‘ஒருவன் விலைப்படுகிறான”

லண்டன் முரசு பிரசுரம்-1976.

எனக்குத் தெரிந்த முகங்களை விடத் தெரியாத முகங்கள்தான் அந்த இடத்தில் கூடிய அளவிற் தெரிந்தார்கள். அவர்களிற் பெருப்பாலானர்வர்கள் பெண்பகுதி விருந்தினர்கள். எனது -அதாவது மாப்பிள்ளை தரப்பில் நானும் எனது சில நண்பர்கள் மட்டும்தான வந்திருந்தோம்;. ஏதோ ஒரு பகிரங்கக் கூட்டத்தில் முன்பின் தெரியாதவர்களுடன் அகப்பட்ட பிரமை எனக்கு. எனது ‘மாமனார்’ அரைகுறை வெறியில் அங்குமிங்கும் திரிந்து வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்.

மாமியார், சில வாரங்களுக்கு முன் நான் அவர்களிள் மகளைப் ‘பொண்பார்க்கப்’போனபோது என்னைப் பார்த்து அரையும் குறையுமாய்ச் சிரித்ததுபோலல்லாமல், இப்போது வலிய ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு குழைந்து குழைந்து வளைய வருகிறார். தன்மகளின் ‘பழையகாதலைத்’ தெரிந்துவிட்டால் நான் திருமணத்திற்கு மறுத்துவிடுவோனோ என்ற பயத்துடன் அந்தத் தாய் தவித்திருக்கலாம். அந்தத் தர்மசங்கடம் இப்போது அவள் முகத்திற் கிடையாது.

‘எனது மனைவி’ தன் சினேகிதிகளுடன்,அவள் முகத்தில் வெட்கம் படர ஏதோ சொல்லிச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள். அவளின் சினேகிதிகளின் குறும்புப் பேச்சால் அவள் முகம் அடிக்கடி சிவக்கிறது. அவளது சினேகிதிகள் தங்கள் இரகசியக் குரலில் எதையோ சொல்லிச் சிரித்து ஆளை ஆள் இடித்து விளையாடுகிறார்கள்.

எனக்கும் ரேணுகாவுக்கும் சட்டப்படி திருமணமாகிவிட்டது. அதை நினைக்க எனக்கே ஆச்சரியமாகவிருக்கிறது. தாலிகட்டும் சடங்கை இன்னும் கொஞ்ச நாளில் வைத்துக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறது.

வெளிpயில் அப்படி ஒரு புழுக்கமான வெயிலில்லை.ஆனால் எனக்கு வியர்க்கிறது. புரட்டாதி மாதம் தொடங்கி விட்டது. வசந்தகாலம் முடிந்து இங்கிலாந்தில் இலையுதிர்காலம் தொடங்கப் போகிறது. மரமெல்லாம் இலையுதிர்ந்து, பழைய சந்தோசமான நினைவுகளை இழந்த என்னைப்போல் வெறிச்சென்றிருக்கப் போகிறது.எனது பார்வையை ஜன்னலுக்கப் பாலிருந்து பண்டபத்துள் நகர்த்துகிறேன்.

திருமணப் பதிவு விருந்தோம்பலுக்கு வந்தவர்கள்,ஒவ்வொருவராகப் புறப்படுகிறார்கள். போகும்போது, வந்தவர்களில் சில ஆண்கள்;,என்னையும் ரேணுகாவையும் தங்கள்’ விஸ்கி; வெறி கலந்த மொழியில் வாழ்த்துகிறார்கள். எங்களின் பிரகாசமான எதிர்கால வாழ்க்கைக்குத் தங்கள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார்கள்.
‘பிரகாசமான எதிர்கால வாழ்க்கை’!
உண்மையாகவா?

மூன்று வருடங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு வந்தபோது, எனது எதிர்காலம் பிரகாசமாகவிருக்கும் என்றுதான் நினைத்தேன். லண்டனுக்கு வந்து படித்துப் பட்டம் பெற்று ஒரு நல்லவேலையெடுத்தால் என் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, கல்யாணத்துக்குக் காத்திருக்கும்,எனது மூன்று தங்கைகள்,அரைகுறையுமாகப் படித்து விட்டு மேற்படிப்புக்கு எனது தயவை எதிர்பார்க்கும் இரண்டு தம்பிகள்,குடும்பப் பொறுப்பின் பாரம் தாங்காமல் வருத்தக்காரனாகிய எனது தந்தை, எல்லோரும் சந்தோசமாக இருப்பார்கள் என்று நம்பினேன். லண்டனுக்கு வரவேண்டும் என்ற நினைவு வந்ததை எண்ணிப்பார்த்தால் எனக்கு அழுகையும்; சிரிப்பும் வருகிறது.

