லண்டன்: 2003
‘அப்படி என்ன யோசனை?’
பெரியம்மா தன் இடுப்பில் கைவைத்தபடி,அவளது தங்கையின் மகளான வைஷ்ணவிக்கு முன்னால் நின்று கேட்டுக் கெhணடிருக்கிறாள்.வைஷ்ணவியின் மறுமொழி,பெரியம்மா எதிர்பார்ப்பதுபோல் இருக்கவேண்டும் என்று அவள் நினைக்கிறாள்; என்பதைப் பெரியம்மாவின்,குரல், முகபாவம்,என்பன பிரதிபலிக்கின்றன.
வைஷ்ணவிக்கு,அவளின் பெரியம்மா ஒரு அன்னியமாகத் தெரிகிறாள். வைஷ்ணவியின் தாயின் மரணம் உறவினர்களை மிகவும் நெருக்கமாக்கிட்டதாகவும், அவர்களிற் பெரும்பாலோர் வைஷ்ணவி சொல்லப்போகும் பதிலில் தங்களின் மானம் மரியாதை கவுரவம் அத்தனையும் தங்கியிருப்பதாகக் கருதுவது வைஷ்ணவிக்குத் தெரியாததல்ல.
சொந்தங்கள் என்பவர்கள், ஒருமனிதனால் தேர்ந்தெடுக்கப்படாத உறவின் தொடர்புகள்.சினேகிதர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, எங்களுக்குப் பிடித்தவர்களாக, எங்களைப் பிடித்தவர்களாள்,ஏதோ ஒரு விடயத்தில்,அதாவது கலை, படிப்பு,பொதுவிடயங்கள் என்ற ஏதோ ஒரு அம்சத்திலாவது ஒற்றுமையுள்ளவர்கள் சினேகிதர்களாகச் சேர்கிறார்கள். சொந்தங்கள் அப்படியா?
வைஷ்ணவியின் தாய்;,லண்டனுக்கு வந்த காலம் தொடக்கம் பெரும்பாலும்,முழுநேர வேலை செய்தவள். வெளியுலகத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களுடன் பழகியவள்.பெரியம்மா, அவளுக்குச் செவ்வாய் தோசம் இருப்பதாக ஜோதிடர் சொன்ன காலத்திலிருந்து செவ்வாய் தோசம் நீக்கக் கோயிலைச் சரணடைந்து கிடந்தவள். அதன் பின்,வெகு நீண்ட காலத்தின் பின் கல்யாணமான நாளிலிருந்து வீட்டில் இருந்தவள். ஆனாலும் கோயில் தொடக்கம், பலவிடயங்களுக்கு முன்னுக்கு நிற்பதால் பலரைத் தெரிந்தவள். லண்டனில் நடக்கும், மிருதங்க, நடன,இசை அரங்கேற்றங்கள்,தொடங்கி பூப்பு நீராட்டுவிழாக்கள், கல்யாணவீடுகள், என்பவற்றில் பெரியம்மாவை அடிக்கடி காணலாம். மத,கலாச்சார,சமுதாயப் பாதுகாவலர்களில் அவளும் ஒருத்தி!
பெரியம்மா அம்மாவை விட ஆறவயது மூத்தவள். நாற்பத்திஎட்டு வயதாகிறது. சாடையாக நரைக்கும் தலைமயிரைக் கறுப்பு மையடித்து அழகாக வைத்திருப்பாள். முகத்தில் சுருக்கம் விழாமல் விலையுயர்ந்த கிறீம் எல்லாம் பூசுவாள். இளமையாய்,ஒல்லியாக இருக்க அடிக்கடி விரதம் என்ற பெயரில் சாப்பிடாமலிருப்பாள்.
வைஷ்ணவிக்குப் பெரியம்மாவை,அதிகம் தெரியாது.இருந்து விடடு எப்போதாவது வந்து தனது தங்கை குடும்பத்தைப் பார்க்க வருவாள். சகோதரிகளுக்குள் பெரிய நெருக்கம் கிடையாது. பெரியம்மாவுக்கு முன் வைஷ்ணவியின் தாய் திருமணம் செய்துகொண்டது ஒரு காரணமாக இருக்கலாமா என்று வைஷ்ணவி சிந்தித்துண்டு.
‘என்ன அப்படிப் பெரிய யோசனை?’
பெரியம்மா இப்போது ‘பெரிய’ என்ற அடைமொழியுடன் வைஷ்ணவியைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
கேள்வியின் தொனி மிகக் கூர்மையாகி வைஷ்ணவியைத் தாக்குகி;றது.
பெரியம்மாவுக்கு வைஷ்ணவியின் மனவோட்டம் புரியாது. அவள் மிகவும் பழமையான காலசாரத்தைப் பாதுகாப்பவள். வாழ்க்கையின் ஓட்டத்தில் மனிதரின் சிந்தனைகள், செயற்பாடுகள் என்பன மாறும் என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவள்.லண்டனுக்கு வந்தகாலத்தில், ஆங்கிலப் படங்களில் காதலர்கள் முத்தமிடுவதைக்கண்டு, ‘இந்த வெள்ளைக்காரர்கள் மானம் மரியாதையில்லாமல் பப்ளிக்காகக் கொஞ்சுதுகள்’ என்று திட்டியவள்.
அதற்கு,வைஷ்ணவியின் தாய்,சரஸ்வதி,’ அக்கா அது அவர்களின்ர கலாச்சாரம்,அது வித்தியாசமானது,எங்கட கலாச்சாரத்தில அன்பை வெளிப்படையாகக் காட்டுவது அசிங்கமாகக் கருதப்படுகிறது’ என்று விளங்கப் படுத்தியதை பெரியம்மா விரும்பவில்லை.
அம்மா கல்யாணமாகி நான்கு வருடங்களில் விதவையானவள். வாழ்க்கையில் ஒரு தனிமனிதத்தின்,அந்தரங்கத்; தேவைகளையிழந்தவள்.அதனால் அவளுக்கு,அவள் காதலித்த வயதிலுள்ள இளம் காதலர்கள் முத்தமிட்டுக்;கொண்டு சந்தோசமாகவிருப்பது பிழையாகத்தெரியவில்லை போலும். அப்படி அவள் சொல்லும்போது சரஸ்வதிக்கு நாற்பது வயது. வைஷ்ணவிக்குப் பதினெட்டு வயது.வைஷ்ணவி யுனிவர்சிட்டிக்கப்போய் ஒருமாதம் இருக்கும்.
அன்று பெரியம்மாவும் வந்திருந்தாள். யுனிவர்சிட்டியில் வைஷ்ணவி மற்றவர்களுடன்-முக்கியமாக வெள்ளைக்காரருடன்கவனமாகப் பழகவேண்டும் என்று கலாச்சாரப் பிரசங்கம் செய்தாள்.
