இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-20.02.15
உலகின் பல பகுதிகளிலும் அரசியலின் ஆளுமையைப் பெற்றிருப்பவர்களும்,ஆயுதங்கள் வைத்திருப்பவர்களும், சமயத்தை ஒரு ஆயுதமாகப் பாவித்து, மத ரீதிpயாகவும்,இனரீதியாகவும், சாதியின் பெயர் சொல்லியும் பல கொடுமைகளை மக்களுக்குச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் ஆணவத்துக்கு முன்னால் மக்கள் குரலுக்கு மதிப்பில்லை.
ஆனால் இங்கிலாந்தில் மக்களின் குரலாக, சமயத்தலைவர்களின் அடிக்கடி கேட்பதுண்டு.அரசியல் வாதிகள் பேராசையால்,ஆணவத்தால்,தார்மீகமற்ற முறையில் நடந்துகொள்ளும்போது,மதத்தலைவர்கள் தர்மத்துக்காகக் குரல் கொடுத்த பல வரலாறுகள் உள்ளன.
இன்று,இங்கிலாந்து அரசியலில் நடந்து கொண்டிருக்கும் பல மாற்றங்களால், இங்கிலாந்து,அங்கிலிக்கன் சமயத்தலைவர்கள்; பிரித்தானிய அரசியல் வாதிகளுக்கு எதிராக, எதிர்வரும் வைகாசி மாதத்தில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலை முன்வைத்து,மிகவும் கடுமையான கண்டனக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஐம்பத்திரண்டு பக்கங்களில், பதினோராயிம் வார்த்தைகளையடக்கிய அக்கடிதத்தில், ஒட்டுமொத்த மக்களின் நன்மையையம் கருதி,அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்களா என்பதையொட்டிய பல கேள்விகள் எழுப்பப் பட்டிருக்கின்றன.
இதையொட்டி, பி.பி.சி தன்னுடைய நிகழ்ச்சி ஒன்றில்,’கடவுள் இடதுசாரியா?’ என்ற கேள்வியை வைத்து விவாதத்தை முன்னெடுத்தது. இதையொட்டி, பல ஊடகங்களில் பலகருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்போக்குவாதிகளின் பத்திரிகையான ‘கார்டியன் பத்திரிகையும் பிற்போக்குவாதிகளின் பத்திரிகையென்று அழைக்கப் படும் ‘டெய்லி மெயிலும்’, சமயத்தலைவர்களின் கடிதத்தில் ‘இடதுசாரிகளின்’ வாதம் பிரதிபலிக்கிறது என்று சொல்கின்றன.
இங்கிலாந்து, 1531ம் ஆண்டு,ஆட்சி செய்த மன்னர்; எட்டாவது ஹென்ட்ரியால், கிற்ஸ்தவ சமயத்தலைவரான, பாப்பாண்டவர் ஏழாவது கிலமன்ட் என்பரை எதிர்த்துக் கொண்டு, தங்கள் அரசரைத் தங்களின் சமயத் தலைவராகக் கொண்ட சோர்ச் ஒவ் இங்கிலாண்ட் (அங்கிலிக்க கிறிஸ்தவம்) சமயத்தை முன்னெடுத்தது. உரோம நகரில் வாழும் கத்தோலிக்க மக்களின் தலைவரை எதிர்த்துக் கொண்ட பிரித்தானிய அங்கிலிக்க கிறிஸ்தவ மதம்,இன்று வரை பல மாற்றங்களைப் பல விதங்களிற் செய்து கொண்டிருக்கிறது.
தனக்குப் பிறகு, தனது அரசையாள ஒரு ஆண்குழந்தை வாரிசைத்தராத தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு,இரண்டாம் மனைவியாக ஆன் பொலின் என்ற பெண்ணைத் திருமணம் செய்ய பாப்பாண்டவர் அனுமதி கொடுக்காததால் மன்னர் ஹென்ட்ரி பாப்பாண்டவரை பகைத்துக்கொண்டு கத்தோலிக்க மதத்திலிருந்து ஒரு புது மதத்தை ஸ்தாபித்து, தன்னை அதன் பாதுகாவலாராக அமைத்துக்கொண்டார்.
