தமிழ் மக்கள் நினைவுகளை சோகத்தில் ஆற்றி கண்ணீரை வரவைக்கும் ஐந்தாவது மே பதினெட்டும் வந்து போய்விட்டது. ஆனால் இன்றும் எம் கண்களில் நீர் வற்றவில்லை. இன்னும் அழுதபடி பல கேள்விகழுக்கு பதில் தெரியாது தவித்து நிற்கிறோம்!
இன்னமும் ஞாபகம் இருக்கிறது! லண்டன் பாராளுமன்ற வளவில் 2009 மே மாதம் நாம் அனைவரும் எந்தவித இயக்க, மத, இன வேறுபாடுகளும் அற்று சோக முகங்களுடன் ஏதோ ஒன்றுக்காக ஒற்றுமையாக காத்திருந்தோம். ஆனால் அன்று நாங்கள் பொய்களாலும் குழப்பங்களாலும் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மைகள் தெரியாது காத்திருந்தோம். கோடை கால வெயிலில் பிரித்தானிய பாரளுமன்ற முந்தலில் ஆயிரக்கணக்கில் நாம் கூடியிருந்த போதும் தாயக மண்ணனின் உண்மைகள் மூடுபனிபோல் தெளிவற்றதாகவே அங்கு இருந்தது. அந்த மூடுபனியை ஊடறுத்து உண்மைகள் எம்மை அண்மித்தபோதும் அதை நம்ப மறுத்து பொய்களால் எம் மனத்தை சாந்தப்படுத்தினோம். இதன் உச்சக்கட்டமாக 2009 மே 18 தலைவர் இறந்து விட்டார் என்ற செய்தியையும் கூட நாம் புனைகதை என்று புறந்தள்ளி வைத்தோம்! எல்லாம் முடிந்து நாட்கள் மெதுவாக நகர, நகர உண்மையும் யதார்த்தமும் எம்மை நெருங்க ஆரம்பித்தது. இருந்த போதும் பலர் தொடர்ந்தும் உண்மைகளை நம்ப மறுத்தார்கள் ஆனால் ஒரு சிலரே உண்மைகளை ஏற்கும் பக்குவத்தை நோக்கி தம்மை புடம் போட ஆரம்பித்தார்கள்.
இன்று ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும், பிடிவாதமாக நடந்து முடிந்த ஈழ யுத்தத்தின் உண்மைகளை தேட மறுபப்பவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் வடுவாகிப் போன யுத்தக் காயத்தை இரத்தம் சிந்த நோண்டுவது தான் இன்றைய யதார்த்தமாயுள்ளது! ஆயிரம் அப்பாவி உயிர்களைக் காவு கொண்ட ஈழ யுத்தத்தின் உச்சக்கட்டம் முள்ளிவாய்கால் யுத்தம். இந்த யுத்தம் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மரணத்துடன் மே 18 அன்று நிறைவுக்கு வருகிறது.
இந்த மே 18ஐ இன அழிப்பு நாள் என்றும் இது ஒரு போர்குற்ற நாள் என்றும் இதற்கு காரணமான இலங்கை அரசையும் அதன் தலைமையையும் பழிவாங்க தமிழ் தேசியம் இன்றும் கங்கணம் கட்டி நிற்கிறது. ஆனால் புலிகளை எதிர்ப்பவர்களோ இது பிரபாகரன் என்ற நராசுரன் அழிந்த நாள் தமிழ் மக்களிற்கு விடுதலை கிடைத்த நாள் என்று கூறி நிற்கிறார்கள். இலங்கை அரசோ பிரபாகரனின் நினைவு நாளை கொண்டாட முடியாது என தடை விதித்து இது யுத்த வெற்றி நாள் என்று கூறி யுத்த வெற்றியை கொண்டாடுகிறது.