சரஸ்வதி கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கும் சில விடயங்களை அலட்சியம் செய்ததாகப் பெரியம்மா குறைபட்டாள். அதிலொன்று,வைஷ்ணவி பெரியபிள்ளையானதற்குப் பூப்புநீராட்டுவிழா வைக்காததும் ஒன்றாகும்.அதை அடிக்கடி சொல்லி சரஸ்வதியை வதைப்பதில் பெரியம்மாவுக்கு ஏதோ ஒரு திருப்தி.
தனது பதினோராவது வயதில் வைஷ்ணவி பெரியபிள்ளையானாள். ஓரு நாள்க்காலையில் எழுந்ததும், தனது உள்ளாடையில் குருதி பட்டிருப்பதாகவும்,தனக்கு முதலாவது ‘பீரியட்’ வந்து விட்டதாகவும் சாதாணமாகச் சொன்னாள் வைஷ்ணவி.ஆங்கிலப் பாடசாலைகளில் வயது வந்ததும் உண்டாகும் உடம்பு மாற்றங்களைப் பற்றிப் படிப்பிப்பதால்,முதலாவது தீட்டு வந்தது, வைஷ்ணவிக்குச் சாதாரண விடயமாகவிருந்தது.
இலங்கையில் தனக்குப் பூப்புநீராட்டு விழா வைத்ததை வைஷ்ணவியின் தாய் சரஸ்வதி நினைவு கூர்ந்தாள்.
வேலையிடத்தில் தன்னுடன் வேலை செய்யும் ஜெனிபருக்குத் தன்மகளின் முதல் பீரியட் பற்றிச் சொன்னதும், ஜெனிபர்,
‘இளம் பெண்கள் முதற்தரம் தங்கள் பிரைவேட் பகுதியிலிருந்து குருதி வருவதைக் கண்டதும் தர்மசங்கடப்படுவார்கள், பாடசாலைகளில் உடல் மாற்றங்கள் பற்றிச் சொல்லிக் கொடுத்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் அந்த முதல் அனுபவம் சிலவேளை மனதில் பயத்தையும் உண்டாக்கும். அதனால், நாங்கள் கவனமாகப் புத்திமதிகள் சொல்லவேண்டும். இனி ஒவ்வொருமாதமும் பீரியட் வரும் என்றும் வரும்போது அடிவயிறு சிலவேளைகளில் வலிக்கும் என்பதைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.அத்துடன்,பீரியட் வரும் காலத்தில் காப்பி தேனிர்;, மாடடிடறைச்சி,ஆட்டிறைச்சிச்; சாப்பாடுகள், மிகவும் உறைப்பான சாப்பாடுகள் போன்றவற்றை அளவுடன் எடுக்கவேண்டும்’ என்று அடுக்கிக் கொண்டே போனாள்.
சரஸ்வதி மகளுக்குச் செய்யவேண்டிய சடங்குகள் பற்றிச் சொன்னபோது அந்த ஆங்கில மாது திடுக்கிட்டு விட்டாள்.
‘முதற்தரம் தீட்டு வந்தால் பார்ட்டி வைப்பது விளம்பரம் செய்வதா? அப்படியானால் நாங்கள் எங்களுக்குத் தீட்டு நிற்கும்போதும் பார்ட்டி வைப்போமா? ஏன் இப்படி ஒரு பெண்ணின் உடம்பை முன்வைத்து கலாச்சாரம் என்ற பெயரில் பணம் சேகரிக்கும் பாhட்டிகள் வைக்கிறீர்கள்?.இது வெட்கமான விடயம்’ என்று கோபத்துடன் சொன்னாள்.
சரஸ்வதி தனது மகளிடம் தனது சினேகிதி, பெரியபிள்ளையானால் வைக்கும் விழாவைப் பற்றித் திட்டியதைச் சொன்னபோது, மகள், ‘அப்பா உயிரோடிருந்தால் இப்படியான பணவிழாக்களை அனுமதிப்பாரா?’ என்று கேட்டாள்.
சரஸ்வதி தனது கணவரிடம்,’ எங்களுக்குப் பெண்பிள்ளை பிறந்தால் அவள் பெரிய பிள்ளையானால் எல்லாத் தமிழர்களும் செய்வதுபோல் பெரியபார்ட்டி வைக்கவேண்டும்’ என்று சொன்னபோது அவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
‘அதெல்லாம்,பழைய கால கட்டத்தில்; உறவுக்காரர் தங்கள் உறவைப் பலப்படுத்தச் செய்யும் சடங்கு-அதாவது,ஒரு நல்ல நாளில் கோபதாபங்களை மறந்து உறவுகள் ஒன்று சேர்ந்து கொண்டாடும் சடங்கு அத்துடன் அந்தக்காலத்தில் பெண்பிள்ளைகளின் பூப்புநீராட்டு விழா, மாம்பிள்ளையை நிச்சயிக்கும் சடங்காக இருந்தது. இப்போது உலகம் மாறிவிட்டது.இந்தக் கேளிக்கைகளெல்லாம் ஒரு பெண்ணின் சுய நிலையை அவமதிப்பாகும் பதினொருவயதில் பெரியபிள்ளையாகும் இளம் பெண் தனக்குப் பார்ட்டி வைப்பதை ஒரு குழந்தைத்தனமான விளையாட்டாக நினைத்துச் சந்தோசப் படலாம் நிறையப் பரிசளிப்புக்களை எதிர்பார்க்கலாம்,ஆனால் வயது வந்த நாங்கள் எங்கள் வாழக்கை முறையோடு அதைக் கவுரமாக அணுகவேண்டும். எங்கள் பெண்ணை ஒரு காட்சிப் பொருளாக வைத்து,ஒரு வியாபாரப் பார்ட்டி வைப்பதை நான் விரும்பமாட்டேன்’ என்று ஒரு பிரசங்கமே செய்து விட்டான்.
அவன் சாதாரண தமிழர்களைவிடச் சற்று முற்போக்கான கொள்கைகளையுடையவன் அதனால், அவனது முற்போக்குக் கொள்கைகளால், அந்தச் சிந்தனைகளை வாய்விட்டுச் சொன்னதால்,உயிரே பறிபோய்விட்டது.
1984ம் ஆண்டு தொடக்கம்,; ‘தங்களுக்குப் பிடிக்காத தமிழர்களைத் தீவிரவாதிகள் இயக்கரீதியாக வேட்டையாடி அழித்தபோது,’அரசியல் ரீதியான வித்தியாசமான அபிப்பிராயங்கள் உள்ளவர்களை அழிப்பது ஒரு பாசிச அரசியற் கோட்பாடு’ என்று எழுதிய அவனும் இல்லாமற் போய்விட்டான்.
அவனை அவர்கள் வீடு தேடிவந்து ‘போட்டுத்’ தள்ளிவிட்டுப் போய்விட்டார்கள்.
அப்போது சரஸ்வதி வைஷ்ணவியை வயிற்றிற் தாங்கிக்கொண்டு அவள் மகன் ரமேஷை மடியில் வைத்துக்கொண்டு கதறித் துடித்தாள்.
