நடைமுறைகாலத்துப் பெண்ணியச் சிந்தனைகள்

நடைமுறைகாலத்துப் பெண்ணியச் சிந்தனைகள் (1)

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

நடைமுறைக் காலத்துப் பெண்ணியவாதச் சிந்தனைகளையும் கருத்துக்களையும்; பற்றி விவாதிப்பதற்கு முதற்கண்ணாக, எப்படி பெண்ணியவாத சிந்தனைகள் உருவாகின, மாற்றமடைந்தன, பெண்ணியவாக் கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும், பெண்களுக்கும் அவர்கள் சார்ந்திருந்த சமுதாயங்களுக்கும் கிடைத்த அரசியல், பொருளாதார,சமுதாய மாற்றங்களைப் பற்றி ஆராய்வது இன்றியமையாத விடயமாகும்.
பெண்ணிய செயற்பாடுகளின் அடிப்படைத் தத்துவம்,’பெணிணியவாதம் என்பது, ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்களைச்சுற்றியிருக்கும் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடவும், அதேபோல்,இன, சாதி, மத, சமய, பொருளாதார விடயங்களில் ஒடுக்கப்படும் ஒட்டுமொத்த மக்களுக்கும், ஆண்பெண் என்ற பேதமற்ற போராட்டங்களை முன்னெடுக்கும் முற்போக்கு சிந்தனையாகும். இந்தக் கோட்பாட்டில் 18, 19;, 20ம் நூற்றாண்டுகளில், உலகம் பரந்து நடந்த பல தரப்பட்ட போராட்டங்களிற் முற்போக்குக் கருத்துடைய ஆண்களுடன் பெண்கள தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள்..
ஆனால், தற்போதைய நடைமுறைக்கால பெண்ணியவாதச் சிந்தனைகள்; என்பவை மேற்குறிப்பிட்ட இறுக்கமான ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தத்துவங்களுக்குள் அமைக்கப்பட்டதல்ல. மேற்கு நாடுகளில் பெண்ணியவாதக்கருத்துக்கள் பற்றிப் பேசுபவர்களிடம் எதற்காகப்போராடுகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடமிருந்து பலதரப்பட்ட அபிப்பிராயங்களை எதிர்பார்க்கலாம். ஓருசிலர் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் சமத்துவமாக நடத்தப் படவேண்டும் ஆண்களுக்குச்சமமான சம்பளம் தரவேண்டும் என்று சொல்வார்கள். வேறுசிலர், இன,மொழி, சமயப் பாகுபாடுகளுக்கு எதிராகப்போராடுவதாகச் சொல்வார்கள். அரசியலில் பெண்களுக்கு சமத்துவம் பேசுபவர்கள், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு மேலதிக இடம் தரவேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார்கள். உலகமயப்படுத்தலால் வளரும் நாடுகளில் பெண்களின் உழைப்பு மேற்கத்திய முதலாளித்துவத்தால் சுரண்டப்படுகிறது என்பதைக் கண்டிப்பவர்கள் அந்தவிடயங்கள் பற்றிய வாதங்களை முன்வைப்பார்கள். குடும்பத்துக்குள் நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறையைக்கண்டித்துப்போராடுபவர்கள் அந்த விடயத்தில் கவனம் செலுத்துவார்கள்.
இவற்றையும் விட. இன்னும் சிலர் தங்கள் பாலியல் சமத்துவம் பற்றிய கருததுக்களை முன்வைப்பார்கள். இன்று உலகில் பல நாடுகளில் பெண்களைக்கடத்திப் பாலியல்த் தொழிலில் ஈடுபடுத்தும் கொடிய நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் பெண்கள், அதற்கெதிரான சட்டதிட்டங்களைக் கொண்டுவரவேண்டும் என்று குரல் எழுப்புவார்கள். எனவே நடைமுறைகாலப் பெண்ணியவாதங்கள் என்பன பல தரப்பட்டவை, பல கோணங்களில் பரிசீலனை செய்யப்படவேண்டியவை என்பதை மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடரலாம் என் நினைக்கிறேன்.
மனித நாகரிகம் தற்போதைய நிலைக்கு வளரமுதல் மனிதர்கள் கூட்டமாக வாழ்ந்தார்கள். அந்தக் கூட்டங்களுக்குப் பெண்கள் தலைவிகளாக வாழ்ந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையென்பதைப் பல அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தின் பாதுகாப்பு, தலைவியின் ஆளுமையிலமைந்திருந்தது. பெண்ணியவாதத்தின் மூலமே பெண்களின் வாழ்வாதாரப்போராட்டத்தின் அடிப்படையிற் தொடங்கியிருக்கலாம் என்று எடுத்துக்கொண்டால் அந்தக் கருத்துத் தவறாகாது என்பது பலரின் கருத்து. அதாவது, ஒரு பெண்ணின் போராட்டம் என்பது அந்தக்காலத்தின் தனது பாதுகாப்பையும் தனது கூட்டத்தின் பாதுகாப்பிலும் தங்கியிருந்தது. பல்லாயிரம் ஆண்டுகள் காலமாகப் பல தரப் பட்ட சமூகங்களிலும் மிகவும் உயர்ந்த நிலையில் பெண்கள் கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்று இந்தியாவில் பெண்தெய்வ வழிபாடு முக்கியமாகவிருப்பதுபோல், மேற்கு நாடுகளில பல விதமான சமய வழிபாடுகளிலும் பெண்தெய்வங்கள் முக்கிய இடம் பெற்றிருந்தது சரித்திரமாகும்.
மனித நாகரித்தின் ஆரம்ப கால கட்டத்தில் பெண்கள் ஏன் முக்கிய இடம் பெற்றிருந்தார்கள் எனபதைப் புரிந்து கொள்வதும், நாடுகள், நகரங்கள், மனித வாழ்க்கையின் வாழ்வாதரத்துக்கு இன்றியமையாத நதிகள் என்பன பெண்களின் பெயரில் அழைக்கப்பட்டன என்பதையும் மனித குல தெய்வ வழிபாடுகளின் மூலக்கருத்துக்களுடன் ஆராயவேண்டும். பல நாகரீகம் வளர்ந்த சமுதாயங்களில (கிரேக்க, உரோம, இந்திய) காதற்தெய்வம், போர்த் தெய்வம், இயற்கையின் ஐம்பெரும் பூதங்கங்களில் முக்கியமானதான பூ மாதாவும் பெண்களாகப் பூஜிக்கப்பட்டார்கள்.
நிலப் பிரபுத்துவ ஆளுமையால் ஏற்பட்ட பல விதமான சமுதாய, பொருளாதார, சமய, வர்க்க மாற்றங்களால், பெண்களுக்குச் சமுதாயத்திலிருந்த உயர்விடம் மாற்றமடைந்தது. நாகரீகம் வளர வளர, ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை விட உயர்ந்து வாழ போர்களும் மற்ற நாடுகளை அடிமை கொள்தலும் தேவையாகவிருந்தன. ஆண்களின் வீரமும், அறிவும் சமுதாய மாற்றத்துக்கு முக்கியமாகக் கருதப்பட்டன. இந்த மாற்றத்தின்போது, பழைய கோட்பாடுகள் ஓரம் கட்டப்படுவதும் பதிய கோட்பாடுகள் முன்னெடுத்தலம் இன்றியமையாததாகவிருந்தன. பெண்தெய்வ வழிபாடு ஒரு பிற்போக்கு வாதமாகவும், ஆண்கடவுளைத் தவிர வேறோன்றும் இல்லை கோட்பாடு;ம் முன்னெடுக்கப்பட்டன. கி;பி 4ம் றூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் உரோம அரசஅதிகார மதமாக உருவெடுத்தபோது பெண்தெய்வ வழிபாடுகள்; தடைசெயயப்பட்டன. இந்த நவகால மதங்கள் உலகிற் பரவுதலுக்குப் பெண்கள் செய்த பணிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கிறிஸ்தவ மதம் மேற்கத்தியரின் முக்கிய சமயமாக காரணியாக இருந்தவர் இயேசுவின் பெண்சீடனான மேரி மக்டலினாகும். அவர், இயேசு சிலுவையில அறையப்படும்வரை இயேசுவின் தாயாரான புனித மேரியுடன் அங்கு நின்றிருந்தார் என்றும,; இயேசுவின் காலடியில் கிடந்து பிரார்த்தனை செய்தார் என்றும் வரலாறுகள் சொல்கின்றன. அத்துடன், இயேசு உயிரெழுந்ததையும் அதை இயேசுவின் சீடர்களுக்குச் சொல்லி ‘கிறிஸ்தவம் பிறக்கக் காரணியாக இருந்த முக்கிய பெண் என்று தற்கால ஆய்வாளர்கள் சிந்திக்கிறார்கள் அதுபோலவே, 6ம்நூற்றாண்டில், அக்காலத்தின் முக்கிய கிறிஸ்தவ இராஜதானியாகவிருந்த ‘கொன்ஸ்ரைன் ‘நகரின் (இன்றைய இஸ்தான்புல்) அரசியாக இருந்த தியோடோரா மகாராணி அவர்கள், கிறிஸ்தவ சமயத்தில், இயேசுவின் தாயாருக்குப்புனித இடம் கொடுத்துப் பெண்தெய்வழிபாட்டைச்செய்தார் என்றும், இவர்காலத்தில் உண்டாக்கப்பட்ட பல நேர்மையான சட்டங்கள்தான் இன்று மேற்குலகில் நடைமுறைக்கு இருக்கிறதென்பதையும் பெண்ணிய வரலாறு ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள்.
