‘இன்னும் சில அரங்கேற்றங்கள்’

‘இன்னும் சில அரங்கேற்றங்கள்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்,அவர்களின் குழந்தைகளாகிய எங்கள் மூவரிலும் கோபம். பெரியண்ணா இப்போதெல்லாம எங்கள் வீட்டுக்கு வருவதே குறைவு.அவன் வேலை செய்யுமிடம் எங்கள் வீட்டுக்கு அதிக தூரமில்லை என்றாலும்,தன்னுடைய சில சினேகிதர்களுடன் சேர்ந்து ஒரு வீடு தனியாக வீடெடுத்துக்கொண்டு போய்விட்டான்.

எனக்கு இரவெல்லாம் சரியாகத் தூக்கமில்லை.ஆனாலும், வேலைக்குப் போகும் அந்த ட்ரெயினில் காலடி எடுத்து வைத்ததும் வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுக்கிறேன். அது ஏதோ ஒரு சாதாரண புத்தகமில்லை, அண்மைக்காலமாகப் ப்றாயிடின் எழுத்துகளில் எனக்கு ஆர்வம் கூடியதால்,ப்றாய்டின் சைக்கோலயி பற்றிய புத்தகத்தைக் கையிலெடுக்கிறேன் எனது சினேகிதி ஒருத்தி யுனிவர்சிட்டியல் சைக்கோலஜி படிப்பதும்,அதனால் அவள் அடிக்கடி ப்றாய்டின்,சைக்கோலஜி ஆராய்ச்சிகள் பற்றி என்னுடன் கலந்துரையாடுவதும் நான் இந்தப்புத்தகம் படிப்பதற்குக் காரணமாயிருக்கலாம்.

ட்;;ரெயின் முழுதும் மனித முகங்கள். ஒருத்தருக்கு ஒருத்தரைப் பற்றி அடையாளம் தெரியாத முகங்கள்.சில வேளைகளில்,நான் சோகமாக இருக்கும்போது, என்னுடன் ஒவ்வொரு நாளும் இந்த ட்ரெயினில் பிரயாணம் செய்யும் இவர்களையும என்னையும் பிணைக்கும்; ஏதும் தொடர்பு இருக்குமா என்று யோசிக்கிறேன்.

நாங்கள் எல்லாம்’வெற்று மனிதர்களாய்’ ஓடிக்கொண்டிருக்கும் இந்த ட்ரெயினிற் குவிந்து கிடப்பதாக ஒரு பிரமை எனக்கு. நாங்கள் ஒவ்வொருத்தரும் எங்களின் தனி உலகிற் சஞ்சரித்துக்கொண்டீப்பது எனக்குத் தெரியும். எங்கள் எல்லோரையும் பிணைப்பது அதிகாலை 7.45க்கு இந்த ட்ரெயினில் பிரயாணம் செய்து பல காரணங்களுக்காக,லண்டனுக்குப்போவதற்கு, 8.30க்கு லண்டன் இயூஸ்ரன் ஸ்ரேசனில் இறங்குவதுதான்.

ட்ரெயினுக்கு ஓடிவரும்போது என்னுடைய சக பிரயாணிகளைப் பார்த்துக் கொள்வேன்.அந்தக் கூட்டத்துடன் என்னையும் பிணைத்துக் கொள்வேன்.

வட அயர்லாந்தில் பிரிட்டிசாருடன் கொரில்லா யுத்தம் செய்து கொண்டிருக்கும்,ஐ.ஆர்.ஏ காhரர்கள் ட்ரெயினிற் குண்டு வைத்து விட்ட தகவலால், ஒருதரம் எங்களை எல்லாம் ட்ரெயினிலிருந்து இறக்கி விட்டு போலிஸார் ட்ரெயினைப் பரிசோதித்த போது அரை மணத்தியாலம் எல்லோரும் வெளியில் நின்றோம்;.

அப்போது, நாங்கள் ஓருத்தருடன் ஒருத்தர் பேசியது மிகக் குறைவு. ஆங்கிலேயர்கள் தேவையில்லாமல் யாருடனும் பேசமாட்டார்கள்.அன்றும், பிரயாணிகள் அத்தனைபேரம் ஓரு ஊமைநாடகத்தில்  பாத்திரங்கள் மாதிரி நடந்து கொண்டோம்.;

ட்ரெயின் ஓடத் தொடங்கியது., ப்றாய்டின் சைக்கோஅனலிஸிஸ் என்ற புத்தகத்தில்க் கண்களைப் பதிக்கிறேன.
மனம் மட்டும் வீட்டுக்கு ஓடிப்போய்விட்டது.புத்தகத்தில் மனம் செல்லவில்லை.முன்னிருக்கும் வெற்று மனிதரில் முகம் பதிக்காமல் கண்களை மூடிக்கொண்டால், அம்மாவின் கலங்கிய கண்களும், அப்பாவின் தொங்கிய முகமும் மனக்கண்களில் நிழலாடுகிகின்றன.