அவனைப் பிரிந்த திடிர் அதிர்ச்சியால் அவளது வயிற்றில் வளரும் அவளின் மூன்றுமாதக் குழந்தை அழிந்து விடுமோ என்று அவள் பயந்து துடித்தாள்.
‘உனக்குத் தெரியுமா,வயிற்றில் குழந்தை வளரும்போது தகப்பன் செத்தால் அது அந்தக் குழந்தையின் கெட்டபலன் என்று சொல்வார்கள்’.
பெரியம்மா தனது தங்கையின் வயிற்றில் வளரும் குழந்தையை அன்றே வெறுக்கத் தொடங்கிவிட்டாள்.
வைஷ்ணவிக்குப் பதினெட்டாம் வயது வந்ததும், தாயார் அவளுக்குப் பெரிய போர்த்டேய் பார்ட்டி வைத்தாள். யுனிவர்சிட்டிக்குப்போகும் நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. தாயின் அணைப்பிலிருந்து பரந்த உலகில் காலடி எடுத்துவைக்கமுதல், தனது இளமைப்பருவத்தைப் பற்றித்தாயிடம் கேட்டாள் வைஷ்ணவி;. சரஸ்வதி மகளைக் கட்டிக்கொண்டழுதாள்.
‘ உனக்குத் தெரியுமா, நீ என் வயிற்றில் உதித்தபோது நீ ஒரு பெண்குழந்தைதான் என்று உனது அப்பா சொன்னார். உனக்கு வைஷ்ணவி என்று பெயர் வைக்கவேண்டும் என்று சொன்னார்’ சரஸ்வதி நீர் வழியும் கண்களுடன் விம்மினாள்.
‘வைஷ்ணவி ..’ பெரியம்மாவின் அதட்டல் அவளை அம்மாவின் நினைவுகளிலிருந்து யதார்த்த உலகுக்கு இழுக்கிறது.
பெரியம்மா வைஷ்ணவியிடம் என்ன எதிர்பார்ப்பாள் என்று வைஷ்ணவிக்குச் சரியாகப் புரியவில்லை.
அப்பாவின் திடிர் மரணத்திற்கு வைஷ்ணவியின் கெட்டபலன்தான் காரணமென்று பெரியம்மா சொன்னதைத் தன் மகளுக்குச் சரஸ்வதி ஒருநாளும் சொல்லவில்லை. ஆனால் வைஷ்ணவி பெரியம்மா, இன்று அம்மாவின் திடிர் மரணத்துக்கும் வைஷ்ணவிதான் காரணம் என்று சொல்லாமற் சொல்லி அம்மாவின் மரணத்துடன் சம்பந்தப் படடுப் போலிசாரிடம் அகப்பட்டிருக்கும் வைஷ்ணவியின் தமயனை, எப்படியும் மீட்பதும் வைஷ்ணவியின் கடமை என்று பெரியம்மா நினைப்பதையும் அவள் அறிவாள்.
‘அம்மா சரஸ்வதி எவ்வளவு வித்தியாசனமானவள்?’ வைஷ்ணவி நினைத்துப் பெருமூச்சுவிடுகிறாள்.
அம்மா ஏ லெவல் படித்த கையோடு, தான் விரும்பிய பக்கத்து வீட்டு நடராஜனைத் திருமணம் செய்த கதையை மகளுக்குச் சொன்னபோது அவள் முகம் நாணத்தால் சிவந்து போகும்.அன்புள்ளவர்களின் முகம் எப்போதும் அழகாக இருக்கும் என்பதற்கு அம்மா ஒரு உதாரணமாகவிருந்தாள்.
அம்மாவின்,நுணுக்கமான சிந்தனைகளுக்கு அப்பா காரணமாகவிருந்திருக்கலாம் என்று வைஷ்ணவி நினைப்பாள். நான்கு வருடத் திருமணத்தை ஒரு புனித நினைவாகப் போற்றும் தன்தாயை ஆச்சரியமாகப் பார்த்தவள் வைஷ்ணவி.
எண்பத்தி ஆறாம் ஆண்டில் கணவனையிழந்தபின்,சிலவருடங்களின் பின் தமயன்களின் உதவியுடன் லண்டனுக்கு வந்தவள் சரஸ்வதி. அகதியாக லண்டனுக்கு வந்தஆரம்ப கால கட்டங்களில் தான் பட்ட துன்பங்களை மகளுக்குச் சொல்லியழுதிருக்கிறாள். சொந்தக்காரர் ஒருத்தரின் வீட்டில் ஒரு அறை எடுத்து இரு குழந்தைகளை வளர்க்க இந்தியக் கடையொன்றில் வேலை செய்த பழைய ஞாபகங்களை மகளுக்குச் சொல்லும்;போது, தங்களுக்காகத் தாய்பட்ட துயரை நினைத்து அழுவாள் வைஷ்ணவி.
அதையெல்லாம் அவள் தமயன் ரமேஷ் என்னவென்று மறந்தான். அம்மாவில் இத்தனை ஆத்திரத்தை அவன் எப்படி வளர்த்தான்? யார் அவன் மனத்தில் நஞ்சூட்டினார்கள்?அது வைஷ்ணவிக்குப் புரியாத புதிராகவிருக்கிறது.
லண்டனுக்கு சரஸ்வதி வரும்போது அவளுக்கு இருபத்தாறுவயது.பெரும்பாலான பெண்கள் படிப்பை முடித்துக்கொண்டு வேலை தேடி,சுயமான வாழ்க்கையைத் தேடும் வயதில் இரண்டு குழந்தைகளின் சுமையுடன் வாழ்க்கையின் கொடிய அனுபவங்களுடன் போராடினாள் சரஸ்வதி.
கையில் இரு சிறு குழந்தைகள். ரமேஷ_க்கு ஐந்து வயது. வைஷ்ணவிக்கு இரண்டரை வயது.’ உங்களின் நல்ல எதிர்காலத்துக்கு என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்’ தனிமையில் தனது குழந்தைகளைக் கட்டியணைத்துக் கொண்டு சபதம் செய்வாள் சரஸ்வதி.
‘அப்பா இருந்தால் உங்களை எவ்வளவு அன்பாகப் பார்ப்பார் தெரியுமா? உங்களை நல்ல மனிதர்களாகவும் கெட்டிக்கார மனிதர்களாகவம் ஆக்க என்ன பாடும் பட்டிருப்பார்.அவர் இருந்தால் உங்களுக்குச் செய்ய முடியும் என்பவற்றை என்னால் முடிந்தால் செய்கிறேன்’ குழந்தைகளைத் தேற்றுவாள் சரஸ்வதி.
தங்களுக்கு அப்பா இல்லை அம்மாவுக்குத் துணையில்லை;,அதை அபகரித்தவர்கள் சமுதாயத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லும் தீவிரவாதிகள்.