அதுபோலவே, இஸ்லாம் மதம் உலகெல்லாம் பரவுவதற்று இஸ்லாத்தின் காரணகர்த்தாவாக இருந்த மொகமது நபிகளின் முதல் மனைவியான கதிஜா அம்மையார்தான் முக்கியபேர்வழியாக இருந்ததாக இன்றைய பெண்ணிய ஆய்வாளர்கள் (திருமதி லைலா அஹ்மெட்- ஹார்வார்ட் பல்கலைக்கழகம்) சொல்கிறார்கள். முகமது நபிகளின் திருவார்த்தைகள் எழுதப்படவும், மக்களிடையே பரவுதலுக்கும் பெரிய செல்வந்தரும் சுதந்திர சிந்தனையும், நேர்மைக்குப்பெயர்போனவருமான கதிஜா அம்மையாhர் முதற்கண்ணாக இருந்தார் என்பது பெண்ணியவாதிகளாற் தெரிந்து கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.
காலப்போக்கில், அன்றைய கால நிலப் பிரபுத்துவ முறையிலான சமுதாயத்தில் பெண்கள், ஆண்களின் உடைமையாகக் கருதப்பட்டார்கள். நவீன கால, நடைமுறையுலகின் அரசியல வரலாற்றை மாற்றிய ஐரொப்பிய சமுகத்திலும் இந்த வழிமுறை 18ம் -19ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. மேற்கு நாடுகளில் கைத்தொழிற் புரட்சியும் அமெரிக்காவில் பெரிய ஆலைகளில் ஏழைப்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படும் வரையும் சமுதாயத்தில் பெண்களின் நிலையில் ஒரு பெரிய மாற்றமும் நடக்கவில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெண்கள் மகாராணிகளாகவிருந்தாலும்,  (முதலாவது எலிசபெத் மகாராணி, விக்டோரியா மகாராணி) சமுதாயத்தில் பெண்களின் நிலைமாறவில்லை.
பெண்ணிய சிந்தனைகளுக்கும் அதன் அடிப்படையில் நடந்த பல மாற்றங்களான, பெண்களின் கல்வி, அரசியல், பொருளாதார, சமுதாய மாற்றங்களுக்கும் மூலகாரணிகளாகவிருந்தவை, ஐரோப்பிய முற்போக்குவாதிகளால், 18ம் 19ம் றூற்றாண்டுகளில் (முக்கியமாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்);, முன்னெடுக்கப்பட்ட பலதரப்பட்ட அரசியல், சமுதாய, கலாச்சார மாற்றுக் கருத்துக்களும் அந்த நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களுமாகும்.
முதலாவது பெண்ணியப் போராட்ட வரலாறு:
சமுதாயத்தில் முற்;போக்கு மாற்றுக் கருத்துக்கள் உருவாக, ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்க சக்திகளான அரசபரம்பரையினரின் ஆடம்பரமான வாழ்க்கை முறையும் அதற்காக அரசர்கள், சாதாரண மக்களின் மேற் திணித்த கொடுமையான வரிச்சுமைகளும் காரணிகளாகவிருந்தன. இவை, அரச பரம்பரையை எதிர்த்த போராட்டங்களாகும். முதலாவது, பெண்ணியப்போராட்டத்தைப் (1882-1920); புரட்சிகரப் பெண்கள் போராட்டம் என்று பலர் குறிப்பிடுவார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் பலம் மிகுந்த சக்திகளான அரச ஆதிக்கத்தின் பொருளாதார சுரண்டலைத் தாங்க முடியாத மக்களால், அரசுக்கு எதிராக, அமெரிக்கா, பிரான்ஸ், இரஷ்யா போன்ற நாடுகளில் புரட்சிக் குரல்கள் எழுந்தன. பிரித்தானிய அரசு, தனது காலனி நாடான அமெரிக்காவிடம் அதிகப்படியான வரியைக் கட்டச்சொல்லி உத்தரவு போட்டதால் அமெரிக்காவில் விடுதலைப் போராட்டம் நடந்தது (1777-1789). இப்போராட்டத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது. பிரித்தானியருக்கெதிரான போராட்டத்தில் தங்களையிணைத்துக்கொண்ட பெண்கள் பிரித்தானிய இறக்குமதிகளான துணிவகை போன்றவற்றைப்; பகிஸ்கரித்தார்கள் (இந்திய சுதந்திப் போராட்டத்தில் நடந்ததுபோல்). தங்களுக்குத்தேவையான தணிகளைத் தாங்களே தயாரிக்க முன்வந்தார்கள். விடுதலைப்போராட்டத்தில் ஆண்களுடன் தங்களையிணைத்தார்கள். டேப்ரா சாம்சன் போன்ற பெண்கள் ஆண்களைப்போல் மாறுவேடம் போட்டு விடுதலைப் போராட்டத்திறகாக உழைத்தார்கள். அடக்குமுறை அரசான பிரித்தானியருடன் தொடர்பு வைத்திருந்த கணவரை விவாகரத்து செய்யும் சட்டம் றடைமுறைக்கு வர முன்னோடியாகவிருந்தார்கள்.
அமெரிக்கா சுதந்திரம் பெற்றபின் அமெரிக்க மக்கள் அத்தனைபேருக்கும் விடுதலை கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முற்போக்குவாதிகளால் முன்வைக்கப்பட்டது. ‘சோயுனா ட்ருத்’ (1797-1883) என்ற கறுப்பு அடிமைம்பெண், (உண்மையான அடிமைப் பெயர்;, இசபெல்லா) கறுப்பு மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார்.
1865ல் அடிமைகள் முறை அமெரிக்காவில் ஒழிக்கப்பட்டாலும், கறுப்பு மக்களை அடிமையாக வைத்திருந்த, அமெரிக்காவின் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான (பிரித்தானிய) தனவந்தர்கள் இதை ஆதரிக்கவில்லை. இதனாலும் வேறு பலகாரணங்களாலும் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் தென்பகுதி அமெரிக்கருக்கும் முற்போக்குவாதத்தை ஆதரித்த வடக்குப் பிராந்திய அமெரிக்கருக்கருக்கும் உள்நாட்டுப்போர் தொடர்ந்தது (1881-1865). இந்தப் போரில் அன்றைய காலத்து அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஆபிரகாம் லிங்கனின் தலைமையில் போராடிய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றார்கள். அதைத் தொடந்து, கறுப்பு மக்களுக்குச் சமத்துவம் கிடைக்கப் பலர் பேராடினார்கள். இவர்களின் போராட்டம்தான், பெண்களும் தங்கள் விடுதலைக்குப் போராட முன்னோடியாவிருந்ததாகச் சரித்திரச்சான்றுகள் கூறுகின்றன. இந்தக்கால கட்டத்திற்தான், அமெரிக்காவிலிருந்த இனப்பாகுபாட்டுக்கொடுமையை மையமாக்கிய ‘ த அங்கில் ரொபின் கபின்’ என்ற நாவல் (1852) ஹரியட் பீச் ஸ்ரோவ் என்ற பெண்மணியால் எழுதப்பட்டது என்பதைப் பெண்ணிய ஆக்க பூர்வமான இலக்கியப்படிக்க முனைபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, தொழிலாளர் வேலை நிறுத்தம் 1857ல், தொழிற்சாலைகளில் பாதுகாப்பான நிலை கேட்டுப்போராடிய அமெரிக்கப்பெண்களாற் தொடங்கப்பட்டது.
அமெரிக்காவில் இங்கிலாந்து மன்னரிடமிருந்து விடுதலை பெற மக்கள் போராடிய மாதிரிப் பிரான்சிலும் மக்களுக்கெதிரான பல கொடுமையான வரிகளைப் போட்ட மன்னரை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்தார்கள். பிரான்சிய நாட்டில்,பதினாறாம் லூயிம் அவர் மனைவியான மேரி அன்ரோனட்டும் தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்குப் பணம் தேடி சாதராண மக்களிடம் அதிகப்படியான வரியைப்போட்டார்கள் இதைத்தாங்க முடியாத மக்கள் கொதித்தெழுந்தார்கள். அரசுக்கெதிராக மக்கள் போரடினார்கள் (1789-99);. அமெரிக்க சுதந்திர போராட்டம் மாதிரியே பிரான்சிய சமுதாய மாற்றப் போராட்டத்திலும் பெண்களின் பங்கு முக்கிமானதாகும். போராட்டத்தில் பிரான்சிய பெண்கள் தங்களையிணைத்துப் பேராடினார்கள். பெண்ணியவாதத் தத்துவம் என்பது பெண்கள்,’தங்களுக்கெதிரான கொடுமைகளுககெதிராக மட்டுமல்ல, தாங்கள் சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்கும் போராடுவதாகும்’ என்ற கோட்பாட்டில்; வளர அடித்தளம் போட்டது.
பிரான்சிய பொருளாதார, சமுதாய மாற்றப் போராட்டத்தில் தங்களையிணைத்துக்கொண்ட பாரிஸ் நகரப் பெண்கள், ‘; விடுதலை,சமத்துவம்,ஆண்பெண் என்ற வேறுபாடற்ற சகோதரத்துவ ஒன்றிணைப்பு’ என்று கோஷம் போட்டுக்கொண்டு, மன்னரின் வாஸஸ்த்தலமான வேர்ஸைல்ஸ் மாளிகையை முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகை தொடங்கி ஒருசிலநாட்களில் பிரான்சிய அரசர் மக்களாற் தூக்கியெறியப்பட்டார். ஐரோப்பாவில் பல நாடுகளில் மக்களாட்சி வர பிரான்சிய புரட்சி முன்னோடியாகவிருந்தது.
(தொடரும்)