அக்கா கடந்த ஒன்றிரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.அண்ணா எப்போதாவது ஒருதரம் வந்து விட்டுப் போகிறான். என்னையம்;, ஹாஸ்டலில் இருந்து படிக்காமல்,வீட்டிலிருந்து யூனிவர்சிட்டிக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

ஓவ்வெருரு நாளும் இரண்டு மணித்தியாலத்துக்கு மேல் பிரயாணத்துக்குப்போகிறது. அந்த நேரத்தைப் படிப்பில் செலவிடமென்றால்.அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை.’நல்லாப் படிக்க வேண்டுமென்று நினைக்கிற பிள்ளை எங்கேயிருந்தும் படிக்கும்தானே? யுனிவர்சிட்டி ஹொஸ்டலில இருந்துதான் படிக்க வேணுமென்டு என்ன இருக்கு?’ என்று பல கேள்விகளைக் கொட்டி, நான் வீட்டிpலிருந்துதான் யுனிவர்சிட்டிக்குப் போகவேண்டுமென்பதை உறுதி செய்து கொண்டாள்.
அவளுக்கு நான் அக்கா மாதிரிப் போய்விடுவெனோ என்ற பயம். அக்காவை அசல்த் தமிழ்ப் பெட்டைபோலத்தான் அம்மா வளர்த்தாவாம். அக்கா ‘இப்படிச் செய்து விட்டாளே’ என்று அம்மா மூக்கைச் சிந்திக் கொண்டிருக்கிறா.

‘உங்களின்ர நல்லமாதிரியான வாழ்க்கைக்காக நாங்கள் எவ்வளவு பாடுபட்டம்’. அம்மா இப்படித்தான் நேற்று என்னைப் பேசிக் கொண்டிருந்தா.
அண்ணாவிலும் அக்காவிலும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உள்ள ஆத்திரத்தை என்னிடம் காட்டினால் நான் என்ன செய்வதாம்?

சிலவேளைகளில் வீட்டுக்குப் போகவே எரிச்சலாகவிருக்கிறது.
கொஞ்ச நாட்களாக அப்பா சரியாகச் சாப்பிடவில்லை. அது ஒரு விதத்தில் அவரின் உடம்பு நிலைக்குச் சரியென்று சொல்ல நினைக்கிறேன். அப்பாவுக்கு நல்ல கொழுத்த உடம்பு. காரை விட்டால் எப்படி நடந்துபோவது என்று மறந்து போனவாழ்க்கை அவருடையது. வீட்டில் கொஞ்ச நடமாட்டம்.அதை விட அவர் பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டார்.பிளட் ப்ரஷர் கூடியிருப்பதாக டொக்டர் சொல்லி விட்டாராம்;. அதனால் அப்பாவின் உடம்பு மெலிந்தால் நல்லதென்று நான் நினைக்கிnறுன்.

ஆனால் இப்போது அப்பா சாப்பிடாமலிருப்பது டாக்டர் அவருக்கு ஹை பிளட் ப்ரஷர் இருக்கிறது என்று சொன்னது காரணமல்ல.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிடிக்காத ஒருத்தனை அக்கா விரும்பி விட்டாள் என்பதுதான் அப்பாவின் ‘சரியாகச் சாப்பிடாத விரதத்திற்குக்’ காரணம். அவர் தன் அறைக்குள்ப் பெரும்பாலும் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டு,’நீ சரியாகப் பிள்ளைகளை வளர்த்திருந்தால் இப்படி நடக்குமா?’ என்று அம்மாவைத் திட்ட, அம்மா என்னைப்பார்த்துப் பெருமூச்சு விடுவதும்,திட்டுவதுமாக இருக்கிறா.

எங்கள் வீட்டு விஷயம் கேள்விப்பட்ட அப்பாவின் நண்பர்கள், எங்களுக்கத் தெரிந்தவர்கள் என்று சிலர் வந்தார்கள். லண்டனிற் பிள்ளைகள் வளர்க்கும் கஷ்டங்கள் பற்றி ஒரு குட்டி மகாநாடு நடத்தினார்கள்.

