இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-20.09.15
லண்டன்:1982.
ஜெரமி கோர்பின் என்ற ஒரு நேர்மையான அரசியல்வாதியை நான் சந்தித்ததும் அதனால் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் மேற்குலகம்வர சாத்தியமானதையும் இன்று அவரின் தார்மீகமான மனித நேயத்தால் இங்கு வந்து நல்ல வாழ்க்கை வாழும் தமிழர்கள் எத்தனைபேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்பது ஜெரமியின் வெற்றியை டி.வி ஒலிபரப்பிய நேரத்திலிருந்து எனக்கு வந்த அவர்களின் மனப் பூர்வமான, சந்தோசமான வாழ்த்துக்கள்; உறுதிப் படுத்தின.
இலங்கை ஐக்கியதேசியக் கட்சி தமிழருக்கெதிரான மிகக் கொடுமையான அரசியல் நடவடிக்கைகளை முடக்கி விட்ட காலம். அப்போது, இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கெதிராக,லண்டனில் வாழ்ந்த தமிழ்ப் பிரமுகர்கள் ஒரு சிலர் அவ்வப்போது சில கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள்.பிரித்தானிய தொழிற்கட்சி அங்கத்தவராக,மட்டுமல்லாமல் வேறு சில பெண்கள் அமைப்புகளிலும்(வைசர் லிங் போன்ற சில) அங்கத்தவராக இருந்துகொண்டு,அப்போதிருந்த பிரித்தானியப் பிரதமர் மார்க்கிரட் தச்சரின்; கொள்கைகளை.அதாவது அவர் நெல்சன் மண்டேலாவை ஒரு பயங்கரவாதியாகப் பிரகடனம் செய்து ஏ.என்.சியை முறியடிக்க முனைந்தது, தென்னமிரிக்காவின் சிலி நாட்டைச் சேர்ந்த கொடுங்கோலனான பினேசிக்கு ஆதரவு கொடுத்தது, அமெரிக்க அணுகுண்டுகளைப் பிரித்தானிய மண்ணில் குவிப்பது போன்றவற்றிற்கு எதிர்த்துப் போராடுபவர்களின் குழுவுக்கு ஆதரவாகவிருந்த நான் எனது மக்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தேன்.முக்கியமாக, 1982ல் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழப் பெண்ணியவாதி நிர்மலா நித்தியானந்தனையும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களையும் முன்வைத்து,ஒடுக்கப் படும் இலங்கைத் தமிழருக்கான எங்கள் போராட்டங்களை விரிவாக்கினோம்.
இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்த என்னை என் வீட்டுக்கு வந்து ஒரு,’பயங்கரவாதி’மாதிரி பிரித்தானிய ஸ்பெசல் பிரான்ஷ் விசாரணை செய்தார்கள். அந்த சம்பவத்தை எதிர்த்த முற்போக்கு வாதிகளின் ஆட்சேபணையால் என்னை விசாரித்த விடயம் பற்றி பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஜெரமியின் முயற்சியால் கேள்வி எழுப்பப் பட்;டது.என்னிடம் விசாரணைக்கு வந்த போலிசார் (?)மன்னிப்புக் கேட்டனர்.
இலங்கையில் தழர்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகளுக்கெதிராக,எனது தலைமையில் ‘தமிழ் மகளிர் அணி’பிரித்தானிய பெண்கள் அமைப்பினர் பலரின் ஆதரவுடன் தொடங்கப் பட்டது.எனக்கு உதவி செய்த பலர், பிரித்தானிய வெளிநாட்டுக்கொள்கைகளுக்கு-அதாவது பிரித்தானியா இலங்கை அரசுக்கு நவீன ஆயதங்களை வழங்கித் தழமிழர்களை அழிப்பதை எதிர்த்தவர்கள். நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடங்கிய பல கூட்டங்களில் ஜெரமி கோர்பின் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினார். அப்போது பிரித்தானிய தொழிற்கட்சியின் உபதலைவராகத் தெரிவு செய்யப் பட்டிருந்து தொழிற்கட்சிப் பிரமுகர் டோனி பென் இலங்கைத் தமிழர்களுக்காகத் தனது முழு ஆதரவையும் தந்தார்.