நடைமுறைகாலத்துப் பெண்ணியச் சிந்தனைகள் (2)
– இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தம் (1881-85) நடந்த பின் பல சமுதாய, பொருளாதார மாற்றங்கள் நடந்தன. பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இத்தொழிற்சாலைகளில் வேலை செய்த பலர் ஐரொப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பிழைப்பு வந்த இத்தாலிய, யூத ஏழைப்பெண்களாகும். இவர்களுக்கு, எந்த விதமான தொழலாளர்களுக்கான சலுகையும் கிடைக்கவில்லை.

அக்கால கட்டத்தில் இரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் தொழிற்சாலைகளில் வேலைசெய்த பல ஆண்களும் பெண்களும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினார்கள். 1905ம் ஆண்டு, இரஷ்ய மக்கள், அரச ஆதிக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். இரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பெரிய போர் நடந்து கொண்டிருந்தது. இரண்டுகோடி இரஷ்ய துருப்புக்கள் போர்க்களத்தில் மடிந்தார்கள். தொடரும் போரல், இரஷ்யாவில் பொருளாதாரப் பிரச்சினையும் வறுமையும் மக்களை வாட்டியது. அமெரிக்கப் புரட்சி, பிரான்சிய புரட்சி மாதிரியே, இரஷ்ய புரட்சியிலும் பல்லாயிரக்கான பெண்கள் பங்கெடுத்தார்கள்.

இதே கால கட்டத்தில், தென் அமெரிக்காவில், வெள்ளையினக்கொடுமைக்கெதிராகக் காந்தியடிகள் போராடினார் என்பதையும், அவருக்கு முன்னோடியாயிருந்தவர், தென்ஆபிரிக்கத் தேயிலைத் தோட்டப் போராட்டத்தில் சத்தியாக்கிரகப்போராட்டம் நடத்திய தமிழ்ப்பெண்மணி வள்ளியம்மையார் என்பதை மறக்கக்கூடாது. ஆண்கள் எழுதும் சரித்திரத்தில் பெண்களின் பெயர்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்படுகிறது என்பதை நினைவில் வைக்கவும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் (1910ல்) பெண்களுக்கான வாக்குரிமைக்கான போராட்டமும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் போராட்டங்கள் மத்தியதர வர்க்கத்தும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டது. 1909ம்; ஆண்டு, முதலாவது, அகில உலக பெண்கள் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் பல தொழிற்சாலைகள் உருவாகிக்கொண்டிருந்தன. வேலை செய்யும் பெண்களின் நிலையில் எந்த விதமான முன்னேற்றம் கிடைக்கவில்லை. 1911ம் அமெரிக்க தொழிற்சாலையில் நடந்த பெரும் தீயினால் 140 பெண்கள் இறந்தார்கள். இதைத்தொடர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தால், பல தொழிற்பாதுகாப்புச்சட்டங்கள் அமுலுக்கு வந்தன. உலகின பல பகுதிகளிலும், முற்போக்கு சிந்தனையாளர்களான கார்ல் மார்க்ஸ் (1818-1883), ப்ரடறிக் ஏங்கல்ஸ் போன்றோரின் அரசியல், பொருளாதாரம் பற்றிய கருத்துக்கள், சாதாரண மக்களின் சிந்தனையில் பல தரப்பட்ட மாற்றங்கள் உண்டாக்கும் காரணிகளாக அமைந்தன.