‘எங்கள் குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டோம்?இந்தப் பிள்ளைகள் தங்களுக்கு வயது வந்ததும்,எங்கள் கலாச்சாரத்தை,பண்பாட்டை மறந்து தாங்கள் நினைச்சபடி நடக்க வெளிக்கிடுகினம்’ மஞ்சுளா மாமி இப்படித்தான் சொல்லிச் சத்தம் போட்டா. அவவின்ர மகள் தனக்குக் கலயாணமே வேண்டாம் என்று சொல்லி விட்டாளாம்.

அதற்கான காரணத்தை, மஞ்சுளாமாமி;  போனபின், அம்மாவும் சத்தியா மாமியும் குசு குசு வென்று இரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். என்னைக் கண்டதும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். இதெல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் வயது எனக்கில்iயாம்!

எனக்குச் சிரிப்பு வந்தது.லண்டனிற் படிக்கிறேன். பாடசாலைகளில் செக்ஸ் எடிக்யுகேசன் என்று என்ன படிப்பிக்கிறார்கள் என்று பல தாய்தகப்பனுக்குத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். நினைவலைகளின் பிரதிபலிப்பால்,என்முகத்தில் சிரிப்பு தெரிந்திருக்கவெண்டும்.

மூடியிருந்த கண்களைத்திறந்தபோது, என்முகத்திற் தெரிந்த மாற்றத்தைக் கண்டு,எனக்கு முன்னாலிருந்த பிரயாணி என்னை உற்றுப் பார்த்தார்.

என்னைப்பற்றி முன்பின்தெரியாத இந்தப் பிரயாணிக்கும் எனது தாய்க்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?

எனக்கு இருபது ஒரு வயது,நான் லண்டன யுனிவர்சிட்டியொன்றில் பயலோயி படிக்கிறேன். இந்த வருட புறஜெக்ட் மிகவும் கஷ்டமானது. ‘பாலியல் நடைமுறைச் செயற்பாடுகளும் எச்.ஐ.வியும்’
என்ற விடயத்தை ஆராய்ந்து நான் போனவாரம்தான் கட்டுரை எழுதி முடித்தேன்;.அந்தக் கட்டுரை எழுத எவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்தேன் என்பது எனது தாய்க்குத் தெரியாது.

அம்மாவைப் பொறுத்தவரையில், நான் அம்மாவின் கடைசி மகள், செல்ல மகள். வீடு, தன் குடும்பம் என்ற உலகில் முழுமையைக்காண்பவள். அம்மா அப்பாவுக்கு நிறையச் சீதனம் கொடுத்துக் கல்யாணம் செய்ததாக மாமி மூலம் அறிந்திருந்தேன். அப்பா,அம்மாவால் கல்யாண சந்தையில் வாங்கப் பட்ட தகுதியான மாம்பிள்ளை. அம்மாவின் சொல்லை-பணம் போட்டு வாங்கிய முதலாளியன் சொல்லை அப்பா அதிகம் தாண்டுவதில்லை.
லண்டனுக்கு வந்தததும், பெரிய வீடு,கார்,அத்துடன மூன்று குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும்பாலான தமிழ்த் தாய்கள் மாதிரி நிறைவு கண்டவள். நாங்கள் வளர்ந்ததும்,பகலில்; வீட்டிற்தனியாக இருக்கப் பயந்து,’செயின்ஸ்பரி’ கடையில் ஒரு பார்ட் ரைம் வேலையை எடுத்துக்கொண்டாளாம்!

தான் வேலை செய்த கடையில் கணக்கு வழக்குகளுக்கு ‘ரில்’ அடிக்கத் தெரிந்த அம்மா, தனது குழந்தைகளின் வளர்ச்சியை,அவர்களின் உடல்வளர்ச்சியின் அடிப்படையின் மூலம் பராமரித்தாள்.உளமாற்றத்தின் பரிமாணங்களைப் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் அவளுக்குத் தெரியாது.

அடுத்த ஸ்ரேசனில் எனக்கு முன்னாலிருந்த பிரயாணி இறங்கிவிட, எனக்கு முன்னால் இன்னொரு புதிய பிரயாணி வந்து உடகாருகிறார். ஜன்னல்களுக்கப்பால்,இவ்வளவு தூரமும் லண்டனைச் சுற்றிய பச்சைப் பசேல் என்ற இடங்களைத் தரிசனம் செய்த கண்களுடன் இப்போது பெரிய சிறிய கட்டிடங்கள் மோதி மறைகின்றன.
நான் திரும்பவும் கண்களை மூடிக்கொள்கிறேன்.மூடிய என் கண்களுக்குள் எனது தமயன் இராஜேந்திரனினன் வாட்ட சாட்டமான முகம் வளைய வருகிறது. அண்ணாவுக்கும் எனக்கும் எட்டு வயது வித்தியாசம்.அவனைப் பற்றிய முதல் ஞாபகம்,எனக்கு மூன்றாவது வயதில் பதிந்தது என்று நினைக்கிறேன்.

