட்டாள். தனது முந்தானையால் தனது முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கி விட்டாள்.
உலகத்தக் கொடுமைகளைக் கண்டு தாங்கமுடியாது விம்மல் முந்தானையால் மூடப்பட்டுக்கிடந்த அவளின் தொண்டைக்குள்ச் சிக்குப் பட்டுத்தவித்து
மெல்லத் தொடர்ந்து கொண்டிருந்தது.
எனது தாய் அழுதால் என்னாற் தாங்கமுடியுமா?
அவளின் கைகைளைப் பற்றி ஆறுதலுடன் தடவிக் கொடுத்தோன்.
கொஞ்ச நேரத்தின்பின் அங்கிருந்த சமயலறைக்குள் கூட்டிச் சென்றேன். அவளைச் சாப்பிடப் பண்ணவேண்டும் என்ற நினைத்தேன்.
அவள் சமயலறைத் தரையில் குந்தியிருந்து கொண்டு, முழங்கால்களில் தன்முகத்தைப் புதைத்துக்கொண்டு தன் அழுகையைத் தொடர்ந்தாள்.
நரைமயிர் காணும் தலை.காதில் ஒரு பிளாஸ்டிக் தோடு. கையில் சில பிளாஸ்டிக் வளையல்கள்.
‘தனது சொந்தப் பேரப்பிள்ளைகளை அள்ளியெடுத்துக் கொஞ்சிக் கொண்டு ஆர அமர்ந்திருந்து வாழ்க்கையை அனுபவிக்கும் வயதில்.ஆயிரம் மைல்களுக்கப்பால் இந்தக் குளிரைத் தாங்கிக்கொண்டு யாரோ வீட்டு வேலைக்காரியாக இருந்ததனால் அவளுக்கு நடந்த கொடுமைகளை நினைத்து அழுகிறாள்.’ சகிலா அந்த ஏழைக்காகப் பரிதாபப் படுகிறாள்
 ‘அழாதே பார்வதி’
நான் அவளுக்குப் பக்கத்திற் குந்துகிறேன்.எனது காற்சட்டையை உயர்த்திப் பிடித்துக்கெர்ண்டு அவளருகில் இருக்கிறேன்.
‘இப்போதே இப்படிக்குழம்பித் தவிப்பவள் அரேபியச் சீமாட்டியின் வழக்கறிஞர் வந்து குறுக்கு விசாரண செய்யும்போது எப்படி நிதானமாகப் பதிலளிக்கப் போகிறாள்?@ நான் தர்மசங்கடத்துடன் யோசிக்கிறேன்.
‘ கவனமாக மறுமொழி சொல்லாட்டா வழக்கில் வெல்ல முடியாது பார்வதி’ நான் மெல்லமாகச் சொல்கிறேன்.
இவளைத் துன்புறத்தியவளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது கட்டாயம் என்று என் மனம் முழங்குகிறது.
‘அம்மா உங்கிட்ட வழக்கு வேணும்னு கேட்டேனா?’ அவள் முதற்தரம் என் முகத்தை நேரடியாகப் பார்த்துக் கேட்கிறாள். அவள் கண்களிற் சாடையான கோபம்.
இப்போது குழம்புவது நான்.
என்ன கேட்கிறாள் பார்வதி?
இவளுக்கு இவளைக் கொடுமை செய்தவர்களுக்கு எதிராகப் போலிசார் வழக்கு நடத்துவது விருப்பமில்லையா?
போலிஸ் பெண்மணி நாங்கள் இருக்குமிடத்தை எட்டிப் பார்க்கிறாள். பார்வதி மிகவும் குழம்பிப் போயிருப்பதைப் போலிஸ் பெண்மணிக்கு ஆங்கிலத்திற் சொல்கிறேன்.
போலிஸ் பெண்மணி என்னை வெளியே அழைக்கிறாள்.பார்வதியைத் தனியாக விட்டு விட்டு நான் போலிஸ் பெண்மணியுடன் வருகிறேன்.