1914ம் ஆண்டு, முதலாவது உலக யுத்தம் வெடித்தது. உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்காவர்கள் இறந்தார்கள். அமெரிக்காவில் பல்லாயிரம் பெண்கள் போருக்கெதிராகக் குரல் கொடுத்துப் போராடினார்கள். றோசா லக்ஸம் பேர்க் (1871-1919) போன்ற முற்போக்குவாதிகள், ஜேர்மனியில் உள்ள முற்போக்குவாதிகளுடன் இணைந்து போருக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் ஜேர்மனியஅரச தரப்பால் கொலை (1919) செய்யப்படடர்.
1917ம் ஆண்டு ஆயிரக்கான பெண்கள் செயினட் பீட்டர்ஸ்பேர்க் நகரின் அரச மாளிகைக்கு முன், ; ‘ நாங்கள் வாழ்வதற்கு அமைதியும் சாப்பாட்டுக்குப் பாணும் தேவை’ என்ற கோஷத்துடன் போராட்டம் நடத்தினார்கள். பிரான்சில் நடந்தது போல், இந்தப் போராட்டம் தொடங்கிச் சில நாட்களில் இரஷ்ய மன்னர் ஷார் தூக்கியெறிப் பட்டார். அதைத் தொடாந்து 1917ம் ஆண்டில் இரஷ்யாவில் பொதுவுடமைக்; கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் பிரதி பலிப்பால் பல நாடுகளில், அரசியல ரீதியான பல மாற்றங்கள் நடந்தன.
மேற்கு நாடுகளில, எமிலி பாங்கேஸ்ட்,சில்வியா பாங்கேஸ்ட் போனறோரின் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற போராட்டத்தால் 1920 ஆண்டு பெண்களுக்க வாக்குரிமை கிடைத்தது. முதலாம் உலக யுத்தத்தில் பல்லாயிரக்கான ஆண்கள் இறந்ததாலம், போர்க்காலத்தில் வெளியில்; சென்று வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்ததாலும் பெண்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
இக்கால கட்டத்தில் இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் கோடிக்கணக்கான பெண்கள் ஈடுபட்டார்கள். அயர்லாந்து விடுதலைப்போராட்டத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் தன்னையிணைத்துக்கொண்ட, அன்னிபெசன்ட் அம்மையார், இந்தியாவுக்கு வந்ததும், காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தம் வகித்ததும இக்கால கட்டமே. இந்திய விடுதலை நடந்த கால கட்டத்தில் (1920-47), இலங்கையிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவிருந்த நடேச அய்யரும், அவரின் மனைவியான மீனாட்சியம்மாளும் செய்த பணிகளை இலங்கைப் பெண்கள் தெரிந்து கொள்ளல் நன்று. பெண்களின், முதலாவது, போராட்டகாலத்தில் அவர்களின் கோரிக்கைகளாகவிருந்தவையிற் பெரும்பான்மையானவை யாயிருந்தவை, பெண்களுக்கான வாக்குரிமை, வேலைகளில் சமத்துவமான ஊதியம், மனித உரிமை, இனபேதமற்ற மனித உரிமை போன்றவையாகும்.

ஓரு நீண்ட காலப்போராட்டத்தின் மூலகாரணிகள் பெண்ணியவாதிகளால் விதைக்கப்பட முற்போக்கு ஆண்களும் ஒன்றிணைந்து போராடினார்கள் என்பதை மறக்கக் கூடாது. அமெரிக்காவின் இனக்கொடுமைக்கெதிராக, வெள்ளையினப் பெண்மணியான ஹாப்பர் லீ என்பவர் எழுதிய ‘த கில்லிங் ஒவ் மொங்கிங்பேர்ட்’ என்ற நாவல் (1961) அமெரிக்க முற்போக்குவாதிகளை இனப் பாகுபாட்டுக் ; கொடுமைக்காகக் குரல் கொடுக்கத் தூண்டியது.
1950;ம் ஆண்டுகளில் அமாரிக்காவில், இனக்கொடுமைக்கெதிரான போராட்டம் வெடித்தது. இதில் றோசா பார்க் என்ற பெண்மணியின் பங்கைப் பெண்ணியவாதிகள் தெரிந்திருப்பது முக்கியம். இதைத்தொடர்ந்து நடந்த போராட்டம் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் பேரலையாகி அமெரிக்காவை உலுக்கியது. இன்று, அமெரிக்hகவில் ஒரு கறுப்பு ஜனாதிபதி வருவதற்கு றோசாபார்க் போன்றோரின் போராட்டமே முதற்கண்ணாகவிருந்தது. அத்துடன், கறுப்பு இனப் பெண்ணிய எழுத்தாளர்களான ரோனி மோரிசன்,அலிஸ் வால்க்கர் கோன்றோரின் எழுத்துக்கள் ,அமெரிக்காவில் நடக்கும் இனப் பாகுபாடுகளை மையப்படுத்திப் பல படைப்புக்களைப் படைத்தார்கள்.
இரண்டாம் அலையாகக் கிளம்பிய பெண்ணியவாதச்சிந்தனைகள்
19ம நூற்றாண்டின் கடைசிப்பகுதியில், ஐரோப்பிய நாடுகால்; அடிமைகளாக வைத்திருந்த நாடுகளின் எழுந்த சுதந்திர உணர்வுகள், அமெரிக்க உள்நாட்டுப்போரும் அதைத் தொடர்ந்த மிக பெரிய தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் தொழிலார்களின் பிரச்சினைகள், இரஷ்யாவில் மன்னருக்கு எதிரான போராட்டம்,முதலாம் உலக யுத்தமும், அதைத்தொடர்ந்து மேற்கு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதாரப்பிரச்சினையும் மார்க்ஸியம் மேற்குலகில் வளரும் பல காரணிகளில் ஒன்றாகவிருந்தது.

இங்கிலாந்தின் தொழிற்கட்சி 1900 ஆரம்பித்தாலும் 1924 வரைக்கும் அவர்களால் பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முடியவில்லை. 1929ம்; ஆண்டில் முதலாவது பெண் மந்திரியாகத் தொழிற்கட்சியைச்சேர்ந்த மார்க்கிரட் பொண்ட்பீல்ட் தெரிவு செய்யப் பட்டார். 1922ல் அமெரிக்காவில் ;வால் ஸ்ரீட்’ வீழ்ச்சியால் மேற்கு நாடுகள் மிகவும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. 1939ல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இங்கிலாந்தில் தொழிற்கட்சியினர் இங்கிலாந்துக் காலனித்துவ நாடுகளுக்குச் சுதந்திரம் கொடுக்கச் சொல்லி வாதாடினார்கள். முன்னேற்றக்கருத்துள்ள பெண்கள் பல நாடுகளுக்குப் பிரயாணம்; செய்து பல விடயங்களை உணர்ந்தார்கள். பெண்கள் விடுதலைக்கும், புதிய சமூகப் பார்வையுண்டாகவும் காரணிகளாகவிருந்தார்கள்.