யுத்தம் முடிந்த காலம் முதல் ஒவ்வொரு வருடமும், மே 18 அன்று தமிழர்களின் ஒரு தரப்பு வடக்கு கிழக்கில் ஒரு விளக்காவது கொழுத்தி யுத்தத்தில் இறந்தவர்களுக்க அஞ்சலி செலுத்துவது தமது உரிமை என்று வீராப்புடன் கூடிய அரசியல் செய்ய முனைகிறார்கள். இலங்கை அரசோ எங்கை கொழுத்து பார்ப்போம் என்று அவர்களுடன் மல்லுக்கட்டி நிற்கிறார்கள். தமிழ் தேசியத்தின் மீது உணர்வு கொண்ட அனைத்து சக்கதிகளும் விடாதே பிடி “உவனோ, நாங்களோ” என்று எரிகிற நெருப்பில் எண்ணை ஊத்தியபடி உள்ளனர். அனால் இந்த அமளிக்குள் தன்னை விட்டால் காணும் என்று உண்மையும்; எங்கோ ஓடி ஒளிந்து விடுகிறது.
மே 16 அன்று முள்ளிவாய்க்கால் அவலத்தில் இராணுவ ஷெல் தாக்குதலில் உடல் சிதறி மரணமான மக்கள், காயப்பட்டு வெளியேற்றப்பட்ட மக்கள், புலிகளின் பிடியிலிருந்து தப்பிய மக்கள், தப்ப வெளிக்கிடுகையில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மக்கள் என்று போக மிச்சம் சொச்சமாக எஞ்சிய ஆயிரக்கணக்கான மக்கள் புலிகளால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை விட்டு முற்றாக வெளியேறி இராணுவ பகுதி நோக்கி தப்பசென்றார்கள். மக்கள் அனைவரும் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் போக இராணுவத்துடன் யுத்தம் புரிந்த புலிகள் உறுப்பினர்களும் ஆயிரக்கணக்கில் மக்களுடன் மக்களாக இராணுவ பகுதி நோக்கி சென்றார்கள். எஞ்சியிருந்தவர்கள், இராணுவத்திடம் சரணடைய விரும்பாது இறுதிவரை போரடி இறக்க நினைத்த சில நூற்றுக்கணக்கான புலிகளே. மே 17 அன்று அதிகாலை அந்த யுத்த பிரதேசத்தில் எஞ்சிநின்ற புலிகளின் போராளிகளும், புலிகளின் தலைமையும் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் சிறுது சிறுதாக யுத்த களத்தில் நின்று விடுவிக்கப்பட்ட அல்லது தப்பிய முன்னாள் போராளிகள் மூலம் அறிந்து கொண்டோம். இதன் மூலம் மே 18 அன்றே புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்தியையும் உறுதி செய்து கொள்கிறோம்.
ஆனால் இந்த உண்மைகள் கடந்த ஐந்து வருடகாலமாக அக்கிரமாக மறைக்கப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கே மே 18இல் நாம் அஞ்சலி சொலுத்துகிறோம் என்ற அபாண்டமான பொய்யுடன் அல்லவா நாங்கள் மே 18 தினத்தை நோக்குகிறோம்.
தலைவர் இறக்கவில்லை. மீண்டும் வருவார் அல்லது தலைவருக்கு இறப்பே இல்லை என்று கூறியபடி, கோடிக்காணக்கான சொத்துகளையும் சுமார் 90 வீதமான ஈழ தமிழ் சார் ஊடகங்களையும் தம் வசம் வைத்திருக்கும் ஓரு சக்தியே இன்று உண்மைகளை குழிதோண்டி புதைத்து விட்டு ஈழ தமிழர்களை பொய்களுக்குள் இன்னமும் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சக்தி யார் என்று நான் கூறத் தேவயில்லை. இந்த சக்திகள் இன்னும் புலிகளின் தலைவர் பிரபாரன் இறந்து விட்டார் என்ற உண்மையை நேர்மையுடன் வெளிக் கொணராத சக்திகள். மே 18 இன அழிப்பு நாள், தமிழ் தேசிய துக்க நாள், என்று போலியான பெயர்களில் மாபெரும் விளம்பரங்களை செய்து கோழைத்தனமாக இறந்த தலைவருக்கு மக்களின் பெயரால் மறைமுகமாக அஞ்சலி செலுத்த முனைகிறார்கள்;. இது பிழை சரிக்கு அப்பால் போராடி தன் குடும்பத்தையே பலி கொடுத்த தங்கள் தலைவனுக்கு இவர்கள் செய்யும் அப்பட்டமான துரோகம். இது கிட்டத்தட்ட புலிகள் தமது பாதுகாப்புக்கா மக்களை எவ்வாறு யுத்த கேடையமாக வன்னயில் பாவித்தார்களோ அதே போல தமது அற்ப தோல்வியை மறைக்க மக்களின் பெயரால் இன்று தலைவருக்கு ஒளிந்திருந்து அஞ்சலி செலுத்துகிறார்கள் இந்த கேவலம் கெட்டவர்கள்.
மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழ் உணர்வாளனும், தேசிய பற்றாளனும் ஒரு தனியறையில் இருந்து இந்த அசிங்கங்கள் தொடர்பாக இன்று தம்மை தாமே கேள்விகள் கேட்க வேண்டி உள்ளது! நாம் இன்று பரபு;புரை செய்வது போல் சிறீ லங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பே 2009 மே மாதம் நடைபெற்றது என்றால் இதில் எமது தரப்பில் எந்த தவறும் இல்லை என்று நாம் கூற வருகிறோமா? நடைபெற்று முடிந்த யுத்தத்தில் எங்கள் தரப்பில் ஒரு சிறு தவறும் இல்லை என்று மனச்சாட்சி இன்றி கூறப்போகிறோமா?
ஜனவரி மாதம் 1ம் திகதி கிளிநொச்சியை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது நாம் என்ன செய்தோம்? எம்மில் எத்னை போர் மக்களின் பாதுகாப்பு பற்றியும், புலிகளின் அடுத்த நடவடிக்கை பற்றியும் கேள்வி கேட்க தயாராக இருந்தோம்? வெளி நாடுகளில் வசதியாக வயிறு புடைக்க உண்டு விட்டு தமிழ் தேசிய ஊடகங்களின் பொய்களில் மயங்கிய படி, தலைவர் உள்ளை விட்டு அடிப்பார் என்ற பொய்களையும் புரட்டுக்களையும் நாங்கள் மலைபோல நம்பவில்லையா? அதையே நாம் சீ.என்.என், பீபீசி ஐபீசி என்று சர்வதேச அளவில் அறிக்கைகளாக அவிட்டு விடவில்லையா? புலிகள் ஆயிரக்கணக்கான மக்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக போரக்களம் அழைத்து செல்கையிலும் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்?
புலிகள் வீடு வீடாக சென்று சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகளை பிடித்து 2 நாள் பயிற்சியுடன் வலிந்து போர்முனைக்கு கொண்டு சென்றபோது நாம் ஒரு மூச்சு விட்டிருப்போமா? அந்த நேரத்தில் புலம்பெயர் மண்ணில் நாங்கள், எமது குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக பாடசலை வாசலில் எமது பென்ஸ் காரில் கொண்டுபோய் இறக்கிவிட்டு, திரும்பகையில் கை தொலைபேசியில் மண்மீட்பிற்கு இது அவசியம் என்று அரசியல் பேசவில்லையா? கிளிநொச்சி விழுந்ததுமே புலம்பெயர் தமிழர் அனைவரும் போதும் இந்த யுத்தம் என்று ஒரு குரலில் புலிகளிடம் யுத்தத்தை நிறுத்த கோரினோமா? “வீ வோண்ட் தமிழ் ஈழம்”, “அவர் லீடர் பிரபாகரன்” என்று அல்லவா கூச்சல் இட்டோம். மக்களை யுத்த கேடயமாக புலிகள் பாவித்ததை நாம் நியாயப்படுத்தினோம். ஞாபகம் இருக்கிறதா? இராணுவம் ஊருக்குள் புகுந்தால் முழுப்பேரiயும் ஆழிச்சுப் போடுவாங்கள் எண்ட படியால் புலிகளுடன் தான் மக்கள் போக வேண்டும்; என்று நாங்கள் எம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளவில்லையா?