நான் அப்போது இலங்கையில் ஓரு சாதாரண பாக்ங் கிளார்க். பட்டப்படிப்பைத் தொடராமல் குடும்பப் பொறப்புக்களைத் தாங்க வேகை;குச் சென்றவன். நூன் எடுக்கும் எனது சம்பளம் எனக்கே சரியாக இருந்தது. இந்த இலட்சணத்தில் எனது பெரிய குடும்பத்தின் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது? வாழ்க்கைச் சுமையை என்னால் தாங்கமுடியவில்லை.நீண்ட நாள் யோசித்தபின் தெரிந்த பலர், நண்பர்கள் என்று தெரிந்த தெரியாதவர்களின்; கால் கைகளைப் பிடித்து லண்டன் வர அரும்பாடு பட்டேன்.வீட்டில் அரைகுறைப் பட்டினி வாழ்க்கை.அத்துடன் நான் லண்டனுக்கு வரவேண்டிய செலவு.எனது பெற்றோர் என்நிலை கண்டு வேதனையுடன் தவித்தார்கள். என் தங்கைகள் விரக்தியுடன் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் கண்கள் என்னிடம் என்ன சொல்ல நினைக்கின்றன என்று எனக்குத் தெரியும்.

நான் எனது வீட்டின் மூத்தமகன். எனக்கு நிறையப் பொறுப்புக்கள் இருக்கின்றன் என்னவென்று உழைத்து அவர்களைக் கரை சேர்ப்பேன்? வேலை செய்யுமிடத்தில் எனக்கும் சித்திரா என்ற அழகிய சிற்பத்துக்குமுள்ள உறவு வீட்டாருக்குத் தெரியாது. இருவரும் அப்போது அனுராதபுரம் வங்கியில் ஒன்றாக வெலை செய்துகொண்டிருந்தோம்.

இருவரும் ஒருத்தரை ஒருத்தர் ஆத்மீக ரீதியான இதயசுத்தியுடன் காதலித்தோம். எனது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமளவுக்கு எனக்குச் சீதனம் தர அவளிடம் வழியில்லை.எனது பிரமாண்டமான குடும்பப் பிரச்சினைகளும் சுமைகளும் அவளுக்குத் தெரியும். என்ன சோதனைகள் வந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் பிரிவதில்லை என்றும்,என்ன எதிர்ப்பு வந்தாலும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சமாளிப்போம் என்றும், இருவரும் ஒன்றாகச் சேர எவ்வளவு காலமென்றாலும் பொறுத்திருப்போம் என்றும் மிகுந்தலை என்னும் புண்ணிய தலத்தில்; ஞானத்தில் அமர்ந்திருக்கும் புனித புத்தர் சிலைக்கு முன்னால் சத்தியம் செய்து கொண்டோம்.

அவளிடம் என்னை ‘வாங்கிக் கொள்ள’ விலை தரமுடியாது. சித்திரத்தில் வடிக்கவேண்டிய அழகையும், தனிப்பட்ட உழைப்பையும் தவிர எந்த சொத்தும் என் மனதைக் கவர்ந்த சித்திராவிடம் இல்லை.

‘நான் என்ன செய்வேன்?
நான் லண்டன் வரவுதற்காக,சித்திரா தனது பெற்றோரின் ஒரே ஒரு உடமையான அவர்களது காணியை அடகு வைத்து எனக்கு உதவி செய்தாள். அந்த விடயத்தை எனது வீட்டில் சொல்லாமல் ஒரு நண்பன் உதவி செய்தான் என்று மட்டும் சொன்னேன்.எங்கள் வீடும்,காணியும் அடகு வைக்கப் பட்டன.தங்கைகளுக்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கப் பட்டிருந்த நகைகளும் அடகு வைக்கப் பட்டன. பல விதமாப் பணம் திரட்டியதுடன், லண்டனிலிருந்த ஒருவரிடம் ‘ஸ்பொன்சர் லெட்டா’; எடுத்துக் கொண்டு லண்டன் வரப் போதும் போதும் என்றாகி விட்டது.

கடன் பட்ட காசில் கொழும்பில் பெயர்போன ஒரு டெயிலரிடம் ‘சூட்’ தைத்துப் போட்டுக்கொண்டு லண்டனுக்கு விமானம் எடுத்ததும் மனதில் பெரிய கற்பனைகள். சொர்க்க பூமியில் கால்வைக்கப் போகிறேன் என்ற பூரிப்பு.

லண்டன் விமான நிலையம்,எயார் ரேர்மினல் மூன்று. வெள்ளை உத்தியோகத்தின் ஏளனமான வரவேற்பு. எனது ‘சூட்டையும் கோட்டையும்’ பார்த்து ஒரு நக்கலான ஒரு சிரிப்பு! பெருந்தன்மையானவர்கள் என்று நான் நினைத்திருந்து ஆங்கிலேயர் இப்படி இருப்பார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

மாணவனாக,லண்டனுக்கு வந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருந்தது. நான் செய்யாத வேலையில்லை. ஏன் லண்டனுக்கு வந்தேன் என்று பல தடவைகளில் நினைத்து அழுதிருக்கிறேன். சாப்பாட்டுக் கடையில் கழுவித்துடைக்கவா? கக்கூஸ் கழுவவா?,கார் துடைக்கவா, இரவில் கொள்ளிவாய்ப்பேய்போல் கட்டிடங்களைக் காவல் செய்யவா?