இரண்டாம் உலக யுத்தம் வெடித்ததால் (1939-1945), பெண்களின் வாழ்க்கையில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித சரித்தித்தில் இதுவரை கண்டிராத மாற்றங்களைக் கொண்டுவந்தன. 1945ல் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்களின் சமத்துவத்தையும் நன்மைகளையும் முன்வைத்த விஞ்ஞாபனம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில், சரோஜினி நாயுடு, விஜயலக்சுமி பண்டிட் போன்ற பெண்கள் உலகம் தெரிந்த பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள்( ஐக்கிய நாடுகள் சபை). ஐரோப்பிய வெள்ளையரின் அடிமை நாடுகளாகவிருந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. இக்காலகட்டத்தில் பிரான்சியரின் அடிமை நாடாகவிருந்த அல்ஜீரிய நாட்டு விடுதலைக்காப் பிரான்சியப் பெண்எழுத்தாளரான சிமோன் டி பூவா பல படைப்புக்களை எழுதினார். பெண்ணியவாதத்தின் பைபிள்’ என்று சொல்லப்படும் இவருடைய த செக்கண்ட் செக்ஸ் என்ற புத்தகம் வெளிவந்து பல சிந்தனையாளர்களிடம் வரவேற்பைப்பெற்றது.
இரண்டாம் உலக யுத்தத்தின்பின் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் பல தரப்பட்ட விழிப்புணர்ச்சிகளும் சிந்தனைகளும் பெருகியதுபோல் வியாபாரத் துறையிலும் இலாப வேட்கைக்கான போட்டி தொடங்கியது. பெண்களின், ஆசைகள் அத்தடன் தங்கள் உடம்பின் கவர்ச்சியைக் காட்டவேண்டும் என்ற ஆசை, சினிமா, விளம்பரம் அத்துடன் ஊடகவாதிகளாலும், ‘பெண்களின் உடல்’ வியாபாரத்தின் அடிப்படை அம்சத்தில் ஒன்றாகப் புதிய பரிமாணம் எடுத்தது.
1888ம் (பெல்ஜியத்தில்); ஆண்டிலிருந்து பெண்களின் உடலழகைக் காட்டப் பல நாடுகளிலும் பல தரப்பட்ட அழகு ராணிப்போட்டிகள் நடந்தாலும் ;உலக அழகு ராணிப்போட்டி 1951ல் லண்டனிற் தொடங்கினார்கள். ஆண்களின் இச்சைகளைப் பிரதிபடுத்தியும், ஆடம்பரப் பொருட்களை விற்பதற்காகவும் பெண்ணுடலை வியாபாரமாக்கும்  அழகுராணிப்போட்டியைப் பெண்ணியவாதிகள் எதிர்த்தார்கள். ஆனாலும், பெருவாரியான ஆடம்பரப் பொருட்கள, மேக் அப் பொருட்;கள் மட்டுமன்றி சுகாதாரத்தைப் பாதிக்கும் சிகரெட் வரை பெண்களைக் குறிவைத்துத் தயாரிக்கப்பட்டன. பொருளாதார சுதந்திரமுள்ள பெண்களால் இப்பொருட்கள் பெருவாரியாக விற்பனையாகின. பெண்களின் மத்தியில் உண்டாகும், தனித்துவ மேப்பாட்டு உணர்வைச் சரியாகக் கண்டு கொண்ட வியாபாரத்தில் ஆதாயம் மட்டும் என்ற கொள்கைகளுடைய ஆண்வர்க்கம், பெண்களைக் கவரும் அழகு சாதனங்கள் மட்டுமன்றி வேறு கவர்ச்சித் தளங்களிலும் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள்.
ஓட்டு மொத்த மேற்கத்திய சமுதாயப்பார்வையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பலநாடுகளிலும் பல தரப்பட்ட குடியேற்றங்கள் நடந்தன. ஐரோப்பிய காலனித்துவ நாடுகளிலிருந்து பலர் மேற்கு நாடுகளக்குக் குடியேறினர். அவர்களுடன் அவர்களின் கலை கலாச்சாரம், மதம், உணவு வகைகள் போன்றவையும் கொண்டு வரப்பட்டன. கறப்பு மக்களின் இசையென ஒருகாலத்தில் தடைசெய்யப் பட்டிருந்த ஜாஸ் இசை வெள்ளையர்களின் கருத்தைக்கவர்ந்தது. அதேபோல், ‘உயர்ந்த கலைகள் என்று மேற்கத்திய நாடுகளால் வளர்க்கப் பட்ட, ‘பால்றூம் நடனம், ஓபரா இசைநாடகங்கள்’ என்பனவற்றிக்க அப்பால் சாதாரண மக்களின் கலைகள் வளரத் தொடங்கின. அமெரிக்காவில் எல்விஸ் ப்ரஸ்லியும் (1950,றொக் அன்ட் ரோல்), இங்கிலாந்தில் பீட்டில்’பாடகர் குழுவும் புதிய முறையான ‘ஜனரஞ்சகமான பாடல்களைக் கொண்டுவந்தார்கள். இவை உலக மயமான கலைப் புரட்சியுணர்வைக் கொண்டுவந்தது. பழைய ஆங்கிலேயக் கலைகளான’ பால் றூம்; நடனங்களளை 60ம்ஆண்டு பொப்பிசைக்கான நடனங்களும் சால்சா போன்ற தென் அமெரிக்க நடனங்களும் வெற்றிகொண்டன. மேற்கு வர்க்கத்தால் வளர்க்கப்பட்ட கலைகள் மாற்றமடைந்தததுபோல், இதுவரை காலமும் சமுதாயக் கோட்பாடுகளுக்குள் வாழ்ந்து பழகிய சமுதாயம், முக்கியமாகப பெண்களின் சிந்தனையிலும் பல மாற்றங்கள் நடந்தன.

1960ல் உலகில் முதலாவது பெண்பிரதமரை இலங்கை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்திரா காந்தி பிரதமராக வந்தார். பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளில் மட்டுமன்றி ,உலகம் பரந்த விதத்தில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்புக்களில் மிக முக்கிய முன்னேற்றங்கள் நடந்தன. மேற்கு நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தின்போது, பெரும்பாலான ஆண்கள் போருக்குப்போனதால் நாட்டுக்குத்தேவையான அத்தியாவசியமான வேலைகள் பெண்களால் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பெண்கள் வீட்டைவிட்டு வெளியேவந்து வேலை செய்து உழைப்பதால் கிடைக்கும் நன்மையை உணர்ந்தார்கள். தங்கள் எதிர்காலத்தின் பொருளாதார பாதுகாப்புக்காகத் திருமணம் செய்து மாரடிக்கத்தேவையில்லை என்பதையுணர்ந்தார்கள்.