ஜெரமியும்,டோனி பென்னும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை பிரித்தானிய மயமாக்கியது மட்டுமல்லாமல் உலக அரசியல் மயப்படுத்த முன்னிற்றவர்களாகும்;. பிரித்தானியா மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் மக்கள் தஞ்சமடைய ஜெரமி கோர்பின் போன்ற பல இடதுசாரிகள் பல உதவிகளைச் செய்தார்கள்.அவர்களின் ஆதரவுடன், நான், தமிழ் அகதிகள் ஸ்தாபனத் தலைவி என்ற தகமையில்,;சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஹொலண்ட போன்ற நாடுகளில் தமிழர்களுக்காக நடத்தப் பட்ட ஆதரவுக் கூட்டங்கள் பலவற்றிற் கலந்துகொண்டு தமிழர்களுக்கான ஆதரவைத் திரட்டினேன்;.
சந்தர்ப்பவாத அரசியலில் தங்கள் ஆத்மாவை விற்றுவிட்ட சில தமிழர்கள், ஆரம்ப கால கட்டங்களில் இந்த நல்ல மனிதர்கள் செய்த உதவியை மறந்தாலும், அன்று அகதிகளாக வந்த பல தமிழர்கள் இன்றும் அவரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள்,அவரின் வெற்றியை வாழ்த்துகிறார்கள்.
இலங்கை அரசின் கொடுமை தாங்காமல் ஓடிவந்த தமிழ் இளைஞர்கள் நூற்றுக்கணக்கானவரை ஆதரித்த சில பாராளுமன்றவாதிகளில் முன்னணியில் நின்றவர்; ஜெரமியாகும். நானும் ஜெரமியும், இரவுபகலாக, லண்டனுக்கு வந்து குவிந்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்களைப் பிரித்தானியாவுக்குள் உள்ளெடுக்கும் பல பணிகளைச் செய்தோம். ஜெரமி அப்போதுதான் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப் பட்டிருந்தார்.
அவரும் அன்றிருந்த கறுப்பு இன பாராளுமன்றவாதியான பேர்னி கிராண்டும்,இன்னும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், சிறுபான்மைக் குழு ஸ்தாபனங்கள், லேபர் பார்ட்டி முக்கியஸ்தர்களான திருமதி ஷேர்லி வில்லியம், செல்வி கிளாயா ஷோர்ட் போன்ற பலரின்; உதவியால், இலங்கையில் தமிழருக்காகப் போராடிக் கொண்டிருந்த ஆயதக் குழக்களின் ஆதரவுடன் ‘தமிழ் அகதிகள் ஸ்தாபனம்’ தொடங்கப் பட்டது.
நான் ஒரு சாதாரண குடும்பப்பெண். மூன்று குழந்தைகளுக்குத் தாய்.
nரிய நிறுவனங்கள் பற்றித் தெரியாது.ஆனால் தமிழர்களுக்காக அமைக்கப் பட்ட மூன்று ஸ்தாபனங்களுக்குத் தலைவியாக இருந்தேன்.அப்போது எனக்கு,ஸ்தாபன ரீதியான நிர்வாகத்தைச் சொல்லித் தந்த நண்பர்களில் ஜெரமி முக்கியமானவர்.தமிழருக்காக அமைக்கப் பட்ட மூன்று ஸ்தாபனங்களின் தலைவியாக மட்டுமல்லாமல், திரைப்படத்துறைப் பட்டப படிப்பு மாணவியாகவுமிருந்தேன்.
தமிழர்களுக்கான ஸ்தாபனத்தை அமைத்தபோது,அந்த ஸ்தாபனத்திற்கான, நிர்வாகக் கோட்பாடுகளை (கொன்ஸ்டிடியுஷனை) ஜெரமி கோர்பினும் அவரின் காரியதரிசியாக அப்போதிருந்த செல்வி லிஸ் பிலிப்ஸனும் பல நாட்கள் செலவளித்து எழுதி முடித்து எனக்கு உதவி செய்தார்கள்.