இரவின் தனிமையில் என் மனதில் குடியிருக்கும் சித்திராவை நினைத்துக் கொள்வேன்.அனுராதபுரக் காடுகள்,அழகிய மிகுந்தலை மலைச்சாரல்,நானும் சித்திராவும் வாரவிடுமுறைகளில் ஒன்றாகச் சுற்றிய பசுமையான நினைவுகள் இன்று வெறும் கற்பனையாகி விட்டது. எங்கள் எதிர்காலத்தைப் பற்றி எத்தனை கற்பனைகள் செய்திருப்போம்? எத்தனை கதைகள் பேசியிருப்போம்? எங்களின் முதற் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ‘கீதாஞ்சலி’ என்று பெயர்வைப்பதாக உறுதி செய்தோம். அவற்றை நினைக்கும்போது கண்களில் நீர் துளிக்கிறது. வசதியற்றவர்கள் காதல் செய்வதும் கல்யாணம் செய்து ‘சந்தோசமாக’ வாழ்வதும் தமிழ்ப் படங்களிற்தான் நடக்கிறதா?;

எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.

லண்டனில் ஏழைகளான எங்களைப் போன்றோரின் மாணவ வாழ்க்கை மிக மிகக் கொடியது. எத்தனையோ வேலைகள் செய்தும், உயர்ந்துகொண்டே போகும் கல்லூரிக் கண்டணங்களைக் கட்டித் தொலைப்பது மிகவும் கடினமான வேலையாகவிருந்தது.எனது உழைப்பில் கட்டணம் கட்டவேண்டும், வாடகை கொடுக்கவேண்டும். குளிருக்குத்தேவையான உடுப்புக்கள் வாங்கவேண்டும். சாப்பிட வேண்டும். வீpட்டுக்கு அனுப்பவேண்டும்.கல்லூரிக்குப் போய்விட்டு வந்து வாரவிடுமுறைகளில் வேலை செய்து உழைத்து வாழ்வது பிரமாண்டமான பிரச்சினையாகவிருந்தது. அது மட்டுமல்லாமல், வீட்டிலிருந்து அம்மாவின் ஒப்பாரிகள் வேறு.

நான் லண்டனுக்கு வருவதற்காக் கடன் தந்தவர்கள் கடவுளர் அல்லர். வட்டியும் குட்டியுமாகத் தாங்கள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கிறார்களாம். எப்படியும் பணம் அனுப்பட்டாம்!
முதல் வருடப் படிப்பு முடிந்ததும் அடுத்த வருடப் படிப்புக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு,முழு நேர வேலை செய்து எனது பணப் பிரச்சினையைத் தீர்க்க நினைத்தேன். வீட்டார் வாங்கிய கடன் பெரும்பாலும் குறைந்தது. ஆனால் எனது நிலை?

பிரித்தானிய ஹோம் ஆபிசிலிருந்த கடினமான தொனியில் ஒரு கடிதம் வந்திருந்தது. மாணவர்களாக விசா எடுத்துக் கொண்டு வந்தவர்கள். பிரித்தானியாவில் படிப்பைத் தொடரும் பொருளாதார வசதியில்லாவிட்டால் இலங்கைக்கு உடனடியாகத் திரும்பிப் போகட்டாம்!.இலங்கைக்கு நான் திரும்பிப்போய் என்ன செய்வது?

லண்டனுக்கு வந்து ஒரு பட்டம் எடுக்கவில்லை.அரைகுறைப் படிப்புடன் எங்கே வேலை தேடுவது? இலங்கைக்குத் திரும்பிப் போய் வேலை தேட லஞ்சம் கொடுக்க இலட்சங்கள் தேவை. எப்படி அந்தப் பணத்தைத் தேடுவது? எங்களுக்குக் காணி பூமி கிடையாது.
லண்டனுக்கு வருவதற்கு வாங்கிய கடனில் பாதி கூட கட்டி முடிக்கவில்லை. சித்திராவிடம் எனக்குச் சீதனம் தந்து என் குடும்பப் பிரச்சினையை தீர்க்கப் பணமில்லை. இலங்கைக்குப்போய்ப் பணமில்லாத சித்திராவைச் செய்தால் என் தங்கைகள் திருமணம் செய்ய முடியாத முதுகன்னிகளாகப் பெருமூச்சு விடுவார்கள்.
வேலைவெட்டியற்ற தம்பிகள் ஊர்சுற்றித்திரிந்து வம்புகளில் மாட்டிக்கொள்வார்கள்.இருமற்காரத் தகப்பன் அந்தக் கொடுமைகளைப் பார்க்காமல் மண்டையைப் போட்டுவிடுவார்.இத்தனையையும் முகம் கொடுக்கும் எனது தாயின் நிலை?

எனக்கு என்ன செய்வது என்ற தெரியவில்லை.எப்படியும் லண்டனிற் தங்கவேண்டும். கல்லூரிக் கட்டணம் கட்டப் பணம் கிடையாது. என்னைப்போல் பணக் கஷ்டத்தில் அவதிப்படும் அயல் நாட்டு மாணவர்கள், இங்கிலாந்தில் வாழ்வதற்கு பிரித்தானியப் பெண்களைப் ‘போலித்திருமணங்கள்’செய்துகொண்டு வாழ்வதும் நடப்பதுண்டு. ஓவ்வொருத்தரிடமும் நூறுபவுண்ஸ்கள் வாங்கிக்கொண்டு,ஐம்பது அயல்நாட்டாரைத் திருமணம் செய்த ஒரு பெண்ணின் திருவிளையாடல்களைப் பத்திரிகைகள் பெரிய கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்தன.