பெண்களுக்குக் கிடைத்த, பொருளாதார, சமுதாய சுதந்திரத்தால் அவர்களின் பெண்ணியவாதச் சிந்தனைகளில் மாற்றமும் கோரிக்கைகளில் பல மாற்றங்களும், 1960-70ம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்டன. பெண்ணியவாதம் என்பது ஆண்களுக்கு எந்த விதத்திலும் கட்டுப்படாதது என்று சொல்லிய ஒரு பெண்ணியவாதக்கூட்டம் ‘ஓரினச்சேர்க்கைக்கு’ 1970 ஆண்டுகளில் முன்னிடம் கொடுத்தார்கள்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் அளவிடமுடியாத சமுதாய, பொருளாதார,சிந்தனை மாற்றங்கள் நடந்தன. அரசியலில்,1950ம் ஆண்டுகளில், உலகின் இரண்டு மாபெரும் அரசியற் சிந்தனைகளான முதலாளித்துவமும் (மேற்கு நாடுகள்) தொழிலாளித்துமும் ( இரஷ்யாவும் அவர்களுடன் சேர்ந்த நாடுகளும்) தங்களின் வல்லமையைக்காட்டத் தங்கள் பனிப்போரைத் தொடங்கியது;. ஆயதப்போட்டி, ஆகாயத்தை (இரஷ்யா ‘லைகா’ என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பியது) ஆளும் போட்டிகள் வலுத்தன. அமெரிக்கா கொரியாவிலும்;, பிரித்தானியர் சூயஸ் வாய்க்காலிலும்(1956) இரஷ்யர் ஹங்கோரியிலும் தங்கள் படைகளைக் குவித்தார்கள்.மேற்கத்திய நாடுகள் சிறுநாடுகளைத் தங்களின் அடிமைகளாக வைத்திருக்குப் புதிய உத்திகளை முன்வைத்தன.
அதிகாரத்திலு இருக்கும் மேறகத்திய ஆண்வர்க்கம் தங்கள் அரசியல் வலிமையைக்காட்டச் சிறு நாடுகளான வியட்னாம்போன்ற நாடுகளைக்கொடுமைசெய்கிறார்கள் என்பதை முன்வைத்து முற்போக்கு பெண்ணியவாதிகள், வியட்நாம் போரை எதிர்த்துப்போராடினார்கள். அமெரிக்க நடிகையான,ஜேன் பொண்டா என்பவர், ‘கம்யூனிச பேபி’ என்று மெரிக்கா முதலாளித்துவத்தால் வையப்பட்டார்.
தொடரும்.

நடைமுறைகாலத்துப் பெண்ணியச் சிந்தனைகள் (3)