‘அப்பாவைச் சுட்டவர்களை ஒரு நாளைக்கு இலங்கைக்குப்போய்ச் சுட்டுத் தள்ளுவேன்’ ரமேஷ் வளர்ந்து கொண்டிருந்த வயதில் அடிக்கடி சொல்லும் ஆத்திரச் சொற்கள் இவை.
‘மகனே, கொலைக்குக் கொலைசெய்து பழிவாங்குவதால் ஒரு மனிதனைக் கொலைசெய்யலாம். அந்தக் கொலையைச் செய்யப் பண்ணிய சிந்தனையை, அதன்வளர்க்கும் சமுதாய, கலாச்சாரத் தீவிரவாதத்தை அழிக்க முடியாது. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் நன்மை தரும் நல்ல சிந்தனைகளை ஒவ்வொரு மனிதரும் முன்னெடுத்தால் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்’ அம்மா அன்புடன் போதனை செய்வாள்.
அவளின் நற் போதனைகளுக்கு இன்று என்ன நடந்திருக்கிறது? மிகவும் கோபக்காரனான ரமேஷை ஒரு நல்ல பிள்ளையாக அவள் வளர்க்கப் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.
‘மகனே உனது அப்பா மாதிரி நீதி நேர்மையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளப் பழகு.கோபத்தை அடக்கப் பழகு. அவசரமாக முடிவுகளை எடுக்காமல், ஆராய்ந்து யோசித்து அமைதியான மனநிலையில் முடிவுகளை எடுக்கப் பழகு’அம்மா இப்படிச் செய்த போதனைகள் எங்கே மறைந்தன?
இளம் கன்று பயமறியாது என்ற அவனது போக்கு சரஸ்வதியை வருத்தியது. குழம்பிய மனதுடைய அவனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கையை மிகவும் யதார்த்மானதாக நோக்கியது வைஷ்ணவியின் பிழையா,
அவளால் எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. அம்மா ஞாபகத்திற்கு வருகிறாள்.
‘ வைஷ்ணவி நீ நல்ல பெண்,நான் இல்லாதவிடத்தில் அண்ணாவைச் சரியாகப் பார்த்துக்கொள்.அப்பாவின் நல்ல குணங்கள் பல உன்னிடமிருக்கிறது.அப்பா இறந்தபோது நீ எனது வயிற்றில் மூன்று மாதக் கரு. என்னால் அவரில்லாத வாழ்க்கை முன்னெடுக்க விரும்பவில்லை. நீ எனது வயிற்றில் இருந்திருக்காவிட்டால் என்ன செய்திருப்பேனோ தெரியாது. உனது அப்பாவின் முப்பத்தி ஓராம் நாள்ச் சடங்கு முடிந்த அன்று, நான் மிகவும் ஆழ்ந்த மன அழுத்தத்தில் குழம்பிப் போயிருந்தேன்.தற்கொலை செய்துகொள்ளவேண்டும்போலிருந்தது. அப்போது முதற்தரம் உனது துடிப்பு எனக்குத் தெரிந்தது நான் இருக்கிறேன் பயப்படாதே என்று நீ சொல்வதுபோலிருந்தது. ஓரு தாயின் வயிற்றில் குழந்தை வளரும்போது, நான்காம் மாதம்தான் குழந்தையின் ஆத்மா பிறப்பெடுக்கிறது என்பது ஐதிகம். அதுதான் பிள்ளை துடிக்கத் தொடங்கிவிட்டது என்பதன் அர்த்தமும்,குழந்தைக்கு நல்ல ஒலிகள் கேட்பதற்காக வளைக் காப்பு வைபவம் நான்காம் மாதத்தின்பின் வைப்பதாகவும் சொல்வார்கள். எனது வயிற்றில் உனது முதற்துடிப்பபு உனது அப்பாவின் ஆத்மா உனது உருவில் வளரப்போகிறது என்று பைத்தியக்காரி மாதிரி யோசித்தேன்’. சரஸ்வதியின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்ததும் வைஷ்ணவியின் கண்கள் கலங்குகின்றன.
அம்மா வைஷ்ணவியை ஒரு மகளாக நடத்தாமல் ஒரு சினேகிதி மாதிரி நினைத்து எத்தனையோ துன்பங்களைப் பகிர்ந்திருக்கிறாள்.
‘அம்மா,நான் உங்களை எப்போதும் சந்தோசமாக வைத்திருப்பேன்’ தாயின் அணைப்பில் துவண்டுகொண்டு தாய்க்கு உறுதியழிப்பாள் வைஷ்ணவி.
அப்பா தேர்ந்தெடுத்த பெயரான வைஷ்ணவி என்று அவளுக்குச் சரஸ்வதி பெயர் வைத்தாள். ஓவ்வொருதரமும் அவள் வைஷ்ணவி என்று அழைக்கும்போது அப்பாவின் மலர்ச்சியான முகம் அவள் நினைவில் பளிச்சிடுமா? அது பற்றி வைஷ்ணவி பல தடவைகள் யோசித்திருக்கிறாள்.
வைஷ்ணவி வளர்ந்து கொண்டு வந்தகாலத்தில் அம்மாவைப் பின்னேர வகுப்புகளுக்கு அனுப்பி ஆங்கிலம் படிக்க உந்துதல் கொடுத்ததில் வைஷ்ணவிக்கு முக்கிய பங்குண்டு.; வீட்டில் தாயாருக்கு மகள் ஆசிரியையாகி.; தாயை ஆங்கிலம் பேசப் பண்ணினாள். நடராஜன் இருந்தால் அவன் அப்படித்தான் செய்வான் என்று சரஸ்வதிக்குத் தெரியும். ரமேஷ் டியுஷன், சினேகிதர்கள் என்று வெளியில் திரிந்தபோது தாயின் கல்விக்கு உதவியள் வைஷ்ணவி.
‘பெண்கள் படிக்காத வரைக்கும் ஆண்கள் அவர்களை அடக்கப் பார்ப்பார்கள்’ நடராஜன் பல தடவைகளில் சொல்லிய வார்த்தைகள் அவை.அதை வைஷ்ணவி அம்மாவுக்குச் சொன்னாள். அம்மா, நாங்கள் எங்கள் படிப்பு முடிய எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கே போய்விடுவோம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை இந்தியன் கடையில் முடக்கிக் கொள்ளவேண்டாம்’ என்று வைஷ்ணவி சொன்னபோது வைஷ்ணவிக்கு வயது பன்னிரண்டு வயது. சரஸவதிக்கு மெய்சிலிர்த்து விட்டது.மகளுக்காகப்படித்தாள். பரிட்சையிற் சித்தியடைந்தாள்.
சில வருடங்களின் பின்,ஒரு ஆபிசில் டெலிபோனிஸ்டாகச் சரஸ்வதிக்கு வேலை கிடைத்தது.;
அதன் பிறகுதான் எல்லாப் பிரச்சினையுமே வந்தது.