எனது தர்மசங்கடமான நிலையை உணர்ந்தபோது எனது வாழ்க்கையில் எனக்கு வெறுப்புத் தட்டியது. மீழ முடியாத இருட்டறைக்குள் அகப்பட்ட பிரமையால் மிகவும் குன்றிப்போனேன்.
இலங்கையில் ஒரு உருப்படியான அரசாங்கம் இருந்தால் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புத் தேடி இப்படி உலகமெங்கும் அலைவார்களா?அங்கிருந்து பட்டினிக்குப் பயந்து உலகெங்கும் ஓடித்திரிகிறோம்.இங்கு வந்தும் எத்தனை நெருக்கடிகள்?
நான் சில நாட்கள் உண்ணவும் மனமின்றி உறங்கவும் மனமின்றி அழுது தொலைத்தேன்.
மனம் விட்டுப்பேசி அழுதுகொட்ட அருகில் யாருமில்லை. நான் இரவுக்காவல் காத்த கட்டிடங்களுக்கு என் துயர் சொல்லி விம்மியழுதேன்.

ஒருநாள், என் நண்பன் காந்தன் என்னைப் பார்க்க வந்திருந்தான்.எனது பிரச்சினைகளை அவனிடம் சொல்லி ஒப்பாரி வைத்தேன்.ஏற்கனவே எனது குடும்பப் பிரச்சினைகளைத் தெரிந்தவன். அவன் ஏதோ சொல்லத் தொடங்கினான்.அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. சாதாரணமாகவே படபடவெனப் பேசுவான்.

இப்போது நான் இருக்கும் ‘மூட்;’அவனின் அவசரப்பேச்சு எரிச்சலைத் தந்தது. அவன் ஏதோ சீரியஸாகச் சொல்ல நினைக்கிறான் என்று புரிந்தது. அவன் சொல்ல வந்தததை,அவசரப் படாமல் ஆறுதலாகச் சொல்லச் சொன்னேன்.

லண்டனிலுள்ள பெரிய பணக்காரர்களில் ஒருத்தர்; எனக்கு பெரிய மனதுடன் கடன் தர முன்வந்திருக்கிறாரா? பணக்காரப் பரம்பரையில் இல்லாத மாணவர்களை நம்பி யாரும் பெரிய கடன் கொடுப்பதில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

எனது நண்பன் காந்தன் என்னை மிகவும் உற்றுப் பார்த்துக்கொண்டு பின் வரும் விடயத்தைச் சொன்னான்.
‘இருபத்தெட்டு வயது நிரம்பிய,பிரித்தானிய பிரஜா உரிமையுள்ள,பிசினஸ் ஸ்ரடி செய்த தனது மகளுக்கு அவளின் தந்தை மாப்பிள்ளை தேடுகிறாராம் மாணவர்கள் விசா வைத்திருப்பவர்கள் என்றாலும் பரவாயில்லையாம். ஓரே மகளாம்,நல்ல சீதனம் கொடுப்பாராம்.’

நான் எனது நண்பனை ஏற இறங்கப் பார்த்தேன். பிரித்தானியாவிற் படித்துப் பட்டம் பெற்ற,லண்டனில் வீடுவாசல் வைத்திருக்கும் ஒரு பணக்காரத் தமிழ்ப் பெண் எங்களைப்போல இரண்டும் கெட்டான் மாப்பிள்ளைகளைச் செய்வார்களா?
‘நீ காமடி செய்வதாக இருந்தால் நான் சிரிக்கிறேன்’ நான் கடுமையாக அவனிடம் சொன்னேன்.
அவன் என்னை வெறிக்கப் பார்த்தான்.

அவன் பகிடி விடவில்லை என்பது அவன் முகபாவத்திலிருந்து புரிந்தது.
எனது அறையில் எனது சித்திராவின் படம் எனது குடும்பத்தாரின் படத்தின் பக்கத்திலிருந்து என்னை பரிதாபத்துடன் பார்ப்பதுபோலிருந்தது.

ஆயிரத்து ஐநுர்று பவண்ஸ் சீதனம்.கொழும்பில் ஒரு வீடு, லண்டனில் ஒருவீடு, பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் பிரித்தானியத் தமிழ்ப்பெண்,எனது பிர்சினைகளைத் தீர்க்கும் மஹாலஷ்மி!.

அவனுக்கு முன்னால் சித்திராவின் படத்தை எடுத்து என் மார்போடு அணைத்துக்கொண்டேன். என் கண்கள் கலங்கின.
எனக்கு இன்னும் இரண்டு வருடப்படிப்பு இருக்கிறது. அதற்கு எண்ணூற்றி ஐம்பது பவுண்ஸ் தேவை. மிகுதி அறுநூற்றி ஐம்பது,இலங்கைப் பெறுமதியின்படி இருபதினாயிரம் ரூபாய்கள்.
அது,இலங்கையில் ஒரு கிளார்க்கின் கல்யாண விலை(சீதனம்). உடனடியாக எனது ஒரு தங்கையைக் கரைசேர்க்கலாம்.