அந்த இடம் மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையாக இருக்கிறது. பெண்கள் ஸ்தாபனத்தாருக்குப் பார்வதியின் முடிவு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.
நேரம் பினனேரம் மூன்று மணியைத் தாண்டி விட்டது. நவம்பர் மாத நடுப்பகுதியென்றபடியால் இப்போதே இருளத் தொடங்கிவிட்டது.வெளியில் இருளும் இரவும் ஒன்றையொன்றுக் கவ்விக் கொண்டிருந்தது.
‘நீ இவற்றைப் பார்த்தாயா?’ மேசையில் கிடந்த பெரிய பைல் ஒன்று,சிறிய கவர்களுடன் சிலவற்றைக் காட்டிப் போலிஸ் பெண்மணி என்னைக் கேட்டாள்.
நான் மறுமொழிசொல்ல முதல்,அங்கிருந்த கவர்களிலிருந்;து பல படங்களை வெளியில் எடுக்கிறாள். அவற்றில் என்பார்வை பதிகின்றன.
‘பார்வதியை நாங்கள் அந்த அரேபியச் சீமாட்டி வீட்டிலிருந்து கொண்டு வந்த அன்று எடுத்த படங்கள் இவை’ போலிஸ் பெண்மணி காட்டிய படங்களைப் பார்த்த என் இரத்தம் உறைவதுபோன்ற ஒரு அதிர்ச்சி.
இதென்ன கொடுமைகள்?
‘இதெல்லாம் நடந்து இப்போது பார்வதியின் காயங்கள் ஆறி, தழும்பெல்லாம் மாறியிருக்கலாம்.ஆனால் அவளுக்கு அந்தச் சீமாட்டி எத்தனைவிதமான கொடுமைகள் செய்தாள் என்பதற்கு இந்தப் படங்கள் சாட்சி. பார்த்தீர்கள் ஒரு பெண் இன்னோரு பெண்ணுக்குச் செய்த கொடுமைகளை?’ வெள்ளைக்காரப் போலிஸ் பெண்மணியின் குரலில் அவள் உத்தியோகத்தைத் தாண்டிய சோகம். அவள் கண்கள் பனித்திருந்தன. ஆங்கிலேய, பிரித்தானிய, இந்திய, இலங்கை என்று எல்லை கடந்த பெண்களின் துயர் அவள் குரலில்.
எனக்குப் பேச்சு வரவில்லை.
படங்கள் சொல்லும் செய்திகள் என்னை வதைக்கின்றன.இதெல்லாம் உண்மையில் பார்வதியின் உடம்புக்கு நடந்த சித்திரவதைகளா?
எனது மௌனத்தைப் புரிந்து கொண்ட சகிலா ஒவ்வொரு படங்களாக எனது பார்வைக்காக நகர்த்துகிறாள். சகிலாவின் கைகள் நடுங்குகின்றன.அவள் கணணீர் அவள் கன்னத்தில் வழிகின்றன..
பார்வதிகள் உதடுகள் வெடித்து,வீங்கி,கண்ணடிப்பக்கம் கருமையானதைக் காட்டும் ஒரு படம்.
பார்வதியின் தோள் மூட்டில் கோடுபோட்டதுபோன்ற இன்னொரு காயம். ‘சூடான இரும்புக் கம்பியால் சூடுபோட்டாளாம் அந்த ஈவிரக்கமற்ற அராபிய மூதேவி.’ சகிலா பொருமினாள்.
‘இந்தக் கொடுமையைப் பார்’ சகிலா இன்னொரு படத்தை நகர்த்தகிறாள்.
‘ பார்வதியின் முதுகு எரிந்து கொப்பளித்து
ஐயையோ இதென்ன கொடுரம்?
பார்வதியின் முதுகில் ‘சூடான அயன்பெட்டியைவைத்து அழுத்தித் தேய்த்த காயம்!