நாங்கள் அப்போதுதான் லண்டனுக்கு வந்தோம் என்று நினைக்கிறேன்.நாங்கள் வாங்கிய வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில்,ஒரு பெரிய ஊஞ்சலிருந்துது. அண்ணா என்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்தான். அப்போது நான்,ஊஞ்சலால்ற் தவறி விழுந்த வேதனையில் ஓவென்று அலற, அப்பா அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்தார்.அண்ணாவைக் கண்ட பாட்டுக்குத் திட்டி அடித்தார்.
அப்பா மிகவும் பொல்லாதவர். ‘அடியாத மாடு படிக்குமா’ என்று அண்ணவை அடிப்பார்.
நான் தவறி விழுந்ததற்கு,அப்பா அண்ணாவைக் கண்டபாட்டுக்கு அடித்ததை என்னாற் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அவனுக்கு அப்போத பதினொருவயது. அம்மாவின் உயரத்துக்கு வளர்ந்திருந்தாதன். அம்மாவின் உயரம் ஐந்தடிகள் மட்டுமே.

அன்று,அண்ணாவைக் கண்டபாட்டுக்கு அடிக்க,நான் ஓடமிட,பக்கத்து வீட்டுக்கார வெள்ளைக்காரன் வேலியால் எட்டிப்பார்க…அப்பப்பா, அந்த நாடகம் எனது மனதை விட்டு அகலவில்லை.

‘இந்தப் பேயன் என்னவெண்டு இந்தப் பெண்பிள்ளைகளைப் பாதுகாக்கப்போகிறான்? அவளவை ஆரோடும் ஓடிப்போனாலும் இவன் ஆவென்டு நிற்கப்போறான்’.அப்பா எத்தனையோதரம் அண்ணாவைப் பேசியிருக்கிறார்.
தகப்பனுக்கும் மகனுக்குமுள்ள,சிக்கலான உறவின் பரிமாணத்தை, உலகப் பரசித்தி பெற்ற சைக்கோலஜிஸ்ட்டான பராய்டின் ஆராய்ச்சிகளுடன்; எனது சினேகிதி றேச்சல்,போனகிழமை விளங்கப் படுத்தியபோது,அண்ணவையும் அப்பாவையும் நினைத்துக்கொண்டேன்.

அப்பா அவனை ஒருகாலத்தில் ‘பெண்பிள்ளைகளைப் பாதுகாக்கத் தெரியாதவன், அவளவை யாரோடோ ஓடப்போறாளவை’என்று திட்டுவார். ஆனால் அப்பாவின் பெரிய மகள்-எனது அக்கா, யாரோ ஒருத்தனைத் தன் வாழ்க்கைத் துணையாகப் பார்த்து அவனுடன் போகமுதலே,அண்ணா வீட்டை விட்டுப் போய்விட்டான்.

அண்ணா,யுனிவர்சிட்டியால் வெளிக்கிட்டதும்,லண்டனுக்கு வெளியில் வேலை கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு,’இந்தச் சந்தர்ப்பம் எப்போது வரும் என்று காத்திருந்தவன்போல்ப் பறந்து விட்டான்.

‘வீட்டிலிருந்து போயிருக்கலாம்’ அப்பா உறுமினார்.அண்ணா இப்போது அப்பாவைக் கூட உயரமாக  வளர்ந்திருக்கிறான். அப்பாவை நேரிற்பார்த்து அவன் பேசுவது கிடையாது. அம்மா தனது முந்தானைத் தலைப்பால் தனது கண்களைத் துடைத்துக்கொண்டாள். அண்ணா எப்போதாவது இருந்துவிட்டு வீட்டுக்கு வரும்போது,மகன் எப்படிச் சாப்பிடுகிறானோ என்று பெருமூச்சு விட்டக்கொண்டு, வடையும், முறுக்கும்,இறால்,மீன் பொரியலும் கட்டிக்கொடுப்பாள்.