அன்றிலிருந்து இன்று வரை,இங்கிலாந்திலும், இங்கிலாந்தின் காலனித்துவ நாடாகவிருந்த அமெரிக்காவிலும் ஒரு கத்தோலிக்கர் நாட்டின் தலைவராக வருவது நடைமுறையல்ல. ஓரே ஒரு தடவை அமெரிக்காவில, கத்தோலிக்கரான கென்னடி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப் பட்டார்(1960), சொற்ப காலத்தில் கொலை செய்யப்பட்டார்.இங்கிலாந்து அரச குடும்பம் ஒரு கத்தோலிக்கரைத் திருமணம் செய்ய முடியாது. ஒரு கத்தோலிக்கர் இங்கிலாந்து பிரதமராக வரமுடியாது. 1997-2008 வரை இங்கிலாந்தின் பிரதமராகவிருந்த ரோனி பிளேயர், பிரதமர் பதவியை விட்ட பின்னர் கத்தோலிக்க சமயத்திற்கு மாறினார் (ஈராக்கில் அமெரிக்க புஷ்ஷ_டன் சேர்ந்துபோர் தொடுத்து அவர் செய்த அநியாயங்களுக்கு யேசுவிடம் பாவமன்னிப்புக் கேட்கட்டும்!).
இன்று, இங்கிலாந்தது மக்கள் தங்கள் சமயத்தைப் பெரிதாகப் பின் பற்றுவதில்லை. கிட்டத்தட்ட நான்கு வீத மக்கள் மட்டும் தங்கள் அங்கிலிக்கன் தேவாலயப் பூசைகளுக்காக வருவதாக 2002 அறிக்கை சொல்கிறது. இங்கிலாந்திற் பல்லின மக்களும் வாழ்கிறார்கள். சாதி மத பேதங்கள் காட்டி ஒரு மனிதனை வேறுபடுத்தி ஒடுக்கப் படுவது சட்டமுறையில் பெரிய குற்றமாகக் கருதப் படுகிறது.
சாதி மத போதமற்ற கலப்புத் திருமணங்கள் நடைபெறும் நாடுகளில் இங்கிலாந்து முன்னணியிலிருக்கிறது.அரச,சமய,விழாக்களுக்கு எல்லா சமயத்தலைவர்களும் அழைக்கப் படுகிறார்கள்.
‘கடவுள் ஒரு இடதுசாரியா’ என்ற கேள்வி ஊடகவாதிகளால் எழுப்பப் படுவதற்கு, இன்று அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் முறைமட்டும் காரணமல்ல. காலத்துக்காலம், அரசு நடைமுறையிலிருந்து தவறும்போது,சமயத்தலைவர்கள் தங்கள் கண்டனக் குரலை எழுப்புவது பிரித்தானியாவின் சம்பிரதாயங்களில் ஒன்றாகும். பெரும்பாலான அங்கிலிக்க சமயத்தலைவர்கள் முற்போக்குக் கொள்கைகள் உள்ளவர்கள். ஓட்டுமொத்த மக்களும், நிறபேதம்,வர்க்கபோதம், ஆண்பெண் என்ற வித்தியாசம்,பாலியல் ர்Pதியான ஒடுக்கு முறைகளுக்கு எதிரானவர்கள். இவை’இடதுசாரிகளின்’ கொள்கைகள் என்று பிற்போக்குவாதிகள் கூப்பாடுபோடுகிறார்கள்.
‘சமயம் என்பது ஆண்களின் சொத்தல்ல. பெண்களும் சமயத்தலைவர்களாக வரலாம்’ என்ற முறையை அங்கிலிக்கன் சமயத்தலைவர்கள் 1994ல் கொண்டுவந்தார்கள். மிகப் பிரமாண்டமான பிற்போக்குவாத சமயத்தலைவர்களையும் வெற்றி கொண்டு,பிறிஸ்ரல் நகரத்தில் ஒரு பெண் அங்கிலிக்கன் சமயத்தலைவியாகப் பதவியேற்றார். 2002ம் ஆண்டில் ஹோமோசெக்சுவல் பாதிரிகளும் சேர்ச்சில் வேலை செய்யலாம் என்று அனுமதிக்கப் பட்டார்கள். 2003ல் ரோனி பிளேயர் ஈராக்கில் போர்தொடுத்தபோது இரண்டுகோடிக்கு மேலான பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெருவித்து ஆர்ப்பாட்டம் செய்தோம். அதில் கலந்து கொண்டது கணிசமானவர்கள்,சகல மதத்தையும் சேர்ந்த பிரித்தானிய சமயத்தவர்ளே.