அம்மாவின் வாழ்க்கையை மாற்றியமைத்தது என்பிழையா,
அம்மா இறந்துவிட்டாள்! அநியாயமாக இறக்கப் பண்ணப் பட்டு விட்டாள்!
அம்மா இறந்த அன்று நடந்த விடயங்கள் திரைப் படம்போல் அடிக்கடி அவள் மனத்தில் வந்து சித்திரவதை செய்கிறது.
ஓரு சில நிமிடங்களில் என்னவென்று ஒரு உயிர் உலகத்தைவிட்டோடியது?
அப்பாவுக்கு நடந்த அதே கொடுமை அம்மாவுக்கும்? இது யாரின் கெட்டபலன். பெரியம்மா சொல்வதுபோல் நான்தான் எப்போதும் துரதிர்ஷடங்களைக் கொண்டு வருகிறேனா?’
இன்னொருதரம் பெரியம்மா வந்து வைஷ்ணவியைக் கேள்விளால் வதைப்பதைத்தடுக்கத் தன் கட்டிலிற் போய்விழுந்தாள் வைஷ்ணவி.
இறப்பு,இழப்பு,எதிர்காலம் என்பன அவளின் சிந்தனையைக் குழப்புகின்றன.
அம்மாவை மட்டுமா இழந்தேன்? நாளைக்கு ரமேஷின் கதி என்ன?
‘உனது அப்பா, நேர்மை,நீதி,சுயசிந்தனைக்கு மதிப்புக் கொடுத்தவர்’
யார் சொல்கிறார்கள்?
மனிதாபிமானம்,மனிதநேயம், இன்னொரு உயிரில் நேசம்…..?
சரஸ்வதி தனது குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுக்கும்போது,சாப்பாட்டை அவர்களின் உடல் வளர்ச்சிக்கும், நல்ல சிந்தனைகளை அவர்களின் ஆத்மீக வளர்ச்சிக்கும் கொடுப்பாள்.
‘உலகம் பொல்லாதது.பெலவீனமாகவிருந்தால்,எங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களில் பொறாமைபிடித்தவர்கள் எங்களை வீழ்த்தவும் மடக்கவும் முயற்சிப்பார்கள்.யாரையும் சந்தோசமாக இருக்காமற்பண்ணவென்று மிக் கேவலமான மனிதக் கூட்டம் எங்குபோனாலும் இருக்கும்.தங்களின் சுயநலத்தை முன்னெடுத்து முற்போக்குச் சிந்தனையுள்ளவர்களைச் சிதைக்க அவர்கள்,சாதி, சமயம், கலாச்சாரம் என்று பல முகமூடிகள் போட்டுக்கொள்வார்கள்.அதன்மூலம் மனிதர்களை ஒன்று சேராமல் பிரிவினைகளைக் கொண்டுவந்து கொலை,கொள்ளைகள், பாலியல் துன்புறத்தல்களைக்கூட நியாயப் படுத்துவார்கள்.அப்பா இருந்தால் இந்தத் தத்துவங்களை உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப் படுத்துவார்.’ சரஸ்வதியின் தொடர் நற்போதனைகளிற் சில இவை.
அவள் ஒரு தத்துவ ஞானிபோல்க் குழந்தைகளுக்குப் புத்தி சொல்வாள்.அப்பா விட்டுப்போன முத்திரை வார்த்தைகளா அவை?
ரமேஷ் அம்மாவின் போதனைகசை; சிலவேளைகளிற் சட்டை செய்யமாட்டான்.அந்த வீட்டில் அவன்தான் தலைவன் என்பதுபோல் நடந்துகொள்வான்.தான் ஒரு ஆண் என்பதையும் அவன் சொல்வதை வைஷ்ணவியும் அம்மாவும் கடைப்படிக்கவேண்டும் என்றும் எதிர்பார்ப்பான்.
அம்மாவை விட அவன் கூடப்படித்தவனாகக் காட்ட முற்படுவான். அம்மாவின் பழையகாலத் தத்துவங்கள் அவனைச் சிலவேளை எரிச்சல் படவைக்கும்.
‘மகனே வார்த்தைகள் மந்திரம். தேவையில்லாமல் அளவு மீறிப் பேசாதே.அளந்து பேசு, அறிவுடன் பேசு,அமைதியுடன் யோசி அல்லது அளவுக்கு மீறிய கோபம் கொலை செய்யவும் தூண்டிவிடும்’ அவள் எதிர்காலத்தைத் தெரிந்தவள்போல் பேசுவாள்.
ரமேஷ் பெரியம்மாவின் கொள்கைகள், சிந்தனைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிரகிக்கத் தொடங்கினான். பெரியம்மா வந்தால்@ ‘ம் உனக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறது தெரியுமா? உனது தங்கையை நல்ல வழியில் நடத்துவது உனது பொறுப்பு’ என்று ரமேஷ_க்கு உபதேசம் செய்வாள்.
ரமேஷ் வைஷ்ணவியின் சிந்தனையில் இப்போது உருவெடுக்கிறான். அவன் என்னவென்று இப்படி மாறினான்?
அம்மாவின் மரணத்திற்கு அவன்தான் காரணமென்று போலிசார் அவனைக் கைது செய்துகொண்டு போய்விட்டார்கள்.
அப்பா, அம்மா, அண்ணா என்று எல்லோரும் வைஷ்ணவியைப் விட்டுப் பிரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாவைக் காப்பாற்றக் கூடியவள் வைஷ்ணவி ஒருத்திதான் என்று பெரியம்மா பொருமிக் கொண்டிருக்கிறாள்.
‘உனது அம்மாவின் ஆட்டத்தை நீதானே தொடங்கி வைத்தாய்?’ பெரியம்மா வைஷ்ணவியுடன் போர் தொடுத்தாள்.ஆண்களின் பேச்சைக் கேட்காமல் நடந்ததன் பலன் எப்படிக்கொடுமையாக இருக்கிறதென்று பெரியம்மா குத்திப் பேசகிறாள்.
தனது இளமையை,உழைப்பை,வியர்வையாகச் சிந்திக் குழந்தைகளை வளர்த்த அம்மாவின் புனிதத்தைப் பெரியம்மா கேவலப் படுத்திவிட்டது வைஷ்ணவியாற் தாங்கமுடியாதிருக்கிறது.
தமிழ்க்கலாச்சார வட்டத்தைக்கடந்து,வாழ்க்கை முழுதும் விதவையாக வாழாமல், அவளுக்கென்று ஒரு துணையை நாடியதை ஒரு பஞ்சமாபாதகமாகப் பெரியம்மா வர்ணிக்கிறாள்.