அக்கா அந்த வருடம், அண்ணா வீட்டை விட்டுப்போன வருடம்தான் யுனிவர்சிட்டிக்கு எடுபட்டிருந்தாள். அவள் அண்ணா வீட்டை விட்டுப் பிரிந்துபோன துக்கத்தில் நடந்த நாடகத்தில் அதிகம் பங்கெடுக்கவில்லை.அக்கா மிகவம் அழகான பெண். அம்மாவுக்கு அக்காவின் அழகில் ஒரு பெருமை.அவளை ஒரு நல்ல தமிழ்ப் பிள்ளையாக வளர்க்கத் தன்னாலான முழுவதையும் செய்தாள்.
அந்தக் காலத்தில் (இந்தக்காலத்திலும்தான்), குழந்தைகளுக்கு விருப்பமோ இல்லையோ தமிழ்த் தாய் தகப்பன் தங்கள் பெண் குழந்தைகளுக்குப் பரத நாட்டியம் கற்பித்தார்கள். பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்தவர்களில் அக்காவும் ஒருத்தி.

எங்களுக்குத் தெரிந்த மாமாவின் மகளுக்கு நடன அரங்கேற்றம் நடந்தது. அதைவிடச் சிறப்பாக நடன அரங்கேற்றம் அக்காவுக்கு வைக்க வேண்டும் என்று அம்மா விரும்பினார் அப்பா கடனெடுத்தார் வட்டியைப் பலகாலம் கட்டினார்கள்.

அக்கா அவளின் நடன அரங்கேற்றத்தன்று மிகவும் அழகாக இருந்தாள். பரத நடன பாரம்பரியம் அரங்கேற்றத்தில் வெளிப்பட்டதோ இல்லையோ,படாடோபம் நன்றாகவிருந்தது.
அம்மாவும் அப்பாவும் மிகப் பெருமைப் பட்டுக்கொண்டார்கள். தமிழ்ப் பண்பாட்டைத் தங்கள் குழந்தைகளுக்குப் படிப்பிக்கும் அவசியத்தைத் தன் சினேகிதர்களுக்கு ‘விஸ்கி;’ ஊற்றிக் கொடுத்தபடி விளக்கிச் சொல்வார் அப்பா. அவர்களும் இரண்டு,மூன்று கிளாஸ் விஸ்கி போனதும் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு பற்றி மிகவும் அழுத்தமாகப்(?) பேசுவார்கள்! ஓருசிலர், சந்தோசத்துடன் தலையாட்டிக் கொள்வார்கள்.

அந்தக்காலத்தில (1980ம் ஆண்டுகள்)அம்மா,கத்தரிக்காய்க் குழம்பு வைத்து, இட்டலியும் வடையும் செய்ய, அப்பாவும் அவரின் நண்பர்களும், எம்.எஸ் சுப்புலட்சுமி, டி.எம் தியாகராஜா போன்றோரின்யின் கர்நாடகப் பாடல்களைக்கேட்டுக் கொண்டு விஸ்கிப் போத்தல்களைக் காலி செய்வார்கள்.

அந்தக் காலகட்டத்தில்(80ம் ஆண்டுகளில்) எனக்கென்னவோ தமிழ்க்கலாச்சாரம் குழப்பமாகப் பட்டது. மேல் மாடியில் அம்மா ஒருசிறு கோயில் வைத்துப் பல கடவுள்களுக்குப் பூசை செய்ய , அப்பா கீழ்மாடியில் தனக்கொன்று ஒரு ‘பார்’வைத்து அதிற் பல தரப்பட்ட குடிவகைகளை அடுக்கி வைத்திருப்பார். குழந்தைகளான நாங்கள் ஆங்கில பொப் பாடல்கள் கேட்பதை அவர்கள் அதிகம் விரும்பவில்லை.
அக்கா யுனிவர்சிட்டிக்கு எடுபட்டதும், ‘யூனிவர்சிட்டி ஹொஸ்டலிலிருந்து படிக்கப்போகிறேன்’ என்று சொன்னாள்.அம்மா தயங்கினாள். அப்பா பல கேள்விகளைக் கேட்டார்.கடைசியில் அக்காதான் வென்றாள்.

மூன்று வருடம் யூனிவர்சிட்டியிற் படிப்பு முடிந்து வீட்டுக்குப் பெட்டி படுக்கையுடன் வரும்போது அவளுடன் ஒரு கம்பீரமான ஆங்கிலேயனையும் கூட்டிக்கொண்டு வந்து அவன் தனது சினேகிதன் என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அறிமுகம் செய்தாள்.
நான் அப்போது ஏ லெவலுக்கு விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தேன்.