ஓரு பெண் இன்னொரு பெண்ணுக்கு இவ்வளவு கொடுமைகளைச் செய்ய முடியுமா
அடுத்தபடம் பார்வதியின் மார்பகங்களை வைத்து எடுத்தபடம். கொடுமையாக விராண்டுப் பட்டு இரத்தம் கண்டித்த முதுமையான, வாடிப்போன,தளர்ந்து தூங்கும் பார்வதியின் முலைகளின் படம்.
நான் என்னையறியாமல் விம்மத்; தொடங்கி விட்டேன்.
எந்தப் பாவி ஒரு வயதான தோலுக்கு இவ்வளவு கொடுமை செய்யத் துணிவாள்?
பணம் படைத்த மிருகங்கள் இவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்களே,மனித உணர்வே இவர்களுக்கில்லையா?
‘இன்னும் பாh’ சகிலா மேலம் பல புகைப்படங்களைக் காட்டுகிறாள்.
முழங்கால்கள் வீங்கியதைக் காட்டியது அடுத்த படம், மணிக்கட்டுகளில் கையிறு கட்டிவைத்த தடத்துடன் ஒரு படம். தொடையில் பல பயங்கரக் கோடுகளுடன் இன்னொரு படம்.
‘அது அந்த சீமாட்டி கொடுத்த சாட்டையடியாம்’ சகிலா வெறுப்புடன் முணுமுணுத்தாள்.
இவற்றையெல்லாம் பார்க்க எனக்குத் தெரியாத ஒரு கொடுமையான உலகத்தை நான் கண்ட பிரமையில் நான் குழம்பி விட்டேன்.
‘சகிலா, தன்னிடம் வேலைக்கு வந்திருக்கும் ஒரு சீமாட்டியை இப்படி வதைக்க அந்தப் பணக்காரிக்குப் பைத்தியமா?இந்தக் கிழவியின் வேலை பிடிக்காவிட்டால் துரத்தி விடலாமே,ஏன் இந்தக் கொடுமையெல்லாம் செய்தாள்?’
‘ ஏழை நாடுகளிலிருந்து அரேபிய நாடுகளுக்கப் போகும் எத்தனையோ பெண்களுக்கு இந்தமாதிரியான கொடுமைகள் நடக்கின்றன. ஆனால் வறுமை காரணமாகப் பலபெண்கள் இன்னும் அங்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். ஓரு நாட்டின் கண்கள் பெண்கள். அவர்கள் இன்று பல நாடுகளிலிலும் இப்படி அரைகுரை அடிமையாக வாழ்வதற்கு எங்கள் நாடுகளின் அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டும். ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரம் தங்கள் சொந்த நாட்டிலிருந்தால் ஏன் இப்படி மனிதமற்ற கொடுமைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும’? சகிலாவின் சொற்களில் உள்ள உண்மையை யார் உணர்வார்கள்?

நான் பார்வதியிருந்த இடத்துக்குப் போகிறேன்.

 பார்வதி ஏதோ யோசனையுடன் வெறும் தரையிற் கோடு போட்டுக்கொண்டிருக்கிறாள்.

நான் வாசலில் நின்றபடி அவளைப் பார்க்கிறேன். . அவள் பெருமூச்சுடன் முகட்டைப்பார்த்தபடி ‘ ஈஸ்வரா தயவு பண்ணேன்’ அவள் குரலில் கல்லும் கரையும் ஒரு கெஞ்சல்.
‘ இவள் கூப்பிடும் ஈஸ்வரன் கட்டாயம் இவளின் கணவனாக இருக்கமுடியாது. அகில உலகத்திற்கும் அருள் பாலிக்கும் பரமேஸ்வரனைத்தான் இவள் அழைக்கிறாள் என்பது தெரிகிறது.’ நான் எனக்குள் முணுமுணுக்கிறேன்

ஈஸ்வரன் என்றொரு சக்தி இருந்தால் இந்த ஏழைகள் படும்பாட்டைப் பார்த்து மௌனமாகவிருப்பதேன்?