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

மேற்கு நாடுகளில் பெண்ணியவாதம், பேரலையாக உருவெடுத்தது. பெண்கள் விரும்பினால், தங்களுக்கு விரும்பாத கர்ப்பத்தைக் கலைக்கச் சட்டம் கொண்டுவரப் போராடினார்கள். விவாகரத்துச்சட்டத்தில், குழந்தைகள் தகப்பனின் பாதுகாப்பிற் கொடுப்பதாக இருந்த சட்டத்தைத் தாய்களுக்குச் சார்பாக மாற்றினார்கள். குடும்பத்தில், கணவர்கள் மனைவியை அடிப்பது கிரிமினல் குற்றம் என்ற சட்டம் கொண்டுவரப் போராடினார்கள். திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதையும், ஒன்றுக்கு மேல்ப் பல ஆண்சினேகிதர்களை வைத்திருப்பதையும், ஓரினச்சோர்க்கையில் ஈடுபடுவதையும், பெண்களின் பாலிய சுதந்திரத்தி ‘அடையாளம் என்று காட்டினார்கள். பெண்களுக்குப் பெருமளவு பொருளாதார சுதந்திரம் கிடைத்ததால், 1960-70ம் ஆண்டுகளில் பெண்ணியவாதப்போராட்டங்கள் இப்படிப் பல புதிய கோரிக்கைககளை முன்வைத்தன. 1977ல் ஆண்டு, ஒக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்தில தங்கள் முதலாவது பெண்கள் விடுதலை ‘மகாநாட்டை நடத்தினார்கள்.
இவர்களின் கோரிக்கைகள் முதலாவது பெண்ணியவாதப்பேரலையின் கோரிக்கைகளையும் மீறி, குடும்ப அமைப்பில் பாலியல் சுதந்திரத்தை, தொழில் செய்யும் இடங்களில் சம்பள சமத்துவத்தை, சமுதாய ரீதியாகப்போருக்கு எதிரான கோரிக்கைகளை முன்னெடுத்தார்கள். இந்தக்கால கட்டத்தில், பெண்ணியவாதிகள், தங்களை, லெஸ்பியன்ஸ் என்றும், அரசியல் பெண்ணியவாதிகள், அதிலும் விசேடமாக சோசலிஸ்ட் பெண்ணியவாதிகள் என்றும் அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.
வளரும் நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பெண்ணியம் பற்றிய பல கருத்துக்களும், சரியானமுறையில் முன்னேடுக்கப் படாமையால் பெரும்பாலான மக்கள் பெண்ணியம் பற்றிப்பேசுபவர்களைப் பற்றிப் புரிந்துகொள்ளாதது, ஒடுக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஆண், பெண் என்ற பேதமின்றி முன்னெடுக்கச் சிரமமாகவிருக்கிறது. இதற்குக் காரணம், பெண்ணியத்தின் இரண்டாம்பேரலைக் காலம் என்று கருதப்படும் 1960-70ம் ஆண்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் ஆண்களின் கைகளில் பேராயுதமாகவிருந்த ஜனரஞசகமாக பத்திரிகைகள் பெண்ணியத்தைத் திரிபு படுத்தி வெளியிட்ட கருத்துக்கள் முக்கிய காரணிகளாகும்.
பெண்ணியவாதத்தின் பன்முகத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளாத அல்லது தெரிந்திருந்தாலும் அதைப்பற்றிய உண்மைகளை மறைப்பதில் ஆர்வம் கொண்ட ஆண் ஊடகவாதிகளால், மேற்கத்திய பெண்ணிய சிந்தனையைப் பற்றி திரிபு படுத்தி எழுதினார்கள். வளரும் நாடுகளில் பெண்ணிய சிந்தனைகள் பரவி தங்களை ஒடுக்கும் சக்திகளுக்குப்போராடாமலிருக்க இப்படியான பிரச்சாரங்கள் விதைக்கப்பட்டன.
மூன்றாவது காலகட்ட (நடைமுறைகால) பெண்ணிய சிந்தனைகள்:
இதன் ஆரம்பம், 1980ம் ஆண்டுகள் என்று சொல்லலாம் .1960-70ம் ஆண்டுகளில் உண்டான பெருவாரியான போராட்டங்களால் பெண்களின் கல்வி, பொருளாதார நிலை மாறியது. அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் முன்னேற்றம் கிடைத்தது. அதேபோல, உலக அரசியலிலும் பெரிய மாற்றங்கள் நடந்தன. சினிமா நடிகனான றொனால்ட் றேகன் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். (1981); இங்கிலாந்தின் அரசியற் சரித்திரத்தில், 1979ம்; ஆண்டு, மார்க்கிரட் தட்சர் பிரித்தானிய முதற் பெண்பிரதமராக (1979) வந்தார். முதலாளித்துவத்தில் மிகவும் ஈடுபாடுள்ள தட்சர், ‘சமுதாயம் ஒன்றும் கிiடாது, தனிமனித தேவைகளதான் முக்கியம்’ என்ற தனது சிந்தாந்தத்;தைப் பரப்பினார். ‘தனிமனிதப்பொருளாதார வெற்றிதான் ஒருமனிதனுக்கும் சமுதாயத்திற்கும்; திருப்தியைத் தரும் மூலகாரணியாகும்’ என்பதை வலியுறுத்தினார். அக்கால கட்டத்தில், அமெரிக்கரின் பிடியிலிருந்த ஈரானில் இஸ்லாமியப்புரடசி (1979) ஏற்பட்டது. அவ்வருடம், இரஷ்யப்படைகள் ஆப்கானிஸ்தானிற:குள் புகுந்தன (மார்கழி 1979).
இப்படியான பல காரணிகளால் பொதுவுடமைக்கருத்தை உடைக்கவும், இரண்டாம் உலக யுத்தத்தின்பின் தளர்ந்திருந்த பிரித்தானிய ஆளுமையின் முக்கியத்துவத்தை, முன்னெடுக்க தட்சர் பல செயற்பாடுகளைச்செய்தார். தென் அமெரிக்காவுக்கு அண்மையிலுள்ள சிறுதீவான பால்க்லண்ட் (மல்வீனா) என்ற தீவு, ஆர்ஜென்டினாவுக்குச் சொந்தமென்று, அர்ஜென்டியனர்களால் ஆளுமைகொள்ள முயன்றபோது, மார்க்கிரட் தட்சர் மிகப்பிரமாண்டமான பிரித்தானியபடையை பால்க்லண்ட் தீவுக்கு அனுப்பி வெற்றிகொண்டார். இதுபற்றிய கேள்வியைப் பிரித்தானியரின் சினேகிதரும் 1981ல் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவருமான, றொனால்ட் றேகன், கேள்வி எழுப்பியபோது, ‘நீங்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றபோது பிரித்தானியாவின் அனுமதியுடனா சென்றீர்களா’;; என்று அதிகாரத்துடன் கேட்டு வாயடைத்தாh.
அதே மாதிரி அதிகாரத்துடன் பிரித்தானிய தொழிலாளிவர்க்கத்தின் மிகப் பெரிய ஆயுதமான சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை (1984-85) மிகக்கொடுமையாக தட்சர் அரசு ஒடுக்கியதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதியில் இறங்கிப் போராடியும் ஒருபலனும் கிடைக்கவில்லை. இதே கால கட்டத்தில், உலக அரசியலிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார் . அமெரிக்காவும் பிரித்தானியாவும் தங்கள் அரசியல் தந்திரங்களால் பொதுவுடமைக் கருத்தின் தாயகமான சோவியத் இரஷ்யாவைச் சின்னாபின்னமாக்கின. 1989ல் மேற்கு ஜேர்மனியையும் கிழக்கு ஜேர்மனியையும் சேர்த்;து வைத்திருந்த பிரமாண்டமான சுவர் உடைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து இரஷ்யப் படைகள் திரும்பிச் சென்றார்கள் (1988-89). பொதுவுடமை என்ற அரசியற் சிந்தாத்தில் மக்களைப் பிரித்து வைத்திருந்த-சிலவிடயங்களில் சேர்த்து வைத்திருந்த கோட்பாடுகள் உடைந்தன.
வளரும் நாடுகளில், மத, இன,தேசிய அடிப்படைத் தீவிரவாதம் வளரத் தொடங்கியது. பங்களாதேஸ் நாட்டில் நடந்த கலவரத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளால் இந்து மக்கள் பட்ட துயரை வைத்து பங்களதேஷ் பெண்ணிய எழுத்தாளர் தஸ்லிமர் நஷ்;ரின் எழுதிய ‘வெட்கம் என்ற நாவலையொட்டி அவர் நாட்டை விட்டோடும்படியான நிலையைத் தீரவாதிகள் உண்டாக்கினார்கள். இந்தியாவில் சீக்கிய பணியாளனால் இந்திப் பிரதமர் கொலை செய்யப்பட்டதைத் (1984) தொடர்ந்து, டெல்லியில் சீக்கிய மக்கள் தாக்கப் படடதை வைத்துத் தமிழ்ப் பெண்ணிய எழுத்தாளரான வாசந்தி, தீவிரவாத இந்துக்களின் செயலை எதிர்த்து ஒரு நாவலை எழுதினார்.
அதேநேரத்தில் பேச்சு சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து எதையும் எழுதலாம், பாடலாம் என்ற சிந்தனை மேற்கு நாடுகளில் பெரிதளவில் முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி எழுதிய ‘சார்ட்டானிக் வேர்ஜஸ் என்ற நாவல் (1988)பல இஸ்லாமியர்களைக் கோபத்தில் தள்ளியது. ருஷ்டி, தன் எழுத்து மூலம் இஸ்லாத்தை அவமானப் படுத்தினார் என்ற குற்றச்சாட்;டை முன்வைத்த ஈரானிய மதத் தலைவர், ஆயத்தோலா ஹ_மேனி 1989ல், ருஷ்டிக்கெதிரான மரண தண்டனை விதித்தார். மேற்குலகப்பெண்ணியவாதிகள் சுதந்திரமான பேச்சுரிமையை ஆதரித்து ருஷ்டிக்குச் சார்பாகச் சில போராட்டங்களை நடத்தினார்கள.