ஆரம்பத்தில் எங்கள் ஸ்தாபனத்திற்கு ஒரு ரைப்றைட்டர் கூடக் கிடையாது.தமிழ் மகளிர் அணியின் ஆபிசில் தொடங்கப் பட்ட தமிழ் அகதிகள் ஸ்தாபனத்திற்கு ஒரு லத்தின் அமெரிக்க பெண்கள் குழவினர் டைப்றைட்டர் தந்தார்கள். அச்சடிக்க ஜெரமி பேப்பர்கள் கொண்டு வந்து உதவி செய்தார்.அந்த நிமிடம் தொடக்கம் ஆயிரக் கணக்கான இலங்கைத் தமிழர்களின் அகதி ஸ்தான விண்ணப்பங்கள் பிரித்தானிய நிர்வாகத்திற்குச் செல்லத் தொடங்கின.
1985ம் ஆண்டு, வைகாசி மாதம் 29ம் திகதி,பிரித்தானிய பாராளுமன்ற சரித்திரத்தில் முதற்தரமாக, ஜெரமியின முயற்சியின் பின்னணியில்; கொண்டுவரப்பட்ட,அகதிகளுக்கு உதவி செய்யும் சட்டம் நிறைவேறியது. தமிழ் மகளிர் அணியிலிருந்து அங்கு சென்று, சட்டம் நிறைவேறியதற்குக் கைகொட்டி ஆரவாரம் செய்த சிலர் கொன்சர்வேட்டிவ் கடசியினிரின் கடும் பார்வைக்கு ஆளாகினோம்.
அன்றைய கால கட்டத்தில், யாருமற்ற அனாதைகளாகத் தமிழ்க்கோயில்களில் வந்து படுத்துறங்கும் தமிழ் அகதிகளுக்காக ஜெரமியும்,பேர்னி கிராண்ட் என்பவரும் ஒரு வீட்டமைப்பை ஸ்தாபிக்க எனக்கு உதவி செய்தார்கள்.இன்று கோடிக்கணக்கான வருவாயைத் தருவதாகச் சொல்லப் படும் தமிழர் வீடமைப்பில் ஊதியமும் உதவியும் பெறுபவர்களுக்கு ஜெரமி-பேர்னி என்ற அன்பான மனிதர்களின் சிறந்த சேவையின் கொடைதான் அவர்கள் நல்வாழ்க்கை அத்திவாரமாக இருந்தது என்று தெரியுமோ தெரியாது.
இன்று எதிர்பாராத விதமாகப் பெருவெற்றி பெற்றுத் தொழிற் கட்சித் தலைமைப் பதவியை எடுத்த,பிரித்தானிய அரசியலமைப்பை உலுக்கியெடுக்கும் ஜெரமி கோர்பினின் வெற்றி மேற்குலக முதலாளித்தவத்தால் கற்பளை செய்ய முடியாத விடயமாக இருக்கிறது. சமத்துவத்திற்கும் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுகக்கோட்பாட்டுக்காகவும் அமைக்கப் பட்ட தொழிற்கட்சி. அண்மைக்காலங்களில் கிட்டத்தட்ட ஒரு ‘நிழல் முதலானித்துவக்’ கட்சியாக வளர்ந்து கொண்டிருந்தது.
காலனியத்துக்கு எதிராகப் போராடிய லேபர் பார்ட்டி( இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தது லேபர்பார்ட்டியாகும்) டோனி பிளாயர் தலைமையில் ஈராக்கை ஆக்கிரமித்து அழித்ததால் வந்த விளைபாடுகள் தொழிற்கட்சி தத்துவங்களை நம்பும் சமத்துவவாதிகளைத் தலைகுனியப் பண்ணியது.பல்லாயிரக் கணக்கான சமத்துவவாதிகள் ஈராக் போரின் அதர்மத்தை எதிர்த்து தொழிற்கட்சியை விட்டு வெளியேறினோம்;. டோனி பிளேயர் தலைமைத்துவத்தை விட்டு விலகினாலும் அவரின் நிழலான டேவிட் மிலிபாண்ட் என்பவர் தொழிற்கட்சி தலைமைத்துவத்திற்கு வருவதைத் தொழிற் சங்க ஸ்தாபனங்கள் தடுத்து அவரின் சகோதரரான எட் மிலிபாண்டைத் தலைவராக்கினார்கள்.