பெண்கள் உலகின் கண்களென்றால் அவர்கள பார்வைகள் ஏன் பலியெடுக்கப் படுகின்றன?
அன்பின் உரு பெண்கள் என்றால் இந்த அராபியப் பெண் என்ன பேயுருவா?
ஈஸ்வரா நீயெங்கே,இந்த ஏழை துயர் தீராயோ’?
‘ பார்வதி;;’ நான் கூப்பிட்ட குரலுக்கு அவள் திரும்புகிறாள்.
‘நான் படங்களையெல்லாம் பார்த்தன்’ நான் சொல்வதை அவள் வெறுமையுடன் பார்க்கிறாள்.
‘ உன்னுடைய எஜமானி பொல்லாத பெண்போல இருக்கு’
நான் இப்படிச் சொன்னதும் அவள் என்னை ஏறிட்டுப் பார்க்கிறாள்.
‘கோவம் வந்தா அவங்க அடிப்பாங்க” பார்வதி முணுமுணுக்கிறாள்.
‘உன்னுடைய வேலை பிடிக்காட்டா உன்னை வேலையிலிருந்து நீக்கியிருக்கலாம். கோபம் வந்தால் இப்படி அடிப்பது சட்டப்படி மிக மிக மோசமான குற்றம்..மனிதமற்ற கொடுமை’.
என் குரலில் வெடித்த ஆத்திரம் அவளை ஆச்சரியப்படவைத்ததோ என்னவோ,
‘அந்த அம்மாவுக்கு என்னில மட்டும் கோபம் இல்லீங்க’
அவள் குரலில் தயக்கம்
‘ வேறு யாரில் அவளுக்குக் கோபம்.’ எனக்குப் பதில் சொல்லாமல் பார்வதி தரையிற் தன்விரல்களால் கோடுபோடுகிறாள்..
————————————-           —————————————                     ——————————–
பார்வதிக்கு மொழி பெயர்க்கக் கோர்ட்டுக்குப் போகும் நாள் வந்து விட்டது. நான் எங்கே கோர்ட் இருக்கிறது என்ற தேடிக் கண்டுபிடித்து அங்கு செல்கிறேன்.
சகிலா எனக்காகக் கோhட் வாசலிற் காத்திருக்கிறாள்.அவள் உதவி செய்யும் சமுகப் பணி நிர்வாகத்தினருடன் பார்வதி வந்திருக்கிறாள். திடிரென்று ஒரு ஆடம்பரமான பெரியகார் எங்களைக் கடந்துபோய் நிற்கிறது.அதிலிருந்து ஒரு படாடோபமான அரேபியக் குடும்பமும் ஒரு ஆஜானுபாகுவான ஆங்கிலேயனும் இறங்குகிறார்கள்.அந்த கம்பீரமான ஆங்கிலேயன்தான் அராபியச் சீமாட்டியின் வழக்கறிஞராக இருக்கவேண்டும். இவன் செய்யும் குறக்கு விசாரணைக்குப் பார்வதி பதில் சொல்லவேண்டுமே!
அவளுக்கு நான் என்னால் முடிந்த தைரியத்தைக் கொடுக்கவேண்டும்.
பார்வதி,ஓரு பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறாள். கார் வந்த நேரத்திலிருந்து அவள் முகத்தில் ஒரு கலவரம். அவள் பார்வை அந்தப் பக்கம் குத்திட்டு நின்றது.
‘பார்வதி தைரியமாக இருக்கவேண்டும’ நான் ஆதரவுடன் சொல்கிறேன்.
‘எனக்குப் பயமாக இருக்குங்க’ அவள் குரல் நடுங்குகிறது.
‘பார்வதி உனக்குக் கொடுமை செய்தது அந்த அராபுக்காரி. நீ என் பயப்படுகிறாய்?’
‘அம்மா உங்களுக்கு ஒன்றும் விளங்காதுங்கோ’ பார்வதி என்னிடம் சலித்துக் கொள்கிறாள்.