ஆண்களின் ஆளுமையிலிருந்து, பெரிய பதவிகளான’பிஷப்’ போன்ற பதவிகளும் 2015 லிருந்து பெண்களுக்குக் கொடுக்கப் படுகிறது. திருமதி லிபி லேனா என்ற பெண் அங்கிலிக்க சமயத்தின் முதலாவது பிஷப்பாக ஸ்ரொக்போர்ட் என்ற நகருக்குச் சில வாரங்களக்கு முன் தெரிவு செய்யப் பட்டார்.
குணமாக்கமுடியாத பல தரப்பட,உடல் உள நோய்களுடன் துயர்படுவோர்,தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்ற பிரசாரத்திற்கு எதிராகச் சமயத்தலைவர்கள் குரல் கொடுத்தார்கள். கடவுள் கொடுத்த உயிரை, நோய் நொடிகளின் சாட்டை வைத்துக்கொண்டு, வாழ்க்கையின் நடுவில் பறிப்பதை அவர்கள் ஆதரிக்கவில்லை. இது,ஹிட்லர், வலது குறைந்தவர்களை,மனநோயாளிகளைச் சமுதாயத்திற்கு வேண்டாதவர்கள் என்று காரணம் காட்டி அழித்து முடித்ததற்குச் சமம் என்று வாதாடுகிறார்கள்.
தற்போது, இந்த சமயத்தலைவர்கள்,பேராசையும் சுயநலமும் கொண்டு, தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைப் பாதுகாக்கப் பல பிற்போக்குக் கருத்துக்களைச் சொல்லி, சாதாரண மக்களை இனவாதிகளாக,வர்க்க பேதவாதிகளாக மாறச் சொல்லும் பல அரசியற் பொய்களுக்குச் சவாலடி கொடுக்கிறார்கள்.முதலாளித்துவத்தைப் பாதுகாக்கப் பல வங்கிகள் மோசடிகள் செய்வதைச் சாடுகிறார்கள்.
இன்று ஒட்டுமொத்த உலக செல்வத்தைத் தங்கள் உடமையாக வைத்திருக்கும்,உலக சனத்தொகையில் ஒருவீதமான பணக்காரார்களில் பெரும்பாலோரான மேற்கு நாட்டவரைக் கேள்வி கேட்கிறார்கள்.
பிரித்தானிய சமயத்தலைவர்களின் கண்டனக் கடிதம், பிரித்தானிய அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல,பொருளாதார ரீதியில் மூச்சுத் திணறி அதை யாரோ தலையிற் கட்டமுயலும் ஐரோப்பிய நாடுகளுக்கும்தான் என்று அலசுபவர்களும் உண்டு. மற்ற இன மக்கள்மீது, தங்கள் நாட்டில் நடைபெறும் பொருளாதாரத் தேக்கத்திற்கு பழிபோட்டு; அதனால், ஐரொப்பா முழுதும் வலதுசாரி இனவாதக் குழக்கள்; பரவுவது, இன்னும் பல ஹிட்லர்களை உருவாக்கும் என்ற பயம் பலருக்குமுண்டு.
-‘ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மை செய்யாமல் ஒரு குறிப்பிட்ட குழக்களுக்களின் நன்மைக்கு உழைப்பது ஜனநாயகமல்ல ‘ என்று இந்தச் சமயத் தலைவர்கள் தங்களின் கடிதத்தின் மூலம் உறுமுகிறார்கள்.
மேலும்:
-‘ திட்டவட்ட மற்ற அரசியற் கொள்கைகளை முன்வைக்காமல், காலத்துக்காலம் அரசு பொருளாதாரப் பிரச்சினையை அணுகும்போது அதை ஏழை மக்களின் ( பெரும்பாலான பிரித்தானிய ஏழைகள்,வறுமைக்கோட்டில் வாழும் வெள்ளையின மக்களும் புலம் பெயர்ந்த பல்லின மக்களுமாகும்) தலையில் பழியாய்ப் போடுவது அதர்மம்’ என்று குமுறுகிறார்கள்.
