எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்
பழம்பெரும் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது (89).
உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் திங்கள்கிழமை இரவு பிரிந்தது.
உத்தர காண்டம், குறிஞ்சித்தேன், வளைக்கரம், கரிப்பு மணிகள், வேருக்கு நீர், மலர்கள், முள்ளும் மலர்ந்தது, பாதையில் பதிந்த அடிகள், அலைவாய் கரையிலே, மண்ணகத்துப் பூந்துளிகள், சத்திய வேள்வி போன்ற அவரது படைப்புகள் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கின்றன. 80-க்கும் மேற்பட்ட புதினங்களை அவர் எழுதியுள்ளார்.
அவரது ‘வேருக்கு நீர் புனிதம்’, சாகித்ய அகாடமி விருதை அவருக்குப் பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தகக்து.
நான் 1987ம் ஆண்டு,எனது திரைப்படப் பட்டப்படிப்பு ஆராய்ச்சி விபரமாக சென்னை சென்றிருந்தபோது திருமதி இராஜம் கிருண்ணன் அவர்களைச் சந்தித்தேன். தென்னிந்தியாவின் பல சிறந்த எழுத்தாளர்களிற் சிலரைச் சந்திக்கும் அதிஷ்டம் அந்தக் காலகட்டத்தில் எனக்குக் கிடைத்தது,அதில் திருமதி இராஜம் கிருண்ணனும் அடங்குவார். 1960ம் ஆண்டுகால கட்டத்தில் அவரின் படைப்புகளைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.ஆணாதிக்கம் கோலொச்சிக்கொண்டிருந்த தென்னிந்திய எழுத்துத்துறையில் அவர் ஒரு மாற்று எழுத்தாளராக எனது பார்வையில் கிடைத்தார். பெண்ணியவாதிம் எனறுற வானளாவக் கத்திக் கொள்ளாமல் பெண்களுக்கான பிரச்சினைகளை மிகவும் யதார்த்தமாகப் படைத்திருந்த அவரின் நாவல்கள் எனக்குப் பிடித்திருந்தன். எனக்கு அப்போது பெண்ணிய வாதம, ஆணியவாதம் என்று ஒரு விளக்கமும் தெரியாத இள வயது. நல்ல இலக்கியங்களைத் தேடிப்படிக்கும் ஆர்வம் இருந்தபடியால் அவரின் எழுத்துக்களை விரும்பிப் படித்தேன். அவரின் நாவல்களில் எனக்கு மிகவும் படித்தது ‘குறிஞ்சித்தேன்’ என்ற நாவலாகும். இராஜம் கிருஷ்ணனின் துணைவர் அவரின் உத்தியோக நிமித்தம் இந்தியாவின் பல்லிடங்களுக்கும் போகும் நியதி இருந்ததால் அவர் போன இடங்களுக்கு அவரின் துணைவியான திருமதி இராஜம் கிருஷ்ணனும் சென்றபடியால் அவரின் கண்ணோட்டம் மற்றைய பெண் எழுத்தாளர்களை விடப் பரந்துபட்ட வித்திலிருந்தது.அவரின் மறைவு பெண்ணிய எழுத்துலகுக்கு ஒரு இழப்பாகும்
இந்தியத் தமிழ்ப் பெண்ணியவாத எழுத்தாளர்களில் முக்கிய இடம் பெறுபவர் திருமதி இராஜம் கிருஷ்ணன் அவர்களாகும். இன்று கணணியல் மூலம் அவசர எழுத்துக்கள்மூலம் பரபரப்புக் காட்டும் எழுத்துக்களைத்தாண்டிய சாகாவரம் பெற்றவையாக அவர் எழுத்துக்கள் எதிர்காலத்தில் கருதப்படும் என்பது எனது அசையாத நம்பிக்கை.