‘ என்ன எனக்கு விளங்காது பார்வதி?’
; எனக்கு இந்த வழக்கு விருப்பமில்ல அம்மா’ பார்வதி சொன்னதும் எனக்குக் கோபம் வருகிறது.
ஏன் இந்த அப்பாவி பார்வதி தான் பட்ட கொடுமைகளைச் சொல்ல மறுக்கிறாள்?
நான் அவளது கோபத்துக்குக் காரணம் அறிய முயற்சிக்கிறேன.
‘உனது எஜமானி எப்போதும் உன்னை அடிப்பாளா?’
‘அதெல்லாம் நீங்க கேட்காதீங்க அம்மா’ பார்வதியின் குரலில் பெரிய பரபரப்பு.
அராபுக்கார எஜமானி பார்வதிக்கு முன்னாலிருக்கும் பெஞ்சில் வந்து உட்காருகிறாள்.அவள் கையிலிருந்த அழகிய குழந்தை பார்வதியைப் பார்த்துக் கை நீட்டுகிறது. குழந்தையின் முகத்தில் பெரிய சந்தோசம்.

சகிலா என்னை வெளியே வரும்படி சொல்கிறாள்.

‘என்ன விடயம்’ நான் குழம்பிப்போய்க் கேட்கிறேன். ‘பார்வதி வழக்கை வாபஸ் வாங்கினால் அவளுக்கு நிறையப் பணம் கொடுக்கத் தயாராக அராபிய சீமாட்டி சொல்வதாக அவர்களின் வழக்கறிஞன் பேரம் பேசுகிறான்’
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘ சகிலா அராபியச் சீமாட்டிக்கு எதிராக வழக்குப் போட்டவர்கள் பிரித்தானிய போலிசார்..’
நான் முடிக்க முதல் சகிலா சொல்கிறாள்.
‘ ஆமாம், பார்வதியின் கதறலைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரன் போலிசுக்குப் போன்பண்ணி அவர்கள் வழக்கு போட்டது உண்மை ஆனால். பார்வதி அந்த சீமாட்டிக்கு எதிராகச் சாட்சி சொல்லாவிட்டால் என்ன செய்வது?’
சகிலாவின் கேள்வியால் நான் குழம்புகிறேன்.
‘ ஏன் பார்வதி சாட்சி சொல்ல மாட்டாளா?’
‘ இவ்வளவு நாளும் எங்களுக்குத் தெரிந்த தகவல்களின்படி அந்த அராபியப் பணக்காரி கொடுமைக்காரி. ஓரு பெரிய எண்ணெய்க் கம்பனிப் பணக்காரி.அவள் கணவன்; பிரமாண்டமான பணக்காரனாம். லண்டனில் பலகாலம் வாழ்கிறார்களாம் அவள் கணவன் கண்டபாட்டுக்குத் திரிவானாம்.ஆங்கிலேயர்கள் மாதிரியான பல வழக்கங்களாம்.
பார்வதி பல வருடங்களாக அவர்கள் வீட்டு வேலைக்காரியாம். லண்டனுக்கு வரும்போது அவளையும் கூட்டி வந்திருக்கிறார்கள். கணவனிற் கோபம் வரும்போதெல்லாம் பார்வதியை அடிப்பாளாம் அந்தப் பணக்காரி. அந்தச் சீமாட்டியைச் சின்னவயதிலிருந்து தூக்கி வளர்த்தவளாம் பார்வதி. பார்வதி தான் தூக்கி வளர்த்த பெண் தனக்குச் செய்யும் கொடுமைக்கு எதிராகச் சாட்சி சொல்ல மாட்டாள் என்று தெரிகிறது. அந்த அராபியச் சீமாட்டி, தனக்கு ஓரு தாய்க்குச் சமமான ஒரு வயது போன பெண்ணை இப்படியா வதைப்பது?’ சகீலா பெருமூச்சு விடுகிறாள்.