;உன்ர அம்மாவுக்குக் கல்யாண பலன் இல்லை என்று உனக்குத் தெரியாது.அவளின்ர புருஷன் நாலு வருஷத்தில பரலோகம் போனதிலிருந்து சரஸ்வதிக்குத் தாலி பாக்கியம் இல்லை எனத் தெரியலியா? இப்ப அவளுக்குத் தனயன் பலனும் இல்லாமல் போகப்போகிறது’ பெரியம்மாவிடமிருந்து வந்தகேள்விகள் அத்தனையும் வைஷ்ணவியைக் குற்றவாளியாக்கவேண்டுமென்ற வாதத்தின் அடிப்படை என்பது வைஷ்ணவிக்குத் தெரியம்
‘சும்மா கடையில வேலை செய்தவளுக்கு நீதானே இங்கிலிஷ் படிப்பித்தாய்? ஓவ்விஸ் வேலைக்குப்போய் அங்க வெள்ளைக்காரனப் பார்க்க நீதானே தரகுவேலை செய்தாய்?’
அப்பப்பா எத்தனை மட்டமான கேள்விகள்?
அப்பாவின் மரணத்திற்கு அம்மாவின் ஜோதிட பலனைச் சொல்கிறாள்.அப்பாவின் மரணத்திற்குச் சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சி என்று தெரியாதவளா பெரியம்மா?
பெரியம்மாவால் குழப்பப்பட்ட ரமேஷின் மனநிலைதான் அம்மாவின் மரணத்திற்குக் காரணம் என்று அவளுக்குத் தெரியும்.ஆனால் பெரியம்மா, உண்மையை மறைக்க அம்மாவின் மரணத்துக்கான பழியை வைஷ்ணவியிற் போடப்பார்க்கிறாளா?
அம்மாவின் இறப்பு சீரழிந்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்பதைப் பெரியம்மா ஒப்புக்கொள்ளப் போவதில்லை.
ஊரோடு ஒத்துப்போகாமல்.பிடிவாதமாகத் தனது முற்போக்குக் கொள்கைகளை முன்னெடுத்ததால் கொலை செய்யப்பட்ட அப்பாவின் மரணத்தையும் பெரியம்மா நியாயப் படுத்துகிறாள்.ரமேஷின் கோபமும் செய்கையும் நியாயமானது என்ற நினைக்கும் பெரியம்மாவைப் பார்க்கவே வைஷ்ணவி வெட்கப் படுகிறாள்.
வைஷ்ணவி கண்களை மூடுகிறாள். காதுகளைப் பொத்திக்கொண்டாள்.ஆனால் அவளின் மனவோட்டத்தை மூடமுடியவில்லை.
ஆபிசுக்குப் போய்வந்த ஆரம்பநாட்களில்,ஒருநாள், அம்மா அவளுக்குப் போன் பண்ணியது ஞாபகம் வருகிறது.
‘வைஷ்ணவிக் குஞ்சு,இந்த வெள்ளைக்காரர்களோட வேலை செய்யப் பயமாகவிருக்கிறது’
‘ஏனம்மா என்ன நடந்தது?’
‘அவர்கள் பேசுவது பழகுவது எல்லாம் வித்தியாசமாகவிருக்கிறது’ என்று அம்மா சொன்னபோது வைஷ்ணவி சிரித்தாள்.
‘அப்படி என்ன சொல்லி உன்னைப் பயமுறுத்துகிறார்கள்?’ தாயிடம் குறும்பாகக் கேட்டாள் மகள்.
சரஸ்வதி ஆபிசுக்குப் போன புதிதில் பலதரப்பட்ட மனிதர்களுடனும் பழகுவது சங்கோஜமாகவிருந்தது. அது காலக்கிரமத்தில் ஓரளவு பழகி விட்டது. மதியநேர உணவு நேரம் ஒருத்தருக்கொருத்தர், தாங்கள் வீட்டிலிருந்து கொண்டுபோகும் உணவுகளைப் பரிமாறி அவர்களின் சினேகிதமும் உறவும் வளர்ந்தது. சரஸ்வதியின் இலங்கைச் சாப்பாடும், சங்கீதாவின் இந்திய(குஜராத்தி)ச் சாப்பாடும் வெள்ளைக் காரர்களுக்குப் பிடித்துக்கொண்டது. ஆபிசில் வேலை செய்வோர் ஓவ்வொருவரின் போர்த்டேய் பார்ட்டிகளும் சந்தோசமாகவிருந்தது. மனம் விட்டுப் பேசி உறவுகளை வளர்த்துக்கொண்டார்கள்
‘எனது பாஸ் இன்ற என்ன கேட்டான் தெரியுமா?’ சரஸ்வதி மகளிடம் அப்பாவித்தனமாகச் சொன்னாள்.
‘என்ன கேட்டான்?’ மகள் ஆவலுடன் கேட்டாள்.
டெலிபோனுக்கு அடுத்த முனையில் அம்மாவின் பரபரத்த முகபாவத்தை வைஷ்ணவி கற்பனை செய்தாள்.
நாற்பதை வயதைத்தாண்டியும் அழகான கட்டுக்கோப்பான உடலுடன், கவர்ச்சியான இளமைத்தோற்றத்துடனிருக்கும் சரஸ்வதியும் மகளும் கடைக்கு ஒன்றாகப்போனால், இருவரையும் சகோதரிகள் என்றுதான் மற்றவர்கள் நினைப்பார்கள். சினேகிதமாகக் கல கலவென்று பேசிக்கொண்டிருப்பார்கள்.
‘உனக்கு உனது அப்பாவின் குறும்புத்தனம் அப்படியேயிருக்கிறது’ மகளைப் பாசத்துடன் அணைத்துக் கொண்டு சொல்வாள் சரஸ்வதி.
‘ அப்பா இருந்தால் உன்னை எப்படி அன்பாகப் பார்த்துக் கொள்வாரோ அப்படியே நானும் உன்னைப் பார்த்துக்கொள்வேன் அம்மா’ தாய்க்கு உறுதி மொழி கொடுப்பாள் மகள்.
எத்தனை நெருக்கமாக வாழ்ந்தார்கள்?
‘உங்கள் பாஸ் என்ன கேட்டான் அம்மா?’ தாயின் நினைவை மீட்டெடுக்கிறாள் வைஷ்ணவி.
‘விதவையாயிருந்தால் போய்பிரண்ட வைத்துக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டான் அம்மாவின் குரலிற் கோபம்.
வைஷ்ணவி யுனிவர்சிட்டியில் இரண்டாவது வருடம் படிக்கிறாள். தமயன் ரமேஷ் படிப்பை முடித்து விட்டு ஒரு குஜராத்திப் பெண்ணைக் கேர்ள்பிரண்டாக வைத்திருக்கிறான். வைஷ்ணவி அப்பாவின் சாயலிலும் ரமேஷ் சரஸ்வதியின் தகப்பனின் சாயலிலும் இருப்பதாகப் பெரியம்மா சொல்லியிருக்கிறாள். ரமேஷ் நன்கு உயர்ந்து வளர்ந்தவன். மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பான். சாடையான கோபமான முகபாவம். வைஷ்ணவிக்கு எப்போதும் மலர்ச்சியான முகபாவம்.