அக்காவின் ஆங்கிலச் சினேகிதனைக் கண்ட எனது பெற்றோர் பெரியதொரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். பல வருடங்களுக்கு முன் நடந்த,அக்காவின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை விட இது மிகவும் வித்தியாசமானது.

..ட்ரெயின் இன்னொருதரம்,இன்னொரு ஸ்ரேசனில் நின்றது.என்னையறியாமல், எனது இடது பக்க ஜன்னல்ப் பக்கம் திரும்பிப் பார்த்தேன். வழக்கம்போல்,எப்போதும்போல்த் தான் படித்துக்கொண்டிருந்த பேப்பரை,ட்ரெயின் நின்றதும் மடித்துக்கொண்டு ‘அவன்’ட்ரெயினில் ஏறினான்.

அவன் ஆங்கிலேயனல்ல. கறுப்பு இன இளைஞனுமல்ல. ஓரு இலங்கையனாவிருக்கலாம்.அல்லது,இந்தியன்,பாகிஸ்தானியாக இருக்கலாம்.என்னைவிட நாலைந்து வயது மூத்தவனாகத் தெரிந்தான். அவன் லண்டன்,’ஷாயார் அன்ட் ஸ்ரொக்கில்’; வேலை செய்கிறான் என்று நான் நினைத்ததற்கு ஒரு காரணமுண்டு. எனக்கு முன்னால்ச் சிலவேளைகளில் அவன் உட்காரும்போது,தன் சூட்கேசைத் திறந்து,பைல்களைப் புரட்டுவான்,தற்செயலாக நான் பார்க்க நேரும்போது அந்தப் பைல்களில,ளவழஉம ரூளாயசந பற்றிய பெயர்களைப் பார்த்திருக்கிறேன்.

அவனும்,எனக்கு முன்னால்ப் பலதடவைகளில் உடகார்ந்திருக்கிறான் நான் ஒரு பயலோயி மாணவி என்று அவன் தெரிந்திருப்பான் என்று நினைக்கிறேன் ஏனென்றால், ஒருநாள்,ட்ரெயினால் இறங்கும்போது எனது புத்தகங்கள் சில தவறிவிழ,அவன் அவற்றைப் பொறுக்கித் தந்து உதவினான்.நான் வைரசுகளையும் பக்டிரியாக்களையும் படித்துக்கொண்டிருப்பதை அவன் அவதானித்திருப்பான்.

அவன் எனக்கு முன்னால் உட்கர்ந்ததும் ஒருதரம் நிமிர்ந்து அவனைப் பார்த்து விட்டுக் குனிந்து கொள்கிறேன்.அதுதான் எங்கள் ‘ஹலோ’. அதற்கு மேல் நாங்கள் பேசிக் கொள்வதற்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

அவன் பெயர் பரமசிவமாகவோ,றஹிமாகவோ,அல்லது சமரக்கொடியாகவோ இருக்கலாம்.எனது பெயர் வனிதா மயில்வாகனம். மயில்வாகனம் என்ற பெயரை உச்சரிக்கச் சில ஆங்கிலேயர்கள்; பட்டபாட்டைப் பார்த்தபின், மிஸ் வனிதாவுடன் நிறுத்திக்கொள்வேன்.’வனிதா’வுடன் சுருங்கிக்கொண்டது சுகமாகவிருக்கிறது.

இப்போது, ட்ரெயின் லண்டனுக்குள் நுழைந்து விட்டது. நான் ‘ப்ராய்டை’ மூடிவைத்து விட்டு, ஜன்னலுக்கு வெளியால்ப் பார்க்கிறேன்
உடைந்த கட்டிடங்கள்,உடைபடும் கட்டிடங்கள், வானளாவ உயரும் கட்டிடங்கள்,வாழத்தெரியாத மக்கள், வாழ்க்கையுடன் போராடும் மக்கள், யாரையும் ஏமாற்றிப் பிழைப்பவர்கள்,நேர்மையுடன் வாழ்ந்து நடக்கும் ஏராளமானோர் என்று பலர் ட்ரெயின் ஓட்டத்தில் உள்ள பாதைகளிற் தெரிந்து என் பார்வையுடன் மோதிவிட்டு மறைகிறார்கள்.