கடந்த பொதுத் தேர்தலில்(வைகாசி 2015) வெற்றியடைவதற்காக எட் மிலிபாண்டும்; தொழிற் கட்சித் தத்துவார்த்தங்களை முன்னெடுக்காமல் கிட்டத்தட்ட கொன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைகளை முன்னெடுப்பவர்போற் தோன்றியதால் லேபர் பார்ட்டியை ஆதரித்த பொது மக்கள்; அவரையும் நிராகரித்தார்கள். காலம் காலமாக, அரைத்த மாவையே புது மெருகுடன் அரைக்கும் அரசியல்வாதிகளை மக்கள் விரும்பவில்லை,அதற்கு எதிர்முகமான நேர்மையான அரசியல் கொள்கைகள் முன்னெடுக்கப் படவேண்டும் என்ற சமத்துவவாதிகளின் விருப்பை ஜெரமியின் வெற்றி உறுதி செய்திருக்கிறது.
ஆனாலும், பெரும்பாலும் பழைய கொள்கைகளை ஓரளவு பிடித்து வைத்திருக்கும் பிரித்தானிய சிந்தனை, ஜெரமியின் ‘இடதுசாரிக்’ கொள்கைகளான’ பொருளாதார மாற்றக் கொள்கைகள், நேட்டோவிலிருந்து பிரித்தானியா விலகுவது, மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடை செய்வது, ட்ரைடன் என்ற அணுகுண்டு ஆயத விரிவாக்கலை எதிர்ப்பது (பல்லாயிரம் பில்லியன் ஸ்ரேர்லிங் செலவைத் தடுப்பது), கோடிக்கணக்கான வரிகட்டாத பிரித்தானிய முதலாளிகளுக்கு வலை போடுவது (120 பில்லியன் ஸ்ரேலிங் இதனால் அறவிடப்படுமாம்!), ஆயிரக்கணக்கான அரசாங்க வீடுகளைக் கட்டுவது (இதனால் வீட்டு விலை சரிந்து முதலாளிகளுக்குத் தலையிடி வரும்!).மக்களின் பொதுச்சேவைவைகளை தனியார் கையிலிருந்து எடுத்து,அரச மயப் படுத்துவது. இப்படியான விடயங்களுக்கு ஆதரவு கொடுப்பார்களா என்று தெரியாது.
சமத்துவக் கொள்கைகளுடைய பெற்றோருக்குப் பிறந்த ஜெரமி. நான் இதுவரை சந்தித்த எத்தனையோ இன மக்களில் மிக மிக மிக நேர்மையான ஒரு நல்ல, எளிமையான, அன்பான, பண்பான, எடுத்ததைச் செய்து முடிக்கும் செயலாளன். மனிதரை மட்டுமல்ல, கடவுளால் படைக்கப் பட்ட எல்லாப் பிராணிகளிலும் பாசமுள்ளவர் அவர் வீட்டில் நாய் பூனை,ஆமை, வீட்டுக்குப் பின்னால் கோழிக்குஞ்சுகள் என்று பல தரப் பட்ட பிராணிகளை வளர்த்தவர்.சுற்றாடல் சூழ்நிலை விடயங்களில் அக்கறை காட்டுபவர்.மது மாமிசத்தைத் தொடாதவர். வன்முறைக்கு எதிரானவர் .1991ல் பிரிட்டனும் அமெரிக்காவம் தொடங்கிய முதலாவது வளை குடாப் போருக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களில் முன்னணியில் இருந்தவர்கள் நாங்கள்.
பிரித்தானிய ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, தொழிற் கட்சியினரும் அதிரும் வகையில், தொழிற்கட்சித் தலைவராக மிக பிரமாண்டமான வாக்கு வித்தியாசத்தில் ஜெரமி வெற்றி கொண்டிருக்கிறார்.