அம்மாவை அவளது பாஸ் கேட்ட கேள்வியைச் சொன்னபோது வைஷ்ணவி ஒரு கணம் மவுனமாக இருந்தாள். அம்மாவை நேரிற் பார்த்து அவளின் கோபத்திற்குக் காரணம் தேடவேண்டும்போலிருந்தது.
அவள் விடுதலைக்கு வீட்டுக்கு வந்தபோது ரமேசின் வாயில் அடிக்கடி அவனின் காதலியான சாதனா பட்டேல் என்ற பெயர் அடிபடுவதைக்கண்டு,அவனை வேடிக்கை செய்தார்கள்.
‘எங்களுக்கு விருப்பமானவர்களின் நினைவு மனதில் நிறைந்திருக்கும்போது அவர்களின் பெயர் அடிக்கடி வாயில் வரும்’ குறும்புடன் தமயனுக்கச் சொன்னாள் வைஷ்ணவி. தாயும் மகளும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
அதற்கு ரமேஷ் கொடுத்த பதில் தாயையும் மகளையும் திடுக்கிடப் பண்ணியது.
‘அம்மா அடிக்கடி அவளின் பாஸ் ஸ்டிவனைப் பற்றிப் பேசுகிறாள் அதற்கு அர்த்தம் என்ன?’
வைஷ்ணவி தாயைப் பரிதாபமாகப் பார்த்தாள். ஸ்டிவன் மனைவியை விவாகரத்து செய்து கொண்டவன். முப்பத்தியெட்டு வயதுத் தனிக்கட்டை.பிள்ளை குட்டி கிடையாது.சரஸ்வதி நாற்பத்தியிரண்டு வயதான விதவை. வளர்ந்து, கூட்டைவிட்டு ஓடக் காத்திருக்கும் குழந்தைகளின் தாய்.
‘விதவைகள் போய்பிரண்ட் வைத்துக்கொள்ளக் கூடாதா, மறுதிருமணம் செய்துகொள்ளக் கூடாதா?’ என்று கேட்ட கேள்விக்குத் தான் தனது குழந்தைகள், குடும்பப் பொறுப்பு, கலாச்சார இறுக்கங்கள் பற்றி விளக்கியதையும், அதற்கு அவன்,’ எங்கள் கலாச்சாரம் தனிமனித சுதந்திரத்திர உணர்வுகளுக்க மதிப்புக் கொடுப்பதாகச் சொன்னதாக அம்மா சொன்னாள்.
‘அம்மா, உலகம் படுவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது…விதவைகள் திருமணம் பெரிய விடயமில்லை. நாங்கள் இந்த வீட்டை விட்டுக் கெதியில் எங்களின் வழியைப் பார்த்துக்கொண்டபோய்விடுவோம்…நீங்கள் தனியாக ஏன் கஷ்டப்படவேண்டும்?’
அம்மாவுக்குச் சாடையாக ஸ்டிவனில் சிறுவிருப்பம் இருப்பதை மோப்பம் படித்த வைஷ்ணவி,அம்மாவுக்கு விருப்பமிருந்தால் ஸ்டிவனைத் திருமணம் செய்யலாம் என்பதைச் சூசகமாகச் சொன்னாள்.
‘குடும்பம் குடும்பம் என்ற வேதம் படிப்பது மாதிரிச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே,எனக்கு உனது வீட்டில் வந்து சாப்பிடவேண்டும் உனது குடும்பத்தைச் சந்திக்கவேண்டும்போலிருக்கிறது’ ஸ்டிவன் ஒழிவு மறைவின்றிச் சொன்னதை சரஸ்வதி தன் குழந்தைகளுகச் சொன்னாள். வைஷ்ணவி தமயனைப் பார்த்தாள்.
‘ ஒருதரம் கூப்பிட்டு அவனுக்கு அவித்துப் போட்டாற் போகிறது’ என்ற வேண்டாவெறுப்பாகச் சொன்னான் ரமேஷ்.
ஸ்டிவன் வந்தான்.உயர்ந்த கம்பீரமான ஆங்கிலேயன் பழுப்பு நிறத்தலைமயிர், பச்சை நிறக் கண்கள், மலர்ச்சியான போக்கு. அன்பான பேச்சு.
வைஷ்ணவிக்கு அவனைப் பிடித்துக்கொண்டது. ஸ்டிவன் அவர்கள் கொடுத்த விருந்திற் திளைத்தான்,சரஸ்வதி, வைஷ்ணவியின் அன்பில் நனைந்தான்.ரமேஷ் கொஞ்சம் ஒதுங்கியிருப்பது சங்கோஜம் காரணமாகவிருக்கலாம் என்று நினைத்தான்.
அவர்களுக்கு முன்னால்,’இப்படியான ஒரு குடும்பத்தில் நானும் ஒரு அங்கத்தவனாக இருக்கும் பாக்கியம் கிடைத்தால் மிகவும் சந்தோசப்படுவேன்’ என்று சரஸ்வதியில் அவனுக்குள்ள விருப்பத்தை நேரடியாக வெளிப்படுத்தினான்.
ரமேஷ் இதை எதிர்பார்க்கவில்லை. வந்தவனின் வயது அவனின் அம்மாவை விட நான்கு வயது குறைந்தது. அவன் ஆங்கிலேயன், வாழ்ந்து விட்டுப் பிடிக்காவிட்டால் சட்டென்று விவாகரத்துச் செய்யத் தயங்காதவன். அவன் என்ன உறவைச் சரஸ்வதியிடம் எதிர்பார்க்கிறான்?
அவன் சென்றதும் அவன் பற்றி பெரிய விவாதம் அவர்கள் வீட்டில் உண்டானது. தங்களின் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டவனை, வயது குறைந்தவனை,ஒருதரம் திருமணமாகி விவாகரத்து செய்துகொண்டவனைத் தனது தாய் விரும்புவதா?
ரமேஷால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அடுத்தநாள்,சரஸ்வதி வேலைக்குப் போனதும், சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மன்னன் மாதிரி ஸ்டிவன் தனது ஆசனத்திலமர்ந்திருந்து, சரஸ்வதியைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான்.’ ஐ லவ் யு சரஸ்வதி ‘ என்று ஆறுதலாக,ஆணித்தரமாகச் சொன்னான்.
அவள் அவன் அப்படி நேரடியாகச் சொன்னதும் வெவெலத்துப் போனாள்.
தனது கணவன் நடராஜனை நினைத்துக்கொண்டாள்.
அவர்கள் இலங்கையில் திருமணம் செய்து கொண்டகாலத்தில், தமிழ்ப்பகுதிகளில் பல தரப்பட்ட மோதல்களால் கண்டபாட்டுக்குக்கொலைகள் நடந்து கொண்டிருந்தன.