புலிகள் உண்மையிலேயே மக்களின் நலனை மதிப்பவர்களாயிருந்திருந்தால் எமக்கு உண்மை நிலையை கூறியிருக்க வேண்டும்! நாமும் மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருந்திருந்தால் புலிகளிடம், மக்களை யுத்த கேடயமாக பாவிப்பதை நிறுத்த சொல்லி கேட்டிருக்க வேண்டும். இன்று இலங்கை இராணுவம் தமிழ் பெண்கiயும், ஆண்களையும் வலிந்து பிடிக்கிறார்கள் என்று புலம்பும் நாம், புலிகள் போருக்கு ஆட்களை ஊர் ஊராக கலைத்து கலைத்து பிடித்த போது வாய் மூடி மௌனமாக ஆவது நின்றாவது எமது எதிரப்பைக் காட்டியிருக்கலாம். நாம் அதற்கு பதில் அப்பவும் “வீ வோண்ட் தமிழ் ஈழம்”, “அவர் லீடர் பிரபாகரன்” என்று கத்தி புலிகள் மேலும் பல குஞ்சு குருமன்களை பிடிக்க உசுப்பேத்தி விட்டோம் அல்லவா?
புலிகளிற்கு 2002இல் இருந்து ஆயுதக்கப்பல்கள் அடிபட்ட போது, அதுவும் பொய் மகிந்தவின் ஜில்மால் என்று நாம் நக்கலடித்தோம். ஆனால் அடிபட்டது அனைத்தும் தமக்கு வந்த கப்பல்கள் தான் என்பது புலிகளிற்கு மட்டுமே தெரிந்த உண்மையா? ஆயுதங்கள் இன்றி பிரதேசங்களை தக்கவைக்க முடியாது என்பது யதார்த்தம். யுத்தம் கிளிநொச்சிக்கு வந்த போது அந்த யதார்த்தத்தை கருத்தில் எடுத்து யுத்தத்தை நிறுத்தி மக்களின் பாதுகாப்பை புலிகள் தான் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் தம்மை பாதுகாக்க மக்களை கேடயமாக பாவித்தமைதான் விடுதலைப் புலித் தலைமையின் ராஜதந்திரமா? புலிகளின் இந்த தான்தோன்றி தனமான முடிவே மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டமைக்காக முழுமுதல் காரணம் என்பதை நாம் முதலில் ஏற்க வேண்டும். அதே சமயம் புலிகளின் முடிவுகளை கண்மூடித்தனமாக ஆதரித்து மக்களை அழிவுப்பாதைக்கு இட்டு செல்ல புலிகளை ஆதரித்த புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாங்களும் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதற்கு ஒரு காரணமே. ஒரு கணம் புலிகளிடம் போதும் யுத்தததை நிறுத்துங்கள் என்று நாம் கூறியிருந்தால் குறைந்தது ஒரு உயிரையாவது காப்பாற்றியிருக்கலாம் என்று உங்கள் மனதில் ஒரு மூலையில் கூட தோன்றுவதில்லையா?
இன்று எமது தவறுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, இலங்கை அரசின் மீதும் மகிந்தா, சினா, இந்தியா, பாகிஸ்தான் என்று கண்டவன் நிண்டவன் மீதெல்லாம் பழியை சுமத்தி விட்டு, எமது குற்றங்களில் இருந்து மனச்சாட்சியற்ற விதத்தில் நாம் தப்பிக்க முனைகிறோம். இந்த யுத்தத்தில் இலங்கை அரசையும் இராணுவத்தையும் குற்றவாளிக் கூண்டில் நாம் ஏற்ற முன், ஒவ்வொரு தமிழ் தேசிய உணர்வாளனும் தன்னைத்த தானே மனச்சாட்சியுடன் கேள்வி கேட்க வேண்டும். கிளிநொச்சி விழுந்ததும் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களிடம், அவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கம் உரிமையை கொடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா? தயவுசெய்து உங்கள் மனச்சாட்சியிடம் இந்த கேள்வியை கேழுங்கள்? எந்த மக்களின் சுதந்திரத்திற்காக போராடுகிறோம் என்று கூறினோமே அந்த மக்களை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டோமா?