அவரைத் தெரிவு செய்தவர்கள் பெரும்பாலும் இளம் தலைமுறையினர். லண்டன் தொழில்க் கட்சியின் கோட்டை என்ற இதுவரை சொல்லப் பட்டது. ஆனால் ஜெரமியைத் தெரிவு செய்தவர்கள் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ளவர்கள். அவர்கள் அழுக்கடைந்த அரசியல் சித்தாந்தங்களுக்கு மாற்றம் தேடுபவர்கள்.
ஜெரமியை நான் சந்திக்கும்போது அவர் ஒரு தொழிற் சங்க ஈடுபாட்டாளானாகப் பலருக்குத் தெரியப் பட்டிருந்தவர். அவரை, இலங்கைத் தமிழரின் அவல நிலையை நேரடியாகப் பார்க்கச் சொல்லி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 1984ல் அனுப்பி வைத்தோம். அதன் பின் அவரது இன்டர்நாஷனல் பொலிட்டிக்ஸ் விரிவு கண்டதில் ஆச்சரியமில்லை.
ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தனது அரசிற் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத நேர்மையான மனிதராக இருப்பதால் அவரைத் தெரிவு செய்திருக்கிறோம் என்ற பலர் பல மீடியா நிகழ்ச்சிகளிற் சொல்லியிருக்கிறார்கள்.
அவர் தலைவராக வந்ததும், ‘கடினமான இடதுசாரிக் கொள்கைகளையுடைய ஜெரமி கோர்பின் தொழிற்கட்சித் தலைவராக வந்திருக்கிறார் அவரால், பிரித்தானியாவின் பொருளாதார, பாதுகாப்பு, ஏன் பிரித்தானிய சாதாரண மக்களின் பாதுகாப்புக்கே ஆபத்து வரும’; என்ற பயமுறுதல்களைக் கொன்சர்வேட்டிவ் கட்சிக்காரர்; பிரசாரம் செய்தார்கள். ஜெரமி,பாலஸ்தின மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதால் யூத மதத்தினரும் அவரை எதிர்க்கிறார்கள்.; முதலாளித்துவத்தை ஆதரிக்கும் பல பிரித்தானிய பத்திரிகைகள் ஓயாமல் அவருக்கெதிராகப் பல தரப்பட்ட பிரசாரங்களைச் செய்தும் அவற்றைச் சட்டை செய்யாமல் அவரின் நேர்மையான அரசியல் தத்துவங்களுக்காகத் தொழிற்கட்சி அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் அவரைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.
முதலாளிகளின் நலன்களை முன்னெடுக்காமல், சாதாரண மக்களின் நலனை முன்னெடுக்கும் இடதுசாரியான ஜெரமி கோர்பின்; தொழிற்கட்சியின் தலைவராக வந்ததால், தாங்கள் இனி இருபத்தைந்து வருடங்கள் பதவியிலிருக்கலாம் என்று முதலாளித்துவ கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சி சந்தோசப் படுகிறது.அவரை விரும்பாத, தொழிற்கட்சிப் பிரமுகர்கள், ஜெரமியை எப்படியும் துரத்தி விடுவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
கடந்த புதன்கிழமை நடந்த பிரதமருடனான கேள்வி நேரத்தில், ஜெரமி,பொது மக்களிடமிருந்து வந்த 40.000 கேள்விகளில் சிலவற்றிற்குப் பிரதமரின் பதிலை எதிர்பார்த்தார்.அந்த அணுகுமுறைப் பலரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
எதையும் சொல்லி வாக்குக் கேட்டுப் பாராளுமன்றம் போய்த் தங்கள் வயிற்றுப் பாட்டைப் பார்க்கும் பாராளுமன்றவாதிகளை வாழ்க்கை முழுதும் தேர்ந்தெடுக்கும் தமிழ்த் தலைமுறைக்கு, நீதிக்கும் நேர்மைக்குமான மனிதனைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்த பிரித்தானிய சமத்துவவாதிகளின் தத்துவம் புரியுமா என்பது சந்தேகம்.