என் பார்வை,எங்கள் வீட்டை விட்டுப் பிரிந்து தன் காதலுடன் போன என் தமக்கையைத் தேடுகிறது.எனது அக்கா இங்கேயோ எங்கோதான்,தனக்குப் பிடித்தவனுடன் வாழ்கிறாள்.அக்கா மிகவும் கெட்டிக்காரி.எந்தச்சூழ்நிலையிலும் வாழ்ந்து கொள்ளத் திரிந்தவள்.முட்டாள்த்தனமாக எந்த முடிவும் எடுக்காதவள். தனக்குப்பிடித்தவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.
அதை ஏன் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ மறுக்கிறார்கள்?

அம்மாதான் துடிக்கிறாள். அப்பா தனது அறையில் அடைந்து கிடக்க, எங்களுக்குத் தெரிந்த மாமாக்கள் வந்து ஏதோ செத்த வீட்டுக்கு வந்த மாதிரி துக்கம் விசாரிக்கிறார்கள்.
இவர்களிற் பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள்.

‘இந்தப்பிள்ளை (எனது அக்கா) இப்படிச் செய்திருக்கக்கூடாது’ வைத்தியநாதன்மாமா தனது பெருத்த வயிற்றைத் தடவியபடி அம்மாவுக்குச் சொன்னார்.இவர் ஒரு காலத்தில் ,கொழும்பில் வேலை செய்யும்போது தான்காதலித்த, சிங்களப் பெண்ணைச் சீதனத்திற்காகக் கைவிட்டவர் என்ற கதை எனக்குத் தெரியும்.அம்மாவும் மஞ்சுளாமாமியும் வடைக்கு உழுந்து மாவரைக்கும்போது மற்றவர்களின் வாழ்க்கையயையும் அரைத்துக்;கொண்டிருப்பார்கள்.

‘என்ன இருந்தாலும்; எங்கட பிள்ளைகள் தமிழ்க் கலாச்சாரத்தைப் பார்க்க வேணும்.கவுரவும் கொடுக்கவேணும்’
சாந்தி மாமி சொன்னாள்.அந்த மாமி மற்றவ்களுக்குத் தெரியாமல், பிளாஸ்டிக் கிளாசில் விஸ்கி குடிப்பது பலருக்குத் தெரிந்த இரகசியம்.

அக்கா தனது’போய் பிரண்டை’ ஏலெவல் படித்த காலத்திருந்து காதலிப்பதாக எனக்குச் சொன்னாள். எவ்வளவோ காலமாகக் காதலித்துக் கனிந்த அவளுறவைத் ‘தமிழ்க்’கலாச்சாரத்துக்காகத் தியாகம் செய்து விட்டு, யாரோ முன்பின் தெரியாத தமிழனைத் தாலி கட்டிப் பிணைத்துக் கொள்வது கவுரமா,ஒழுக்கமா?

சந்தன குங்குமத்துக்கும் தமிழ்க் கலாச்சாரத்துக்கும் தனது மனச் சாட்சியை அழித்துக்கொள்வதுதான் தமிழ்க் கலாச்சாரமா?

‘எக்ஸ்கியுஸ் மீ’ எனக்கு முன்னாலிருந்தவன் முதற்தரமாக என்னைப்பார்த்துக் கதைக்கிறான்.நிமிர்ந்த்து அவனைப் பார்க்கிறேன் அக்காவைப் பற்றி அவனிடம் சொல்லியழவேண்டும் போலிருக்கிறது.

……அவன் கண்கள் கூர்மையானவை,அழகானவை, அவனுடைய அழகிய சுருண்ட தலைமயிர் சீராக வாரப் பட்டிருக்கிறது. சவரம் செய்யப் பட்டமுகம் பளிச்சென்றிருக்கிறது. நான் அவனை அளவிடுவதை அவன் அவதானித்துத் தர்ம சங்கடப் படுவது தெரிந்தது. அவன் கையில் லண்டனில் வெளிவரும் ‘வட்ஸ் ஒன்’ பத்திரிகையிருந்தது. அத்துடன் சேர்ந்து பேத்தோவன் பியானொ கொன்சோர்ட்(டீநவாழஎயn Pயைழெ உழnஉநசவ); பற்றிய விளம்பரத்துண்டும் தெரிந்தது.

அவன் என்ன சொல்ல வந்தான் என்று தெரியாது. அவன் தயங்கினான். அவன் சொல்வதைக் கேட்கத் தயார் என்பதுபோல் என் பார்வையை நிமிர்த்திக் கொண்டேன்.

‘கொன்சேர்ட்டுக்கு இரண்டு ரிக்கட் வாங்கினேன்… தங்கச்சிக்கு வரமுடியவில்லையாம்…’அவன் தயங்கினான். வாழ்க்கை முழுக்க என்னைத் தெரிந்து கொண்டவன்மாதிரிப் பேசினான்.
அவன் கையில் இரண்டு ரிக்கட்டுக்கள் இருந்தன.
அவன் என்ன சொல்கிறான்?