நாம் விட்ட தவறுகளை வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் தமிழ் தேசியத்தை நேசித்த அனைவரும் போர்க்குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். ஜேவீபிக்கு, தமது போராளிகளிற்கு அஞ்சலி செலுத்த முடியும் என்றால், எமக்க உரிமையில்லையா? என்ற விதண்டா வாதத்திற்கான பதிலை நாம் நேர்மையுடன் தேட வேண்டும். நாம் இன்னமும் பிரிவினையை கைவிட வில்லை. 2009 மேயில் புலிகளின் தலைவர் “நாங்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிடுகிறோம்” என்று கூறிய பின்னரும் இன்றும் நாம் ஆயுதப்போராட்டத்தை முற்றாக கைவிட தயாராக இல்லை. வெளிநாடுகளில் இருந்த படி புலிக்கொடியை தோழில் போட்டபடி ஜனநாயக நீரோட்த்தில் போகும் தமிழரை துரோகி பட்டியலில் அல்லவா சேர்த்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஆயுதங்கள் எங்கள் கைகளில் வந்ததும் இந்த துரோகிகளை துவசம் செய்யவல்லவா அயத்தம் செய்து கொண்டிருக்கிறோம். நாமும் ஜேவிபியும் ஒரு தளத்திலா நிற்கிறோம். நாம் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து விட்டேமா, அல்லது இன்னமும் ஆயுதங்களை முதுகுக்கு பின்னல் வைத்திருக்கிறோமா, என்ற கேள்விக்கு நேர்மையான பதிலை முதலில் தேடுவோம்.
வடக்கு கிழக்கு மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் வாழ முடிவு செய்து விட்டார்கள். தமது உரிமைகளை ஜனநாயக அரசியல் ஊடகவே வெல்ல முனைகிறார்கள். புலம்பெயர் மண்ணில் சொகுசாக இருந்தபடி புலிக்கொடி போர்த்தபடி அரசியல் வியாக்கியானம் பேசி பிரிவினை, தமிழ் தேசியம், போராட்டம்; என்று பிதற்றுவதை நாம் முதலில் நிறுத்துவோம். ஆயுதப் போராட்ட அழிவுகள் எம் கண்முன்னே அகன்று விரிந்து நிற்கிறது! முதலில் நிபந்தனை அற்று அதை நாம் முற்று முழுதாக நிராகரிப்போம்.
இன்று நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை விடுதலையின் பெயரால் முள்ளிவாய்க்கால் அவலம்வரை கொண்டு சென்றமைக்கு, அங்கு வாழும் அனைத்து மக்களிடம் புலிகளும் அதற்கு ஆதரவு வழங்கியவர்களும் இதய சுத்தியுடன் மன்னிப்பு கோரவேண்டும். எமது வன்முறை கொலைக் கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த அனைத்து இன, மத மக்களிடமும் நாம் ஒரு பொது மன்னிப்பை கோர வேண்டும். புலிகளின் பெயரால் இன்று நாம் குவித்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான போராட்ட நிதியை புலிகள் அமைப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்த வேண்டும். புலிகளின் இறந்த தலைவர்களின் பெயரால் இன, மத பேதமின்றி அந்த மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டுமானம் செய்யும் பணிகளை தொடங்க வேண்டும். விடுதலைப் புலிகளிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு இறந்த தலைவருக்கும் ஏனைய போராளிகளிற்கும் அஞ்சலி செலுத்தும் உரிமை உள்ளது. அனால் அந்த உரிமையை பெற, நாங்கள் அதற்கு தகுதியானவர்களாக முதலில் எம்மை மாற்றியாக வேண்டும். இதை நாம் நேர்மையுடனும் உள சுத்தியுடன் செய்யும் பட்சத்தில் எம்மை நோக்கிய மன்னிப்புகளும் எமக்கான உரிமைகளும் தானகவே வந்து சேரும்!