எனது நெஞ்சு கனத்தது.எனது கண்கள் ஜன்னலுக்கப்பால் வெறித்துப் பார்த்தன. வெளியில் ஏதோ ஒரு ஆரவாரம்.சனக்கூட்டமும் சந்தடியும் ஏதோ ஒரு குழப்பம் நடக்கிறது என்பதைக் காட்டியது. எனது மனநிலையும் அதுதான்.

எனது உடம்பில் ஒரு காயமும் கிடையாது. உள்ளத்தில் உதிரம் கசிந்தது. சித்திராவின் படத்திற்கு ஆசைதீர முத்தம் கொடுத்தேன். நான் லண்டனுக்கு வரமுதல் இங்கள் பிரிவால் இருவரும் அழுதோம். உயிரைப் பிடுங்கும் வெட்கத்துடன் அவள் என்னை முத்தமிட்டது ஞாபகம் வருகிறது. எனது அருமைச் சித்திரா. எனக்கு இதயம் வெடிக்கும்போலிருக்கிறது. என் கண்கள் பொங்கி வழிந்து கொண்டிருந்தன.
எனது நண்பன் காந்தனுக்கு என்னையும் சித்திராவில் நான் வைத்திருக்கும் காதலையும் பற்றி நன்றாகத் தெரியும்.சித்திராவின் புகைப் படத்தை அணைத்துக் கதறும் என்னைப் பார்க்க அவனுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது போலும்.அவன் என்னைப் பரிதாபத்துடன் பார்த்தான்.

‘இஞ்ச பாரும் சுந்தரம்,நான் உன்னை அப்செற் பண்ண விரும்பல்ல,பிரிட்டிஷ் அரசு படிக்க முடியாதவர்களைத் திருப்பி அனுப்புவதில் கண்ணும் கறாருமாகவிருக்கிறது.இலங்கைக்குத் திரும்பிப்போய் என்ன புடுங்கப் போறாய். நீ வர்றதுக்காக அடகு வைத்த வீட்டைக்கூட இன்னும் உன்னால் மீட்க முடியல்ல. ஆனால் அண்டைக்கு நீதான் சொன்னாய்,லண்டனில் இருக்கிறதுக்காக, நல்ல இடத்தில கல்யாணம் வந்தால் செய்துகொள்ளத் தயங்கமாட்டாய் என்று.அது நீ விரக்தியில் சொன்னவை எனடு எனக்குத் தெரியும்’

என் நண்பன் சொல்பவைகளைக் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.அவனை வெறித்துப் பார்த்தேன். என் கண்களில் என்னத்தைக் கண்டானோ தெரியாது.’ சரி ஏதோ யோசித்து லண்டனில இருக்க வழியைப் பார்’ என்று சொல்லி விடடு நகர்ந்தான்.
‘ ஏதும் தேவையெண்டால் போன் பண்ணு’ கதவைச் சாத்தும்போது அவன் சொல்லிவிட்டுப் போனான்.
அதாவது அவன் கொண்டு வந்த சம்பந்தத்திற்கு நான் சரி என்றால் போன் பண்ணு என்ற அர்த்தத்தில் சொல்லி விட்டுப் போகிறான்.
அவன் போனபின் மூடிய கதவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதன் பின் கிட்டத்தட்ட இரு கிழமைகள் நித்திரையின்றி யோசித்து மூளை குழம்பும் நிலைக்கு வந்தது. அறையெங்கும் எனது சோகத்தைத் தீர்க்கக் குடித்து முடிதத பியர்க் கேன்கள் நிறைந்து கிடந்தன.

இரு கிழமைகள் முடிய எனது நண்பனுக்குப் போன் பண்ணி,’நீசொன்ன விடயத்துக்கு நான் சரி என்றேன்’ எனது நிலைமையை நினைத்து எனக்கே என்னில் பரிதாபமாகவிருந்தது.’ யார் என்றாலும் சரி.. கல்யாணத்துக்கு நான் சம்மதம்;’ எனது குரலில் எந்த உணர்ச்சியுமில்லை. எனக்குத் தெரியாத யாரோ ஒரு மனிதன் எனக்குள்ளிருந்து பேசுவதுபோலிருந்தது.

அவனுக்குக் கோபம் வந்தது. ‘என்ன பேய்க் கதை பேசுகிறாய்.பெண்பார்க்காமல் கல்யாணத்துக்குச் சரி சொன்னால் உன்னைப் பற்றிப் பெண்வீட்டார் என்ன நினைப்பினம்?’ காந்தனின் குரலில் ஆத்திரம் வெடித்தது.

‘காந்தன் எனது நிலையை உண்மையாகப் புரிந்துகொண்டவன் நீ. சித்திராவைத் தவிர வேறு யாரையோ செய்யம் நிர்ப்பந்தம் வந்திருக்கிறது. அது பெண் என்றாலும் சரி பேயென்றாலும் சரி.நான் லண்டனில இருக்கவேணும், படிக்கவேணும், உழைக்கவேணும்,எனது குடும்பத்தைப் பார்க்கவேணும். அதுதான் முக்கியம் அதை முடிவு கட்டியபின் பெண்பார்த்துத்தான் என்ன பார்க்கா விட்டாற்தான் என்ன?’ நான் விரக்தியுடன் கேட்டேன்.