‘பார்வதி இந்தப் பணக்காரி செய்த கொடுமைக்குத் தண்டனையனுபவிக்கவேண்டும’ நான் பார்வதியிடம் தமிழில் கெஞ்சுகிறேன்.
‘ வேண்டாங்க எனக்கு இந்த வழக்கு வேண்டாங்க’ பார்வதியின் உடம்பு நடுங்குகிறது. கையெடுத்து என்னைக் கும்பிடுகிறாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் மாலையாகக் கொட்டுகிறது.

நான் பிரமித்து நிற்கிறேன்.சகிலாவா என்னைப்போல் திடுக்கிட்டுப் பார்வதியைப் பார்க்கிறாள்.
பார்வதி தொடர்கிறாள்.
‘ நீங்க அந்தப் பக்கம் போனதும் அந்த அம்மா என்னோட பேசினாங்க’
‘ என்ன பார்வதி சொல்கிறாய்?’
‘ நான் வழக்குப் பேசாம அவங்ககிட்டத் திரும்பிப்போனா என்ன நல்லாப் பார்க்கிறதா அந்த அம்மா சொன்னாங்க’ பார்வதியின் குரல் நடுங்குகிறது; பயத்தாலா?
‘பார்வதி, யோசித்துப் பார். அந்தப் பணக்காரி. உனக்குச் சாட்டையடி தந்திருக்கிறாள்.சூடுபோட்டிருக்கிறாள். இரும்புக் கம்பியால் காயம் போட்டிருக்கிறாள்.இந்தக்கொடுமை செய்த ஒரு பணக்காரியிடம் திரும்பிப் போகப் போகிறாயா,?’
நான் பொரு பொருவென்ற ஆத்திரத்தில் பொரிகிறேன்.
‘ நான் என்னங்க அம்மா பண்ணறது?இந்த வயதில் வேற ஆர் என்ன வேலைக்கு வச்சிருப்பாங்க? எனக்கு வேலையில்லாமப் போனா என்ர பொண்ணு கதி என்னவாகும்?’
என்ன இந்த வயதில் இவளின் பெண்ணுக்காவா வேலைக்காரியாயிருந்து இத்தனை கொடுமையனுபவிக்கிறாள்?
அவள் விம்முகிறாள், ‘என்ர பொண்ணு பாவங்க.பிள்ளை குட்டிக்காரி. அவன் புருஷன் ஒரு பொல்லாத குடிகாரன். குடிப்பான். நான் பணம் அனுப்பாட்டா என்ர பொண்ண அவன் கொலையே பண்ணிப் போடுவான்.அதைவிட நான் அடிவாங்கித் துன்பப்பட்டா பரவாயிலிங்க…’
நான் பிரமை பிடித்துப்போய் நிற்கிறேன்.
‘ பார்வதியைக் கொடுமை செய்யும் அராபியப் பணக்காரியைத் தண்டிப்பதா அல்லது அவளை ஒரு ஆத்திரமுள்ள மனநேயாளியாக்கி வைத்திருக்கும் அவள் கணவனைக் கோபிப்பதா அல்லது இந்த அவல நிலைக்குத் தள்ளி விட்டிருக்கும் அவளின் மருமகனைத் தண்டிப்பதா? அல்லது கணவனிடமிருந்து தப்பி ஓடமுடியாத ஏழ்மைநிலையில் வாழும் அவள் மகளைப் பாவம் பார்ப்பதா அல்லது தங்கள் நாடுகளில் பெண்களுக்கான பொருளாதார, கலாச்சாரப் பாதுகாப்பான வாழ்வாதாரங்கள் கொடுக்காத ஆட்சி முறையைத் திட்டுவதா?’ சகிலா பேசிக்கொண்டேயிருக்கிறாள்.
 ஈஸ்வரா நீ எங்கேயிருக்கிறாய்? பார்வதி கேட்ட கேள்வியை நான் எனக்குள் கேட்கிறேன். (யாவும் கற்பனையே)
This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s