‘-ஒரு புதிய ஆக்கபூர்வமான முன்னேற்றப் பாதையை, ஒட்டுமொத்த மக்களுக்குமாகச் சந்திக்காமல், யோசிக்காமல் மீண்டும் மீண்டும், பழைய சிந்தனையுடன் பணம் படைத்தோரின் நன்மையை நாட்டின் நன்மை என்று காட்டுவது ஒழுக்கமான சிந்தனையல்ல’ என்ற நேரடியாகத் தாக்குகிறார்கள்.
பிரித்தானியப் பொதுத் தேர்தல் வைகாசி ஏழாம் திகதி நடைபெறவிருக்கிறது.அதில் இன்று கூட்டாட்சி செய்யும் கொன்சர்வேர்ட்டிவ்(பழமைவாதிகளின் கட்சி) கட்சியும், லிபரல் கட்சியும் (முற்போக்கு வாதிகளின் கட்சி),திரும்பவும் ஆட்சிக்கு வருமா அல்லது, தங்களின் கொள்கை ரீதியால்ப் பல பகுதிகளாலும் தாக்குதல்களுக்குள்ளாகும் தொழிலாளர் (லேபர்) கட்சியா,(இவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றிய காலத்திலிருந்து பிற்போக்குப் பரித்தானியப் பத்திரிகைகள்-பெரும்பாலும் யூத ஆதிக்கமுள்ளவர்கள் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்),அல்லது வெட்ட வெளிச்சமாக இனவாதம் பேசும் பிரித்தானிய சுதந்திரக் கட்சியா (யுனைட்ரட் கிங்டம் இன்டிபென்டன்ட் பார்ட்டி) ஆட்சிக்கு வரும் என்று பலத்த போட்டிகள் நடக்கின்றன்.
பிரித்தானியப் பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தைப் பலவழிகளிலும் கொள்ளையடிக்கும் பல முதலாளிகள் வரி கட்டாமற் தப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
எச். எஸ். பி.சி என்ற பிரமாண்டமான வங்கி தனது வாடிக்கையாளர்கள் எப்படி வரி கட்டாமற் தப்பலாம் என்பதற்கு உதவி செய்வதாகச் செய்திகள் வந்தன அதில் முக்கிய பேர்வழியாகவிருந்தவர் இன்றைய அரசில் அமைச்சராகவிருக்கிறார். ‘கூகிள்’ போன்ற பிரமாண்டமான நிறுவனங்கள் வரி கட்டுவதில் விளையாட்டுக்காட்டும் பல ஸ்தாபனங்களில் ஒன்றாகும்.(இந்தியா,இலங்கை மட்டும் ஊழல்களுக்குப ;பேர்போன நாடுகளல்ல!)
ஆனால், அரச தயவில் வாழும் ஏழைகளை, வேலையற்றோரை, அங்கவீனமானவர்களை, தனியேவாழும் தாய்மாரை,கொன்சர்வேட்டிவ் அரசு தாறுமாறகக் குறிவைக்கிறது என்றும், அவர்களுக்குக் கொடுக்கும் உதவிப் பணத்தைக் குறைத்து வதைக்கப் பல சட்டங்களைக் கொண்டுவருவதாகப் பயமுறுத்துகிறது போன்ற அவர்களின் பிரசாரத்திற்கு எதிராகச் சமயத் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.
சமயத்தவைர்கள்,தங்களின் கண்டனக் கடிதத்தில:,
‘அரசியல் வாதிகள்,வலிமையற்ற சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் அரசியலைக் கலந்து விளையாடுகிறார்கள் என்று சாடுகிறார்கள்.
-அரசியல் வாதிகள்,தங்கள் அரசியல் இலாபத்திற்கு தனிப்பட்ட முதலாளித்துவ மனிதர்களின் கொழுத்தவாழ்க்கைக்குத் தங்கள் பிரசாரத்தைத் திருப்புகிறார்கள்.
-அரசியல்வாதிகள் பேசும் அரசியல் மொழி சாதாரண மக்களுக்குப் புரியாதிருக்கிறது.
-இந்த நாடு,ஒட்டு மொத்த மக்களுக்கும் நன்மை தரும் ஒரு நல்ல மாற்றத்துக்கான பசியோடிருக்கிறது.