‘சுந்தரம் உனது மனநிலை எனக்குப் புரியும். ஆனால் உன்னை மிகவும் மலிவாகக் காட்டிக்கொள்ளாதே..அந்தப் பெட்டையைச் செய்துபோட்டு வாழ்க்கை முழுதும் அவளோடும் அவளின் குடும்பத்தோடும் வாழப்போகிறாய். மலிவாக வந்த மாப்பிள்ளையை எங்கட தமிழ் ஆட்கள் எப்படி நடத்துவினம் என்டு உனக்கத் தெரியும்’ காந்தன் பிரசங்கம் வைத்தான். அவனைத் திருப்திப் படுத்த பெண்பார்க்க ஒப்புக் கொண்டேன்.
ஏதோ சாட்டுக்குப் போனேன்.
பெண் வீட்டாருக்கு நான் என்ன மறுமொழி சொல்லப் போகிறேன் என்று எனக்குத் தெரியும்.

எனக்குப் பணம் தேவை. என்னை யார் வாங்கினாலும் பரவாயில்லை.

பெண் பார்க்கும் படலம் தொடர்ந்தது. நான் பெண்; பார்ப்பதற்கு வந்திருந்த ரேணுகா ஒன்றும் கண்ணைக் கவரும் அழகியாக இல்லை,போதாக் கறைக்கு ஏதோ மேக் அப் எல்லாம் போட்டுக் கண்றாவியாகவிருந்தது.. நல்ல கறுப்பு நிறம் ஐந்தடி உயரமிருக்கலாம். எனது உயரம் ஐந்தடி பதினொரு அங்குலம். ஏதோ சாட்டுக்காக என்னுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினாள். அவள் குரல் இனிமையாக இருந்தது. முகத்தில் ஒரு தயக்கமும் தர்ம சங்கடமும் பரவிக் கிடந்தது. சாப்பாட்டு விடயம் முடிந்ததும் வீட்டாருடன் பேசிவிட்டு அவர்களைத் தொடர்பு கொள்வதாகக் காந்தன் சொல்லச் சொல்லியிருந்தான்.என் மதிப்பை விட்டுக் கொடுக்கவேண்டாமாம்! அப்படியே பொய் சொன்னேன் ஏனென்றால் இதில் என் வீட்டாரின் ஈடுபாடு ஒன்றும் கிடையாது என்று தெரியும்.

அடுத்த கிழமை பிரித்தானிய ஹோம் ஆபிஸ் கடிதம் மிகக் கடுமையான தொனியில் வந்திருந்தது.
நான் நாடு கடத்தப் படாமலிருப்பதற்குத் திருமணம் செய்து கொள்வது அவசரமான காரியமானது. அதே நேரம் பெண்ணின் தகப்பனிடமிருந்து டெலிபோன் வந்தது.எனது முடிவு என்னவாம்!
‘ ஆமாம், இப்போதுதான் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது.அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார்கள்.’ என்று அவருக்குப் புழுகித் தள்ளினேன்.

அவர்கள் தந்த அவர்களின் பெண் படத்தை நான் வீட்டுக்கு அனுப்பவேயில்லை.அனுப்பியிருந்தால் எனது தாய் எனது ‘தியாகத்தை’ உணர்ந்து அழுதிருப்பாள்.

லண்டனுக்குப் பயணமாக முதல், முதற்தரமாக எனது தாயிடம் சித்ராவைப் பற்றிச் சொன்னேன்.மண்ணெண்ணை விளக்கொளியில் அவள் முகம் ஒரு சோக சித்திரமாகத் தெரிந்தது.நீர் பனித்த கண்களுடன் அம்மா என்னை உற்றுப் பார்த்தாள். சித்திராவின் புகைப் படத்தைப் பார்த்து விட்டு,’அழகான பெட்டை’அம்மா முணுமுணுத்தாள்.
‘அப்பாவுக்கு சித்திரா பற்றிச் சொல்ல வேண்டாம்’ அம்மாவுக்கு நான் சொன்னேன்
‘ மகனே உனக்கு மூன்று தங்கைகள் இருக்கினம். எங்களுக்கிருந்த வீட்டையும், நகைகளையும் உனக்காக அடகு வைத்து விட்டோம். உனது படிப்பு முக்கியம். அதைக்குழப்பிப்போட்டு என்னைப் பைத்தியம் ஆக்காதே.’ தாயின் அழுகை என்னையுலுக்கியது. எனது தகப்பன், வசதியற்ற எனது அழகான தாயைக் காதல் கல்யாணம் செய்து கஷ்டப்படுபவர் என்பது எனக்குத் தெரியும்.

‘அம்மா எனது குடும்பக் கடமைகளுக்க நான் என்ன செய்யவேண்டும் என்று சித்திராவுக்குத் தெரியும்.அவள் எனக்காகக் காத்திருப்பாள். நான் எனது குடும்பத்தைக் கைவிடமாட்டன்’ அம்மாவுக்கச் சத்தியம் கொடுத்தேன். அம்மா,நான் எனது லண்டன் ‘பெண்ணின்’ படத்தை அனுப்பியிருந்தால், தனது குடும்பத்துக்காக நான் செய்யுத் தியாகத்தைப் பற்றி அல்லது சித்திராவுக்குச் செய்யும் துரோகம் பற்றிக் குலுங்கி அழுதிருப்பாளா?