முன்பின் தெரியாத என்னை ,அவனுடன் பேத்தோவன் பியானோ கொன்சேர்ட்டுக்க வரச் சொல்கிறானா?

வருடக்கணக்காகப் பழகிய தனது காதலனைக் கல்யாணம் செய்யப் போகிறேன் என்று அக்கா சொன்னபோது, அம்மாவும் அப்பாவும் அரங்கேற்றும் நாடகங்கள் எரிச்சலையுண்டாக்குகின்றன. ட்ரெயினில் கண்ட இவனுடன் நான் இசைவிழா பார்க்கப்போனால், எனது தாய் தான் அவிக்கும் இட்டலியைத் தின்னாமல் வேறேNதுர் விஷத்தை விழுங்கி விடமாட்டாளா?

அவன் அவனை உறுத்திப்பார்த்தேன்.’ரிக்கட் வீணாகிவிடும்’..அவன் மென்று விழுங்கினான்.
முன்பின் தெரியாதவடன் கொன்சேர்ட்டுக்குப் போகக்கூடிய பெண்ணாகவா நான் இவனுக்குத் தெரிகிறேன்?

எங்களை யாரென்று ஒருத்தருக்கு ஒருத்தரைத்; தெரியாது.ஒவ்வொருநாள்க் காலையிலும் ட்ரெயினில் ஒன்றாகப்  பிரயாணம் செய்யும் அறிமுகமற்ற இருபிரயாணிகள் நாங்கள் என்பதைத் தவிர அவனுக்கும் எனக்கும் ஒரு தொடர்பு கிடையாது.

‘நீங்கள்..’அவன் இன்னும் தயங்குகிறான்.அவனுக்கு என்ன பெயராக இருக்கும்? ஏன்னுடைய அப்பாவின் பெயர் மயில்வாகனம். அந்தப் பெயர் இவனுக்கு இல்லாமலிருந்தால் சந்தோசப் படுவேன்.

‘உங்களால முடியுமென்றால் இந்த ரிக்கட்டைப் பாவியுங்கள்…’ஏன் இந்த ரிக்கடடுகள் வீணாகNவுண்டும்?’
அவன் ஒருபடியாகச் சொல்லி முடித்துவிட்டான். ஓரு சில நிமிடங்களில் என்னவெல்லாம் யோசித்துக் குழம்பி விட்டேன்? ஓரு சில நிமிடத்தில் எனது மனதில் நடந்த நாடகத்துக்கு முற்றப் புள்ளி வைத்து விட்டான்.
அவன் ‘எக்ஸ்கியுஸ் மி’ சொன்ன நேரத்திலிருந்து.இந்த வினாடிவரை அவனை எத்தனை கதாபாத்திரங்களாக்கி என் மனதில் அரங்கேற்றி விட்டேன்?

இவனிடம் எனது அக்காவைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று இன்னொருதரம் நினைத்துக் கொண்டேன்.

;தாங்ஸ்..எனக்கு நிறையப் படிக்கக் கிடக்கிறது.கொஞ்ச நாட்களுக்க எங்கும் போக நேரமில்லை” நான் உண்மையைச் சொன்கிறேன். என் மனதில்,அம்மா,அப்பா, அண்ணா, அக்கா ,அவளது காதலன் எல்லோரையும் விட எனது படிப்புடன் மாரடிக்கும் பக்டிரீயாக்களும் வைரசுகளும் நெளிகின்றன. என் படிப்பு எனது சிந்தனையை அழுத்துகிறது.

கொஞ்ச நாட்களாக அம்மாவும் அப்பாவும் அக்காவை வைத்து நடத்தும் நாடகத்தின் பாதிப்பை என் மனதிலிருந்து அகற்ற வெண்டும்.
வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டிருக்கிறது.அதற்கேற்ப நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ட்ரெயின்,லண்டன் இயூஸ்ரன் ஸ்ரேசனில் வந்து நின்றது. பிரயாணிகள் அத்தனைபேரும் அவசரமாக இறங்கிக் கொண்டோம். அவனும் நானும் வௌ;வேறு திசைகளில் நடந்தோம்.

ஒரு நாளைக்கு அவனின் பெயரை நான் தெரிந்து கொள்வேன்.

‘நாழிகை’
ஆகஸ்ட் 1993.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s