உலக அரசியலில் ஒரு புதிய சக்தி உருவாகியது .பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஆளுமையைக்காட்ட கிழக்கு ஐரோப்பாவைத் துண்டாடியது. 1990-2000ம் ஆண்டுகளில் ஐரோப்பா முழுக்கப் பல மாற்றங்கள் நடந்தன. பல புதிய நாடுகள் மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப் பட்டன.
இஸ்லாமிய நாடுகளில் மனித உரிமை பற்றியும் முக்கியமாகப் பெண்கள் ஒடுக்கப்படும் விடயமாகவும் பல கேள்விகளை மேற்கு நாடுகள் முன்வைத்தன. 2001ம்; ஆண்டு, முஸ்லிம் பயங்கரவாதிகளால்; அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 2003ல் ஈராக் நாடு தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரைக்கோடி மக்கள் போருக்கு எதிராகப் பிரித்தனிய வீதிகளில் ஊர்வலம் செய்தார்கள். இதில் மிகப் பெரிய தொகையானவாகள் பிரித்தானிய பெண்களாகும். ஆனாலும், ஐரோப்பிய நாடுகள், உலகக் கண்ணோட்டத்தில் ஒரு புதிய அரசியல் திருப்பத்தைக் கொண்டு வந்தன.
ஒருகாலத்தில் பல்விதமான, கொடுமைகளுக்கும் எதிராகப் போராடிய பெண்ணியவாதிகளின் குரல்கள் பலவீனமாகின. ஈராக் போரில் ஒன்றரைக்கோடிப் பெண்கள் விதவையாக்கப்படடிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று கோடிச் சிறார்கள் அனாதையாக்கப்படடிரகு;கிறார்கள் என்று அண்மையில் ஐக்கிய நாடுகளின் 19வது மனித உரிமைக்கூட்டத்தில் (பங்குனி 2012) கலந்து கொண்ட ஈராக்கிய சமுதாயவாதியும் இருதய வைத்தியருமான ஒருவர் குறிப்பிட்டார்.
அண்மைக்காலங்களில். 1980 களிலிருந்து, மேற்கு நாடுகளில் மட்டுமல்லாது வளரும் நாடுகளிலும்,பெண்களின் நாட்டம் தனிப்பட்ட முன்னேற்றங்களில் அக்கறை கொள்ள ஊக்குவிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களும் எப்படியும் உழைக்கலாம் அதற்காக எதையும் செய்யலாம் என்ற சிந்தனை பரவியது. அதேகாலகட்டத்தில், சமுதாயத்தைத் தூக்கியெறிந்த கலாச்சாரத்தைத் தங்கள்; பாடல்களாலும் உடையலங்காரத்தாலும் அமெரிக்கப் பெண்பாடகர் மடோனா போன்ற கலைஞர்கள் முதன்மை படுத்தினார்கள். இந்த மாற்றங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ஆதாயம்தேடும்; முதலாளித்துவம், கவர்ச்சிப்பொருட்களைப் பெண்களுக்கு உருவாக்குவதில் தீவிரமாக முனைந்தது. ஒரு பெண்ணோ ஆணோ, சமுதாயத்தில் மதிக்கப்படவேண்டுமானால், கவர்ச்சியாக இருப்பது இன்றியமையாத விடயம் என்பதை மேற்குலக ஊடகங்கள் மட்டுமன்றி வளரும் நாடுகளிலுள்ள ஊடகங்களும் பிரசாரம் செய்வது இன்றைய வியாபாரங்களில் பெரிய வியாபாரமானது..
இன்றைய கால கட்டத்தில் உலகம் பரந்து பல பெண் பிரதமர்களும் ஜனாதிபதிகளும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகத்தின் பொருளாதார அமைப்பின் தலைவியாக கிறிஸ்டின் லாகாட் வேலை செய்கிறார் ஐக்கியநாடுகள் சபைத்தலைவியாக ஒரு தமிழ்ப்பெண்மணி நவநீதம் பிள்ளை பணிபுரிகிறார்.
பழையபடி, வளரும் நாடுகளைத் தங்கள்வசப்படுத்த, மேற்கத்திய ஆதிக்கவாதிகள் புதிய தேடல்களில் ஈடுபடுகிறார்கள.; அதில் முக்கியமாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கெதிராக, தலிபானின் செயல்களைத் தடுப்பதற்காகச் செல்வதாகச் சொல்லிச் சென்றவர்களால் அந்த நாட்டுப் பிரச்சினை தொடர்கிறது.. அவர்கள் இஸ்லாமிய பெண்களை மனித உரிமையுடன் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டுடன், தங்கள் அனுதாபத்தைக்காட்ட, பல நாடுகளில் இராணுவத்தைக்கொண்டுசெல்கிறார்கள்.
அதே நேரம்,மேற்கு நாடுகளில், ஆயிரக்கணக்கான ஏழைப்பெண்கள் பாதாள உலகக்கும்பல்களால் பாலியல்த் தொழிலாளர்களாகக் (பெரும்பாலான பெண்கள் கிழக்கு ஐரோப்பாவைச் சோர்ந்தவர்கள்) கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். ஆபிரிக்க நாடுகளில் ஆயிரக்கான ஏக்கர் நிலங்கள் மேற்கத்தியர்களால் வாங்கப் பட்டு அதில் ஆயிரக்கணக்கான ஏழைப்பெண்கள் ‘மேற்குலகக்;’ கொம்பனிகளுக்காகத் தங்கள் உழைப்பை ஒருசில டாலர்ஸ்களுக்குப் பணயம் வைக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஏழைப்பெண்கள், இலங்கை (கிட்டத்தட்ட 500;.000 ஊழியர்கள்), இந்தியா, பிலிப்பைன்;ஸ் போன்ற நாடுகளிலிருந்து மத்திய தரைக்கடல்நாடுகளுக்குப் பணிப் பெண்களாகச் சென்று எந்த விதமான மனித உரிமையுமின்றப் பல கொடுமைகளுக்குள்ளாகிறார்கள்.
இந்தியாவில் சாதிக் கொடுமையால் பல ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் சொல்லவொண்ணாக் கொடுமைகளுக்குள்ளாகிக்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவின் ஆதிக்குடிகளான சிவப்பு இந்திய வம்சத்தினப் பெண்களுக்கும், அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபர்யேனியப் பெண்களுக்கும் வாழ்க்கையில் முன்னேறும் சந்தர்ப்பங்களைக்கேட்டுப் போராடும் குரல்கள் வலிமை பெற்றவையல்ல.
இதே கால கட்டத்தில் மேற்கு நாடுகளில் மட்டுமல்லாது, பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டுவரும் இந்தியா, சீனா போன்ற நாடுகளில், பல்கலைக்கழகங்களுக்குத்தெரிவு செய்யப்படுபவர்களில் பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள். விமானம் ஓட்டுவதிலிருந்து, அடுத்த விண்வெளிப் பிரயாணங்களிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள். ஆனாலும் பெண்களைத்; தங்களுக்குத் தேவையான விதத்தில் பாவித்துக்கொள்ள உலகம்பரந்த விதத்தில் ஆண்கள் பலவிதமான சூட்சுமங்களையும் செய்கிறார்கள். உலக மயப்படுத்தல் என்ற பெயரில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இவற்றுக்கு எதிராகவும், தங்களின் விடுதலைக்காகவும் குரல்கொடுக்கும் பெண்கள் உலகமெல்லாம் ஒன்று படுகிறார்கள். அண்மையில், மத்திய தரைக்கடல் நாடுகளில் நடக்கும் புரட்சிகளில் பெண்களின் பங்கை அவதானித்தால் இதன் தாற்பரியம் புரியும்.
ஆனாலும், மேற்கு நாட்டில் மட்டுமல்லாது, வளரும் நாடுகளிலும், பெண்களின் பலவிதமான முன்னேற்றங்களுக்கும மட்டுமல்லாது, சமுதாய மாற்றங்களுக்காகவும் குரல் கொடுக்கும் பெண்களை விடத் தங்கள் தனிப்பட்ட இச்சைகளையும், பாலியல்த் தேடுதல்களையும் முக்கியப்படுத்தும் குரல் இன்றைய காலகட்டத்தில் பெரிதுபடுத்தபப்படுகிறது. ‘சுதந்திர’ மனப்பான்மையுள்ள பெண்களில் சமுதாய விடுதலை, வர்க்க விடுதலை, தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் என்பவற்றில் ஈடுபடும் பெண்களின் படைப்புக்களை விட, பாலியல் தேவைகள், ஆசைகள், உணர்வுகள் என்பனபற்றிப்பேசும் பெண்களின் படைப்புக்களை ஆண் ஊடகவாதிகள் பெரிதுபடுத்துகிறார்கள் என்பதைத் தற்காலப் பெண்ணியவாதச் சிந்தனைகளின் பரிமாணங்களை அவதானிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.
பெண்களின் படைப்புக்களில் பாலியல் பற்றிப்பேசுபவைக்குப் பிரச்சார முக்கியத்தை ஆண்களின் கையிலிருக்கும் ஊடகங்கள் ஊக்குவிpன்றன. ஆண்களின் இந்தச் செயல்கள், எப்படியும் பெண்களைத் தங்கள் பிடிக்குள் வைத்திருப்பதற்கும் தேவைக்குப் பயன்படுத்துவதற்கும்தான் முன்னெடுக்கப் படுகிறது என்பதைப் பெரும்பாலான பெண்கள் புரிந்துகொளவதாகத் தெரியவில்லை. கவர்ச்சிப் பிரசாரம் பெண்களின் வாழக்கையுடன் பின்னிப் பிணைந்து விட்டது.
இத்துடன், மருத்துவ விஞ்ஞானத்தின் உதவியுடன் தங்களின் உடலின் கவர்ச்சியை மேன்படுத்துவதில் பல பெண்கள் தங்கள் உழைப்பைச் செலவிடுகிறார்கள். பெண்ணியவாதசிந்தனையாளர்கள் பலர், இந்த விதமான செயற்பாடுகள் பெண்களின் தனிப்பட்ட, சமுதாய, பொருளாதார முன்னேத்திற்கோ உண்மையான உதவியைச் செய்யப்போவதில்லை என்று எழுதினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் இளம் பெண்கள் ஒரு சொற்பமே.

(முற்றும்)

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s