‘ ஏதோ சுந்தரம், துணிவாங்குவதும் திருமணம் செய்வதும் ஒருத்தனின் தனிப்பட்ட ரசனையைப் பொறுத்தது என்றுதான் சொல்லுவினம’ அம்மா தத்துவம் பேசினாள்.
அவளுக்கு நான் ரேணூகவின் படத்தை அனுப்பவில்லை. எனது நிலமையை விளங்கப் படுத்தி எழுதியிருந்தேன்.’ ஏதோ உனக்குச் சரியானதைச் செய். ஆனாலும் உன்ர பெட்டை சித்திரா பாவம்.’ என்று அம்மா பதில் எழுதியிருந்தாள். லண்டனில் அவசரமாக நடந்துகொண்டிருக்கும் எனது வாழ்க்கையைப் பற்றி சித்திராவுக்கு,ஆரம்பத்தில் நான் ஒன்றுமே எழுதவில்லை. அந்தத் துணிவு வர நீண்ட நாள் எடுத்தது. என்னை நான் சித்திவதை செய்துகொண்ட வேதனையை அவள் புரிந்துகொள்வாளோ தெரியாது.

அன்றிரவு காந்தன் போன் பண்ணினான்.பெண்ணின் தகப்பனாருக்கு நான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னதை அவனுக்குச் சொன்னேன்.பெண்ணின் தகப்பனார் திருமண எழுத்தை விரைவில் வைக்க ஏற்பாடு செய்வதாகவும் அவனுக்குச் சொன்னேன்.

அவன் கொஞ்ச நேரம் ஒன்றம் பேசவில்லை.’ சுந்தரம்,நீ கொஞ்ச நாள் யோசித்து விட்டு மறுமொழி சொல்லியிருக்கலாம்.’ என்றான்.
‘ஏன் அவர்களின் சாதி, என்ன ஊர் என்ன? என்று துப்பறிய வேண்டுமா?’ நான் கிண்டலாகக் கேட்டேன்.

பெண்வீட்டார் இத்தனைக்கும் எனது குடும்ப வரலாற்றைப் பற்றித் துப்பறிந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.’
சாதி சமய,சாத்திர தோத்திரங்களில் நம்பிக்கையில்லாதவன்; நான் என்பது காந்தனுக்குத் தெரியும்.

‘சுந்தரம்… நான் உனக்கு ஒன்று சொல்லவேணும்’ அவன் குரலிற் தயக்கம். அவனின் தயக்கம் எனக்குச் சிரிபாகவிருந்தது.
‘என்ன கல்யாணப் பெண்ணைப் பற்றி ஏதும் மர்மமான விடயங்களைக் கேள்விப் பட்டாயா?’ நான் அவனிடம் குறும்பாகக் கேட்டேன்.
‘பெட்டையைப் பற்றி… சில வதந்திகள்..’ அவன் இழுத்து நீட்டினான்.
‘ எனது சித்திராவைப் பற்றியும் அப்படித்தான் பேசிக் கொள்ளப் போகிறார்கள். அவள் என்னோட படுத்துத்; திரிந்தாள் என்று எத்தனை அசிங்கமாகப் பேசப் போகிறார்கள் ‘ நான் வேதனையுடன் முனகினேன்.
‘ நீ காதல் மட்டும்தானே செய்தாய்?’ அவன் எரிந்து விழுந்தான்.
;ஏன் பெட்டை யாரிட்டயோ பிள்ளை வாங்கினதா?’ நான் விளையாட்டாகக் கேட்டேன்.
‘ஓம்..ரேணூகா நம்பின பெடியன் அவள் கர்ப்பமானதும் ஓடிவிட்டான். நிறைய செலவளிச்ச கர்ப்பத்தைக் கலைச்சினமாம்’ எனது கைகள் போனை வைத்தன். ஏன் அவர்கள் அவசரமாக என்னை மலிவு விலையில் வாங்கினார்கள் என்று இப்போது எனக்குப் புரிந்தது.

என்ன மனிதர்கள்? என்னிடம் உண்மையைச் சொன்னால் நான் திருமணத்துக்கு மறுத்து விடுவேன் என்று நினைத்து அவசரமாகத் திருமண எழுத்து வைப்பதை ஆயத்தம் செய்கிறார்களா?

நானும் சித்திராவும் எத்தனைதரம் தனிமையாக இருந்திருக்கிறோம். என்னை நம்பித்தானே அவள் என்னிடம் தனிமையாக வந்தாள்? நாங்கள் நினைத்திருந்தால் சித்திராவுக்கு எத்தனையோதரம் அபோர்சன் நடந்திருக்கும்? அவளை அணைக்க ஆசையில்லாமலில்லை, ஆனால் தற்செயலாக அளவு மீறினாலும் என்ற பயத்தால் நான் கண்ணியமாக நடந்து கொண்டேன்.