– பிரித்தானிய அரசியல் வாதிகள்,புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வந்து குடியேறியிருக்கும் மக்களைப் பிரித்தானியாவின்’ஒரு பெரிய பிரச்சினையாகப்’ பார்க்கிறார்கள்.
-எங்கள் நாடு பல்லின மக்களை உள்ளடக்கிய பெரிய சமுதாயம்அதில் அத்தனைமக்களுக்கும் சமத்துவம் இருக்கவேண்டும்
-1945ல் வந்ததுபோல்,1979ல்; பெரிய மாற்றங்களை அரசியல்வாதிகள்; கொண்டுவரவேண்டும்’.
இப்படிப் பல கோரிக்கைகளை வைத்துச் சமயத்தலைவர்கள்; கடிதம் எழுதிப் பிரசுரித்திருக்கிறார்கள்.இரண்டாம் உலக யுத்தத்தின்பின் 1945ல் தொழிற்கட்சி பதவிக்கு வந்தது. எண்ணிக்கையற்ற மக்கள் போரின் கொடுமையால் அங்கிவீனமானவர்களாகவிருந்தார்கள். ஹிட்லரின் குண்டுத் தாக்கதல்களால் பல்லாயிரக்கணக்கான வீடுகள்,கட்டிடங்கள் நாசமாகின.பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவையாகினார்கள்.பெருந்தொகைக் குழந்தைகள் அனாதைகளாகியிருந்தார்கள். அப்போது,பிரித்தானிய காலனித்துவத்தைக் கட்டிக்காக்க ஏராளமாகச் செலவளிக்காமல்,பிரித்தானிய சாதாரண மக்களுக்கு நன்மை செய்யவும், சகாதார சேர்விஸ், ஏழைகளுக்கு உதவிப்பணம்,அரசாங்க வீட்டு வசதி என்பன போன்ற சமுதாயத்தை மாற்றியமைத்த பல சட்டங்களைத் தொழிலாளர் கட்சி பதவிக்கு வந்ததும் கொண்டு வந்தது.காலனித்துவ நாடுகளுக்கச் சுதந்திரம் கிடைத்தது.
1979 ல் மார்க்கிரட் தச்சர் பதவிக்கு வந்து, அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து பொருளாதார வளர்ச்சிக்கும், சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் இடையூறு கொடுத்த பல தொழிலாளர் சங்கங்களுக்கு எதிராகப் பல சட்டங்களைக் கொண்டுவந்தார்.
இப்படியான,அடிப்படை மாற்றங்களைச் செய்து பொது மக்களின் வாழ்க்கையை முன்னேற்றாமல்,ஒரு குறிப்பிட் பொருளாதார சிந்தனைக்குள் அரசியல் செய்வது மனித தர்மத்துக்கு எதிரானது சமயத்தலைவர்களின் வாதங்களில் ஒன்றாகும்.
பொருள் வளம் படைத்த மன்னர்கள்,நிலப் பிரபுத்துவ வாதிகள், பெரிய வர்த்தக தனவந்தர்களால் ஆட்டிப்படைக்கப் படட அரசியலமைப்பு, இன்று,சாதாரண மக்களின் வாக்குகளில் தங்கியிருக்கும்போது அந்த மக்களைப் பல தவறான பிரசாரங்களால் திசைதிருப்பி ஆதாயமடைவது அரசியல் நியமல்ல,அது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் புராதான ஒழுக்க மரபுக்களுக்கு ஒப்பாதது என்பது மதத் தலைவர்களின் கருத்தாகும்.
நாட்டின் பொதுச் செல்வத்தை ஒட்டு மொத்தமாக எல்லா மக்களுக்கும் பயனடையப் பாவிக்காமல்,பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் கோடி கோடியாய் உழைக்கும் பணக்காரர்களுக்கும், வங்கிவைத்துக் கொள்யைடிக்கும் மனிதர்களுக்கும்,வரி கட்டாது ஏமாற்றும் கேவலமான முதலாளிகளுக்கும் எதிராக இப்படியான கருத்துக்களைச் சொல்லும் மதத்தலைவர்கள் இடதுசாரிகளா,அவர்களின் தத்துவங்களுக்குப் பின்னாலிருக்கும் ‘கடவுள் ஒரு இடதுசாரியா’? என்ற விவாதம் தொடர்கிறது.