‘ சரஸ்வதி எனக்கு ஏதும் நடந்தால், தயவு செய்து உன்னை விரும்பும் யாரையும் திருமணம் செய்துகொள். நீP படித்தவள், கருணைமனம் கொண்டவள், அன்பின் உறைவிடமானவள். தனிமையான வாழ்க்கையும் விரக்தியும் உன்னை அழித்துவிடும். ஓரு துணை தேடிக்கொள்’ என்ற எதிர்காலத்தில் நடக்கவிருந்த கொடுமைகளை எதிர்பார்த்தவன்போல் அவளுக்குப் புத்திசொன்னான்.
இன்று, தாய்நாட்டுக்க அப்பால், அவளின் கலாச்சாரத்துக்கு அப்பால்அவளைத் தேடியொரு துணைவந்திருக்கிறது. என்ன செய்வாள்?
‘அம்மா கொஞ்சகாலம் பொறுத்திருந்துபார். உனது மனம் என்ன சொல்கிறதோ அதைச்செய்’ வைஷ்ணவி தனது தாய்க்குப் பெரிய மனுஷி மாதிரிப் புத்தி சொன்னாள்.
ஸ்டிவன் அடிக்கடி வந்தான். சாப்பிட்டான்.அம்மாவுக்கு லிப்ட கொடுத்தான்.ஆங்கில மியுசிக் கச்சேரிக்குக் கூட்டிக்கொண்டுபோனான். கடற்கரைக்கும் பார்க்குக்கும் போனார்கள். சரஸ்வதிக்குத் தன் குடும்பப் பொறுப்புக்களால் தொலைந்துபோன இளமை திரும்புவதுபோலிருந்தது.ஸ்டிவனின் கவுரமான உறவு, அவள் அவனை மனமார விரும்பி ஏற்றுக்கொள்ளும்வரையும் காத்திருக்கும் அவனின் பண்பு அவளுக்குப் பிடித்துவிட்டது.
சரஸ்வதி நெகிழ்ந்து விட்டாள்.வைஷ்ணவி அம்மாவின் முகத்தில் தெரியும் மலர்ச்சியைக்கண்டு சந்தோசப்பட்டாள். ஆனால்…பெரியம்மாவும் ரமேஷ_ம் அம்மாவை அசிங்கமாகப் பார்த்தார்கள்.
‘என்ன நீங்க இரணடுபேரும் ஆட்டம் போடுறியள்’ அவன் அசிங்கமான வார்த்தைகளால் தாய்மையைக் கீறிக் கிழித்தான்.தமிழ்ச்சமுதாயம் எங்கள் குடும்பத்தைக் காறித்துப்பும் என்று கர்ச்சித்தான்.
அவன் ஆத்திரம் வைஷ்ணவிக்கு எரிச்சலைத் தந்தது.
‘சமுதாயம் எனக்குப் பாடசாலை யுனிபோர்ம் வாங்கித் தரல்ல, எங்கட வீட்டு பில்ஸ் கட்டல்ல..அம்மா கஷ்டப்பட்ட உழைத்துத்தான் நாங்கள் வசதியாக வாழ்ந்தம் இப்போது அம்மாவைச் சந்தோசமாக வாழவிடக் கூடாதா?’ வைஷ்ணவி தமயனிற் சீறினாள்.
தர்க்கம் முற்றியது. ரமேஷ் எப்படி மிருகமாக மாறினான் என்று தெரியவில்லை. தன்னைப் பெற்று ஆளாக்கிய தாய்மையைத் தாறுமாறாகத் தாக்கினான். அவள் அணைத்த கரங்கள் அவளை ஈவிரமின்றி அடித்தது.
சரஸ்வதி; அதிர்ந்து விட்டாள்.
தான் வாழும் சமுதாயத்தின் பிற்போக்குச் சிந்தனைக்குச் சவால் விட்டதால்,தனது கண்முன்னால் தனது கணவன் படுகொலை செய்யப் பட்டதைக் கண்டு துடி துடித்தவள்,இன்று அதேசமுதாயத்தின் பிற்போக்குச் சக்திகளின் பிரதிநிதியாய்ப் பெண்களை அடிமையாக நடத்தும் வன்மத்தின் காவலானாய்த் தனது தாயையே கை ஓங்கி அடிக்கிறான் அவள் தனயன் ரமேஷ்! தந்தை சொல்லுக்காகத் தாயைக் கொலை செய்த புராணத்துப் பரசுராமனாக ரமேஷ் சரஸ்வதி முன் நிற்கிறான்.
தாயை அடிக்கும் தமயனிடம் கெஞ்சிய,வைஷ்ணவியின் கதறல் அவனது மிருகத்தனத்திற்கு முற்றப் புள்ளி வைக்கவில்லை.
தனயனாற் தாக்குப் பட்ட அதிர்ச்சி அவமானம் சரஸ்வதியாற் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தங்களுக்கு அடங்காத பெண்களைக் கௌரவக் கொலைகள் செய்வதை அவள் கேள்விப் பட்டிருக்கிறாள். இன்று அவள் வீட்டிலேயே..
அவளால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. அவர்கள் இருப்பது நான்காவது மாடிவீடு; தனயனின் முகத்தைப் பார்க்காமல் அவள் பல்கனிப் பக்கம் ஓடினாள். மகன் தாயைத் துரத்தினான்.
அதன்பின் என்ன நடந்தது என்ற வைஷ்ணவிக்குத் தெரியாது. அம்மாவின் உயிரற்ற உடல் நான்காம் மாடியிலிருந்து விழுந்து குருதிதோய்ந்த பிணமாகக் கொங்கிறீட் தரையிற் கிடந்தது.
போலிசார் வந்தார்கள். அம்மாவின் கன்னத்தில் ரமேஷின் விரல் அடையாளம் ஆழமாகப் பதிந்திருப்பதால் அவனிற் கொலைக் குற்றம் சாட்டி அவனைகக் கொண்டு போய்விட்டார்கள்.
;’என்னடி யோசிக்கிறாய’? நீP சரஸ்வதியின் வயிற்றில் தரித்தநேரம் தகப்பன் போனான், நீ சொன்ன பைத்தியக் கதைகளால் அம்மா போய்விட்டாள்.இப்போது உனது தமயனையும் காட்டிக் கொடுக்கப் போகிறாயா?;’
பெரியம்மா முழங்குகிறாள். ‘வாழ்க்கையில் வறுமை வந்தாலும்.தாங்கமுடியாத சோதனைகள் வந்தாலும் நீதிக்கும் நேர்மைக்கும் நின்றுபிடி’.
அம்மாவும் அப்பாவும் வைஷ்ணவிக்கு ஒரே குரலிற் சொல்வது போலிருக்கிறது.
‘என்ன யோசிக்கிறாய்?’ சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக,அவர்களின் மானம் மரியாதை சம்பிரதாயங்களுக்குப் போராடுபவளாகப் பெரியம்மா வைஷ்ணவி முன்னால் நிற்கிறாள்.
வைஷ்ணவி யோசிக்கிறாள்
(யாவும் கற்பனையே)