எனக்கு ரேணுகாவில் ஏனோ கோபம் வரவில்லை.பெரும்பாலான பெண்கள்போல் பெரிய கவர்ச்சியில்லாத ரேணுகா அவளை நெருங்கியவனின் காம வெறியைக் காதல் என்று நம்பி ஏமாந்திருக்கிறாள். அவளை வைய எனக்கு மனம் வராது. அவளில் பாவம் வந்தது. உறவுகளில் பிழை நடந்தால் பெண்களை மட்டும் வசைபாடும் சமுதாயத்தை எப்போதும் வெறுப்பவன் நான்.
ரேணுகா கதலனை நம்பி எமாந்தவள். நான் காதலியை ஏமாற்றியவன்!

அவளின் பெற்றோர் மற்றப் பெண்களைப்போல் தங்கள் மகளும் திருமணம் செய்து நன்றாக வாழவேண்டும் என்ற நினைப்பதில் என்ன தவறு?அவர்கள் என்னிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் நான் அவர்களின் வேதனையைப் புரிந்திருப்பேன். எனது நிலைமையையும் நான் சொல்ல வந்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் என்னிடம் ஒன்றும் சொல்லாமல் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு என்னைத் தேர்ந்தெடுத்தது நான் மலிவாக வாங்கப் படக் காத்துக்கிடக்கிறேன் என்று நினைத்தபடியாலா?
அல்லது நான் ஒரு ஏமாளி, என்று நினைத்து விட்டார்கள்?

எனக்கு உலகம் இருண்டது. ரேணுவில் பரிதாபம் வந்தது. இந்த நிலமைக்குள் நுழையப் போகும் எனது வாழ்க்கையைப் பற்றிக் குழப்பமாகவிருந்தது.அன்றிரவு ‘பப்’புக்குப் போய் முட்ட முட்க் குடித்துத் தள்ளினேன். குடித்து விட்டு அறைக்கள் வந்ததும் விடிய விடிய அழுது கொட்டினேன். யாருக்காக அழுதேன்?

‘ அடுத்த நாள் காந்தன் போன் பண்ணினான்.
‘என்ன, கல்யாணம் வேண்டாம் என்று அவர்களுக்குச் சொல்லி விட்டாயா?’என்று கேட்டான்.
‘நான் அவளின் பழைய வாழ்க்கையைப் பற்றி அக்கறைப்படவில்லை. அவளைத் திருமணம் செய்வதாகச் சொல்லி விட்டேன்’என்றேன்.
எனது நண்பன் காந்தன் அதன் பின் என்னுடன் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. எங்கள் பதிவுத் திருமணத்துக்கு வரவுமில்லை. அவனைப் பொறுத்தவரையில் ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம்.

வேறு என்ன? திருமணப் பதிவு நடந்த கொண்டாட்டத்தில் விஸ்கி தண்ணீராக மாறியது. மாமனாருக்கு நல்ல வெறி. அவர் லண்டனுக்கு வந்து பட்ட பாட்டைச் சொல்லி ஒப்பாரி வைத்து விட்டு விஸ்கி வெறியில் குறட்டை விடுகிறார்.
மாhமியார் தனது பிள்ளையை,’ நல்ல’ வித்தில் வளர்க்கப் பட்ட பாட்டை அவள் குரல் தழுதழுக்கச் சொன்னபோது அவள் மனக் கண்ணில் ரேணுகாவின் அரைகுறைப் பிரசவம் பளிச்சிட்டதோ தெரியாது. மிகவும் கலங்கிப் போயிருந்தாள். நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.பெண்கள் உணர்ச்சி வசப்படும்போது ஆண்கள் குறுக்கிடுவது நல்லதல்ல. சித்திராவிடம் படித்த பாடம் அது.

சித்திரா இப்போது என்ன செய்வாள்? எனது கடிதம் அவளுக்குக் கிடைத்திருக்கும்.’ஓ’வென்று அலறியிருப்பாளா? அவளுடன் வேலை செய்யம் சிங்களச் சினேகிதிகள் அவளின் கண்ணீருக்குக் காரணம் கேட்டிருப்பார்களா?

அவர்களுக்குச் சித்திரா என்ன பதில் சொல்லி யிருப்பாள்?
இங்கிலாந்தில் எனது அன்பன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான் என்று சொல்லி மற்றவர்களிடம் அனுதாபம் தேடுவாளா?; அல்லது தனது காதற் தேல்வியைத் தாங்காமல் தற்கொலை செய்ய முடிவு கட்டியிருப்பாளா?

அதற்குமேல் சித்திராவைப் பற்றி யோசிக்கப் பயமாகவிருந்தது.

பார்வையைத் திருப்பினேன். அழகிய ஜன்னல் துணியைப பற்றி ரேணுகா தன் சினேகிதியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
‘நல்ல அழகான துணி இல்லையா?’ என் பார்வையை நேரடியாகச் சந்தித்த ரேணுகா வெட்கத்துடன் என்னைக் கேட்டாள்.
‘ ஆமாம்’ என்பதுபோல் தலையசைத்தேன். ‘மலிவு விற்பனையில் வாங்கினோம்’ என்றாள். அவள் குரலில் ஏதோ ஒரு அப்பாவித்தனம்.
நான் அவளை உற்றுப் பார்த்தேன்.
‘என்னையும்தான் மலிவாக வாங்கியிருக்கிறீர்கள்’ என்று சொல்லவேண்டும்போலிருந்தது. ஆனாற் சொல்லவில்லை.

(யாவும் கற்பனையே)

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s